Jun 26, 2016

மாணவன்

ஒரு மாணவன். இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசியிருக்கிறோம். இளங்கலை அறிவியல் (பி.எஸ்.ஸி கெமிஸ்டரி) முடித்திருக்கிறான். கல்லூரியில் முதல் இடம் அவன்தான். எண்பத்தைந்து சதவீத மதிப்பெண்கள். பல்கலைக்கழகத்தின் தகுதிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருக்கிறான். அடுத்ததாக முதுகலை அறிவியல் படிப்பதற்கான முயற்சியில் இருந்தான். அன்றைய தினம் அவனிடம் ‘நேரில் பேசலாமா?’ என்றேன். அப்பொழுது மணி இரவு பத்தரை இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைப் பிடித்து அந்த நேரத்திலும் வந்துவிட்டான். மார்கெட் முன்பாக நின்று பேசிக் கொண்டிருந்தோம். அத்தனை கொசுக்கடியிலும் படிப்பு பற்றித்தான் பேசினான். குடும்பம் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் நான் ஆர்வமாக இருந்தேன். 

‘அப்பா டிரிங்க்ஸ் பார்ட்டி சார்’- குடித்துவிட்டுக் குப்புறப் படுத்துக் கிடப்பதுதான் வேலை. ஒரு அக்கா. திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அம்மா நகமலை அடிவாரத்தில் இருக்கும் வறக்காடுகளில் கூலி வேலைக்குப் போகிறார். மழை இல்லாததால் வேலை கிடைப்பதில்லை. எப்பொழுதாவது கிடைக்கிற வேலை முழு நாளுக்கானது என்றால் இருநூறு ரூபாயும் அரை நாள் வேலை என்றால் நூறு ரூபாய் கூலியும் கிடைக்கும் என்றான். அம்மா சம்பாதிப்பதையும் சேர்த்து அப்பா குடித்துவிடுவார் போலிருக்கிறது.

இளங்கலை படிப்பைப் படித்தது அரசு உதவி பெறும் கல்லூரிதான் என்றாலும் கொஞ்சமாவது ஃபீஸ் கட்ட வேண்டும் அல்லவா? கிடைக்கிற விடுமுறை தினங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பந்தி பரிமாறச் சென்றுவிடுவானாம். அப்படித்தான் இளங்கலை படிப்புக்கான செலவைச் சமாளித்திருக்கிறான். கிராமப்புறங்களில் இருந்து படிக்கச் செல்லும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஏழ்மை என்கிற பிரச்சினை உண்டு. அது பெரிய விஷயமில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களிடம் ஒரு தாழ்வுணர்ச்சி இருப்பதை கவனிக்க முடிகிறது. தங்களைத் தாங்களே சுருட்டி வைத்துக் கொள்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பாகச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படிக்கிற மாணவிக்கு காசோலை என்ன பெயரில் வேண்டும் என்பதை விசாரித்துச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகும் அதே பதிலைச் சொன்னாள். வருத்தமாகத்தான் இருந்தது. கலந்தாய்வின் போது தமிழகத்தில் தகுதிப் பட்டியலில் முதல் நூறு இடத்திற்குள் இருந்தவள். தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்த பிறகு எவ்வளவு துணிச்சலுடனும் தெளிவிடனும் இருந்திருக்க வேண்டும்? அந்த இடத்தில் எதுவும் பேச இயலவில்லை.

