ஆரம்பத்தில் ஐந்து கதைகளுக்கு மட்டும்தான் புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என யோசனையாக இருந்தது. என்னைப் பற்றித்தான் தெரியுமல்லவா? கஞ்சப்பயல். காசுதான் அடுத்தவர்கள் தருகிறார்கள்- கூடுதலாக அனுப்பி வைப்போமே என்று நினைத்த போதுதான் பத்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி போட்டி வைக்கலாம் எனத் தோன்றியது. போட்டியை அறிவித்துவிட்டுச் சென்னை கிளம்பும் போது கூட பத்துக் கதைகள் வந்து சேருமா என்கிற சந்தேகம் இருந்தது. ‘இருநூற்றைம்பது வார்த்தையில் கதை எழுத ஆள் கிடைக்கமாட்டாங்க’ என்று பக்கத்தில் இருக்கும் நண்பர் கூடச் சொன்னார். நல்லவேளையாக அப்படியெல்லாம் ஆகவில்லை. நிறையக் கதைகள் வந்திருந்தன.
கதைகளை ஆங்கிலத்தில் எழுதி பயமூட்டியிருந்தார்கள். தங்கிலீஷில் எழுதி அனுப்பியதையெல்லாம் வாசித்து முடிப்பதற்குள் மூச்சு நின்று வந்தது. ஆங்கிலம், தங்கிலீஷ் உள்ளிட்டவற்றைத்தான் நிராகரிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிரசுரமான பதினெட்டுக் கதைகளுமே எனக்கு ஏதாவதொரு வகையில் பிடித்த கதைகள். அத்தனை பேரையும் க்ரியேட்டிவ் ஆட்களாகத்தான் பார்க்க முடிகிறது. மிகச் சிறிய பரிசுதான் என்றாலும் பதினெட்டு பேருக்குமே மூன்றாம் நதி நாவலின் பிரதியை அனுப்பி வைத்துவிடலாம். குகன் மட்டும் இலங்கையைச் சேர்ந்தவர். அவருக்கு அனுப்ப இயலுமா என்று தெரியவில்லை. அவரிடம் பேசிப் பார்க்க வேண்டும்.
பதினெட்டுப் பேருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். முகவரியை அனுப்பி வைத்தால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையிலிருந்து அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறேன்.
எழுதுவதற்கு படைப்புத்திறன் அவசியமென்றாலும் நமது தலைமுறையில் தொடர்ச்சியான உழைப்பு மட்டுமே நம்முடைய திறமைக்கான இடத்தையும் மரியாதையையும் பெற்றுத் தரும். சோம்பேறித்தனத்தினாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தைச் சொல்லியோ தொடர்ச்சி அறுபடுவது என்பது காலத்தை விரயமாக்குவது போலத்தான். ஒவ்வொரு முறையும் விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.
ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ரா, மனுஷ்ய புத்திரன் என்று சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கக் கூடிய கவனம் பெற்ற எழுத்தாளர்கள் அத்தனை பேரும் மிகத் தீவிரமான உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். விநாயகமுருகன், அபிலாஷ் உள்ளிட்ட அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் சலிப்பில்லாமல் இயங்குகிறவர்கள்தான். இவர்களின் எழுத்து மீதும் அவர்களின் அரசியல் மீதும் அவரவரளவில் எவ்வளவு விமர்சனங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உழைப்பை எந்ந்தவிதத்திலும் உதாசீனப்படுத்த முடியாது. புதிதாக எழுத வருகிறவர்கள் எழுத்து என்னும் உழைப்புக்கு எந்தச் சுணக்கத்தையும் காட்டாத இவர்களைத்தான் முன்னுதாரணங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பேன்.
எழுதிக் குவித்துவிட வேண்டும்.
