May 2, 2016

சாந்தியைக் காணவில்லை

பெங்களூரில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு தமிழ் குடும்பம் உண்டு. அடுக்ககம் ஒன்றில் குடியிருக்கிறார்கள். அடுக்ககத்தை சுத்தம் செய்து வாடகைக்கு, இரவில் கண்காணிப்பு வேலையைப் பார்த்துக் கொண்டு, மாதமொருமுறை குடியிருப்பவர்களிடம் வாடகை பணத்தை வசூல் செய்து உரிமையாளரிடம் கொடுப்பது அந்தப் பெண்மணியின் வேலை. சாந்தகுமாரி என்று பெயர். சுருக்கமாக சாந்தி. கணவன் என்ன வேலை செய்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டு மாடியிலிருந்து அவர்கள் வீடு தெரியும். அது வீடு இல்லை. ஒற்றை அறை. குழந்தையொன்றுடன் மூன்று பேரும் வசிக்கிறார்கள். குடியிருக்க வாடகை கொடுக்க வேண்டியதில்லை. அடுக்ககத்திற்காகச் செய்கிற வேலைக்கு அவளுக்கு மாதாந்திரச் சம்பளம் உண்டு. பெங்களூர் முழுக்கவும் இப்படி நிறையக் குடும்பங்கள் இருக்கின்றன. சென்னையிலும் இருக்கக் கூடும்.

சாந்தியைக் கடந்த வாரத்திலிருந்து காணவில்லை. கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறான். மாலையில் வேலை முடித்து அவன் வந்த போது குழந்தை மட்டும் இருந்திருக்கிறது. அவள் பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கக் கூடும் என்று விட்டுவிட்டான். வெகுநேரம் ஆகியும் வராததால் அடுக்ககத்தின் வீடுகளில் விசாரித்திருக்கிறான். அவளைக் காணவில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பிறகு புகார் அளித்திருக்கிறான். காவலர்கள் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கக் கூடும். அம்மா நினைவு வந்து அழத் தொடங்கியிருந்தது. சில பெண்மணிகள் குழந்தையைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் முழுக்கவும் அக்கம்பக்கத்தவர்கள் யாருமே வித்தியாசமாக எதையும் பார்க்கவில்லை என்றார்கள். இது கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்தது.

சாந்தியும் அவளது கணவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம். அவளுக்கு இருபது வயதைச் சுற்றித்தான் இருக்கும். கணவனும் வாட்டசாட்டமாக இருப்பான். வீட்டுக்கு பயந்து ஹசன் மாவட்டத்திலிருந்து பெங்களூர் ஓடி வந்துவிட்டார்கள். குழந்தை பிறந்த பிறகு பிறந்த வீட்டில் சமாதானம் ஆகிவிட்டார்கள். சாந்தியின் பிரசவம் நடந்த போது அவளது பெற்றவர்கள் அருகிலேயேதான் இருந்திருக்கிறார்கள். நன்றாகவும் கவனித்துக் கொண்டதாகச் சொன்னான். அதனால் அவர்கள் மீது தவறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றான். நேரமாகிக் கொண்டிருந்தது. நாங்கள் ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. அதற்கு மேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு முறை அவள் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஐநூறு ரூபாய் கடனாகக் கேட்டது ஞாபகம் வந்து போனது. அப்பொழுது பணம் கொடுக்காமல் மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு பேசிக் கொண்டதில்லை.

ஞாயிறு இரவு வீடு திரும்பிய போது சாந்தியின் வீட்டில் எந்தச் சலனமும் இல்லை. உள்ளே பூட்டியிருக்கிறதா அல்லது வெளியில் பூட்டியிருக்கிறதா என்றும் தெரியவில்லை. இரவு பதினோரு மணியைத் தாண்டியிருந்தது. பேசாமல் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்த பிறகு முதல் வேலையாக எங்கள் வீட்டு மாடிக்குச் சென்று சாந்தியின் வீட்டைப் பார்த்த போது வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. மனம் குறுகுறுக்க எதிர்வீட்டு மனிதரிடம் கேட்டேன். அவர் மிகச் சாதாரணமாக ‘அந்தப் பொண்ணு ஓடிப் போய்ட்டா’ என்றார். அந்த மனிதர் வேலூர்க்காரர். அந்த ஊர் பாஷை பிசிறாமல் பேசுவார். ‘யார் கூட?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவர் என்னைவிட வயதில் மிக மூத்தவர். தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும் என்று எதுவும் கேட்கவில்லை.

