Jul 21, 2016

வெர்ச்சுவல் சுவர்

ஊரில் ஒரு வயதான மனிதர் இருக்கிறார். ராமசாமி. கோவணம் கட்டிக் கொண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார். அதுதான் அவரது தொழில். வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்த போது ‘சம்பளம் எத்தன வருது?’ என்றார். இப்படியான ஆட்களிடம் சம்பளத்தைச் சொல்லிவிட வேண்டும். ‘இவ்வளவு தர்றாங்களா?’ என்ற ஆச்சரியமிருந்தாலும் ஒரு வகையில் சந்தோஷப்படுவார்கள். பதிலைத் தெரிந்து கொண்டு‘மவராசனா இரு’ என்றார். பெரியவர் ஆச்சரியமான மனிதர். தலையின் உருமாலில் எப்பொழுதும் ஒரு புத்தகத்தைச் சொருகி வைத்திருப்பார். காசு கொடுத்தெல்லாம் வாங்காத பழைய புத்தகங்கள். பண்டம்பாடிகள் மேய்ந்து கொண்டிருக்க வாய்க்கால் ஓரமாகவும் வரப்பு ஓரமாகவும் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். யாராவது எதிர்ப்பட்டால் கூச்சத்தோடு புத்தகத்தை மூடி தலையில் செருகிக் கொள்வார். வெகு நெருக்கமாகப் பழகிய பிறகே பொதுவான விவகாரங்களைப் பேசுவார். அதுவும் ஏகப்பட்ட விவகாரங்கள். இந்தக் கோவணத்தானுக்கு எவ்வளவு தெரியுது பார் என்று நினைக்க வைத்துவிடுகிற அளவிலான தகவல்கள்.

வாசிப்பு மனிதனை தகவல் பெட்டகமாக மாற்றுகிறது.

முன்பெல்லாம் கணினியைத் திறந்தவுடன் தினமலர், ஒன்-இந்தியா, என்.டி.டிவி உள்ளிட்ட சில தளங்களைத் திறந்து ஒரு ஓட்டம் விடுவது என்னுடைய வழக்கமாக இருந்தது. ஃபேஸ்புக் வந்த பிறகு அந்த வழக்கம் அருகிவிட்டது. ஃபேஸ்புக்கில் என்ன செய்தி பகிரப்படுகிறதோ அது மட்டும்தான் செய்தி என்கிற இடத்துக்கு மனநிலை வந்து சேர்ந்திருருக்கிறது. பொழுதின்னிக்கும் அதை மட்டுமே மேலும் கீழும் உருட்டுவதாக இருந்த மண்டையில் மகிதான் சம்மட்டியால் அடித்தான். அவன் பள்ளி ஆசிரியை படிப்பைத் தவிர வேறு விஷயங்களையும் பேசுகிறார். சில மாதங்களுக்கு முன்பாகவே தென் சீனக்கடல் பற்றி பேசியிருக்கிறார். ‘தென் சீனக் கடல் இந்தியாவுக்கு சொந்தமாங்கப்பா? மேம் பேசினாங்க’ என்றான். அதன் பிறகு துழாவியதில்தான் ஏகப்பட்ட விவகாரங்கள் சிக்கின. சமூக ஊடகங்களைப் பற்றிக் கொண்டிருந்தால் எவ்வளவோ விவரங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். 

சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு ஒரு செய்தியை மட்டும்தான் பிடித்துத் தொங்குகிறார்கள். அதை மட்டுமே நாம் பின் தொடர்கிறோம். இப்படித்தான் நம்மைச் சுற்றி மிகப்பெரிய சுவர்களை எழுப்பிக் கொள்கிறோம். நம்மையுமறியாமல் நம் மூளை மழுங்கடிக்கப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இயல்பாக பேசிக் கொண்டிருந்த விஷயங்களைக் கூட இப்பொழுது மறந்துவிட்டோம். உணர்ச்சிவசப்படக் கூடிய, லைக் வாங்கக் கூடிய மேம்போக்கான செய்திகளை மட்டுமே செய்திகளாக மனம் எடுத்துக் கொள்கிறது. தலாய்லாமா பற்றி கடைசியாக வாசித்த செய்தி எதுவென்று ஞாபகப்படுத்திப் பார்க்கவே முடியவில்லை. ஸ்மிரிதி இரானியை எந்தத் துறைக்கு மாற்றியிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ஞாபகத்துக்கு வருவதில்லை. கூடங்குளத்தில் எத்தனை அணு உலைகள் இயங்குகின்றன என்ற செய்தி மறந்துவிட்டது. தாது மணல் விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஒரு சமயத்தில் இந்தியர்களைத் தாக்கினார்கள் அல்லவா? அது இன்னமும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. இப்படி பெரும்பாலான விவகாரங்களில் நமது தொடர்பு கண்ணி அறுந்துவிட்டது. 

