ஓர் அலைபேசி அழைப்பு. அழைத்தவரின் ஊரும் பேரும் வேண்டாம். ஒரு கதையைச் சொல்லிவிட்டு அறக்கட்டளையிலிருந்து பணம் தரச் சொன்னார். அவர் சொன்னது அவசரமான காரியமாகத் தெரியவில்லை. செப்டம்பர் 31க்கு மேலாக அழைக்கச் சொல்லியிருந்தேன். வருடாந்திரக் கணக்கு முடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆடிட்டர் அலுவலகத்தில் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குகளைப் பார்த்துக் கொள்கிற பெண் அடுத்த வாரத்திலிருந்து விடுமுறையில் செல்கிறார். சி.ஏ. தேர்வுகளை முடித்துவிட்டுத்தான் வருவார். புண்ணியத்துக்கு வந்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்க முடியாது. அவர்களே பைசா வாங்கிக் கொள்ளாமல் கணக்கு வழக்குகளை முடித்துக் கொடுக்கிறார்கள். அவசரப்படுத்துவதெல்லாம் இல்லை. அவர்கள்தான் மாதக் கடைசி வரைக்கும் காசோலை எதுவும் தர வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். 2016 மார்ச் 31 வரைக்குமான கணக்குதான் என்றாலும் ஏன் இப்படிச் சொன்னார்கள் என்று தெரியவில்லை.
இந்த விவரங்களையெல்லாம் அலைபேசியில் அழைத்தவருக்குச் சொல்லியிருந்தேன். அவர் கேட்பதாக இல்லை. இதுவரை பதினைந்து முறையாவது அழைத்திருப்பார். அது பிரச்சினையில்லை. இரவு ஒரு மணிக்கும் மூன்று மணிக்குமெல்லாம் அழைத்தால் என்ன செய்வது? இரண்டொரு முறை மனைவிதான் எடுத்தாள். என்னை எழுப்பிக் கொடுத்துவிடுகிறாள். அலைபேசியை அணைத்து வைப்பது, சைலண்ட் மோடில் போட்டு வைப்பது என்றெல்லாம் யோசிப்பதேயில்லை. அவசர அழைப்புகள் வரக் கூடும். உறவினர்கள் அத்தனை பேருக்கும் ஒரே எண்ணைத்தான் கொடுத்து வைத்திருக்கிறேன். நேற்று கன கோபத்தில் பேசிவிட்டேன். வேண்டுமென்றே செய்கிறார் போலிருக்கிறது.
‘நீங்க வெறும் தாஸா? லார்டு லபக்குதாஸா?’ மாதிரி இருக்கிறது.
9663303156 தான் என்னுடைய எண். இனிமேல் இந்த எண்ணை மாலை நேரத்தில் மட்டும் உபயோகத்தில் இருக்குமாறு வைத்துக் கொண்டு மற்ற நேரங்களில் அணைத்துவிடலாம் என்றிருக்கிறேன். உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமென வேறொரு எண்ணை வாங்கிக் கொள்கிறேன். சலிப்படைகிற தொனி தெரிந்தாலும் வேறு வழி தெரியவில்லை.
அது போகட்டும்.
எல்லாவிதமான அலைபேசி அழைப்புகளும் இப்படியானவை இல்லை. இன்னொருவர் அழைத்திருந்தார். சென்னையில் மூன்றாம் நதி புத்தகத்தை வாங்கினாராம். வயதானவர். வாசித்துவிட்டுத்தான் அழைத்திருந்தார். இப்படியான பாராட்டு அழைப்புகள் வரும்போது வீட்டில் இருந்தால் தயங்காமல் ஸ்பீக்கரில் போட்டுவிடுவேன். அப்பொழுதானே ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வீட்டில் இருப்பது அவர்களுக்கும் தெரியும்? நாவலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர் திடீரென ‘உங்களை ஏன் வெளியில் ஒருத்தருக்கும் தெரியறதில்லை?’என்றார். பொடனியிலேயே அடிப்பது இதுதான். ‘நீங்க நல்லவரா? கெட்டவரா?’ என்று நம்மிடமே கேட்பது மாதிரி. பதில் எதுவும் சொல்லவில்லை. ‘இதழ்களில் எழுதுங்க; கூட்டங்கள் நடத்துங்க’ என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டார். அலைபேசியின் ஸ்பீக்கரை அணைத்துவிட்டு ‘சரிங்க சரிங்க’ என்று கேட்டுக் கொண்டேன். ரஜினிகாந்த்துக்கு அப்புறம் தமிழகத்தில் என்னைத்தான் அதிகம் பேருக்குத் தெரியும் என்று நினைத்திருந்தேன். அழைத்தவர் பாண்டிச்சேரிக்காரர். அதனால் அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. இனி அடிக்கடி பாண்டிச்சேரி சென்று வர வேண்டும்.