அவளுடைய கணவனும் எங்கேயோ சென்றுவிட்டான் என்று நினைத்தேன். அப்படியெல்லாம் நாடகத்தனமாக எதுவும் நடக்கவில்லை. அவள் ஓடிப் போன விவரம் தெரிந்த நாளே குழந்தையை அவளது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான். கொலையாக இருக்கக் கூடும் என்று காவல்துறையினர் முதலில் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். பிறகு அவளது அலைபேசி எண்ணை வாங்கி விசாரித்திருக்கிறார்கள். அவளது எண் தொடர்பிலேயே இல்லை. அவளுடைய எண்ணுக்கு ஒரே எண்ணில் தொடர்ந்து அழைப்புகள் வந்திருக்கின்றன. அந்த இன்னொரு எண்ணை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். பிடித்துவிட்டார்கள். இரண்டு பேரும் மஹாராஷ்டிராவில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

காவல்துறையினர் அவனை மிரட்டியிருக்கிறார்கள். அலைபேசியை வாங்கிப் பேசிய சாந்தி ‘...நானாத்தான் ஆசைப்பட்டு வந்தேன்’ என்றாளாம். விவாகரத்து வாங்காமல் இன்னொருவனுடன் ஓடினாலும் குற்றம்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். இணைப்பைத் துண்டித்து சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாள். அதன் பிறகு அவளிடம் அவர்களால் பேச முடியவில்லை. விவரத்தை கணவனிடம் சொல்லிவிட்டார்கள். இனி காவல்துறையினர் பெரிய ஆர்வம் காட்டமாட்டார்கள் என்று தோன்றியது. அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமெனில் ஒன்று பெரிய இடத்து விவகாரமாக இருக்க வேண்டும் அல்லது கணவன் ஏதாவது பிரயத்தனம் செய்ய வேண்டும். இரண்டும் நடக்கப் போவதில்லை.

குழந்தை இப்பொழுது ஹசனில் அழுது கொண்டிருக்கக் கூடும். இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மாவை மறந்துவிட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். ‘குழந்தை பிறக்கிற வரைக்கும் பிரிஞ்சுடலாம்ன்னு தோணச் சான்ஸ் இருக்கு...குழந்தை ஒண்ணு பிறந்துடுச்சுன்னா அந்தக் குழந்தைக்காகவாவது ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்ன்னு கமிட்மெண்ட் வந்துடும்’ என்கிற வசனம் எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. இப்படியான கதைகளை நிறையக் கேட்க வேண்டியிருக்கிறது. உறவுகள், பிணைப்பு, அன்பு என்பதையெல்லாம் தாண்டி அவரவர் உடலும் அதற்கான சந்தோஷமும் இந்தக் காலத்து மனிதர்களை அலை கழிக்கிறது என்றுதான் நினைக்கிறேன். தன்னுடைய சுதந்திரம் சந்தோஷத்துக்கு முன்னால் வேறு எதையும் போட்டு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

சாந்தியின் வீட்டுக்கு கீழேயே ஒரு பேக்கரி இருக்கிறது. டீ விற்பார்கள். ஆண்களும் பெண்களுமாக தம் அடிப்பதற்கான இடம் அதுதான். மேற்சொன்ன தகவல்களையெல்லாம் அவர்கள்தான் சொன்னார்கள். ‘அவ கேசு சார்’ என்றான். சொன்னவன் தமிழ் பையன். பெங்களூரில் இந்தச் சொல்லை முதன் முறையாகக் கேட்கிறேன். அதற்கு மேல் கேட்பதற்கு அவனிடம் எதுவுமில்லை. ‘புருஷனும் யோக்கியமில்லை..குடிகாரன்’ என்றான். ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். யாரையாவது குற்றம் சாட்டலாம். ஏதாவதொரு சமாதானத்தைச் சொல்லலாம். அதெல்லாம் அவசியமானதாகவே தெரியவில்லை. அந்த மொட்டை மாடியில் தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் முகம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன்.