Jul 28, 2016

ஃபாரின் சிடி

சினிமா பற்றிய அறிவு எனக்கு இல்லை. அதை ஒத்துக் கொள்வதில் வெட்கமும் இல்லை. ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் சில படங்களை ஓசியில் பார்த்ததுண்டு. அதன் பிறகு தம்பிச்சோழன் ஓசூரில் வசித்த போதுதான் அயல்சினிமாக்கள் குறித்தான பிரக்ஞை உண்டானது. குறும்படம், முழு நீளத் திரைப்படங்கள் என்று அவரிடம் சில கதைகள் கைவசம் இருந்தன. நாடகமும், சினிமாவும்தான் அவரின் கனவுகள். அந்தக் கதைகளைச் சொல்லிவிட்டு சில படங்களைப் பற்றிப் பேசுவார். பெரும்பாலானவை அயல் மொழிப்படங்கள். அப்படித்தான் பிற மொழிப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன். 

அந்தச் சமயத்தில் தினமணி.காம் இணையதளத்தில் தொடர்களை அறிமுகப்படுத்தினார்கள். திரு.பார்த்தசாரதி தினமணி.காம் தளத்துக்கு பொறுப்பேற்றிருந்தார். ஒரு நாள் அவர் அழைத்து ‘தொடர் எழுத முடியுமா?’ என்று கேட்ட போது சில வினாடிகள் யோசனைக்குப் பிறகு ‘சினிமா பத்தி எழுதட்டுமா சார்?’ என்றேன். சினிமாவின் தொழில்நுட்பத்தைப் பிரித்து மேயாமல் கதை, அந்தக் கதையின் வரலாற்றுப் பின்புலம், நடிகர்கள் என்று சாதாரண நடையில் எழுதிய போது ஓரளவு கவனம் பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். நிறையப் பேர் வெவ்வேறு படங்களைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எழுதினேனோ இல்லையோ- நிறையப் படங்களைப் பார்த்தேன். அது எனக்கும் பலனுடையதாகத்தான் இருந்தது. சினிமாக்காரர்களிடம் பேசும் போது ‘இவனுக்கும் சினிமா தெரியுது’ என்கிற வகையில் பீலா விட்டுக் கொள்ள முடிந்தது. 

தினமணியில் தொடர் வெளி வந்த போது அத்தனையும் நேர்மறையான விமர்சனங்கள் என்று பொய் எதுவும் சொல்லவில்லை. ஒரு அநாமதேய மின்னஞ்சல் வந்து கொண்டேயிருந்தது. ‘சினிமாவைப் பற்றி நீ எழுதக் கூடாது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். புத்தகமாக வெளிவரும் இந்தத் தருணத்தை அந்த மனிதர் விரும்பாமல் இருக்கக் கூடும். 

அயல் மொழி திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஆவலை உருவாக்கிய தம்பிச்சோழனுக்குத்தான் இந்த நூல் உரித்தானது. நூலை அவருக்குத்தான் சமர்பித்திருக்கிறேன். 

புத்தகம் டிஸ்கவரி பதிப்பகத்தின் வழியாக வெளியாகிறது. அதற்காக யாவரும் பதிப்பகத்தோடு சண்டை என்றெல்லாம் அர்த்தமில்லை. வேடியப்பனும் நல்ல நண்பர்தான். 


புத்தகத்திற்கான தலைப்பைப் பற்றி ஃபேஸ்புக்கில் விவாதித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கவிதாபாரதி சொன்ன தலைப்புதான் ‘ஃபாரின் சிடி’. பெரும்பாலான படங்கள் வடபழனி ரஹமத் ப்ளாசாவில் இயங்கும் சிடி கடையில் வாங்கியவைதான். அதனால் அந்தப் பெயரே இருக்கட்டும் என்று முடிவு செய்து கொண்டோம். திருட்டு விசிடி இன்னமும் பொருத்தமான பெயர்தான். ஆனால் யாராவது விஷாலிடம் கோர்த்துவிட்டால் அவர் முரட்டு அடி அடிக்கக் கூடும் என்பதால் இதுவே இருக்கட்டும்.

அயல் மொழித் திரைப்படங்கள் என்பவை வெறும் தொண்ணூறு நிமிடப் பொழுது போக்கு மட்டும் இல்லை என்று சொல்வார்கள். வேறொரு மண்ணின் கலாச்சாரத்தை, மனிதர்களை, வரலாறுகளை நாடுவதற்கான தொடக்கப்புள்ளிகள் அவை. அதை மனதில் வைத்துக் கொண்டுதான் கட்டுரைகளை எழுதியிருந்தேன். உதாரணமாக வாட்டர் டிவைனர் என்ற படத்தில் ஒரு மனிதர் போரில் காணாமல் போய்விட்ட தனது மகன்களைத் தேடிச் செல்கிறார். படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக முதல் உலகப்போரின் ஒரு பகுதியைத் தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கும். கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். 

புத்தக வெளியீட்டு நிகழ்வு இருக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. டிஸ்கவரி பதிப்பகத்தின் பிற புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏதேனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் ஃபாரின் சிடியும் ஒன்றாக இருக்கும். அதைத்தான் நானும் விரும்புகிறேன்.

அச்சிடப்பட்ட புத்தகம் அடுத்த வாரம் கிடைக்கும். ஆர்வமிருப்பவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ராயல்டி வருகிற அளவுக்கு விற்றால் சந்தோஷம். வருமானம் வந்தால் அந்தத் தொகையை சிரமத்தில் இருக்கும் உதவி இயக்குநருக்கு வழங்கிவிடலாம் என யோசித்து வைத்திருக்கிறேன்.

தொடர்ந்த ஆதரவுக்கு அத்தனை பேருக்கும் நன்றி. எழுதிய நூல்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது. ஏழு. எண்ணிக்கையா முக்கியம்?

வேலை

ஒரு சில வேலை வாய்ப்புகள் குறித்து நண்பர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள். தொடர்ந்து வேலை வாய்ப்புகள் குறித்து வாரம் ஒரு முறையாவது நிசப்தத்தில் பதிவு செய்யலாம் என்று நினைத்திருந்ததுதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் வேலை வாங்கியவர்களும் சரி; வேலை காலி இருப்பதாகச் சொன்னவர்களும் சரி அதன் பிறகு தொடர்பு கொண்டதேயில்லை. எனக்கு நினைவு தெரிந்து ஒருவர் கூடத் தொடர்பு கொண்டதில்லை என்பதுதான் உண்மை. தொடர்பு கொள்ளவில்லையென்றால் குடி முழுகிப் போகாதுதான் என்றாலும் வெகு நாட்களுக்குப் பிறகும் யாராவது அந்த வேலைக்காக மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? வேலை காலி இருப்பதாகச் சொன்னவர்களுக்கு அனுப்பி வைக்கலாமா என்று குழப்பமாகிவிடுகிறது. அதனால்தான் வேலை வாய்ப்புச் செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்வதில் ஒரு சுணக்கம் வந்துவிட்டது.

சமீபமாக வேலை வாய்ப்புச் செய்திகளைப் பதிவு செய்யச் சொல்லி சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அதனால் சக்கரம் மீண்டும் சுழலத் தொடங்குகிறது.

கிட்டத்தட்ட ஆறேழு வேலைகள் காலி இருக்கின்றன. குறைந்தபட்ச அனுபவம் ஐந்தாண்டுகள். அதிகபட்சமாக பனிரெண்டு அல்லது பதின்மூன்று ஆண்டுகள் கூட இருக்கலாம். 

Oracle Finance- Functional Consultant
Any Finance modules
2 இடங்கள்
Oracle SCM- Functional Consultant
Any SCM modules
3 இடங்கள்
BI

1 இடம்
ETL

2 இடங்கள்
 * ETL - Extract, Transform, Load என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் ETL- இந்த வேலைகளைச் செய்வதற்காக நிறைய Tools இருக்கின்றன. எதில் அனுபவமிருந்தாலும் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் 

மேற்சொன்ன எந்தத் துறையில் அனுபவம் இருப்பினும் சுயவிவரக் குறிப்பை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். vaamanikandan@gmail.com.

இதைத் தவிர வேறு துறைகள் அல்லது புதிதாகக் கல்லூரி முடித்தவர்கள் அனுப்பி வைக்க வேண்டாம். இருப்பதிலேயே மிகச் சிரமமான உதவி என்றால் வேலை வாங்கித் தருவதுதான். பெரும்பாலானவர்களிடம் ‘வேலை இருக்கா’ என்று கேட்டாலே ஏதோ வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். எந்த நிறுவனத்தில் வேலை காலி இருக்கிறது என்று கண்டுபிடித்தால் வேண்டுமானால் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறவர்கள் யாரையாவது பிடித்து சுயவிவரக் குறிப்பை உள்ளே அனுப்பி வைக்கலாம். பரிந்துரை செய்யலாம். ஆனால் எங்கே வேலை காலி இருக்கிறது என்பதே தெரியாமல் ‘வேலை வேண்டும்’ என்பது கண்களைக் கட்டிக் கொண்டு காட்டி விட்டது போலத்தான்.

வேலை வாங்கித் தரச் சொல்லி நிறையப் பேர்கள் கேட்பதுண்டு. பல பேருக்கு பதில் சொல்வதேயில்லை. சொல்ல முடிவதில்லை என்பதுதான் காரணம்.

வேலை காலி இருக்கிறது என்றால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். நிசப்தம் தளத்தில் வாரம் ஒன்றிரண்டு முறை பதிவு செய்யலாம். ஒரேயொரு வேண்டுகோள்- காலியிடம் நிரப்பட்டவுடன் ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிடுங்கள். அது போதும்.

நன்றி.

Jul 27, 2016

வன்மம்

‘இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க...ஆனால் அவன் பேரைக் கேட்டாலே கடுப்பா இருக்கும்..அப்படியான ஆளுங்களை லிஸ்ட் பண்ணுங்க’ என்றார் ஒரு நண்பர். 

பட்டியலிட்டேன். நீண்டு கொண்டே போனது.

நிறுத்தியவர் ‘ஒரு சில ஆட்களை ஒன்றிரண்டு முறைதான் பார்த்திருப்பீங்க...பேசியிருக்கக் கூட மாட்டீங்க....ஆனா இப்ப நினைச்சாலும் கடுப்பா இருக்கும்..அந்த ஆளுங்க?’ என்றார். 

அப்படியும் ஒரு பட்டியல் இருந்தது. 

‘இப்போ ரிவர்ஸ்...உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது ஆனால் உங்க மேல கடுப்பைக் காட்டுவாங்க...அப்படியான ஆளுங்களைச் சொல்லுங்க’ என்றார். அப்படியும் ஒரு பட்டியல் இருக்கிறது. ஒரே வம்பு. எப்படி மட்டையைப் பிடித்தாலும் மூன்று குச்சிகளையும் பெயர்த்து வீசுகிறது பந்து. 

கேள்வி கேட்டவருக்கு அறுபது வயது இருக்கும். வேறொரு காரியமாக வீட்டிற்கு வந்திருந்தார். ‘மனசுக்குள்ள கொஞ்ச நஞ்சம் நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தா அந்த நெனப்புல ஒரு லோடு மண்ணை அள்ளிக் கொட்டிவிட வேண்டும்’ என்ற நினைப்பில் வந்திருந்தார் போலிருந்தது. அது சரிதான். இத்தனை பேர் மீது வன்மத்தை வைத்துக் கொண்டு எந்த லட்சணத்தில் ‘நான் எல்லாம் எவ்ளோ நல்லவன் தெர்மா?’ என்று அலும்பு செய்ய முடியும்? 

ஒருவனைப் பற்றிய புரிதல் எதுவுமேயில்லாமல் அவன் மீது வன்மம் கொள்ள முடிகிறது. அவனைப் பற்றித் தூற்ற முடிகிறது. அவனுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்களைப் பார்த்து வயிறு எரிய வேண்டியிருக்கிறது. இல்லையா?.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது வேறொரு மனிதரைப் பற்றிய பேச்சு எழுந்தது. ‘அவன் ஒரு Phedophile' என்றார். தூக்கிவாரிப்போட்டது. அதோடு சரி. அவர் குறிப்பிட்ட அந்த மனிதர் மீது எந்தக் காலத்திலும் மரியாதை வரவேயில்லை. மிகச் சமீபத்தில்தான் அந்த phedophile ஆளைப் பற்றித் தெரிந்தது. அவ்வளவு நல்ல மனிதர் என்றார்கள். குற்றம் சாட்டியவருக்கு யாராவது சொல்லியிருக்கலாம். அவர் அப்படியே நம்பிக் கொண்டு என்னிடம் சொன்னார். நான் அதை அப்படியே நான்கைந்து பேரிடமாவது சொல்லியிருப்பேன். அந்த மனிதருக்கே தெரியாமல் அவர் மீது ஒரு கரும் போர்வையை போர்த்திவிடுகிறோம். பிறகு அந்த ஆளைப் பார்த்தாலே கடுப்பாகிறது. 

இன்னொரு சம்பவம்- எனக்கு நேர்ந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கவிஞர் ஒருவர் வந்து கட்டியணைத்துக் கொண்டார். அவரது மிகப்பெரிய உருவத்துக்குள் சிட்டுக்குருவியைப் போல உணர்ந்தேன். அது நிச்சயமாக போலியான அன்பு இல்லை. ஆத்மார்த்தமாகத்தான் தழுவினார். ஆனால் அடுத்த ஆறேழு மாதங்களில் வசைகளைப் பொழியத் தொடங்கினார். என்ன காரணம் என்றே தெரியாது. முதல் சந்திப்புக்குப் பிறகு அவருக்கும் எனக்குமான எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அவரது எழுத்துக்களைக் கூட விமர்சனம் செய்ததில்லை. யோசித்துப் பார்த்தால் அவரைப் பற்றிக் கூட யாரிடமும் பேசியதில்லை. விசித்திரமாக இருக்கிறது. இரு மனிதர்களுக்கிடையில் நேரடியான பேச்சுவார்த்தை இல்லாமலே அவர்களுக்கிடையில் வன்மம் தோன்றிப் பெருகுவதை நினைத்தால் சற்றே பயமாகவும் இருக்கிறது. 

இரு மனிதர்களுக்கிடையில் கொள்கை ரீதியிலாகவோ, பண விவகாரத்திலோ அல்லது வேறு சில காரணங்களினால் பகைமையும் வன்மமும் வளர்வதை ஏற்றுக் கொள்ளலாம். சம்பந்தமேயில்லாமல் ஏன் எரிச்சல் அடைகிறோம்? தொடர்பே இல்லாதவனைப் பற்றி ஏன் ஏகப்பட்ட கோபம் கொள்கிறோம்? அடுத்தவர்கள் ஒருவனைப் பற்றிச் சொல்கிற விஷயங்கள் உண்மையா அல்லது பொய்யா என்பதைத் துளி கூட பரிசீலிக்காமல் முடிவுக்கு வந்துவிட முடிகிறது.  

பெரிய மனிதர் கேட்ட கேள்விகள் எல்லோருக்குமேதான் பொருந்தும். சம்பந்தமேயில்லாமல் எத்தனை பேர் மீது நமக்கு வன்மம் இருக்கிறது என கணக்கெடுத்துப் பார்க்கலாம். நூற்றுக்கணக்கில் தேறும். அப்புறம் என்ன மனிதம், வெங்காயம், விளக்கெண்ணெய் எல்லாம்? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடாவிட்டால் தொலைகிறது. சக மனிதன் மீதாவது எரிச்சலும் கோபமும் பொறாமையும் வன்மமும் இல்லாமல் வாழலாம் அல்லவா? ம்ஹூம். ரொம்பவும் கஷ்டம்.

இன்று ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை. மனைவி அவனைப் பிரிந்துவிட்டாள். தனிமை அவனைக் கடுப்பேற்றியிருக்கிறது. யாரையாவது கொன்றுவிட்டு சிறைச்சாலைக்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்தவன் சாலையில் சென்று கொண்டிருந்த யாரோ ஒரு ஆளைக் குத்திக் கொன்றுவிட்டான். செத்துப் போன மனிதருக்கு பத்து வயதில் ஒரு குழந்தையும் வயது முதிர்ந்த அம்மாவும் இருக்கிறார்கள். கொன்றவனுக்கும் செத்தவனுக்கும் முன்பின் அறிமுகம் இல்லை. பேசியதும் இல்லை. பகைமையும் இல்லை. கதை முடிந்தது.

கொன்றவனுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால் அப்படியொன்றும் இல்லைதான் என்று தோன்றுகிறது. அவன் ஆளைக் கொன்றான். நாம் அடுத்தவர்களின் பிம்பத்தைக் கொல்கிறோம். அவ்வளவுதான். இன்றைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒரு ஊடகம்தான். யார் மீது வேண்டுமானாலும் சேறை வாரி இறைத்துவிட முடியும். யாருடைய பிம்பத்தை வேண்டுமானாலும் உடைத்து நொறுக்கிவிட முடியும். ஓரமாக ஒதுங்கி நிற்கும் தெருநாயைக் கல்லை எடுத்து அடிப்பது போல யார் மீது வேண்டுமானாலும் விசிறியடிக்க முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு இன்னமும் நான்கு பேர் கல்லெடுத்து அடிக்கிறார்கள்.

இது சமூக உளவியல். 

