Aug 12, 2016

ஸிரிமல்லே செட்டு

Seethamma vakitlo sirimalle chettu- இதை எப்படி உச்சரிப்பது? பெயரே புரியாமல் படத்தைப் பார்த்துவிட்டேன். சீத்தம்மா வாகிட்லோ ஸிரிமல்லே செட்டு. பெயரையே உச்சரிக்கத் தெரியாதவனுக்கு அர்த்தம் மட்டுமா தெரியும்? இணையத்தில் தேடினால் சீத்தம்மாவின் முற்றத்தில் ஒரு மல்லிகைச் செடி- இதுதான் அர்த்தமாம். ஒரு மல்லிகைச் செடி எல்லாக் காலத்திலும் பூத்துக் கொண்டேயிருக்கிறது. மழை பொய்த்துவிடும் என்கிற பிரச்சினை இல்லை. ஆடு கடித்துவிடும் என்கிற கவலை இல்லை. அதுதான் வீட்டுக்குள் வைத்து பாதுகாக்கிறார்களே? ட்விஸ்ட் எதுவுமில்லாமல் செடி வளர்வது போல திருப்பம் எதுவுமில்லாமல் ஒரு திரைக்கதை. அதை வைத்துக் கொண்டு ‘எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க...நாமும் சந்தோஷமா இருப்போம்’ என நினைக்க வைக்கிற ஒரு படம். 


வெங்கடேஷ், மகேஷ்பாபு, அஞ்சலி, சமந்தா, பிரகாஷ் ராஜ் இப்படியொரு பெருங்கூட்டம். என்னடா இவன் திடீரென்று தெலுங்குக்குச் சென்றுவிட்டான் என்று பதறக் கூடாது. இதில் பதறுவதற்கு எதுவுமில்லை. மாதம் 40 ஜிபி இணைய வசதி கிடக்கிறது. ஜிமெயிலும் ஃபேஸ்புக்கும் என்னதான் தீட்டினாலும் நான்கில் ஒரு பங்கைத் தாண்டுவதில்லை. அதனால்தான் வாரம் மூன்று படங்களாவது பார்த்துவிடுவது என்று மென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறேன். கதிர்வேல் என்கிற நண்பர் இந்தப் படத்தை பார்க்கச் சொல்லியிருந்தார். யூடியூப்பிலேயே துல்லியமான படம் கிடைக்கிறது. ஜெயா டிவிக்காரர்கள் திரையில் HD என்ற எழுத்துக்களைப் பொறித்துவிட்டு மொக்கையான பிரிண்ட்டை ஒளிபரப்புவது போல இல்லை. உண்மையிலேயே ஹெச்.டி பிரிண்ட்தான்.

இப்பொழுதெல்லாம் யூடியூப்பில் நல்ல பிரிண்ட் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கே திரையரங்குகளில் அறுநூறு ரூபாய் கூட வசூலிக்கிறார்கள். ரவி தேஜா படத்துக்கு அறுநூறு ரூபாய் கொடுத்து போவது என்னைப் பொறுத்தவரைக்கும் சரிதான். வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

பெங்களூரில் படம் வெளியான மூன்றாவது நாளே தமிழ் படங்களின் திருட்டு விசிடிக்கள் வந்துவிடுகின்றன. அட்டகாசமான ப்ரிண்ட். ஆனால் தெலுங்குப்படங்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது.  கன்னடப்படங்கள் கிடைக்கவே கிடைக்காது. எப்பவோ வந்த சிவராஜ்குமார், உபேந்திரா படங்கள் வேண்டுமானால் கூட கடைக்காரனிடம் சொல்லி வைத்தால் அவன் கருப்பு நிற பாலித்தீன் பையில் ஒளித்து வைத்திருந்து ஏதோ கஞ்சாவை விற்பது போல விற்பான். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன் - கன்னடப் பட சிடி விற்பதாகத் தெரிந்தால் சாதாரண மனிதன் கூட கடைக்காரனை அடிப்பதுண்டு. கன்னட வேதிக வட்டாள் நாகராஜ்தான் வர வேண்டும் என்றில்லை. கண்டவன் எல்லாம் அடித்தால் எப்படி துணிந்து விற்பார்கள்?

சென்னையை விடுங்கள்- கோபியில் கூட வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் சனிக்கிழமையன்று குறுந்தகட்டில் கிடைக்கிறது. படம் பார்த்த மாதிரியே கடைக்காரர் பேசுகிறார். நாளைக்கு ஊருக்குச் செல்கிறேன். இன்று வெளியாகிற அத்தனை படங்களும் கிடைக்கும். மீறிப் போனால் ஒரு நாள் தாமதமாகும். ‘சார் செம ப்ரிண்ட்..படமும் நல்லா இருக்கு...வாங்கிட்டு போங்க’என்பார். 

‘அம்பது ரூபா சொல்லுறீங்க?’ என்றால் ‘என்ன சார் பண்ணுறது...நெட்லேயே விட்டுடுறாங்க...வியாபாரம் டல்லு சார்...அதான்’ என்பார்.

