Sep 15, 2016

ஈரத்துண்டு

வெள்ளாஞ்செட்டி என்றொரு மனிதர். கணவனும் மனைவியுமாக இருவர் மட்டுமே வசிக்கிறார்கள். ஒரே மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். மைசூரு பக்கமாக அவள் வசிக்கிறாள். வெள்ளாஞ்செட்டிக்கு கூலி வேலைதான். வெளியூர்வாசிகள் என்றாலும் வெகு காலத்திற்கு முன்பாகவே எங்கள் ஊருக்குக் குடி வந்துவிட்டார்கள். அப்பொழுதெல்லாம் வருடத்தின் அத்தனை நாட்களும் வயல் வேலை இருக்கும். அதனால் ஆரம்பத்திலிருந்தே மனைவியை வேலைக்கு அனுப்பவில்லை. ‘கல் சுமப்பதாக இருந்தாலும் முள் வெட்டுவதாக இருந்தாலும் நான் சம்பாதிச்சுட்டு வர்றேன்..நீ சோறாக்கிட்டு வீட்ல இரு’ என்று திருமணமான புதிதிலேயே சொல்லிவிட்டாராம். இன்று வரைக்கும் அந்தப் பெண்மணி வேலைக்குச் சென்றதில்லை. இருவருக்கும் நரைத்துவிட்டது. வெள்ளாஞ்செட்டி சற்று திடமாக இருக்கிறார். மனைவி கால் வளைந்து நடப்பதற்கே கொஞ்சம் சிரமம்தான்.

கால்கள் பழுதுபட்டாலும் அந்தப் பெண்மணிக்கு வாய் அதிகம். அக்கம்பக்கத்தில் ஒருத்தரிடமும் நல்ல உறவு இல்லை. கோழிக்கறி எடுத்து வருவது தெரிந்தால் ‘கறியா? வறுத்து நீங்களே மொதக்கித் தின்னுங்க’ என்று கலாய்த்தால் யார்தான் பேசுவார்கள்? மனதுக்குள் வஞ்சகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. வெகுளி. அவரின் பேச்சுவார்த்தையே அப்படித்தான். யாரிடமும் நாசூக்காகப் பேசத் தெரியாமல் உளறிக் கொட்டி கிளறி மூடுகிற வகை. ‘இந்தப் பொம்பளைகிட்ட வாய் கொடுத்தா மானம் போய்டும்’ என்று அடக்கி வாசிக்கிறார்கள்.

அம்மாவும் அப்பாவும் பெங்களூரில் எங்களுடன் இருந்த போது வீடு அனாமத்தாகக் கிடந்தது. பாதுகாப்புக்காக யாரையாவது தங்க வைத்துவிடலாம் என்று முடிவு செய்து வாசலில் குட்டியான வீடு ஒன்றை அமைத்து அதில் குடி வைக்க ஆள் தேடிக் கொண்டிருந்த போது வெள்ளாஞ்செட்டியை யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வயதானவர்கள். பிரச்சினை எதுவும் இருக்காது. சரி என்றவுடன் கணவனும் மனைவியும் சட்டி பானையோடு குடி வந்து சில மாதங்கள் ஓடிவிட்டன. இடையில் அப்பாவுக்கு உடல்நிலை சரியற்று பெங்களூரிலிருந்து கிளம்பி ஊருக்கே சென்ற பிறகு அந்தப் பெண்மணி எங்கள் அம்மாவையும் விட்டு வைக்கவில்லை. ஏதோ வம்பிழுத்திருக்கிறார். இப்பொழுது அம்மாவுடனும் பேச்சுவார்த்தையில்லை. வெள்ளாஞ்செட்டி ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரிடமும் பேசுவார். அவரது மனைவி வெள்ளாஞ்செட்டியைத் தவிர யாரிடமும் பேசிக் கொள்வதில்லை. இருவேறு துருவங்கள். ஆனால் இருவரும் கயிற்றுக் கட்டில் ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டேயிருப்பார்கள். ஆச்சரியமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் எல்லோரிடமும் பகைத்துக் கொள்ளும் இந்தப் பெண்மணி இந்த மனிதரோடு மட்டும் எந்தப் பகைமையும் பாராட்டுவதில்லை. கிழவரும் அந்தக் கிழவியைத் தாங்கு தாங்கென்று தாங்குகிறார்.