தனிமனித உளவியலுக்கும் சமூக உளவியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தனிமனித உளவியலில் நீங்கள் வேறு மாதிரி இருப்பீர்கள் நான் வேறு மாதிரி இருப்பேன். சமூக உளவியல் அப்படியில்லை. எனக்கும் உங்களுக்கும் அடுத்தவருக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப் போகும். சக மனிதன் மீதான அடையாளமற்ற வன்மம் என்பது சமூக உளவியலின் அங்கம்தான். தொழில்நுட்பமும், வாழ்வியல் முறைகளும், நம் மனச்சிக்கல்களும் மொத்த சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. அவ்வளவு சீக்கிரம் யாராலும் மாற்றிவிட முடியாது. என்னதான் முயன்றாலும் அது அப்படித்தான் இருக்கும். ஆனால் குறைந்தபட்சம் நம் அளவில் மாற முயற்சிக்கலாம். சம்பந்தமேயில்லாமல் ஏன் இன்னொரு மனிதன் மீது பகைமையும் வன்மமும் பாராட்டுகிறோம் என்று கேட்டுப் பார்க்கலாம்? காரணங்கள் அற்பமானவையாக இருக்கக் கூடும். யாரோ சொன்ன செவி வழிச் செய்திகளாக இருக்கக் கூடும். சில்லரைத்தனமான பொறாமையாக இருக்கக் கூடும். இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு பிறகு வேண்டுமானால் மனிதம் பற்றியும் நல்லவனாக இருத்தல் பற்றியும் பேசலாம். 

முயற்சித்து முயற்சித்துத் தோல்வியடைந்து கொண்டிருக்கிறேன். ஏன் ஒல்லியாக இருக்கிறாய் என்ற கேள்விக்கு இதுதான் பதிலாக இருக்கக் கூடும். அவ்வளவு வன்மம். 

Jul 26, 2016

தடியாள்

வீட்டிற்கு பக்கத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை ஒன்றிருக்கிறது. கடை முதலாளியைவிடவும் அங்கே இருக்கும் பொடியனோடு நல்ல பழக்கம். சார்லஸ் என்று பெயர். பொடியன் என்றால் அவனுக்கும் பதினேழு வயதுக்கு மேல் இருக்கும். பிரபா என்றொரு காதலி கூட உண்டு. அதே வீதியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிற பெண் அவள். வரும் போதும் போகும் போது சைட் அடித்து அப்படியே காதலாகிவிட்டது. 

‘டேய் பிரபா’ என்று காதலியின் பெயரைச் சொல்லி சத்தம் போட்டு அழைத்தால் ‘சார்...சும்மா இருங்க’ என்று பம்முவான். அவன் ஏதோ பயப்படுகிற ஆள் என்று நினைக்க வைப்பதெல்லாம் நடிப்பு. தில்லாலங்கடி. சார்லஸ் தமிழன். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக பெங்களூர் வந்து அப்படியே தங்கிவிட்ட குடும்பத்தின் வாரிசு. இருசக்கர வாகனம் பழுது நீக்குகிற வேலையைத் தவிர இன்னொரு வேலையும் செய்கிறான். உள்ளூர் அடியாளிடம் சண்டைக்காரன். Fighter. வெட்டுக்குத்தெல்லாம் இல்லை. மிரட்டுதல், லேசாகத் தட்டுதல் போன்ற வேலைகளைச் செய்கிறான். அந்த தடியாளிடம் சார்லஸ் போன்றே வேறு சில பையன்களும் இருக்கிறார்களாம். கூட்டமாகச் சென்று அதுப்புக் காட்டிவிட்டு வருவார்கள். 

சார்லஸிடம் நிறையக் கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளின் ஆதியும் அந்தமும் அவனுக்குத் தெரியாது. ‘ஒரு பையன் சார்..பத்தாங்க்ளாஸ்ஸூ...ஃபோட்டோவை வாட்ஸப்புல அனுப்பி தட்டின்னு வரச் சொன்னாங்க...தட்டவே இல்ல...போய் நின்னவுடனே மூத்திரம் பெஞ்சுட்டான்..சும்மா பேசிட்டு வந்துட்டேன்’ என்றான். என்ன காரணம்? ஏன் அடிக்கச் சொன்னார்கள் என்கிற விவரங்கள் எதுவும் தெரியாது. அபாயகரமான வேலை. ஆனால் வெகு இயல்பாக இருக்கிறான்.

இந்தத் வேலைக்குள் சார்லஸ் எப்படி வந்தான் என்பதுதான் சுவாரஸியமான கதை.

உள்ளூரில் ஒரு பெரிய மனுஷன். எச்சில் கையில் காகம் ஓட்டாத பெரிய மனுஷன். அவனுக்குப் பிறந்தநாள் வந்திருக்கிறது. சார்லஸ்ஸூம் இன்னபிற நான்கு பொடியன்களுக்கும் அவன் மீது மகா கடுப்பு. அவனை ஏதாவதொரு வகையில் நொந்து போகச் செய்ய வேண்டும் என்று சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். கார் போகும் வழியில் ஆணிகளைப் போட்டு வைத்தல், வீட்டு மதிற்சுவரில் எதையாவது எழுதி வைப்பது போன்றதான அரதப்பழசான முயற்சிகள். அத்தனையும் தோல்வியில் முடிந்து போக சார்லஸூடன் இருந்த ஒரு பையனுக்கு மண்டையில் பல்ப் எரிந்திருக்கிறது. வீதியெங்கும் ‘பிறந்தநாள் காணும் பெரிய மனுஷனே’ என்று அவனது அல்லக்கைகள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்ததைப் பார்த்த பிறகு எரிந்த பல்பு அது. 

சிகரெட் அட்டைகளைப் பொறுக்கியெடுத்து ‘அய்யாவின் பிறந்தநாளில் இலவச வேஷ்டி சேலை பெற்றுக் கொள்வதற்கான கூப்பன்’ என்று ரப்பர் ஸ்டாம்ப் ஒன்றை உருவாக்கி அருகாமை குடிசைப்பகுதியில் இரவோடு இரவாக விநியோகித்துவிட்டார்கள். அதோடு விட்டார்களா? ‘அய்யா காலையிலேயே வெளியே போய்டுவாரு..காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் போய்டுங்க’ என்று சொல்லியபடியே விநியோகம் செய்திருக்கிறார்கள். நம் ஆட்கள் இலவசம் என்றால் விடுவார்களா? அடுத்த நாள் காலையில் நான்கரை மணிக்கே பெரிய மனிதரின் வீட்டுக்கு முன்பாகக் கூடிவிட்டார்கள். ஐந்து மணிக்கெல்லாம் சலசலப்பு கேட்கத் தொடங்க வீட்டிலிருந்து ஒவ்வொருத்தராக வந்து பார்த்திருக்கிறார்கள். பிறந்தநாள் காணும் பெரிய மனுஷன் பல்லைக் கூடத் துலக்காமல் இந்தப் பஞ்சாயத்துக்கு வந்து ‘அப்படியெல்லாம் கொடுக்கலையே’ என்று குழம்ப கூட்டத்தில் இருந்தவர்கள் ‘மகராசனா இருக்கணும்ய்யா’ என்று கும்மியடித்திருக்கிறார்கள்.

வேறு வழியே இல்லை. 

பிறந்தநாள் அதுவுமாக இந்தக் கூட்டத்தை திருப்பியனுப்பினால் சாபம் விடுவார்கள். வீட்டிலிருந்து பணக்கட்டை எடுத்து வந்து ஆளுக்கு நூறு ரூபாயாகக் கொடுத்திருக்கிறார். வேஷ்டி சேலையை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும் போதும் என்கிற மனதோடு வந்துவிட்டார்கள். ஆனால் பெரிய மனுஷனுக்குத்தான் பயங்கர எரிச்சலாகியிருக்கிறது. தனது ஆட்களை வைத்து விசாரிக்கச் சொன்னதில் சார்லஸ் மற்றும் குழுவினரை மிகச் சாதாரணமாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். குடிசைப்பகுதியில் ‘உனக்கு யார் கூப்பன் கொடுத்தாங்க?’ என்று கேட்டால் கை காட்டமாட்டார்களா? காட்டிவிட்டார்கள். பெரிய மனுஷனின் ஆட்கள் ஒன்றும் செய்யவில்லை. காவல்நிலையத்தில் விவரமாகப் போட்டுக் கொடுத்து கையோடு கவர் ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள். 

ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் நான்கு பேரையும் அள்ளிப் போட்டுச் சென்று கும்மியெடுத்துவிட்டார்கள். சார்லஸின் வார்த்தைகளில் சொன்னால் ‘நெட்டி முறிச்சுட்டானுக’. இரண்டு நாட்கள் உள்ளே வைத்து விளாசினார்களாம். வருகிற போகிறவனெல்லாம் நொறுக்கிவிட்டுப் போக கடைசியாக வெள்ளைச் சட்டையும் வெள்ளைப் பேண்ட்டும் அணிந்து ஸ்கார்ப்பியோவில் ‘சார் பசங்களை இனி நான் அமைதியா இருக்கச் சொல்லுறேன்’ என்று சொன்னவன்தான் சார்லஸ் இப்போது வேலைக்கு இருக்கும் தடியாள். சார்லஸ் உள்ளிட்டவர்களின் பெற்றோர்கள் அவனிடம் சரணாகதியடைய ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றி பொடியன்களைத் தன்னோடு வைத்துக் கொண்டான். 

ஆபத்பாந்தவன் சிறு ரவுடி. கட்டப்பஞ்சாயத்து, சிறு சிறு தகராறுகளில் நீதிபதி. தீர்ப்புக்கு ஏற்ப அவனுக்கு கப்பம் கட்டிவிடுகிறார்ர்கள். நிறையத் தொடர்புகளை வைத்திருக்கிறான். நாளைக்கு கவுன்சிலராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றாகவோ ஆகிவிடக் கூடும். இப்போதைக்கு தனது வருமானத்தில் ஐந்தோ பத்தோ சார்லஸ் மாதிரியான பொடியன்களுக்குப் போடுகிறான். வேலை இருக்கும் போது ஒரு அழைப்பு. தான் வேலை செய்யும் கடை உரிமையாளரிடம் சொல்லிவிட்டு சார்லஸ் ஓடுகிறான். சார்லஸூக்கு பணம் பிரச்சினையே இல்லை. இந்த வேலை கொடுக்கிற கெத்துதான் அவனுக்கு முக்கியம். ‘ஃபைட்டர்ன்னு சொன்னா நம்ம ஏரியாவுல பயப்படுவானுக சார்’ என்பான். அவனிடம் பேசுவதற்கு எனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.

பயமில்லாமல் இருக்குமா? 

பெங்களூரில் மாலை ஏழு மணிக்கு மேலாக சந்து பொந்துகளுக்குள் சென்றால் சிறு சிறு சச்சரவுகளை நிறையப் பார்க்க முடிகிறது. நேற்றும் கூட ஒருவனை அடித்தார்கள். சார்லஸின் குழுவில்லை. வேறொரு குழு. மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. விவேக் நகர் பக்கமாக ஒரு வீதியில் பைக்கில் சென்றவனை நிறுத்தி நான்கைந்து பொடியன்கள் அடித்துக் கொண்டிருந்தார்கள். அடி வாங்கியவன் சாகவெல்லாம் மாட்டான். மொத்து அடிதான். ஆனால் மனதுக்குள் வஞ்சம் இருக்கும். பார்த்துவிட்டு வந்து அதைக் கட்டுரையாக எழுதும் போது வண்டியை நிறுத்திவிட்டுச் சென்று நான்கைந்து பேரையும் விரட்டி விட்டதாகத்தான் எழுத விரும்பினேன். நீங்கள் நம்பவா போகிறீர்கள்? உண்மையையே சொல்லிவிடுகிறேன். ஓரமாக நிறுத்தி அலைபேசியில் பேசுவதைப் போல பாவ்லா காட்டினேன். அடித்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்த ஒருத்தன் - அவனுக்கு பதினைந்து வயது கூட இருக்காது. ‘கிளம்பு’ என்று சைகை காட்டினான். ‘சரி குரு’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டேன். 

வேணி ‘ஏன் இவ்வளவு லேட்’ என்று கேட்டாள். ‘ஒரு பிரச்சினை. சரி செய்துவிட்டு வந்தேன்’ என்று கெத்துக் காட்டியிருக்கிறேன். நம்பிக் கொண்டாள். என்ன சொன்னாலும் நம்புகிற ஒரே ஜீவன்.

Jul 25, 2016

மாற்று மருத்துவம்

அப்பா எப்படி இருக்கிறார் என்று யாராவது விசாரிக்கிறார்கள். நன்றி. நன்றாக இருக்கிறார். பூரணமாக குணமடைந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய முன்னேற்றம். ஹெபாட்டிஸ் சி வைரஸ்தான் பிரச்சினையின் மூலகாரணம். அது கல்லீரலை எழுபத்தேழு சதவீதம் சுருக்கியிருந்தது. Chirrohtic condition என்கிறார்கள். அதன் பிறகு வைரஸூக்கு மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் கடந்த பிப்ரவரியில் வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்தார்கள். வெளியில் யாருக்கும் சொல்லவில்லை. அம்மாவுக்கும் கூடத் தெரியாது. இன்னமும் கூட அப்பாவுக்குத் தெரியாது.

பரிசோதனை விவரங்களை வைத்துக் கொண்டு நான்கைந்து சூப்பர் ஸ்பெஷல் மருத்துவர்களைச் சந்தித்தேன். ‘இதுக்கு ஒரே மருந்துதான் இருக்கு. அதுவும் கூட முழுமையாக சரி செய்யாது; ஆனால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்’ என்றார்கள். அந்த மருந்தை பேயர் நிறுவனம் தயாரிக்கிறது. மாதம் நாற்பத்தைந்தாயிரம் ரூபாய். ஜூன் மாத இறுதி வரைக்கும் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் சொன்னது போல நோய் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் படிப்படியாக நோயின் வீரியம் உயர்வதைக் காணமுடிந்தது. வலி எதுவுமில்லை. ஆனால் ஒரு வகையிலான அசெகளரியம். கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் மருத்துவரைச் சந்திக்கும் போது ‘அது அப்படித்தான் இருக்கும், ஆனால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது’ என்பார். திரும்பி பெங்களூர் வந்துவிடுவோம்.

அப்படியிருந்த போதுதான் ஜூலை இரண்டாம் நாள் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அதற்கு ஒரு வாரம் முன்பாகத்தான் பரிசோதனைச் செய்திருந்தோம். வழக்கம் போலவே கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் சொன்னார். பெங்களூரில் நினைவு குறையக் குறைய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது ‘ஈரல் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. இனி மருத்துவம் செய்ய முடியாது’ என்று கை விரித்தார்கள். அத்தனை வாய்ப்புகளும் தடைபட்ட பிறகுதானே மாற்று மருந்துகளை யோசிக்கத் தோன்றும்? நாட்டு பசுவின் மூத்திரத்தைப் பற்றி யாராவது பேசும் போது நக்கலடித்திருக்கிறேன். ஆனால் பஞ்சகவ்யம், அர்க் மற்றும் புனர்னாவா ஆகிய மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்தோம். மெல்ல மெல்ல முன்னேற்றம் தெரிந்தது.

இந்தச் சமயத்தில்தான் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக இருக்கும் வெற்றிவேல் வந்து பார்த்தார். அவர் மின்னியல் பேராசியர். ஆனால் சொந்த முயற்சியில் சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய அறிவாளி. அவராகப் படித்து வளர்த்துக் கொண்ட அறிவு. அப்துல்லா சாஹிப், பலராமையா உள்ளிட்ட சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்களை வரிசைக்கிரமாக மனனம் செய்து வைத்திருக்கிறார். அவர் சங்ககிரி மனோகர், மருத்துவர் சரவணன் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயல்படுகிறார். அவர் முதன்முறையாக வந்து சித்த மருத்துவத்தைப் பற்றி பேசிய போது பெரிய நம்பிக்கையில்லை. 

‘சித்தா, நாட்டு மருந்தில் எல்லாம் ஸ்டீராய்டு கலந்துடுவாங்க..தயவு செஞ்சு போய்டாதீங்க’ என்று ஆரம்பகட்டத்தில் சில அறிவுரைகள் வந்து சேர்ந்தன. அதனால் பயமாக இருந்தது. வைத்தியம் பார்க்கிற மருத்துவர் வியாபார நோக்கில்லாமல் நேர்மையானவராக இருக்க வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பேராசிரியர் வெற்றிவேலுக்கு சித்த மருத்துவத்தில் வருமானம் எதுவுமில்லை. உடலைப் புரிதல் என்கிற நோக்கத்தில் விடிய விடிய ஓலைச் சுவடிகளையும் புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கிறார். 

இரண்டு மூன்று முறை மருத்துவமனைக்கே வந்து பேசினார். அவருடைய அப்பா எங்கள் அம்மாவுக்கு ஆசிரியர். அய்யாமுத்து வாத்தியார் என்றால் உள்ளூரில் பிரபலம். வெற்றிவேல் அவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு சித்த மருத்துவத்துக்கும் ஒத்துக் கொண்டோம். நோயைத் தடுக்க ஒரு மருந்து, ஈரலை மீண்டும் செயல்படச் செய்ய தனி மருந்து என்று எந்த மருத்துவர் எதில் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவரிடம் அந்தந்த மருந்துகளைப் பெற்றுத் தந்தார். எந்த மருத்துவரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. இன்றோடு இருபத்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவால் நடக்க முடிகிறது. சாப்பிட முடிகிறது. ஏற்கனவே சொன்னது போல சிறு சிறு அசெகளரியங்கள் இருந்தாலும் ‘இனி மருத்துவம் வேலைக்கு ஆகாது. நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்’ என்ற சூழல் எதுவும் இல்லை. 

