Aug 26, 2016

கரமுண்டார் வூடு

ஊர்ப்பக்கம் சொல்வார்கள்- முப்பது வருடங்கள் வாழ்ந்தாரும் இல்லை; முப்பது வருடங்கள் கெட்டாரும் இல்லை. சிரமத்தில் இருக்கிறவர்களுக்கு வேண்டுமானால் இது ஆறுதலாக இருக்கக் கூடும். எப்படியும் தம் கட்டி மேடு ஏறிவிடலாம் என்கிற நம்பிக்கையை உண்டாக்கக் கூடும். ஆனால் நன்றாக இருக்கக் கூடியவர்களுக்கு பயம்தான்.  ரெட்டை மாட்டு கூட்டு வண்டியில் இருபக்கமும் வெள்ளைத் துணியைத் திரையாகக் கட்டி ஜல் ஜல் என்று டவுனுக்கு சென்று வந்த குடும்பம் இருபதே வருடங்களில் சின்னாபின்னமாக சிதைந்து போனதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல குடும்பங்கள் உண்டு. நம் ஒவ்வொருவரும் நேரில் பார்த்திருக்கக் கூடும். அந்த வீட்டில் குடிகாரனோ, சீட்டாட்டக்காரனோ இருந்திருக்க மாட்டார்கள். தப்புத் தண்டா நடந்திருக்காது. ஆனால் அவர்களையும் அறியாமல் சிறுகிச் சிறுகி கரைந்து போய் இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால்தான் பயமாக இருக்கும். மேலே இருக்கிறோம் என்று கும்மாளம் போட வேண்டியதில்லை. நம்மையுமறியமாமல் நாம் சரிந்து கொண்டிருக்கக் கூடும் என்ற நடுக்கம் வந்து விரல்களைப் பற்றிக் கொள்ளும்.

கரமுண்டார் வூடு அப்படித்தான். 

சில வருடங்களுக்கு முன்பாக கவிஞர் கதிர்பாரதி பேசிக் கொண்டிருக்கும் போது ‘கரமுண்டார் வூடு’ என்ற பெயரை உச்சரித்தார். தஞ்சை ப்ரகாஷ் எழுதிய நாவல். அப்பொழுது அச்சில் இல்லை. கதிர்பாரதிக்கு நிறைய வாசிப்பு உண்டு. ஆனால் அவர் தனது வாசிப்பை எங்கும் எழுதுவதும் இல்லை பேசுவதும் இல்லை. தனிப்பட்ட உரையாடலில் மட்டும் தான் வாசித்த புத்தகங்களைப் பற்றி பேசுவார். அப்படி சிலாகித்த போது ‘மனுஷன் அந்தக் காலத்திலேயே லெஸ்பியன் பத்தியெல்லாம் இவ்வளவு தைரியமா எழுதியிருக்காரு’ என்றார். வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்திருந்தேன். 


கரமுண்டார் வூடு காவிரிக்கரையோரம் மிகப்பெரிய மாளிகை. ஆண்டைகளாக இருந்த கள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மாளிகை. கரமுண்டார்களின் பல ஏக்கர் நிலமும் அதில் கொடி கட்டிய வேளாண்மையும் சுருங்கிவிட்டது. சுருங்கினாலும் பல குடும்பங்கள் கரமுண்டார்களின் மாளிகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கரமுண்டார்கள் யாரையும் துரத்துவதில்லை. ஏதோவொரு வகையில் ரத்த சொந்தங்கள் அவர்கள். காலங்காலமாக அங்கிருந்தவர்கள் அங்கேயே இருக்கிறார்கள். கரமுண்டார்களின் சொற்ப வருமானமும் வீட்டில் தங்கியிருக்கும் சொந்தபந்தங்களுக்கு சோறு பொங்குவதிலேயே போகிறது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குளுவான்களுமாக நிறைந்து கிடக்கிற வூடு அது. கரமுண்டார்கள் அவ்வப்பொழுது இருக்கிற நிலங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்கிறார்கள். வந்து கேட்கிறவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். சொத்து எப்படி நிலைக்கும்?

