நேற்றிரவு பெங்களூரில் நல்ல மழை. குளிர்ந்து கிடந்தது. ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பி சென்னை பேருந்தைப் பிடித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். மழை நின்ற பிறகு கிளம்பலாம் என்று படுத்து நடுராத்திரியில் அடித்துப் பிடித்து எழுந்தால் மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் ‘நடுராத்திரியில போய் என்ன பண்ணுற? காலையில போலாம்...போய் படு’ என்று கருணையே இல்லாமல் சொல்லிவிடுவார்கள். சலனமேயில்லாமல் வேணியை மட்டும் எழுப்பிச் சொல்லிவிட்டு பையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நடக்கும் போதும் வானம் சிலிர்சிலிர்த்துக் கொண்டேதான் இருந்தது. ஒரு போனாம்போக்கி பேருந்துதான் கிடைத்தது. ஒசூரிலிருந்து 181 ரூபாய் டிக்கெட். இருநூறு ரூபாயைக் கொடுத்தேன். இருபது ரூபாயை நடத்துநர் கொடுத்தார். ‘ஒரு ரூபா சில்லரை இல்லை..ஏதாச்சும் கடையில நிறுத்துவீங்களா?’ என்ற போது ‘பரவால்ல சார்’ என்றார். ஆச்சரியமாக இருந்தது.
எப்பொழுதுமே மாதத்தின் முதல் வார இறுதியில் பெங்களூரிலிருந்து கிளம்பும் பேருந்துகள் நிரம்பி வழியும். சாஃப்ட்வேர் ஆசாமிகள் ஊருக்குக் கிளம்பிவிடுகிறார்கள். பெங்களூர் பற்றிய ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு. இந்த ஊரில் கல்லைத் தூக்கி மேலே வீசினால் ஒன்று தெருநாய் மீது விழும் இல்லையென்றால் ஏதாவதொரு மென்பொருள் ஆசாமி மீது விழும். நேற்று பேருந்துக்குள் யாரை எழுப்பி அடித்தாலும் அது மென்பொருள் ஆசாமியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு நிறையக் கோபம் வரும். பதற்றத்தில் நடுங்குவார்கள். ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்யக் கையலாகாது. டிசைன் அப்படி. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
இருபது ரூபாயை வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் தூக்கம்தான். இரவு இரண்டு அல்லது மூன்று மணி இருக்கும். டொம்மென்று சப்தத்தில்தான் எழுந்தேன். சுற்றிலும் வாகனங்கள் நெருக்கிக் கிடந்தன. கண்களுக்குள் மசமசவென்றிருந்தது. ‘கேனத் ****’ என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடி ஒருவர் ஓட்டுநரை இறங்கச் சொல்லிக் கொண்டிருந்தார். என்னவோ நடந்திருக்கிறது என்று இறங்கிய போது இன்னும் சிலரும் இறங்கினார்கள். சற்று முன்பாக லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. வாகன நெரிசல், அதனால் மற்ற வாகன ஓட்டிகள் தாங்கள் வந்த பாதையிலேயே திருப்பிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேருந்து ஓட்டுநரும் பின்பக்கமாக எடுத்த போது பின்னால் 'U' டர்ன் அடித்து திருப்பி நின்றிருந்த ரிட்ஸ் வண்டியில் மோதியதில்தான் அந்த டொம்மும். அந்த கேனத்***** -ம்.
ஒரு ரூபாயை பயணிக்கு இனாமாகக் கொடுக்கும் நடந்துநருக்கு எங்கே தைரியம் இருக்கப் போகிறது? பம்மிக் கொண்டிருந்தார். ஓட்டுநரும் அவரைப் பிடித்துக் காய்ச்சினார். ‘நாதேரிப்பயலே..பின்னாடி வண்டி நிக்கிறதை பார்க்காம என்ன __________ ____________ __________’ - இப்படி ஏகப்பட்ட __________ வார்த்தைகள். நடத்துநர் அமைதியாகவே நின்றிருந்தார்.
யார் குறுக்கே சென்றாலும் மகிழ்வுந்துக்காரர் திட்டினார். ‘உள்ள குழந்தை இருக்கு..ஏதாச்சும் ஆயிருந்தா?’ என்றார். யாரும் பதில் சொல்லவில்லை. கடைசியில் பஞ்சாயத்து முடிந்து ஐந்தாயிரம் ரூபாயை நடத்துநர் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். பெங்களூரின் குளிர்ச்சி வடிந்து வேலூரின் வெக்கை உடல் எங்கும் வியாபித்திருந்தது. இரண்டு மூன்று மணி நேரங்கள் கரைந்திருந்தன.
யார் குறுக்கே சென்றாலும் மகிழ்வுந்துக்காரர் திட்டினார். ‘உள்ள குழந்தை இருக்கு..ஏதாச்சும் ஆயிருந்தா?’ என்றார். யாரும் பதில் சொல்லவில்லை. கடைசியில் பஞ்சாயத்து முடிந்து ஐந்தாயிரம் ரூபாயை நடத்துநர் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். பெங்களூரின் குளிர்ச்சி வடிந்து வேலூரின் வெக்கை உடல் எங்கும் வியாபித்திருந்தது. இரண்டு மூன்று மணி நேரங்கள் கரைந்திருந்தன.