இதை இவ்வளவு அவசரமாக எழுத வேண்டியதில்லை. என்னளவில் இது உணர்வுப்பூர்வமான விஷயம். எழுதினால் யாராவதொரு மருத்துவர் வந்து விவாதத்திற்கு இழுக்கக் கூடும். அப்பாவை மையமாக வைத்து விவாதம் எதிலும் ஈடுபடுகிற மனநிலை இல்லை. ஆனால் யாராவது ஒருவருக்கு நிச்சயமாக பயன்படக் கூடும் என்பதற்காக இதை எழுதுகிறேன். கடந்த ஏழெட்டு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிசோதனை செய்த விவரங்கள், அப்பொழுதெல்லாம் என்ன புள்ளிகள் இருந்தன, கடைசியாக சித்தா மற்றும் நாட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருபத்தியிரண்டு நாட்கள் கழித்துச் செய்த பரிசோதனையில் எவ்வளவு புள்ளிகள் இருந்தன என எல்லாமும் கைவசம் இருக்கின்றன. ஒரு நாள் விரிவாகப் பதிவு செய்கிறேன்.

ஈரலின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்காக சில ரத்தப் பரிசோதனைகளைச் செய்கிறார்கள். முக்கியமான சிலவற்றை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.


ஜூலை 02
ஜூலை 22
Normal Range
SGOT
399
84
15-37 U/l
SGBT
245
59
12-78 U/l
Total Bilirubin
3.57
1.3
0.3-1.1 mg/dl
Direct Bilirubin
2.45
0.9
0- 0.25 mg/dl

(“ஈரலைப் பொறுத்தவரையிலும் downgrade ஆவதைத் கட்டுபடுத்தலாம். அதையும் மீறி கீழே விழத் தொடங்கினால் தடுப்பது சிரமம். இவருக்கு கீழே விழத் தொடங்கிவிட்டது”- இது கோவையில் சிறப்பு மருத்துவர் சொன்ன வார்த்தைகள்)

இதையெல்லாம் எழுதுவதால் அலோபதி மோசம் என்பதை நிரூபிப்பதும் என் நோக்கமில்லை. கோபியில் செயல்படும் அபி மருத்துவமனை இல்லையென்றால் கோவையிலிருந்து அப்பாவை அழைத்துச் சென்று எங்கே படுக்க வைப்பது என்று தெரிந்திருக்காது. அபி மருத்துவமனையின் மருத்துவர்கள் செந்தில்நாதன், கார்த்திகேயன், குமரேசன், மோகன் உள்ளிட்டவர்களுக்கு வந்து பார்க்க வேண்டிய அவசியமேயில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்து ஆலோசனைகளைச் சொன்னார்கள். மருத்துவர் சிவசங்கர் ஒரு நாளைக்கு மூன்று முறை வருவார். உதவிகரமான சிகிச்சைகள் அத்தனையையும் அவர்தான் அளித்தார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு நிலைமையைத் துல்லியமாகக் கணித்தது அவர்தான். அவர் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமே ஆகியிருக்காது. செவிலியர்கள் அத்தனை உதவிகளையும் செய்தார்கள். அலோபதி மருத்துவர்களின் உதவியுடன், சித்த மற்றும் நாட்டு மருந்துகள் வேலை செய்கின்றன.

நோய் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருக்கலாம். ஆனால் நோய் முதிர்ந்த நிலை இது; may be in weeks time என்று சொல்லப்பட்டவருக்கு எவ்வளவு முன்னேற்றம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை ஆரம்பகட்டத்திலேயே மாற்று மருந்துகளை முயன்றிருந்தால் இவ்வளவும் சிரமம் நேராமல் இருந்திருக்கலாம். 

ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருத்துவ விவரங்களை எழுதலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அப்படியில்லை. யாரேனும் இதைப் பின்பற்றக் கூடும். தொடர்பு கொள்ளக் கூடும். அவர்களுக்கு பயன்படட்டுமே. 

பேராசிரியர் வெற்றிவேலை அழைத்து ‘உங்கள் பெயரைக் குறிப்பிட்டு எழுதட்டுமா? யாராவது விவரங்கள் கேட்டால் உங்கள் எண்ணைக் கொடுக்கட்டுமா?’ என்றேன். ‘தாராளமாகச் செய்யுங்கள். சேவையாகத்தானே செய்கிறோம்? இதில் என்ன தொந்தரவு’ என்றார். என்றாலும் கூட இங்கே பொதுவெளியில் அவருடைய எண்ணைக் குறிப்பிடவில்லை. தேவைப்படுகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அவருடைய எண்ணைத் தருகிறேன். எந்த மருத்துவரிடம் எந்த மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து அவர் வழிகாட்டக் கூடும்.

சித்த மருத்துவத்துடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிற அர்க், பஞ்சகவ்யம் கிட்டத்தட்ட அத்தனை புற்று நோய்களிலும் வீர்யத்துடன் செயல்படுவதாகச் சொல்கிறார்கள். இந்துத்துவவாதிகள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக மட்டுமே குருட்டுவாக்கில் நாட்டுப் பசுவின் மூத்திரத்தை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

மாற்று மருந்துகள் செயல்படுவதைக் கண்டுணரும் போது விவரங்களை மற்றவர்களுக்கும் சொல்வது நம் கடமை. ஒரேயொரு மருத்துவத்தை மட்டுமே கண்களை மூடிக் கொண்டு நம்ப வேண்டியதில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன். இவையெல்லாம் யாரோ சொன்னதில்லை. நேரடியான சாட்சியமாக இருக்கிறேன். சரியான மருத்துவரைக் கண்டுபிடிப்பதில்தான் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துவிட்டால் போராடிப் பார்த்துவிடலாம். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கக் கூடும். நம்பிக்கை மட்டுமே முக்கியம்.

Jul 22, 2016

கபாலி

கடந்த சில நாட்களாக யாராவது வந்து சன்னக்கோல் போட்டால்தான் படுக்கையை விட்டு எழுவது வழக்கம். இன்றைக்கு மூன்றேகாலுக்கு விழிப்பு வந்துவிட்டது. கபாலிக்காக என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று டிக்கெட் கொடுக்கும் போதே ‘சார் ஆறரை ஷோவுக்கு மட்டும்தான்..பத்து மணிக்கு வந்து நீட்டாதீங்க’ என்றான். போகாமல் விட்டுவிட்டால் இருநூறு ரூபாய் போய்விடும். இருநூறு ரூபாய் இருந்தால் கோபியிலிருந்து பெங்களூரே போய்விடலாம். பொசுக்கு பொசுக்கென்று விழித்துப் பார்த்தே படுத்திருந்தால் விடியாமலா போய்விடும்? பேண்ட் சட்டையை மாட்டும் போது வீட்டில் இருப்பவர்கள் ஏதோ கொள்ளைக்குப் போகிறவனைப் போல பார்த்தார்கள். 

முடியுமா? முறைத்தால் அடங்குற ஆளா நான்? கிளம்பிவிட்டேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்ரீவள்ளியில் அத்தனை கூட்டம். ஒட்டடை அடைந்து கிடக்கிற பால்கனியை திறந்துவிட்டார்கள். ஆறரை மணிக்கே உள்ளே நுழைந்திருந்தேன். ஏழு மணிக்குத்தான் காட்சி. அடியில் குத்தாத, கிழிபடாத ஒரு இருக்கையைக் கண்டுபிடித்து அமர இருபது நிமிடங்கள் தேவைப்பட்டது. சதைப் பிடிப்பான ஆளாக இருந்தால் கூட தொலைகிறது. என்னுடைய சதையை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் வெறும் பலகையில் அமர்ந்தால் கிளம்பும் போது வண்டி ஓட்ட முடியாது. அக்கம்பக்கத்து இருக்கைகளில் அத்தனை பேரும் தெரியாத ஆட்கள்தான். முன்பெல்லாம் திரையரங்குக்குச் சென்றால் பாதிப்பேரையாவது பார்த்து சிரிக்க வேண்டியிருக்கும். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. ஊரும் மாறிவிட்டது. புது ஆட்களும் நிரம்பிவிட்டார்கள். 

பக்கத்தில் அமர்ந்திருந்தவன் முதல் காட்சியிலேயே சிகரெட்டைப் பற்ற வைத்தான். இடையிடையே புளிச் புளிச் என்று துப்பினான். கருமாந்திரம் புடிச்சவன் எச்சில் நம் மீதும் தெறிக்குமோ என்னவோ என்று பம்மிக் கொண்டே அமர்ந்திருந்தேன். ‘தம்பி தியேட்டருக்குள்ள துப்பாதப்பா’ என்று அறிவுரை சொல்லலாம்தான். ஆனால் அது என்ன ஃபேஸ்புக்கா? இருட்டுக்குள் கும்மென்று ஒரு குத்து விட்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு எங்கே ஓடுவது? வந்த இடத்தில் வம்பும் வழக்கும் வேண்டாம் என்று கை கால்களைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுதும் கூட சாரல் பொழிந்தது. ஆனால் விதி என்று அமர்ந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் ரஜினிக்காக என்று சொன்னால் ‘போயும் போயும் ரஜினியைப் புகழலாமா?’ என்று ஏதாவதொரு ஒரு அறிவுஜீவி வந்து கேட்கும். ராதிகா ஆப்தேவுக்காக பொறுத்துக் கொண்டேன் என்று சொன்னால் ‘தொலையட்டும்’ என்று விட்டுவிடுவார்கள். என்ன சொல்லி என்ன? ராதிகா ஆப்தேவுக்கு ஒரு டூயட் கூட இல்லை. அநியாயம்.

படம் எப்படி என்று கேட்டால் முதல் பாதி அட்டகாசம். இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையும், கொஞ்சம் உடான்ஸூம். அவ்வளவுதான் விமர்சனம். 

ரஜினி எதிர்ப்பு, ரஞ்சித் மீதான வன்மம் உள்ளிட்ட அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டியும் படம் ஓடிவிடும். சாதாரண ரஜினி ரசிகனாக ரசிப்பதற்கு படம் முழுக்கவும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நடிகர்களில் ரசிகர்களைத் தன்னை நோக்கி இழுத்துப் பிடிக்கத் தெரிந்தவர் ரஜினி. அதை அழகாகச் செய்திருக்கிறார். மற்றபடி கேமிராவை செங்குத்தாக வைத்திருக்கலாம். மூன்றாவது காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் கோணம் சரியில்லை. எட்டாவது காட்சியில் புல்லாங்குழல் இன்னமும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருக்கலாம், திரைக்கதையில் லாஜிக் தொலைந்து போனது உள்ளிட்ட விஷயங்களை எழுதுவதற்கு இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? 

நீலக்கலர் சட்டை ஒரு குறியீடு; கருப்பு நிற முடி இன்னொரு குறியீடு; வெள்ளை நிற தாடி ஒரு குறியீடு; அம்பேத்கரின் அரசியல், காந்தியின் தத்துவம் என படத்தை பிரித்து மேய்கிற வேலையை இன்னொரு குழு பார்த்துக் கொள்ளும். ஆக அதுவும் வேண்டாம். இருநூறு ரூபாய் கொடுத்தோமோ, சாரல் மழையில் படத்தை பார்த்தோமோ, வெளியில் வந்து ‘படம் எப்படி?’ என்று யாராவது கேட்டால் பதில் தெரியாமல் விழித்தோமோ என்று இருக்க வேண்டும். 

ஸ்ரீவள்ளி தியேட்டர் குறித்து ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். நடிகர் முரளி ‘மஞ்சுவிரட்டு’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கோபி வந்திருந்தார். அப்பொழுதெல்லாம் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். நிறைய நடிகர்களிடம் பேசுவேன். சிலர் மதித்துப் பேசுவார்கள். பலர் கண்டுகொள்ளவே மாட்டார்கள். முரளி வித்தியாசமான மனிதர். மதியம் இடைவேளையில் சிகேஎஸ் பங்களாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற நடிகர்களிடம் பேசுவது போலவே ‘சார் உங்க படம் எல்லாம் எனக்குப் பிடிக்கும்’ என்றேன். சிரித்து அருகில் அமர வைத்துக் கொண்டார். பேசிக் கொண்டிருந்தவர் ‘சினிமாவுக்கு போலாமா’ என்றார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். நிஜமாகவே என்னைப் போல இரண்டு மூன்று பையன்களை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் தெரியாது. தெரிந்தால் தோலை உரித்துவிடுவார்கள். மதியக் காட்சிக்குச் சென்றோம். டிக்கெட் செலவிலிருந்து, தின்பண்டம், கூல்டிரிங்க்ஸ் என்று எல்லாச் செலவும் அவருடையதுதான். ஏதோ கனவில் மிதப்பது போல இருந்தது. எதற்காகச் செய்கிறார் என்றும் தெரியவில்லை.

செல்போன் இல்லாத காலம் அது. படம் முடிந்த பிறகு பொடி நடையாகவே சிகேஎஸ் பங்களாவுக்குச் சென்றோம். இடையில் யாராவது சிரித்து கை குலுக்கினார்கள். தயக்கமேயில்லாமல் கை குலுக்கினார். கிளம்பும் போது ‘அடுத்த தடவை வந்தா வீட்டுக்கு வாங்க’ என்றேன். சிரித்துக் கொண்டே ஒரு பாக்கெட் பிஸ்கெட்டை எடுத்துக் கொடுத்தார். வாங்கி பையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்புவது போல எதையுமே காட்டிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

கபாலி படத்துக்காக அதே ஸ்ரீவள்ளி தியேட்டரில் பதாகைகள் வைத்திருந்தார்கள். பட்டாசு வெடித்தார்கள். ‘தலைவா நீ ஆணையிட்டால் பாரத தேசத்தை பசுமை தேசமாக்குவோம்’ என்று எழுதி வைத்திருந்தார்கள். தலைவா, தலைவா என்று கத்தினார்கள். வசனங்கள் புரியாத அளவுக்கு விசில் அடித்தார்கள். தியேட்டர்காரர்கள் இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டு மின்விசிறியைக் கூட ஓட விடவில்லை. தரை முழுவதும் குப்பையாக நிறைந்து கிடந்தது. திரையரங்குக்கு வெளியில் நின்ற விஜய் ரசிகர்கள் ‘தெறிக்கு ஆறரை மணி ஷோவுக்கு பர்மிஷன் கொடுக்கலை....இப்போ ஜாஸ் சினிமா ரிலீஸ் பண்ணுறாங்க..அதனால டிக்கெட்டுக்கு இவங்க வைக்கிறதுதான் விலை..இவங்க சொல்லுறதுதான் டைமிங்’ என்றார்கள். கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தேன். எல்லாம் சரிதான். மேற்சொன்ன எல்லாமே ரஜினிக்காக என்றார்கள். நான் தப்பிப்பதற்காக ராதிகா ஆப்தேவுக்காக என்று மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

Jul 21, 2016

வெர்ச்சுவல் சுவர்

ஊரில் ஒரு வயதான மனிதர் இருக்கிறார். ராமசாமி. கோவணம் கட்டிக் கொண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார். அதுதான் அவரது தொழில். வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்த போது ‘சம்பளம் எத்தன வருது?’ என்றார். இப்படியான ஆட்களிடம் சம்பளத்தைச் சொல்லிவிட வேண்டும். ‘இவ்வளவு தர்றாங்களா?’ என்ற ஆச்சரியமிருந்தாலும் ஒரு வகையில் சந்தோஷப்படுவார்கள். பதிலைத் தெரிந்து கொண்டு‘மவராசனா இரு’ என்றார். பெரியவர் ஆச்சரியமான மனிதர். தலையின் உருமாலில் எப்பொழுதும் ஒரு புத்தகத்தைச் சொருகி வைத்திருப்பார். காசு கொடுத்தெல்லாம் வாங்காத பழைய புத்தகங்கள். பண்டம்பாடிகள் மேய்ந்து கொண்டிருக்க வாய்க்கால் ஓரமாகவும் வரப்பு ஓரமாகவும் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார். யாராவது எதிர்ப்பட்டால் கூச்சத்தோடு புத்தகத்தை மூடி தலையில் செருகிக் கொள்வார். வெகு நெருக்கமாகப் பழகிய பிறகே பொதுவான விவகாரங்களைப் பேசுவார். அதுவும் ஏகப்பட்ட விவகாரங்கள். இந்தக் கோவணத்தானுக்கு எவ்வளவு தெரியுது பார் என்று நினைக்க வைத்துவிடுகிற அளவிலான தகவல்கள்.

வாசிப்பு மனிதனை தகவல் பெட்டகமாக மாற்றுகிறது.

