Jun 29, 2016

கொங்குச் சொலவடைகள்

வாட்ஸப்பில் நம்ம ஊர்ச் சொலவடைகள் என்ற குழு ஒன்றிருக்கிறது. முரளி, ஈரோடு கதிர், சத்திய மூர்த்தி, செங்கதிர் உள்ளிட்ட பத்துப் பேருக்குள்தான் உறுப்பினர்கள். அத்தனை பேரும் பெருந்தலைகள். தங்களுக்குத் தெரிந்த கொங்குச் சொலவடைகளை அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முன்பொரு சமயத்தில் கொங்குச் சொலவடைகளைத் நிசப்தம் தளத்தில் தொகுத்துக் கொண்டிருந்தேன். இந்தக் குழுமத்தின் சொலவடைகளையும் நிசப்தத்தில் தொகுத்து வைக்கிறேன் என்று முரளியிடம் கேட்டிருந்தேன்.

‘சொலவடைகள் எல்லாம் எசகு பிசகாக இருக்குது..உங்களுக்கு பிரச்சினையில்லைன்னா செய்யுங்க’ என்றார்.

சொலவடை என்றாலே அப்படித்தான் இருக்கும். நாம்தான் நாகரிகம் என்ற பெயரில் நிறைய வட்டாரச் சொற்களை இழந்து விட்டோம். சொற்றொடர்களை இழந்திருக்கிறோம். சொலவடைகளை இழந்து கொண்டிருக்கிறோம். எங்கள் தாத்தா ‘செருப்பைத் தொட்டுக்க’ என்றுதான் சொல்வார். அது தவறு என்று அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுத்தார்கள். ‘செருப்பு போட்டுக்கிறேன்’ என்று மாறிவிட்டேன். ‘ஒரட்டாங்கை’ என்றுதான் முந்தைய தலைமுறையில் சொன்னார்கள். இந்தத் தலைமுறையினர் ‘இடது கை’ என்று சொல்கிறார்கள். ‘சோறு உண்ணுட்டு போ’ என்பது ‘சாப்பிட்டு போடா’ என்று மாறியிருக்கிறது. வேலூரிலும் அப்படித்தான் சொல்கிறார்கள். மதுரையிலும் அப்படித்தான் சொல்கிறார்கள். கோவையிலும் அப்படித்தான். வட்டாரத்திற்கான பண்பாடு, மொழி என்பதையெல்லாம் சிறுகச் சிறுக இழந்து மொத்தமாக உலகமயமாகிக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் அடுத்த தலைமுறையில் முற்றாக இழந்துவிடக் கூடும். 

வெட்கம் பாராமல் சேகரித்து வைப்போம். முதல் தொகுப்புதான் இது. வாட்ஸப் குழுமத்திலேயே இன்னமும் நிறையச் சொலவடைகள் இருக்கின்றன. அவ்வப்போது தொகுத்து எழுதுகிறேன். குழுவினருக்கு நன்றி.

1. ஆட மாட்டாத தேவடியாளுக்கு வீதி கோணையாம்
அவளுக்கு ஆடத் தெரியாது. ஆனால் நிலம் கோணலாக இருக்கிறது என்றாளாம்

2. அவ அத்தனையும் தின்ன ஆராயி...விதைக் கம்பையும் தின்ன வீராயி
விதைக்கு வைத்திருந்த கம்பையும் தின்றுவிட்ட வீராயி- அவ்வளவு விவரமான பெண்மணி.
3. குருவி குடிச்சா குளம் வத்தி தீரப் போகுது?

4. எச்சைய முழுங்கியா தாகம் தீரப் போகுது?

5. அப்பங்கிட்ட அவுசாரி போன பாவம் அழுது அழுது தீருமா?

6. பொழப்பத்த தட்டான் பொண்டாட்டிய தராசுல வெச்சு நிறுத்தானாம்
பொழப்பத்த- பிழைப்பு இல்லாத

7. கல்யாண வூட்டுலயே கட்டிப்புடிச்சு அழுவானாம்...எழவூட்ல சொல்லவா வேணும்?
எழவூடு- மரணம் சம்பவித்த வீடு

8. பந்தகாலுக்கெல்லாம் சாமி வந்தா எந்த காலைத்தான் புடிக்கிறது
பந்தக்கால் - பந்தல் அமைப்பதற்காக நட்டப்படும் தாங்கு கோல்கள்.

9. அப்பக் காணோம் இப்பக் காணோம் அப்பஞ் செத்த எழவுல காணோம்...இன்னைக்கி எழையறானுக
எப்பவுமே வராதவர்கள் இன்று வந்து குழாவுகிறார்கள்

10. சாணிச்சட்டியும் சருவச் சட்டியும் ஒண்ணாயிருமா?

11. சயனஞ் சொல்லுற பல்லி சாணிச்சட்டியில விழுந்த கணக்கா..
சயனம் - சகுனம்

12. ஆசை இருக்குதாம் தாசில் பண்ண...அம்சம் இருக்குதாம் கழுதை மேய்க்க

13. வீம்புக்கு சூரிக்கத்தியை முழுங்குனா பொச்சக் கிழிச்சுட்டுத்தான் வெளிய வரும்
சூரிக்கத்தி- கூரான கத்தி

14. கொழுத்துப் போயி கொசத்திகிட்ட போனா இழுத்து வெச்சு சூளையிலதான் வெப்பா

15. கோவணத்துல ரெண்டு காசு இருந்தா கோழி கூப்புட பாட்டு வரும்

16. மூக்கு மசிரைப் புடுங்கி வீசிட்டா பாரம் கொறையுமா?

17. குத்தாலத்துல குளிக்கப் போறதுக்கு கும்பகோணத்துலேயே துணிய அவுக்குறானாம்

18. சொப்பனத்துல கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா?

19. தீ தீயா திங்கறவன் கரி கரியாத்தான் பேளுவான்

20. பாம்பு திங்குற ஊர்ல சிக்குனா நடுத்துண்டு நமக்குன்னுதான் திங்கணும்

21. ஆனை மேல ஏறி பாறையை உழுவன மாதிரி...நாய் மேல ஏறி பீயை உழுவுன மாதிரி

22. ராவுத்தரே புள்ளு திங்கறானாம்...குதிரைக்கு கோதுமை ரொட்டி கேக்குதா?

23. அவசரக்கார மாமியா கோழிச்சாத்துல சூத்து கழுவுன மாதிரி

24. கேழ்வரகுல நெய்வடியுதுன்னா கேட்கிறவனுக்கு புத்தி எங்க போச்சு?

25. கட்டுச் சோத்து மூட்டையில பெருச்சாளியை வெச்சு கட்டுன மாதிரி..
கட்டுச் சோத்து மூட்டை- புளிசாதம் மாதிரி விரைவில் கெட்டுப் போகாத உணவுப்பண்டங்களைக் கட்டி எடுத்துக் கொண்டு பயணம் செல்வார்கள். 

26. இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதை புடிக்கிறானாமா

27. ஊருக்கு போறவன் வேலை சொல்லிட்டு போனா ஊரே சேர்ந்து செஞ்சாலும் அவன் வர்றதுக்குள்ள வேலை முடியாது

28. பந்திலயே இடமில்லையாமா..ஆனா இலை ஓட்டைன்னு ஒப்பாரி வெச்சானாமா...

கொங்குச் சொலவடைகள் முந்தைய பதிவு: இணைப்பு

யாசின் அக்கா

அவிநாசியில் சித்தி வீடு இருக்கிறது. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகள் அங்கேதான் கழியும். சித்தி வீட்டுக்குப் பின்னால் ஒரு இசுலாமியக் குடும்பம் இருந்தது. அம்மா இல்லாத குடும்பம். இரண்டு மகள்களும் ஒரு மகனும் அந்தப் பெரியவருக்கு இருந்தார்கள். மூத்த மகள் யாசின் அக்கா. கடைசிப் பையன் சையத் இப்ரஹிம். என்னை விட மூன்று வயது கூடுதல். நடு அக்கா பெயர் மறந்துவிட்டது. பெரியவர் அவிநாசியில் ஒரு மளிகைக்கடையில் வேலையில் இருந்தார். சைக்கிள் வைத்திருந்தார். அதை எடுத்துக் கொண்டு அதிகாலையில் கிளம்பினால் இரவுதான் வீடு திரும்புவார். யாசின் அக்கா பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவரிடம்தான் மொத்த வீட்டுப் பொறுப்பும் இருந்தது.  அழகு என்பதை நான் முதன் முதலாக புரிந்து கொண்ட முகம் அது. பளீர் வெள்ளை. அளவாகச் சிரிப்பார். அக்கா என்றுதான் அழைப்போம் ஆனால் ஒருவகையிலான ஈர்ப்பு இருந்தது. எப்பொழுதும் என்னுடனேயே அவர் விளையாட வேண்டும். அணிகளாகப் பிரிந்து விளையாடும் போது அந்த அக்கா என்னை அவரது அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசைகள் இயல்பாகவே இருந்தது. ஆசைக்கு மாறாக ஏதாவது நடக்கும் போது பொருமித் தள்ளிவிடுவேன். எதற்காகப் பொருமுகிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருவேளை அந்த அக்காவுக்கு தெரிந்திருக்கலாம். அதற்கும் அதே அளவில்தான் சிரிப்பார். 

மூன்றாம் வகுப்பு விடுமுறையில் சித்தி வீட்டில் இருந்த போதுதான் யாசின் அக்கா காணாமல் போனார். அன்றைய தினம் மட்டும் பரபரப்பாக பேசினார்கள். யாசின் அக்காவின் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று தடுத்து வைத்தார்கள். பிறகு எங்களைப் போன்ற சிறியவர்களுக்குத் எதுவும் தெரியக் கூடாது என்று மறைத்தார்கள். என்னதான் முயற்சி செய்தும் சரியான விவரம் தெரியவில்லை. அந்த அக்கா யாருடனோ ஓடிப் போனதாகவும், யாரோ கொலை செய்துவிட்டதாகவும் என்று விதவிதமாகப் பேசினார்கள். அத்தனையும் அரசல் புரசலான உரையாடல். பெரியவர் அதன் பிறகு கோபிக்கு குடி மாறினார்.  சையத் எங்களுடன் விளையாடுவான் என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவனை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்த்தார்கள். எப்பொழுதாவது சந்தித்துக் கொள்வோம். அப்பா மட்டும் அவ்வப்போது பெரியவரை மார்கெட்டில் சந்தித்ததாகச் சொல்வார். தக்காளிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். 

சையத்தின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக அவிநாசி சித்தப்பா கடிதம் அனுப்பிய பிறகு அவனைப் பார்ப்பதற்காக நானும் அப்பாவும் சென்றிருந்தோம். உருக்குலைந்து போயிருந்தான். மந்திரித்த கயிறுகளைக் கட்டிவிட்டிருந்தார்கள். கழுத்தில் பெரிய பட்டையான தாயத்தைக் கட்டியிருந்தான். அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். நிலத்தை நகங்களால் கீறிக் கொண்டிருந்தான். அப்பாவும் நானும் டிவிஎஸ் 50யில் சென்றிருந்தோம். வண்டி மீது வந்து அமர்ந்து கொண்டான். பெரியவர் வந்து அவனை வீட்டுக்குள் இழுத்துச் செல்வதற்கு படாதபாடுபட்டார். 

சையத் ஏதோ பேச விரும்புகிறான் என்று தெரிந்தது. அவ்வப்போது சிரித்தான். எனக்கு பயமாக இருந்தது. எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவிடம் போய்விடலாம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிளம்புவதற்கு முன்பாக அப்பாவிடம் பெரியவர் அழுதது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. அப்பா பத்தோ அல்லது இருபதோ பணம் கொடுத்தார். அவர் வாங்கிக் கொள்ளவில்லை. நடு அக்கா குறித்துக் கேட்ட போது மேட்டுப்பாளையத்தில் அவரது தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொன்னார். எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டேன். அடுத்த சில மாதங்களில் வீட்டில் மின்சார வயரை பற்களில் கடித்து சையத் இறந்து போனான்.

அம்மாவும் அப்பாவும் இழவுக்குச் சென்று வந்தார்கள். பெரியவர் உடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். ஏனோ வெறுமையாக உணர்ந்தேன். 

சற்றே வளர்ந்த பிறகு மார்கெட்டுக்குச் செல்லும் போதெல்லாம் பெரியவரைப் பார்ப்பேன்.  அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதுவும் பேசிக் கொண்டதுமில்லை. யாசின் அக்காவுக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி மட்டும் ஓயாமல் அலைந்து கொண்டேயிருந்தது. சித்தியிடம் எப்பொழுது கேட்டாலும் ‘ஆளாளுக்கு ஒன்னு சொல்லுறாங்க’ என்றுதான் சொல்வார். கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் பெரியவரிடம் முதன்முறையாகப் பேசினேன். தக்காளியை மூட்டைகளிலிருந்து பிரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். அழுக்கேறிய ஜிப்பாவும் லுங்கியும் அணிந்திருந்தார். அவிநாசி பாய் என்று கேட்டால் அவரைப் பற்றிய அடையாளம் சொல்வார்கள்.

என்னைப் பற்றிய விவரங்களைச் சொன்ன பிறகு ‘நல்லா இருக்கியா? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? சித்தி வீட்டுக்கு போனீங்களா?’ என்றெல்லாம் கேட்டார். அப்பொழுது அவர் தனியாகத்தான் வசித்தார். அவரே சமைத்துக் கொண்டார். அவ்வப்பொழுது கடைகளில் சாப்பிட்டு வந்தார். அவரிடம் யாசின் அக்கா பற்றிக் கேட்டேன். அவருக்கு அது குறித்துப் பேச விருப்பமேயில்லை. வேறு என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. சையத் ஏன் அப்படி ஆனான் என்றேன். அக்கா செத்த பிறகு தனியாகவே இருந்ததும் அந்தச் சம்பவம் அவனுக்குள் உருவாக்கியிருந்த அழுத்தமும் அவனது மனநிலையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அவன் தனக்குத் தானே பேசத் தொடங்கிய காலத்திலேயே கவனித்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேர உழைப்பைக் கோரும் பெரியவரின் வேலைக்கு இடையில் சையத்தை அவரால் கவனிக்கவே முடியவில்லை. பள்ளிக்கூடம் செல்லாமல் அவன் முரண்டு பிடித்த போது அடித்திருக்கிறார். பிறகு விட்டுவிட்டார். அவன் தனியாகச் சுற்றி எதை எதையோ மனதுக்குள் உழப்பி சீரழித்துக் கொண்டான். வீட்டில் கயிறில் கட்டி வைத்தார். யாராவது வீட்டில் இருக்கும் போது மட்டும் அவிழ்த்துவிட்டார்.

அதன் பிறகு ஒன்றிரண்டு முறை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு தொனியில் யாசின் அக்கா பற்றிக் கேட்பேன். வெகு தயக்கத்திற்குப் பிறகுதான் யாசின் அக்காவைப் பற்றிச் சொன்னார். அவரைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். பொள்ளாச்சி தாண்டி கேரளாவின் எல்லைக்குள் சீரழிக்கப்பட்டு வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இவருக்குத் தகவல் கிடைத்துச் சென்ற போது உடல் சிதைந்து கிடந்திருக்கிறது. அடையாளம் காட்டி அங்கேயே அடக்கம் செய்துவிட்டு வந்திருக்கிறார். பெரியவரின் பூர்விகம் நாகூர் பக்கம். யாருக்கும் தகவல் தெரியாது. இந்தச் சம்பவம் ஏதோ ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு அது கிடப்பில் போடப்பட்டது. வழக்கு நடத்துகிற தெம்பும் வசதியும் பெரியவருக்கு இல்லை. மகனை அழைத்துக் கொண்டு கோபி வந்துவிட்டார். அதோடு சரி.

கிட்டத்தட்ட குடும்பமே முடிந்துவிட்டது. ஓ.ஏ.பி பணம் மாதாமாதம் வந்து கொண்டிருந்தது. வாங்கிக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர் சில வருடங்களுக்கு முன்புதான் இறந்தார். உள்ளூர் முஜி சொன்ன பிறகுதான் அவர் இறந்து போனது தெரியும். தனது கடைசிக் காலத்தில் யாசின் அக்காவின் அளவான சிரிப்பை நினைத்திருக்கக் கூடும். சையத் இப்ரஹிமின் கனவுகளை நினைத்திருக்கக் கூடும். அவரது மனைவியின் ஆசைகளை அசை போட்டிருக்கக் கூடும். எதுவுமேயில்லாமல் வெறுமையாக காலத்தை ஓட்டியிருக்கக் கூடும். மரணச் செய்தியைக் கேட்டவுடன் ‘ப்ச்..பாவம்’ என்று மட்டும் சொல்லத் தோன்றியது. வேறு என்ன சொல்வது?

குற்றவாளிகளும் பாதிக்கப்படுகிறவர்களும் எல்லா மதங்களிலும்தான் இருக்கிறார்கள். எல்லா சாதியிலும்தான் இருக்கிறார்கள். குற்றத்தை குற்றமாக மட்டும் பார்ப்பதைத் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டோம். எல்லா குற்றங்களுக்கும் மதச் சாயமும் சாதி முத்திரையும் குத்திக் கொண்டிருக்கிறோம். எவன் எங்கே சாவான் எப்படி குளிர்காயலாம் என்கிற அபத்தமான அரசியலை ஆளாளுக்குப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கொன்றவன் குற்றவாளி. அவன் எவனாக இருந்தாலும் பிடித்து நொங்கு எடுக்கச் சொல்லி கோருவோம். செத்தவன் மனிதன். அவன் யாராக இருந்தாலும் அவனுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவோம். இப்படியெல்லாம் கோரிக்கை வைப்பது நகைச்சுவையாக மாறிவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போதே திகிலாக இருக்கிறது.

Jun 28, 2016

என்னவொரு வில்லத்தனம்?

நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறது? ஆம் அதேதான்.

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது கைவசம் செல்போன் எதுவுமில்லை. 2004 ஆம் ஆண்டு அது. அப்பொழுதுதான் செல்போன் மெதுவாக பரவலாகிக் கொண்டிருந்தது. சம்பளம் வாங்கித்தான் அலைபேசி வாங்க வேண்டும் என்று வீராப்பாகத் திரிந்தேன். வேலூர் பல்கலைக்கழகத்தைப் பற்றித்தான் தெரியுமல்லவா? பூங்கா தோற்றுவிடும். திரும்பிய பக்கமெல்லாம் வண்ணத்துப் பூச்சிகள்தான். ஜீன்ஸ் அணிந்த வண்ணத்துப் பூச்சிகள். பேசுவதற்கு தைரியம் வேண்டும். எனக்கு அது இல்லை. பேசுகிறவனையெல்லாம் பார்த்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பேன்.

நமக்கும் ஒரு வடிகால் தேவை அல்லவா? இணையத்தில் ரெடிஃப் சாட்டிங் வசதி பிரபலமாகியிருந்தது. சாட்டிங் அறைகள் இருக்கும். அங்கே புகுந்து தூண்டில் போட வேண்டும். மீன் சிக்கியவுடன் ப்ரைவேட் சாட்டிங்கை ஆரம்பித்துவிடலாம். இதில் என்ன பிரச்சினையென்றால் பெரும்பாலான கடோத்கஜன்கள் பெண்கள் பெயரிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதுவும் கவர்ச்சியான பெண்கள் பெயராக இருக்கும். மாட்டினால் நிறையப் பேசிவிட்டு கடைசியில் வக்கனையாக ‘டேய் நாயே...நான் பையண்டா’ என்று சொல்லிவிட்டு கெக்கபிக்கே என்று சிரிப்பார்கள். நல்லவேளையாக அந்தக் காலத்தில் திரைச்சொட்டு (Screenshot) எல்லாம் இல்லை. வழிந்து சிக்கி மானம் போனது நமக்கு மட்டும்தான் தெரியும். கமுக்கமாகத் துடைத்துக் கொள்ளலாம்.

அப்படியான கிளுகிளு காலத்தில் ஒரு பெண்ணிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தேன். பிரீத்தி என்று பெயர். எப்பொழுது சாட்டிங் அறைக்குள் நுழைந்தாலும் அவள் இருப்பாள். பேசினோம் பேசினோம் வாழ்க்கையின் சகலத்தையும் பேசினோம். என்னிடம் செல்போன் எண்ணைக் கேட்டிருந்தாள். இல்லையென்று சொல்வதற்கு வெட்கம். அறைத்தோழனின் எண்ணைக் கொடுத்தேன். அவன் வெடக்கு வெடக்கு என்று வெகு உயரம். கன்னங்கரேல் நிறம். சென்னையில் படித்த பையன். எந்நேரமும் எஃப்.எம்மில் பாடல் கேட்பான். அதை அணைத்தால் பெண்களிடம் ஃபோனில் பேசுவான். இரண்டும் இல்லையென்றால் குப்புறப்படுத்துத் தூங்குவான். ப்ரீத்தியிடம் அவனுடைய எண்ணைக் கொடுக்கும் போது கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒருவேளை அவள் அவனிடம் விழுந்துவிடக் கூடும் என்ற பயம். இருந்தாலும் அப்பொழுது வேறு வழியில்லை.

அவளும் அவளுடைய எண்ணை என்னிடம் கொடுத்திருந்தாள். எண்களைப் பரிமாறிய பிறகு ஒன்றிரண்டு நாட்கள் ஓடியிருக்கும். ஏதோ வழிந்த பிறகு வழக்கம் போல ‘நான் பையண்டா’ என்றான். இதயமே சுக்கு நூறாகிப் போய்விட்டது. இப்படியே எவ்வளவு பேரிடம்தான் அல்லல்படுவது? என்னை மாதிரி இளிச்சவாயன்கள் சிக்கினால் இவர்களுக்குத் தொக்காகப் போய்விட்டது. இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து பெண்ணின் பெயரில் கணக்குத் தொடங்கி அதே சாட்டிங் அறைக்குள் நுழைந்து ‘நான் ஒரு பெண்..என்னிடம் பேசுகிறவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்று நான்கைந்து சாட்டிங் அறைகளில் அவனுடைய எண்ணைக் கொடுத்துவிட்டேன். செத்திருப்பான் என்று நினைக்கிறேன். அவனும் கேடிப் பயல்தான். நான் அவனிடம் கொடுத்திருந்த எண்ணை என்னுடைய எண் என நினைத்து அதே சாட்டிங் அறைகளில் என் அறைத்தோழனின் எண்ணைக் கொடுத்துவிட்டான். அறைத் தோழனுக்கு பச்சை, மஞ்சள் வண்ணங்களில் அழைப்பு வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் ‘இல்லைங்க...நான் இல்லை’ என்று சாந்தமாகத்தான் அழைப்புகளுக்கு பதில் சொன்னான். அவனும் எத்தனை பேரைத்தான் தாங்குவான்? பிறகு போய்யா வாய்யா என்று ஆரம்பித்து போடா வாடா என்று நீடித்து கடைசியாக _______ ___________ வார்த்தைகளில் வந்து நின்று அப்படியும் சமாளிக்க முடியாமல்தான் அணைத்து வைத்தான். 

‘எந்த நாய் இதெல்லாம் பண்ணுதுன்னே தெரியல’ என்று புலம்பினான். அவன் குறிப்பிட்ட நாயானது எதுவுமே தெரியாதது போல திரும்பிப் படுத்துக் கொண்டு ப்ரீத்தி (என்கிற) கடோத்கஜனுக்கு அதே நிலைமையாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. 

இதை எதற்கு இப்பொழுது சொல்கிறேன்? காரணமிருக்கிறது. மூன்றாம் விதிதான்.

நேற்றிரவு மட்டும் நாற்பத்தியிரண்டு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. நாம்தான் பெரிய அப்பாடக்கர் அல்லவா? அதனால் பாராட்டு மின்னஞ்சல்கள் என்று நினைத்து ஒரு வினாடி சந்தோஷமாகத்தான் இருந்தது. பார்த்தால் அத்தனையும் வேலை கேட்டு வந்திருந்த மின்னஞ்சல்கள். அத்தனை பேரும் Freshers. அப்படியெல்லாம் எதையும் எடக்குமடக்காக எழுதவில்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மின்னஞ்சல்கள் வந்து கொண்டேயிருந்தன. மின்னஞசல் அனுப்பியிருந்த ஒருவரை அழைத்து ‘எதுக்குங்க எனக்கு ரெஸ்யூம் அனுப்பியிருக்கீங்க’ என்றேன். அவர் தினமும் ஏகப்பட்ட பேருக்கு வேலை கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறவர் போலிருக்கிறது. குழம்பிவிட்டார்.

‘உங்களுக்கா? தெரியலையே’ என்று யோசித்தவர் தீடிரென்று ஞானோதயம் வந்தவராக ‘வாட்ஸப்பில் வந்திருந்துச்சே’ என்றார். 

யாரோ வினை வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. ‘அந்த மெசேஜை எனக்கு அனுப்பறீங்களா?’ என்றேன். அனுப்பி வைத்திருந்தார். 

ஏதோ நிறுவனத்தில் ஆயிரத்து ஐநூறு ஆட்கள் தேவைப்படுகிறார்களாம். மாதம் முப்பதாயிரம் சம்பளம். பி.ஈ.முடித்தவர்கள் தேவை. நேர்காணல் எதுவுமில்லை. உடனடி வேலை. கவர்ச்சி வலை விரித்து ரெஸ்யூமை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் என்று என்னுடைய மின்னஞ்சலைக் கொடுத்திருக்கிறார் அந்தப் புண்ணியவான். கடைசியில் #verified என்று வேறு போட்டிருக்கிறார். செத்தான் சேகரு என்று மனதுக்குள் நினைத்து அனுப்பியிருக்க வேண்டும். நேற்றுதான் இந்த செய்தி பரவத் தொடங்கியிருக்கிறது. இன்னும் எத்தனை மின்னஞ்சல் வந்து சேரும் என்று தெரியவில்லை. இந்தியாவில் எத்தனை பேர் பி.ஈ முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை எனக்குப் புரிய வைக்கிறார்கள். இன்னும் ஆறேழு மாதங்களுக்காவது வந்து கொண்டேயிருக்கும்.

ஆனால் இந்த ஐடியா நன்றாக இருக்கிறது. 

வாட்ஸப்பில்தான் எதை அனுப்பினாலும் மற்ற குழுக்களுக்கு அனுப்பி வைக்கும் ஆட்கள் இருக்கிறார்களே. இனி யாராவது வால் ஆட்டினால் இதைத்தான் துணிந்து செயல்படுத்தலாம் என்றிருக்கிறேன். மின்னஞ்சல் வந்தால் வெகு எளிது. க்ளிக் செய்து அழித்துவிடலாம். அலைபேசி எண்ணை வாங்கி அனுப்பி வைக்க வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நம்மவர்களிடம் என்னவொரு வில்லத்தனம்? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.

Jun 27, 2016

என்ன செய்யலாம்?

நேற்று எழுதிய பதிவுக்கு எதிர்பாராத எண்ணிக்கையிலான விசாரிப்புகள் வந்திருக்கின்றன. ஏற்கனவே இது குறித்து சில தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தவறு எதுவுமில்லை. அதேசமயம் விசாரித்தவர்கள் ஆசைக்காகக் கேட்காமல் உண்மையிலேயே உதவுகிற எண்ணத்தில் மனப்பூர்வமாகக் கேட்டிருக்க வேண்டும் என்று கருப்பராயனை வேண்டிக் கொள்கிறேன்.

சில வழிமுறைகள்-

மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட விரும்பினால் ஒரு சிலர் இணைந்து குழுவாகவும் செயல்படலாம் அல்லது தனித்தனியாகவும் செயல்பட முடியும். இரண்டிலுமே நிறை குறைகள் இருக்கின்றன. குழுவாகச் செயல்படும் போது அர்பணிப்பு(Commitment)இருக்கும். குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் அவ்வப்போது சந்தித்துப் பேசும் போது இதுவரை என்ன செய்தோம் என்பதைச் சொல்வதற்காகவாவது உருப்படியாக வேலை செய்வோம். ஏதேனும் சந்தேகம் என்றால் குழுவின் சக உறுப்பினர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ‘வாழை’ அமைப்பினர் இப்படித்தான் செயல்படுகிறார்கள். ஒரு குழுவாகச் சென்று ஒரு கிராமத்தில் இருக்கும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தை ஒரு தன்னார்வலருக்கு ஒதுக்கப்படுகிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு அந்தக் குழந்தையை அந்தத் தன்னார்வலர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். மாதம் ஒரு முறை சந்திக்கிறார்கள். அவ்வப்பொழுது தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள். எப்பொழுதாவது கடிதம் கூட எழுதுகிறார்கள். இதே திட்டத்தை கல்லூரி அளவில் செயல்படுத்தலாம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் ஏழு அல்லது எட்டு கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

முடிந்தவரைக்கும் அரசுக் கல்லூரிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமப்புற கல்லூரிகள்தான் முதல் இலக்காக இருக்க வேண்டும் அல்லது கிராமப்புறங்களிலிருந்து வந்து நகர்ப்புற கல்லூரிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள். களமிறங்கிப் பார்த்தால்தான் தெரிகிறது- நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது.

‘என்னால இப்படி டைம் டேபிள் போட்டு வேலை செய்ய முடியாதுப்பா..எப்பொழுது முடியுமோ அப்பொழுது செய்கிறேன்’ என்று சொல்கிறவர்கள் குழுவோடு இணையாமல் தனியாகச் செயல்படுவதுதான் உசிதம். மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டால் சரி. ஒருவேளை அப்படியான மாணவர்கள் யாரும் தென்படவில்லையென்றால்  நமக்கு தோதான ஊரில் செயல்படும் கல்லூரிக்கு நேரடியாகச் செல்லலாம். எந்தக் கல்லூரி முதல்வரும் சந்திக்க முடியாது என்று தவிர்க்கமாட்டார்கள். அங்கே விருப்பத்தையும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் சொன்னால் ஒரு மாணவரை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஆரம்பகாலத்தில் ஒரேயொரு மாணவர் போதும். மாணவரின் படிப்பு, அந்தப் படிப்புக்கான எதிர்காலம் என்ன, வேலை வாய்ப்புகளுக்காக எவ்வாறு தயாரிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களைச் சொல்லிக் கொடுத்தால் போதும். இதுதான் அடிப்படையான உதவி. மேலதிகமாக எதை வேண்டுமானாலும் சொல்லித் தரலாம். நமக்கும் அந்த மாணவனுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அவர்கள் நம்மிடம் நெருங்குவார்கள். நாம் விறைப்பாக நின்றால் அவர்களும் விறைப்பாகத்தான் நிற்பார்கள். 

