Sep 16, 2016

விழா

பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நிகழ்வு ஒன்றை நடத்துகிறார்கள். கடந்த முறை ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்து வைத்து அவர்களுக்கான ஒரு மகிழ்வூட்டும் விழாவை நடத்தினார்கள். அந்தக் குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட  குழந்தைகளுக்கு படு உற்சாகம். விருந்து, குட்டி அன்பளிப்பு என்றெல்லாம் ஜமாய்த்து அனுப்பி வைத்தார்கள். நிகழ்வுக்கான மொத்தத் தொகையையும் கல்லூரி மாணவர்கள் திரட்டினார்கள். தெரிந்த கடைகள், வணிக நிறுவனங்கள், தனிமனிதர்கள் என்று யாரையும் விட்டு வைக்காமல் வசூல் நடத்தி நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதன் மூலமாக கல்லூரி மாணவர்களின் சமூகப் பொறுப்பு கூடுமென நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சரியான எதிர்பார்ப்புதான். தங்கள் வீட்டு நிகழ்ச்சியைப் போல முழுப் பொறுப்பையும் மாணவர்கள் எடுத்திருந்தார்கள். ஒவ்வோர் குழந்தையையும் தாங்கு தாங்கென்று தாங்கினார்கள்.

அந்நிகழ்வுக்காக சில வேலைகளைச் செய்து கொடுத்திருந்தேன். இந்த வருடமும் அழைத்திருக்கிறார்கள்.

நிகழ்வுக்கான செலவு பணத்தை கல்லூரி மாணவர்களே திரட்டிவிடுகிறார்கள் என்பதால் அவர்களுக்கு உதவியாக நின்றால் மட்டும் போதும்- வழிகாட்டி மாதிரி. பிறவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இந்த வருடத்திற்கான திட்டம் தயாராக இருக்கிறது. கல்லூரி மாணவர்களில் பத்து பேர் ஓர் அணியாகச் செயல்பட வேண்டும். நான்கு அல்லது ஐந்து குடிசைப்பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கேயிருந்து தலா பத்து மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான எதிர்காலம் குறித்தான புரிதலை உருவாக்குகிற திட்டம் இது. பெங்களூரின் குடிசைப்பகுதிகள் குறித்து எனக்கு ஓரளவுக்கு புரிதல் உண்டு. அலுவலகம் முடிந்தவுடன் வீடு வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் என்றிருக்க மாட்டேன். சில நாட்களில் வண்டியை நிறுத்திவிட்டு சில தன்னார்வலர்களுடன் சேர்ந்து கற்பித்தல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட வேலைகளைச் செய்ததன் வழியாக உருவான புரிதல் இது. குடிசைப்பகுதி மாணவர்கள் சிலருடனும் நல்ல பழக்கம் உண்டு. அதனால் சரியாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இந்த ஊரின் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். தமிழில் பேசுவார்களே தவிர எழுதப் படிக்கத் தெரியாது. ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக இங்கே குடியேறியவர்களாக இருக்கக் கூடும். மார்கெட்டுகளில் காய்கறி விற்றல், நிறுவனங்களில் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை வேலைகளைச் செய்கிறவர்கள் அதிகம். உள்ளூர் ரவுடிகளிடம் அடியாளாக இருக்கிறவர்கள் குறித்தும் கூட முன்பு எழுதியிருக்கிறேன். இந்தத் தலைமுறையில் ஒன்றிரண்டு பேர் தப்பி கால் செண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்கிறார்கள்.

இத்தகைய குடிசைப்பகுதியிலிருந்து படித்துக் கொண்டிருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நிகழ்வுக்கு அழைத்து வொர்க்‌ஷாப் நடத்தும் போது அவர்களை சலிப்படையச் செய்யாமல் பேச வேண்டும். அது மிக முக்கியம். சில மாதங்களுக்கு முன்பாக பத்து குடிசைப்பகுதி மாணவர்களை மட்டும் வைத்து சிறிய அளவிலான வொர்க்‌ஷாப் ஒன்றை நடத்திய போது தெரியாத்தனமாக ஒரு கல்லூரி பேராசிரியரை அழைத்து வந்துவிட்டார்கள். அவர் அறுத்த அறுப்பில் பத்து மாணவர்களும் மரணக் கடுப்பாகிவிட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் என்னை நம்பி அந்தப் பத்து பேரும் வர மாட்டார்கள் என்று சத்தியம் கூடச் செய்வேன். அதனால் இந்த முறை ரம்பத்தையெல்லாம் உள்ளே விடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். 

