Aug 12, 2016

பதில்

அலுவலகத்தில் நேர்காணல் ஒன்று நடந்தது. தொலைபேசி வழியான நேர்காணல். பார்வையாளனாக என்னை அனுமதித்திருந்தார்கள். ‘இதையெல்லாம் பார்த்தாவது இவனுக்கு புத்தி வரட்டும்’ என்றுதான் என்னையும் அனுமதித்திருக்க வேண்டும். கேள்வி கேட்டவர் அனுபவஸ்தர். இருபதாண்டு கால அனுபவம். எதிர்முனையில் வட இந்தியப் பெண். ஐந்து வருட அனுபவம். என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொன்னாள். அநேகமாக நான்காவது அல்லது ஐந்தாவது கேள்வியிலேயே அவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு நேர்காணல் நடத்தியவர் வந்திருக்கக் கூடும். இருந்தாலும் சம்பிரதாயத்துக்கு இரண்டு மூன்று கேள்விகளைக் கேட்டுவிட்டு ‘நீ வேலை செய்கிற அதே நிறுவனத்தில்தான் நானும் ஒன்பது வருடம் வேலை செய்தேன். நல்ல நிறுவனம் ஆச்சே..ஏன் மாற விரும்புகிறாய்?’என்றார். 

பெரும்பாலும் இத்தகைய கேள்விகளுக்கு வழவழா பதில்கள்தான் வரும். ‘உங்க கம்பெனியை பத்தி ஏற்கனவே தெரியும்...’ அப்படி இப்படி என்பார்கள். அப்படித்தான் இவளும் சொல்வாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ‘ஒன்பது வருஷத்துல உங்களுக்கு எவ்வளவு தடவை ஹைக் வந்துச்சு?’ என்று எதிர் கேள்வி கேட்டாள். நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தவர் ஒரு வினாடி விக்கித்துப் போனார். அதற்கு மேல் கேட்பதற்கு அவரிடம் எதுவுமேயில்லை. ரெஸ்யூமில் ‘செலக்டட்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்து அவள் கேட்ட கேள்வியைத்தான் சிலாகித்துக் கொண்டிருந்தார். நம்முடைய கேள்விக்கான பதில்களை நேரடியாகவும் வெளிப்படையாகவும் நறுக்கென்று சொல்கிறவர்களைப் பெரும்பாலும் பிடித்துவிடுகிறது. சம்பளம் போதவில்லை என்பதால்தான் வேலையை விடுகிறோம் என்பதுதான் தொண்ணூறு சதவீத பேருக்கும் பொருந்தும். அதைச் சொல்லிவிட வேண்டியதுதானே? இவள் சொல்லிவிட்டாள். எப்படியும் ஐம்பது சதவீத சம்பள உயர்வாவது கேட்பாள். நாற்பது சதவீதமாவது கொடுத்து எடுத்துக் கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

சி, சி++, ஜாவா, ஆரக்கிளில் பதில் சொல்வது வேறு விஷயம். ஆனால் கேள்விகளுக்கு பதில் சொல்வது சாதாரணக் காரியமில்லை. அதுவொரு வித்தை. எல்லோராலும் அவ்வளவு இயல்பாக பதில்களைச் சொல்லிவிட முடிவதில்லை. 

சுஜாதா, கார்ட்டூனிஸ்ட் மதன், கிருபானந்த வாரியார், பல சமயங்களில் அப்துல்கலாம் - இவர்கள் எல்லாம் நறுக்குத் தெறிக்கிற பெரிய மனிதர்கள். ஒரு சமயம் மதனிடம் விளையாட்டு அரங்கங்களில் அம்மணமாக ஓடுகிற மனநிலை குறித்து யாரோ கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு எக்ஸிபிஷினசம்(exhibitionism) அல்லது streaking என்று பெயர் என்று பதில் சொல்லி சில உதாரண நிகழ்வுகளையும் சொல்லியிருந்தார். அந்த வார்த்தை மனதுக்குள் பதிந்து கிடந்தது. இணையம் இல்லாத காலம் அது. நிச்சயமாக ஏதாவது புத்தகத்தைத் தேடித்தான் பதில் சொல்லியிருப்பார். ஆனால் மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துச் சொல்வது முக்கியம் அல்லவா? சமீபத்தில் காலச்சுவடு வெளியிட்டிருக்கும் பாலியல் அகராதி என்ற புத்தகத்தில் அந்தச் சொல்லைப் பார்த்த போது மதனின் நினைவுதான் வந்தது. எப்படி அத்தனை தகவல்களைத் திரட்டி பதில்களை எழுதிக் கொண்டிருந்தார் என்று வியப்பாக இருக்கும். மதனின் கேள்வி பதில்களுக்காகவே விகடன் வாசித்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருந்திருக்கக் கூடும்.