முதல் ஐம்பது அல்லது அறுபது பக்கங்கள் வரைக்கும் நாவலை வாசிப்பதற்கு கொஞ்சம் சிரமம்தான். தஞ்சாவூர் வழக்கு. அஞ்ச, இஞ்ச என்று புரிந்து கொள்வதற்கு சற்றே திணற வேண்டியிருக்கிறது. தம் கட்டி உள்ளே நுழைந்துவிட வேண்டும். அதன் பிறகு நம் வசப்பட்டுவிடுகிறது.

சிரமப்பட்டு ஏன் நாவலை வாசிக்க வேண்டும்? 

நாவல் என்பது வாழ்க்கைச் சொட்டு. ஒரு காலத்தை, அந்தக் காலத்தின் மனிதர்களை, அவர்களது வாழ்க்கை முறையை, உரையாடலை, பழக்கவழக்கங்களை புத்தகமாக்கி ஒருவன் கொடுக்கும் போது சற்றேனும் சிரமப்பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும். அது சரிதான்.

ஆனால் இன்னொரு மனிதனின் வாழ்க்கையை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? - இப்படியும் கேட்கலாம்தான்.

இங்கு எல்லாமே Data தான். இரண்டு மனிதர்கள் சந்தித்துப் பேசும் போது வியாபாரம் குறித்தும், வருமானம் குறித்தும், லாப நட்டம் குறித்தும் டேட்டாவாக மட்டும்தான் பேசிக் கொள்கிறார்கள். மதிப்பெண், வயது, சம்பளம் என்கிற எண்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. புள்ளிவிவரங்கள், நிதி விவகாரங்கள், செய்திகள் என எல்லாவற்றையும் தகவல்களாக மூளைக்குள் திணித்து எந்திரமாகிக் கொண்டிருப்பதில் எந்த வருத்தமும் இல்லை. இதையெல்லாம் கம்யூட்டர் செய்துவிடும். ஆனால் கம்யூட்டராகத்தானே நாமும் விரும்புகிறோம்?

‘எம்புள்ளைக்கு கம்யூட்டர் மூளை’ என்று சொல்வதில் இருக்கும் பெருமை ‘எம் புள்ளை அடுத்தவங்க கஷ்ட நஷ்டத்தை புரிஞ்சு வெச்சிருக்கான்’ என்று சொல்வதில் இல்லை. நாம் மனிதர்கள். ரத்தமும் சதையுமானவர்கள். எண்கள், புள்ளிவிவரங்கள், இன்னபிற தகவல்களையும் விட சக மனிதனின் வலியும் வேதனையும் அவனது வாழ்க்கை முறையும் அவசியமில்லையா? முன்னோர்கள், சகமனிதர்களின் வாழ்வியலும் அவர்களது இண்டு இடுக்குகளும் தேவையில்லையா? இதையெல்லாம் புரிந்து கொள்ளும் போதுதான் Human values என்பதன் அர்த்தத்தை அடைகிறோம். அந்த அர்த்தத்தை அடைவதற்கான ஒரு வழியாக நல்ல இலக்கியமும் இருக்கிறது