உள்ளூரிலும் அக்கம்பக்க நகரங்களிலும் வசிக்கிறவர்களுக்கு மேற்சொன்ன காரியம் செகளரியம். ஆனால் வெளிநாடுகளில் வாழ்கிறவர்களுக்கு இது அவ்வளவு சாத்தியமில்லை. என்னதான் இணையம், செல்போன் என்றாலும் மாணவர்கள் மனதுக்கு நெருக்கமாக தம்மை உணர்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அவரவரளவில் உதவ முடியும் என்றுதான் தோன்றுகிறது. 

நேற்று ஒரு கல்லூரியின் தாளாளரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 

பள்ளிகளில் விளையாட்டு வீரர்களாக இருக்கக் கூடிய மாணவர்கள் ஆரம்பத்தில் உற்சாகமாக இருப்பதாகவும் காலப் போக்கில் விட்டுவிட்டு வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் சொன்னார். என்ன காரணம் என்று கேட்டால் சரியான புரவலர் கிடைப்பதில்லை என்பதை முக்கியமான காரணமாகச் சொன்னார். எங்கேயாவது விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். போக்குவரத்துச் செலவு, ஷூ, பனியன் உள்ளிட்ட முக்கியமான செலவினங்களுக்குக் கூட அவர்களின் பெற்றவர்களிடம் போதுமான வருமானம் இருக்காது. மெது மெதுவாக விளையாட்டை விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரனுக்கு ஊட்டமிக்க உணவான முட்டை, பால், தானியங்கள், போக்குவரத்துச் செலவு, ஷூ உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் அதிகபட்சமாக மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்குள்ளாகத்தான் வரும். இது அதிகபட்சக் கணக்கு. வருடத்திற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய். இப்படி ஒரு தொகையைக் கணக்கு செய்து கொண்டு சரியான மாணவர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாணவனை அழைத்துப் பேசலாம். அவனது வளர்ச்சியைக் கண்காணிக்கலாம். ஒன்றில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்- வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்காக அந்த மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு நாமே வழிகோலிவிடக் கூடாது. எவ்வளவு தேவையோ அந்தத் தொகை மட்டும் கல்லூரி வழியாகக் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்துவிடுவது முக்கியம்.

மேலே எழுதியிருப்பது ஒரு வரைவுதான். ‘என்னால் எப்படி உதவ முடியும்?’ என்று கேட்டவர்களுக்காக எழுதியிருக்கிறேன். இந்த வரைவுகளை வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். ஏதாவதொரு வழிமுறை தோன்றும். இந்தக் கல்வியாண்டிலிருந்தே செயல்படுத்தத் தொடங்கலாம்.

முடிந்தவரை அவரவர் தமக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதைத்தான் வரவேற்கிறேன். ஆனால் தனியாகச் செயல்படுவது சாத்தியமில்லை என்று நம்புகிறவர்கள் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். எடுத்தவுடனேயே பிரம்மாண்டமான அளவில் இதைச் செயல்படுத்தப் போவதில்லை. Pilot mode தான். நான்கைந்து தன்னார்வலர்கள் மட்டுமே தேவை. 

முதல் மாணவியைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. சென்னையில் பொறியியல் படிக்கிறார். படிப்பது என்னவோ சென்னையில்தான். இன்னமும் கிராமத்தாளாகவே இருக்கிற மாணவி அவர். அவருக்கு வழிகாட்டியாகச் செயல்பட ஒரு பெண் வழிகாட்டி தேவை. பொறியியல் படித்தவராக இருந்தால் சரியாக இருக்கும். அவ்வப்பொழுது சந்தித்துப் பேசி அந்த மாணவியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். இரண்டு வருடங்களில் அந்த மாணவியை தம்மால் அடுத்த நிலைக்கு நகர்த்திவிட்டுவிட முடியும் என்று நம்புகிறவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். எல்லோருக்கும் இந்த முறை வாய்ப்பளிப்பது சாத்தியமில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும். இடையிடையே மாணவர்களைக் கண்டறியும் போது தன்னார்வலர்கள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அனுபவத்திலிருந்து மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி முறைகளைக் கண்டறிந்து வழிகாட்டிகளாகச் செயல்படுகிறவர்களுக்கான சிறப்பு பயிற்சி பயிலரங்குகளை நடத்தலாம். எவ்வளவோ இருக்கிறது.

பெரிய காரியம்தான். பணத்தை நன்கொடையாளர்களிடமிருந்து வாங்கி கல்வி உதவித் தொகை என்று கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நிசப்தம் அறக்கட்டளையின் அடுத்த கட்டச் செயல்பாடாக இதுதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வருடத்திற்கு பத்து கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டலைச் செய்தால் கூட போதும். அவர்கள் மேலே வரட்டும். தங்களுக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும். அதன் விளைவு மிகப்பெரியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நம் சமூகத்திற்கு நம்மால் நிறையச் செய்ய முடியும். தயங்கிக் கொண்டேயிருந்தால் எதுவுமே நடக்காது. துணிந்து இறங்கிவிட வேண்டும். மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

Jun 26, 2016

மூன்றாம் நதி- தினமலர்

இன்றைய ( 06 ஜூன், 2016) தினமலரில் மூன்றாம் நதி நாவல் குறித்து விமர்சனம் வெளியாகியிருக்கிறது. 


அநேகமாக எனது எழுத்துக் குறித்து பொது ஊடகத்தில் விரிவாக எழுதப்பட்ட முதல் விமர்சனக் கட்டுரை இதுதான். அறக்கட்டளை, சமூகப்பணிகள் குறித்தான பதிவுகள் வெளியாகியிருக்கின்றன. நேர்காணல்கள் கூட வெளியாகியிருக்கின்றன. ஆனால் எழுத்து, புத்தகங்கள் பற்றியெல்லாம் எதுவும் வெளியானதில்லை. அதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம்- நாம் எழுதுவது இன்னமும் மேம்பட வேண்டும் என்று மட்டும்தான் நினைத்துக் கொள்வேன். அதற்கு மேல் வேறு எதையும் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

என்னதான் மற்றவர்கள் நம்முடைய பிற காரியங்களைப் பாராட்டினாலும் எழுத்துக்கான மரியாதைதான் உள்ளூர மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. எழுத்துதான் இந்தச் சிறு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. எனவே அந்தச் சந்தோஷம் இருக்கத்தான் செய்யும். 

வெளிப்படையாகச் சொன்னால் விருதுகள் குறித்தெல்லாம் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இல்லை. பெரும்பாலான விருதுகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை அறிந்தும் இருக்கிறேன். ஆனால் நாம் எழுதியதை இப்படி யாராவது விமர்சிக்கிறார்கள் அல்லவா? உண்மையிலேயே அது உற்சாகமளிப்பதாக இருக்கிறது.

நல்லதோ கெட்டதோ பொதுவெளியில் நாம் எழுதுவதை வாசித்துப் பேசுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதைப் பிரசுரம் செய்வதற்கு ஒரு ஊடகம் தயாராக இருக்கிறது. பிரசுரமானதைப் பார்த்துவிட்டு ‘உங்க புத்தகம் பத்தி வந்திருக்கு’ என்று உடனடியாக நம்மிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் இருக்கிறார்கள். இது போதாதா? 

விமர்சனக் குறிப்பை எழுதிய தூயனுக்கும் வெளியிட்ட தினமலருக்கும் நன்றி. 

மாணவன்

ஒரு மாணவன். இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசியிருக்கிறோம். இளங்கலை அறிவியல் (பி.எஸ்.ஸி கெமிஸ்டரி) முடித்திருக்கிறான். கல்லூரியில் முதல் இடம் அவன்தான். எண்பத்தைந்து சதவீத மதிப்பெண்கள். பல்கலைக்கழகத்தின் தகுதிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருக்கிறான். அடுத்ததாக முதுகலை அறிவியல் படிப்பதற்கான முயற்சியில் இருந்தான். அன்றைய தினம் அவனிடம் ‘நேரில் பேசலாமா?’ என்றேன். அப்பொழுது மணி இரவு பத்தரை இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைப் பிடித்து அந்த நேரத்திலும் வந்துவிட்டான். மார்கெட் முன்பாக நின்று பேசிக் கொண்டிருந்தோம். அத்தனை கொசுக்கடியிலும் படிப்பு பற்றித்தான் பேசினான். குடும்பம் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் நான் ஆர்வமாக இருந்தேன். 

‘அப்பா டிரிங்க்ஸ் பார்ட்டி சார்’- குடித்துவிட்டுக் குப்புறப் படுத்துக் கிடப்பதுதான் வேலை. ஒரு அக்கா. திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அம்மா நகமலை அடிவாரத்தில் இருக்கும் வறக்காடுகளில் கூலி வேலைக்குப் போகிறார். மழை இல்லாததால் வேலை கிடைப்பதில்லை. எப்பொழுதாவது கிடைக்கிற வேலை முழு நாளுக்கானது என்றால் இருநூறு ரூபாயும் அரை நாள் வேலை என்றால் நூறு ரூபாய் கூலியும் கிடைக்கும் என்றான். அம்மா சம்பாதிப்பதையும் சேர்த்து அப்பா குடித்துவிடுவார் போலிருக்கிறது.

இளங்கலை படிப்பைப் படித்தது அரசு உதவி பெறும் கல்லூரிதான் என்றாலும் கொஞ்சமாவது ஃபீஸ் கட்ட வேண்டும் அல்லவா? கிடைக்கிற விடுமுறை தினங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பந்தி பரிமாறச் சென்றுவிடுவானாம். அப்படித்தான் இளங்கலை படிப்புக்கான செலவைச் சமாளித்திருக்கிறான். கிராமப்புறங்களில் இருந்து படிக்கச் செல்லும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஏழ்மை என்கிற பிரச்சினை உண்டு. அது பெரிய விஷயமில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களிடம் ஒரு தாழ்வுணர்ச்சி இருப்பதை கவனிக்க முடிகிறது. தங்களைத் தாங்களே சுருட்டி வைத்துக் கொள்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பாகச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படிக்கிற மாணவிக்கு காசோலை என்ன பெயரில் வேண்டும் என்பதை விசாரித்துச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகும் அதே பதிலைச் சொன்னாள். வருத்தமாகத்தான் இருந்தது. கலந்தாய்வின் போது தமிழகத்தில் தகுதிப் பட்டியலில் முதல் நூறு இடத்திற்குள் இருந்தவள். தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்த பிறகு எவ்வளவு துணிச்சலுடனும் தெளிவிடனும் இருந்திருக்க வேண்டும்? அந்த இடத்தில் எதுவும் பேச இயலவில்லை.

கிராமப்புற மாணவர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் வெறுமனே படிப்புச் செலவை வழங்குவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை என்று உணர்ந்த தருணம் அது. அவர்களின் ஆளுமை உருவாக்கத்திலிருந்து எதிர்காலத்திற்கான திட்டமிடல் வரைக்கும் நம்மால் எவ்வளவோ செய்ய முடியும். ‘நான் ஏதாச்சும் செய்ய விரும்புகிறேன்’ என்று ஆர்வமாக முன்வருகிறவர்களிடம் இப்பொழுதெல்லாம் சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. பணம் கொடுப்பதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தச் சமூகம் நம்மிடம் கோருவது நம்முடைய நேரத்தைத்தான். அதைக் கொடுப்பதற்குத்தான் ஆட்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு அமைப்புடன் அல்லது குழுவுடன் சேர்ந்துதான் உதவ வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு கிராமப்புற மாணவனுக்கு நம்மால் முடிந்தளவு அவனது அறிவை செழுமைப்படுத்திவிட்டால் போதும். இன்றைக்கு பெரும்பாலான கல்லூரிகள் வெறும் கட்டிடங்களாக மட்டும்தான் இருக்கின்றன. அதற்குள் அனுப்பி வைத்துவிட்டு ஆயிரக்கணக்கான பெற்றவர்கள் கனவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய மாணவர்களுக்கான அவனுக்கான பாதைகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று காட்டினால் அதுவே பேருதவி. 

அத்தனை மாணவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. விதிவிலக்குகள் உண்டு. முதல் சில பத்திகளில் சொன்ன மாணவன் அப்படிப்பட்டவன். 

‘கெமிஸ்டரியில் ரெண்டு இருக்கு சார்..ஆர்கானிக்...இன்னொன்னு இன்-ஆர்கானிக். ஆர்கானிக்ன்னா....’ சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன். 

நான்கைந்து பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்திருக்கிறான். கிட்டத்தட்ட அத்தனை பல்கலைக்கழகங்களிலும் கிடைத்திருக்கிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருடத்திற்கு லட்சக்கணக்கில் செலவு பிடிக்கிறது. அதைத் தன்னால் சமாளிக்க முடியாது என்று அடுத்தபடியாக திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பினான். பணத் தேவையைச் சொன்னான். உடனடியாக சம்மதித்துவிட முடியாது என்பதால் அடுத்த வாரத்திற்குள் பணத்தை ஏற்பாடு செய்துவிடுவதாக சொல்லியிருந்தேன். ரமேஷ் விசாரித்துச் சொன்னார். ரமேஷ் அரசு மருத்துவமனையில் ஆலோசகராக இருக்கிறார்.

‘அண்ணா...பையன் வீட்டுக்குப் போனேன்...வீட்டைப் பார்த்தாவே ரொம்பக் கொடுமையா இருக்கு...தாராளமா கொடுக்கலாம்’. மதுரை மணிகண்டன், சென்னை சுந்தர், கோயமுத்தூர் சுந்தர், ரமேஷ் போன்றவர்கள் விசாரித்துச் சொன்னால் சரியாக இருக்கும்.

காசோலை அனுப்பி அது மாணவன் கையில் வந்து சேருகிற வரையிலும் அவகாசம் இல்லை. ‘எப்போ கலந்தாய்வுக்கு போகணும்?’ என்று கேட்ட போது அடுத்த நாள் அதிகாலையில் கிளம்புவதாகச் சொன்னான்.  ‘நான் இன்னைக்கு ராத்திரி பத்து அல்லது பத்தரை மணிக்கு வந்து சேர்ந்துடுவேன்...வாங்கிட்டு கிளம்ப முடியுமா?’ என்ற கேள்வியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தோம். சொன்ன இடத்தில் ஒன்பது மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கியிருந்தான். வந்து சேரும் போது பதினொன்றாகியிருந்தது. பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கான காசோலை. ஏதாவது சொல்லி பேச்சை மாற்ற விரும்பினேன். காசோலையை வாங்கிக் கொண்டு கண்ணீர் கசிந்தான். ‘திண்டுக்கல்லுக்கு இங்கே இருந்தே கிளம்பறியா?’ என்றேன். நள்ளிரவு தாண்டி இரண்டே முக்கால் மணிக்கு திண்டுக்கல்லுக்கு வண்டி கிளம்புவதாகச் சொன்னான். அதற்குள்ளாக வீட்டுக்குச் சென்று சான்றிதழ்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பிரச்சினை என்னவென்றால் பதினோரு மணிக்கு மேல் அவனுடைய கிராமம் வரைக்கும் பேருந்து இல்லை. பக்கத்தில் இருக்கும் டவுன் வரைக்கும்தான் பேருந்து உண்டு. அதன் பிறகு ஆறேழு கிலோமீட்டர் நடக்க வேண்டும். நள்ளிரவில் நடந்து சென்று சான்றிதழ்களை எல்லாம் எடுத்துக் கொண்டு திரும்ப நடந்து வந்து பேருந்தைப் பிடிக்க வேண்டும். ‘எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திருக்கலாம்ல’ என்று கேட்ட போது ‘செக்கை வாங்கிட்டு போய் அம்மாகிட்ட கொடுத்து வாங்கணும்’ என்றான். அனுப்பி வைக்கும் போது ‘கைல காசு வெச்சு இருக்கியா?’ என்றேன். நானூறு ரூபாய் வைத்திருந்தான். ‘போதுமா?’ என்ற போது இங்கேயிருந்து அங்கே ஏழு ரூபாய், அங்கேயிருந்து அங்கே நாற்பத்தொரு ரூபாய் என டிக்கெட்டெல்லாம் சேர்த்து தொண்ணூற்று மூன்று ரூபாய் ஆகும் என்று கணக்குச் சொன்னான். சற்றே வருத்தமாக இருந்தாலும் இவ்வளவு தெளிவான திட்டமிடலுடன் ஒரு மாணவனைப் பார்க்க வெகு சந்தோஷமாக இருந்தது.

நேற்று காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை முடிந்துவிட்டது. சேர்ந்துவிட்டான். 

நேரில் முதன்முறை சந்தித்துப் பேசும் போது ‘படிச்சுட்டு CSIR பரிட்சை எழுதி ஆராய்ச்சியாளன் ஆகிடணும் சார்’ என்றான். அதற்குத்தான் ஆர்கானிக், இன் ஆர்கானிக் என்றெல்லாம் பிரித்துப் படிக்காமல் பொதுவாக முதுகலை அறிவியல் படிக்க விரும்புவதாகச் சொன்னான். எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்து கொண்டால் ஆராய்ச்சிக்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பது எளிது என்பது அவன் கணக்கு, எனக்கு முன்னெச்சரிக்கை மூளை அவ்வப்பொழுது விழித்துக் கொள்ளும். ‘ஒருவேளை இந்தத் திட்டம் கை கூடலைன்னா அடுத்த ஆப்ஷன் என்ன வெச்சிருக்க?’ என்றேன். அவன் தெளிவாக இருக்கிறான்.

‘ரெண்டு வருஷம் டைம் கொடுங்க சார்...நிச்சயம் ரிசர்ச்ல புகுந்துடுவேன்’ என்றான். 

‘இல்லப்பா...’ என்று இழுத்த என்னை முடிக்கவே விடவில்லை. 

‘ரொம்ப நம்பிக்கையா இருக்கேன் சார்...நம்பிக்கையில்லைன்னாத்தானே அது இதுன்னு யோசிக்கணும்? எனக்கு நம்பிக்கை இருக்கு...இது மட்டும்தான்’ என்றான். மூன்றாயிரம் ரூபாய் யாரோ தருவதாகச் சொல்லியிருந்தார்களாம். கடைசி வரைக்கும் அந்தப் பணம் வந்து சேரவில்லை. ‘எப்படியும் சேர்ந்துடுவேன்னு நம்பிக்கை இருந்துச்சு..நீங்க வந்து நிக்கறீங்க பாருங்க..என் நம்பிக்கை பொய்யா போவாது சார்’ என்றான். அதற்கு மேல் அவனை நம்பாமல் இருக்க முடியவில்லை. நிச்சயமாக நினைத்ததைச் சாதித்துவிடுவான் என்றுதான் தோன்றியது. வெல்கிறோம், தோற்கிறோம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். துல்லியமான குறிக்கோளை வைத்திருக்க வேண்டும். அதை அடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். உழைப்பைக் கொட்டினால் எங்கே போய்விடும் அந்த வெற்றி? பையன் அப்படித்தான் இருக்கிறான். இரண்டு வருடங்களுப் பிறகு என்ன ஆனான் என்று யாராவது மறக்காமல் கேளுங்கள். நிச்சயமாக பெருமைப்படும்படியான பதில் என்னிடம் இருக்கும். 

Jun 22, 2016

யானைக் கொலை

யானை செத்துவிட்டது. மகராஜ் என்று பெயர் வைத்துக் கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். சொர்க்கத்தில் ‘என் பேரு மதுக்கரை மகராஜ்..தெரியுமா?’ என்று கெத்தாகச் சுற்றிக் கொண்டிருக்கும். ஃபேஸ்புக்கில் அழுவார்கள். அநியாயமாகக் கொன்றுவிட்டீர்களே படுபாவிகளா என்று மணிகண்டன் மாதிரியானவர்கள் பொங்கல் வைப்பார்கள். மாலை நேரத்தில் விஜய் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி இருக்கும். அனுஷ்காவும் ஸ்ரேயாவும் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுவார்கள். கிளுகிளுப்பாக படுத்துத் தூங்கினால் அடுத்த நாள் எப்படியும் இன்னொரு ஹாட் விவகாரம் சிக்கிக் கொள்ளும்.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டது அல்லவா? எண்பது திமிங்கலங்கள் செத்துக் கரை ஒதுங்கிய நிகழ்வு நடந்த போது. மேற்சொன்னவை எல்லாம் இம்மி பிசாகமல் நடந்தன. பகல் முழுக்கவும் உணர்ச்சிவேகத்தோடு திரிந்தேன். மாலையில் வீடு திரும்பி ஏதோவொரு புஷ்டியான நடிகையின் பின்பக்கத்தை திமிங்கலத்தின் வால் அசைப்போடு ஒப்பிட்டு கவிதை எழுதி கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். மொத்திவிடுவார்கள் என்று பதறி பிறகு பம்மி எழுதிய கவிதையை ஷிஃப்ட்+டெலீட் செய்தேன். அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் திமிங்கலத்தை மறந்துவிட்டார்கள். அதன் பிறகு அது பற்றி எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. விட்டுவிட்டேன்.

சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் எழும்போதெல்லாம் ஒற்றைப்படையாக பேசிவிட்டு நூறு லைக் வாங்கியவுடன் நம்முடைய தார்மீகக் கோபம் எல்லாம் வடிந்து அடங்கிவிடுகிறது. யானை செத்ததற்குக் காரணம்- மயக்க ஊசி. அவ்வளவுதான். 

உண்மையிலேயே அவ்வளவுதானா? 
இல்லை இல்லை- யானைதான் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்தது. 

அதற்கு யானைதான் காரணமா? 
ச்சே..ச்சே மனிதர்கள்தான். காட்டை அழித்து வீட்டைக் கட்டினோம். 

அது மட்டும்தானா? 
யானைக்குத் தேவையான குடிநீர்க் குட்டைகளில் நீர் நிரம்புவதற்கான பாதைகளை அடைத்தோம். 

அப்புறம்? 
அதனால் யானைகள் நீர் தேடி ஊர்ப்பக்கங்களில் நுழைகின்றன.

அவ்வளவுதானா? 
அவ்வளவுதான்.

விவசாய நிலங்களில் நுழையும் யானைகளை வெடி வைத்துத் துரத்திவிடுவது காரணம் இல்லையா? 
இருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு வேறு வழியே இல்லையே.

நிலங்களைப் பட்டா போட்டு சாமியார்களுக்கு தாரை வார்த்தது காரணம் இல்லையா? 
ஆமாம். அதுவும்தான்.

அப்புறம் ஏன் இதையெல்லாம் பேசாமல் அந்த ஊசி போட்ட மருத்துவரையும் வனத்துறையையும் மட்டும் அர்ச்சிக்கிறோம்? 


ஒரு யானை சாகிறது. கத்திக் கூச்சல் போடுகிறோம். நம் உணர்ச்சியை தூண்டக் கூடிய சம்பவம்தான். எதிர்ப்புணர்வை பதிவு செய்வது சரிதான். அதோடு முடிந்துவிட்டதா?

தண்டவாளத்தில் விழுந்து சாகும் யானைகளையும், மிராஸ்தார்களின் மின்வேலிகளில் சிக்கிச் செத்து சத்தமில்லாமல் புதைபடும் யானைகளையும் ஏன் யாரும் கண்டு கொள்வதேயில்லை. சாலைகளில் அடிப்பட்டுச் சாகும் சிறுத்தைகளும் குரங்குகளும் ஒருவரின் கண்களிலும் படுவதேயில்லையா?

சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகளின் சரணாலயம் ஆகப் போகிறது என்று குச்சி பொறுக்கச் சென்ற ஊராளிகளையும் பழங்குடியினரையும் அடித்து துரத்தினார்கள். புலிகளைக் காப்போம் என்ற பெயரில் அங்கே வசிக்கும் ஏழைபாழைகளை வெளியேறச் சொல்லி இடித்துக் கொண்டேயிருப்பார்கள். இப்படி சூழலியலும் வனவியலும் வெறும் சாமானியர்களைச் சுற்றிச் சுற்றி மட்டுமே விவாதங்களை உருவாக்குகின்றன. அவர்களை மையப்படுத்தி மட்டுமே பேசுகிறார்கள். வனங்களில் ரிஸார்ட் அமைக்கும் கார்போரேட் நிறுவனங்கள் பற்றி வெளிப்படையான விமர்சனங்களை யார் செய்கிறார்கள்? நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் யானைகளின் பாதைகளை மறைத்து நடைபாதைகள் அமைக்கப்படுவதையும் கட்டிடங்கள் எழுப்புவதையும் பற்றி எங்குமே யாருமே ஏன் பேசுவதில்லை?

நான்கு, ஆறு, எட்டு வழிப்பாதைகளை வளர்ச்சி என்ற பெயரில் வனப்பகுதிக்குள் அமைக்கப்படுவதைப் பற்றி ஏன் எதுவுமே கண்டுகொள்வதில்லை?  சாமியார்கள் வனங்களை வளைத்து வளைத்துப் போடும் போதெல்லாம் எந்த ஊடகங்களில் எழுதினார்கள்? யார் விவாதித்தார்கள்? என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

கார்போரேட் சாமியார்களின் பெரும் ஆசிரமங்களில் பெளர்ணமி, அமாவாசை, சிவராத்திரி என்ற பெயர்களில் திரளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இரவு நேர முழக்கங்கள், வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் என வனவிலங்குகளுக்கான பெரும் சிரமங்கள் ஏன் வெகுஜன மக்களின் பார்வைக்கே வெளிவருவதில்லை?

மகராஜ் செத்ததில் வெறும் மயக்க ஊசி மட்டுமே காரணமில்லை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக முடித்து அடுத்தடுத்த ஹாட் செய்திகளுக்குத் தாவும் ஊடகக் கலாச்சாரம் நம்மிடமும் ஊடுருவிக் கிடக்கிறது. அதனால் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மகாராஜ் பற்றி எழுதினால் லைக் கிடைக்கும். ரீஷேர் ஆகும். நாளைக்கு இதைப் பற்றி விவாதிக்க ஆட்களே கிடைக்கமாட்டார்கள்.

நாம் தொடர்ந்து பேசவும் விவாதிக்கவும் நிறைய இருக்கின்றன. 

உண்மையில் நாமும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளும் நிறைய இழந்து கொண்டிருக்கிறோம். சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் வெகு சிக்கலானவை. எளிதில் புரிந்து கொள்ள இயலாத இருண்ட பக்கங்கள் அவை. எல்லாமே பணம்தான். இன்றைக்கு எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சிவிட வேண்டும் என்றுதான் நம்மைச் சுற்றிய கார்போரேட்களும் நாமும் இயங்குகிறோம். ஒரு நாளைக்கு எவ்வளவு மரங்களை வெட்டுகிறோம்? எவ்வளவு மலைகளைச் சிதைக்கிறோம்? எவ்வளவு வனங்களைச் சுரண்டுகிறோம் என்று இணையத்தில் மேம்போக்காக விவரங்களைத் தேடிப் பார்க்கலாம்.

ஒவ்வொரு புள்ளிவிவரமும் தலை சுற்றச் செய்கின்றன. வன அழிப்பும், சூழலியல் சிதைவும் வெறும் சாமானியர்களால் மட்டுமே நடைபெறுவதில்லை. ஆவணப்படம் எடுக்கிறேன்; சூழலியல் பற்றி எழுதுகிறேன் என்றும் கதறுகிற கார்போரேட் ஏஜெண்ட்டுகள் அப்படியொரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். நாம் நினைப்பதைவிடவும், கற்பனை செய்வதை விடவும் பன்மடங்கு வன அழிப்பை கார்போரேட் கயவர்கள் செய்கிறார்கள். ஆனால் வெளியில் தெரிவதில்லை. அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு சரியான பங்குகள் போய்ச் சேர்கின்றன.

இதில் எல்லாம் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகலாம். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் யானையின் சாவுக்கு மயக்க ஊசி மட்டும்தான் காரணம் என்று முரட்டுவாக்கில் கத்த வேண்டியதில்லை. அதோடு பிரச்சினையின் அடிநாதத்தை நாம் புரிந்து கொண்டதாக முடித்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி முடித்துக் கொள்வதற்குப் பதில் ரீமாசென்னின் பின்பக்கத்தை யானையின் பின்பக்கத்தோடு ஒப்பிட்டு ‘கப்பக்கிழங்கே’ என்று படமாக்கிய இயக்குநரை தாராளமாக யானைக் காவலன் என்று பாராட்டலாம். தப்பேயில்லை.

வாழ்தல்

கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாயில் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் குறைந்திருக்கிறது. மூன்றாம் நதி நாவல் ஏலம் போன தொகை. பணம் பதிப்பாளரிடம் இருக்கிறது. லதா என்கிற பெண்ணுக்கு பத்தாயிரம் கொடுத்திருக்கிறோம். அதன் பிறகு இந்த வாரத்தில் நான்கு பேருக்குச் சிறுகச் சிறுக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். 

யாமினி என்ற மாணவி எழுத்தாளர் கடற்கரய் மூலமாகத் தொடர்பு கொண்டார். பத்தாம் வகுப்பில் 481 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். அப்பா ஒரு மளிகைக்கடையில் விற்பனையாளராக இருக்கிறார். பதினோராம் வகுப்புச் சேர்க்கைக்காக உதவி கோரியிருந்தார்கள். அந்த மாணவிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸில் எழுத்தாளர் என்.ஸ்ரீராம் மூலமாக இந்தத் தொகையை வழங்கியிருக்கிறார்கள்.


இன்னொரு பத்தாயிரம் ரூபாய் திருமதி.செல்விக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கணவரால் கைவிடப்பட்ட குடும்பம். மிகச் சொற்பமான சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய மகன் ஸ்ரீனிவாசலு பத்தாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புக்குச் செல்கிறான். மகள் ஸ்ரீதேவி எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்கிறாள். இருவருக்குமாகச் சேர்ந்து பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. பாலா இளம்பிறை, ரமேஷ் ரக்‌ஷன், சோழன் ஆகியோர் வழங்கியிருக்கிறார்கள். சோழனின் ஒரு நேர்காணல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. நேரமிருப்பவர்கள் வாசிக்கலாம்.

