சினிமா பற்றிய அறிவு எனக்கு இல்லை. அதை ஒத்துக் கொள்வதில் வெட்கமும் இல்லை. ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் சில படங்களை ஓசியில் பார்த்ததுண்டு. அதன் பிறகு தம்பிச்சோழன் ஓசூரில் வசித்த போதுதான் அயல்சினிமாக்கள் குறித்தான பிரக்ஞை உண்டானது. குறும்படம், முழு நீளத் திரைப்படங்கள் என்று அவரிடம் சில கதைகள் கைவசம் இருந்தன. நாடகமும், சினிமாவும்தான் அவரின் கனவுகள். அந்தக் கதைகளைச் சொல்லிவிட்டு சில படங்களைப் பற்றிப் பேசுவார். பெரும்பாலானவை அயல் மொழிப்படங்கள். அப்படித்தான் பிற மொழிப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.
அந்தச் சமயத்தில் தினமணி.காம் இணையதளத்தில் தொடர்களை அறிமுகப்படுத்தினார்கள். திரு.பார்த்தசாரதி தினமணி.காம் தளத்துக்கு பொறுப்பேற்றிருந்தார். ஒரு நாள் அவர் அழைத்து ‘தொடர் எழுத முடியுமா?’ என்று கேட்ட போது சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு ‘சினிமா பத்தி எழுதட்டுமா சார்?’ என்றேன். சினிமாவின் தொழில்நுட்பத்தைப் பிரித்து மேயாமல் கதை, அந்தக் கதையின் வரலாற்றுப் பின்புலம், நடிகர்கள் என்று சாதாரண நடையில் எழுதிய போது ஓரளவு கவனம் பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். நிறையப் பேர் வெவ்வேறு படங்களைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எழுதினேனோ இல்லையோ- நிறையப் படங்களைப் பார்த்தேன். அது எனக்கும் பலனுடையதாகத்தான் இருந்தது. சினிமாக்காரர்களிடம் பேசும் போது ‘இவனுக்கும் சினிமா தெரியுது’ என்கிற வகையில் பீலா விட்டுக் கொள்ள முடிந்தது.
தினமணியில் தொடர் வெளி வந்த போது அத்தனையும் நேர்மறையான விமர்சனங்கள் என்று பொய் எதுவும் சொல்லவில்லை. ஒரு அநாமதேய மின்னஞ்சல் வந்து கொண்டேயிருந்தது. ‘சினிமாவைப் பற்றி நீ எழுதக் கூடாது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். புத்தகமாக வெளிவரும் இந்தத் தருணத்தை அந்த மனிதர் விரும்பாமல் இருக்கக் கூடும்.
அயல் மொழி திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஆவலை உருவாக்கிய தம்பிச்சோழனுக்குத்தான் இந்த நூல் உரித்தானது. நூலை அவருக்குத்தான் சமர்பித்திருக்கிறேன்.
புத்தகம் டிஸ்கவரி பதிப்பகத்தின் வழியாக வெளியாகிறது. அதற்காக யாவரும் பதிப்பகத்தோடு சண்டை என்றெல்லாம் அர்த்தமில்லை. வேடியப்பனும் நல்ல நண்பர்தான்.
புத்தகத்திற்கான தலைப்பைப் பற்றி ஃபேஸ்புக்கில் விவாதித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கவிதாபாரதி சொன்ன தலைப்புதான் ‘ஃபாரின் சிடி’. பெரும்பாலான படங்கள் வடபழனி ரஹமத் ப்ளாசாவில் இயங்கும் சிடி கடையில் வாங்கியவைதான். அதனால் அந்தப் பெயரே இருக்கட்டும் என்று முடிவு செய்து கொண்டோம். திருட்டு விசிடி இன்னமும் பொருத்தமான பெயர்தான். ஆனால் யாராவது விஷாலிடம் கோர்த்துவிட்டால் அவர் முரட்டு அடி அடிக்கக் கூடும் என்பதால் இதுவே இருக்கட்டும்.
அயல் மொழித் திரைப்படங்கள் என்பவை வெறும் தொண்ணூறு நிமிடப் பொழுது போக்கு மட்டும் இல்லை என்று சொல்வார்கள். வேறொரு மண்ணின் கலாச்சாரத்தை, மனிதர்களை, வரலாறுகளை நாடுவதற்கான தொடக்கப்புள்ளிகள் அவை. அதை மனதில் வைத்துக் கொண்டுதான் கட்டுரைகளை எழுதியிருந்தேன். உதாரணமாக வாட்டர் டிவைனர் என்ற படத்தில் ஒரு மனிதர் போரில் காணாமல் போய்விட்ட தனது மகன்களைத் தேடிச் செல்கிறார். படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக முதல் உலகப்போரின் ஒரு பகுதியைத் தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கும். கட்டுரையில் சேர்த்திருக்கிறேன்.
புத்தக வெளியீட்டு நிகழ்வு இருக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. டிஸ்கவரி பதிப்பகத்தின் பிற புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏதேனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் ஃபாரின் சிடியும் ஒன்றாக இருக்கும். அதைத்தான் நானும் விரும்புகிறேன்.
அச்சிடப்பட்ட புத்தகம் அடுத்த வாரம் கிடைக்கும். ஆர்வமிருப்பவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ராயல்டி வருகிற அளவுக்கு விற்றால் சந்தோஷம். வருமானம் வந்தால் அந்தத் தொகையை சிரமத்தில் இருக்கும் உதவி இயக்குநருக்கு வழங்கிவிடலாம் என யோசித்து வைத்திருக்கிறேன்.
தொடர்ந்த ஆதரவுக்கு அத்தனை பேருக்கும் நன்றி. எழுதிய நூல்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது. ஏழு. எண்ணிக்கையா முக்கியம்?
3 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துக்கள் சார்.
அடுத்ததாக, கைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ் தொடர்கட்டுரைகள் புத்தகமாக கொண்டு வாங்க.
Congratulations sir!!! Keep going!!!
வாழ்த்துக்கள்
Post a Comment