Jun 8, 2016

ஊழிற் பெருவலி யாவுள

"இந்த உலகம் இரக்கத்திற்குரிய ஏழைமையால் வதைக்கப்படும் உலகம்" ‪- ‎மூன்றாம் நதி‬ க்கு...

நகரம் பெருகிக் கொண்டிருக்கிறது- ஐடி பார்க், சிப்காட், மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணைக்கோள் நகரம், டவுன் ஷிப், லெக்ஷரி வில்லாஸ், மெட்ரோ இரயில் என நாள்தோறும்.

பருவம் பொய்த்த மழை எத்தனை விவசாயிகளைக் கொன்றிருக்கிறது, ஒரு பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கும் முன் எத்தனை உயிர்களைக் காவு வாங்குகிறது, தேற்ற ஆளற்ற வெறுமை உமிழும் பதின்மம் எத்தனைக் கொடுமையானது, நாம் காண விழையாத அசட்டையாய் இருந்துவிட்ட மனிதர்களின் வாழ்வோட்டம் எத்தகையது, நெருங்கியடித்துப் பெருகிக் கொண்டிருக்கும் பெரு நகரத்தின் நீர்த்தேவைகளை எப்படித் தீர்க்கப் போகிறோம், ஒரு வெளிச்சத்தை நோக்கி இருளைக் கடக்கும் பாதை எத்தனை நீளமானது. என சின்னச் சின்னக் கேள்விகளை எழுப்பி பெரிய கேள்வியை வைத்திருக்கிறது இந்த நாவல்.

நிசப்தம் அறக்கட்டளை வாயிலாக விளிம்பு நிலை மனிதர்களோடு நேரடியான அனுபவம் உண்டென்பதை முகவுரையிலேயே விவரித்திருக்கிறார் வா.மணிகண்டன். அதன்மூலம் நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே புகுந்து அவர்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக இந்த நாவலின் மூலம் பதித்திருக்கிறார்.

பொட்டு மழைக கூடப் பெய்யாத வடதமிழக எல்லையிலிருந்து அமாசை, மனைவி அருக்காணியைக் கூட்டிக்கொண்டு மகள் பவானியைத் தூக்கிக்கொண்டு பெங்களூர் பயணப்படுகிறான்.

வளர்ந்து வரும் கட்டிடம் ஒன்றில் சித்தாள் வேலை, சிமெண்ட் கொட்டகையில் ராப்படுக்கை. வெறும் சிமெண்ட் மூட்டைத் திருடுவதற்காக அருக்காணி திருடர்களால் கொல்லப்படுகிறாள். இதனிடையே பவானியின் பள்ளிக்காலம், பதின்மம், சித்திக் கொடுமை, அன்பிற்கான ஏக்கம் என விரிகிறது. பவானியின் பார்வையிலேயே மேல்தட்டு / கீழ்த்தட்டு வர்கத்தின் கலாச்சார / பொருளாதார முரண்பாடுகளைச் சொன்னவிதத்தில் அழகு.

ஒரு கையறு சுழ்நிலையில் விடப்பட்ட பவானி, பால்க்காரரின் உதவி அவளுக்கான பொறுப்புகள் என்று நீள்கிற கதை அதற்குப்பிறகு விறுவிறுவென செல்கிறது. நம் கண்களுக்குப் புலனாகாத தண்ணீருக்கான நுண் அரசியல், தம் இடத்தைத் தக்கவைக்க அல்லது அடுத்த இடத்திற்கு முன்னேற கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் ஆதிக்கப் பண முதலைகளின் விளையாட்டு.

பணமும் அதிகாரமும் எதனை வேண்டுமானாலும் செய்யும், செய்தும் இருக்கிறது.

நாவலை முன்னிறுத்தி:-

கதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக ஆசிரியர் காட்டும் இருளும் வெளிச்சமும் கிறங்க வைக்கிறது. ஆனந்த விகடனில் தொடராக வந்த "வட்டியும் முதலும்" ஏற்படுத்திய பாதிப்புகளை மொத்தமாகக் கொட்டியிருக்கிறது இந்த நாவல்.

நாவலின் இடையில் அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள் ஆசிரியரால் இணைக்கபட்டிருக்கிறது. ஒருவகையில் இந்த மேற்கோள் பிந்நாளில் நாயகிக்கு ஆசிரியர் சொல்லக்கூடிய குறியீடாகவும் தோன்றியது.!

"இரண்டாவது மனிதன் உள்ளவரை அனாதைஎன்று எவரும் இல்லை"

இந்த மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும். ஒரு கனத்த மனத்துடன் ஏழாம் உலகம், எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி, மூன்றாம் நதி... இப்படி இந்த நாவலை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறேன். வேறென்ன செய்ய.?

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்" - குறள்-380

பவானிக்கு என் அன்பு; குழந்தைக்கு என் முத்தம்; வா.மணிகண்டன் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.!

# நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

(ஃபேஸ்புக்கில் சங்கவி எழுதிய குறிப்பு)