Jul 22, 2016

கபாலி

கடந்த சில நாட்களாக யாராவது வந்து சன்னக்கோல் போட்டால்தான் படுக்கையை விட்டு எழுவது வழக்கம். இன்றைக்கு மூன்றேகாலுக்கு விழிப்பு வந்துவிட்டது. கபாலிக்காக என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று டிக்கெட் கொடுக்கும் போதே ‘சார் ஆறரை ஷோவுக்கு மட்டும்தான்..பத்து மணிக்கு வந்து நீட்டாதீங்க’ என்றான். போகாமல் விட்டுவிட்டால் இருநூறு ரூபாய் போய்விடும். இருநூறு ரூபாய் இருந்தால் கோபியிலிருந்து பெங்களூரே போய்விடலாம். பொசுக்கு பொசுக்கென்று விழித்துப் பார்த்தே படுத்திருந்தால் விடியாமலா போய்விடும்? பேண்ட் சட்டையை மாட்டும் போது வீட்டில் இருப்பவர்கள் ஏதோ கொள்ளைக்குப் போகிறவனைப் போல பார்த்தார்கள். 

முடியுமா? முறைத்தால் அடங்குற ஆளா நான்? கிளம்பிவிட்டேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்ரீவள்ளியில் அத்தனை கூட்டம். ஒட்டடை அடைந்து கிடக்கிற பால்கனியை திறந்துவிட்டார்கள். ஆறரை மணிக்கே உள்ளே நுழைந்திருந்தேன். ஏழு மணிக்குத்தான் காட்சி. அடியில் குத்தாத, கிழிபடாத ஒரு இருக்கையைக் கண்டுபிடித்து அமர இருபது நிமிடங்கள் தேவைப்பட்டது. சதைப் பிடிப்பான ஆளாக இருந்தால் கூட தொலைகிறது. என்னுடைய சதையை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் வெறும் பலகையில் அமர்ந்தால் கிளம்பும் போது வண்டி ஓட்ட முடியாது. அக்கம்பக்கத்து இருக்கைகளில் அத்தனை பேரும் தெரியாத ஆட்கள்தான். முன்பெல்லாம் திரையரங்குக்குச் சென்றால் பாதிப்பேரையாவது பார்த்து சிரிக்க வேண்டியிருக்கும். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. ஊரும் மாறிவிட்டது. புது ஆட்களும் நிரம்பிவிட்டார்கள். 

பக்கத்தில் அமர்ந்திருந்தவன் முதல் காட்சியிலேயே சிகரெட்டைப் பற்ற வைத்தான். இடையிடையே புளிச் புளிச் என்று துப்பினான். கருமாந்திரம் புடிச்சவன் எச்சில் நம் மீதும் தெறிக்குமோ என்னவோ என்று பம்மிக் கொண்டே அமர்ந்திருந்தேன். ‘தம்பி தியேட்டருக்குள்ள துப்பாதப்பா’ என்று அறிவுரை சொல்லலாம்தான். ஆனால் அது என்ன ஃபேஸ்புக்கா? இருட்டுக்குள் கும்மென்று ஒரு குத்து விட்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு எங்கே ஓடுவது? வந்த இடத்தில் வம்பும் வழக்கும் வேண்டாம் என்று கை கால்களைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுதும் கூட சாரல் பொழிந்தது. ஆனால் விதி என்று அமர்ந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் ரஜினிக்காக என்று சொன்னால் ‘போயும் போயும் ரஜினியைப் புகழலாமா?’ என்று ஏதாவதொரு ஒரு அறிவுஜீவி வந்து கேட்கும். ராதிகா ஆப்தேவுக்காக பொறுத்துக் கொண்டேன் என்று சொன்னால் ‘தொலையட்டும்’ என்று விட்டுவிடுவார்கள். என்ன சொல்லி என்ன? ராதிகா ஆப்தேவுக்கு ஒரு டூயட் கூட இல்லை. அநியாயம்.

படம் எப்படி என்று கேட்டால் முதல் பாதி அட்டகாசம். இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையும், கொஞ்சம் உடான்ஸூம். அவ்வளவுதான் விமர்சனம். 

ரஜினி எதிர்ப்பு, ரஞ்சித் மீதான வன்மம் உள்ளிட்ட அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டியும் படம் ஓடிவிடும். சாதாரண ரஜினி ரசிகனாக ரசிப்பதற்கு படம் முழுக்கவும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நடிகர்களில் ரசிகர்களைத் தன்னை நோக்கி இழுத்துப் பிடிக்கத் தெரிந்தவர் ரஜினி. அதை அழகாகச் செய்திருக்கிறார். மற்றபடி கேமிராவை செங்குத்தாக வைத்திருக்கலாம். மூன்றாவது காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் கோணம் சரியில்லை. எட்டாவது காட்சியில் புல்லாங்குழல் இன்னமும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருக்கலாம், திரைக்கதையில் லாஜிக் தொலைந்து போனது உள்ளிட்ட விஷயங்களை எழுதுவதற்கு இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? 