முன்பெல்லாம் கணினியைத் திறந்தவுடன் தினமலர், ஒன்-இந்தியா, என்.டி.டிவி உள்ளிட்ட சில தளங்களைத் திறந்து ஒரு ஓட்டம் விடுவது என்னுடைய வழக்கமாக இருந்தது. ஃபேஸ்புக் வந்த பிறகு அந்த வழக்கம் அருகிவிட்டது. ஃபேஸ்புக்கில் என்ன செய்தி பகிரப்படுகிறதோ அது மட்டும்தான் செய்தி என்கிற இடத்துக்கு மனநிலை வந்து சேர்ந்திருருக்கிறது. பொழுதின்னிக்கும் அதை மட்டுமே மேலும் கீழும் உருட்டுவதாக இருந்த மண்டையில் மகிதான் சம்மட்டியால் அடித்தான். அவன் பள்ளி ஆசிரியை படிப்பைத் தவிர வேறு விஷயங்களையும் பேசுகிறார். சில மாதங்களுக்கு முன்பாகவே தென் சீனக்கடல் பற்றி பேசியிருக்கிறார். ‘தென் சீனக் கடல் இந்தியாவுக்கு சொந்தமாங்கப்பா? மேம் பேசினாங்க’ என்றான். அதன் பிறகு துழாவியதில்தான் ஏகப்பட்ட விவகாரங்கள் சிக்கின. சமூக ஊடகங்களைப் பற்றிக் கொண்டிருந்தால் எவ்வளவோ விவரங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். 

சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு ஒரு செய்தியை மட்டும்தான் பிடித்துத் தொங்குகிறார்கள். அதை மட்டுமே நாம் பின் தொடர்கிறோம். இப்படித்தான் நம்மைச் சுற்றி மிகப்பெரிய சுவர்களை எழுப்பிக் கொள்கிறோம். நம்மையுமறியாமல் நம் மூளை மழுங்கடிக்கப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு இயல்பாக பேசிக் கொண்டிருந்த விஷயங்களைக் கூட இப்பொழுது மறந்துவிட்டோம். உணர்ச்சிவசப்படக் கூடிய, லைக் வாங்கக் கூடிய மேம்போக்கான செய்திகளை மட்டுமே செய்திகளாக மனம் எடுத்துக் கொள்கிறது. தலாய்லாமா பற்றி கடைசியாக வாசித்த செய்தி எதுவென்று ஞாபகப்படுத்திப் பார்க்கவே முடியவில்லை. ஸ்மிரிதி இரானியை எந்தத் துறைக்கு மாற்றியிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ஞாபகத்துக்கு வருவதில்லை. கூடங்குளத்தில் எத்தனை அணு உலைகள் இயங்குகின்றன என்ற செய்தி மறந்துவிட்டது. தாது மணல் விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஒரு சமயத்தில் இந்தியர்களைத் தாக்கினார்கள் அல்லவா? அது இன்னமும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. இப்படி பெரும்பாலான விவகாரங்களில் நமது தொடர்பு கண்ணி அறுந்துவிட்டது. 

சமூக ஊடகங்களிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டியதில்லை ஆனால் இங்கு உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது - Trending தாண்டி வெளியில் வர வேண்டிய அவசியம் அது. வெளியுலகம் இந்த வெர்ச்சுவல் உலகைக்காட்டிலும் வெகு சுவாரசியமானது இல்லையா?

பள்ளிக் காலத்தில் மேற்சொன்ன பெரியவரிடமிருந்து புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். ‘நீ வயசுக்கு வந்ததுக்கு அப்புறமா வேற புக்கெல்லாம் தர்றேன்’ என்று சொல்லி நக்கல் அடித்திருக்கிறார்.  இருபது வருடங்களைக் கடந்தாகிவிட்டது. இன்னமும் அதே முறுக்கத்தோடுதான் இருக்கிறார். அந்தக் காலத்தில் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு ‘வேற புக் தர்றீங்களா?’ என்று கேட்டால் ‘ஏண்டா கல்யாணம் கட்டி புள்ள பெத்துட்டா மட்டும் வயசுக்கு வந்ததா அர்த்தமா?’ என்கிறார். கவுண்ட்டர் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு ‘இன்னுமா அதையெல்லாம் படிக்கிறீங்க?’ என்றால் ‘ஆசைக்கு ஏது வயசு?’ என்று கேட்டு மடக்குகிறார். இந்த மனிதரிடம் என்ன பேசுவது? 

முந்தாநாள் வாய்க்கால் ஓரமாக ஆசுவாசமாக பேசிக் கொண்டிருந்த போது நிறையக் கதைகளைச் சொன்னார். எல்லாமே மனிதர்களின் கதைகள். அத்தனையும் அவர் வாசித்த கதைகள். முப்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த கதைகளைக் கூட ஞாபகம் வைத்துச் சொல்கிறார்- அந்த ஊர்ல அப்படி நடந்துச்சாம்; இந்த ஊரில் இப்படி ஆச்சு என்று. கிளுகிளுப்பான கதைகள் என்றால் ஒரு படி மேலே செல்கிறார். கேட்டுக் கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து அழைத்தார்கள். பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இந்த வாரத்தில் இன்னொரு நாள் கோவணத்தாண்டியைப் பிடித்து அமுக்கிக் கதை கேட்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகின் சுவாரசியங்களை இழந்து வெர்ச்சுவல் உலகிற்குள் முழுமையாகச் சிக்கிக் கொள்வோமோ என பயமாக இருக்கிறது. ‘ஒரு நாளைக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மணி நேரம் மட்டுமே ஃபேஸ்புக், ட்விட்டருக்கு என்று ஒதுக்கினால் தப்பித்துவிடலாம்’ என்று சமீபத்தில் ஒரு சஞ்சிகையில் வாசித்தேன். காலையில் இருபது நிமிடம், மதியம் இருபது, இரவில் இருபது என்று பிரித்து வேண்டுமானால் ஒதுக்கிக் கொள்ளலாம். அப்படி சமூக வலைத்தளங்களுக்கான நம் நேரத்தைச் சுருக்கிக் கொள்வது கடினமாக இருப்பதாக உணர்ந்தால் கிட்டத்தட்ட மனம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்று அர்த்தம். வேண்டுமானால் தொடக்க காலத்தில் இரண்டு மணி நேரம் என்று ஒதுக்கிக் கொள்ளலாம். போகப் போக நேரத்தைக் குறைத்து ஒரு மணி நேரம் என்பது அளவு என மாற்றிக் கொள்ளலாம். எந்தச் சஞ்சிகையில் வாசித்தேன் என்று மறந்துவிட்டது. ராமசாமியைப் பார்த்தவுடன் அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. 

Magzter என்றொரு தளம் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அத்தனை முக்கியமான சஞ்சிகைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தளம் இது. வருடாவருடம் சந்தா கட்டினால் இஷ்டத்துக்குப் படித்துக் கொள்ளலாம். எனக்கு ஓசியில் கிடைத்திருக்கிறது. வெகு நாட்களுக்கு முன்பாக முரளிதரன் என்கிற வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு வருடத்திற்கு நீங்கள் இலவசமாகப் படித்துக் கொள்ளலாம்; பணம் கட்டியிருக்கிறேன் என்று. அவருக்கு மிகப்பெரிய நன்றி. 

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் வாய்ப்பிருப்பவர்கள் சந்தா கட்டி வைத்துக் கொள்ளலாம். ஃபேஸ்புக்கில் உலவும் நேரத்தில் எதையாவது ஒரு சஞ்சிகையை வாசிக்கலாம். அப்படி வாசித்துக் கொண்டிருந்த போதுதான் ‘ஒரு மணி நேர கான்செப்ட்’டை வாசித்தேன். தேடி எடுக்க முடிந்தால் அந்தக் கட்டுரை குறித்து இன்னமும் விரிவாக எழுதுகிறேன்.

Jul 20, 2016

ரஜினி காய்ச்சல்

கோபியில் ஒரு திரையரங்கில் கபாலி வெளியாகிறது. பத்து கிலோமீட்டர் தள்ளிச் சென்றால் இன்னொரு திரையரங்கிலும் வெளியாகிறது. இரண்டு திரையரங்குக்காரர்களும் சேர்ந்து ஊர் முழுக்கவும் போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அசத்தலான சவுண்ட் சிஸ்ட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் கபாலி வெளியாகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் என்று இரண்டு மூன்று எண்களைக் கொடுத்திருக்கிறார்கள். இணையத்திலேயே திரிகிறவனுக்கு வெளியுலகம் தெரியாது என்கிற கணக்குதான் எனக்கும். இரண்டு மூன்று நாட்களாக திரும்பிய பக்கமெல்லாம் இணையவாசிகள் ‘கபாலிக்கு டிக்கெட்டே கிடைக்கலை...வித்து தீர்ந்துடுச்சு’ என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அதே எண்ணத்தில் நடுவழியிலேயே வண்டியை நிறுத்தி முதல் எண்ணை அழைத்தால் அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். 24x7 மணி நேரமும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கிறது போலிருக்கிறது என்ற கவலையோடு அடுத்த எண்ணுக்கு அழைத்தேன். ம்ஹூம். அதுவும் அப்படியேதான். இனி கஷ்டம் என்று வண்டியைக் கிளப்பிய சில நிமிடங்களில் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

‘அண்ணா கபாலிக்கு டிக்கெட் இருக்குதுங்களா?’ 

‘நீங்க எங்கிருந்து பேசறீங் தம்பீ?’ என்றார்.

‘கரட்டடிபாளையதானுங்கண்ணா’

‘டிக்கெட் இருக்குது... தியேட்டர்ல வந்து வாங்கிக்குங்க’

‘வர்றதுக்குள்ள தீர்ந்துறாதுங்களா?’

‘மம்மானியா கெடக்குது..வந்து வாங்கிக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தார். பேசி முடித்த பிறகு ‘வக்காரோலியா..எஸ்.டி.டி நெம்பரா? நாலேகால் ரூவா போச்சே’ என்று அவர் பதறியிருக்கக் கூடும். 

ஆக, டிக்கெட்டை அழைத்து விற்கிறார்கள்.

மாலையில் ஸ்ரீவள்ளி திரையரங்குக்குச் சென்றிருந்தேன். இதே திரையரங்கில்தான் ப்ளஸ் டூ விடுமுறையில் படம் பார்க்க வந்திருந்த போது பால்கனியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த சில சில்லுண்டிகள் கை நிறைய முட்டை பப்ஸ் வாங்கி வந்து பிய்த்துப் பிய்த்து கீழே இருந்தவர்கள் மீது வீசவும் கடுப்பேறிய ஆட்கள் மேலே வந்து சில்லுண்டிகளை பிய்த்துப் பிய்த்து வீசினார்கள். அப்பொழுது நானும் சில்லுண்டிக் கணக்காகத்தான் இருந்தேன். வீசுகிற வீச்சு இடம்மாறி என் முகத்தை இடம் மாற்றிவிடுமோ என்று பயந்தபடியே இருக்கைக்குள் தலையைத் திணித்துக் கொண்டு தப்பித்து வெளியேறி ‘ங்கொண்ணிமலையான்..இனி இந்த தியேட்டர் வாசலையே மிதிக்கக் கூடாது’ என்று முடிவெடுத்த வரலாற்று ஸ்தலம் அது.

திரையரங்கில் பந்தல் அமைக்கும் வேலையை ரசிகர் மன்றத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றியத் தலைவரின் பேரன் அநேகமாக கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர் இன்னமும் ரஜினிமுருகன் சிவகார்த்திகேயனின் மாமனாரைப் போல அல்டாப்பாக நின்று கொண்டிருந்தார். நக்கலுக்காகச் சொல்லவில்லை- உண்மையாகவே ரசிகர் மன்றத்தில் முக்கால்வாசிப் பேர் நரை கூடி கிழப்பருவமெய்தி மேலே கருஞ் சாயத்தைப் பூசி இளமையை இழுத்துப் பிடித்திருந்தார்கள். வாயிற்படியில் அமர்ந்து ஒருவர் பெட்டியைத் திறந்து வைத்திருந்தார். அவர் திரையரங்குப் பணியாளர்.

‘அண்ணா டிக்கெட்டுங்க....’

‘எந்த ஷோவுக்கு வேணுங்?’

‘எந்த ஷோவுக்கு டிக்கெட் இருக்குங்க?’

‘எல்லாத்துக்குமே இருக்குது’

‘அப்போ மொத ஷோவுக்கு ஒண்ணு கொடுங்க’

‘இருநூறு’

திரையரங்குக்காரர்களே கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று மட்டும் இருநூறு ரூபாய் என்றார். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது டிக்கெட் விற்கவில்லையென்றால் வெள்ளிக்கிழமையன்றே கூட ஐம்பது ரூபாய்க்குக் கிடைக்கும் என்றார்கள். 

வெளியே வரும் போது ரசிகர் மன்றத்து தலைவர் வந்து ‘எவ்வளவு டிக்கெட் வேணும்’ என்றார். 

‘பத்து வேணும்’ என்றேன் - குத்து மதிப்பாக.

‘தியேட்டரில் எவ்வளவு சொல்லுறாங்க?’ என்றார்.

‘இருநூறுங்க’

‘நூத்தி எழுபத்தஞ்சு கொடுங்க..நான் ஏற்பாடு பண்ணுறேன்..நெம்பரைக் குறிச்சுக்குங்க...நைன் டபுள் ஃபோர்...’ என்றார்.

ரசிகர் மன்றத்துக்கு என்று தியேட்டர்காரர்கள் சில நூறு டிக்கெட்களை விற்றிருக்கிறார்கள். அதை விலை கூட்டி இவர்கள் விற்று லாபம் சம்பாதித்து தலைக்கு டை வாங்கிக் கொள்வார்கள்.

‘சந்தோஷங்ண்ணா...நான் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

விட்டில் பூச்சிகள் நிறைந்திருக்கிற சென்னை, பெங்களூர் மாதிரியான பெருநகரங்களில் வேண்டுமானால் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கக் கூடும். ஆனால் கோபி மாதிரியான மூன்றாம் நிலை ஊர்களில் எல்லாம் அப்படி எந்த அதீத எதிர்பார்ப்பும் ஆரவாரமும் இல்லை. 

‘இருநூறு ரூவா இருந்தா குவார்ட்டர் அடிச்சுட்டு முட்டை புரோட்டா சாப்பிடலாம்’ என்கிற ரீதியிலான மனநிலைதான். திருப்பூர் போன்ற ஊர்களில் கூட முதல் நாள் காட்சிக்கு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. நம்பிக்கையில்லையெனில் விசாரித்துப் பார்க்கலாம்.

ரஜினி வியாபார காந்தம்தான். இல்லையென்றல்லாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த காந்தத்தைப் பயன்படுத்தி உறிஞ்சுகிற அளவுக்கு உறிஞ்சுகிறார்கள். டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். டுபாக்கூர் நிறுவனங்களின் லெட்டர்பேட்களில் ‘Management is pleased to announce..' என்று விடுமுறை அளிப்பதாக படம் காட்டுகிறார்கள். விடுமுறை நாளில் படம் ரிலீஸ் செய்தால் அது சல்மான்கான்; ரிலீஸ் ஆகிற நாள் விடுமுறை அளிக்கப்பட்டால் அது ரஜினிகாந்த் என்று பில்ட் அப் கொடுக்கிறார்கள்.

இதை எழுதுவதால் எனக்கு என்னவோ ரஜினி வெறுப்பு என்றெல்லாம் கருத வேண்டியதில்லை. ரஜினியின் மிகத் தீவிரமான ரசிகன் நான். அதை ஒத்துக் கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் பிடித்து வந்து படம் பார்க்கிறார்கள் என்று கதை அளந்தால் எப்படி நம்புவது? அப்படியான ஆட்கள் யாராவது ஒருவரையாவது அடையாளம் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். பெங்களூரில் அதிகபட்ச டிக்கெட் விலை ஆயிரம் கூட இருக்காது. பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விமானத்தில் பயணித்து சென்னையில் படம் பார்ப்பானா?.

சரி விடுங்கள்.

இணையமே கபாலி கோவணத்தோடு சுற்றும் போது ‘நான் எல்லாம் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் தெரியுமா’ என்று ரஜினியை விமர்சித்து எழுதி அம்மணமாகச் சுற்றினால் கடித்துக் குதறிவிடுவார்கள். ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு.

முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டேன். அம்மாவிடம் ‘வெள்ளிக்கிழமை ஆறரை மணிக்கு படம் பார்க்க போறேன்’ என்றேன்.

‘என்ன படம்?’ என்றார்.

‘கபாலி டா..’

‘பொழைக்கிறவன் எவனாச்சும் கானங்காத்தால சினிமா தியேட்டருக்கு போவானா? உருப்படற வழியைப் பாரு’ என்றார்.

அது தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்?

நெருப்புடா..நெருங்குடா பார்ப்போம்...

நேர்காணல்

மூன்றாம் நதி நாவல் குறித்து த டைம்ஸ் தமிழ் இணைய இதழில் வெளியான நேர்காணல். பத்திரிக்கையாளர் மு.வி.நந்தினி வினாக்களை அனுப்பியிருந்தார். புத்தகத்தை வாசித்துவிட்டு வினாக்களை அனுப்பி அதற்கான பதில்களைப் பெற்று வெளியிடுவதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு நன்றி.

த டைம்ஸ் தமிழ் இணையத்தளமானது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது. பெரும்பாலான செய்திகள் current issues தான்.

