Jun 3, 2016

வலையமைவு

கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒரு தாரக மந்திரத்தைச் சொல்லித் தருவார்கள். நெட்வொர்க்கிங். ஆட்களுடனான தொடர்பு. ‘உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பதெல்லாம் இன்றைய உலகத்தில் காலாவதியாகிப் போன ஒன்று. நல்லவனோ கெட்டவனோ- நமக்கு நான்கு பேர் தேவை. டெல் நிறுவனத்தில் பணி புரிந்த போது ஒரு பயிற்சியாளர் அறிமுகமாகியிருந்தார். தமிழர். இப்பொழுது அவரும் அந்த நிறுவனத்தில் இல்லை. சம்பந்தமேயில்லாத சுற்றுலா சம்பந்தப்பட்ட நிறுவனமொன்றில் கொழுத்த சம்பளத்தில் வேலையில் இருக்கிறார். 

‘அங்க என்ன சார் ட்ரெயினிங் தர்றீங்க?’ என்றால் ‘உலகத்திலேயே அந்த ஊர்தான் அழகுன்னு ஒருத்தன்கிட்ட சொல்லுறதிலேயே அவன் நம்பி டிக்கெட் போடணும்...அதுக்கான பயிற்சி’ என்றார். இப்பொழுதெல்லாம் இந்தியர்களும் துணிந்து செலவு செய்கிறார்கள். அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்களாம். மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் நம்மவர்களுக்கு செலவு குறைவான சுற்றுலாத்தளங்கள். எவ்வளவு நாள்தான் கொடைக்கானல், ஊட்டி என்று சுற்றுவீர்கள்? வாழ்க்கையில் ஒரு தடவைதானே? என்று சொல்லிச் சொல்லியே மயக்கித் தூண்டிலை வீசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

எல்லாக் குளங்களிலும் யாராவது தூண்டிலை வீசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மீன்கள் சிக்கிக் கொண்டேயிருக்கின்றன. 

அவரைச் சமீபத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். இத்தகைய மனிதர்களிடம் பேசுவதில் சுவாரசியம் இருக்கிறது. புதிதாக எதையாவது சொல்லித் தருவார்கள். இவர் என்றில்லை. பொதுவாகவே மனிதர்களிடம் பேசினால் கற்றுக் கொள்ளலாம். நாம்தான் பேசுவதில்லை. கவனித்துப் பார்த்தால் பிற எந்த ஊர்க்காரர்களையும் விட தமிழ்நாட்டுக்காரர்கள்தான் அவ்வளவாக ஒட்டுவதில்லை. ஒரே அலுவலகத்தில்தான் வேலை செய்வோம். பெயர் வடிவேலு என்றிருக்கும். அவர் தமிழர் என்று நமக்குத் தெரியும். நாம் தமிழர் என்று அவருக்கும் தெரியும். ஆனால் சிரித்துக் கொள்ளவே பல நாட்கள் பிடிக்கும். பொதுமைப்படுத்துகிற மாதிரி தெரிந்தாலும் என் சிற்றறிவுக்குத் தெரிந்து இப்படித்தான் இருக்கிறோம். சில விதிவிலக்குகள் இருக்கக் கூடும். ஈகோதான் தடுக்கிறதா? 

அந்த மனிதருக்கு ஏகப்பட்ட தொடர்புள் உண்டு. ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் பயிற்சியாளரைத் தொடர்பு கொள்வதுண்டு. பொதுவாகவே பல மனிதர்களும் Name dropping ஆட்களாக இருப்பார்கள். எனக்கு மந்திரியைத் தெரியும், ஐஜியைத் தெரியும் என்பார்கள். காரியம் என்று வரும் போது அவர்களால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. இவர் அப்படியில்லை. சற்று கமுக்கமான மனிதர். ஆனால் நிறைய ஆட்களைக் கைவசம் வைத்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு மணி நேரமும் வலையமைவு குறித்துதான் பேசினார்.

அவர் சொல்வதில் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதுவும் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கு இந்த நெட்வொர்க்கிங் மிகப்பெரிய பலம். ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வழக்கமான பணி மாறுதல் என்பதில் அடுத்தவர்களின் உதவி பெரிதாகத் தேவைப்படாது. ஆனால் ஒருவர் இரண்டு மூன்று வருடங்கள் வேலையில்லாமல் இருந்திருப்பார். இப்பொழுது வேலை தேடுகிற அவசியம் வரும் போது நிச்சயமாக உள்ளே இருக்கும் யாராவது ஒருவரின் உதவி தேவைப்படும். ஒருவருக்கு .net தெரியும் ஆனால் WPF தெரியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள்தான். வேலை தேடுகிறவர் WPF தெரியாவிட்டாலும் அதில் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறார் என்றால் உள்ளே நுழைவதற்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்கிற யாராவது ஒருவரின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும். பதினைந்து வருடங்களாக ஆரக்கிளில் இருக்கிறேன். வேறொரு துறையில் காலை நனைத்துப் பார்க்கலாம் என்றால் நிச்சயமாக ஒருவர் கை கொடுக்க வேண்டும். இதற்குத்தான் வலையமைவு வேண்டும் என்கிறார்கள்.