காவிரிக்கரையோரம் இருந்த கரமுண்டார் வீட்டின் கதையை தனது பாட்டிகள் சொல்வதைக் கேட்டு எழுதியதாக ப்ரகாஷ் குறிப்பிட்டிருக்கிறார். பாட்டிகள் நாவலின் பாத்திரங்களாக உலவுகிறார்கள். அந்தப் பாட்டிகளின் பேத்தியான காத்தாயம்பாள் நாவலின் பிரதான கதாபாத்திரம். இளம்பெண். அவள் பெரிய கரமுண்டார் சந்திரஹாசத்தின் புதல்வி. அவள்தான் அந்த வீட்டின் தூண். எல்லாவற்றுக்கும் அவளைத்தான் அழைக்கிறார்கள். அவளுடைய மாமன் தெலகராஜு படித்தவன். தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்து கரமுண்டார் வூட்டில் தங்கியிருக்கிறான். அவள் அவனுக்குத்தான் என்பது கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இடையில் காத்தாயம்பாளை அடைவதற்கான அவனது எத்தனிப்புகள், காத்தாயம்பாளின் சமாளிப்புகள், இன்னொரு கரமுண்டாருடன் சேர்ந்து பள்ளப் பெண்களுடன் அவன் அடிக்கும் கூத்து என நாவல் பயணிக்கிறது. கரமுண்டார் வூட்டுப் பெண்களின் பாலியல் இச்சைகள், கள்ளர்-பள்ளர் ஆண்டான் - அடிமை, பள்ளப் பெண்களை பெண்டாளும் கரமுண்டார்கள் என்று நாவல் பல விஷயங்களைப் பேசுகிறது.

தெலகராஜூ பள்ளர் இனப் பெண்களை கூடிக் குலாவுகிறான். கரமுண்டார் வீட்டுப் பெண்ணான உமா மஹேஸ்வரி பள்ளர் இனத்தின் கலியராஜூவோடு காவிரியின் மணல் மேட்டில் முயங்குகிறாள். தாபம் கொந்தளிக்கும் காத்தாயம்பாள் பள்ளர் இனப் பெண்களை இரவில் தன்னோடு தங்க வைத்துக் கொள்கிறாள். நாவல் முழுவதுமாக வியாபித்துப் பரவும் இந்த அந்தரங்கக் கதைகளும் காட்சிகளும் சுவாரஸியமாக்கிக் கொண்டேயிருக்கின்றன. மனித மனத்தின் விசித்திரங்களையும் காமத்திற்காகவும் பசிக்காகவும்  தொடர்ந்து தேடல்களை நிகழ்த்தும் மனிதர்களின் வழியாக தஞ்சை ப்ரகாஷ் நாவலை அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார்.

நாவல் எப்பொழுது எழுதப்பட்டது என்கிற குறிப்பு புத்தகத்தில் எங்குமில்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக வரைக்கும் குறிப்புகள் இடம்பெறுவதால் அநேகமாக எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என யூகிக்கலாம். இதே நாவல் இப்பொழுது வெளிவந்தால் கொந்தளித்துவிடுவார்கள். நாலும் நாலும் எட்டு ப்ரகாஷ் தலையை வெட்டு என்று பெருங்கூட்டமே கிளம்பியிருக்கும். நல்லவேளையாக ப்ரகாஷ் எழுதிவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார். சர்ச்சை ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தால் சாதிச் சண்டையிலிருந்து பெண்ணியப் பிரச்சினைகள் வரை வரிக்கு வரி பக்கத்துக்கு பக்கம் அடித்து நொறுக்கலாம். அவ்வளவு விவகாரங்களை எழுதியிருக்கிறார். 

பெண்களின் மனதை, இருள்வெளிக்குள் புதைந்து கிடக்கும் அவளது இச்சைகளை, வேதனைகளை, காமம் வழியாக பெருக்கெடுக்கும் சாதிய அடக்குமுறைகளை, சரியும் சாம்ராஜ்யத்தை, ஆண்களின் திமிரை, மமதையை, ஒழுக்க நெறிகளை துணிந்து மீறுகிற பெண்களை, கிராமத்தின் அந்தரங்கமான சிக்கல்களை எவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

இந்த நாவல் புதிய வெளிகளைக் காட்டுகிறது என்று தயங்காமல் சொல்ல முடியும். அடுத்து என்ன புத்தகம் வாசிக்கலாம் என்று யாராவது யோசித்துக் கொண்டிருந்தால் ‘கரமுண்டார் வூடு’ நாவலை வாசிக்கத் தொடங்கலாம். 

நாவலை டிஸ்கவரி தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்.