யாராவது அழைப்பார்கள். பிரச்சினைகளைச் சொல்வார்கள். நேரில் சென்று பார்த்து விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உள்ளூர் பெரியவர்கள் யாரையாவது அழைத்து அவர்கள் மூலமாக காசோலையை வழங்குவதுதான் வழக்கம். மார்கெட், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கூட காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இடங்களில் நிற்பவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். நிழற்படம் எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லைதான். ஆனால் வருமான வரித்துறையினர் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வைக்கச் சொல்கிறார்கள்.
சனிக்கிழமையன்று ஒரு பள்ளியில் வைத்து காசோலைகளை வழங்கினோம். எளிமையான நிகழ்ச்சி. வகுப்பறையின் கரும்பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். பயனாளிகள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள். இந்நிகழ்வுக்கு விளம்பரம் செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால்தான் நிகழ்வுக்கு முன்பாக இது குறித்து எங்கும் எழுதவில்லை.
பூமணி சிவகங்கைப் பக்கம். திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இரு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன. மாற்று அறுவை சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் செண்டரில் அனுமதித்திருக்கிறார்கள். அவரைப் போலவேதான் பாலமுருகனுக்கும் பிரச்சினை. சிறுநீரகங்கள் பழுது. பாலமுருகன் ஊட்டிக்காரர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் படுத்திருக்கிறார். இருவரையும் சித்த மருத்துவர் சரவணன் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். ஓரளவு பணம் புரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் தேவைகள் இருக்கின்றன. இருவருக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ராஜேந்திரன் கிராம உதவியாளராக இருக்கிறார். இரண்டு குழந்தைகள். திடீரென்று சிறுநீரகங்கள் பழுதடைந்துவிட்டன. மனைவியே சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருக்கிறார். அரசின் காப்பீட்டுத்திட்டம், வெளியில் வாங்கிய கடன், வீட்டை அடகு வைத்துத் திரட்டியது தவிர மேலும் நிதி தேவைப்படுவதாகச் சொன்னார்கள். ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தேன். பத்து அல்லது இருபது முறையாவது அழைத்திருப்பார். ‘வாய் வார்த்தையாகச் சொல்வதை நம்பி போய் மருத்துவமனையில் படுத்துவிட்டு பணம் வந்து சேரவில்லையென்றால் என்ன செய்வது?’ என்ற அவருடைய வருத்தம் அவருக்கு. ‘நீங்க தைரியமா போய் அறுவை சிகிச்சை செய்யுங்க...டிஸ்சார்ஜ் ஆவதற்குள் காசோலை வந்து சேர்ந்துவிடும்’ என்று அம்மாவிடம் சொல்லி நம்பிக்கை கொடுக்கச் சொல்லியிருந்தேன். அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. நன்றாக இருக்கிறார். அவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
நிசப்தம் அறக்கட்டளை தொடங்குவதற்கு ஒருவிதத்தில் தூண்டுதலாக இருந்த நந்தினி இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பத்தொன்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. விடுதிக் கட்டணத்தை யாருடைய பெயரில் காசோலையாக என்று கேட்ட போது அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் விசாரித்துச் சொல்லச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் விசாரித்துச் சொன்னவுடன் மீதமிருக்கும் தொகையை வழங்க வேண்டியிருக்கும்.
அரசுப் பள்ளியில் படித்து 1100க்கும் அதிகான மதிப்பெண்களை வாங்கி கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில் சேரும் மாணவிக்கு கல்லூரி சேர்க்கைத் தொகையான ரூபாய் ஆறாயிரத்து அறுநூற்றைம்பதுக்கான காசோலையை வழங்கினோம்.
சக்திவேல் என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக - ஏழைப் பெற்றோரின் மகன் - இப்பொழுதுதான் ப்ளஸ் டூ முடித்திருக்கிறான். விபத்தில் கால் முறிந்திருக்கிறது. கல்லூரி எதிலும் சேரவில்லை. எழுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. ஐம்பதாயிரம் ரூபாயைக் கட்டிவிட்டார்கள். இருபதாயிரம் ரூபாயை மருத்துவமனையில் கடனாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்திருக்கிறோம்.
இவை தவிர கோவை சி.ஐ.டி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஹரிஹரன் என்ற மாணவனுக்கு- ஹரியின் அப்பா டெய்லராக வேலை செய்வதவர் சமீபத்தில் இறந்து போனார்- படிப்பை நிறுத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு கல்லூரிப் படிப்புக்காக இருபத்தேழாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.
குழந்தை வைபவ் கிருஷ்ணா பற்றி நிசப்தம் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் குழந்தையின் மாதாந்திர பராமரிப்புச் செலவுக்காக (மாதம் இரண்டாயிரம் ரூபாய்) பனிரெண்டு காசோலைகள் பின் தேதியிட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அவர்கள் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள் திரு. சரவணன், திரு. குமணன், திரு. லிங்கராஜ், திரு. அரசு தாமஸ், திரு. கோடீஸ்வரன், திரு. வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வுக்கு பார்வையாளர்கள் என்றால் அந்தப் பள்ளியின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக் குழந்தைகள் மட்டும்தான். அவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இந்த நிகழ்ச்சி அமையட்டும் என்றுதான் பள்ளியின் தாளாளர் ஜவகர் கேட்டிருந்தார். அப்படித்தான் அமைந்தது.
இன்று காலையில் ஒரு நண்பர் அழைத்து ‘நீங்க குறைவான நபர்களுக்கு பெரிய பெரிய தொகையாகக் கொடுப்பதற்கு பதிலாக நிறையப் பேருக்கு சின்னச் சின்னத் தொகையா கொடுங்க...பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் கவனிப்பாங்க’ என்று சொல்லி இன்று பத்திரிக்கையில் வந்திருந்த வேறொரு அறக்கட்டளை பற்றிய செய்தியைச் சுட்டிக் காட்டினார். பெரிய கும்பிடாக போட்டு இணைப்பைத் துண்டித்தேன். இப்படி நிறையப் பேர் புரிந்து கொள்ளாமலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தவறாகச் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய உயரம் நமக்குத் தெரியும் அல்லவா? அலுவலகம் அமைத்து பணியாளர்களை நியமனம் செய்து அறக்கட்டளையின் செயல்களைச் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.
நம்மால் முடிந்த அளவுக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தால் போதும். திரளானவர்கள் கவனிக்கக் வேண்டியதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கவனம் கிடைத்தால் என்ன கிடைக்கும்? கூடுதலாக நன்கொடையாளர்கள் கிடைப்பார்கள். கோடிக்கணக்கான ரூபாயைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுவது சாதாரணக் காரியமில்லை. பணம் சேரச் சேர பொறுப்பும் சுமையும் அதிகமாகிவிடும்.
இப்படி மெதுவாகவே செய்து கொண்டிருப்போம். எவ்வளவு பயனாளிகளுக்குச் செய்கிறோம் என்பது முக்கியமேயில்லை. குறைந்த பயனாளிகளாக இருந்த போதும் அவர்களின் சுமையை இறக்கி வைக்க முடியுமா என்று மட்டுமே பார்க்கலாம். அதுதான் நோக்கம். இந்த நோக்கத்தில் இருந்து எக்காலத்திலும் பிறழ வேண்டியதில்லை.
2 எதிர் சப்தங்கள்:
மணி,
சித்தமருத்துவர் சரவணன் மொடச்சூர் தாண்டி வடுகபாளையத்தில் உள்ளவரா?
மகிழ்ச்சி திரு மணிகண்டன்
Post a Comment