Jun 3, 2016

புனைவு - போட்டி

எண்பத்தைந்து பிரதிகள் கைவசம் இருக்கின்றன. மூன்றாம் நதி நாவல்தான். நான்கு பேர் பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். சரவணபாபு ஆயிரம் ரூபாய், வெங்கட் இரண்டாயிரம் ரூபாய், பாண்டியராஜன் இரண்டாயிரம், முத்து கெளசிக் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தத் தொகைக்குரிய பிரதிகளை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏன் அனுப்பினார்கள் என்றெல்லாம் தெரியாது. ஏதோவொரு அன்பு. அனுப்பி வைத்திருக்கிறார்கள். சரவணபாபு கடந்த மூன்று புத்தகங்களுக்கும் இதைச் செய்து கொண்டிருக்கிறார். முத்து கெளசிக் ‘ஒரு விளம்பரமாக இருக்கட்டுமே’ என்று அனுப்பி வைத்திருக்கிறார். பாண்டியராஜனும் வெங்கட்டும் கடந்த புத்தகத்துக்கும் இப்படிச் செய்தார்கள். இப்பொழுதும் செய்கிறார்கள்.

ஒரு பிரதி நூறு ரூபாய். ஆக நூறு பிரதிகள். பதினைந்து பிரதிகளை அனுப்புவதற்கான பட்டியல் இருக்கிறது. முன்பு இரண்டு போட்டிகளில் வென்றவர்கள். இன்னமும் எண்பத்தைந்து பிரதிகள் மீதமிருக்கின்றன. புத்தகத்தை இலவசமாகக் கொடுக்கவும் கூடாது; வாங்கவும் கூடாது என நினைப்பதுண்டு. அதற்கென்று ஒரு மதிப்பு இருக்க வேண்டும். அதை அடைவதற்கான சிறு எத்தனிப்பு இருக்க வேண்டும். அதனால் கைவசமிருக்கும் பிரதிகளில் பத்து பிரதிகளை அனுப்புவதற்கான போட்டி இது. 

இது போக மீதமிருக்கும் எழுபத்தைந்து பிரதிகளை பல்கலைக்கழங்கள், முக்கியமான நூலகங்களுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதுவும் சரிதான். இதுவரையிலும் எனது ஒரேயொரு புத்தகம்தான் நூலகத்திற்குச் சென்றிருக்கிறது. அதுவும் கூட செவி வழிச் செய்திதான். பதிப்பாளர் எதுவும் சொல்லவில்லை. 

போட்டி மிக எளிமையானது. தண்ணீர், நகரம், பெண் - இந்த மூன்றில் ஏதாவதொன்றை அடிப்படையாகக் கொண்டு குட்டிக் கதையாக அனுப்ப வேண்டும். இருநூறு அல்லது இருநூற்றைம்பது வார்த்தைகளுக்குள் கதை இருக்க வேண்டும். அதை விடச் சிறியதாகவும் இருக்கலாம். இவ்வளவுதான் விதிமுறை. வேறு எந்த நிபந்தனையும் இல்லை. கதைகளை நிசப்தத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒரு தேர்தல் நடத்தில் சிறந்த பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

செவ்வாய்க்கிழமையன்று இருபத்தைந்து முந்தைய போட்டிகளுக்கான பதினைந்து பிரதிகள், இந்தப் போட்டிக்கான பத்து பிரதிகள் என இருபத்தைந்து பிரதிகளையும் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

கதைகளை அனுப்புவதற்கு ஜூன் 4 ஆம் தேதி மதியம் 1 மணி வரைக்கும் அவகாசம். 

vaamanikandan@gmail.com

2 எதிர் சப்தங்கள்:

Saravana Kumar N said...

திடீர் என்று வானம் சிவப்பு நிறமாகிறது.. சிவப்பு நிற அமில மழை பெய்ய போகின்றது. இதுதான் ஓரளவு குறைந்த நச்சுடைய மழை என்று தந்தை கூரியது மனதில் வந்தோடியது.
பாலத்திலிருந்து சரியாக ஐநூறு மீட்டர் தொலைவில் மழை பெய்தது. இவனுக்கோ பயம் வந்துவிட்டது. நாம் செல்லும் வரை மழை நீர் அங்கு இருக்குமா என்று. 83 டிகிரி வெப்பம் . கடல் நீர் ஆவியாகி வலிமண்டலதிலேயே பலநூறு வருடங்களாக சுத்திக்கொண்டிருக்கிறது . மழை வந்தாலும் ஒரே நேரத்தில் ஒரேஇடத்தில் வேகமாக கொட்டுகிறது. முதன்முறையாக இவன் ஊரில் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னால் ஒரே நேரத்தில் பேய் மழை அடித்து ஊரே வெள்ளத்தில் மிதந்ததாம். அதான் பிறகு அடிக்கடி அந்த மாதிரி மழை பெய்ய ஆரம்பித்து, பிறகு அதுவே பழகி விட்டதாம். இதற்கு காரணம் "வெப்பநிலை அதிகமாகும் பொது மேகத்திற்கு நீரை பிடித்து வைத்துகொள்ளும் சக்தி அதிகமாகி கொண்டே போகிறது. பிறகு மேக கூட்டம் மேலே எழும்பி குளிரும் பொது பிடித்து வாய்த்த அனைத்து நீர் திவலைகளும் நீர் துளியாக மாறி ஒரே இடத்தில கொட்டுகின்றன." என்று இவனுடைய அப்பா சொன்னது இவன் ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் நினைவில் வந்தது தொலைத்து. உயிர் போகிற வேலையில் அறிவியல் சிந்தனைக்கு இடம் குடுக்க முடியாது. இருக்கின்ற மொத்த சக்தியையும் பயன்படுத்தி ஓடிக்கொண்டிருந்தான். நினைத்தது போலவே மழை பெய்து முடித்து ஆவியாகி கொண்டிருந்தது. இன்னும் ஐம்பது மீட்டர் தான். கொஞ்சம் தண்ணீர் கண்களுக்கு தெரிகிறது. வந்துவிட்டான். வெறும் ஈரம் மட்டும் இருக்கிறது. யோசிக்கவில்லை. எடுத்து வாயில் போட்டு சப்ப ஆரம்பித்தான். கொஞ்சம் சுவை தெரிந்தது. அப்படியே மண்ணில் சாய்ந்தான். விக்கல் வேறு வருகிறது. வாய் முழுக்க மண். மரணம் உறுதி. மனம் முழுக்க இருந்த தண்ணீர் இப்பொது இல்லை.

அடுத்த விநாடி மரணம். இவன் கோமாவுக்கு செல்வதற்கு முன் இவன் சந்தித்த ஒரு உருவம் இப்போது மனதில் வந்து நிற்கிறது. அது ..

Saravana Kumar N said...

வார்த்தை கட்டுப்பாட்டினால் முழு புனைவையும் இங்கே பதிவேற்ற முடியவில்லை. உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறேன்.