பொதுவான கேள்விகளுக்கு பதில் சொல்வது ஒரு பக்கமென்றால் random ஆகக் கேட்கப்படுகிற துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு பெரும் சாமர்த்தியம் வேண்டும். மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் தோசை குறித்துக் கேட்ட கேள்விக்கான பதிலை உதாரணமாகச் சொல்லலாம். கொச்சியில் மாணவர்களிடம் அவர் உரையாடிக் கொண்டிருக்கும் போது ‘பணவீக்க விகிதம் அதிகமாகும் போது தோசை விலை ஏறுகிறது. ஆனால் குறையும் போது ஏன் தோசை விலை குறைவதில்லை?’ என்று ஒரு பெண் கேள்வி கேட்கிறாள். அதற்கு பெரிதாக மெனக்கெடாமல் ‘காலங்காலமாக தோசை தயாரிப்பு முறையில் மாறுதலே வரவில்லை. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் பழைய முறைகளில்தான் தோசை சுடுகிறோம். அதுதான் காரணம். தொழில்நுட்பத்தின் பங்களிப்பு இல்லாமல் பணவீக்கத்தின் மாறுபாடுகளை உணர்வது சாத்தியமில்லை’ என்று பதில் சொன்னார். மிக எளிமையான கேள்விதான். ஆனால் எல்லோராலும் இவ்வளவு எளிமையாக பதில் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றவில்லை. இந்த பதிலை வைத்து ஆயிரம் துணைக் கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் தனது பதிலால் சமரசமடையச் செய்ய வைக்க முடிகிறது அல்லவா?

ஏன் பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் என்று கேட்கலாம்தான். பதில் சொல்லத் தெரிகிறது என்பது தன்னம்பிக்கை தரக் கூடியது. 

குருவிக்குஞ்சு மண்டையை வைத்துக் கொண்டு எனக்கும் கூட அவ்வப்பொழுது ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற நினைப்பு வந்துவிடும். Dangerous Thought. அப்பொழுது அலுவலக நண்பர்கள் குழுவாக பேசுகிற இடங்களில் இணைந்து கொள்வேன். அவர்கள் பேசுகிற விஷயங்கள் படு மொக்கையாகக் கூட இருக்கலாம். ஆனால் அத்தனை பேரையும் சமரசம் செய்யும்படியாக ஒரு பதிலைக் கூடச் சொல்ல முடியாது. அரை மணி நேரம் திணறிப் பார்ப்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் எந்த பதிலைச் சொன்னாலும் யாராவது ஒருவருக்கு சமரசமில்லாமல் இருக்கும். உருவாகியிருந்த எண்ணம் அப்படியே அடங்கிவிடும். நம்மிடம் தெளிவு இல்லை என்றுதானே அர்த்தம்?. இப்படியான சமயங்களில்தான் ‘நமக்குத் தெரியும்’ என்பது கூட பாவனைதான் என்ற எண்ணம் உருவாகும். அதுதான் ஆசுவாசம். இதை வெளிப்படையாகச் சொல்வதில் தவறு எதுவுமில்லை. சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?

நேர்காணல் முடிந்ததிலிருந்தே மனதுக்குள் இதுதான் ஓடிக் கொண்டேயிருக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் தெளிவும் அந்தத் தெளிவை பலருக்கும் புரியும்படியாக எடுத்துச் சொல்கிற பாங்கும்தான் போட்டி மிகுந்த இந்த உலகில் தேவையானதாக இருக்கிறது. குழந்தையிலிருந்தே அதைப் பழக்கி விட்டுவிட வேண்டும். பெரும்பாலும் குழந்தைகளைக் கேள்வி கேட்பவர்களாக மட்டுமேதான் பழக்குகிறோம். அது முக்கியம்தான். ஆனால் அதைவிடவும் முக்கியம் அவர்கள் பதில் சொல்லத் தெரிந்தவர்களாகவும் இருப்பது. வெறும் பாடத்திலும் அறிவியலிலும் கணிதத்திலும் மட்டுமே கேள்விகளைக் கேட்காமல் குழந்தைகளிடம் பொதுவான கேள்விகளைக் கேட்க வேண்டும். அவை ஃபேண்டஸியான கேள்விகளாகவும் இருக்கலாம். அவர்கள் பதில் சொல்லட்டும். சொல்லிப் பழகட்டும். . நாசூக்கான, புத்திசாலித்தனமான அதே சமயம் நறுக்குத் தெறித்த மாதிரியான பதில்கள் மிக அவசியமானவை. அதுதான் எதிராளியை வாயடைக்கச் செய்யும்.

நமக்கு நாமே சுவாரஸியமான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை முயற்சித்துப் பார்க்கலாம். கேள்வி-பதில் இருப்பின் இங்கே பின்னூட்டமாக இடுங்கள். சிறந்த கேள்வி-பதில் என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

என்னிடம் சுவாரஸியமான கேள்வி ஒன்று இருக்கிறது. ஆனால் பதில்தான் இல்லை. பதிலே சொல்ல முடியாத கேள்வி அது. ‘ஆமா நான் ஃபோன் பண்ணும் போது லைன் பிஸியா இருந்துச்சு..யார் கூட பேசிட்டு இருந்தீங்க?’ இந்த ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் கண்டுபிடித்தால் கூட போதும். தன்யனாவேன்.