Jul 11, 2016

காலம்

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. சரியில்லை என்கிற சொல் அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது. பத்து நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் இரவும் பகலுமாக தொடர்ந்து மழை. உடல் சில்லிடுகிற அளவுக்கான குளிர். அப்பா சுருண்டு படுத்தார். குளிருக்காக படுக்கிறார் என்று நினைத்து அறை வெப்பமூட்டி வாங்கி வந்து வைத்தோம். குளிர் குறைந்த மாதிரி தெரிந்தது. அப்பா சரியான மாதிரி தெரியவில்லை. வெள்ளிக்கிழமையன்று மாலை வீடு திரும்பும் போது அப்பா படுத்திருக்கக் கூடாது என்று கடவுளை வேண்டியபடி வீட்டின் படியேறினேன். கடவுள் செவி சாய்த்திருந்தார். வரவேற்பறையில் அப்பா அமர்ந்திருந்தார். நிம்மதியாக இருந்தது.

சில நிமிடங்கள் பேசிவிட்டு அவரை சாப்பிட அழைத்த போதுதான் அந்த நிம்மதி அப்படியொன்றும் நிலையானதில்லை என்று உணர முடிந்தது. அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. தம்பியும் நானும் இரண்டு பக்கமாக நின்று கொள்ள தோள்களைப் பிடித்து மெல்ல அடி வைத்தார். எனக்குத் தெரிந்து உடல்நிலை நசிந்து அப்பாவால் நடக்க முடியாமல் போனதேயில்லை. வரவேற்பறையிலிருந்து படுக்கைக்குச் செல்ல இருபது நிமிடங்கள் பிடித்தது. விடிந்த பிறகு நன்றாக இருந்தாலும் எதற்கும் மருத்துவரைச் சந்தித்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டு அதிகாலையில் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் படுக்கச் சென்றுவிட்டேன். தம்பியும் அம்மாவும் அருகிலேயே இருந்திருக்கிறார்கள். இரவு ஒன்றரை மணி இருக்கும். தம்பி அறைக்கதவைத் தட்டினான். திறந்த போது அழுதான். ‘அப்பாவுக்கு நிதானமே இல்லைடா’ என்று அவன் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது. அருகில் சென்று பார்த்த போது நினைவு தப்பியிருந்தது. காதோரமாகச் சென்று அழைத்தால் பதில் சொன்னார். குழறலான பதில். தெளிவில்லாமல் இருந்தது.

இனியும் தாமதித்துக் கொண்டிருக்க முடியாது என்று புரிந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்ன முடிவெடுப்பது என்றே தெரியவில்லை. மனதுக்கு நெருக்கமான ஒன்றிரண்டு பேர்களை அழைத்துப் பேசினேன். கோயமுத்தூர் அழைத்துச் சென்றுவிடுவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தோம். அருகாமை வீடுகளிலிருந்து சில நண்பர்களை அழைத்து அப்பாவை மெல்லத் தூக்கி வந்து காரில் ஏற்றிய போது மணி இரண்டரை. எங்கேயும் நிறுத்தவேயில்லை. கோவை மெடிக்கல் சென்டரின் அவசரப் பிரிவுக்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்திருந்தோம். அதி வேகம் அது. வருகிற வழியெங்கும் அப்பாவுக்கு நினைவு வருவதும் போவதுமாகவே இருந்தது.

உடல்நிலை விவரங்களைச் சொல்லி அவசர சிகிச்சைப்பிரிவின் உள்ளே அனுமதித்து விட்டு வெளியில் காத்திருக்கத் தொடங்கினோம். உறவினர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள்.

இடையிடையே அவசரப்பிரிவின் காவலரிடம் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே சென்று பார்க்கும் போதெல்லாம் அப்பா அசைவில்லாமல் படுத்திருந்தார். அருகில் சென்று நிற்கும் போது அடையாளம் கண்டுகொண்டார். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்து சேரும் போது மணி மூன்றாகியிருந்தது. அப்பொழுது அப்பாவின் நினைவு முழுமையாகத் தப்பிப் போயிருந்தது. வயிறு வீங்கியிருந்தது. மருத்துவர் அழைத்தார். ‘கல்லீரல் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிட்டது. ஹெபாட்டிட்டிஸ் சி வைரஸ்ஸின் பின் விளைவுகள் இவை. இனி இங்கே சிகிச்சையளிப்பது அவசியமில்லாதது. வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்’ என்றார். கண்கள் இருண்டதை உணர்ந்தேன். குறைந்தபட்சமாக அங்கேயே வைத்தாவது பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. ‘இனி உங்க விருப்பம்’ என்றார் மருத்துவர். அம்மாவிடம் இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மிகப்பெரிய பாறாங்கல் ஒன்றை யாரோ தலை மீது தூக்கி வைத்திருந்தார்கள்.