வேலை என்று மட்டுமில்லை. இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் வலையமைவு தேவையானதாக இருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பாக ஒரு பெங்களூர் பெண் பத்திரிக்கையாளர் பேசினார். எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றி அவருக்கு ஏதோவொரு தகவல் தேவைப்பட்டது. என்னுடைய அலைபேசி எண்ணை யாரோ கொடுத்திருக்கிறார்கள். பேசி முடித்துவிட்டு அவரது எண்ணைக் குறித்து வைத்திருந்தேன். சமீபத்தில் சரண்யாவின் தம்பி கண்ணில் குத்தப்பட்ட தகவலைச் சொன்ன போது அவர்தான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபரோடு பேசினார். நிருபர் தகவல்களை வாங்கிக் கொண்டு டெபுடி கமிஷனரின் எண்ணைக் கொடுத்து அறிமுக செய்து வைத்தார். அந்த பெண் நிருபரை சம்பவம் நடந்த தினத்தன்றே தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று தயங்கிக் கொண்டேயிருந்தேன். இருபது நாட்கள் கால தாமதமாகிவிட்டது.

தொடர்புகள் இல்லாமல் இதையெல்லாம் செய்ய முடியாதா என்று கேட்கலாம். பெங்களூர் மிரர் செய்தித்தாளின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தோம். ‘ஏதாவதொரு நிருபரைச் சந்திக்க வேண்டும்’ என்ற போது அனைவரும் ஏதோவொரு கலந்தாய்வுக் கூட்டத்தில் இருப்பதாகச் சொல்லி அமரச் சொன்னார்கள். பத்து நிமிடம் அரை மணி நேரமானது. நிருபர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்தான் குற்றப்பிரிவைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவர் இல்லை என்றார்கள். ‘இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்கட்டுமா?’ என்ற போது ‘இல்லை நீங்க கிளம்புங்க..நாங்களே அழைக்கச் சொல்கிறோம்’ என்றார்கள். அழைக்கமாட்டார்கள் என்று அப்பொழுதே தெரிந்துவிட்டது. தொடர்புகளின் முக்கியத்துவத்திற்காகச் சொல்கிறேன்.

சில காரியங்களைச் செய்யும் போது யாரைத் தொடர்பு கொள்வது என்று தெரியாமலே கைவிட்டிருக்கிறேன். எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கக் கூடும். எல்லாவற்றையும் ஒரே மனிதரால் சாதிக்க முடிவதில்லை. நமக்கு யார் எந்தவிதத்தில் உதவியாக இருப்பார்கள் என்றே தெரியாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பலம். ஒவ்வொருவருக்கும் பல தொடர்புகள். யாரையும் சலித்துக் கொள்ள வேண்டியதில்லை. யாரையும் கத்தரித்துவிட வேண்டியதில்லை. 

‘நீ அவன் கூட நட்பாக இருப்பதால் உன்னை ஃபேஸ்புக்கில் unfriend செய்கிறேன்’ என்றெல்லாம் யாராவது சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். இன்றைய அவசர உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இதயப்பூர்வமான நட்பு என்று எத்தனை பேர்களைச் சொல்ல முடியும்? ஐந்து விரல்கள் கூடத் தேவைப்படாது என நினைக்கிறேன். ஆனால் ஃபேஸ்புக்கில் ஐயாயிரம் நண்பர்கள். நகைமுரண் இல்லையா? நட்பு என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பெரும்பாலானவை தொடர்புகள்தான். நம்மிடமிருந்து அவர்களுக்கும் அவர்களிடமிருந்து நமக்கும் ஏதோ பரஸ்பர ஸகாயம் இருக்கிறது. நட்பாக இருப்பதாக பாவிக்கிறோம். கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதில் தவறு என்று எதுவுமில்லை. வெளியுலகமும் அப்படித்தான் இருக்கிறது. நாம் பிழைக்கவும் அடுத்தவர்கள் பிழைக்கவும் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் இந்தக் கை கருப்பானது. அந்தக் கை வெளுப்பானது என்றெல்லாம் பாகுபாடு பார்த்துக் கொண்டிருந்தால் யாரும் நமக்காகக் காத்திருக்கப் போவதில்லை. 

4 எதிர் சப்தங்கள்:

venkat said...

