Jun 28, 2016

என்னவொரு வில்லத்தனம்?

நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறது? ஆம் அதேதான்.

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது கைவசம் செல்போன் எதுவுமில்லை. 2004 ஆம் ஆண்டு அது. அப்பொழுதுதான் செல்போன் மெதுவாக பரவலாகிக் கொண்டிருந்தது. சம்பளம் வாங்கித்தான் அலைபேசி வாங்க வேண்டும் என்று வீராப்பாகத் திரிந்தேன். வேலூர் பல்கலைக்கழகத்தைப் பற்றித்தான் தெரியுமல்லவா? பூங்கா தோற்றுவிடும். திரும்பிய பக்கமெல்லாம் வண்ணத்துப் பூச்சிகள்தான். ஜீன்ஸ் அணிந்த வண்ணத்துப் பூச்சிகள். பேசுவதற்கு தைரியம் வேண்டும். எனக்கு அது இல்லை. பேசுகிறவனையெல்லாம் பார்த்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பேன்.

நமக்கும் ஒரு வடிகால் தேவை அல்லவா? இணையத்தில் ரெடிஃப் சாட்டிங் வசதி பிரபலமாகியிருந்தது. சாட்டிங் அறைகள் இருக்கும். அங்கே புகுந்து தூண்டில் போட வேண்டும். மீன் சிக்கியவுடன் ப்ரைவேட் சாட்டிங்கை ஆரம்பித்துவிடலாம். இதில் என்ன பிரச்சினையென்றால் பெரும்பாலான கடோத்கஜன்கள் பெண்கள் பெயரிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதுவும் கவர்ச்சியான பெண்கள் பெயராக இருக்கும். மாட்டினால் நிறையப் பேசிவிட்டு கடைசியில் வக்கனையாக ‘டேய் நாயே...நான் பையண்டா’ என்று சொல்லிவிட்டு கெக்கபிக்கே என்று சிரிப்பார்கள். நல்லவேளையாக அந்தக் காலத்தில் திரைச்சொட்டு (Screenshot) எல்லாம் இல்லை. வழிந்து சிக்கி மானம் போனது நமக்கு மட்டும்தான் தெரியும். கமுக்கமாகத் துடைத்துக் கொள்ளலாம்.

அப்படியான கிளுகிளு காலத்தில் ஒரு பெண்ணிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தேன். பிரீத்தி என்று பெயர். எப்பொழுது சாட்டிங் அறைக்குள் நுழைந்தாலும் அவள் இருப்பாள். பேசினோம் பேசினோம் வாழ்க்கையின் சகலத்தையும் பேசினோம். என்னிடம் செல்போன் எண்ணைக் கேட்டிருந்தாள். இல்லையென்று சொல்வதற்கு வெட்கம். அறைத்தோழனின் எண்ணைக் கொடுத்தேன். அவன் வெடக்கு வெடக்கு என்று வெகு உயரம். கன்னங்கரேல் நிறம். சென்னையில் படித்த பையன். எந்நேரமும் எஃப்.எம்மில் பாடல் கேட்பான். அதை அணைத்தால் பெண்களிடம் ஃபோனில் பேசுவான். இரண்டும் இல்லையென்றால் குப்புறப்படுத்துத் தூங்குவான். ப்ரீத்தியிடம் அவனுடைய எண்ணைக் கொடுக்கும் போது கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒருவேளை அவள் அவனிடம் விழுந்துவிடக் கூடும் என்ற பயம். இருந்தாலும் அப்பொழுது வேறு வழியில்லை.

அவளும் அவளுடைய எண்ணை என்னிடம் கொடுத்திருந்தாள். எண்களைப் பரிமாறிய பிறகு ஒன்றிரண்டு நாட்கள் ஓடியிருக்கும். ஏதோ வழிந்த பிறகு வழக்கம் போல ‘நான் பையண்டா’ என்றான். இதயமே சுக்கு நூறாகிப் போய்விட்டது. இப்படியே எவ்வளவு பேரிடம்தான் அல்லல்படுவது? என்னை மாதிரி இளிச்சவாயன்கள் சிக்கினால் இவர்களுக்குத் தொக்காகப் போய்விட்டது. இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து பெண்ணின் பெயரில் கணக்குத் தொடங்கி அதே சாட்டிங் அறைக்குள் நுழைந்து ‘நான் ஒரு பெண்..என்னிடம் பேசுகிறவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்று நான்கைந்து சாட்டிங் அறைகளில் அவனுடைய எண்ணைக் கொடுத்துவிட்டேன். செத்திருப்பான் என்று நினைக்கிறேன். அவனும் கேடிப் பயல்தான். நான் அவனிடம் கொடுத்திருந்த எண்ணை என்னுடைய எண் என நினைத்து அதே சாட்டிங் அறைகளில் என் அறைத்தோழனின் எண்ணைக் கொடுத்துவிட்டான். அறைத் தோழனுக்கு பச்சை, மஞ்சள் வண்ணங்களில் அழைப்பு வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் ‘இல்லைங்க...நான் இல்லை’ என்று சாந்தமாகத்தான் அழைப்புகளுக்கு பதில் சொன்னான். அவனும் எத்தனை பேரைத்தான் தாங்குவான்? பிறகு போய்யா வாய்யா என்று ஆரம்பித்து போடா வாடா என்று நீடித்து கடைசியாக _______ ___________ வார்த்தைகளில் வந்து நின்று அப்படியும் சமாளிக்க முடியாமல்தான் அணைத்து வைத்தான். 