ஏலம் அறிவிக்கும் போது அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மட்டும்தான் உதவி வழங்கப்படும் என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எல்லா நல்ல காரியங்களிலும் சில விதிவிலக்குகள் தவிர்க்க முடியாதவை. ஆகாஷ் அப்படியான விதிவிலக்கு. குழந்தையாக இருக்கும் போதே அம்மா இறந்துவிட்டார். சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது அப்பாவும் தவறிவிட்டார். தனி மரமாகிவிட்டான். மதுரைக்கார பையன். அப்பா இறந்த பிறகு சரியாகத் தேர்வு எழுதவில்லை. இப்பொழுது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படிப்புக்கு விண்ணப்பித்துக் கிடைத்திருக்கிறது. பதினாறாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். சுபாஷ் என்கிறவர்தான் ஆகாஷூக்காக என்னிடம் தொடர்ந்து பேசினார். சுபாஷூக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இன்று ஆகாஷூக்கு பதினைந்தாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 


இன்னொரு பதின்மூன்றாயிரத்து இருநூற்றைம்பது ரூபாய் திரு.வை.ம.குமாரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எல்லாமே திருக்குறளும் திருவள்ளுவரும்தான். திருவள்ளுவர் பெயரில் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். வயதில் மூத்தவர். ஒவ்வொரு வருடமும் மாம்பலம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கிறார். கடந்த ஆண்டு நேரடியாகச் சென்று சென்னையில் நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் அவரிடம் ஒப்படைத்தேன். இந்த வருடம் அந்த வேலையை ஜீவகரிகாலன் செய்திருக்கிறார். 

உண்மையிலேயே மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது. அதீத வெளிச்சம் எதுவும் தேவையில்லை. விளம்பரங்களும் அவசியமில்லை. இப்படியே சப்தமில்லாமல் மெதுவாக நகர்ந்து கொண்டேயிருக்கலாம். பல நூறு குழந்தைகளின் வாழ்வில் சிறு திரியைத் தீண்டிவிட்டு தொடர்ந்து வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டேயிருக்க முடியும். நாம் வாழ்தலுக்கான அர்த்தங்கள் என்று இப்படியான காரியங்களைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? 

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக எனது ஒவ்வொரு முன்னெடுப்புக்குப் பின்னாலும் பல நூறு பேர் நிற்கிறார்கள். யாருடைய முகமும் தெரியாது. அதை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. நிதி அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். தொடர்ந்து மனதுக்கு உற்சாகமாகப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வங்கிக் கணக்கில் நிதி இருந்து கொண்டேயிருக்கிறது. வேலைகளைச் செய்ய அலுப்பதேயில்லை. 

நிதி கொடுப்பவர்கள், அதைப் பெற்றுக் கொள்கிறவர்கள், இந்தக் காரியங்களில் உறுதுணையாக இருப்பவர்கள் என அத்தனை பேரும் நன்றாக இருக்கட்டும். அவர்களின் குடும்பங்கள் நீடுழி வாழட்டும். இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

மூன்றாம் நதி ஏலத்தில் வந்த தொகையில் மட்டும் இன்னமும் தோராயமாக ஒன்றேகால் லட்ச ரூபாய்க்கும் மேலாக கைவசம் இருக்கிறது. நிறையப் பேருக்கு உதவ முடியும். உங்களுக்குத் தெரிந்த தகுதியான மாணவர்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். அலசி ஆராய்ந்துவிட்டுத்தான் கொடுக்கிறோம். ஆனால் தகுதியான மாணவர் என்று தெரிந்தால் நிச்சயமாக உதவலாம். ஒரு நாவலின் வழியாக இத்தனை மாணவர்களுக்கு உதவ முடிகிறது என்கிற விதத்தில் மிகுந்த சந்தோஷம். சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. ஏலத்திற்காக நிதி கொடுத்த நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.  ‘ஒரு குடும்பம் உதவி கேட்டிருக்கு...முகவரியை எஸ்.எம்.எஸ் செய்யறேன்... அவங்களை நேரில் போய் விசாரிச்சுடுங்க’ என்று யாரை நோக்கி கை நீட்டினாலும் மனம் கோணாமல் அலைந்து திரிந்து உதவித் தொகையை விநியோகித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜீவ கரிகாலனுக்கு சிறப்பு நன்றி.

Jun 21, 2016

பெரியவர்

ஒரு பெரியவர் வந்திருந்தார். பெங்களூருக்குத்தான். சில நாட்களுக்கு முன்பாகவே அழைத்துப் பேசியிருந்தார். ஓர் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் எனச் சொல்லி முகவரி கேட்டிருந்தார். கொடுத்திருந்தேன். ஆனால் அதை வைத்துக் கொண்டு பெங்களூர் வந்துவிடுவார் என்று நினைக்கவில்லை. சனிக்கிழமை ஒன்றரை மணி இருக்கும். பெங்களூர் வந்துவிட்டதாகச் சொன்னார். இப்படி சொல்லாமல் வந்து நிற்கும் இரண்டாவது பெரியவர் இவர். 

கடுப்பாக இருந்தது. ‘எங்கே இருக்கீங்க?’ என்றேன். சொன்னார். அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பினேன். கடுமையான பசி. எதற்காக வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஏதாவது பெரிய வேலையாக வைத்துவிடக் கூடும் என்று குழப்பமாக இருந்தது. சமீபமாக பெங்களூரில் வெயில் குறைந்திருக்கிறது. அவ்வப்பொழுது மேகம் திரண்டும் நான்கைந்து துளிகள் துளிர்க்கத் தவறுவதேயில்லை. எப்பொழுதும் நனைந்துவிடக் கூடும் என்பதான கருக்கலில் அவரைக் கண்டுபிடித்துவிட்டேன். எழுபதை நெருங்கியிருப்பார் போன்ற தோற்றம். களைத்திருந்தார். விழுப்புரம் பக்கத்திலிருந்து வந்திருக்கிறார்.

‘எதுக்கு வந்தீங்க?’ என்றேன். குரலில் கடுகடுப்பு இருந்தது. 

‘பார்த்துட்டு போலாம்ன்னு’என்றார். உண்மையைச் சொல்கிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று புரியவில்லை.

‘சாப்பிட்டீங்களா?’- அவரைப் பார்த்தால் பசியோடு இருப்பதாகத்தான் தெரிந்தது. 

சிரித்துக் கொண்டே ‘சாப்பிடலாம் வாங்க’ என்றார். திக்கென்றிருந்தது. கையில் பணம் எடுத்து வராமல் வந்திருந்தேன். அவர் அழைப்பதிலிருந்தே அவர் சாப்பிட்டிருக்கவில்லை என்பது புரிந்துவிட்டது. கேட்டாகிவிட்டது. அவரும் அழைக்கிறார். கையில் காசு இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.

எதிரிலேயே ஒரு உணவு விடுதி இருந்தது. இருவருமாக நுழைந்தோம். அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் போது ஓடிச் சென்று வீட்டிலிருந்து காசு எடுத்து வந்துவிடலாமா என்று யோசனை ஓடியது. அது சரிப்படாது. உணவு விடுதி வீட்டுக்குப் பக்கத்திலேயேதான் இருக்கிறது. காசு கொண்டு வந்து தந்துவிடுவதாகச் சொன்னால் நம்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. 

சிப்பந்தி வந்து நின்றார். பெரியவர் என்னைப் பார்த்து‘என்ன சாப்பிடுறீங்க?’ என்றார். 

‘வீட்டில் சாப்பிட்டுக்கிறேன்..நீங்க சாப்பிடுங்க’ தவிர்க்க முயன்ற போதும் அனுமதிக்கவில்லை. 

‘என் கூட ஏதாச்சும் சாப்பிடுங்க’- வற்புறுத்தினார். 

‘இல்ல சார்...விடுமுறை நாட்களில் வீட்டிலேயே இருப்பதில்லை. அதிசயமாக ஒன்றிரண்டு நாள் கிடைக்கும் போது வெளியில் சாப்பிட்டுவிட்டுச் சென்றால் வருத்தப்படுவார்கள்’ என்றேன். அவர் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. சிப்பந்தியிடம் ‘எனக்கு ஒரு வடை மட்டும் கொடுங்க’ என்று சொன்னேன்.

சாப்பிடும் போது இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. உணவை முடித்துவிட்டுக் கைகழுவச் சென்றார். கஜானாவில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தேன். பொடியன்தான். பணத்தைப் பிறகு தருவதாகச் சொல்லி சம்மதிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையளிக்கக் கூடியது போன்றதான தோற்றம் அவனுக்கு. சிப்பந்தி உணவுக்கான பில்லை எடுத்து வரும் போது வழியிலேயே மறித்து பெரியவர் வாங்கிக் கொண்டார். உண்மையிலேயே பணம் வைத்திருப்பாரா என்று தெரியவில்லை.

எழுந்து சென்று ‘நான் கொடுக்கிறேன் சார்’ என்றேன்.

‘ஒரு வடை மட்டும் சாப்பிட்டுட்டு பில்லை நீங்க கொடுக்கறீங்களா?’ என்று சிரித்தார். மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு அமைதியாகிக் கொண்டேன். பைக்குள் கிடந்த துண்டு ஒன்றில் கையின் ஈரத்தைத் துடைத்துக் கொண்டு அதே பைக்குள் கையை விட்டுத் துழாவினார். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து சிப்பந்தியிடம் நீட்டிவிட்டு என்னிடம் திரும்பி ‘உங்க கூட கொஞ்ச நேரம் பேசலாம்ன்னுதான் வந்தேன்’ என்றேன். அவருடைய செயல்பாடுகள், பணத்தை மிகச் சாதாரணமாகக் கையாளும் இயல்பு போன்றவை அவர் சொல்வதை உறுதிப்படுத்தின. நிச்சயமாக உதவி எதுவும் கேட்டு வந்திருக்கவில்லை. 

‘வீட்டில் போய் பேசலாமா?’ 

‘இல்லை..இன்னொரு நாளைக்கு வர்றேன்’ என்றவர் வந்த காரியத்தைச் சொன்னார். ஹெப்பால் பக்கத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி ஒன்று இருக்கிறது. அவ்வப்போது வந்துவிட்டுப் போகிறார். இனி நிரந்தரமாக அங்கேயே தங்கிக் கொள்ளலாமா என்ற குழப்பத்தில் இருப்பதாகச் சொன்னார். பெரியவருக்குக் குடும்பம் இருக்கிறது. ஆளாளுக்கு அவரவர் திசை. அவர்களை விட்டுத் தனியாகப் பிரிந்து வந்துவிட்டார். ‘யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது’ என்பது அவரது வாதம்.

அரசு ஊழியராக இருந்திருக்கிறார். பொதுப்பணித்துறையில் அலுவலர். மாதாமாதம் பென்ஷன் வருகிறது. பேசிக் கொண்டிருந்தவர் ஒரு பணக்கட்டை எடுத்து நீட்டி ‘பத்தாயிரம் இருக்கு..உங்க அறக்கட்டளைக்கு வெச்சுக்குங்க’ என்றார். ‘சார்..தப்பா எடுத்துக்காதீங்க..பணமா வாங்கறதில்லை...அது பழக்கமாகிடும்...நீங்க பேங்க் அக்கவுண்ட்ல போட்டுவிடுங்க’ என்றேன். சிரித்தவர் ‘இதை அந்த விடுதிக்குத்தான் எடுத்துட்டு வந்தேன்...உங்களை பார்த்துட்டு எதுவும் கொடுக்காம போனா நல்லா இருக்காதுன்னு கொடுத்தேன்’ என்றார்.

இதுவரையிலுமான தனது அனைத்து சேமிப்புகளையும் இப்படியான விடுதிகளுக்குத்தான் கொடுத்திருக்கிறார். ‘ரிட்டையர்ட் ஆனப்போ எட்டு லட்ச ரூபாய் வந்துச்சு...எட்டு ஆர்கனைசேஷனுக்குக் கொடுத்தேன்...பசங்களுக்கு எம்மேல அதுல கொஞ்சம் வருத்தம்’ என்றார். நேரமாகிக் கொண்டிருந்தது. பசியை மறந்திருந்தேன். புத்தகங்களைப் பற்றி நிறையப் பேசினார். நிறைய வாசித்திருக்கிறார். இத்தகையவொரு மனிதர் நம்மைத் தேடி வந்திருக்கிறார் என்பதே சந்தோஷமாக இருந்தது. 

எப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள்?

‘கணக்கு வழக்குப் பார்த்துட்டு இந்தக் குழந்தைங்க கூடவே இருந்துடுறேன்னு கேட்கப் போறேன். சரின்னு சொன்னாங்கன்னா அடுத்த மாசம் வந்துடுறேன்’ என்று அவர் பேசிக் கொண்டிருந்த போது அவரைப் பற்றி மனதுக்குள் உருவாக்கி வைத்திருந்த அத்தனை பிம்பங்களும் உடைந்து கொண்டிருந்தன. பணமும் தோற்றமும்தான் மனிதர்களைப் பற்றிய மனப்பிம்பங்களை உருவாக்குகிறது என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்? வெட்கமாக இருந்தது.

கிளம்பும் போது ‘நீங்க சிரிச்சு பேசுவீங்கன்னு நினைச்சேன்..ஏன் ஆரம்பத்தில் கோபமா இருந்தீங்க?’ என்றார். ஏதோ சொல்லி மழுப்பினேன். முகம் மனிதர்களை சர்வசாதாரணமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. என்ன காரணம் என்று எல்லோருக்கும்தான் தெரியுமே. இங்கே ஒத்துக் கொள்வதில் என்ன வெட்கம்? நேரடியாக வந்து தொந்தரவு செய்கிறார் என்ற எரிச்சல்தான் காரணம். எவ்வளவு பெரிய கசடு இது? மனதுக்குள்தான் சேகரித்து வைத்திருக்கிறேன். இதுதான் காரணம் என்பது அவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். அதை உடைப்பதற்காகத்தான் அதை வெளிப்படையாகவும் கேட்டிருக்கக் கூடும். சங்கடத்தில் நெளிவதை உணர்ந்தவராகப் பேச்சை மாற்றிவிட்டார். 

நிறையப் பேசினோம். 

மெதுவாக எழுந்து தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வேட்டியை இறுக்கிக் கட்டியபடி‘அடுத்ததடவை வரும் போது வீட்டுக்கு வர்றேன்’ என்று சிரித்தார். ஹெப்பாலுக்கு நேரடியாகப் பேருந்து இல்லை. சில்க் போர்ட் சென்று அங்கேயிருந்து பேருந்து பிடிக்க வேண்டும். ‘நானும் வரட்டுமா?’ என்றேன். ‘குடும்பத்தோட நேரம் செலவழிங்க...நான் போய்க்கிறேன்’ என்றார். 

எந்த மனிதனையும் தோற்றத்தை வைத்து எடை போட்டுவிட முடிவதில்லை. அப்படித்தான் எடை போடுவேன் என்று மனது வீறாப்பாக நிற்குமாயின் எனக்கு அறிவிருக்கிறது, நான் படித்திருக்கிறேன் என்றெல்லாம் எந்த அடிப்படையில் சொல்லிக் கொள்ள முடியும்? அவரைப் பற்றி நினைத்ததையும் அவர் பேசியதையும் போட்டு மனது குதப்பிக் கொண்டிருந்தது. ஏன் வந்தார் எதற்காக வந்தார் என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. வந்தார். அவ்வளவுதான். 

நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் நமக்கான மிகப்பெரிய பாடத்தைச் சொல்லித் தருகிறான். எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் அவரவர் பாடு. எவ்வளவு பெரிய புத்தகத்தைக் காட்டிலும் மனிதர்கள் சொல்லித் தரும் பாடங்கள்தான் நம் ஆழ்மனதின் கசடுகளையும் வன்மங்களையும் அறியாமையும் ஒதுக்கித் தள்ளி நம்மைப் பண்படுத்துகின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும். பெரியவர் கிளம்பிச் சென்ற பிறகும் பேருந்து நிறுத்தத்திலேயே அமர்ந்திருந்தேன்.  எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் பெருநகரத்தின் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. சாலை முழுக்கவும் பெரும் புழுதி. 

Jun 17, 2016

மிரட்டல்

ஓர் அழைப்பு வந்தது. கட்டைக் குரல். அழுத்தமாக வணக்கம் சொல்லி ஆரம்பித்தார்.  தன்னை அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ‘தம்பி...நாலஞ்சு பேர் விவரங்களை அனுப்பி வைக்கிறேன். ஃபீஸ் கட்ட முடியுமா?’ என்றார். அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாகச் செய்ய முடியும் என்றேன். அரசு கல்லூரிதானே என்று கேட்ட போது அவருடைய குரல் சற்றே மாறியது. தெரியாது என்றும் விசாரித்துச் சொல்வதாகவும் சொன்னார். 

‘அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். குறைந்தபட்சம் படித்ததாவது அரசுப் பள்ளியாக இருக்கட்டும். இல்லையென்றால் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்றேன். எல்லோரிடமும் சொல்வதுதான். 

‘அப்படின்னா...செய்ய முடியாதா?’ என்றார். 

‘இப்பவே உறுதி கொடுக்க முடியாது...நிறைய இருக்கு...கிடைக்கிற தகவல்களைக் கொண்டு பயனாளிகளைப் பத்தி விசாரிப்போம். வறுமையான குடும்பம், படிக்க வைக்க முடியாத சூழலில்தான் இருக்கிறார்களா? என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் பரிசீலிக்க முடியும்’ என்றவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. யாரோ எண் கொடுத்திருக்கிறார்கள். தான் கை காட்டும் ஆட்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி அழைத்திருக்கிறார். ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டவுடன் அவருக்கு ஈகோ எட்டிப்பார்த்துவிட்டது.

இதுதான் பிரச்சினை. இப்பொழுது வைத்திருக்கும் அலைபேசி எண்ணையே தூக்கி வீசிவிடலாமா என்று யோசிக்கிறேன். சம்பந்தமேயில்லாதவர்களிடமெல்லாம் கிடைத்திருக்கிறது. தாளிக்கிறார்கள்.

அறக்கட்டளை என்ற பெயரிலான செயல்பாடு மிக எளிமையானது. பணம் வருகிறது. யாரோ ஒரு மனிதர் பயனாளிக்கும் எனக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறவருக்கு அறக்கட்டளையின் செயல்பாடு தெரிந்திருக்கிறது. நாம் சொல்லுகிற பதிலை பயனாளியிடம் சொல்லிவிடுகிறார். இதில் பிரச்சினையே இல்லை. வேறு சிலர் இருக்கிறார்கள். ‘உங்க நெம்பரை அவர்கிட்ட கொடுத்துட்டேன். அவர் பேசுவார்’  என்கிற வகையறா. பிரச்சினையே அவர்களால்தான் வருகிறது. இவர்கள் வெள்ளை வேட்டி மைனர்கள். அலைபேசி எண்ணை வாங்கிக் கொடுப்பதையே மிகப்பெரிய காரியமாக நினைத்துக் கொள்கிறவர்கள். ‘உங்க நெம்பர் கிடைக்குமா?’ என்று கேட்கும் போது யதார்த்தமாக எண்ணைக் கொடுத்தால் இப்படிக் கோர்த்துவிட்டுவிடுகிறார்கள். கண்டவன் வாயில் விழ வேண்டியிருக்கிறது.

மிரட்டத் தொடங்கிவிட்டார். வாழ்க்கையில் எவ்வளவோ அறக்கட்டளைகளைப் பார்த்திருக்கிறாராம். தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றார். அதுவரை பொறுமையாகத்தான் இருந்தேன். ‘அறக்கட்டளைங்கிற பேர்ல உங்களை மாதிரி ஆளுங்க என்ன பண்ணுறீங்க தெரியாதா?’ என்றார். அதற்கு மேல் என்ன பேசுவது? இத்தகைய மனிதர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்ததுதான். பேசாமல் இணைப்பைத் துண்டித்து விட வேண்டுமா அல்லது பேச்சை வளர்க்க வேண்டுமா என்றுதான் தெரியவில்லை.

‘முடியாதுன்னு சொல்லலை...விசாரிக்கிறேன்னுதான் சொன்னேன்’ என்றேன்.

‘நான் சொல்லுற ஆளுங்களுக்கு செய்யணும்’ - அதில் ஒரு கட்டளை இருந்தது.

கடுப்பில் ‘இப்படியெல்லாம் பேசறவரு...பேசாம நீங்களே கொடுத்துட வேண்டியதுதானே?’ என்றேன்.

‘உங்களை மாதிரி ஆளுங்களை எப்படி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு தெரியும்’ என்று மிரட்டுகிற தொனியில் சொன்னார். 

‘ஆனதைப் பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தேன்.

அடுத்தவர்கள் கைகாட்டுகிற ஆட்களுக்கு மனசாட்சிக்கு விரோதமாக ஒரேயொரு ரூபாயைக் கொடுக்க வேண்டிய சூழலும் அழுத்தமும் வருமானால் மொத்தப் பணத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். பயந்தும் வளைந்தும் குழைந்தும் அறக்கட்டளை நடத்த வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. அறக்கட்டளை நடத்துவது எனக்குத் தொழில் இல்லை. இதில் சம்பாதித்துத்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்றோ அல்லது குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை. 

இந்தப் பதிவில் யாரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று அந்த மனிதரிடம் என்னுடைய அலைபேசி எண்ணைக் கொடுத்தவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்தால் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள். எனக்கு எவனைப் பார்த்தும் பயமில்லை. ஆமாம், எவனைப் பார்த்தும்தான். தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அத்தனை விவரங்களும் நிசப்தம் தளத்தில்தான் இருக்கிறது.  

மடியில் துளி கூட கனமில்லை. ‘போடா ______’ என்று திட்ட ஒரு வினாடி கூடத் தேவைப்படாது. சலசலப்புக்கும் அலட்டலுக்கும் அஞ்சுவேன் என்று நினைத்து அடுத்த முறை அழைத்தால் காறித் துப்பிவிட்டு பெயர் முகவரியோடு அத்தனை விவரங்களையும் பொதுவில் எழுதி நாறடித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவின் கதவைத் தட்டுவது வரைக்கும் என்னால் செய்ய முடியும். நம்பிக்கையில்லையென்றால் முயற்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

சர்க்கரையும் கொலஸ்ட்ராலும் உணவும்

ஒன்றரை வருடம் முன்பாக உடல் பரிசோதனை செய்த போது கிட்டத்தட்ட சர்க்கரை நோயைத் தொட்டிருந்தேன். குருதியில் மூன்று மாத சராசரி சர்க்கரைக் கணக்கு 5.7% ஆக இருந்தது. 5.5 வரைக்கும் இருக்கலாம். அதற்கு மேல் செல்லச் செல்ல சர்க்கரை நோயை நெருங்குகிறோம் என்று அர்த்தம். பயம் வந்துவிட்டது. அதன் பிறகு கடினமான பத்தியத்தின் வழியாகவே இரண்டு மாதங்களில் 5.5 ஆக மாறியது. என்ன பத்தியம் என்பதை முன்பொரு முறை எழுதியிருக்கிறேன். சர்க்கரையின் அளவு குறைந்திருந்தாலும் கொலஸ்டிரால் அளவு சற்றே கூடுதலாகத்தான் இருந்தது. கொலஸ்டிராலும் சர்க்கரையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்கிறார்கள். ஒன்று கூடினால் இன்னொன்றும் கூடும்.

மருத்துவர் சிவசங்கர் நல்ல நண்பர். மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை அவரிடம் கேட்டுக் கொள்வேன். Free consulting. எவ்வளவுதான் மோசமான அளவாக இருந்தாலும் ‘ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க’ என்பார். இன்னொரு மருத்துவ நண்பர் அருள்மோகன் சற்று அலாரம் வகை. ‘இப்படியே விட்டா பிரச்சினை ஆகிடும்’ என்றார். பெங்களூர் மருத்துவர் ‘வேணும்ன்னா அரை மாத்திரை எடுத்துக்க ஆரம்பிக்கலாம்’ என்றார். எடுத்த உடனேயே மாத்திரையிடம் சரணாகதி ஆவதில் விருப்பமில்லை. அதே சமயம் மிகக் கடுமையான உணவுப் பத்தியமும் எனக்கு ஒத்து வரவில்லை. உடல் மெலிகிறது என்பதைவிடவும் கேள்வி கேட்பவர்களிடம் பதில் சொல்லித் தாவு தீர்ந்தது. அதைவிடவும் வாரந்தோறும் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. போகிற இடத்திலெல்லாம் குதிரைவாலியும், திணையும் சாத்தியமில்லை. உணவு விடுதிகளில் எண்ணெய் இல்லாமல் பதார்த்தம் வேண்டும் என்றெல்லாம் கேட்க முடிவதில்லை. 

பேலியோ உணவு முறையை நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். அதுவும் அவ்வளவு எளிதானதாகத் தெரியவில்லை. ஆக, மருந்து மாத்திரையில்லாமல் உடலைப் பேண ஒரே வாய்ப்புதான் இருந்தது - வாழ்க்கை முறை மாற்றம். 

நன்றாகத் தூங்கத் தொடங்கினேன். முன்பெல்லாம் தூக்கத்தில் ஒழுக்கம் இருக்காது. அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரைக்கும் விழித்திருப்பது உண்டு. சில நாட்களில் ஒன்பது மணிக்கே தூங்கிவிடுவேன். தாறுமாறான உறக்க முறையைச் சரி செய்தாலே உடல் பாதி தப்பித்துவிடும். இப்பொழுது எப்படியிருந்தாலும் ஒரு மணிக்கு மேல் விழித்திருப்பதில்லை. ஏழு மணிக்கு மேல் தூங்குவதில்லை. நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் நல்ல தூக்கம். அந்தச் சமயத்தில் திருடன் வந்தாலும் கூட காது கேட்காது. இரவு பதினொரு மணிக்கே தூங்குவது இன்னமும் உசிதம் என்கிறார்கள். ஆனால் அதிகாலையில் எழுந்து அமர்ந்தால் மூளை அதீதமான சுறுசுறுப்புடன் இருக்கிறது. யோசிக்க முடிவதில்லை. இரவு பத்து மணிக்கு மேல் நிலவுகிற மந்தத் தன்மையில்தான் எழுதுவதற்கான மனநிலை உண்டாகிறது. 

காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் இரண்டு பூண்டுப் பற்களை- மெல்ல முடிவதில்லை- காரம் அதிகம். வாயில் தண்ணீரை நிரப்பி உள்ளே போட்டு மெதுவாகக் குதப்பி அப்படியே விழுங்கிவிடுகிறேன். கொலஸ்டிராலின் கட்டுப்பாட்டில் இது கனவேலை செய்கிறது என்று நம்புகிறேன். இடையில் நடைப்பயிற்சி மேற்கொண்டதுண்டு. இப்பொழுது அதைத் தொடர்ச்சியாகச் செய்வதில்லை. ஆனால் அலுவலக நேரத்தில் ஏதாவதொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துவிட்டு வருகிறேன். வேகமாக நடப்பேன். எதிரில் அழகான பெண்கள் வரும் போது மட்டும் நடையின் வேகம் சற்று குறைகிறது. அதைத் தவிர்க்கவே முடிவதில்லை. கண்களுக்கும் ஒரு பயிற்சியாக இருக்கட்டுமே என்று விட்டுவிடுகிறேன்.

மற்றபடி உணவுப் பழக்கத்தில் சர்க்கரையின் அளவு குறைவு ஆனால் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறேன். அரிசியைக் குறைத்துவிட்டு காய்கறி நிறையச் சேர்த்துக் கொள்கிறேன். சாம்பார், பருப்பு போன்றவற்றை ஊற்றிப் பிசையும் போது முன்பெல்லாம் மேல்மட்டத்தில் நிற்கும் நீரை மட்டும் வடித்து எடுத்து ஊற்றுவேன். இப்பொழுது அடியில் கிடக்கும் வண்டலோடு எடுத்து ஊற்றிப் பிசைந்து உண்கிறேன். நெய் சேர்த்துக் கொள்வதுண்டு. அசைவம் உண்டு. தயிர் உண்டு- மிகக் குறைவாக. காலையில் வயிறு நிரம்பும் அளவுக்கு உண்பதும் மதியம் மிகச் சிறிய டப்பாவில்-ஒரேயொரு டப்பா சாதம்+ஏதாவது குழம்பு, இரவில் இரண்டு தோசைதான் உணவு.

காலையில் ஒரு முறை காபி சேர்த்துக் கொள்கிறேன். தினசரி மாலையில் ஒரு எலுமிச்சை டீ. 

அம்மாவுக்கு சர்க்கரை உண்டு. அம்மாவின் அப்பாவுக்கு அம்மாவுக்கும் சர்க்கரை இருக்கிறது. அம்மாவின் அப்பா இருதயக் கோளாறினால் இறந்தார். குடும்ப ஜீன் வரலாறு எடுத்துப் பார்த்தால் பேராபத்து இருக்கிறது. அதனால்தான் சற்று பயம். ஆரம்பத்திலிருந்தே சரியான வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் அமைத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். இதை வெளிப்படையாக எழுத வேண்டியதில்லைதான். ஆனால் யாராவது ஒருவருக்கு நிச்சயமாகப் பயன்படும். சரியான உணவும் வாழ்க்கை முறையுமே பெரும்பாலான ஆரம்பகட்ட பிரச்சினைகளிலிருந்து நம்மை விடுவித்துவிடும்.

இதை போகிற போக்கில் சொல்லவில்லை. தரவுகள் இருக்கின்றன. ஒவ்வோரு முறையும் செய்த ரத்தப் பரிசோதனை முடிவுகளும் இங்கே இருக்கின்றன. மறைக்க எதுவுமில்லை. சரி பார்த்துக் கொள்ளலாம்.

டிசம்பர் 2015:


மார்ச் 2015:


ஜூன் 2016:

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால்  அந்த உணவு முறை இந்த உணவு முறை என்று உடலை வருத்திக் கொள்ள வேண்டியதில்லை. பேலியோ மாதிரியான உணவு முறைகளைத் தவறு என்று சொல்லவில்லை. அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் ‘Work like a slave; Dine like a King' என்ற சித்தாந்தத்தில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இந்த ஒன்றரை சாண் வயிற்றுக்குத்தானே இவ்வளவு உழைப்பு? நாம் செய்து கொண்டிருக்கிற அத்தனை செயல்களுமே நம் வயிறும் நம் சந்ததிகளின் வயிறும் காய்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே? அதை ஏன் வலுக்கட்டாயமாகக் காயப் போட வேண்டும்? விருப்பமான எல்லாவற்றையும் உண்ணலாம். ஆனால் வகை தெரிந்து, தொகை புரிந்து உண்ணலாம். அவ்வளவுதான்.

இளம் வயதுக்காரர்களாக இருந்தால் வருடம் ஒரு முறையாவது முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளலாம். ‘நமக்கு ஒன்றுமே இல்லை’ என்று முரட்டுத்தனமாக நம்ப வேண்டியதில்லை. அதுதான் மிகப்பெரிய மூட நம்பிக்கை. முப்பதுகளைத் தாண்டியிருந்தால் நிச்சயமாக ஏதாவதொரு சிறு பிரச்சினையாவது இருக்கும். பிரச்சினை எதுவுமில்லையென்றால் சந்தோஷம். இருந்தாலும் வருந்தத் தேவையில்லை. உடலும் ஒரு எந்திரம்தானே? ஆரம்பத்திலேயே எந்தப் பகுதியில் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழத் தொடங்கினால் பெரும்பாலான மருத்துவச் சிக்கல்களிலிருந்து தப்பித்துவிடலாம். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிற ஈருளிக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்கிறோம். நம் உடலுக்கு என்ன செய்கிறோம்?

ஒருவருடைய உணவுப்பழக்கமும் வாழ்க்கை முறையும் அத்தனை பேருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நம்மை நாமே சற்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இளம் வயதாக இருந்தால் இத்தகைய பரிசோதனை முயற்சிகள் சாத்தியம். ஒரு கட்டத்திற்கு மேல் மருந்துகளை நம்பத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும். அதனால்தான் - இளம் வயதில் இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதைவிடவும் நம் உடலைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம். 

மூன்றாம் நதி- விமர்சனங்கள்

                                                       (1)

வா. மணிகண்டன்  எழுதியிருக்கும் நாவல். பெயர்க் காரணமே சுவாரஸ்யமாக விளக்குகின்றார். கங்கா யமுனா சரஸ்வதி என்பதில் மூன்றாவது நதியை பார்க்க முடியாது. கூடுதுறையில் காவிரியும் பவானியும் தெரிகின்றன அமுத நதி தெரிவது இல்லை. ஆனால் மூன்றாவது நதி இணைகையில்தான் இந்த இடங்கள் சிறப்பு பெறுகின்றன. இப்படி கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நதிகள்- அவற்றை ஒத்தவள்தான் இந்த கதையின் நாயகி பவானியும் என்று சொல்கின்றார்.

வா. மணிகண்டன் பற்றி இரண்டு வருடங்களாகத்தான் தெரியும். அவரது நிசப்தம் தளத்தினை தவறாமல் வாசிப்பவன் என்ற வகையில் அவரது எழுத்தாளுமை எனக்கு பரிச்சயமான ஒன்று. தேவையில்லாத வர்ணணை வம்பளப்புக்கள் இல்லாது சுவாரஸ்யமாக பக்கத்து வீட்டு அக்காவிடமோ அல்லது உடன் படிக்கும் நண்பனிடமோ கதை கேட்பது போன்ற ஓர் எழுத்து. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. முடித்துவிட்டுதான் ஓய வேண்டும். இவரது முந்தைய நூல்களில் மசால் தோசை 38 ரூபாய் சென்ற வருடம் புத்தக கண்காட்சியின் போது வெளியிட்டார். வாங்கி படித்தேன். அன்றாடம் நம் சமூகத்தின் ஊடே புழங்கும் சாமானியர்களைப் பற்றிய சரித்திரம் அது. மூன்றாம் நதியின் நாயகியும் ஓர் சாமானியப் பெண் தான்.

கதையை அவள் தான் தொடங்கி வைக்கிறாள். கனத்த இதயத்தோடு கடைசி பக்கத்தை முடித்து வைப்பவளும் அவள்தான். பெங்களூரூ போன்ற மாநகரங்களில் வசிப்போருக்கு குடிநீர்த் தேவை எத்தனை அத்தியாவசியம். அவை எங்கிருந்து எப்படி கிடைக்கிறது. ஒரு பாட்டில் நீருக்குள் புகுந்திருக்கும் நீர் அரசியல் உங்களுக்குத் தெரியுமா? இருபது ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் நீரை வாங்கி பாதிக் குடித்துவிட்டு கீழே எறிந்துவிட்ட செல்லக் கூடியவரா நீங்கள்? இந்த கதையை படித்த பின் அப்படி எறிய நீங்கள் யோசிப்பீர்கள். அப்படி யோசிக்கவில்லை என்றால் வருங்காலத்தில் நீங்கள் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். மக்கள் எப்படி வறண்டு போன நிலங்களால் தங்களது வருவாயை இழந்து பெருநகரமான பெங்களூரூ போன்ற நகர்களுக்கு பிழைக்கச் சென்று வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதை காட்சி படுத்தும் விதம் சிறப்பு.

பெங்களூர் புறநகர் பகுதிகள் அங்கு குவியும் லே-அவுட் வீடுகள், அவற்றின் நீர்த் தேவை. அவற்றிற்காக செய்யப்படும் முயற்சிகள். நீர் வியாபாரம், அதில் மோதல், இரு வியாபாரிகளுக்கான மோதலில் எப்படி நாயகி பாதிக்க படுகின்றாள் இதுதான் கதை.  நீர் அரசியலில்  நீச்சலிட முடியாமல் தோற்றுப் போகும் மூன்றாம் நதியான பவானிகள் பெங்களூரூவில் மட்டும் அல்ல! வேறு பெருநகரங்களில் கூட இருக்கலாம். வருங்காலத்தில் மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியாம்ன நீர் போரில் தான் பவானி மூன்றாம் நதியாக காணாமல் போகின்றாள்.

எளிமையான எழுத்து நடையில் எல்லோருக்கும் புரியும்படியான பாணியில் கதையை நகர்த்தி செல்கின்றார். விறுவிறுப்பு, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கிறது. சிறு குழந்தையாக பெங்களூர் புறநகரில் அடியெடுத்து வைக்கும் நாயகி தன் கிராமத்து சூழலை மறந்து பெங்களூர் அடித்தட்டு மக்கள் சூழலில் வளர்ந்து எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்து ஏற்றம் பெறும் சூழலில் வாழ்க்கையைத் தொலைக்கின்றாள். அவள் உழைப்பு எல்லாம் வீணாகிப் போகின்றது நீரூக்கு நடக்கும் போரில். 

எல்லோரும் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல். புத்தகத்தின் வடிவமைப்பும் அழகு, தாள்களும் தரமாக அமைந்துள்ளது. 

இதன் மூலம் கிடைக்கும் தொகை நிசப்தம் அறக்கட்டளைக்கு சென்று அறச்செயல்களுக்கு செல்லவிருக்கிறது என்பதும், இந்நாவல் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் திரட்டப் பட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொகை ஏழைப் பெண்களின் கல்வி உதவிக்கு பயனளிக்க உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.


                                                           ***
                                                            (2)

மூன்றாம் நதியில் மூழ்கி எழுந்துவிட்டேன். எனக்கு முழுத் திருப்தியில்லாத முழுக்குதான். எல்லாப் பாத்திரங்களுமே ஒரு சிறுகதைக்குரிய அளவிலேயே படைக்கப்பட்டதோ எனும் எண்ணம் தோன்றியது.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கட்டுரை போல். தனியாகவும் கூட படிக்கும்படியான வடிவில் இருந்தன.

எல்லாப் பாத்திரங்ளையும் இன்னும் அழுத்தமாகப் படைத்திருக்க உங்களால் முடியும். பக்கங்களை மனதில் கொண்டு படைத்த படைப்பு என்பதால் இந்த நிகழ்வென்று நினைக்கிறேன்.

300 பக்கங்களில் படைத்திருந்தால் ஒரு முழுமையான நாவலாகவும் மனதில் நெடுநாள் தங்கும் பாத்திரங்களாகவும் அமைந்திருக்கும் என்பது என் எண்ணம். மீண்டும் ஒருநாள் பேசலாம்..அமாசை, பவானி, உமா, லிங்கப்பா, பால்காரர், ஏன் பவானியின் பள்ளிக்காதலன் அனைவருமே மேலும் பல பக்கங்கள் உலா வந்திருக்கவேண்டியவர்கள். வீணாகிவிட்டார்களே என்ற வருத்தமிருக்கிறது.

-புகழேந்தி

                                            ***
                                                     (3)

மூன்றாம் நதி - வா.மணிகண்டன்

பெங்களூரைக் கதைக் களமாகக் கொண்டு பவானி என்கிற பெண்ணின் வாழ்க்கை கதையாகச் சொல்லப் படுகிறது. பெங்களூரின் அசுர வளர்ச்சிகளும் மாற்றங்களும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பேசுகிறது கதை. அந்த வகையில் பெங்களூரின் முற்காலத்தையும் அதி வேக மாற்றத்துக்குள்ளாகிச் சிறிது சிறிதாய்ச் சிதையும் அந்நகரத்தின் ஆன்மாவையும் பளபளப்பான வெளிப்புறம் தாண்டி அந்நகரத்தின் அடியாழத்தில் வசிக்கும், ஒரு வகையில் அந்த நகரத்தின் ஆதார ஓட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் முற்றிலும் பரிச்சயமற்றதொரு உலகைப் பெரும்பாலும் எவ்வித சமரசங்களும் இல்லாமல் காட்டுகிறது.

இது போன்ற பெரு நகரங்கள் வீங்கி வளரும் போது சந்திக்கும் ஆகப் பெரிய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு, அந்தப் பிரச்னையை அழுத்தம் திருத்தமாகச் சொல்வது ஒரு மிகப்பெரிய ப்ளஸ். படித்து முடித்தவுடன் சில நாட்கள், அல்லது சிறிது நேரமேனும் கதையையும் கதை மாந்தர்களையும் பற்றி வாசிப்பவனை அசை போடச் செய்வது ஒரு படைப்பின் பல வெற்றிகளுள் ஒன்று. அதை இந்தப் படைப்பு பெரிதாய் மெனக்கெடாமல் செய்திருக்கிறது.

குறைகள் என்று பார்த்தால் சில விஷயங்களைச் சொல்லலாம்.

எழுத ஆரம்பிக்கும் போதே நூறு ரூபாய் விலை தான். நூறு பக்கங்கள் தான் என்று முடிவு செய்து கொண்டு எழுத்தாளர் எழுத ஆரம்பித்தது போல் தெரிகிறது. இதனால் கதை முடியும் போது பவானியின் வாழ்க்கையை பாஸ்ட் பார்வேர்டில் பார்த்த உணர்வையே தருகிறது. பவானியின் கதையை பெங்களூரின் பின் புலத்தில் சொல்வது தான் எழுதியவரின் நோக்கம் என்பது புரிகிறது. ஆனால் சில இடங்களில் மாறி மாறி அத்தியாயங்கள் கடக்கும் போது, பெங்களூரின் பிரச்னைகள் பற்றிய பகுதிகள் அதிக சுவாரசியம் தருவதாயும் பவானி சம்பந்தப் பட்ட பகுதிகள் வேகத் தடையாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பவானியின் இள வயதுச் சம்பவங்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்ச் சொல்லப் பட்டிருக்கலாம். அதைச் செய்திருந்தால் சித்திக் கொடுமை போன்ற க்ளிஷேக்கள் கதைக்குத் தேவையெனினும் இப்போது தெரிவது போல் அயற்வாகத் தெரிந்திருக்காது. மேலும் பெரும்பான்மைக் கதை மூன்றாம் மனிதனின் பார்வையிலேயே சொல்லப் படுகிறது. இதைச் சற்றே மெருகேற்றிக் கொஞ்சம் உரையாடல் வழிக் கதை நகர்த்தியிருந்தால் சிற்சில இடங்களில் ஆவணப் படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பது குறைந்திருக்கும்.

எழுத்தாளரின் வலைத்தளத்தை வழக்கமாக படிப்பதால் நாவலின் நடை கிரகித்துக் கொள்வதற்கு எளிதாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாவலில் பிரத்யேக நடை என்று இல்லை. மிகவும் எளிமையான படிப்பவர்களை துன்புறுத்தாத வாக்கியங்கள்.

குறைகள் இருப்பினும் இந்நாவல் நிச்சயம் பாராட்டுக்குரியதே. நல்லதொரு வாசிப்பனுபவத்தையும் தருகிறது.

ஹரீஷ்.                             

                                                    ***

நாவலின் பக்கங்கள் குறித்தான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. 

இவ்வளவு பக்கங்கள் என்றும், இதுதான் விலை என்றும் முடிவு செய்யவில்லை. ஆனால் நாவல் சிறியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு அத்தியாயமும் இன்னொரு அத்தியாமும் தனித்தனியாகத் தெரிய வேண்டும் என்றும் சேர்த்து வாசிக்கும் போதும் நூலிழைத் தொடர்பு இழையோட வேண்டும் என்பதும் ஏற்கனவே முடிவு செய்திருந்ததுதான்.

குறைந்த பக்கங்கள் என்பதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. நிறையப் பக்கங்கள் வேண்டுமா என்பதற்கு எனக்கு அப்பொழுது சரியாக ஒரு காரணமும் கிடைக்கவில்லை. 

நாவல் பற்றிய தொடர்ச்சியான கருத்துக்களுக்கு நன்றி. 

எழுத்து பற்றிய கருத்துக்கள் உடனடி விளைவு எதையும் ஏற்படுத்திவிடாது. ஆனால் மனதுக்குள் பதிந்துவிடும். அவை அவ்வப்போது நம்மையுமறியாமல் நம் எழுத்துக்களில் வெளிப்படும் - அதுதான் எழுத்து குறித்த உரையாடலின் தாக்கம் என்பது. 

- மணிகண்டன்

Jun 16, 2016

நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்

முன்முடிவு என்பது முன்வழுக்கை மாதிரி. இரண்டையும் அண்டவே விடக் கூடாது. அண்ட விட்டுவிட்டால் சோலி சுத்தம். போகவே போகாது. எதற்கு இந்த பிலாசபி என்று யோசித்து கட்டுரையின் தலைப்போடு சேர்த்து வைத்து ஏதோ சர்ச்சை விவகாரம் என்று முடிவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. நானொரு முன்வழுக்கைக்காரன். போலவே, முன்முடிவுக்காரனும். முதலாவது பிரச்சினைக்கு ஜீன் காரணம். இரண்டாவது பிரச்சினைக்கு சகவாசம் காரணம்.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இலக்கிய உலகில் ரவுடியாக உருவெடுக்க வேண்டுமென்று அத்தனை பேரிடமும் குழாவ முயற்சித்துக் கொண்டிருந்தேன். தொடர்புகளின் வழியாகவே நமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ளும் பின்வாசல் முயற்சி அது. இப்படிப்பட்ட குழாவல்களில் பேராபத்து உண்டு. இலக்கியம் பேசுகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் ஏதாவதொரு தொனியில் ‘அவன் எல்லாம் ஒரு எழுத்தாளனா?’ என்ற வசனத்தை பிரயோகப்படுத்துவார்கள். ‘அதெல்லாம் ஒரு எழுத்தா?’ என்று கேட்பார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ- நிராகரிக்கப் பழகி வைத்திருப்பார்கள். நாறும் மணக்கும்தானே? பழக்கம் எனக்கும் ஒட்டிக் கொண்டது.

ஒரு வட்டத்தைத் தாண்டி வாசித்ததில்லை. ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் முன்முடிவு உண்டு. ஒவ்வொரு படைப்பு குறித்தும் ஒரு விமர்சனம் வைத்திருந்தேன். படமே பார்க்காமல் போஸ்டரை வைத்து விமர்சனம் எழுதுவதன் இன்னொரு வடிவம் அது.  சமகால எழுத்தாளர்களை வாசிக்கவிட்டாலும் கூடத் தொலைகிறது. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதும் ஏதோவொரு அசூயை. வணிக எழுத்து, புண்ணாக்கு எழுத்து, பருத்திக் கொட்டை எழுத்து என்று வகை பிரித்து இலக்கிய எழுத்து வகையறாவுக்குள் வந்தால் மட்டும்தான் தொடவே வேண்டும் என்கிற பைத்தியகாரத்தனம். இப்படியெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ‘நான் எவ்வளவு பெரிய இலக்கிய அப்பாடக்கர் தெரியுமா?’ என்று இறுமாப்பாகத் திரிந்ததில் இழந்ததுதான் அதிகம். எந்தப் படைப்பும் தன்னை வாசிக்கச் சொல்லி நம்மை இறைஞ்சப் போவதில்லை. வாசித்தால் வாசி; இல்லையென்றால் தூரப் போடா பரதேசி என்றுதான் அதனதன் பாட்டில் கிடக்கும்.