அதன் பிறகு தூக்கம் வரவில்லை.
வருடாவருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு என்று கிளம்பி வந்துவிடுகிறேன். இடையில் ஏகப்பட்ட முறை வந்து போனாலும் புத்தக் கண்காட்சிக்கான பயணம் குதூகலமானது. ஒரே மாதிரியான இரவு நேர பேருந்துப் பயணம்தான். ஆனாலும் அலுப்பதேயில்லை. புத்தகக் கண்காட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. ஆனால் ஏதோ ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சென்னையைவிடவும் பெங்களூர் பலவிதங்களில் அற்புதமான ஊர் என்பார்கள். எனக்கென்னவோ சென்னைதான். Happening place என்று சொல்வோம் அல்லவா? அது சென்னைதான். பெங்களூரு, ஹைதராபாத் மாதிரியான ஊர்களிலும் கலை, இலக்கியம், சினிமா சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு அசமஞ்சத்தன்மை தெரியும். ஆவ்வ்வ்வென்றிருக்கும். மேட்டுக்குடித்தனம். எல்லாவற்றையும் கொண்டாட்டமாகவும் மக்களோடு பிணைக்கிற நிகழ்வுகளாகவும் மாற்றுவதற்கு சென்னைக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால்தான் எத்தனை முறை சென்னைக்கு பயணிப்பதாக இருந்தாலும் சலிப்பதேயில்லை.
எழுதுகிறவன் என்கிற முறையில் சென்னைப் புத்தகக் கண்காட்சி எனக்கு மிக முக்கியமானது. எந்தவிதமான புத்தகங்களை வாசிக்கிறார்கள்? ஏன் குறிப்பிட்ட புத்தகங்களை விரும்பி வாங்குகிறார்கள்? எதையெல்லாம் நிராகரிக்கிறார்கள் என்பதையெல்லாம் நெருங்கியிருந்து பார்ப்பது அவசியம் என்று தோன்றுகிறது. 'சனிக்கிழமை ஒரு நாள்தான். ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுவேன்’ என்று மகியிடம் சொல்லிவிட்டு பேருந்து ஏறியிருந்தேன்.
பள்ளிகொண்டா காவல் நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்தில் விளக்குகள் அணைக்கப்படவேயில்லை. அரவிந்தனின் ‘கடைசியாக ஒரு முறை’ சிறுகதைத் தொகுப்பு பைக்குள் இருந்தது. வாசிக்கத் தொடங்கினேன். மோதலுக்கு முன்பு வரை ஓட்டுநரின் பக்கத்தில் அமர்ந்திருந்த நடத்துநர் எழுந்து பின்பக்கமாக வந்துவிட்டார்.
‘பணம் உங்க பணமா? டிரைவருதா சார்?’ என்றேன்.
‘தெரியலைங்க’ என்றார். வேலைக்குச் சேர்ந்து சில வருடங்கள்தான் ஆகியிருக்கிறதாம். வண்டி கிளம்பிய பிறகு அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த இளையராஜாவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தனது சொந்த எஃப்.எம்மை ஆரம்பித்திருந்தார். இதற்கு முன்பாக லாரி டிரைவராக இருந்த போது கூட தான் எந்த விபத்தையும் செய்ததில்லை என்றும் இப்பொழுது எல்லாம் இந்த நாதேரியால் வந்த வினை என்றார். நடத்துநர் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
‘அதோட நிறுத்துறானா? என் போனை வாங்கி எல்லாம் தெரிஞ்ச புடுங்கி மாதிரி அங்கேயும் இங்கேயும் பேசி பேலன்ஸையும் காலி பண்ணிட்டான்’ என்றார். மற்றவர்கள் சிரித்தார்கள். நடத்துநர் அப்பொழுதும் ஜன்னலுக்கு வெளியில்தான் பார்த்துக் கொண்டிருந்தார். சென்னை வந்து சேர்ந்த போது மணி ஒன்பதாகியிருந்தது. இறங்கும் போது ‘ரொம்ப யோசிக்காதீங்க’ என்றேன். அவர் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். திடீரென்று ‘தேங்க்ஸ் சார்’ என்றார். இறங்கி வந்துவிட்டேன். பேருந்து நிலையம் விழித்திருந்தது. விவேக் பாணியில் சொன்னால் சென்னை இந்த வெண்ணையைப் பார்த்து ‘வருக’ என்றது.
இன்று யாரெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறீர்கள்?
4 எதிர் சப்தங்கள்:
//திடீரென்று ‘தேங்க்ஸ் சார்’ என்றார்//
ஏன்?
//சென்னை இந்த வெண்ணையைப் பார்த்து ‘வருக’ என்றது. //
ஹா ஹா எப்போதும்போல் கடைசி பன்ச்.
//சென்னை இந்த வெண்ணையைப் பார்த்து ‘வருக’ என்றது. //
Same doubt. //திடீரென்று ‘தேங்க்ஸ் சார்’ என்றார்//
ஏன்?
Post a Comment