                                               ****

1. நாவலை குறிப்பிட்ட பக்கங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்தில் எழுதினீர்களா? அனைத்து அத்தியாயங்களும் சுருக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. கூடுதலாக இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துக்கு தடைபோடுவதுபோல் உள்ளது. இதை நீங்கள் உணர்ந்தீர்களா?

நாவல் நூற்றைம்பது பக்கத்திற்குள் இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். முதல் நாவலிலேயே அகலக் கால் வைத்துச் சிக்கிவிடக் கூடாது என்பது முதல் காரணம். புதிதாக வாசிக்கிறவர்கள் சலிப்பில்லாமல் வாசித்துவிடக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பது இரண்டாம் காரணம். நாவல் என்றாலே விரிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நறுக் என்று இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளலாம் என்று எழுதி முடித்து புத்தகமாக்கி, இப்பொழுது பார்த்தால் இதுதான் நாவலின் பலமாகவும் இருக்கிறது. பலவீனமாகவும் இருக்கிறது. பாராட்டுகிறவர்கள் இந்த அம்சத்தைத்தான் பாராட்டுகிறார்கள். விமர்சிக்கிறவர்களும் இதைத்தான் பிரதானமாக விமர்சிக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் இப்போதைக்கு எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

2. பவானி; கொங்கு வட்டாரத்தின் குறியீடு; அம்மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம். இதுதான் பவானி கதாபாத்திரத்தை ஒழுக்க மதிப்பீடுகளுக்குள் வைக்கக் காரணமா? தனக்கான அளவற்ற சுதந்திரமும் ஒழுக்க மதிப்பீடுகளை திணிக்காத வாழ்க்கையையும் கொண்ட பவானியின் காதல் அத்தியாயம் தணிக்கை செய்து எழுதப்பட்டதாக தோன்றுகிறது. உங்கள் பதில் என்ன?

பவானியை நேரில் சந்தித்திருக்கிறேன். நிறையப் பேசியிருக்கிறேன். அவளுடைய கதைதான் இது. நம்முடைய சூழலில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் கதையைச் சொல்லும் போது இந்தச் சமூகம் ஒழுக்க மதிப்பீடுகளாக வரையறை செய்திருக்கும் எல்லைகளுக்குள் நின்றுதான் தன்னுடைய கதையைச் சொல்வாள். ஒருவேளை அவளுக்குக் கட்டற்ற சுதந்திரம் கிடைத்திருந்தாலும் கூட ஒழுக்க மதிப்பீடுகளை மிஞ்சாதவளாகத்தான் தன்னைப் பற்றிப் பேசுவாள். ஒருவகையில் இதுவொரு சுய தணிக்கைதான். அப்படி தணிக்கை செய்யப்பட்ட வடிவத்தில்தான் பவானியின் கதையைக் கேட்டேன். கேட்டவற்றை நாவலாக்கியிருக்கிறேன். நாவல் வலுப்பெற வேண்டும் என்பதற்காக அவளது கதாபாத்திரத்தைச் சிதைக்க வேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். ஒருவேளை அவள் இந்த நாவலை வாசிக்கிற வாய்ப்புக் கிடைக்குமாயின் வாசித்துவிட்டு தன்னைப் பற்றி அசிங்கமாக எழுதியிருக்கிறான் என்று நினைத்துவிடக் கூடாதல்லவா? 

3. நாவலில் தொடக்கம் முதல் அது பயணித்து முடிவது வரை அதில் சொல்லப்பட்டிருக்கும் இடப் பெயர்வு வாழ்க்கைக்கு இணையாக நிஜத்தில் உங்களுடைய இடப்பெயர்வும் இருந்திருக்கிறது இல்லையா? உங்களுடைய பூர்விகம், படிப்பு, வேலைக்காக பெங்களூர் வந்தது பற்றி கேட்கிறேன்...

எனக்கு நிகழ்ந்ததெல்லாம் துன்பமில்லாத இடப்பெயர்வு. சேலம், வேலூர், சென்னை போன்ற ஊர்களுக்கு படிப்பதற்காகச் சென்றேன். எங்கே படிக்கப் போகிறேன், செலவுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதில் தெளிவு இருந்தது. படித்து முடித்த பிறகு ஹைதராபாத், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றதெல்லாம் சம்பளத்தோடு கூடிய இடப்பெயர்வு. பணம் இருந்தால் இந்த உலகில் பிழைத்துக் கொள்ளலாம். அந்தப் பணம் தேவையான அளவுக்கு கிடைத்தது. இடப்பெயர்வின் போது வேதனைகள் இருக்கும்தான். காதலி கிடைக்கவில்லை, வண்டி வாங்க வக்கில்லை என்கிற மேம்போக்கான துன்பங்கள் அவை. அதை வைத்துக் கொண்டு ‘எவ்வளவு துன்பத்தை அனுபவித்தேன் தெரியுமா?’ என்று புலம்பினால் அது போலியான புலம்பலாகத்தான் இருக்கும்.  

பவானி, அமாசை மாதிரியானவர்களின் இடப்பெயர்வுடன் என்னுடைய மத்தியதர இடப்பெயர்வை எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. எங்கே போகிறோம்? சம்பாத்தியத்துக்கு என்ன வழி என்ற எந்த தெளிவுமில்லாமல் பெருநகரத்தில் காலை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு பாவப்பட்டவன் என்பதை யோசித்தாலே அடி வயிறு கலங்குகிறது. அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லை. கையில் பத்து பைசா வருமானமில்லை. இரவில் காலை நீட்ட இடமில்லை என்று அவர்களுக்கு இருக்கக் கூடிய பெருங்கவலைகளில் ஒன்றிரண்டு சதவீதம் கூட என்னைப் போன்றவர்களுக்கு இருந்திருக்காது. அதனால் ஒப்பீடு தேவையில்லை.

4. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை எப்போதும் துயரம் நிரம்பியதாகவே இருக்குமா? பவானியில் பிறப்பிலிருந்து தொடங்கும் துயரம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீண்டுகொண்டே போகிறதே...

பெங்களூரின் விளிம்பு நிலை மக்களை அணுக்கத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். பொதுவாக விளிம்பு நிலை மக்களின் கொண்டாட்டங்கள் உற்சாகமளிக்கக் கூடியவைதான். ஆனால் பவானி நேரில் சந்தித்த கதாபாத்திரம். இப்பொழுதும் கூட அவளை அவ்வப்போது சந்திக்கிறேன். என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். அவளது வாழ்க்கை துயரம் மிகுந்தது. ஆனால் அந்த வாழ்விலும் உற்சாகமும் கொண்டாட்டமும் உண்டு. அதை வேறொரு குரலில் பதிவு செய்ய வேண்டும்.

5. ஒரு நகரை நிர்மாணிப்பது போன்ற ‘வளர்ச்சி’ என சொல்லப்படும் பணிகளில் யார் உழைப்பைக் கொட்டுகிறார்கள் என நாவலின் ஊடாக ஆவணப்படுத்தியுள்ளீர்கள். அதுபோல பெங்களூரின் தண்ணீர் தட்டுப்பாடு விஷயத்தையும் சொல்லலாம்; கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலோடு ஒன்று இந்த விடயங்களும் வருவது இயல்பாக இருக்கிறது. எழுதும்போது இது நாவலின் போக்கில் வந்ததா? அல்லது இந்த விடயங்களுக்காக கதாபாத்திரங்களின் சூழலை வடிவமைத்தீர்களா?

நாவலில் இடம்பெறும் தண்ணீருக்கான கொலை எங்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள வீதியில் நிகழ்ந்தது. ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த உடலைப் பார்த்தேன். அதன் பிறகு ஏன் கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்த போது கிளைக் கதைகள் நீண்டு கொண்டேயிருந்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒற்றைக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நாவலின் களமாக்கிய பிறகு இன்ன பிற விஷயங்கள் நாவலின் போக்கில் இயல்பாக வந்தது.

6. விவசாயக் கூலிகளாக இருந்த தமிழக பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெங்களூர் சென்று திரும்புவதன் மூலம் ஓரளவு பணத்தை ஈட்டி, சொந்த ஊரில் உள்ள மற்றவர்களைக் காட்டியும் மேம்பட்ட பொருளாதார நிலையில் இருக்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் ஊர் திரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள்...நீங்கள் பார்த்தவரையில் நாவலின் சொல்லப்பட்ட வாழ்க்கைதான் நிதர்சனத்திலும் உள்ளதா?

பெங்களூர் வந்துவிட்டு ஊர் திரும்புகிறவர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து மேஸ்திரிகள், கம்பி வேலை செய்கிறவர்கள் என நிறையப் பேர் வேலை நடக்கும் இடங்களிலேயே தங்கியிருந்தபடி அவ்வப்பொழுது ஊருக்குச் சென்று எப்பொழுதாவது நிரந்தரமாக ஊரிலேயே தங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பெங்களூரில் சில சேரிப்பகுதிகள் இருக்கின்றன. விவேக்நகர், கார்வேபாள்யா போன்ற பகுதிகளில் குடிசைவாசிகளில் தொண்ணூறு சதவீதம் பேர் தமிழர்கள். விசாரித்தால் தமிழகத்தை பூர்வகுடிகளாகக் கொண்டவர்கள். இங்கேயே வந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து பெங்களூர்வாசிகள் ஆகிவிடுகிறார்கள். துரதிர்ஷ்டம் என்னவென்றால் சொந்தமாக வீடு கூட இல்லை. 

7. இது உங்களுடைய முதல் நாவல். எவ்வித வெளியீட்டு, விமர்சன நிகழ்வுகளும் நடத்தாமல் இருப்பதன் பின்னணி என்ன?

அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க. ஒரு கூட்டம் நடத்தி அதற்கு நான்கைந்தாயிரம் செலவு செய்ய வேண்டுமா என்று யோசனை இருந்தது. அதற்கு பதிலாக ஏலம் விட்டுவிடலாம் என்று தோன்றியது. முதல் பிரதியை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டார்கள். மொத்தமாக இரண்டு லட்ச ரூபாய் கிடைத்தது. ஏழெட்டு மாணவிகளின் படிப்புச் செலவுக்குக் கொடுத்திருக்கிறோம். வெளியீட்டு விழா நடத்தியிருந்தால் இன்னமும் கவனம் கிடைத்திருக்கும்தான். ஆனால் அதைவிடவும் இத்தகைய காரியங்கள்தான் முக்கியம்.

8. பவானியைப் போன்றவர்கள் துயரங்களிலிருந்து விடுபட நீங்கள் எந்தவிதமான தீர்வுகளை பரிந்துரைப்பீர்கள்...

நம் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை. சாதியில்லாமல் சமூக அமைப்பு இங்கு சாத்தியமில்லை. அதே போல பணமும் மதமும் இல்லாமல் அரசியல் அமைப்பும் சாத்தியமில்லை. துரதிர்ஷ்டவசமாக அத்தனை எதிர்மறையான விஷயங்களும் பின்னி பிணைந்து கிடக்கின்றன. எல்லா மட்டங்களிலும் வல்லவன் எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது. இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளாமல் எதுவுமே சாத்தியமில்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பெருங்கூட்டம் செயல்படுகிறது. அதை உடைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

9. சமூக அக்கறையோடு செயல்படும் நீங்கள், எழுத்திலும் சமூக அக்கறை வெளிப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? அல்லது எழுத்து படிப்பவரை மகிழ்ச்சிப் படுத்தினால் போதும் என நினைக்கிறீர்களா?

எழுத்தில் உண்மை இருந்தால் போதும். நாம் என்னவாக இருக்கிறோம்; எதை நினைக்கிறோம் என்பதை அப்படியே எழுதினால் போதும். பிறவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

10. மூன்றாம் நதி, சினிமாவாகவோ, குறும்படமாக எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. இதை சினிமாவாக்குகிறேன் என யாரேனும் விரும்பிவந்தால் உங்களுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்?

நாம் எழுதுவதைப் பற்றி பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. இந்த நேர்காணலும் கூட அப்படியான சந்தோஷம். நாவலை யாராவது படமாக்குகிறேன் என்று கேட்டால் தாராளமாகக் கொடுத்துவிடுவேன். அது சந்தோஷமான விஷயமில்லையா? திரையில் பெயர் வரும். அம்மாவிடம் காட்டலாம். வீட்டில் பந்தா செய்யலாம்.

11. மூன்றாம் நதி எழுதிய பாதிப்பிலிருந்து மீண்டு விட்டீர்களா? பவானி நீ்ங்கள் நினைத்தது போல வெளிப்பட்டிருக்கிறாளா?

பவானி பற்றி எதிர்பார்த்த மாதிரிதான் சொல்லியிருக்கிறேன். உங்களின் முதல் கேள்வியைப் போல அவளது முழுமையான வாழ்க்கை இந்த நாவலில் வெளிப்படவில்லை என்று விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அதனால் இதை மனதில் போட்டுக் குதப்பாமல் கொஞ்சம் விலகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூடு ஆறட்டும் என நினைக்கிறேன். 

12. நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்பினால் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்..

மூன்றாம் நதி பற்றி நிறையப் பேர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. இதைத்தான் விரும்பினேன். திட்டிக் கூட எழுதட்டுமே. ஆனால் நாம் எழுதியதைப் பற்றியதான உரையாடல் நடப்பதுதான் உயிர்த்திருப்பதற்கான அடையாளம். அந்த உற்சாகம் கிடைத்திருக்கிறது. இனி அடுத்த நாவலை எழுத விரும்புகிறேன். வேறொரு கதாபாத்திரம். மனதுக்குள் ஒரு வடிவம் கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவேன். 
                                                 
                                                          ***
மூன்றாம் நதி ஆன்லைன் விற்பனைக்கான இணைப்பு

Jul 19, 2016

பியுஷ் மனுஷ்

எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் போது எதுவுமே பிரச்சினையில்லை. இடையில் ஏதாவதொரு இடத்தில் சிக்கல் வந்துவிட்டால் சோலி சுத்தம். ஏறி மிதிக்க நான்கு பேர் தயாராக இருந்தால் மண்ணை வாரித் தூற்ற நூறு பேர் வரிசையில் நிற்பார்கள். பியுஷ் மனுஷ் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘அந்த ஆளு ஒரு டுபாக்கூர்..நீங்களே விசாரிச்சு பாருங்க’ என்றார். சமூக ஊடகங்களின் யுகத்தில் கும்மினால் ஒரே கும்மாக கும்முவார்கள். தூக்கினால் ஒரே தூக்காகத் தூக்குவார்கள். இது ஒரு கூட்டம். அது ஒரு கூட்டம். 

பியுஷ் மட்டுமில்லை- இன்றைய சூழலில் யார் சிக்கினாலும் இதுதான் நிலைமை. அதனால்தான் வெளிச்சம் விழ விழ பயப்பட வேண்டியதாக இருக்கிறது. பாராட்டுகளைத் தாங்குவது பெரிய காரியமில்லை. வயதுக்கும் தகுதிக்கும் அனுபவத்துக்கும் மீறிய நல்ல பெயரையும் பாராட்டுகளையும் சேகரித்து வைத்து நமக்கென்று ஒரு பிம்பம் உருவாகியிருக்கும் போது சம்பந்தமேயில்லாத ஆட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து தூக்கிப் போட்டு மிதிக்கும் போது அதைத் தாங்குவதற்கு பெரும்பலம் வேண்டும். தூக்கி மிதிப்பவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு மிதிபடுகிறவரைப் பற்றி பத்து சதவீதம் கூட முழுமையாகத் தெரிந்திருக்காது என்பதுதான் கொடுமையாக இருக்கும். இருட்டு அறையில் முரட்டுக் குத்து குத்துவார்கள். 

பியுஷ் மனுஷ் நிறைய களப்பணிகளைச் செய்திருக்கிறார். சேலத்து ஏரிகள், தர்மபுரி வனப்பகுதி என்று அவர் செய்த இயற்கை சார்ந்த செயல்பாடுகள் மிக அதிகம். இதை வெறுமனே பொது நலக்காரியமாகச் செய்வதாகவெல்லாம் அவர் எந்த இடத்திலும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. விகடனில் வெளியான நேர்காணல் ஒன்றில் கூட ‘இந்த வனத்தில் இருந்துதான் எங்களுக்கான வருமானத்தை எடுத்துக் கொள்கிறோம்’ என்றுதான் பேசுகிறார். வனத்தை வளர்க்கிறேன்; அதிலிருந்து வருமானத்தை எடுத்துக் கொள்கிறேன் என்கிற பரஸ்பர சகாயம். mutual benefit.

‘நீ பாட்டுக்கு உன் வேலையைப் பாரு; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று இருந்துவிட்டால் இந்த உலகில் நமக்கு பிரச்சினையே இல்லை. ஆனால் பியுஷ் அப்படி இல்லாததுதான் பிரச்சினையின் மையப்புள்ளி என்கிறார்கள். ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை தொடர்ந்து எதிர்த்திருக்கிறார். அவர் சார்பில் புகார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆக்கிரமித்துக் கட்டுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி வாய்ப்பும் அரசியல் செல்வாக்கும் படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இவர் மீது ஒரு கண். வசமாகச் சிக்கட்டும் என்று காத்திருக்கிறார்கள். சிக்கிக் கொண்டார்.

