Aug 3, 2016

திசை

அறக்கட்டளையின் செயல்பாடுகளில் சிறுகச் சிறுக மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும் எனத் தோன்றுகிறது. அறக்கட்டளையைப் பதிவு செய்து உதவிகளைச் செய்யத் தொடங்கிய போது இன்றைக்கு நான்கு பேருக்கு உதவினால் உதவி பெற்றவர்கள் தங்களால் முடிந்தளவுக்கு பிறருக்கு உதவக் கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதுவொரு போலித்தனமான நம்பிக்கை. அப்படியெல்லாம் நம்மவர்கள் செய்துவிட மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

கீழே விரிவாக எழுதுகிறேன்.

அதற்கு முன்பாக, ஜுலை 2016, நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது-


வரிசை எண் 06: வைபவ் கிருஷ்ணா என்கிற குழந்தையின் மாதாந்திர பராமரிப்புச் செலவு.

வரிசை எண் 11: அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நந்தினியின் விடுதித் தொகை. நந்தினியின் அப்பா சலவைத் தொழிலாளி. அவரது முதலாண்டு கல்வித் தொகையை நிசப்தம் வலைப்பதிவின் மூலமாகவே சேகரித்துக் கட்டப்பட்டது.

வரிசை எண் 14: விக்னேஷ் பாண்டியின் தந்தை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் எழுதித் தருகிற கூலித் தொழிலாளி. விக்னேஷ் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். 8.11 CGPA வைத்திருக்கிறார். இறுதியாண்டு படிக்கும் அவருடைய கல்லூரித் தொகையில் ஒரு பகுதியாக ரூ.30,000 வழங்கப்பட்டிருக்கிறது.

வரிசை எண் 16: தீனதயாளன் என்கிற குழந்தைக்கு எட்டு வயதாகிறது. இருதயத்தில் துளை என்பதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். மீண்டுமொரு அறுவை சிகிச்சைக்காக முப்பதாயிரம் தேவைப்படுகிற நிலையில் பதினைந்தாயிரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தீனதயாளனின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.

வரிசை எண் 17: பெற்றவர்கள் இருவருமே இல்லை. சகோதரனும் சகோதரியும் வார இறுதி நாட்களில் கசாப்பு கடை போட்டு வருமானம் பார்த்து படிப்புச் செலவை ஓட்டுகிறார்கள். சகோதரன் இந்த வருடம் கல்லூரியில் முதல் வருடம் சேர்கிறான். அவனுக்கு முதல் வருடத் தொகையைக் கொடுத்து உதவியிருக்கிறோம்.

முதல் பத்தியில் சொன்னது போல அறக்கட்டளையின் செயல்பாடுகளில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டும் என சில நாட்களாகவே தோன்றிக் கொண்டிருக்கிறது. வெற்றுப் புலம்பலாக இதைச் சொல்வதில் அர்த்தமில்லை. அனுபவப்பூர்வமாக உணர்ந்த விஷயம்தான்.

இதுவரையிலும் பல லட்ச ரூபாய்க்கான உதவித் தொகைகளை வழங்கியிருக்கிறோம். உதவி பெற்றவர்களில் இதுவரை எத்தனை பேர் திரும்பத் தொடர்பு கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அதிகபட்சமாக இரண்டு பேர்கள்தான் பேசியிருக்கிறார்கள். நம்புவதற்கு சிரமம்தான். ஆனால் அதுதான் உண்மை.  ஒருவேளை அதிசயமாகத் திரும்பவும் அழைக்கிறார்கள் என்றால் நிச்சயமாக மீண்டும் உதவி கேட்கத்தான் அழைக்கிறார்கள் என்று அர்த்தம். இதைச் சொல்ல சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது அப்படித்தான்.

நம் மக்கள் ஓர் உதவியைப் பெற்றபிறகு அதைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் சொல்கிறேனே தவிர உதவி பெற்றவர்களை இழிவுபடுத்துவதாகத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். இதுவொரு பொதுவான மனநிலை. ‘கிடைச்சுடுச்சு..அவ்வளவுதான்’ என்கிற மனநிலை. இது எப்படி சங்கிலித் தொடர் விளைவை உருவாக்கும் என்று புரியவில்லை.

மருத்துவ உதவி பெற்றவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. ஆனால் கல்வி உதவி பெறுகிறவர்கள் இளைஞர்கள். அடுத்த தலைமுறையினர். அவர்களுக்கு என்ன பிரச்சினை? காசோலையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக எவ்வளவு முறை வேண்டுமானாலும் தொடர்பு கொள்கிறார்கள். அதன்பிறகு எந்தத் தகவலும் இருப்பதில்லை. குறைந்தபட்சமாக தேர்வு என்ன ஆனது? எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையாவது தெரியப்படுத்தலாம். ம்ஹூம். இவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு நன்றி பாராட்ட வேண்டுமென்றெல்லாம் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரசீதுகளையாவது ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

2015-16க்கான ரசீதுகளை ஒழுங்குபடுத்தும் போதுதான் தெரிகிறது- திரும்பியே பார்க்காதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இனி ஒவ்வொருவராக அழைத்து ‘ரசீது அனுப்பி வைங்க’ என்று போராட வேண்டும். எல்லோருமே நம்மவர்கள்தான். இதே மண்ணில் பிறந்து வளர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்கள். இந்த மனநிலையில் இருப்பவர்கள்தான் படித்து முடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உதவுவார்கள் என்று நம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றுதான் புரியவில்லை.

