Jun 29, 2016

யாசின் அக்கா

அவிநாசியில் சித்தி வீடு இருக்கிறது. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகள் அங்கேதான் கழியும். சித்தி வீட்டுக்குப் பின்னால் ஒரு இசுலாமியக் குடும்பம் இருந்தது. அம்மா இல்லாத குடும்பம். இரண்டு மகள்களும் ஒரு மகனும் அந்தப் பெரியவருக்கு இருந்தார்கள். மூத்த மகள் யாசின் அக்கா. கடைசிப் பையன் சையத் இப்ரஹிம். என்னை விட மூன்று வயது கூடுதல். நடு அக்கா பெயர் மறந்துவிட்டது. பெரியவர் அவிநாசியில் ஒரு மளிகைக்கடையில் வேலையில் இருந்தார். சைக்கிள் வைத்திருந்தார். அதை எடுத்துக் கொண்டு அதிகாலையில் கிளம்பினால் இரவுதான் வீடு திரும்புவார். யாசின் அக்கா பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவரிடம்தான் மொத்த வீட்டுப் பொறுப்பும் இருந்தது.  அழகு என்பதை நான் முதன் முதலாக புரிந்து கொண்ட முகம் அது. பளீர் வெள்ளை. அளவாகச் சிரிப்பார். அக்கா என்றுதான் அழைப்போம் ஆனால் ஒருவகையிலான ஈர்ப்பு இருந்தது. எப்பொழுதும் என்னுடனேயே அவர் விளையாட வேண்டும். அணிகளாகப் பிரிந்து விளையாடும் போது அந்த அக்கா என்னை அவரது அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசைகள் இயல்பாகவே இருந்தது. ஆசைக்கு மாறாக ஏதாவது நடக்கும் போது பொருமித் தள்ளிவிடுவேன். எதற்காகப் பொருமுகிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருவேளை அந்த அக்காவுக்கு தெரிந்திருக்கலாம். அதற்கும் அதே அளவில்தான் சிரிப்பார். 

மூன்றாம் வகுப்பு விடுமுறையில் சித்தி வீட்டில் இருந்த போதுதான் யாசின் அக்கா காணாமல் போனார். அன்றைய தினம் மட்டும் பரபரப்பாக பேசினார்கள். யாசின் அக்காவின் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று தடுத்து வைத்தார்கள். பிறகு எங்களைப் போன்ற சிறியவர்களுக்குத் எதுவும் தெரியக் கூடாது என்று மறைத்தார்கள். என்னதான் முயற்சி செய்தும் சரியான விவரம் தெரியவில்லை. அந்த அக்கா யாருடனோ ஓடிப் போனதாகவும், யாரோ கொலை செய்துவிட்டதாகவும் என்று விதவிதமாகப் பேசினார்கள். அத்தனையும் அரசல் புரசலான உரையாடல். பெரியவர் அதன் பிறகு கோபிக்கு குடி மாறினார்.  சையத் எங்களுடன் விளையாடுவான் என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவனை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்த்தார்கள். எப்பொழுதாவது சந்தித்துக் கொள்வோம். அப்பா மட்டும் அவ்வப்போது பெரியவரை மார்கெட்டில் சந்தித்ததாகச் சொல்வார். தக்காளிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். 

சையத்தின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக அவிநாசி சித்தப்பா கடிதம் அனுப்பிய பிறகு அவனைப் பார்ப்பதற்காக நானும் அப்பாவும் சென்றிருந்தோம். உருக்குலைந்து போயிருந்தான். மந்திரித்த கயிறுகளைக் கட்டிவிட்டிருந்தார்கள். கழுத்தில் பெரிய பட்டையான தாயத்தைக் கட்டியிருந்தான். அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். நிலத்தை நகங்களால் கீறிக் கொண்டிருந்தான். அப்பாவும் நானும் டிவிஎஸ் 50யில் சென்றிருந்தோம். வண்டி மீது வந்து அமர்ந்து கொண்டான். பெரியவர் வந்து அவனை வீட்டுக்குள் இழுத்துச் செல்வதற்கு படாதபாடுபட்டார். 

சையத் ஏதோ பேச விரும்புகிறான் என்று தெரிந்தது. அவ்வப்போது சிரித்தான். எனக்கு பயமாக இருந்தது. எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் போய்விடலாம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிளம்புவதற்கு முன்பாக அப்பாவிடம் பெரியவர் அழுதது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. அப்பா பத்தோ அல்லது இருபதோ பணம் கொடுத்தார். அவர் வாங்கிக் கொள்ளவில்லை. நடு அக்கா குறித்துக் கேட்ட போது மேட்டுப்பாளையத்தில் அவரது தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொன்னார். எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டேன். அடுத்த சில மாதங்களில் வீட்டில் மின்சார வயரை பற்களில் கடித்து சையத் இறந்து போனான்.

அம்மாவும் அப்பாவும் இழவுக்குச் சென்று வந்தார்கள். பெரியவர் உடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஏனோ வெறுமையாக உணர்ந்தேன். 