கிராமப்புற மாணவர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் வெறுமனே படிப்புச் செலவை வழங்குவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை என்று உணர்ந்த தருணம் அது. அவர்களின் ஆளுமை உருவாக்கத்திலிருந்து எதிர்காலத்திற்கான திட்டமிடல் வரைக்கும் நம்மால் எவ்வளவோ செய்ய முடியும். ‘நான் ஏதாச்சும் செய்ய விரும்புகிறேன்’ என்று ஆர்வமாக முன்வருகிறவர்களிடம் இப்பொழுதெல்லாம் சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. பணம் கொடுப்பதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தச் சமூகம் நம்மிடம் கோருவது நம்முடைய நேரத்தைத்தான். அதைக் கொடுப்பதற்குத்தான் ஆட்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு அமைப்புடன் அல்லது குழுவுடன் சேர்ந்துதான் உதவ வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு கிராமப்புற மாணவனுக்கு நம்மால் முடிந்தளவு அவனது அறிவை செழுமைப்படுத்திவிட்டால் போதும். இன்றைக்கு பெரும்பாலான கல்லூரிகள் வெறும் கட்டிடங்களாக மட்டும்தான் இருக்கின்றன. அதற்குள் அனுப்பி வைத்துவிட்டு ஆயிரக்கணக்கான பெற்றவர்கள் கனவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய மாணவர்களுக்கான அவனுக்கான பாதைகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று காட்டினால் அதுவே பேருதவி. 

அத்தனை மாணவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. விதிவிலக்குகள் உண்டு. முதல் சில பத்திகளில் சொன்ன மாணவன் அப்படிப்பட்டவன். 

‘கெமிஸ்டரியில் ரெண்டு இருக்கு சார்..ஆர்கானிக்...இன்னொன்னு இன்-ஆர்கானிக். ஆர்கானிக்ன்னா....’ சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன். 

நான்கைந்து பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்திருக்கிறான். கிட்டத்தட்ட அத்தனை பல்கலைக்கழகங்களிலும் கிடைத்திருக்கிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருடத்திற்கு லட்சக்கணக்கில் செலவு பிடிக்கிறது. அதைத் தன்னால் சமாளிக்க முடியாது என்று அடுத்தபடியாக திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பினான். பணத் தேவையைச் சொன்னான். உடனடியாக சம்மதித்துவிட முடியாது என்பதால் அடுத்த வாரத்திற்குள் பணத்தை ஏற்பாடு செய்துவிடுவதாக சொல்லியிருந்தேன். ரமேஷ் விசாரித்துச் சொன்னார். ரமேஷ் அரசு மருத்துவமனையில் ஆலோசகராக இருக்கிறார்.

‘அண்ணா...பையன் வீட்டுக்குப் போனேன்...வீட்டைப் பார்த்தாவே ரொம்பக் கொடுமையா இருக்கு...தாராளமா கொடுக்கலாம்’. மதுரை மணிகண்டன், சென்னை சுந்தர், கோயமுத்தூர் சுந்தர், ரமேஷ் போன்றவர்கள் விசாரித்துச் சொன்னால் சரியாக இருக்கும்.

காசோலை அனுப்பி அது மாணவன் கையில் வந்து சேருகிற வரையிலும் அவகாசம் இல்லை. ‘எப்போ கலந்தாய்வுக்கு போகணும்?’ என்று கேட்ட போது அடுத்த நாள் அதிகாலையில் கிளம்புவதாகச் சொன்னான்.  ‘நான் இன்னைக்கு ராத்திரி பத்து அல்லது பத்தரை மணிக்கு வந்து சேர்ந்துடுவேன்...வாங்கிட்டு கிளம்ப முடியுமா?’ என்ற கேள்வியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம். சொன்ன இடத்தில் ஒன்பது மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கியிருந்தான். வந்து சேரும் போது பதினொன்றாகியிருந்தது. பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை. ஏதாவது சொல்லி பேச்சை மாற்ற விரும்பினேன். காசோலையை வாங்கிக் கொண்டு கண்ணீர் கசிந்தான். ‘திண்டுக்கல்லுக்கு இங்கே இருந்தே கிளம்பறியா?’ என்றேன். நள்ளிரவு தாண்டி இரண்டே முக்கால் மணிக்கு திண்டுக்கல்லுக்கு வண்டி கிளம்புவதாகச் சொன்னான். அதற்குள்ளாக வீட்டுக்குச் சென்று சான்றிதழ்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பிரச்சினை என்னவென்றால் பதினோரு மணிக்கு மேல் அவனுடைய கிராமம் வரைக்கும் பேருந்து இல்லை. பக்கத்தில் இருக்கும் டவுன் வரைக்கும்தான் பேருந்து உண்டு. அதன் பிறகு ஆறேழு கிலோமீட்டர் நடக்க வேண்டும். நள்ளிரவில் நடந்து சென்று சான்றிதழ்களை எல்லாம் எடுத்துக் கொண்டு திரும்ப நடந்து வந்து பேருந்தைப் பிடிக்க வேண்டும். ‘எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கலாம்ல’ என்று கேட்ட போது ‘செக்கை வாங்கிட்டு போய் அம்மாகிட்ட கொடுத்து வாங்கணும்’ என்றான். அனுப்பி வைக்கும் போது ‘கைல காசு வெச்சு இருக்கியா?’ என்றேன். நானூறு ரூபாய் வைத்திருந்தான். ‘போதுமா?’ என்ற போது இங்கேயிருந்து அங்கே ஏழு ரூபாய், அங்கேயிருந்து அங்கே நாற்பத்தொரு ரூபாய் என டிக்கெட்டெல்லாம் சேர்த்து தொண்ணூற்று மூன்று ரூபாய் ஆகும் என்று கணக்குச் சொன்னான். சற்றே வருத்தமாக இருந்தாலும் இவ்வளவு தெளிவான திட்டமிடலுடன் ஒரு மாணவனைப் பார்க்க வெகு சந்தோஷமாக இருந்தது.