பிரச்சினைக்குக் காரணமான முள்ளுவாடி ரயில்வே கேட் வெகு காலமாகவே சேலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம்தான். தொடரூர்தி கடக்கும் போதெல்லாம் சாலையை அடைத்து வைத்துவிடுவார்கள். இரண்டு பக்கமும் போக்குவரத்து நீளும். அங்கே ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் போக்குவரத்தை வழிமாற்றியிருக்கிறார்கள். அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அதை வேறு வகையில் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் பியூஷ் மற்றும் அவரது குழுவினர் மனு கொடுத்திருக்கிறார்கள். 

பிரச்சினை நடந்த தினத்தில் மேம்பாலத் திட்டப்பணி நடக்கும் இடத்தில் பியுஷ்ஷூம் அவரது குழுவினரும் பணியாளர்களைத் தடுத்திருக்கிறார்கள். இதை மக்கள் போராட்டம் என்று சொல்ல முடியாது என்றுதான் சேலத்து நண்பர்கள் சொல்கிறார்கள். தடுக்க விரும்பியிருந்தால் மக்களைத் திரட்டி ஏதாவதொரு வகையில் அமைதியான போராட்டத்தை நடத்தியிருக்கலாம். இவர்களாகவே களத்தில் இறங்கி வேலைக்கு இடையூறாக இருக்கவும் வழக்கு மேல் வழக்காகப் பதிந்து உள்ளே தள்ளிவிட்டார்கள். இதுவரை பியுஷ் மீது கண்ணாக இருந்தவர்கள் அவர் வெளியே வராமல் இருக்கவும், ஊடகங்களில் பெரிய அளவில் செய்தி வராமல் இருக்கவும், பியூஷ்ஷூக்கு ஆதரவாக மக்கள் திரண்டுவிடாமல் இருக்கவும் எல்லாவிதமான லாபிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுதுதான் பியுஷ் ஆணாதிக்கவாதி என்றும், பிறர்களின் உதவியோடு ஒரு காரியத்தைச் செய்துவிட்டு பெயரைத் தனக்கானதாக மாற்றிக் கொள்கிறார் என்றும், பாலியல் ரீதியாகப் பேசினார் என்றும் அவரது அந்தரங்கங்களைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதெல்லாம்தான் பயமாக இருக்கிறது. பியுஷ் எந்தப் பெண்ணின் ஆடையைக் கிழித்துவிட்டுக் கைதாகவில்லை. யாரிடமும் பிக்பாக்கெட் அடிக்கவில்லை. அவர் மக்களுக்கான காரியத்தில் இறங்கிக் கைதாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில் ‘இவனைப் பற்றித் தெரியாதா’ என்கிற வகையில் ஏன் அவரது உள்ளாடையை அவிழ்க்கிறார்கள் என்று புரியவில்லை. இந்தச் சமயத்தில் இது அவசியமானதுதானா?  இங்கே யார்தான் புனிதர்கள்? எல்லோரிடமும் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.

பியுஷ் இந்தச் சமூகத்திற்காகச் செய்த காரியங்கள் முக்கியமானவை. பொதுக்காரியங்களில் ஆயிரம் கைகளின் உதவிகள் இல்லாமல் எதையும் செய்து முடித்துவிட முடியாது. அப்படிச் செய்யும் போது முன்னால் நிற்பவரின் பெயர்தான் வெளியில் தெரியும். காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மாதிரிதான் இது. ஆனால் ஒருங்கிணைப்பு அவசியம் அல்லவா? ஒருங்கிணைத்தவரின் பெயர் முன்னால் வருவது இயல்பானதுதான். அதைத்தான் பியுஷ் செய்திருக்கிறார். சேலத்தின் ஏரிகள் மேம்பாட்டில் அவரது பங்களிப்பு இருக்கிறது. தர்மபுரியில் வனம் அமைத்ததில் அவர் பணியாற்றியிருக்கிறார். அவர் செய்யக் கூடிய வேலைகள் இன்னமும் இருக்கின்றன. அற்பக் காரணங்களைச் சொல்லி நம்மிடையே இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு களப்பணியாளர்களையும் ஒடுக்கி விட வேண்டியதில்லை.

ஸ்டண்ட் அடிக்கிறார், விளம்பரம் தேடுகிறார், சம்பாதிக்கிறார் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்- ஆனால் அதன் பின்னால் நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன அல்லவா? அதுதான் முக்கியம். நம்மில் எத்தனை பேர் பத்து மரங்களை நட்டிருக்கிறோம்? எத்தனை பேர் ஏரியில் இறங்கி சுத்தம் செய்திருக்கிறோம்? எத்தனை குப்பை மேடுகளைச் சுத்தம் செய்திருக்கிறோம். அவன் ஸ்டண்ட் அடித்தாவது இதையெல்லாம் செய்யட்டுமே. விளம்பரம் தேடியாவது துரும்பைக் கிள்ளிப் போடட்டுமே. எதையுமே செய்யாமல் வெட்டி நியாயம் பேசிக் கொண்டேயிருப்பதைவிடவும் அத்தகைய காரியங்கள் எவ்வளவோ பரவாயில்லை அல்லவா?

தன் வீடு, தன் குடும்பம் ஆகிய எல்லைகளைத் தாண்டி பொதுவெளியில் இறங்கும் போது என்னதான் நல்ல காரியமாக இருந்தாலும் பத்து பேர் நம் பின்னால் நின்றால் நூறு பேராவது எதிர்த்துப் பேசத்தான் செய்வார்கள். நாம் சரி என்று நினைப்பது அவர்களுக்குத் தவறாகத் தெரியலாம். நம்முடைய நிலைப்பாடு அவர்களது நிலைப்பாடுகளுக்கு முரணாக இருக்கலாம். இதெல்லாம் இயல்பானதுதான். எதிர்பார்க்க வேண்டியதுதான். பியுஷூக்கு குடும்பம் இருக்கிறது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இனி ‘நமக்கெதுக்கு இந்த எழவெல்லாம்’ என்று ஒதுங்கிக் கொள்ளக் கூடும் அல்லது ‘ஒரு கை பார்க்கலாம்’ என்று தொடர்ந்து செயல்படக் கூடும். ஒதுங்கிக் கொள்கிறவர்கள் சாதாரண மனிதர்கள் ஆகிறார்கள். தொடர்ந்து செயல்படுகிறவர்கள் சாதனை மனிதராக உருமாறுகிறார்கள். பியுஷ் இரண்டாம் வகையிலான மனிதர் என்று நம்புகிறேன். போராட்டங்களின் முறைகளை மாற்றிக் கொண்டு தொடர்ந்து செயல்பட மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ஆயிரம் குறைகளைச் சொன்னாலும் இந்த நிலத்துக்கும் இயற்கைக்கும் அவரது பங்களிப்பு முக்கியமானது. அரசாங்கம் அதைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கட்டும்.

Jul 18, 2016

சசியும் சரவணனும்

சசிக்குமார் ஐபிஎஸ்ஸூடன் அதிகம் பழகியதில்லை. ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறோம். சென்னை கடலூரில் வெள்ளம் நிகழ்ந்த சமயத்தில் அழைத்திருந்தார். கடலூருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது தன்னால் உதவ முடிந்தால் நிச்சயமாக உதவுவதாகச் சொன்னார். அப்பொழுது அவர் ஆந்திராவில் இருந்தார். தமிழக அதிகாரிகளே தொடர்பில் இருந்ததால் அவருடைய உதவி தேவைப்படவில்லை. அதன் பிறகு ஒரு முறை அழைத்துப் பேசியிருக்கிறார். பொதுவான உரையாடல் அது. என்னைக் காட்டிலும் இளையவர் என்பதால் அண்ணா என்றுதான் பேசினார். இப்பொழுது சசி இல்லை. இறந்துவிட்டார் அல்லது கொன்றுவிட்டார்கள்.

ஜூலை முதல் வாரத்தில் வேறொரு காரியம் காரணமாக சத்தியமங்கலத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. சசிக்குமார் சத்தியமங்கலத்துக்காரர்தான். ரங்கசமுத்திரத்தில் வீடு. சசி இறந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தன. வீட்டிற்கு வெளியில் கண்ணீர் அஞ்சலி பதாகை ஒன்றை வைத்திருந்தார்கள். பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்லலாமா என்று குழப்பமாக இருந்தது. அங்கு யாரையும் தெரியாது. உள்ளே சென்ற போது ஒரு சில உறவினர்கள் இருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் உடைந்திருந்தார்கள். உறவினர்களிடம் மட்டும் பேச்சுக் கொடுத்தேன். 

துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது வெடித்ததாக முதலில் செய்தி வெளியானது. அதன் பிறகு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது அருகிலேயே ஒரு தற்கொலைக் குறிப்பு கிடந்ததாகவும் செய்தி வெளியானது. Professional Failure தான் காரணம் என்று கூட இரு குறிப்பை வாசித்தேன். சசியின் உறவினர்கள் எதையுமே நம்புவதாக இல்லை. ‘அவன் தைரியமான ஆளுன்னு எங்களுக்குத் தெரியும்’ என்றார்கள். அவர் பணியாற்றிய பகுதியில் ஏதோ தகராறு நிகழ்ந்திருக்கிறது. கஞ்சா புழக்கத்தைத் தடுத்தார். சட்டவிரோத செயல்களுக்கு எதிராக முரட்டுத்தனமாக நடவடிக்கை எடுத்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தபடியே இருந்திருக்கின்றன. சற்று பொறுமையாக இருக்கச் சொல்லி வீட்டிலிருந்து அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதெல்லாம்தான் காரணம் என்கிறார்கள். அதனால்தான் திட்டமிட்டுக் கொன்று நீதியைப் புதைத்துவிட்டார்கள் என்றார்கள். 

ஒரு வேலை இது கொலையாக இருந்திருந்தால் சசியின் கடைசி நிமிடங்களை நினைத்துப் பார்க்கவே பதறுகிறது. என்னவெல்லாம் பேசி சசியைச் சுட்டிருப்பார்கள்? மனம் கண்டதையெல்லாம் யோசித்தது. அழுது கொண்டிருந்த அவரது உறவினர்களை பார்க்கவே முடியவில்லை. யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

சசி மறைந்து ஒரு மாதம் ஆகிறது. சாதாரணமான குடும்பத்தில் இருந்து ஐபிஎஸ் எழுதி தேர்வானவர். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கனவுகளுடன் புதைக்கப்பட்ட அந்த இளைஞனின் மரணம் குறித்து ஃபாலோ-அப் செய்தி என்று எதையும் தேடி எடுக்க இயலவில்லை. அப்போதைக்கு ‘மர்ம மரணம்’ என்று எழுதியதோடு சரி. விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கிறார்கள். வட இந்திய ஊடகங்களை விட்டுவிடலாம். அவர்களுக்கு டெல்லி மும்பையைத் தாண்டி எங்கு நடப்பதும் செய்தியே இல்லை. ஆனால் தமிழக ஊடகங்களாவது இது குறித்து விரிவாக எழுதியிருக்க வேண்டாமா?

அதே போலத்தான் சரவணன். திருப்பூரில் பனியன் தொழிலாளியின் மகன். மதுரையில் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு அகில இந்திய நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி சேர்ந்திருக்கிறார். கல்லூரியில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை. விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. மருத்துவ நண்பர்களிடம் பேசினால் ‘வலது கைப் பழக்கம் இருக்கிற ஒருத்தன் எப்படி வலது கை நரம்பிலேயே ஊசி செலுத்திக் கொள்ள முடியும்?’ என்கிறார்கள். சரவணனின் வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. என்னவோ காரணம் இருக்கட்டும். நிச்சயமாகத் தற்கொலையாக இருக்க முடியாது என்கிறார்கள். திக்கென்றிருக்கிறது.

ஒரு எளிய மனிதன் மருத்துவம் முடித்து கடும் போட்டி நிறைந்த அகில இந்திய நுழைவுத் தேர்வை அடித்து நொறுக்கி மிகச் சிறந்த கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்து பதினைந்து நாட்களுக்குள்ளாக டெல்லியிலிருந்து மூட்டை கட்டி உடலை அனுப்பியிருக்கிறார்கள். அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்கு இந்த மரணம் குறித்தான செய்திகள் வெளி வரக் கூடும். அதோடு விட்டுவிடுவார்கள்.

இப்பொழுது மரணம் என்பதெல்லாம் பெரிய பொருட்டே கிடையாது. யாரை வேண்டுமானாலும் மிக எளிதாகக் கொன்றுவிடுகிறார்கள். அதன் பிறகு அது குறித்து எந்தச் சப்தமும் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சசிக்குமார், சரவணன் மாதிரியான இளைஞர்களின் மரணங்கள் ஆயிரக்கணக்கான கேள்விகளை எழுப்புகின்றன. தமிழக அரசும், ஊடகங்களும் நினைத்தால் இத்தகைய மரணங்கள் குறித்து மிகப்பெரிய சலனத்தை உருவாக்க முடியும். ஆனால் ஏன் செய்வதில்லை என்றுதான் புரிவதேயில்லை.

வட இந்திய ஊடகங்களுக்கு எப்படி டெல்லியில் நடப்பது மட்டும்தான் செய்தியோ அப்படித்தான் பெரும்பாலான தமிழக ஊடகங்களுக்கு சென்னையில் நடப்பவை மட்டும்தான் செய்தி போலிருக்கிறது. சென்னையின் ஒன்றுக்குமே ஆகாத செய்திகளைக் கூட ஊதி ஊதி பெருக்குகிறவர்கள் சென்னையைத் தாண்டி நிகழும் பெரும்பாலான நிகழ்வுகள் குறித்து விரிவாக அலசுவதேயில்லை. குற்றம் சாட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சசி ஏன் இறந்தார்? சரவணன் ஏன் கொல்லப்பட்டார் என்பதை கொஞ்சம் மெனக்கெட்டால் விரிவாக அலசி ஆராய்ந்து ஊடகங்களால் எழுத முடியாதா? அவர்களிடம் அதற்கான வலையமைவு இருக்கிறது. பிறகு ஏன் எழுதுவதில்லை? எது தடுக்கிறது? திரைச் செய்திகளுக்கும் அரசியல் செய்திகளுக்கும் தரப்படுகிற முக்கியத்துவத்தை எந்தவிதத்திலும் குறையாகச் சொல்லவில்லை. விற்பனை அவசியம்தான். ஆனால் ஆயிரக்கணக்கான கனவுகளுடனும் லட்சியங்களுடனும் மேலே வருகிற அப்பாவி இளைஞர்களின் கனவுகளுக்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதை சற்றேனும் கவனப்படுத்தலாம் அல்லவா? தற்கொலையாகவே இருக்கட்டும். ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள்? என்ன பிரச்சினைகள் என்பதை விவாதிக்கலாம். அடுத்தடுத்து வரக் கூடிய இளைஞர்களுக்கு தீர்வாக அலசல்களும் விவாதங்களும் அமையட்டும்.

சசிக்குமார், சரவணன் போன்றவர்கள் எதிர்காலத் தமிழகத்தின் அறிவார்ந்த அடையாளங்களாகத் திகழ்ந்திருக்கக் கூடும். சப்தமேயில்லாமல் முடித்தாகிவிட்டது. இனியாவது கொஞ்சம் சப்தம் எழுப்பிப் பார்க்கலாம். ஊடகங்கள்தான் மனம் வைக்க வேண்டும்.

Jul 11, 2016

மூன்றாம் நதி- விமர்சனங்கள்

மூன்றாம் நதி நாவலுக்கு வருவது போன்ற விமர்சனங்களும் மின்னஞ்சல்களும் வேறு எந்தப் புத்தகத்திற்காகவும் எனக்கு வந்ததில்லை. அத்தனையும் பாராட்டுப்பத்திரங்கள் என்று சொல்ல முடியாது. குறைகளைச் சுமந்து கொண்டும் வருகின்றன. என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்த உரையாடல் சந்தோஷமளிப்பதாக இருக்கிறது. அத்தனை பேருக்கும் நன்றி.

                                                        ***

நேற்று ”மூன்றாம் நதி” படித்தேன். நிறைய இடங்கள் சரளமாக சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கு இந்த நாவல் நாஞ்சில் நாடனின் “சதுரங்க குதிரை” போன்ற நாவல்களை ஏனோ நினைவுபடுத்தியது. அதே போல அழகிய பெரியவனின் ஒரு குறுநாவல் (தலைப்பு மறந்து விட்டது) நினைவு வந்தது. அந்நாவலில் ஒரு இளம் பெண் கிராமத்தில் இருந்து சென்னையில் ஒரு சேரியில் வசிப்பாள். கணவன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இறந்து விடுவான். பிறகு அவள் தன் கணவனின் முதலாளியான ஒரு அரசியல்வாதிக்கு இரையாவாள். பிறகு மெல்ல மெல்ல அவள் ஒரு விபச்சாரியாக்கப்படுவாள். ஒரு காட்சி பயங்கரமாக இருக்கும். அவளை ஒரு தெருவில் அரைமயக்கமாய் படுக்க வைத்து ஒருவன் வரிசையாக வாடிக்கையாளர்களை அழைத்து வந்து பணம் பண்ணுவான்.

ஒப்பிடுகையில் வா.மணிகண்டனின் நாவல் சற்று மென்மையானது.