சற்றே வளர்ந்த பிறகு மார்கெட்டுக்குச் செல்லும் போதெல்லாம் பெரியவரைப் பார்ப்பேன்.  அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதுவும் பேசிக் கொண்டதுமில்லை. யாசின் அக்காவுக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி மட்டும் ஓயாமல் அலைந்து கொண்டேயிருந்தது. சித்தியிடம் எப்பொழுது கேட்டாலும் ‘ஆளாளுக்கு ஒன்னு சொல்லுறாங்க’ என்றுதான் சொல்வார். கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் பெரியவரிடம் முதன்முறையாகப் பேசினேன். தக்காளியை மூட்டைகளிலிருந்து பிரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். அழுக்கேறிய ஜிப்பாவும் லுங்கியும் அணிந்திருந்தார். அவிநாசி பாய் என்று கேட்டால் அவரைப் பற்றிய அடையாளம் சொல்வார்கள்.

என்னைப் பற்றிய விவரங்களைச் சொன்ன பிறகு ‘நல்லா இருக்கியா? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? சித்தி வீட்டுக்கு போனீங்களா?’ என்றெல்லாம் கேட்டார். அப்பொழுது அவர் தனியாகத்தான் வசித்தார். அவரே சமைத்துக் கொண்டார். அவ்வப்பொழுது கடைகளில் சாப்பிட்டு வந்தார். அவரிடம் யாசின் அக்கா பற்றிக் கேட்டேன். அவருக்கு அது குறித்துப் பேச விருப்பமேயில்லை. வேறு என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. சையத் ஏன் அப்படி ஆனான் என்றேன். அக்கா செத்த பிறகு தனியாகவே இருந்ததும் அந்தச் சம்பவம் அவனுக்குள் உருவாக்கியிருந்த அழுத்தமும் அவனது மனநிலையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அவன் தனக்குத் தானே பேசத் தொடங்கிய காலத்திலேயே கவனித்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேர உழைப்பைக் கோரும் பெரியவரின் வேலைக்கு இடையில் சையத்தை அவரால் கவனிக்கவே முடியவில்லை. பள்ளிக்கூடம் செல்லாமல் அவன் முரண்டு பிடித்த போது அடித்திருக்கிறார். பிறகு விட்டுவிட்டார். அவன் தனியாகச் சுற்றி எதை எதையோ மனதுக்குள் உழப்பி சீரழித்துக் கொண்டான். வீட்டில் கயிறில் கட்டி வைத்தார். யாராவது வீட்டில் இருக்கும் போது மட்டும் அவிழ்த்துவிட்டார்.

அதன் பிறகு ஒன்றிரண்டு முறை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு தொனியில் யாசின் அக்கா பற்றிக் கேட்பேன். வெகு தயக்கத்திற்குப் பிறகுதான் யாசின் அக்காவைப் பற்றிச் சொன்னார். அவரைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். பொள்ளாச்சி தாண்டி கேரளாவின் எல்லைக்குள் சீரழிக்கப்பட்டு வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இவருக்குத் தகவல் கிடைத்துச் சென்ற போது உடல் சிதைந்து கிடந்திருக்கிறது. அடையாளம் காட்டி அங்கேயே அடக்கம் செய்துவிட்டு வந்திருக்கிறார். பெரியவரின் பூர்விகம் நாகூர் பக்கம். யாருக்கும் தகவல் தெரியாது. இந்தச் சம்பவம் ஏதோ ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. வழக்கு நடத்துகிற தெம்பும் வசதியும் பெரியவருக்கு இல்லை. மகனை அழைத்துக் கொண்டு கோபி வந்துவிட்டார். அதோடு சரி.

கிட்டத்தட்ட குடும்பமே முடிந்துவிட்டது. ஓ.ஏ.பி பணம் மாதாமாதம் வந்து கொண்டிருந்தது. வாங்கிக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர் சில வருடங்களுக்கு முன்புதான் இறந்தார். உள்ளூர் முஜி சொன்ன பிறகுதான் அவர் இறந்து போனது தெரியும். தனது கடைசிக் காலத்தில் யாசின் அக்காவின் அளவான சிரிப்பை நினைத்திருக்கக் கூடும். சையத் இப்ரஹிமின் கனவுகளை நினைத்திருக்கக் கூடும். அவரது மனைவியின் ஆசைகளை அசை போட்டிருக்கக் கூடும். எதுவுமேயில்லாமல் வெறுமையாக காலத்தை ஓட்டியிருக்கக் கூடும். மரணச் செய்தியைக் கேட்டவுடன் ‘ப்ச்..பாவம்’ என்று மட்டும் சொல்லத் தோன்றியது. வேறு என்ன சொல்வது?

குற்றவாளிகளும் பாதிக்கப்படுகிறவர்களும் எல்லா மதங்களிலும்தான் இருக்கிறார்கள். எல்லா சாதியிலும்தான் இருக்கிறார்கள். குற்றத்தை குற்றமாக மட்டும் பார்ப்பதைத் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டோம். எல்லா குற்றங்களுக்கும் மதச் சாயமும் சாதி முத்திரையும் குத்திக் கொண்டிருக்கிறோம். எவன் எங்கே சாவான் எப்படி குளிர்காயலாம் என்கிற அபத்தமான அரசியலை ஆளாளுக்குப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கொன்றவன் குற்றவாளி. அவன் எவனாக இருந்தாலும் பிடித்து நொங்கு எடுக்கச் சொல்லி கோருவோம். செத்தவன் மனிதன். அவன் யாராக இருந்தாலும் அவனுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவோம். இப்படியெல்லாம் கோரிக்கை வைப்பது நகைச்சுவையாக மாறிவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போதே திகிலாக இருக்கிறது.