நேற்று காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை முடிந்துவிட்டது. சேர்ந்துவிட்டான். 

நேரில் முதன்முறை சந்தித்துப் பேசும் போது ‘படிச்சுட்டு CSIR பரிட்சை எழுதி ஆராய்ச்சியாளன் ஆகிடணும் சார்’ என்றான். அதற்குத்தான் ஆர்கானிக், இன் ஆர்கானிக் என்றெல்லாம் பிரித்துப் படிக்காமல் பொதுவாக முதுகலை அறிவியல் படிக்க விரும்புவதாகச் சொன்னான். எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்து கொண்டால் ஆராய்ச்சிக்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பது எளிது என்பது அவன் கணக்கு, எனக்கு முன்னெச்சரிக்கை மூளை அவ்வப்பொழுது விழித்துக் கொள்ளும். ‘ஒருவேளை இந்தத் திட்டம் கை கூடலைன்னா அடுத்த ஆப்ஷன் என்ன வெச்சிருக்க?’ என்றேன். அவன் தெளிவாக இருக்கிறான்.

‘ரெண்டு வருஷம் டைம் கொடுங்க சார்...நிச்சயம் ரிசர்ச்ல புகுந்துடுவேன்’ என்றான். 

‘இல்லப்பா...’ என்று இழுத்த என்னை முடிக்கவே விடவில்லை. 

‘ரொம்ப நம்பிக்கையா இருக்கேன் சார்...நம்பிக்கையில்லைன்னாத்தானே அது இதுன்னு யோசிக்கணும்? எனக்கு நம்பிக்கை இருக்கு...இது மட்டும்தான்’ என்றான். மூன்றாயிரம் ரூபாய் யாரோ தருவதாகச் சொல்லியிருந்தார்களாம். கடைசி வரைக்கும் அந்தப் பணம் வந்து சேரவில்லை. ‘எப்படியும் சேர்ந்துடுவேன்னு நம்பிக்கை இருந்துச்சு..நீங்க வந்து நிக்கறீங்க பாருங்க..என் நம்பிக்கை பொய்யா போவாது சார்’ என்றான். அதற்கு மேல் அவனை நம்பாமல் இருக்க முடியவில்லை. நிச்சயமாக நினைத்ததைச் சாதித்துவிடுவான் என்றுதான் தோன்றியது. வெல்கிறோம், தோற்கிறோம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். துல்லியமான குறிக்கோளை வைத்திருக்க வேண்டும். அதை அடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். உழைப்பைக் கொட்டினால் எங்கே போய்விடும் அந்த வெற்றி? பையன் அப்படித்தான் இருக்கிறான். இரண்டு வருடங்களுப் பிறகு என்ன ஆனான் என்று யாராவது மறக்காமல் கேளுங்கள். நிச்சயமாக பெருமைப்படும்படியான பதில் என்னிடம் இருக்கும்.