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு, முதலில் ஒரு பெரிய வெளியில் உண்மையை எழுதியமைக்கு பாராட்டுக்கள். சில சமயங்களில் பெரியார் போல, பட்டென்று ஒரே வரியில் விஷயத்தை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது. கடவுள் இருந்தா நல்லா இருக்கும் என்றெல்லாம் குழப்பாமல், சரியோ தவறோ, கடவுள் இல்லை..இல்லவே இல்லை என்று சொல்வது மிக நேர்மையான அணுகுமுறை. உங்கள் கட்டுரையில், இன்றைய நவீன் யுகத்தின், தொடர்பு கொள்பது பற்றி எழுதி இருந்தீர்கள். பொதுவாக, வக்கிரங்கள் மலிந்துவிட்டன. எல்லாருக்கும் ஏதோ ஒரு தேவை இருந்து கொண்டே இருக்கிறது. மேற்கத்திய சித்தாந்தங்கள், கண் மூடித்தனமாக நம் சிந்தனைகளை மாற்றிக் கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம், கொஞ்சமாய் மிகப் பெரிய கலாச்சார சீரழிவிற்கு உள்ளாக்கப் படுகிறோம். கார்பரெட்டின் மாயக் கரங்கள், நம் சிந்தனா சக்தியை சிதைத்து கொண்டிருக்கிறது. அவர்கள் முதலில் கை வைத்தது குடி தண்ணீரில். யாரிடமும் உண்மையான நட்பு பாராட்டாமல், நிறைய பணம் வைத்துக் கொண்டு, யாருக்காக இத்தனை மெனக்கடல் என்றுதான் புரியவில்லை. உங்கள் எழுத்துக்கள், ஒரு வகையில் வாசகனை அந்த நிலையிலிருந்து மாற்றுகிறது என்பதே உங்கள் எழுத்தின் வெற்றியாக கொள்ளலாம்.
வெங்கட் ஓசூர்

Vaa.Manikandan said...

எழுத்தின் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். இதுவொரு உரையாடலுக்கான களம். பேசும் போது யாருக்கேனும் திறப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. அப்படியான விஷயங்களைத் தொட்டுக் கொண்டிருந்தால் போதும் என நினைக்கிறேன். சிறு சிறு சலனங்கள் நமக்கு அவசியமானவை.

thiru said...

Facebook-இல் இருக்கும் Friends என்பது உண்மையில் Acquaintance என்று தான் கொள்ளப்பட வேண்டும். Facebook மட்டுமல்லாது, நாம் வாழும் குடியிருப்பில் அக்கம் பக்கத்தோர் , உடன் பணிபுரிவோர், நமக்குத் தெரிந்தவர் என பட்டியல் நீளும் அவ்வளவே.
அவரை எனக்குத் தெரியும் என்பது வரை தான் உண்மை. எனக்காக அவர் என்ன மாதிரி உதவி வரை செய்வார்(or Vice versa) என்பது அவருக்குள் என்மீது இருக்கும் தாக்கம்/நம்பிக்கையை பொறுத்தது.சில சமயங்களில் இத்தகைய உதவி நட்பாக மாறலாம். ஆனால் அதிலும் நன்றியுணர்வே மேலோங்கி நிற்கும்.

நட்பு வேறு ஒரு பரிமாணத்தில் புரிந்து கொள்ளப் பட வேண்டியது.

Murugan R.D. said...

ஒரு பலமான நெட்வொர்க்கிங் இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியம், என்னதான் இண்டர்நெட், வாட்ஸ்அப் என்று வசதிகள் வந்துவிட்டாலும் ‌அதையும் மீறி வெவ்வேறு துறைசார்ந்தவர்கள், ஒரே ரசனை கொண்டவர்கள் என்று பலரின் அறிமுகம் க‌ிடைப்பது ஏதோ ஒரு வ‌கையில் பலம்தான், அந்தவிதத்தில் ‌சமூகவலைதளங்கள் ஒரு வரபிரசாதம்தான், ஐயாயிரம் பிரண்ட்ஸ் இருந்தாலும் ஒரு 50 லிருந்து 100 பேர் வரைக்கும்தான் நாம் ‌எளிதாக தொடர்புகொள்ளும் வட்டத்துக்குள் வருவார்கள், மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளலாம் அவ்வளவே, சமூக களப்பணியில் நேரிடையாக இறங்குவதும், நேர்மையாக நடந்துகொள்வதும், முடிந்தவரை மற்றவ‌ர்களின் சந்தேகங்களுக்கு அத்துறைசர்ந்த நபர்களின் மூலம் தகவல் சேகரித்துகொடுப்பதும் உங்களின் பலம், இதுதான் சரியான சமூக நெட்வொர்க்கிங், நிச்சயமாக இப்படிப்பட்ட தொடர்புகள் அனைத்தும் நட்பு என்ற வட்டத்துக்குள வராது, பரஸ்பர மரியாதை மற்றும் அபிமானம் போன்றவையே இந்த மாதிரியான சமூகவலைதள தொடர்புகள்,

என்னை பிரான்ஸ்ல பெர்னான்டஸ் பாராட்டினாரு கேரளாவுல ஷகீலா பாராட்டினாரு இந்த தமிழ்நாட்டுல தான் என்ன யாருக்கும் தெரியலங்கிறமாதிரி பினாத்திகிட்டு அலையற இலக்கியவாதி குடிமகன்களுக்கு மத்தியில் எழுத்து தரும் பாராட்டு போதைக்காக மட்டுமே செயல்படாமல் இந்த சமூகத்திற்காகவும் செயல்படும் உங்களைப்போன்றவர்களுடன் கைகோர்க்க நிச்சயம் இன்னும் எத்தனையோபேர் தயராகத்தான் இருப்பார்கள், தொடரட்டும் மணிகண்டன் உங்கள் சமூக செயல்பாடு மற்றும் சமூக ஆர்வம் கொண்டவர்களுடனான உங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு,