May 9, 2016

வட்டிக்காரர்

சென்னையிலிருந்து திரும்பி வரும் போது முந்நூற்று அறுபது ரூபாய் கொடுத்தால் தமிழக அரசின் சொகுசுப் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிவிடலாம். பேருந்துகளில் இருக்கை சற்று உயரமாக இருக்கும். அது மட்டும்தான் சொகுசு. அவசர அவசரமாக ஏறி ஜன்னல்கள் ஒழுங்காக மூடக் கூடிய, கீழே கால் வைக்குமளவிற்காவது சுத்தமாக இருக்கக் கூடிய இருக்கையை அமுக்கிக் கொள்ள வேண்டும். வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் என்று நிறுத்தாமல் வந்து சேர்ந்துவிடுவார்கள். நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தால் படுத்து உறங்கி அடுத்த நாள் அலுவலகத்துக்குச் செல்வதற்குச் சரியாக இருக்கும். மாலை நான்கு மணிக்குள்ளாக பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டால் பகல் நேரப் பேருந்து கிடைக்கும். அதைவிட்டுவிட்டால் ஏழரை மணிக்குத்தான் பேருந்துகள் புறப்படுகின்றன. பல நடத்துநர்கள் அத்தனை இருக்கைகளும் நிரம்பிவிட்டன என்றுதான் சொல்கிறார்கள். ‘கவனிச்சுக்கிறேன் சார்’ என்று காதைக் கடித்தால் ஓரிடத்தை ஒதுக்கித் தருகிறார்கள். கவனிச்சுக்கிறேன் என்பதற்கு நாற்பது ரூபாய் கூடுதல் என்று அர்த்தம். 

பெரும்பாலான நாட்களில் வேலூர் வரைக்கும் ஒரு பேருந்து, கிருஷ்ணகிரி வரைக்கும் ஒரு பேருந்து, ஓசூர் வரைக்கும் இன்னொரு பேருந்து என்று மாற்றி மாற்றி வருவதுதான் வழக்கம். இப்பொழுதெல்லாம் ஒரு வார இறுதி கூட ஓய்வுக்குக் கிடைப்பதில்லை என்பதால் நூறு ரூபாய் கூடுதலாக ஆனாலும் தொலைகிறது என்று கொடுத்துவிட்டு ஏறித் தூங்கிவிடுகிறேன். நேற்று தமிழகப் பேருந்து எதுவும் இல்லை. ஐந்தே முக்காலுக்கு ஒரு கர்நாடகா வண்டியை எடுத்தார்கள். நானூற்றைம்பது ரூபாய் டிக்கெட். அதிகம்தான். ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். ஸ்ரீபெரும்புதூர் தாண்டிய பிறகான ஊர் அது. மோட்டல் என்று சொல்ல முடியாது. கொரியன் விருந்தினர் மாளிகையாக இருந்திருக்கிறது. சென்னையில் இருக்கக் கூடிய கொரியன் நிறுவனங்களுக்கு வரக் கூடிய கொரியக்காரர்கள் தங்குவதற்கான மாளிகை. கொரிய உணவுகளையும் அங்கேயே தயாரிப்பார்களாம். இப்பொழுது அதெல்லாம் இல்லை. இந்திய ரெஸ்டாரண்ட்டாக மாற்றியிருக்கிறார்கள். இரண்டு இட்லி முப்பது ரூபாய். ஒரு மசால் தோசை நூறு ரூபாய். வடை ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய். அடேயப்பா.

ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் விதவிதமாக வந்து கொண்டேயிருந்தது. முப்பது ரூபாய்க்கு மட்டும் தின்றுவிட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். நம்மிடம் மொட்டையடித்து அவர்களுக்குத் தருகிறார்கள் போலிருக்கிறது. விருந்தினர் மாளிகை என்பதால் குட்டியாக பூங்கா கட்டி வைத்திருந்தார்கள். ஒரு சிறுவனும் சிறுமியும் சறுக்கல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காவலாளியின் பேரன் பேத்தி. காவலாளி வந்தார். பேச்சுக் கொடுத்தேன். ஆரணிக்காரர். ஆரணி, கண்ணமங்கலம் மாதிரியான ஊர்க்காரர்கள் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள் என்றால் நிச்சயமாக இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள். இவரும் அப்படித்தான்.  ‘பென்ஷன் வருது..ஊர்ல உக்காந்துட்டு என்ன பண்றோம்’ என்று யோசித்து வந்துவிட்டதாகச் சொன்னார். கொரியர்கள் தங்கிய அறைகள் இப்பொழுது விடுதியாக மாறியிருக்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் அறை வாடகை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம்தான் என்றால் தொகையைக் குறைத்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்களாம். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்றவுடன் புரிந்துவிட்டது. ‘இதா வர்றான் பாருங்க...உள்ளூர் பினான்ஸ் காரன். லைன்ல போற பக்கம் தேறும்ன்னு தெரிஞ்சா நெம்பர் கொடுத்துட்டு வந்துடுவான்..அவளுங்க இங்க வந்துடுவாளுக’ என்றார். அந்த கந்துவட்டி கந்தசாமி வெள்ளையும் சுள்ளையுமாக வந்து ஸ்விப்ட் காரில் இறங்கியிருந்தார். வரக் கூடிய பெண் எப்படிப்பட்டவள் என்று பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. கன்னட ஓட்டுநர் பேருந்தில் ஏறி ஒலிப்பானை அழுத்தினார். ‘சரிங்க..நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். 