ஒரு பக்கம் அப்படியென்றால் இன்னொரு பக்கம் வேறு மாதிரி. தீனதயாளனை திங்கட்கிழமை மருத்துவமனையில் சேர்க்கவிருக்கிறார்கள். முந்தின நாள் ஞாயிற்றுக்கிழமை வந்து நிற்கிறார்கள். எல்லாம் விசாரித்து அவர்கள் சொன்னது சரி என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு காசோலை கொடுக்க வேண்டிய மருத்துவமனையின் பெயர் அவர்களிடம் இல்லை. மருத்துவமனையின் எண்ணுக்கு அழைத்தால் ‘திங்கட்கிழமைதான் அக்கவுண்ட்ஸ் ஆளுங்க இருப்பாங்க’ என்றார்கள்.  காசோலையில் தொகையை மட்டும் நிரப்பிவிட்டு ‘தயவு செஞ்சு மருத்துவமனையின் பெயரை எழுதுங்க’ என்று ஆறேழு முறையாவது சொல்லியிருப்பேன். இதுவரை பெயர் எழுதாமல் யாருக்குமே காசோலை வழங்கியதேயில்லை. அவர்களது அவசரம் கருதி அப்படிக் கொடுத்திருந்தேன். கடைசியில் பானுமதி என்ற பெயரில் எழுதி பணத்தை எடுத்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது என்பதெல்லாம் உண்மைதான். சிறுவனின் குடும்பம் வறுமையில் உழல்கிறது என்பதும் சரிதான். பத்து முறையாவது அழைத்திருப்பார்கள். எங்கள் அப்பா மருத்துவமனையில் மிகுந்த சிரமத்தில் இருந்த போது அங்கேயே வந்துதான் காசோலையை வாங்கினார்கள். கடைசியில் சொன்னதைச் செய்யாமல் அவர்கள் விருப்பத்திற்குச் செய்கிறார்கள். கணக்குத் தணிக்கை செய்யும் போது தனிநபரின் பெயரில் ஏன் காசோலை வழங்கப்பட்டிருக்கிறது என நாம் விளக்கம் கொடுக்க வேண்டும்.

பணம் கொடுக்கும் வரைக்கும் நாம் சொல்வதைக் கேட்பதும் கையில் கிடைத்தவுடன் அவர்கள் விருப்பத்திற்குச் செய்வதும் சலிப்படையச் செய்கின்றன. பொதுவாகவே நம் மக்கள் இப்படித்தான் என்கிற எண்ணம் வலுத்துக் கொண்டே வருகிறது. யாரையும் குறை சொல்லவில்லை. குறை சொல்ல வேண்டும் என்கிற எண்ணமும் இல்லை. ஆனால் நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கி தனிப்பட்ட நபர்களுக்கு கை மாற்றிவிடுவதில் எதிர்காலச் சமூகத்திற்கு பெரிய பலன் எதுவும் இருக்காது என்று நினைக்கத் தோன்றுகிறது. ‘மணிகண்டன் நாலு பேருக்கு உதவறான்’ என்று நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமானால் உதவுமே தவிர அது நம்முடைய நோக்கமாக இருக்கக் கூடாது. இதுவொரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களைவிடவும் உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான் நாம் படுகிற அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும். 

இந்தக் காலத்தில் பத்து ரூபாய் கூட சாதாரணமாகக் கிடைத்துவிடுவதில்லை. பல்லாயிரக்கணக்கான தொகையைக் கொடுக்கும் போது அது தற்காலிக உதவி என்ற மனநிலை வந்துவிடக் கூடாது. நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும் அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. மிகுந்த சிரமத்தில் இருப்பவர்களுக்கான உதவிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் மேற்சொன்ன நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு சில மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. சில நாட்களாகத் தீவிரமாக யோசித்துக் கொண்டும் சிலரிடம் ஆலோசித்துக் கொண்டும் இருக்கிறேன்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள் எதிர்கால சமூகத்திற்கு உதவும்படியாக எப்படிச் செயல்படலாம் என்பது குறித்து உங்களிடம் ஆலோசனைகள் இருந்தாலும் தயக்கமில்லாமல் தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஏதாவது செய்ய விரும்பி அதைச் செயல்படுத்த முடியாமல் இருந்தாலும் அதை மனமுவந்து பேசுங்கள். சரி தவறு என்றெல்லாம் எதுவுமில்லை. ஆலோசனைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். விரிவாக பரிசீலித்து அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுக்கலாம். 

நன்றி.