அப்படித்தான் பிரதாப முதலியார் சரித்திரமும்.

தமிழில் வந்த முதல் நாவல் எது என்ற கேள்விக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று ஒன்பதாம் அல்லது பத்தாம் வகுப்பில் பதில் எழுதியதுண்டு. 1857 ஆம் ஆண்டில் வந்த புத்தகம் என்பதால் இப்பொழுதெல்லாம் வாசிக்கக் கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் படு மொக்கையான வாக்கிய அமைப்புகளால் வாசிக்கவே முடியாமல் இருக்கும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.

புண்ணியவான் ஒருத்தர்தான் வாசிக்கச் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் புத்தகமாகவும் கிடைத்தது. பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. வாசிக்கத் தொடங்கிய போதுதான் உறைத்தது. இப்படியே எவ்வளவு புத்தகங்களை வாசிக்காமல் வைத்திருக்கிறோம் என்று. நூற்று அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் இது. இரவில் வாசித்துவிட்டு தானாகச் சிரித்துக் கொண்டிருந்தேன். பிரதாப முதலி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்தே அதகளம்தான். என் முழுப்பெயரையும் எழுதுவதென்றால் அதற்கே இந்தப் புஸ்தகம் முழுவதும் தேவைப்படும் என்பதால் பிரதாப முதலி என்று சுருக்கிக் கொள்ளலாம் என்று தொடங்கி  பக்கத்திற்குப் பக்கம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார். ‘அண்ணே நான் கண்ணை மூடிட்டு செய்யற வேலையை நீங்கக் கண்ணைத் திறந்துட்டு செய்வீங்களா?’ என்கிற செந்தில் கவுண்டமணி நகைச்சுவையைக் கூட இந்த நாவலில் இருந்துதான் சுட்டிருக்கிறார்கள்.

பிரதாப முதலி பணக்கார வீட்டுப் பையன். அதனால் பாடம் சொல்லித் தருவதற்கு உபாத்தியாயர்கள் இவருடைய வீட்டுக்குத்தான் வர வேண்டும். எந்த உபாத்தியாயர் வந்தாலும் பிரதாப முதலியிடமும் அவரது பாட்டியிடமும் சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். கடைசியில் சோற்றுக்கு வழியில்லாத ஓர் உபாத்தியாயர் சிக்குகிறார். அவருடைய மகன் கனகசபையும் பிரதாப முதலியும் ஒரே வயது. முதலியின் பாட்டி ஒரு அட்டகாசமான ஐடியா கண்டுபிடிக்கிறார். முதலி தொண்டை வறண்டு போகுமளவுக்கு பாடம் சொல்ல வேண்டியதில்லை. வாத்தியாரின் மகன் கனகசபை சத்தமாக பாடம் சொல்ல வேண்டும். அதை முதலி காது கொடுத்துக் கேட்டால் போதும். வாத்தி கேள்வி கேட்டு பிரதாப முதலிக்கு பதில் தெரியவில்லையென்றால் அதற்கு தண்டனையை கனகசபைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதாப முதலி பதில் சொன்னதும் கிடையாது. கனகசபையின் முதுகு பழுக்காத நாளும் கிடையாது. ‘ஏம்ப்பா இந்த வயிற்றுக்குத்தானே இந்தப் பாடு? முதுகில் அடிக்கிறதுக்கு பதிலா என் வயிற்றில் அடிங்க’ என்று கலங்க வைத்துவிடுவான் கனகசபை.

கதையை முழுமையாகச் சொல்லவில்லை. இலக்கியம், கட்டமைப்பு, ஆனியன், ரவா தோசை என்கிற பதார்த்தங்களை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு இதை வாசித்துவிட வேண்டும். இப்பொழுது பிரதாப முதலியார் சரித்திரம் ஆன்லைனிலேயே கிடைக்கிறது.

ஒரு வாசகனாக எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் இருப்பதுதான் நம்முடைய வாசிப்புப் பழக்கத்துக்கு நல்லது. சுவாரசியமான எழுத்துக்களில் ஆரம்பித்து அத்தனை வகைமையிலான எழுத்துக்களையும் ஒரு கண் பார்த்துவிட வேண்டும். தமிழின் முதல் புதினம் என்கிற அடிப்படையில் நிச்சயமாக வாசித்திருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். அதைவிடவும் அதன் நகைச்சுவைக்காகவாவது வாசித்துவிட வேண்டும்.

நாவலை வாசித்த பிறகு இந்தக் கட்டுரையின் தலைப்பு உங்களுக்குப் பொருத்தமானதாகத் தெரியக் கூடும்.

தமிழில்தான் இளம் எழுத்தாளர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லையே- ஐம்பதைத் தாண்டினாலும் இளம் எழுத்தாளர்தான். அப்படியென்றால் இருபது அல்லது இருபத்தைந்து வயது எழுத்தாளர்களை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். எனக்கென்னவோ மாயூரம் வேத நாயகம் பிள்ளைதான் தமிழில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளராகத் தெரிகிறார். ஏற்கனவே வாசித்தவர்களோ அல்லது இனிமேல் வாசிக்கப் போகிறவர்களோ அவருடைய நாவலை வாசித்துவிட்டு மறுப்பதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். பட்டத்தை வேறொரு எழுத்தாளருக்கு மாற்றிக் கொடுத்துவிடலாம். டஜன் எழுத்தாளர்களைப் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடிய எழுத்தாளர்கள் அவர்கள்.

Jun 15, 2016

அவரவர் சினார்

பெங்களூரின் மரண வீடு அது. மொத்தமே ஐந்தாறு பேர்கள்தான் வந்திருந்தார்கள். அவ்வளவு பேர்தான் வருவார்கள். வார இறுதி என்றால் ஒன்றிரண்டு பேர் கூடுதலாக வந்திருக்கக் கூடும். மேற்கு வங்கத்துக்காரர் அவர். 

அம்மாவுக்கு உடல் நலிவுற்றவுடன் அழைத்து வந்து தம்மோடு தங்க வைத்திருந்தார். எங்கள் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கிறார்கள். ‘அம்மாவுக்கு அவங்க ஊர்ல இருக்கணும்ன்னு ஆசை’ என்று அவர் முன்பொருமுறை சொல்லியிருந்தார். இதே ஆசைதான் கிட்டத்தட்ட பெரும்பாலான பெற்றவர்களுக்கும் உண்டு.  தான் பிறந்த ஊர், தான் வாழ்ந்த ஊர்- என்று ஏதோவொரு பாசம். அக்கம்பக்கத்தினரும் உற்றாரும் உறவினரும் கண்டுகொள்கிறார்களோ இல்லையோ- இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த ஊரின் வாசம் அவர்களை மனரீதியாக திருப்திப்படுத்துகிறது. 

எல்லோராலும் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துத் தம்மோடு வைத்துக் கொள்ள முடிவதில்லை. ‘அம்மாவும் அப்பாவும் அங்க தனியாத்தான் இருக்காங்க..கஷ்டம்தான்....ஏதாவது பிரச்சினைன்னு ஃபோன் செஞ்சா போகக் கூட முடியறதில்லை...கூட வெச்சுக்கிறது எவ்வளவோ தேவலாம்...நம்ம கூட இருக்காங்களேன்னு ஒரு சின்ன ஆறுதல் இருக்கும்’ - இப்படி ஒரு எண்ணம் பெரும்பாலான பிள்ளைகளுக்கு உண்டு. 

பெரியவர்களுக்கு உடல்நிலை சீராக இருக்கும் வரைக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவையவை அதனதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் ஏதாவதொரு தருணத்தில் தினசரி நடவடிக்கைகள் தடுக்கி விழும் பொழுதிலிருந்துதான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. உடல் ரீதியிலான போராட்டங்கள் அவர்களுக்கு என்றால் உளவியல் ரீதியிலான போராட்டங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும். வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் பேசும் போது அவர்களின் அம்மா அப்பா பற்றிக் கேட்பதேயில்லை. எதையாவது கிளறிவிட்ட மாதிரி ஆகிவிடும்.

அந்த விதத்தில் உள்ளூர்களிலேயே வசிப்பவர்களைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவுதான் உடல்நிலைச் சிக்கல் என்றாலும் கட்டில் ஒன்றைப் போட்டு பெரியவர்களைப் படுக்க வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவுமிருப்பதில்லை. காலையிலும் மாலையிலுமாவது ஒரு முறை கவனித்துக் கொள்கிறார்கள். ‘எப்படி இருக்கு?’ என்றால் சாதாரணமாக ‘அப்படியேதான் இருக்கு’ என்கிறார்கள். எது நிகழ்ந்தாலும் தாம் அருகிலேயே இருக்கிறோம் என்கிற எண்ணம் அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.

பெரும்பாலான நகரவாசிகளுக்கு இது சாத்தியமேயில்லாத காரியம். சமீபத்தில் ஒரு நண்பரைப் பேருந்தில் சந்தித்தேன். பெங்களூர்வாசி. வழமையான கேள்விகளுக்குப் பிறகு ‘அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?’ என்று கேட்டதற்கு அப்பா சமீபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார். மரத்திலிருந்து இலை உதிர்ந்துவிட்டது என்கிற தொனியில் அதைச் சொன்னார். அப்பாவின் உடல் நலிவுற்றிருக்கிறது. அழைத்து வந்து பெங்களூரில் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் சிகிச்சை பலனளிக்காது என்று தெரிந்து ஊரிலேயே கொண்டு போய் விட்டுவிட்டார்கள். ஒவ்வொரு வாரமும் ஊருக்குச் சென்று வந்ததாகச் சொன்னார். ‘இங்கேயே வெச்சிருக்கலாம்ல?’ என்றால் ‘என்ன இருந்தாலும் உள்ளூர் தண்ணியும் காத்தும்தான் அப்பாவுக்கு இஷ்டம்’ என்றார்.

பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான மண் சார்ந்த முரண்பாடு நம் தலைமுறையில் பிரதானமாகியிருக்கிறது. அவர்கள் அங்கே வாழ விரும்புகிறார்கள். பிள்ளைகள் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். 

அக்னி சேகர் ஹிந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பை ‘என் நூறு கிராமங்களின் பெயர்களை இரவோடு இரவாக மாற்றிவிட்டனர்’ என்ற பெயரில் தமிழில் ரமேஷ் குமார் மொழி பெயர்த்திருக்கிறார். அதில் ஒரு கவிதை-

தாங்க முடியாத வெயில்
பைத்தியம் பிடித்தும்விடும் போல என் அம்மாவுக்கு
அவள் நினைவுகள் சூன்யமாயின
வேதனையின் வெப்பக் காற்று
அவள் இதயத்தில் வீசியபடி இருந்தது 
டாக்டர் தன் மருந்துச் சீட்டில் எழுதினார்
சினாரின் தென்றல் படவேண்டும் என்று
என் செய்வேன் என் செய்வேன்
என்னால் வாங்கித் தர முடியாத மருந்து அது.

அக்னி சேகர் காஷ்மீரத்துக் கவிஞர். சினார் என்பது மஞ்சள் பூ கொழிக்கும் காஷ்மீர் மரம்.  போர்ச் சூழலின் காரணமாக அம்மா இடம் பெயர்ந்திருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை நசிந்து போயிருக்கிறது. மருத்துவர் சினார் மரம் இருக்கும் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறார். மகன் தவிக்கிறான். இதே நிலைமைதான் நம் தலைமுறையின் பெரும்பாலான மகன்களுக்கும் மகள்களுக்கும். போருக்குப் பதிலாக வேறொரு காரணம்.

மண் சார்ந்த நம் பந்தம் நெகிழ்வானது. உள்ளூரில் எதிரிகள் நிறைந்திருக்கலாம். பொறாமை மிகுந்த மனிதர்கள் சூழ்ந்திருக்கலாம். வன்மம் நம்மைச் சுற்றி விரவியிருக்கலாம். ஆனாலும் இந்த ஊரில்தான் வாழ வேண்டும் என்கிற வைராக்கியம் எந்தப் பருவத்தில் நம்முள் வந்து ஒட்டிக் கொள்கிறது? ஏன் அந்த ஊரிலேயேதான் கிடக்க வேண்டும் என விரும்புகிறோம்? வெகு தீவிரமாக யோசித்தாலும் பதில் கிடைப்பதில்லை. அவரவர் ஊரில்தான் அவரவருக்கான சினார் மரங்கள் நிறைந்திருக்கின்றன. 

எதிர்காலம், வருமானம், பிள்ளைகளின் படிப்பு என்று ஆயிரம் பிரச்சினைகள். எல்லாவற்றையும் விடவும் பூதாகரமாக தமது கடைசி பிராயத்தை உள்ளூரில் கழிக்கும் பெற்றோர்களின் கனவும் ஆசையும் வந்து நிற்கிறது.  ‘அம்மா அப்பாவைவிடவுமா வேலையும் சம்பளமும்?’ என்று சாதாரணமாகக் கேட்டுவிடலாம். ஆனால் நிதர்சனத்தில் எதிர்கொள்ளவே முடியாத நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த கேள்வி இது. 

மேற்கு வங்க நண்பரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறுதலாக இருக்கட்டும் என்று ‘பரவாயில்ல..கடைசி நேரத்துல பக்கத்துல இருந்தீங்களே’ என்றேன். அவர் உடைந்து போயிருந்தார். முந்தின நாள்தான் தன்னை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட அவரது அம்மா கேட்டாராம். இவரும் சம்மதம் சொல்லியிருக்கிறார். 

‘அங்க கூட்டிட்டு போக முடியலங்கற வருத்தம் இருக்கு’என்றார்.

இறந்த செய்தி கேள்விப்பட்டு உறவினர்கள் உடலை மேற்கு வங்கத்திற்கு எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். குடும்பத்தில் இவருடைய ஒற்றைச் சம்பளம் மட்டும்தான். பெரும் செலவு ஆகும் என்று தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் இங்கேயே முடித்துவிட்டார்கள். ‘அங்கே போயிருந்தா எப்படியும் நூறு பேராவது கடைசி ஊர்வலத்தில் கலந்திருப்பாங்க...இங்க வெறும் அஞ்சு பேர்தான்’ என்றார். பதில் எதுவும் சொல்லவில்லை. அவருக்குள் எண்ணங்கள் கொந்தளித்துக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மரணம் வந்து சென்ற அந்த வீடு வெறிச்சோடிக் கிடந்தது. குழந்தைகள் கிசுகிசுத்தபடியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவரது மனைவி சோபாவில் அமர்ந்து நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்.

‘ஆன்மா சாந்தியடையணும்ன்னு வேண்டிக்குங்க’ என்றார். 

‘பையனோட நிலைமை அம்மாவுக்குத் தெரியாதா? தைரியமா இருங்க’ என்றேன். அமைதியாக தனது அம்மாவின் நிழற்படத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமில்லை. ஆனால் யோசிக்க நிறைய இருந்தன. சில நிமிடங்கள் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன்.