ஏதாவதொரு வகையில் வெளியாகிவிடுகிறது. கன்னடத்திலும் தெலுங்கிலும் அவ்வளவு சுலபமாக சாத்தியமாகாத விஷயம் தமிழில் மட்டும் எப்படி சாத்தியப்படுகிறது. தமிழகத்தில் சினிமாக்காரர்களேதான் சினிமாவுக்கு எதிரி. அதை சினிமாக்காரர்கள் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். 

சினிமாக்காரர்கள் பிரச்சினை சினிமாக்காரர்களோடு போகட்டும்.

நேரம் கிடைக்கும் போது ஸிரிமல்லே செட்டு படத்தை பார்த்துவிடுங்கள்.  சற்றே மெதுவாக நகரும் என்றாலும் கூட Feel good. ஃபீல் குட் என்றவுடன் இன்னொரு தகவலைப் பகிர்ந்து கொள்ளத் என்று தோன்றுகிறது.

கோபியில் கிருஷ்ணன் உன்னி என்று துணை ஆட்சியர் இருக்கிறார். இளம் வயது. ஃபேஸ்புக்கில் ஒரு பக்கம் தொடங்கி ‘ஊருக்கு என்ன செய்யலாம்?’ என்று கேட்டிருந்தார். ஒரு காலத்தில் ஊரில் சாலையின் இருமருங்கிலும் நிறைய மரங்கள் இருந்தன. இப்பொழுது வெட்டிவிட்டார்கள். ஊரே காய்ந்து கிடக்கிறது என்று செய்தி அனுப்பியிருந்தேன். வரச் சொன்னார். அலுவலகத்தில் சந்தித்தோம். ‘நீங்க திட்டம் போடுங்க..என்ன உதவி வேணும்ன்னாலும் அரசாங்கத்திலிருந்து செய்வோம்’ என்றார். அவ்வளவுதான். பசுமை கோபி என்றவொரு குழுவைத் தொடங்கினோம். சாலையின் இருமருங்கிலும் நூறு மரங்களையாவது நட்டு வைப்போம் என்று திட்டமிட்டோம். அதோடு என் வேலை முடிந்துவிட்டது. பெங்களூர் வந்துவிட்டேன். அட்டகாசமான அணி ஒன்று சேர்ந்திருக்கிறது. கிடைக்கிற இடங்களிலெல்லாம் செடிகளை நடத் தொடங்கியிருக்கிறார்கள். அத்தனை பேரும் ஏதாவதொரு வேலையில் இருக்கிறவர்கள். வேலைகளை விட்டுவிட்டு இதற்காக அவ்வப்பொழுது கூடிப் பேசுகிறார்கள்.


செடி வைப்பது சுலபம். பராமரிப்புதான் மிக முக்கியம். அதைக் கார்த்திகேயன் பார்த்துக் கொள்கிறார். ஒரு தனியார் நூற்பாலையில் பொது மேலாளராக இருக்கிறார். வண்டி தயார் செய்து தண்ணீர் ஊற்றுகிற பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆரம்பகட்டமாக சுற்றுவட்டார பள்ளிகள், கோவில்கள் என வாய்ப்புள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ‘செடி வைக்கிறோம்; நீங்க பார்த்துக்குங்க’ என்ற உறுதிமொழியை வாங்கிக் கொண்டு செடிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக சாலையின் இருமருங்கிலும் செடி வைக்கிற திட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.

குழுமத்தின் மற்றவர்களைப் பற்றி பிறிதொரு நாள் விரிவாக எழுதுகிறேன். உடனடியாக இதைக் கூட எழுத வேண்டாம் என்றுதான் தோன்றியது. ஆனால் இவர்களின் உற்சாகம் எழுதச் செய்கிறது. எப்படியும் நூறிலிருந்து இருநூறு மரங்களையாவது மேலே கொண்டு வந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நாளை ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறேன். இதுவரையில் எங்கேயேல்லாம் சிக்கல்கள் வந்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதுதான் என்னுடைய நோக்கம். அதையெல்லாம் விரிவாக எழுத வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இப்படியொரு குழு சேர்ந்தால் போதும். கொஞ்சம் பசுமை போர்த்திவிடலாம். 

இதெல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொறி கொடுக்கிற அளவு கூட இல்லை. துக்கினியூண்டு. துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அது நாம் நினைப்பது போல வெறுமனே உயரவில்லை. படுவேகம். வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை வெளியாகியிருக்கும் கட்டுரிரையை வாசிக்கலாம். புள்ளிவிவரங்கள் சொல்வது போல வருடத்திற்கு வெறும் 3.5 மி.மீ உயரம் இல்லை- அதைவிடவும் வேகமாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஸிரிமல்லே செட்டு படத்தைப் பார்த்துவிட்டு தூக்கம் வராமல் இந்தக் கட்டுரையை வாசித்தேன். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த பூமி தாங்கும் என்று தெரியவில்லை. சற்றே நடுக்கமாகத்தான் இருக்கிறது. எதைப் பற்றியும் யோசிக்காமல் இந்த பூமியை அழித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு பூமி மீது எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை இங்கேயிருக்கும் ஒவ்வொரு செடிகளுக்கும் உயிர்களுக்கும்தானே இருக்கிறது? எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைத்தால் பூமி நம்மை மட்டும் விட்டு வைக்குமா என்ன?

5 எதிர் சப்தங்கள்:

திருப்பதி மஹேஷ் said...

nalla padam. prakashraj positive aanaa character.

சேக்காளி said...

//நமக்கு பூமி மீது எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை இங்கேயிருக்கும் ஒவ்வொரு செடிகளுக்கும் உயிர்களுக்கும்தானே இருக்கிறது?//
உங்களுக்கு இருக்கும் உரிமை எனக்கு இல்லை அல்லது எனக்கிருப்பது உங்களுக்கில்லை என்னும் உலகத்தில் செடிக்கா?
நல்லருக்குய்யா சிரி புள்ள சிட்டு

Madhini Jayakumar said...

இந்த படம் குடும்ப கதை தான் நல்லா இருக்கும் தலைப்பு சீத்ம்மா வாக்கிட்லோ சிறுமல்லி செட்டு அப்படி என்றால் சீதாராமர் கல்யாணத்தில் பாடப்படும் பாடல் ஆகும் அதன் அர்த்தம்

சீதம்மாவின் அரண்மனையில் ஒரு மல்லிகை
பந்தல் அதிலிருக்கும் சிறுமல்லியை மென்மையாக கொய்து அவளது கூந்தலை அலங்கரித்து கை நிறைய பூக்களை சீத்தம்மா சூடக் காரணம் அவளைக் காண கோதண்டராமன் வந்து கொண்டிருக்கிறான் என்பதாகும்.

தங்கம் பழனி said...

பூமிக்கு நாமும் ஏதேனும் வகையில் நல்லது செய்ய வேண்டும். மரம நடுவதுதான் அதற்கு சரியான தீர்வாகவும் இருக்கும். !

காத்தவராயன் said...

ஃபோரம் மாலில் [பிவிஆர்] டிக்கட் விலை அதிகம் என நினைப்பவர்கள் அதற்கு சற்றே எதிரே உள்ள இந்த தியேட்டரில் படம் பார்ப்பது வழக்கம். நல்ல தியேட்டர்தான். கிறிஸ்ட் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி அதனை ஒட்டியுள்ள ரோட்டில் நேராக செல்ல வேண்டும்.

தமிழ் தெரியாத தெலுங்கு நண்பனுக்கு சுந்தரபாண்டியனை ஓசியில் காட்டியதற்கு கைமாறாக எஸ்.வி.எஸ்.சி க்கு முதல்நாள் முதல்ஷோ டிக்கெட் எனக்கும் சேர்த்து எடுத்து இருந்தான்.

அவனுக்கு யாரென்று தெரியாத சசிக்குமாரையும் எனக்கே யாரென்று தெரியாத லட்சுமிமேனனையும்தான் அவனுக்கு காட்டி தண்டித்தேன். ஆனாலும் பயல் என்னளவுக்கு மோசமில்லை;
அஞ்சலி, சமந்தாவுக்காகவும் அவனுக்காகவும் தியேட்டர் வாசலில் காத்திருந்தேன் படத்தோட பேரு கூட தெரியாமல்.

பக்கத்தில் உள்ள மலையாளி ஜூஸ் கடையில் ஜூஸ் வாங்கி குடித்தபடி "என்ன படம் ஏன் இவ்வளவு கூட்டம்?" என்று ஒன்னுந்தெரியாத புள்ள மாதிரி கேட்டு படத்தின் பெயரை தெரிந்து கொண்டேன். அர்த்தம் தெரியனுமில்ல'
மெல்ல அங்கிருந்து நழுவி; கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தவர்களிடத்தில் "சீத்தம்மா வாகிட்லோ சிறுமல்லி சிட்டு, ஆஹந்ரே ஹெனு அர்த்தா குரு?" என்றதற்கு,
"ஹொத்தில்ல குரு நானு நிம்தரனே ஃபிலிம் நோடக்க பந்திதினே" என்று முகத்தில் அடித்தது போல பதில் வந்தது.
இத்தோட நிறுத்திக்குவோம் தெலுங்குகாரன்கிட்ட கேட்டு இதுக்கு மேலயும் அசிங்கப்படக்கூடாது என்று டிக்கெட் எடுத்த நண்பனிடம் கூட அர்த்தம் கேட்கவில்லை.

பட முடிந்தவுடன் "ஃபிலிம் ஹெஹிதே?" என்றான்.

"அஞ்சலி வெங்கடேஷ் ரெயின் சாங் பால சென்னாகிதே" என்றேன்.

அடுத்த நாள் போனில் அழைத்தான் "இவத்தும் ஆ ஃபிலிம் நோடிதேன்; பட் ஆ சாங்ன ஃபிலிம் இந்தே தகிதி பிட்டிதாரே மாரய்யா" என்று ரொம்பவும் அலுத்துக் கொண்டான்.

மணிகண்டன் பார்த்த பிரிண்டில் அந்த பாட்டு இருந்திருந்தால் அது மணிகண்டனுக்கு வரம்.