மருத்துவர் சிவசங்கர் எங்கள் ஊரின் அரசு மருத்துவர். அவரிடமிருந்து எதிர்மறையான சொற்கள் வந்து கேட்டதேயில்லை. அவரை அழைத்து பேசிய போது கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் தான் முயற்சித்துவிடுவதாகச் சொன்னார். சற்றே ஆறுதலாக இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அம்மாவிடம் சொன்ன போது உடைந்து கதறினார். கோயமுத்தூரிலேயே முடியாது என்று கைவிரித்தது அவரை சுக்குநூறாக்கியிருந்தது. அப்பாவை ஸ்ட்ரெச்சர் மூலமாக வெளியில் கொண்டு வந்து காரில் ஏற்றி தம்பி தன் மீது படுக்க வைத்துக் கொண்டான். அதே வேகத்தில் கோபி அழைத்து வந்த போது நம்பிக்கையை முற்றாக இழந்திருந்தோம். வருகிற வழியெங்கும் தென்படுகிற கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டேன்.

உடலில் என்ன பிரச்சினை, என்ன மருத்துவம் என்பதையெல்லாம் விரிவாக பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இது சரியான தருணமில்லை என்று தோன்றுகிறது. உறவினர்களும் நண்பர்களும் நாட்டு மருந்துகளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். மருத்துவர் சிவசங்கர் தன்னுடைய மருத்துவத்தைத் தொடர்ந்தார். திங்கட்கிழமை பேச்சில்லாமல் கிடந்தவர் மெல்ல மீண்டெழுவதைக் காண முடிந்தது. அடுத்த நாள் நினைவு திரும்பியது. வாய் குழறலில்லாமல் பேசினார். உணவு எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். மெல்ல மெல்ல முன்னேறி நேற்று மாலையில் கைகளைப் பிடித்துக் கொண்டால் எழுந்து நடக்கிறார். ஆனால் இதையெல்லாம் இன்னமும் முழுமையாக நம்ப முடியவில்லை. 

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோயமுத்தூரில் ரத்தப் பரிசோதனை செய்த போது SGOT 400 என்றிருந்தது. அதற்கு முந்தயை வாரம் 100 என்ற அளவில் இருந்தது. ஒரே வாரத்தில் முந்நூறு புள்ளிகள் கூடுதல் என்ற அளவில் எகிறவும்தான் கல்லீரல் நின்றுவிட்டது என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். எந்த அடிப்படையில் இனி குறைவதற்கான வாய்ப்பே இல்லை என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக செய்து பார்த்த ரத்தப் பரிசோதனையில் 160 என்ற அளவில் வந்து நிற்கிறது. இப்படித்தான் பிற அளவீட்டுக்காரணிகளும். குறைந்திருக்கின்றன என்றாலும் உற்சாகம் கொள்கிற மனநிலை இல்லை. அவசரப்பட்டுவிடக் கூடாது என்று அசிரீரி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இன்னும் ஒரு வாரம் போகட்டும்.  

கடந்த ஒரு வாரமாக எதையும் யோசிக்கிற மனநிலை இல்லை. மனதுக்குள் ஏதோ அடைப்பட்டுக் கிடந்தது. ஒன்றிரண்டு நண்பர்களைத் தவிர யாரிடமும் பேசவும் முடியவில்லை. எதைப் பேசுவது என்றும் தெரியவில்லை. முதுமையும் மரணமும் இயல்பானதுதான். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். யாரும் இங்கே நிரந்தரமில்லை. ஆனால் கைவிடப்படுவதை ஏற்றுக் கொள்கிற பக்குவம்தான் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் உழப்பிக் கொண்டே கிடந்தேன். இப்பொழுது சற்றே தெளிவாக இருக்கிறது. கைவிடப்படுதல் என்று எதுவுமேயில்லை. இங்கு ஒவ்வொருவரையும் தாங்கிப் பிடித்துக் கொள்ள யாராவது கை கோர்க்கிறார்கள். இறுதி நேரத்தை முடிவு செய்கிற அதிகாரம் யாரிடமும் இல்லை. தன்னால் சகமனிதனின் இறுதி வினாடிகளை முடிவு செய்துவிட முடியும் என்று மருத்துவரோ அல்லது வேறொரு மனிதரோ நம்பினால் அதைவிடவும் கூமுட்டைத்தனம் என்று எதுவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் என்றார்கள். ஒரு வாரத்தைத் தாண்டிவிட்டோம். உடலைப் பொறுத்தவரையிலும் நம்பிக்கை முக்கியம். அது மட்டும்தான் முக்கியம். கடைசி மூச்சுக்கு முந்தைய மூச்சு வரை முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும். மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்ளட்டும்.