நீலக்கலர் சட்டை ஒரு குறியீடு; கருப்பு நிற முடி இன்னொரு குறியீடு; வெள்ளை நிற தாடி ஒரு குறியீடு; அம்பேத்கரின் அரசியல், காந்தியின் தத்துவம் என படத்தை பிரித்து மேய்கிற வேலையை இன்னொரு குழு பார்த்துக் கொள்ளும். ஆக அதுவும் வேண்டாம். இருநூறு ரூபாய் கொடுத்தோமோ, சாரல் மழையில் படத்தை பார்த்தோமோ, வெளியில் வந்து ‘படம் எப்படி?’ என்று யாராவது கேட்டால் பதில் தெரியாமல் விழித்தோமோ என்று இருக்க வேண்டும். 

ஸ்ரீவள்ளி தியேட்டர் குறித்து ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். நடிகர் முரளி ‘மஞ்சுவிரட்டு’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கோபி வந்திருந்தார். அப்பொழுதெல்லாம் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். நிறைய நடிகர்களிடம் பேசுவேன். சிலர் மதித்துப் பேசுவார்கள். பலர் கண்டுகொள்ளவே மாட்டார்கள். முரளி வித்தியாசமான மனிதர். மதியம் இடைவேளையில் சிகேஎஸ் பங்களாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற நடிகர்களிடம் பேசுவது போலவே ‘சார் உங்க படம் எல்லாம் எனக்குப் பிடிக்கும்’ என்றேன். சிரித்து அருகில் அமர வைத்துக் கொண்டார். பேசிக் கொண்டிருந்தவர் ‘சினிமாவுக்கு போலாமா’ என்றார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். நிஜமாகவே என்னைப் போல இரண்டு மூன்று பையன்களை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் தெரியாது. தெரிந்தால் தோலை உரித்துவிடுவார்கள். மதியக் காட்சிக்குச் சென்றோம். டிக்கெட் செலவிலிருந்து, தின்பண்டம், கூல்டிரிங்க்ஸ் என்று எல்லாச் செலவும் அவருடையதுதான். ஏதோ கனவில் மிதப்பது போல இருந்தது. எதற்காகச் செய்கிறார் என்றும் தெரியவில்லை.

செல்போன் இல்லாத காலம் அது. படம் முடிந்த பிறகு பொடி நடையாகவே சிகேஎஸ் பங்களாவுக்குச் சென்றோம். இடையில் யாராவது சிரித்து கை குலுக்கினார்கள். தயக்கமேயில்லாமல் கை குலுக்கினார். கிளம்பும் போது ‘அடுத்த தடவை வந்தா வீட்டுக்கு வாங்க’ என்றேன். சிரித்துக் கொண்டே ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை எடுத்துக் கொடுத்தார். வாங்கி பையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்புவது போல எதையுமே காட்டிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

கபாலி படத்துக்காக அதே ஸ்ரீவள்ளி தியேட்டரில் பதாகைகள் வைத்திருந்தார்கள். பட்டாசு வெடித்தார்கள். ‘தலைவா நீ ஆணையிட்டால் பாரத தேசத்தை பசுமை தேசமாக்குவோம்’ என்று எழுதி வைத்திருந்தார்கள். தலைவா, தலைவா என்று கத்தினார்கள். வசனங்கள் புரியாத அளவுக்கு விசில் அடித்தார்கள். தியேட்டர்காரர்கள் இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டு மின்விசிறியைக் கூட ஓட விடவில்லை. தரை முழுவதும் குப்பையாக நிறைந்து கிடந்தது. திரையரங்குக்கு வெளியில் நின்ற விஜய் ரசிகர்கள் ‘தெறிக்கு ஆறரை மணி ஷோவுக்கு பர்மிஷன் கொடுக்கலை....இப்போ ஜாஸ் சினிமா ரிலீஸ் பண்ணுறாங்க..அதனால டிக்கெட்டுக்கு இவங்க வைக்கிறதுதான் விலை..இவங்க சொல்லுறதுதான் டைமிங்’ என்றார்கள். கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தேன். எல்லாம் சரிதான். மேற்சொன்ன எல்லாமே ரஜினிக்காக என்றார்கள். நான் தப்பிப்பதற்காக ராதிகா ஆப்தேவுக்காக என்று மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.