‘எந்த நாய் இதெல்லாம் பண்ணுதுன்னே தெரியல’ என்று புலம்பினான். அவன் குறிப்பிட்ட நாயானது எதுவுமே தெரியாதது போல திரும்பிப் படுத்துக் கொண்டு ப்ரீத்தி (என்கிற) கடோத்கஜனுக்கு அதே நிலைமையாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. 

இதை எதற்கு இப்பொழுது சொல்கிறேன்? காரணமிருக்கிறது. மூன்றாம் விதிதான்.

நேற்றிரவு மட்டும் நாற்பத்தியிரண்டு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. நாம்தான் பெரிய அப்பாடக்கர் அல்லவா? அதனால் பாராட்டு மின்னஞ்சல்கள் என்று நினைத்து ஒரு வினாடி சந்தோஷமாகத்தான் இருந்தது. பார்த்தால் அத்தனையும் வேலை கேட்டு வந்திருந்த மின்னஞ்சல்கள். அத்தனை பேரும் Freshers. அப்படியெல்லாம் எதையும் எடக்குமடக்காக எழுதவில்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மின்னஞ்சல்கள் வந்து கொண்டேயிருந்தன. மின்னஞசல் அனுப்பியிருந்த ஒருவரை அழைத்து ‘எதுக்குங்க எனக்கு ரெஸ்யூம் அனுப்பியிருக்கீங்க’ என்றேன். அவர் தினமும் ஏகப்பட்ட பேருக்கு வேலை கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறவர் போலிருக்கிறது. குழம்பிவிட்டார்.

‘உங்களுக்கா? தெரியலையே’ என்று யோசித்தவர் தீடிரென்று ஞானோதயம் வந்தவராக ‘வாட்ஸப்பில் வந்திருந்துச்சே’ என்றார். 

யாரோ வினை வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. ‘அந்த மெசேஜை எனக்கு அனுப்பறீங்களா?’ என்றேன். அனுப்பி வைத்திருந்தார். 

ஏதோ நிறுவனத்தில் ஆயிரத்து ஐநூறு ஆட்கள் தேவைப்படுகிறார்களாம். மாதம் முப்பதாயிரம் சம்பளம். பி.ஈ.முடித்தவர்கள் தேவை. நேர்காணல் எதுவுமில்லை. உடனடி வேலை. கவர்ச்சி வலை விரித்து ரெஸ்யூமை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் என்று என்னுடைய மின்னஞ்சலைக் கொடுத்திருக்கிறார் அந்தப் புண்ணியவான். கடைசியில் #verified என்று வேறு போட்டிருக்கிறார். செத்தான் சேகரு என்று மனதுக்குள் நினைத்து அனுப்பியிருக்க வேண்டும். நேற்றுதான் இந்த செய்தி பரவத் தொடங்கியிருக்கிறது. இன்னும் எத்தனை மின்னஞ்சல் வந்து சேரும் என்று தெரியவில்லை. இந்தியாவில் எத்தனை பேர் பி.ஈ முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை எனக்குப் புரிய வைக்கிறார்கள். இன்னும் ஆறேழு மாதங்களுக்காவது வந்து கொண்டேயிருக்கும்.

ஆனால் இந்த ஐடியா நன்றாக இருக்கிறது. 

வாட்ஸப்பில்தான் எதை அனுப்பினாலும் மற்ற குழுக்களுக்கு அனுப்பி வைக்கும் ஆட்கள் இருக்கிறார்களே. இனி யாராவது வால் ஆட்டினால் இதைத்தான் துணிந்து செயல்படுத்தலாம் என்றிருக்கிறேன். மின்னஞ்சல் வந்தால் வெகு எளிது. க்ளிக் செய்து அழித்துவிடலாம். அலைபேசி எண்ணை வாங்கி அனுப்பி வைக்க வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நம்மவர்களிடம் என்னவொரு வில்லத்தனம்? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.