Jun 10, 2016

மின் நூல்

எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி லீமியர் பப்ளிஷர்ஸ் என்றவொரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். லீமியர் என்றால் என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியவில்லை. அவரை எனக்கு கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு வருடங்களாகத் தெரியும். சென்னையில் எம்.டெக் படிப்புக்காகத் தங்கியிருந்த போது எங்களது பிரம்மச்சாரிகளின் அறைக்கு அடிக்கடி வருவார். அந்த அறையில் எப்பொழுதும் கிட்டத்தட்ட பத்து பேர் தங்கியிருப்போம். சென்னைக்கு நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது புதிதாக அறைத் தலைவரிடம் சொல்லிவிட்டு அழைத்து வந்து தங்க வைத்துக் கொள்ளலாம். இவ்வளவு பேர்தான் தங்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் கிடையாது. மாத இறுதியில் அறைக்கான மொத்த வரவு செலவுக் கணக்கைக் கூட்டி மொத்த எண்ணிக்கையில் வகுத்து தலைக்கு இத்தனை ரூபாய் என்று சொல்வார்கள். அதைக் கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் புதிதாக மூன்று பேர் உள்ளே வந்தால் பழைய ஆட்கள் ஒன்றிரண்டு பேர் வெளியே செல்வார்கள்.

செல்லமுத்து எனக்கு நான்கைந்து வருடங்கள் சீனியர். அப்பொழுதெல்லாம் அவர் வரும் போது ‘எழுத வேண்டும்’ ‘பாட்டெழுத வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருப்பேன். நம்பினாரா என்று தெரியவில்லை. அவரும் அவருடைய நண்பரும் பங்கு வணிகம் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது பணம் பற்றியும் வணிகம் பற்றியும் நிறைய எழுதிவிட்டார். எழுதிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் திடீரென்று ஒரு நாள் அழைத்து ‘உன் புக்கையெல்லாம் ஈ-புக்கா மாத்திடலாமா?’என்றார். என்னவோ நான் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிற மாதிரி. இதையே முன்பும் சிலரும் கேட்டிருக்கிறார்கள். எனக்கு இதில் பெரிய ஆர்வமில்லை. பதிப்பாளர்களைத்தான் கேட்க வேண்டும். இந்த மாதிரியான செயல்களைச் செய்து அவர்களின் வியாபாரத்துக்கு ரண்டங்கம் செய்துவிடக் கூடாது.  

செல்லமுத்து குப்புசாமி அவர்களிடமும் பேசியிருக்கிறார். ஒத்துக் கொண்டார்கள். அதனால் இனி மின்நூலாகவும் புத்தகங்கள் கிடைக்கும்.

அச்சுப் புத்தகங்களைப் பொறுத்தவரையிலும் பதிப்பகங்களைப் பொறுத்து ஆறிலிருந்து பத்து சதவீதம் ராயல்டி தருவார்கள். ராயல்டியே தராத பதிப்பகங்களும் உண்டு என்று பட்டியலிட்டால் வெட்டி விவகாரம் வந்து சேரும். 

மின் நூல் புத்தகங்களின் வியாபாரக் கணக்கைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. இதில் மறைக்க என்ன இருக்கிறது? சொல்லிவிடலாம்.

புத்தகத்தின் விலை ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் ஐம்பது சதவீதம் லீமியருக்கும் ஐம்பது சதவீதம் எழுத்தாளருக்கும் வரும். புத்தகத்தின் விலை எழுபது ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் விற்பனையில் எழுபது சதவீதம் எழுத்தாளருக்கும் முப்பது சதவீதம் லீமியருக்கும் சென்றுவிடும். மற்ற எழுத்தாளர்களிடம் என்ன விதிமுறைகள் என்று தெரியாது. என்னிடம் இதைத்தான் சொல்லியிருக்கிறார். 

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன், மசால் தோசை 38 ரூபாய் இரண்டும் யாவரும் பதிப்பகத்தினர் வெளியிட்ட புத்தகங்கள். அந்தப் புத்தக விற்பனைக்கான தொகை யாவரும் பதிப்பகத்திற்கே செல்லட்டும். ராயல்டியாக அவர்கள் தருவதைத் தரட்டும். இன்னமும் சில வருடங்களில் தம் கட்டி பத்து பதினைந்து புத்தகங்களை வெளியிடும் வரைக்கும் அவர்களுக்கு நம்மால் எந்த உதவியெல்லாம் செய்ய முடியுமோ செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். முழுமையான பதிப்பகமாக மாறி வியாபார காந்தங்களாகிவிட்ட பிறகு வேண்டுமானால் கனவுகளுடன் வேறு இளைஞர்கள் வந்தால் அவர்களுடன் கை கோர்க்கலாம். 

ஒருவேளை பிற புத்தகங்கள் விற்பனை ஆகி ஏதேனும் வருமானம் வருமாயின் அந்தத் தொகையை நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிடச் சொல்லியிருக்கிறேன். 

இவ்வளவுதான் மின் நூல் சம்பந்தமான பேரங்களும் விவரங்களும். ‘மின்நூல் கிடைக்குமா?’ என்றுத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தக் குறிப்பு சமர்ப்பணம். லட்சக்கணக்கில் தரவிறக்கம் செய்து லீமியர் தளத்தையும், யாவரும் பதிப்பகத்தையும் திணறடிக்கச் செய்வீர்கள் போர்ப்படைத் தளபதிகளே! 

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??

லீமியர் தளத்திலேயே அச்சுப் புத்தகங்களையும் வாங்கிக் கொள்ளலாம். மின் நூல் புத்தகத்தின் வடிவாக்கம் எதையும் பார்க்கவில்லை. எழுத்து, வடிவம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.

லீமியர் தளம் இணைப்பு

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Awaiting for moondraam Nadhi as an e-book.

Rajkumar said...

லீமியர் தளத்தில் உங்களைப் பற்றிய குறிப்பில் உங்களின் பெயர் பிழையாக உள்ளது.