Jun 17, 2016

சர்க்கரையும் கொலஸ்ட்ராலும் உணவும்

ஒன்றரை வருடம் முன்பாக உடல் பரிசோதனை செய்த போது கிட்டத்தட்ட சர்க்கரை நோயைத் தொட்டிருந்தேன். குருதியில் மூன்று மாத சராசரி சர்க்கரைக் கணக்கு 5.7% ஆக இருந்தது. 5.5 வரைக்கும் இருக்கலாம். அதற்கு மேல் செல்லச் செல்ல சர்க்கரை நோயை நெருங்குகிறோம் என்று அர்த்தம். பயம் வந்துவிட்டது. அதன் பிறகு கடினமான பத்தியத்தின் வழியாகவே இரண்டு மாதங்களில் 5.5 ஆக மாறியது. என்ன பத்தியம் என்பதை முன்பொரு முறை எழுதியிருக்கிறேன். சர்க்கரையின் அளவு குறைந்திருந்தாலும் கொலஸ்டிரால் அளவு சற்றே கூடுதலாகத்தான் இருந்தது. கொலஸ்டிராலும் சர்க்கரையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்கிறார்கள். ஒன்று கூடினால் இன்னொன்றும் கூடும்.

மருத்துவர் சிவசங்கர் நல்ல நண்பர். மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை அவரிடம் கேட்டுக் கொள்வேன். Free consulting. எவ்வளவுதான் மோசமான அளவாக இருந்தாலும் ‘ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க’ என்பார். இன்னொரு மருத்துவ நண்பர் அருள்மோகன் சற்று அலாரம் வகை. ‘இப்படியே விட்டா பிரச்சினை ஆகிடும்’ என்றார். பெங்களூர் மருத்துவர் ‘வேணும்ன்னா அரை மாத்திரை எடுத்துக்க ஆரம்பிக்கலாம்’ என்றார். எடுத்த உடனேயே மாத்திரையிடம் சரணாகதி ஆவதில் விருப்பமில்லை. அதே சமயம் மிகக் கடுமையான உணவுப் பத்தியமும் எனக்கு ஒத்து வரவில்லை. உடல் மெலிகிறது என்பதைவிடவும் கேள்வி கேட்பவர்களிடம் பதில் சொல்லித் தாவு தீர்ந்தது. அதைவிடவும் வாரந்தோறும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. போகிற இடத்திலெல்லாம் குதிரைவாலியும், திணையும் சாத்தியமில்லை. உணவு விடுதிகளில் எண்ணெய் இல்லாமல் பதார்த்தம் வேண்டும் என்றெல்லாம் கேட்க முடிவதில்லை. 

பேலியோ உணவு முறையை நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். அதுவும் அவ்வளவு எளிதானதாகத் தெரியவில்லை. ஆக, மருந்து மாத்திரையில்லாமல் உடலைப் பேண ஒரே வாய்ப்புதான் இருந்தது - வாழ்க்கை முறை மாற்றம். 

நன்றாகத் தூங்கத் தொடங்கினேன். முன்பெல்லாம் தூக்கத்தில் ஒழுக்கம் இருக்காது. அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரைக்கும் விழித்திருப்பது உண்டு. சில நாட்களில் ஒன்பது மணிக்கே தூங்கிவிடுவேன். தாறுமாறான உறக்க முறையைச் சரி செய்தாலே உடல் பாதி தப்பித்துவிடும். இப்பொழுது எப்படியிருந்தாலும் ஒரு மணிக்கு மேல் விழித்திருப்பதில்லை. ஏழு மணிக்கு மேல் தூங்குவதில்லை. நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் நல்ல தூக்கம். அந்தச் சமயத்தில் திருடன் வந்தாலும் கூட காது கேட்காது. இரவு பதினொரு மணிக்கே தூங்குவது இன்னமும் உசிதம் என்கிறார்கள். ஆனால் அதிகாலையில் எழுந்து அமர்ந்தால் மூளை அதீதமான சுறுசுறுப்புடன் இருக்கிறது. யோசிக்க முடிவதில்லை. இரவு பத்து மணிக்கு மேல் நிலவுகிற மந்தத் தன்மையில்தான் எழுதுவதற்கான மனநிலை உண்டாகிறது. 

காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் இரண்டு பூண்டுப் பற்களை- மெல்ல முடிவதில்லை- காரம் அதிகம். வாயில் தண்ணீரை நிரப்பி உள்ளே போட்டு மெதுவாகக் குதப்பி அப்படியே விழுங்கிவிடுகிறேன். கொலஸ்டிராலின் கட்டுப்பாட்டில் இது கனவேலை செய்கிறது என்று நம்புகிறேன். இடையில் நடைப்பயிற்சி மேற்கொண்டதுண்டு. இப்பொழுது அதைத் தொடர்ச்சியாகச் செய்வதில்லை. ஆனால் அலுவலக நேரத்தில் ஏதாவதொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துவிட்டு வருகிறேன். வேகமாக நடப்பேன். எதிரில் அழகான பெண்கள் வரும் போது மட்டும் நடையின் வேகம் சற்று குறைகிறது. அதைத் தவிர்க்கவே முடிவதில்லை. கண்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்கட்டுமே என்று விட்டுவிடுகிறேன்.

