Jun 17, 2016

மிரட்டல்

ஓர் அழைப்பு வந்தது. கட்டைக் குரல். அழுத்தமாக வணக்கம் சொல்லி ஆரம்பித்தார்.  தன்னை அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ‘தம்பி...நாலஞ்சு பேர் விவரங்களை அனுப்பி வைக்கிறேன். ஃபீஸ் கட்ட முடியுமா?’ என்றார். அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாகச் செய்ய முடியும் என்றேன். அரசு கல்லூரிதானே என்று கேட்ட போது அவருடைய குரல் சற்றே மாறியது. தெரியாது என்றும் விசாரித்துச் சொல்வதாகவும் சொன்னார். 

‘அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். குறைந்தபட்சம் படித்ததாவது அரசுப் பள்ளியாக இருக்கட்டும். இல்லையென்றால் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்றேன். எல்லோரிடமும் சொல்வதுதான். 

‘அப்படின்னா...செய்ய முடியாதா?’ என்றார். 

‘இப்பவே உறுதி கொடுக்க முடியாது...நிறைய இருக்கு...கிடைக்கிற தகவல்களைக் கொண்டு பயனாளிகளைப் பத்தி விசாரிப்போம். வறுமையான குடும்பம், படிக்க வைக்க முடியாத சூழலில்தான் இருக்கிறார்களா? என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் பரிசீலிக்க முடியும்’ என்றவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. யாரோ எண் கொடுத்திருக்கிறார்கள். தான் கை காட்டும் ஆட்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி அழைத்திருக்கிறார். ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டவுடன் அவருக்கு ஈகோ எட்டிப்பார்த்துவிட்டது.

இதுதான் பிரச்சினை. இப்பொழுது வைத்திருக்கும் அலைபேசி எண்ணையே தூக்கி வீசிவிடலாமா என்று யோசிக்கிறேன். சம்பந்தமேயில்லாதவர்களிடமெல்லாம் கிடைத்திருக்கிறது. தாளிக்கிறார்கள்.

அறக்கட்டளை என்ற பெயரிலான செயல்பாடு மிக எளிமையானது. பணம் வருகிறது. யாரோ ஒரு மனிதர் பயனாளிக்கும் எனக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறவருக்கு அறக்கட்டளையின் செயல்பாடு தெரிந்திருக்கிறது. நாம் சொல்லுகிற பதிலை பயனாளியிடம் சொல்லிவிடுகிறார். இதில் பிரச்சினையே இல்லை. வேறு சிலர் இருக்கிறார்கள். ‘உங்க நெம்பரை அவர்கிட்ட கொடுத்துட்டேன். அவர் பேசுவார்’  என்கிற வகையறா. பிரச்சினையே அவர்களால்தான் வருகிறது. இவர்கள் வெள்ளை வேட்டி மைனர்கள். அலைபேசி எண்ணை வாங்கிக் கொடுப்பதையே மிகப்பெரிய காரியமாக நினைத்துக் கொள்கிறவர்கள். ‘உங்க நெம்பர் கிடைக்குமா?’ என்று கேட்கும் போது யதார்த்தமாக எண்ணைக் கொடுத்தால் இப்படிக் கோர்த்துவிட்டுவிடுகிறார்கள். கண்டவன் வாயில் விழ வேண்டியிருக்கிறது.

மிரட்டத் தொடங்கிவிட்டார். வாழ்க்கையில் எவ்வளவோ அறக்கட்டளைகளைப் பார்த்திருக்கிறாராம். தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றார். அதுவரை பொறுமையாகத்தான் இருந்தேன். ‘அறக்கட்டளைங்கிற பேர்ல உங்களை மாதிரி ஆளுங்க என்ன பண்ணுறீங்க தெரியாதா?’ என்றார். அதற்கு மேல் என்ன பேசுவது? இத்தகைய மனிதர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்ததுதான். பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட வேண்டுமா அல்லது பேச்சை வளர்க்க வேண்டுமா என்றுதான் தெரியவில்லை.

‘முடியாதுன்னு சொல்லலை...விசாரிக்கிறேன்னுதான் சொன்னேன்’ என்றேன்.

‘நான் சொல்லுற ஆளுங்களுக்கு செய்யணும்’ - அதில் ஒரு கட்டளை இருந்தது.

கடுப்பில் ‘இப்படியெல்லாம் பேசறவரு...பேசாம நீங்களே கொடுத்துட வேண்டியதுதானே?’ என்றேன்.

‘உங்களை மாதிரி ஆளுங்களை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு தெரியும்’ என்று மிரட்டுகிற தொனியில் சொன்னார். 

‘ஆனதைப் பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தேன்.

அடுத்தவர்கள் கைகாட்டுகிற ஆட்களுக்கு மனசாட்சிக்கு விரோதமாக ஒரேயொரு ரூபாயைக் கொடுக்க வேண்டிய சூழலும் அழுத்தமும் வருமானால் மொத்தப் பணத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பயந்தும் வளைந்தும் குழைந்தும் அறக்கட்டளை நடத்த வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. அறக்கட்டளை நடத்துவது எனக்குத் தொழில் இல்லை. இதில் சம்பாதித்துத்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்றோ அல்லது குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை. 

இந்தப் பதிவில் யாரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று அந்த மனிதரிடம் என்னுடைய அலைபேசி எண்ணைக் கொடுத்தவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்தால் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். எனக்கு எவனைப் பார்த்தும் பயமில்லை. ஆமாம், எவனைப் பார்த்தும்தான். தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அத்தனை விவரங்களும் நிசப்தம் தளத்தில்தான் இருக்கிறது.  

மடியில் துளி கூட கனமில்லை. ‘போடா ______’ என்று திட்ட ஒரு வினாடி கூடத் தேவைப்படாது. சலசலப்புக்கும் அலட்டலுக்கும் அஞ்சுவேன் என்று நினைத்து அடுத்த முறை அழைத்தால் காறித் துப்பிவிட்டு பெயர் முகவரியோடு அத்தனை விவரங்களையும் பொதுவில் எழுதி நாறடித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவின் கதவைத் தட்டுவது வரைக்கும் என்னால் செய்ய முடியும். நம்பிக்கையில்லையென்றால் முயற்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.