மனதுக்குள் என்னவோ ஓடிக் கொண்டேயிருந்தது. 

பக்கத்து ஊரில் ஒரு நண்பர் கடை வைத்திருந்தார். மளிகைக் கடை. கல்லூரி காலத்தில் விடுமுறை சமயங்களில் அவரது கடையில் அமர்ந்து கொள்வேன். கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் யாருமே இல்லாத கடையில் நாங்கள் இருவரும் ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருப்போம். அப்பொழுது கந்து வட்டிக்காரர் ஒருவரைப் பற்றி நிறையச் சொல்வார். வட்டி கொடுக்க முடியாதவர்களை அவர் மிரட்டுகிற கதைகள். அப்பொழுது பாலியல் சார்ந்த எந்த விவகாரமும் மிகுந்த கிளுகிளுப்பைத் தரக் கூடியனவாக இருந்தன. வயதும் மனதும் அப்படி. எந்தப் பெண்மணியை அவன் மிரட்டுகிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வமிருந்தது. அவர்கள் வளைந்துவிட்டார்களா என்பதைத் தெரிந்து கொள்வதிலும்தான்.

விசாரித்துப் பார்த்தால் லட்சக்கணக்கான தொகையாகவெல்லாம் இருக்காது. ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் என்கிற அளவில்தான் இருக்கும். அதற்கு தினசரி வட்டி, வாராந்திர வட்டி என்று விதவிதமான வட்டிக்கணக்குகள். அவசரகாலத்தில் வட்டிக்காரர்கள் சொல்லக் கூடிய எல்லாவிதமான நிபந்தனைகளுக்கு சரி என்று சொல்லிவிட்டு பிறகு வாகாக சிக்கிக் கொள்வார்கள். மீண்டு வருவது பெரிய காரியம். ஏதாவதொரு வழி சிக்கிவிடாதா என்று திணறிக் கொண்டிருக்கிறவர்களின் கதைகள் அவை. அந்த வட்டிக்காரரின் பெயர் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் அதை இங்கே குறிப்பிட வேண்டியதில்லை என நினைக்கிறேன். வட்டிக்காரருக்கு அரசியல் தொடர்புகளும் இருந்தன என்றாலும் அக்கம்பக்கத்தில் அவருக்கான எதிரிகள் பெருகிக் கொண்டேயிருந்தார்கள்.

ஒருவரைக் கெட்ட வார்த்தையில் கூடத் திட்டலாம். பிறகு மன்னிப்புக் கேட்டு இணைந்து கொள்ளலாம். ஒரு அடி வைத்தாலும் கூட தவறில்லை. சமாதானமாகிவிடலாம். ஆனால் பண விவகாரம் அப்படியில்லை. ஒரு முறை பெயரைக் கெடுத்துக் கொண்டால் அவ்வளவுதான். நண்பர்கள் எந்தக் காலத்திலும் சேரவே முடியாத எதிரிகளாக மாறிப் போன வரலாறுகளை எடுத்தால் தொண்ணூற்றைந்து சதவீதம் பண விவகாரமாகத்தான் இருக்கிறது. உறவுகளுக்குள் வரக் கூடிய பிரச்சினைகளில் முக்கால்வாசி பணத்தால்தான் நிகழ்கிறது. பணத்துக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். 

எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டேயிருந்த வட்டிக்காரர் பெண்கள் சகவாசத்தினால் அதைப் பன்மடங்காக்கிக் கொண்டார்.  ‘அவனை அடிச்சே கொன்னாலும் கொன்னுடுவாங்க பாரு’ என்று அந்த மளிகைக்கடைக்காரர் சொல்லி சில நாட்களில் அவரை வெட்டிக் கொன்று சாக்கடைக்குள் வீசியிருந்தார்கள். யார் கொன்றார்கள்? எதற்காகக் கொன்றார்கள் என்று இதுவரைக்கும் தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்களைப் பிடித்துச் சென்று அடித்துத் துவைத்தார்கள். இப்பொழுதெல்லாம் ஊரிலும் அதை மறந்துவிட்டார்கள். சில மாதங்களிலேயே வட்டிக்காரரின் மனைவி தனது குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். அவரது வீடு விற்கப்பட்டு நிறைய மாறுதல்களுக்குப் பிறகு இப்பொழுது நான்கைந்து குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள். 

பணமும் காமமும் மனிதனைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. புல்லட் வண்டியில் இன்னமும் அதே கெத்துடன் அவர் வந்திருக்கக் கூடும். பேராசையும் பெருங்காமமும் வாழ்க்கையின் அமைதியைக் குலைத்து பல்லிளிக்கின்றன. வட்டிக்காரர் தனது வாழ்க்கையை வெகு சீக்கிரமாக முடித்துக் கொண்டார். கொரியன் விடுதி அவரது நினைவுகளைக் கிளறிவிட்டது. அவரது முகம் சாம்பல் போல நினைவுகளின் அடுக்குகளில் மெல்லப் படிந்தன. அப்படியே தூங்கிப் போனேன். பெங்களூரில் இறங்கிய போது மணி ஒன்று. 

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஒரு மசால் தோசை நூறு ரூபாய்//
அட ஒங்க கிட்டயே வா

thiru said...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிங்கபூர் கோமள விலாஸ். இதற்கு முன் கொரியன் விருந்தினர் மாளிகை & அறுசுவை அரசு ஹோட்டல் ..