‘இதெல்லாம் எழுத்தா?’ என்பதை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு வரக் கூடிய வாசகன் கேட்கட்டும். முடிவு செய்வதற்கான உரிமையை அவனுக்குக் கொடுத்துவிடலாம். இப்பொழுது நம்மோடு எழுதிக் கொண்டிருப்பவர்கள் நாம் எழுதுவதைக் குப்பை என்று கூடச் சொல்லிவிட்டுப் போகட்டும். கவலையே பட வேண்டியதில்லை. விருப்பமில்லாதவன் ஒதுங்கிக் கொள்ளட்டுமே! எவ்வளவு மோசமான குப்பையையும் வாசிக்க இங்கே வாசகர்கள் உண்டு. வாசிக்கிறவர்களை மட்டும் பொருட்படுத்தினால் போதுமானது. நம் காலத்தில் நம்மோடு எழுதிக் கொண்டிருப்பவன் நகைப்பதையும் விமர்சிப்பதையும் நினைத்துத் தயங்கினால் எந்தக் காலத்திலும் ஸ்திரமான இடத்தை அடைய முடியாது.
இதை மட்டும்தான் நான் தாரக மந்திரமாக பின்பற்றுகிறேன். அடுத்தவர்களிடமும் இதையேதான் சொல்கிறேன். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எழுதுவதற்காகக் விரதம் கிடந்து தவமெல்லாம் புரிய வேண்டியதில்லை. அப்படிச் சொல்வதெல்லாம் லுலுலாயி. எழுத்து என்பதும் பயிற்சிதான். எழுத எழுத அது தனக்கான வடிவத்தைப் பெற்றுக் கொள்ளும்.
எழுதி எழுதி பயிற்சி இருந்தால் எழுத்து தானாக வரும். நிறைய வாசிக்க வேண்டியிருக்கும். கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். வந்து விழுகிற செய்திகளை மனதுக்குள் குதப்பி நாம் நினைப்பதையும் சேர்த்து நமக்கான மொழியில் எழுதத் தெரிய வேண்டும். அவ்வளவுதான்.
வாழ்த்துக்களும் நன்றியும் அன்பும்.
5 எதிர் சப்தங்கள்:
கவனிக்காமல் விட்டு விட்டேனே .
//‘இதெல்லாம் எழுத்தா?’ என்பதை இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு வரக் கூடிய வாசகன் கேட்கட்டும். முடிவு செய்வதற்கான உரிமையை அவனுக்குக் கொடுத்துவிடலாம். இப்பொழுது நம்மோடு எழுதிக் கொண்டிருப்பவர்கள் நாம் எழுதுவதைக் குப்பை என்று கூடச் சொல்லிவிட்டுப் போகட்டும். கவலையே பட வேண்டியதில்லை. விருப்பமில்லாதவன் ஒதுங்கிக் கொள்ளட்டுமே! எவ்வளவு மோசமான குப்பையையும் வாசிக்க இங்கே வாசகர்கள் உண்டு. வாசிக்கிறவர்களை மட்டும் பொருட்படுத்தினால் போதுமானது. நம் காலத்தில் நம்மோடு எழுதிக் கொண்டிருப்பவன் நகைப்பதையும் விமர்சிப்பதையும் நினைத்துத் தயங்கினால் எந்தக் காலத்திலும் ஸ்திரமான இடத்தை அடைய முடியாது.//
அருமை....நான் தவித்துக் கொண்டிருந்த வேளையில் இதை படிக்கிறேன்... நீங்கள் சொல்வது சரி....
நல்ல கதைகள் வாசகனை தேடிக்கொள்ளும்
என்பார்கள்
எழுதுபவர்களுக்கு உற்சாகம் அளிக்க கூடிய
உங்களது இந்த நல்முயற்ச்சி தொடர வேண்டும்
அன்புடன்
தி.வேல்முருகன்
Dear Mani,
I am a regular reader of u r blog. all u r posts are too good. keep going. i too use Android app. in that, comments not appear and share link is not working.
மணி! இந்த போட்டி வாய்ப்பு இன்னொரு முறை உண்டா?
Post a Comment