முதலில் குடிசைப்பகுதிகளிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல், அதே சமயத்தில் மாணவர்களிடம் பேசுவதற்குத் தோதான பேச்சாளர்களை அணுகுதல் என்று சில முக்கியமான வேலைகள் இருக்கின்றன. ஆனால் இரு மாத காலம் அவகாசம் இருக்கிறது. இந்த அவகாசத்தில் மாணவர்களுக்கான வொர்க்‌ஷாப் ஒன்றைச் செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறவர்கள், இத்தகைய செயல்பாடுகளில் ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். வெளியூரிலிருந்து வர வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். பெங்களூருவாசிகளாக இருந்தால் செளகரியமாக இருக்கும். அதெல்லாம் பிரச்சினையில்லை என்று சொல்லி கலந்து கொள்வதில் வெகு ஆர்வமாக இருந்தால் தடையேதும் போடவில்லை. வருக. நாற்பது மாணவர்களில் பத்து மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டாலும் கூட அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.  

எனக்குத் தெரிந்த வகையில் இத்தகைய மாணவர்களில் பத்து அல்லது பனிரெண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு காதலியைக் கண்டுபிடித்து தலை முடியை கோக்குமாக்காக மாற்றிவிட்டுச் சுற்றுகிற இளைஞர்கள்தான் அதிகம். அவர்களிடம் அறிவுரையாகச் சொல்லிக் கொண்டிருந்தால் ‘ஆமாவா? பேஜார் பண்ணாதீங்க சார்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அதனால்தான் வொர்க்‌ஷாப் குறித்து மிகுந்து மெனக்கெட வேண்டியிருக்கிறது. சலிப்பில்லாமல் இருக்க வேண்டும்; அதே சமயம் உபயோகமானதாக இருக்க வேண்டும். 

கல்லூரி மாணவர்களே குடிசைப்பகுதிகளைத் தேடி சரியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கட்டும் என்பது கூட அவர்களும் களத்தில் இறங்கிப் பார்ப்பதற்கான வாய்ப்பாக அமையட்டும் என்கிற காரண காரியத்தோடுதான். அதற்காகவே முழுமையான ஈடுபாடுடைய பத்து மாணவர்களைத் தேர்தெடுப்பதாக கல்லூரியில் சொல்லியிருக்கிறார்கள். 

முழுமையான திட்டவடிவத்துடன் விரிவாக எழுதுகிறேன். பெங்களூரைப் போலவே பிற ஊர்களிலும் யாரேனும் செயல்படுத்த விரும்பினால் உதவக் கூடும். 

                                                                 ***

தொடுதிரை வகுப்பறை திறப்புவிழாவின் நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். நிகழ்வுக்குச் செல்லும் போது பைக்கை வெளியிலேயே நிறுத்திவிட்டுப் போனால் மாணவர்களை வைத்து பூச்செண்டெல்லாம் கொடுத்து சிரிப்பு வர வைத்துவிட்டார்கள். விழாவில் பேசும் போது அதைத்தான் பேசினேன். ‘இன்னைக்கு நீங்க விழா நடத்துறீங்க. இந்த மனசு குரங்கு மாதிரி. அடுத்த ஸ்கூலுக்கு கொடுக்கும் போதும் விழா நடத்துவாங்களான்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுடும்...அது சரிப்பட்டு வராது..அப்படி ஏங்க ஆரம்பித்தால் சோலி சுத்தம் என்று அர்த்தம். நம்முடைய மொத்த நோக்கமும் சிதைந்து புகழ் போதையில் வசமாகச் சிக்கிக் கொள்வோம். பாராட்டுகிற சமயத்திலேயே சிரித்துவிட்டு கடந்துவிட வேண்டும். நாம் நாமாகவே இருக்க அதுதான் ஒரே உபாயம்’ என்ற போது அவர்களும் சிரித்தார்கள்.

நிழற்படங்களை நிசப்தம் தளத்தில் பதிவு செய்யச் சொன்னார்கள். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பதிவு செய்துவிடலாம். பெருமையாக மனதுக்குள் நிறுத்திக் கொள்ளாமல் சிரித்தபடியே கடந்துவிட வேண்டியதுதான்.

நீங்களும் சிரிப்பதற்காக...

                                            வைரவிழா முதல்நிலைப்பள்ளி

1) ராஜாதி ராஜ...ராஜ கம்பீர...காத்தவராயன் பராக் பராக்..


2) மனசுக்குள்ள என்ன நினைச்சாரோ? மேலே பார்த்து காக்கா ஓட்டுறாரு...


3) எதுக்கு வம்பு? ஓரமாக நின்று கொள்வதுதான் உசிதம்


**********

திரேசாள் பள்ளி


1) முன்னாடி வர்றவங்க மாவட்ட கலெக்டர் பின்னாடி வர்றது அப்பாடக்கர்....


2) இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போய்டுவோம்டா...


3) ஒரு மை நீட்டினாவே ஒரு மணி நேரம் அளப்பேன்..மூணு மைக்..நீட்டுனவங்க காதில் ரத்தம் வராத குறைதான்...



3 எதிர் சப்தங்கள்:

Senthil Prabu said...

வாழ்த்துக்கள் மணிகண்டன் :) இன்னுமொரு மைல்கல் !!

Krishnamoorthy said...

வாழ்த்துக்கள் சார்.

சேக்காளி said...