எனக்கு அவர் பவானி பாத்திரத்தை நீர்மையின் உருவகமாய் பயன்படுத்தி இருந்தது பிடித்திருந்தது. பஞ்சம் பிழைக்க நகரம் தேடி வரும் அமாசையின் மகளான அவள் ஒரு தலைமுறையின் கனவின் உருவகம். நீர் இல்லாது தானே அவர்கள் கிராமத்து வாழ்வை துறக்கிறார்கள். பின்னர் நீரை விற்கும் வணிகப் போட்டியின் வன்முறையில் அவள் வாழ்வும் சிதைகிறது. ஒரு நதி நகரத்தில் வந்து கவனிப்பாரற்று சீரழிகிறது. அசுத்தமாகிறது. குறுகி வறண்டு போகிறது. பவானியின் முதலாளி பால்காரர் தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளுக்கு நீர் போதாமல் போகும் போது போர் கிணறு தோண்டுகிறார். பூமிக்குள் நீரோட்டம் அவருக்காய் திறந்து கொள்கிறது. சுத்தமான இனிப்பான ஏராளமான தண்ணீர். அதை வைத்து அவர் ஏக்கர் கணக்காய் விவசாயம் செய்யலாமே என ஒருவர் கூறுகிறார். ஆனால் பால்காரர் தன் மனதுக்குள் நீரை எப்படி விற்பது என கணக்கு போடுகிறார். விவசாயம் ஒரு வியாபாரம் அல்ல. அது மண்ணுடனான உறவு. ஒரு வாழ்க்கை முறை. நகரத்தில் இந்த விழுமியங்களுக்கு மதிப்பில்லை. அங்கு எதுவும் விற்க வேண்டிய / வாங்க வேண்டிய ஒரு பண்டம் மட்டுமே. ஆனால் நகரத்தில் வந்து அந்த வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னை கரைத்த பின்னரும் பவானிக்கு தண்ணீருடன் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருக்கிறது. குழாய் கிணற்றில் முதன்முதலாய் நீர் பொங்கும் போது பால்காரர் உற்சாகமாய் அதை அள்ளி பவானியிடம் “பார் காவிரி தண்ணீர்” என்பார். அப்போது பவானி “இது காவிரி இல்லை” என்பாள். காவிரி என்றால் அது வேறொரு ஒரு இருப்பு. அது மக்கள் வாழ்வில் ஊடுருவும் ரத்த நாளம். அதை கூறு போட்டு விற்க முடியாது. அதே போல ஒரு இடத்தில் மரங்களை வெட்டி சாய்த்திருப்பார்கள். அங்கே ஒரு கிளையில் இருந்து சிதறிய கூடும் முட்டைகளும் கிடக்கும். அருகில் தத்திச் செல்லும் கொக்குக்குஞ்சை அவள் தூக்கிக் கொள்வாள். வீட்டுக்கு கொண்டு போய் வளர்க்கலாம் என நினைப்பாள். இந்த இடங்களை மிகவும் ரசித்தேன். அந்த நீரும் அந்த கொக்குக்குஞ்சும் அவளையும் அவள் அப்பாவையும் போன்ற மனிதர்களே!

அதே போல அவள் பத்து பாத்திரம் தேய்க்கும் வீட்டில் உள்ள கணவன் ஒருநாள் அவளை பார்க்கும் அலட்சியமான காமப் பார்வை, அது அவளுக்கு தரும் அருவருப்புணர்வு, அவள் பாத்திரம் தேய்த்து வீட்டை சுத்தம் பண்ணும் பொட்க்ஹு அவளை பொருட்டாகவே கருதாமல் வீட்டில் வசிக்கும் தம்பதியினர் தமக்குள் கொஞ்சுவது – நல்ல அவதானிப்புகள். எனக்கு அந்த நகரத் தம்பதியினரை ஒரு தனி டிராக்காக கொண்டு போயிருக்கலாம் என பட்டது. நாவலில் இன்னும் ஒரு ஐம்பது பக்கங்கள் எழுதியிருக்கலாம். குறிப்பாய் நகரத்தின் சிதைவுகள் பற்றி.

இறுதியில் பவானியின் கணவன் கருகி இறந்து போகிறான். அவன் பாதி கருகிய உடலை பார்க்கையில் அவளுக்கு இளமையில் கிராமத்தில் சுட்டுத் தின்ற சிட்டுக்குருவி நினைவு வரும். அந்த அபத்தம் நன்றாய் உள்ளது.

நாவலில் மிகச்சிறந்த காட்சி இரண்டாம் அத்தியாயத்தில் வருகிறது. பவானியின் அப்பாவான அமாசையும் அவர் முதலாளி சின்னச்சாமியும் கறவை மாட்டை விற்று விட்டு ஊருக்கு திரும்பும் இடத்தை அபாரமாய் சித்தரித்திருக்கிறார் மணிகண்டன். எனக்கு அது “பாஸ்கர பட்டேலருடன் எனது வாழ்வு” நாவல் நினைவு வந்தது.
அப்போது எனக்கு அமாசை தான் நாவலின் உண்மையான நாயகன் என தோன்றியது. அவன் பங்களூருக்கு வந்து சின்னசாமி போல் மற்றொருவருக்கு கீழ் துணிச்சலாய் செயல்பட்டு எப்படி ஒரு சீரழிவு வாழ்க்கைக்கு பயணிக்கிறான், ரெட்டி போன்றவர்கள் எப்படி நகரத்தை கூறு போட்டு விற்று முழுக்க அந்நியமாக மாற்றுகிறார்கள், அவருடன் எப்படி அமாசையும் வளர்கிறான், பிறகு எப்படி தன் பணம், அதிகாரத்தை இழந்து வீழ்கிறான் என ஒரு தனிமனித வீழ்ச்சியின் சித்திரத்தை நகரத்தின் வீழ்ச்சியுடன் இணைத்து காட்டியிருக்கலாம் என தோன்றியது. அப்போது நாவல் இன்னும் வலுவாக வந்திருக்கும். பவானியை பின்னணியில் வைத்திருக்கலாம். ஜெயமோகனின் “ரப்பர்” நாவலின் டெம்பிளேட் இது போன்ற படைப்புகளுக்கு கச்சிதமாய் பொருந்தக் கூடியது. சின்ன திருகல்களுடன் அதை இந்நாவலுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இது வா.மணிகண்டனின் நாவல். அவன் தன் விருப்பப்படி, தீர்மானங்களின் படி இதை எழுதுவதே நியாயம்.

இந்த நாவல் நகரமயமாக்கலின் ஒரு வரலாற்று சித்திரத்தை அளிக்கும் நோக்கம் கொண்டது என ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பிற்பாடு அது பவானியின் அவல வாழ்வின் கதையாக சுருங்கி விட்டது. அதற்கு காரணம் அவளுக்கு அந்த வரலாற்றில் பங்கு இல்லை என்பதே. வரலாற்றுக்கும் தனிநபர் இழப்புக்கும் நடுவில் நாவல் மாட்டிக் கொண்டு விட்டது.
ஒட்டுமொத்தமாய் நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. அங்கங்கே சுஜாதா தென்படுகிறார். ஒருவேளை பங்களூர் பின்புலம் என்பதாலா வா.மணிகண்டனின் ஸ்டைலினாலா எனத் தெரியவில்லை. அடுத்த முறை பிடிவாதமாய் அவர் சுஜாதாவின் ஆவியை துரத்தி விட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

- எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன்

                                       ***
அன்புள்ள மணிகண்டன்

வணக்கம்.

ஞாயிறு அன்று கலாப்ரியாவுடன் உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மிகமிக அருகாமையில் வசித்தும்கூட, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள இப்படிப்பட்ட தருணங்களுக்காக நாம் காத்திருக்கவேண்டி இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நகர வாழ்க்கை நமக்களிக்கும் வரம் அப்படி. யாரை நொந்துகொள்ள முடியும்?

ஞாயிறு இரவே உங்கள் புதிய நாவலைப் படித்துமுடித்துவிட்டேன். நாவலின் கருவுக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. இந்த இடத்தில் உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். சில மாதங்களுக்கு முன்பாக அந்திமழை இதழுக்காக ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அதன் தலைப்பு மூன்றாவது நதி. அப்படி ஒரு தலைப்பை அந்தக் கதைக்குச் சூட்டியதுமே என் மனம் கிளர்ச்சியுற்றது. அக்கதையின் கருவுக்கு அத்தலைப்பு கச்சிதமாகப் பொருந்திவிட்டது. அதுவே என் புதிய தொகுப்பின் தலைப்பாக அமையவேண்டும் என்று விழைந்தேன். தற்செயலாக அன்று வண்ணதாசனுக்கு எழுதிய மடலில் இந்தக் குறிப்பைப் பகிர்ந்துகொண்டேன். உடனே அவர் மடல் போட்டிருந்தார். ‘மணிகண்டன் இந்தத் தலைப்பில் ஒரு நாவல் எழுதுவதாக ஒரு தகவலைப் படித்த நினைவிருக்கிறது. முடிந்தால் மாற்றுங்கள்”என்று குறிப்பிட்டிருந்தார். பிறகு உங்கள் தளத்துக்கு வந்து பதிவுகளைப் படித்தபோது அது சரியான தகவல் என்று புரிந்துகொண்டேன். உடனே என் தொகுதிக்கு வேறொரு கதையின் தலைப்பான ‘கண்காணிப்புக் கோபுரம்’ என்ற தலைப்பை முடிவு செய்து கொடுத்தேன். அன்று முதலே உங்கள் நாவலுக்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.

நான் நினைத்திருந்ததைவிட சிறிய அளவில் இருக்கிறது நாவல். ஆனால் இதன் களம் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமான, உவப்பான களம். இந்த மனிதர்களை அவர்களுடைய எல்லாக் குற்றம் குறைகளுடன் நேசிப்பவன் நான். ஓர் உத்தியாக லிங்கப்பாவின் படுகொலையை முதலில் விவரித்த பின்னார், பின்னகரும் நினைவுகளில் பவானியின் குழந்தைப்பருவம் முதலான அனுபவங்கள் நகர்ந்துபோய் மீண்டும் அப்புள்ளியில் குவிந்து முடிவை நோக்கி நீள்கிறது. விவசாயம் பொய்த்ததால் தொடர்ந்து  பண்ணையத்தையும் பசுவையும் பார்க்க முடியாத ஒருவர் தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை அனுப்பிவிடுகிறார். பிழைப்பைத் தேடி இளம்மனைவியோடும் கைப்பிள்ளையோடும் நகரத்தை நோக்கி வருகிறான் ஒருவன். கிராமத்து விவசாயி நகரத்தின் தொழிலாளியாக மாறுகிறான். அவனைப்போல நகரத்தை நாடிவரும் கூட்டத்துக்கு அவன் ஒரு முன்மாதிரி. அத்தகையோர் நகரத்திலிருந்து பெறுவதைவிட இழப்பவை அதிகம். அவன் வாழ்க்கையிலும் அதுவே நேர்கிறது. பவானியின் நினைவுப்பதிவுகளாக விரியும் அத்தருணங்கள் முக்கியமானவை. மூன்று விஷயங்கள் அப்பதிவுகளில் ஒன்றோடு ஒன்று முயங்கிக்கிடக்கின்றன. ஒன்று நகரத்தின் இரக்கமற்ற வளர்ச்சி. இரண்டு, அதிகாரத்தின் அடித்தட்டில் நிலவும் உறவுகள், மோதல்கள். மூன்று சுய தேர்வு என்பதற்கு இடமே இல்லாமல் இவ்விரண்டு விசைகளின் அழுத்தத்தை ஏற்று கேரம் போர்ட் காய் போல வாழ்க்கையென்னும் செவ்வகப்பலகைக்குள் உருண்டோடியபடி இருக்கும் மனிதர்கள். இது நாவலின் மிகப்பெரிய பலம். ஐ.டி.துறை வளர்ச்சி, தண்ணீர் விற்பனை (ஒருமுறை தோகூர் க்ராஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்த பத்து நிமிடங்களில் பதினைந்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைப் பார்த்தேன். புதிய அடுக்ககங்கள் உருவாகும் இடங்களை இவை எப்படி வளைத்துப்போட்டு தம்மை ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக மாற்றிவைத்துக்கொள்கின்றன என்றெல்லாம் யோசித்தபடி நின்றிருந்தேன். பெருமூச்சு விடுவதற்கும் மேலாக என்னால் ஒன்றும் செய்ய முடிந்ததில்லை), அதையொட்டி நிகழும் அதிகார மோதல் என பொருத்தமான பின்னணியோடு கதையின் களத்தை அமைத்திருக்கிறீர்கள். கச்சிதமான உங்கள் மொழியால் மிகக்குறைவான சொற்களின் துணையோடு காட்சிகளை அடுத்து, அடுத்து என நகர்த்திக்கொண்டே செல்கிறீர்கள். ஒரு காட்சி அழுத்தமான அனுபவமாக மனத்தில் இறங்கி பதியும் முன்பாகவே, அடுத்த காட்சியை நோக்கி நாவல் நகர்ந்துவிடுகிறது. அதை ஒரு பெரிய பலவீனமாகவே நான் உணர்கிறேன். பவானியின் பள்ளிப்பருவக் குழப்பம் ஒரு முக்கியமான காலகட்டம். உமாவின் முடிவும் அத்தகைய ஒரு முக்கியமனா காலகட்டம். ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு பவானி அவசரம் அவசரமாக மாறி, தன்னைத் தகவமைத்துக்கொள்வதும் முக்கியமான கட்டம். அவை அனைத்துமே இன்னும் அழுத்தமான காட்சிகளைக் கோரும் இடங்கள். தாவிச் செல்லும் முறையால், நாவல் வாசிப்பு ஒரு செய்தித்தாளில் வெளிவரும் சம்பவ வாசிப்பாக சரிந்துபோவதாக உணர்கிறேன். சம்பவங்களே இல்லாத கதையை சிலர் நானூறு, ஐந்நூறு பக்கங்கள் எழுதுகிற இந்தக் காலத்தில், ஏராளமான சம்பவங்களை ஒருசில வரிகளால் நீங்கள் கடந்துபோக முயற்சி செய்திருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அறியாமையோ, இயலாமையோ நிச்சயம் இதற்குக் காரணமல்ல என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அவற்றையும் கடந்து இந்த முடிவை நோக்கி உங்களைச் செலுத்திய விசை எதுவென எனக்குப் புரியவில்லை, எதுவாக இருந்தாலும் என்னை நம்பும் நண்பர் நீங்கள் என்கிற நிலையில் அந்த விசைக்கு நீங்கள் செவிசாய்த்திருக்கக்கூடாது என்றே சுட்டிக் காட்ட விழைகிறேன். விரிவாக எழுதுங்கள் மணிகண்டன். நாவல் என்பதற்கான பொருளே விரிவுதான். விரிவான தளத்தில், களத்தில் வாழ்க்கையை வைத்துப் பார்த்தல். விரிவின்மையே இந்த நாவலில் நான் காணும் பெரிய குறை. அது உங்கள் அடுத்த நாவலில் நிகழக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்தாளர் பாவண்ணன்.

                                       ***

மூன்றாம் நதி நாவல் தமிழுக்கு புதுமையானது. 100 பக்கங்களில் தான் சொல்ல வந்த கதையை நேர்த்தியாக சொல்லிவிட முடியும் என்ற எழுத்தாளரின் நம்பிக்கை பாராட்டுக்குரியது. நகரமயமாதல் ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தை 100 பக்கங்களில் சமரசம் இன்றி சொல்லிவிட முடிகிறது வா. மணிகண்டனால். நாவல் என்றாலே அது பலனுரு பக்கங்களில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியவர்கள் தான் இந்த மாற்றத்தையும் ஆதரிக்க வேண்டும்.

100-150 பக்கங்களுக்குள் நாவல் எழுத விழைவோருக்கு இந்நாவல் ஒரு வழிகாட்டி. தலையணை சைஸ் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிக்கமுடியாமல் தடுமாறுவதை விட இதுமாதிரியான நாவல்கள் நல்ல முயற்சியே. தம்பி லஷ்மி சரவணக்குமாரின் நாவல்களும் அத்தகைய வடிவத்தையே கொண்டிருக்கிறது.

இளம் எழுத்தாளர்களின் புதிய முயற்சியை வரவேற்பதுதான் தமிழ் கூறும் நல்லுகத்துக்கு நல்லது.

- நாச்சியாள் சுகந்தி

                                      ***

அன்பின் மணிகண்டன் அவர்களுக்கு,

சென்னை புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி அரங்கில் மூன்றாம் நதி வாங்கிய பின் திரும்பி பார்த்தால் நீங்கள். ஆச்சர்யம். நான் வாங்கும் புத்தகங்களில் அதை எழுதியவர்கள் கையொப்பம் இடம் பெற்றிருக்கும். மூன்றாம் நதியிலும் அது கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி.
நீங்கள் படித்துவிட்டு நிச்சயம் கருத்தை சொல்லுங்கள் என கேட்டமையால் இந்த மின்னஞ்சல். புனைவு வழி ஒரு நகரத்தின் வளர்ச்சியை சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்.

கருத்து, விமர்சனம் என என்னால் சொல்ல முடியவில்லை. வாசிப்பனுபவமாக பகிர்கிறேன்.