சமூக ஊடகங்களிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டியதில்லை ஆனால் இங்கு உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது - Trending தாண்டி வெளியில் வர வேண்டிய அவசியம் அது. வெளியுலகம் இந்த வெர்ச்சுவல் உலகைக்காட்டிலும் வெகு சுவாரசியமானது இல்லையா?

பள்ளிக் காலத்தில் மேற்சொன்ன பெரியவரிடமிருந்து புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். ‘நீ வயசுக்கு வந்ததுக்கு அப்புறமா வேற புக்கெல்லாம் தர்றேன்’ என்று சொல்லி நக்கல் அடித்திருக்கிறார்.  இருபது வருடங்களைக் கடந்தாகிவிட்டது. இன்னமும் அதே முறுக்கத்தோடுதான் இருக்கிறார். அந்தக் காலத்தில் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு ‘வேற புக் தர்றீங்களா?’ என்று கேட்டால் ‘ஏண்டா கல்யாணம் கட்டி புள்ள பெத்துட்டா மட்டும் வயசுக்கு வந்ததா அர்த்தமா?’ என்கிறார். கவுண்ட்டர் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு ‘இன்னுமா அதையெல்லாம் படிக்கிறீங்க?’ என்றால் ‘ஆசைக்கு ஏது வயசு?’ என்று கேட்டு மடக்குகிறார். இந்த மனிதரிடம் என்ன பேசுவது? 

முந்தாநாள் வாய்க்கால் ஓரமாக ஆசுவாசமாக பேசிக் கொண்டிருந்த போது நிறையக் கதைகளைச் சொன்னார். எல்லாமே மனிதர்களின் கதைகள். அத்தனையும் அவர் வாசித்த கதைகள். முப்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த கதைகளைக் கூட ஞாபகம் வைத்துச் சொல்கிறார்- அந்த ஊர்ல அப்படி நடந்துச்சாம்; இந்த ஊரில் இப்படி ஆச்சு என்று. கிளுகிளுப்பான கதைகள் என்றால் ஒரு படி மேலே செல்கிறார். கேட்டுக் கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழைத்தார்கள். பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இந்த வாரத்தில் இன்னொரு நாள் கோவணத்தாண்டியைப் பிடித்து அமுக்கிக் கதை கேட்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகின் சுவாரசியங்களை இழந்து வெர்ச்சுவல் உலகிற்குள் முழுமையாகச் சிக்கிக் கொள்வோமோ என பயமாக இருக்கிறது. ‘ஒரு நாளைக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மணி நேரம் மட்டுமே ஃபேஸ்புக், ட்விட்டருக்கு என்று ஒதுக்கினால் தப்பித்துவிடலாம்’ என்று சமீபத்தில் ஒரு சஞ்சிகையில் வாசித்தேன். காலையில் இருபது நிமிடம், மதியம் இருபது, இரவில் இருபது என்று பிரித்து வேண்டுமானால் ஒதுக்கிக் கொள்ளலாம். அப்படி சமூக வலைத்தளங்களுக்கான நம் நேரத்தைச் சுருக்கிக் கொள்வது கடினமாக இருப்பதாக உணர்ந்தால் கிட்டத்தட்ட மனம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்று அர்த்தம். வேண்டுமானால் தொடக்க காலத்தில் இரண்டு மணி நேரம் என்று ஒதுக்கிக் கொள்ளலாம். போகப் போக நேரத்தைக் குறைத்து ஒரு மணி நேரம் என்பது அளவு என மாற்றிக் கொள்ளலாம். எந்தச் சஞ்சிகையில் வாசித்தேன் என்று மறந்துவிட்டது. ராமசாமியைப் பார்த்தவுடன் அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. 

Magzter என்றொரு தளம் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அத்தனை முக்கியமான சஞ்சிகைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தளம் இது. வருடாவருடம் சந்தா கட்டினால் இஷ்டத்துக்குப் படித்துக் கொள்ளலாம். எனக்கு ஓசியில் கிடைத்திருக்கிறது. வெகு நாட்களுக்கு முன்பாக முரளிதரன் என்கிற வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு வருடத்திற்கு நீங்கள் இலவசமாகப் படித்துக் கொள்ளலாம்; பணம் கட்டியிருக்கிறேன் என்று. அவருக்கு மிகப்பெரிய நன்றி. 

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் வாய்ப்பிருப்பவர்கள் சந்தா கட்டி வைத்துக் கொள்ளலாம். ஃபேஸ்புக்கில் உலவும் நேரத்தில் எதையாவது ஒரு சஞ்சிகையை வாசிக்கலாம். அப்படி வாசித்துக் கொண்டிருந்த போதுதான் ‘ஒரு மணி நேர கான்செப்ட்’டை வாசித்தேன். தேடி எடுக்க முடிந்தால் அந்தக் கட்டுரை குறித்து இன்னமும் விரிவாக எழுதுகிறேன்.