இப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் பாசன வசதி சரியாக இல்லை. ஒரு காலத்தில் எப்பொழுதும் செழிப்பாக இருந்த ஊர் காயத் தொடங்கியிருக்கிறது. எப்பொழுதாவது தண்ணீர் விடுகிறார்கள். விவசாயிகளுக்குச் சிரமம்தான் என்றாலும் வெள்ளாஞ்செட்டி மாதிரியான கூலிக்காரர்களுக்குத்தான் அதைவிடச் சிரமம். அன்றாடங்காய்ச்சிகள் அவர்கள். சரியான வருமானம் இருப்பதில்லை. அவ்வப்போது சாப்பாட்டுக்கே சிரமமாகிவிடுகிறது. வயல் வேலை இல்லாத போது வெள்ளாஞ்செட்டி கட்டிட வேலைக்குச் செல்கிறார். எழுபதைத் தாண்டிய உடலில் கட்டிட வேலை செய்கிற தெம்பு இல்லாத போது வருமானத்திற்கு படு திண்டாட்டமாகிவிடுகிறது. கடந்த மாதத்தில் கைவசம் இருந்த முக்கால் பவுன் சங்கிலியை அடமானம் வைத்து அந்தப் பணத்தில் செலவு செய்து கொண்டிருந்தார். மனைவிக்கு இருதயத்தில் சில குறைபாடுகள் உண்டு. அதற்காக தொடர்ந்து மாத்திரையும் வாங்க வேண்டும். இப்படி சுமை மேல் சுமைதான்.

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் வீட்டில்தான் அமர்ந்திருந்தார். ‘வேலைக்கு போகலைங்களா?’ என்றார் ‘வேலை எங்கீங்க இருக்குது? ஒருத்தரும் கூப்பிடறதில்ல’ என்பார். அனாதைப் பணம் என்னும் ஆதரவற்ற முதியோர்களுக்கான விண்ணப்பம் கொடுத்திருந்தார். விண்ணப்பம் கொடுத்து பல மாதங்களாகிவிட்டது. உள்ளூர் கட்சிக்காரர்கள் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு இழுத்தடித்துக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். யதேச்சையாக இதை அவர் சொன்ன போது துணை கலெக்டருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி இத்தகைய விவகாரங்களில் படு சுறுசுறுப்பு. மீண்டுமொருமுறை விண்ணப்பம் கொடுக்கச் சொல்லி அடுத்த சில நாட்களிலேயே வெள்ளாஞ்செட்டிக்கு உத்தரவு போட்டுவிட்டார்கள். பத்து நாட்களுக்கு முன்பாக எம்.எல்.ஏ மேடையில் வைத்துக் கொடுத்தார். உள்ளூர் அரசியல்வாதி என்னிடம் வந்து ‘உங்க வீட்டில் குடியிருக்கும் வெள்ளாஞ்செட்டிக்கு ஆர்டர் வாங்கிக் கொடுத்துவிட்டேன்’ என்று அளந்தார். என்ன பதில் சொல்வது? ‘ரொம்ப சந்தோஷங்க’ என்று முடித்துக் கொண்டேன். வெள்ளாஞ்செட்டிக்கும் அவரது மனைவிக்கும் இப்போதைக்கு இதுதான் வருமானம். அடுத்து நாவல் எழுதினால் இவர்தான் மையப்பாத்திரம் என்று முடிவு செய்து கொண்டேன்.

இதைச் சொல்வதற்காக இந்தப் பத்தியை எழுதவில்லை. 

