Jun 1, 2016

மே 2016

‘நிசப்தம் கணக்கு வழக்கு நிர்வாகத்தில் ஏதாவதொரு வகையில் என்னால் உதவ முடியுமா?’ என்று யாராவது கேட்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆனால் எப்படியான உதவியைக் கேட்பது என்றுதான் தெரியாது. நன்கொடையாளர்களின் PAN மற்றும் முகவரியைப் பெற்றுத் தருவதுதான் ஆகப்பெரிய உதவி. ஆனால் நன்கொடையாளர்களின் விவரங்களைக் கண்டுபிடிக்க மின்னஞ்சல் ஓரளவு உதவக் கூடும். ஏனெனில் இதுவரையிலான அறக்கட்டளை சம்பந்தமான அனைத்து உரையாடல்களும்  எனது தனிப்பட்ட மின்னஞ்சலில்தான் இருக்கிறது. யாரிடமாவது அறக்கட்டளை சம்பந்தமான வேலையைத் தருவதாக இருந்தால் மின்னஞ்சலின் கடவுச் சொல்லையும் கொடுக்க வேண்டும். வங்கியின் கடவுச் சொல்லைக் கேட்டால் கூட கொடுத்துவிடலாம். மின்னஞ்சலின் கடவுச் சொல்லை எப்படிக் கொடுப்பது? 

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக இதே மின்னஞ்சலைத்தான் பயன்படுத்தி வருகிறேன். உள்ளுக்குள் என்ன குப்பை, கழிசடை இருக்கிறது என்று எனக்கே தெரியாது. அதற்காக கசமுசா சமாச்சாரங்கள் மட்டும்தான் கிடக்கும் என்று நினைத்து hack செய்யவெல்லாம் முயற்சிக்க வேண்டியதில்லை. அறியாப்பருவத்தின் அழிச்சாட்டியங்கள் இருக்கும்தான். அதைத் தாண்டியும் தனிப்பட்ட விவகாரங்கள் உள்ளே புதைந்து கிடக்கக் கூடும். அதனால்தான் யாராவது உதவுகிறேன் என்று கேட்கும் போது ஒரே குழப்படியாக இருக்கிறது. எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. ‘ஆசை இருக்குதாமா தாசில் செய்ய அம்சம் இருக்குதாமா கழுதை மேய்க்க’ என்று. அப்படித்தான். யாரையாவது வைத்து காரியத்தைச் சுளுவாக முடித்துக் கொள்ளலாம் என்றுதான் ஆசை. அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

2014-15க்கான நன்கொடையாளர்கள் விவரங்கள், செலவு விவரங்கள் என அனைத்தையும் கொடுத்துச் சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த வாரத்திற்குள் வருமான வரித்துறையிடம் சமர்பித்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலை ஆடிட்டரை ஒரு முறை சந்தித்து பேச வேண்டும். பணம் வாங்குவது அதைக் கொண்டு போய் தேவைப்பட்டவர்களிடம் கொடுப்பது போன்ற காரியங்கள் கூட சிரமமில்லை. இந்தக் கணக்கு வழக்கைப் பராமரித்து அதை ஆடிட்டரிடம் கொடுப்பதுதான்.....அது சரி. அதெல்லாம் இருக்கத்தான் செய்யும்.


மார்ச், ஏப்ரல் மாத வரவு செலவு விவரம் இணைப்பில் இருக்கிறது.

மே மாத வரவு செலவு விவரத்தில் கொடுக்கப்பட்ட காசோலை சரண்யாவின் தம்பி சங்கர் தயாளுக்கான கண் மருத்துவச் செலவு தொகை. சங்கர் தயாளின் இடது கண் பார்வை முற்றாகப் போய்விட்டது. மாற்றுக் கண் பொருத்துவதும் சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். கண்ணைப் பறித்தவன் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இன்றுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வந்திருக்கிறது. அவர் போராடிக் கொண்டிருக்கிறார். இனி ஒருவேளை கைது செய்வார்களோ என்னவோ தெரியவில்லை. 


கடந்த பதினைந்து நாட்களில் நிறையப் பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இருபத்தெட்டு லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் இருக்கிறது. (ரூ. 28,34,230.34). வேறு நான்கைந்து பேர்களுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டியிருக்கிறது. 

அது தவிர, கல்வி உதவிக்கென மூன்றாம் நதி நாவல் வெளியீட்டின் மூலம் திரட்டிய இரண்டு லட்ச ரூபாய் பதிப்பாளரின் வங்கிக் கணக்கில் தனியாக இருக்கிறது. முதலில் அந்தத் தொகையை பகிர்ந்து கொடுத்துவிட்டு அதன் பிறகு அறக்கட்டளையின் நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதுவரை ஒவ்வொரு மாதமும் 25 தேதிவாக்கில் அறக்கட்டளையின் வரவு செலவு விவரம் வெளியிடப்பட்டது. இனிமேல் அது ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகமிருப்பின் மின்னஞ்சலில் கேட்கவும். இந்த வரியை மட்டும் ஒவ்வொரு மாதமும் எழுதுகிறேன். யாருமே கேட்பதில்லை. சந்தேகத்திற்கப்பாற்பட்டு யாருமே இருக்க முடியாது. அதனாலாவது கேட்கவும். 

vaamanikandan@gmail.com