மூன்றாம் நதி பற்றியும் சினிமா பற்றியும் சொல்வதற்கு இருக்கிறது.
மூன்றாம் நதி பற்றிய செய்தி மிக அபாயகரமானது. இதய பலவீனமுள்ளவர்கள், பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் இந்தப் பத்தியை மட்டும் படிக்க வேண்டாம். மூன்றாம் நதியை ஒரு தன்னாட்சிக் கல்லூரியில் பாடமாக வைக்கிறார்கள். அடுத்த வருடத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பாடமாக வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் அழைத்துச் சொன்ன போது கிட்டத்தட்ட ஊர் முழுக்க தண்டோரா அடித்துவிட்டேன். ஆனால் நம் உயரம் நமக்குத் தெரியுமல்லவா? ‘இதை ஏன் வெச்சிருக்கீங்க?’ என்றேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன், அசோகமித்திரனின் புத்தகங்களை எல்லாம் முயற்சித்துப் பார்த்தார்களாம். ‘நோட்ஸ் வேணும்ன்னு கேட்கிறாங்க’என்றார். ஐநூறு ஆயிரம் பக்கங்களுக்கு நோட்ஸ் தயாரிப்பதும் சாதாரணக் காரியமில்லை. மூன்றாம் நதி நூறு பக்கம்தான். நேரடியாகக் கதையைச் சொல்கிறது. எளிமையாக இருக்கிறது என்பதால் முயற்சித்துப் பார்க்கிறார்கள். மற்றபடி ‘அற்புதமான நாவல் என்றெல்லாம் அர்த்தமில்லை’ என்று அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.
ஜீவகரிகாலனிடம் சொல்லியிருக்கிறேன். வருடம் ஆயிரம் பிரதிகள் வீதம் மூன்றாயிரம் பிரதிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். பிப்ரவரி மாதம்தான் கல்லூரியிலிருந்து உத்தரவைக் கையில் கொடுப்பார்களாம்.‘உத்தரவு வந்த பிறகு விவரங்களை எல்லாம் வெளியில் சொல்லுங்க..அதுவரைக்கும் அடக்கியே வாசிங்க’ என்றார். அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
இவர்கள் இப்படியே அவநம்பிக்கையுடன் இருக்கட்டும். நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஹிட் அடித்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கடந்த வாரத்தில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படம். என்ன வேலை எனக்கு என்று தெரியவில்லை. வாசித்துவிட்டு கருத்துக்களைச் சொல்ல வேண்டும். திருத்தங்களை வேண்டுமானாலும் செய்யலாம். கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ‘எனக்கு ஒரு டூயட் மட்டும் கொடுத்திடுங்க’ என்று கேட்கப் போகிறேன். அவ்வளவுதான் சம்பளம். காஜல் அகர்வால் இல்லையென்றால் நயன்தாரா லட்சியம். ஸ்கிரிப்ட் கையில் கிடைத்ததிலிருந்து கண்ணாடி முன்பாக நின்று இடுப்பை வெடுக் வெடுக்கென்று ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை தமன்னாவுடன் ஆடச் சொன்னால் பயிற்சியில்லாமல் ஆட முடியாதல்லவா? அதனால்தான்.
நிசப்தம்தான் படிக்கட்டு. பாண்டிச்சேரிக்காரர் சொன்னது போல இதழ்களில் எழுத வேண்டியதில்லை. கூட்டங்கள் நடத்த வேண்டியதில்லை. பரபரப்பாகவும் கூட எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்தத் திண்ணை போதும். நமக்கு வர வேண்டியது நமக்கு வரும். அதனால்தான் நல்லதோ, கெட்டதோ- எல்லாவற்றையும் இங்கே சொல்லிவிடுகிறேன். இப்பொழுதும் சொல்லியாகிவிட்டது.
என்ன அவசரம்? மெல்ல நகர்ந்தால் போதும்.
கடந்த வாரத்தில் சில திரைப்படங்களைப் பார்த்தேன். 2014 ஆம் ஆண்டு வெளியான Black Butler என்ற ஜப்பானியத் திரைப்படம் அருமை. அடிப்படையிலேயே ஜப்பானியர்கள் ஃபாண்டஸி பிரியர்கள். அங்கேயிருந்த சில நாட்களில் அவர்களை அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறேன். இதுவும் ஒருவகையிலான ஃபாண்டஸி வகைப்படம். சுவாரசியமான ஃபாண்டஸி. வார இறுதியில் நேரம் கிடைத்தால் பார்ப்பதற்கான பரிந்துரை இது. யூடியூப்பில் சப்-டைட்டிலுடன் இருக்கிறது. பார்த்துவிட்டு பேசலாம்.