சில நாட்களுக்கு முன்பாக கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறந்துவிட்டார்கள். ‘மக்களின் கோரிக்கையை ஏற்றுத் திறந்துவிடுவதாக’ முதலமைச்சர் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார். அதற்கு முன்பாக ஊரில் முற்றுகைப் போராட்டம் கூட நடத்தினார்கள். வட்டாச்சியர் அலுவலகத்தை மறித்தார்கள். ஒவ்வொரு போகமும் தண்ணீர் தராமல் நிறுத்தி வைத்தால் விவசாயிகளின் பிழைப்பு நாறிவிடும் என்று அவர்கள் கதறியது அரசாங்கத்தின் காதில் விழுந்திருக்கக் கூடும் போலிருக்கிறது. நீர் திறக்கப்பட்டவுடன் படுஜோராக விவசாய வேலைகளை ஆரம்பித்தார்கள். காய்ந்து கிடந்த வயல்வெளிகள் சேறாடின. வெள்ளாஞ்செட்டிக்கு உற்சாகம் தாங்கவில்லை. மூன்று மாதத்திற்குத் தொடர்ச்சியாக வேலை இருக்கும் என்றும் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துவிட முடியும் என்றும் சொன்னார். மூன்று மாதங்களுக்குப் பிறகு வயலில் நெல் அறுப்புக்கு வந்துவிடும். நெல் அறுத்து புல் கட்டுகிற வேலைக்குக் கூலியும் கூடுதல். எப்படியும் ஆறேழு மாதத்திற்கான வருமானம் தயார். அன்றாடங்காய்ச்சிகளின் திட்டமெல்லாம் இப்படித்தான். ஒரு வருடத்திற்கான கணக்காக இருக்கும்.

பல வயல்களில் விதைத்துவிட்டார்கள். முளைத்து வந்த நெற்பயிர்களை நேர்த்தியாக நடுகிற நடவுக்கான பருவம் தொடங்கியிருந்தது. சனிக்கிழமையன்று ஊருக்குச் சென்றிருந்த போது வெள்ளாஞ்செட்டி வீட்டில் அமர்ந்திருந்தார். ‘வாய்க்கால்லதான் தண்ணி போகுதுல? அப்புறம் ஏன் வீட்டில் இருக்கீங்க?’ என்றேன். பேயறைந்தது போல பதில் சொன்னார். ‘தண்ணியைக் கட்டப் போறாங்க’. கட்டப் போகிறார்கள் என்றால் நிறுத்தப் போகிறார்கள் என்று அர்த்தம். திக்கென்றிருந்தது. நெற்பயிர்களைப் பொறுத்தவரைக்கும் வாய்க்காலில் நீர் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். இடையில் நிறுத்தினால் கருகிவிடும். பவானிசாகரில் நீரின் அளவு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைச் சொல்லி நிறுத்துகிறார்கள். நீர் மேலாண்மை பல்லை இளிக்கிறது. அடிப்படையான கணக்கு கூட இல்லாமலா நீரைத் திறந்துவிட்டிருப்பார்கள்? வாய்க்காலை நம்பி இருபத்து நான்காயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு இதுதான் நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரம். என்ன கணக்கில் திறந்துவிட்டார்களோ தெரியவில்லை- நிறுத்தப் போகிறார்கள். நிலத்தைப் பண்படுத்த, விதை, உரம், கூலி என்று இதுவரை கொட்டியது போதும் என விவசாயிகள் அத்தனை வேலைகளையும் நிறுத்தி வைத்துவிட்டார்கள். வெள்ளாஞ்செட்டி மாதிரியானவர்களுக்கு வேலையும் இல்லை கூலியும் இல்லை.

எளிய மனிதர்களின் சாதாரணக் கனவுகள் கூட அதிகார வர்க்கத்தின் தவறான கணக்குகளால் சிதைந்து சின்னாபின்னமாகிவிடுகிறது. அவர்கள் அதை எதிர்த்துக் குரல் எதுவும் எழுப்புவதில்லை. பசியையும் துக்கத்தையும் பற்களைக் கடித்துப் பொறுத்துக் கொள்கிறார்கள். இனி ஆறேழு மாதங்களுக்கு வருமானம் இல்லை என்று எழுபதைத் தாண்டிய அன்றாடங்காய்ச்சிக் கிழவன் சொல்லும் போது ‘ப்ச்’ என்று நம்மையுமறியாமல் வந்துவிடுகிறது. ‘அடுத்து என்ன செய்யப் போறீங்க?’ என்று கேட்டு அவரைக் கிளற விரும்பவில்லை. ‘சரி ஏதாச்சும் வேலை இருக்கும்..பார்த்துக்கலாம் விடுங்க’ என்று ஆறுதலாகச் சொன்ன போது வறண்ட புன்னகையை உதிர்த்து ‘அதெல்லாம் ஒரு வேலையும் இருக்காதுங்க...ஈரத்துண்டைக் கட்டிட்டு படுத்துப் பழக வேண்டியதுதான்’ என்கிறார். என்ன நினைப்பில் சொன்னார் என்று தெரியவில்லை. அதில் அத்தனை வலி இருந்தது. அமைதியாக இருப்பதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?