மற்றபடி உணவுப் பழக்கத்தில் சர்க்கரையின் அளவு குறைவு ஆனால் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறேன். அரிசியைக் குறைத்துவிட்டு காய்கறி நிறையச் சேர்த்துக் கொள்கிறேன். சாம்பார், பருப்பு போன்றவற்றை ஊற்றிப் பிசையும் போது முன்பெல்லாம் மேல்மட்டத்தில் நிற்கும் நீரை மட்டும் வடித்து எடுத்து ஊற்றுவேன். இப்பொழுது அடியில் கிடக்கும் வண்டலோடு எடுத்து ஊற்றிப் பிசைந்து உண்கிறேன். நெய் சேர்த்துக் கொள்வதுண்டு. அசைவம் உண்டு. தயிர் உண்டு- மிகக் குறைவாக. காலையில் வயிறு நிரம்பும் அளவுக்கு உண்பதும் மதியம் மிகச் சிறிய டப்பாவில்-ஒரேயொரு டப்பா சாதம்+ஏதாவது குழம்பு, இரவில் இரண்டு தோசைதான் உணவு.

காலையில் ஒரு முறை காபி சேர்த்துக் கொள்கிறேன். தினசரி மாலையில் ஒரு எலுமிச்சை டீ. 

அம்மாவுக்கு சர்க்கரை உண்டு. அம்மாவின் அப்பாவுக்கு அம்மாவுக்கும் சர்க்கரை இருக்கிறது. அம்மாவின் அப்பா இருதயக் கோளாறினால் இறந்தார். குடும்ப ஜீன் வரலாறு எடுத்துப் பார்த்தால் பேராபத்து இருக்கிறது. அதனால்தான் சற்று பயம். ஆரம்பத்திலிருந்தே சரியான வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் அமைத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். இதை வெளிப்படையாக எழுத வேண்டியதில்லைதான். ஆனால் யாராவது ஒருவருக்கு நிச்சயமாகப் பயன்படும். சரியான உணவும் வாழ்க்கை முறையுமே பெரும்பாலான ஆரம்பகட்ட பிரச்சினைகளிலிருந்து நம்மை விடுவித்துவிடும்.

இதை போகிற போக்கில் சொல்லவில்லை. தரவுகள் இருக்கின்றன. ஒவ்வோரு முறையும் செய்த ரத்தப் பரிசோதனை முடிவுகளும் இங்கே இருக்கின்றன. மறைக்க எதுவுமில்லை. சரி பார்த்துக் கொள்ளலாம்.

டிசம்பர் 2015:


மார்ச் 2015:


ஜூன் 2016:

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால்  அந்த உணவு முறை இந்த உணவு முறை என்று உடலை வருத்திக் கொள்ள வேண்டியதில்லை. பேலியோ மாதிரியான உணவு முறைகளைத் தவறு என்று சொல்லவில்லை. அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் ‘Work like a slave; Dine like a King' என்ற சித்தாந்தத்தில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இந்த ஒன்றரை சாண் வயிற்றுக்குத்தானே இவ்வளவு உழைப்பு? நாம் செய்து கொண்டிருக்கிற அத்தனை செயல்களுமே நம் வயிறும் நம் சந்ததிகளின் வயிறும் காய்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே? அதை ஏன் வலுக்கட்டாயமாகக் காயப் போட வேண்டும்? விருப்பமான எல்லாவற்றையும் உண்ணலாம். ஆனால் வகை தெரிந்து, தொகை புரிந்து உண்ணலாம். அவ்வளவுதான்.

இளம் வயதுக்காரர்களாக இருந்தால் வருடம் ஒரு முறையாவது முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளலாம். ‘நமக்கு ஒன்றுமே இல்லை’ என்று முரட்டுத்தனமாக நம்ப வேண்டியதில்லை. அதுதான் மிகப்பெரிய மூட நம்பிக்கை. முப்பதுகளைத் தாண்டியிருந்தால் நிச்சயமாக ஏதாவதொரு சிறு பிரச்சினையாவது இருக்கும். பிரச்சினை எதுவுமில்லையென்றால் சந்தோஷம். இருந்தாலும் வருந்தத் தேவையில்லை. உடலும் ஒரு எந்திரம்தானே? ஆரம்பத்திலேயே எந்தப் பகுதியில் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழத் தொடங்கினால் பெரும்பாலான மருத்துவச் சிக்கல்களிலிருந்து தப்பித்துவிடலாம். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிற ஈருளிக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்கிறோம். நம் உடலுக்கு என்ன செய்கிறோம்?

ஒருவருடைய உணவுப்பழக்கமும் வாழ்க்கை முறையும் அத்தனை பேருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நம்மை நாமே சற்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இளம் வயதாக இருந்தால் இத்தகைய பரிசோதனை முயற்சிகள் சாத்தியம். ஒரு கட்டத்திற்கு மேல் மருந்துகளை நம்பத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும். அதனால்தான் - இளம் வயதில் இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதைவிடவும் நம் உடலைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம்.