பெங்களூர் என்னும் பெயரில் வாழ்ந்த நகரமே சொர்கம். எப்போது பெங்களூரு ஆனதோ அது நரகம் என்றும் சொல்லலாம். என் பெரியப்பா மாமா பெங்களூரில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே விடுமுறை ஆனால் பெங்களூர் சென்றுவிடுவேன். அப்பொழுதான் K.R புரம் உங்கள் கதையில் வரும் ஏரியைப் போல் அதன் மாற்றத்தை வருடா வருடம் கண்கூடாக பார்த்திருக்கிறேன். இப்போது இருக்கும் பெங்களூரு என்னவோ எனக்கு அந்நியமாய்படுகிறது. நான் பார்த்த அழகிய குளிர் பிரதேசம் இதுவல்ல என்றே தோன்றுகிறது. மூன்றாம் நதியில் சொல்லப்படும் தண்ணீர் பிரச்சனைகளை கோடை விடுமுறைகளில் கண்கூடாக பார்த்திருக்கிறேன் அணுபவத்திருக்கிறேன். தண்ணீர் டிராக்டர் வந்தால் தான் நமக்கு இனி குளியல் என்னும் நிலைமையையும் கடந்திருக்கிறேன். தண்ணீருக்காக காலி குடங்களில் என் மாமியுடன் சேர்ந்து K.R புரம் ITI லேஅவுட் வீதிகளில் அலைந்திருக்கிறேன். அப்படி பிடிக்கும் போது குடத்தில் இருந்து சிறிதளவு தண்ணீர் சிந்தியமைக்காக அருகில் இருந்தவர்களிடம் வசையும் வாங்கி இருக்கிறேன். ரோட்டில் ஏதாவது தண்ணீர் டிராக்டர் வந்தால் அதனை மறித்து யார் வீட்டிற்காவது போறீங்களா? எங்களுக்கும் தண்ணீர் வேணும் கொண்டு வாரீங்களா. போன்ற கேள்விகள் சம்பில் தண்ணீர் காலியாகும் போது மாமா மாமியிடமிருந்து வந்திருக்கிறது. இப்போது காவேரி நீர் வருகிறது என்கிறார்கள். ஆக இந்த நாவலின் கதைக்களம் படிக்கும் போது எனக்கு நெருக்கமாகவே இருந்தது.

மூன்றாம் நதியில் முதல் அத்தியாயம் தவிர்த்து ஒரே பிடிப்பில் வாசித்து விட வேண்டுமென்ற வேகம் வந்து விட்டது. அவ்வளவு யதார்த்தமாய் விறுவிறுப்புடன் செல்கிறது. ஏனோ முதல் அத்தியாயம் ஒட்டவில்லை. முதல் அத்தியாயத்தை ஒரு சிறுகதை போல் வாசித்தால் அருமை என்றே தோன்றும். ஒரு சந்தர்ப்பத்தில் லிங்கப்பாவுக்கும் பவானிக்கு திருமணம் ஆகிவிட்டது அவர் தீயில் கருகி உயிரியக்க போகிறார் என்று தெரிந்தவுடன் பின் வரும் பக்கங்களை படித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்தால் நகர்கிறது. அமாசையின் முதலாளி முடிச்சிக்கலாம் என சொல்லுவதில் இருந்து லிங்கப்பா தான் பவானியின் கணவர் என தெரிய வரும் பக்கங்ககள் வரை எனக்கு பிடித்திருந்தது. எளிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை அழகாய் நகர்த்தி இருக்கிறீர்கள். அவளுக்கு ஏற்படும் துன்பம் மகிழ்ச்சி சிரிப்பு கண்ணீர் என அனைத்தையும் காட்டி கதை நகர்கிறது. பெங்களூரு எனும் நகரம் சாமானியர்களின் கையை விட்டு வெகு தூரம் சென்றுவிடுகிறது. பவானி அமாசை உமா லிங்கப்பா பால்காரர் ஹொஸா ரோட்டுகாரர் என அனைவரின் குணாதிசயங்களும் உணர்த்திய விதம் அருமை. எடுத்த கதைகளத்திற்கு நியாயம் செய்திருக்கிறீர்கள்.

ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது உவமையாக ஒன்றை சொல்லி முடித்திருந்தது பிடித்திருந்தது.

அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.

ஹேம்நாத் அண்ணாதுரை
சென்னை
                                           ***
மூன்றாம் நதி- புத்தக கண்காட்சியிலேயே வாங்கி அப்போதே படித்து விட்டேன். விமர்சனம் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தாலும், இப்போதுதான் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. முதலில் வடிவமைப்பு, அட்டைப்படம் அட்டகாசமாக இருக்கிறது என்றாலும் லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பனுக்கு ஈடாக முடியவில்லை. பக்கங்களை வைத்து பார்த்தால் விலை சற்று அதிகம். ஆனால் உள்ளே இருக்கும் சரக்குக்கு கண்டிப்பாக கொடுக்கலாம்.

மணிகண்டனின் முதல் நாவல், ஆனாலும் மனிதர் அசராமல் அட்டகாச படுத்தி இருக்கிறார். கதை மாந்தர்களை அட்டகாசமாக பிணைத்து இருக்கிறார். பொதுவாக மணிகண்டனின் எழுத்தில் இருக்கும் நக்கலும், நையாண்டியும் இதில் இல்லை, ஏனெனில் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள், அதனால் அவர்கள் வாழ்க்கையில் நகைச்சுவையும், நையாண்டியும் இருக்காது என்று முடிவு செய்துவிட்டார் போலும், கதை முழுவதும் பிழியப் பிழிய சோகம், மிகப் பெரிய நாவலுக்கு வாய்ப்பு இருந்தும் மிகவும் சுருக்கி விட்டார், இதனுடைய தொடர்ச்சி எழுதப்போவதாக சொல்லி இருக்கிறார், இருந்தாலும் இந்த பக்கத்திலேயே நிறைய விஷயங்களை சொல்லாமல் விட்டது போல் தெரிகிறது, ஒரு நிறைவு இல்லாமல் இருப்பது போன்று தோன்றுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாக படித்தால் தனி சிறுகதை போன்று இருக்கவேண்டும் என்று முயற்சித்து இருப்பதாக சொல்லியிருந்தார், ஒரு வேலை அதனால் தான் நாவல் முழுமையின்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன். பல இடங்களில் தொடர்ச்சி இல்லாமல் பிய்த்து போட்டது போல் தொங்குகிறது, ஆனாலும் மணிகண்டனுக்கு மிகப்பெரிய வெற்றிதான், நிச்சயமாக படிக்க வேண்டிய நாவல். சாருவைபோல் முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று படிப்பவன் மண்டையை குழப்பாமல், சாமானியர்களுக்கு புரிவது போல் எளிமையான நடையில் எழுதுவதற்கு தனியாக பாராட்ட வேண்டும்.

ஈரோடு ஆனந்த்

                                          ***

எந்த ஒரு இலக்கியப் படைப்பும் புனைவு, எதார்த்தம் ஆகிய இரண்டு தூண்களின் மீது கட்டமைக்கப்படுகின்றன. இவ்விரண்டும் சரிசமமாக இருக்கும்போதுதான் படைப்பாளியின் நோக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கேனும் நிறைவேறும். ஒன்றை மற்றொன்று மிஞ்சும் பொழுது ஒன்று அந்த படைப்பு அதிகம் சோபிக்காமல் போய்விடுகிறது அல்லது பொது தளத்திற்கு வராமல் அறிவு தளத்திலேயே தேங்கிவிடுகிறது. தங்களின் மூன்றாம்நதி எனும் இந்த புதினத்தில் இவ்விரண்டு அம்சங்களையும் சரிசமமாக கையாண்டிருப்பதற்காய் என் முதல் வாழ்த்துகள்!

தலைப்பைப் படித்தவுடன் இந்த கதை ஏதோ ஒரு அழிவின் விளிம்பில் இருக்கும் நதியைப் பற்றியதாக இருக்கும் என்றெண்ணிய நான், முகவுரையை படித்தவுடன் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்! மூலாதாரமாக இருக்கும் நதிகள் நம்முடைய அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும் மூன்றாம் நதிகளாக உருமாறி இருக்கின்றன.

தாம் சுரண்டப்படுகிறோம் என தெரிந்து தம்முடைய உழைப்பை தம்மை சுரண்டுபவர்களுக்கே தரக்கூடிய நிலையில் இருந்து பார்க்கும்பொழுது நாமும் ஒருவகையில் மூன்றாம் நதிகள்தான்!

பவானியும் லிங்கப்பாவும் சார்ந்திருக்கக்கூடிய சமூகம் வெறும் வாழ்வாதாரத்திற்காக தம்மை சுரண்டலுக்கு உட்படுத்திக்கொள்கிறார்கள்! ஆனால் மெத்த படித்த நம்மைப்போன்றோர் சுரண்டலுக்கு ஆட்படுவதையே ஒருவித கௌரவமாக கருதுகிறோம். இந்த நூலிழை வித்தியாசம்தான் நம் இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி ஓடச் செய்கின்றது.

இன்றைய சமூக சூழலில் இந்த புதினத்தை இந்த அடிப்படையிலிருந்து அணுகுவது எதார்த்தமானதாக இருக்கும் என்ற என் எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறேன்! 
மூன்றாம் நதியாக சித்தரிக்கப்பட்டுள்ள மனிதர்களின் வாழ்வியல் எதார்த்தங்களான, வாழ்வாதாரத்திற்கான போராட்டம், காதல், குடும்பம், காமம், சோகம் போன்றவைகளை பேசி இருப்பது அவர்களும்
மனிதர்கள்தான், எல்லோரைப்போலவும் அவர்களுக்கும் வாழ உரிமை உண்டு எனும் நாம் மறந்துவிட்ட எதார்த்தங்களை நினைவூட்டுகிறது. கதையின் துவக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் அமைந்திருப்பது படிப்பவர்களின் மீது உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது!

இடையிடையே வரும் கதாபாத்திரங்கள் புனைவின் ஓட்டத்திலும், எதார்த்த நிலையை பதிவுசெய்வதிலும் பெரும் பங்காற்றுகின்றன. உமாவின் வருகையும், அதற்கும் பவானியின் தந்தை சொல்லும் காரணங்களும் என்னை ஒருகணம் (பொம்பளை வாசம்) எனும் தங்களின் கதைக்கு இட்டுச் சென்றது. இரண்டு கதைகளும் வெவ்வேறு தளங்களில் நிகழ்ந்தாலும் அவை பதிவு செய்யும் எதார்த்தம் ஒன்றுதான்! பஞ்சகச்ச வாத்தியாரைப் போன்றோர் இருந்ததால்தான் என்னமோ இன்றைக்கு பொது சமூகத்தில் ஆசிரியர்கள் மீது அதிருப்தி உருவாகி இருக்கிறது. தங்களின் கண் முன்னே நிகழும் முறைகேடான செயல்களைக்கூட இன்றைய ஆசிரியர்கள் தட்டிக்கேட்க முடிவதில்லை. ஆசிரியர்கள் மதிப்பிழந்ததற்கு ஆசிரியர்கள்தான் அடிப்படைக் காரணம் என்பதை நான் இதன்மூலம் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

பால்காரர் கதாப்பாத்திரத்தைப் பொருத்தவரை நான் தங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஏன் பால்காரர் தண்ணீர் விற்பதாக சித்தரித்திருக்கிறீர்கள்? இன்றைய சூழலில் தங்களை பால்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் உண்மையில் தண்ணீரைத்தான் விற்கிறார்கள் என்ற எதார்த்தத்தை பதிவு செய்யும் முயற்சியா இது? 

இப்படியாக சில கதாப்பாத்திரங்களை கதைவோட்டத்திற்கு ஏற்றாவாறு படைத்திருப்பது ஒரு தனிச்சிறப்பு. ஐ.டி நிறுவனங்களில் ஒருவரை வேலைக்கு தேர்ந்தெடுக்கும்பொழுது சோதிக்கப்படும் மென்திரன்களில் (Soft Skills) பிரதானமானதான சுய மரியாதை (Self Esteem) என்ற விஷயம் கம்பெனிகளின் இலக்கை அடையும் முனைப்பில் காற்றில் பறக்கவிடப்படுகிறது என்பதை பதிவு செய்திருந்தது தகவல் தொழில்நுட்பத்துறையின் முரணானவற்றுள் ஒன்று. நம் சமூகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் எதிர்மறை தாக்கங்களை போகிற போக்கில் பதிவுசெய்த விதம் அருமை.

லிவிங் டுகெதர் கலாச்சாரமாகட்டும், மனிதநேயமற்ற தொழில் முறைகளாகட்டும், தன் சுய லாபத்திற்காக நிலங்களை அபகரிப்பதாகட்டும் இன்றைய சூழலில் இவைகளை எளிதில் எவராலும் கன்டறிந்துவிட முடியும். பால்காரர் வெட்டப்படும் காட்சியும், லிங்கப்பா பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்படும் காட்சியும், எரிந்த உடலை பவானி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சியும் என்னை அதிகம் பாதித்தன. நேரில் பார்த்திருந்தால் ஏற்படும் ஒருவகை பீதி கலந்த அதிர்ச்சி இந்த காட்சிகளை படித்தவுடன் எனக்கு உண்டானது. அன்றைக்கு முழுவதும் அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது!

நம் பாரம்பரியம் பற்றி வாய் கிழிய பேசும் நாம், நம் கண் எதிரே நிகழும் அநியாயங்களை பொருட்படுத்தாமல் சென்றுகொண்டிருக்கிறோம் எனும் எதார்த்தத்தை இந்த புதினம் வெளிப்படுத்துவதாக நான் உணர்கிறேன். இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது தாங்கள் வெற்றிப்பெற்றுவிட்டீர்கள் என்றே சொல்லலாம்! என்னளவில் நான் உணர்ந்தவைகளை பதிவுசெய்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

தாங்கள் இந்த புதினத்தை எழுதியதற்கும், இன்னமும் எழுத வேண்டும் என்பதற்கும் வாழ்த்துகள் சொல்லும் அதே வேளையில், இந்த படைப்பின் மூலப் பிரதியை எங்களைப் போன்ற விழியிழந்தோருக்கு ஏற்றவகையில் ஆடியோவாகக் கொடுக்க முன்வந்ததற்கு தங்களுக்கு நன்றி. 

- நரேன் நவரசன்

                                                                      **

மசால் தோசை 38 ரூபாய் புத்தகம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் இதனை விரைவாக படிக்க தூண்டியது. அதற்காகவே பெங்களூரில் இருந்து சென்னை சென்று புத்தக கண்காட்சியில் இருந்து வாங்கி வந்து படித்தேன். வாங்கி வந்த அடுத்த நாள் ஆர்வம் தாங்காமல் காலை 6 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். முழு மூச்சில் படித்தும் முடித்து விட்டேன் காலையிலேயே. படித்து முடித்ததும் ஏன் 100 பக்கங்களில் முடித்து விட்டீர்கள் என்றால் தோன்றியது. நானும் பெங்களூரில் வாழ்வதால் எளிதில் காட்சி படுத்தி விட்டேன் உங்கள் கற்பனைகளை. ஆயிரம் ஆயிரம் பவானிகளை தினமும் பார்த்து கொண்டு செல்வதுனாலயே என்னவோ கதை வெகுவாக கவர்ந்து விட்டது. மிக நன்றாக இருந்தது. ஓரே ஒரு சுணக்கம். அந்த பால்காரர் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த செய்யும் பக்கங்களில் சிறிது தொய்வு வந்தது. பொறுமையை அதிகம் சோதித்து. பின் வேகம் எடுத்தது. அந்த பக்கங்களின் வீரியத்தை சற்று குறைத்து இருக்கலாம் என்பது என் கருத்து,,

இது அனைத்தும் என் கருத்து. என் மனப்போக்கு. விமர்சனங்களால் மட்டுமே நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்பதனாலேயே உங்களுக்கு என் விமர்சனம். பொறுமையாக படித்ததற்கு என் நன்றிகள்.

நேரில் சந்திக்கும் காலத்திற்கு காத்து இருக்கிறேன்.

- பிரபு கந்தசாமி

                                                                       **

அன்புள்ள மணி அண்ணனுக்கு,

தங்களின் மூன்றாம் நதி நாவலை நேற்று தான் படித்து முடித்தேன். அதிக பக்கங்கள் கொண்டவை என்பதாலேயே நாவல்கள் என் விருப்ப தேர்வில் பெரும்பாலும் இருக்காது. நீங்கள் நூறு பக்கங்கள் என்று சொன்ன பொழுதே எனக்கு புத்தகத்தின் மீது ஒரு நன்மதிப்பு உண்டானது. 

நகரமயமாதலால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பணம், புகழ் என்னும் மாயைகளுக்காக சூறையாடுகிறது என்பதை கூறும் அழுத்தமான பதிவு. வாழ்த்துக்கள்.

கதையை வெவ்வேறு காலங்களில் நகர்த்திய விதம், ஆவலை தூண்டிய விதம் அழகு. ஆனால் அந்த பால்காரர் போர்வெல் போடும் அத்தியாயம் சற்று சலிப்படைய செய்தது. மேலும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் சொல்லப்படும் சிலிண்டர் திருட்டு நிசப்தம் தளத்தில் வாசித்த ஞாபகம். கடைசி பத்தியில் வரும் கொலைகள் பற்றி கூட தாங்கள் எழுதிய ஞாபகம் வந்தது. 

மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள், தங்கள் எழுத்து பணியும் சேவையும் என்றும் தொடர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

அன்புள்ள,
இரா ஹரிராமன்