May 6, 2016

வேட்டை

வருண் பிரகாஷ் பெங்களூருவாசி. அவ்வப்போது அழைத்துப் பேசுவார். நேற்று பேசிக் கொண்டிருக்கும் போது ரஷ்யாவில் மருத்துவப்படிப்பு பற்றி பேசினார். அவரது உறவுக்காரப் பையன் ஒருவன் அங்கீகாரம் பெறாத கல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சிக்கிக் கொண்டதாகச் சொன்னார். இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் ஊரில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு பெண்மணி சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அவருக்கு கணவர் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள். பூ விற்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கையில் ஒரு விண்ணப்பம் எழுதி எடுத்து வந்திருந்தார். அதை வாங்கி வாசித்துக் கொண்டிருந்த போது தேம்பித் தேம்பி அழத் தொடங்கியிருந்தார். பதற்றத்தில் வாசிப்பதை நிறுத்திவிட்டு ‘என்னாச்சுன்னு சொல்லுங்கம்மா’ என்றேன். தேம்பியவர் உடைந்து கதறிய போது சுற்றிலும் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

மகளை ரஷ்யாவில் மருத்துவத்தில் சேர்த்திருக்கிறார். மூன்றாவது வருடப்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாள். வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் செலவாகிறது. முதல் வருடம் கடன் வாங்கி அனுப்பிவிட்டார். இரண்டாம் வருடம் முக்கால் ஏக்கர் நிலத்தை விற்று கடனில் கொஞ்சத்தைக் கட்டிவிட்டு மீதத்தை மகளுக்கு அனுப்பியிருக்கிறார். மூன்றாம் ஆண்டில் குடியிருந்த வீட்டை விற்றுவிட்டார். மகளைப் பார்த்து மூன்று வருடம் ஆகிவிட்டது என்றும் எப்பொழுதாவது ஃபோனில் பேசினால் அவள் பெரும்பாலான நாட்கள் பசியிலும் தோழிகள் கொடுக்கும் எதையாவது தின்று கொண்டிருப்பதாகவும் சொன்னார். விக்கித்துப் போய்விட்டது. 

வேறு யாராவது உதவி கேட்டிருந்தால் வருடம் நான்கு லட்ச ரூபாய் , அதுவும் வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கெல்லாம் கொடுக்க சாத்தியமேயில்லை என்று அப்பொழுதே சொல்லியிருக்க முடியும். ஆனால் அந்தப் பெண்மணியிடம் முடியாது என்று சொல்லக் கூட மனம் வரவில்லை. ‘யோசிச்சு சொல்லுறேங்க’ என்று பேசிக் கொண்டிருக்கும் போது கால்களைப் பிடித்துவிட்டார். என்னை விட வயதில் மூத்தவர் காலில் விழுவதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பள்ளியின் நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் கிளம்பி வந்துவிட்டேன். மனம் முழுக்கவும் பாரமாகக் கிடந்தது.

எப்படிச் சிக்குகிறார்கள்?

கல்வி ஆலோசனை என்ற பெயரில் எவனோ வலை விரித்திருக்கிறான். ப்ளஸ் டூ முடிவுகள் வந்தவுடன் ஒவ்வொரு கிராமப்புற பள்ளிகளிலும் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து அந்த மாணவர்களின் பெற்றோர்களை அணுகுகிறார்கள். முதல் வருடம் மட்டும் பணத்தை எப்படியாவது சமாளித்து அனுப்பிவிட்டால் அடுத்த ஆண்டிலிருந்து வங்கிக்கடன் வாங்கிவிடலாம் என்று தேற்றுகிறார்கள். பத்து பெற்றோரில் ஒருவர் விழுந்தாலும் கூட போதும் அல்லவா? இப்படி விழக் கூடிய மாணவர்களை பெட்டியைக் கட்டி அனுப்பி வைக்கிறார்கள். ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ், சீனாவில் அக்குபஞ்சர் படிப்பு என்று வண்ண வண்ணக் கடையாக விரித்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்களுக்கு பெரிதாக விசாரிக்கவும் முடிவதில்லை. 

‘நல்லா படிக்கிற பொண்ணு...நல்ல எதிர்காலம்...யோசிக்காம அனுப்பி வைங்க’ என்று உசுப்பேற்றுகிறார்கள். பக்கத்து ஊரில், பக்கத்து மாவட்டத்தில் இருக்கும் மாணவர்கள் அங்கே இருப்பதாகவும அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தம் கட்டுகிறார்கள். சற்றே வளையக் கூடும் என்று தெரிந்துவிட்டால் ‘வர்ற சனிக்கிழமைக்குள்ள ஒரு லட்சம் கட்டிடுங்க...புக் பண்ணிடலாம்....மீதிப்பணத்தை மெதுவா புரட்டிக் கொடுங்க’ என்று அவசரம் காட்டி முன்பணத்தைக் கறந்துவிடுகிறார்கள். அதோடு சோலி சுத்தம்.

ஓரளவு வசதியாக இருக்கக் கூடிய பெற்றவர்கள் எப்படியாவது சமாளித்துவிடுகிறார்கள். பூ வியாபாரம் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுகிறவர்கள், விவசாயக் கூலிகளின் பிள்ளைகளின் நிலைமையை யோசித்தால் கண்ணீர் வந்துவிடும். போலியான அல்லது இந்திய அரசின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் நிறைய இருக்கின்றன. இத்தகைய கல்லூரிகள்தான் ஆள் பிடித்துக் கொடுக்கும் கேடிகளுக்கு நிறைய தரகுத் தொகையை வழங்குகின்றன என்பதால் மூளையைக் கழுவுகிறவர்கள் இந்தக் கல்லூரியில்தான் தள்ளிவிடுகிறார்கள். ‘அங்ககெல்லாம் பசங்க பார்ட் டைம் வேலை செஞ்சாவே லட்சக்கணக்குல கிடைக்கும்’ என்பார்கள். ஆனால் கல்லூரி வனாந்திரத்தில் இருக்கும். மாணவிகளின் நிலைமையும் அவர்கள் சந்திக்கும் சூழலையும் அவர்கள் முன்பாக இருக்கக் கூடிய ஒரே வாய்ப்பையும் விலாவாரியாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

வெளிநாட்டுக் கல்லூரிகளுக்கும் உள்ளூர் கல்வி நிறுவனங்களிலும் ஆள் பிடித்துக் கொடுப்பது இப்பொழுது மிகப்பெரிய தொழிலாக மாறியிருக்கிறது. அயோக்கியர்கள், பொய் சொல்பவர்கள், கல்வியின் அடிப்படை கூடத் தெரியாத ஏகப்பட்ட களவாணிகள் கோட்டும் சூட்டுமாக வலையைத் தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்கள். சற்றே ஏமாந்தாலும் ஒரே அமுக்காக அமுக்குகிறார்கள். மகன் ரஷ்யாவுக்கு படிக்கப் போகிறான், ரஷ்யாவில் மகள் எம்.பி.பி.எஸ் சேரப் போகிறாள் என்று யாராவது வந்தால் - ஒருவேளை அட்வான்ஸ் கொடுத்திருந்தாலும் கூட- தலைப்பாகையோடு போகட்டும் என்று மிகத் தீவிரமாக விசாரிப்பதுதான் நல்லது. ஒரு லட்சம் போய்விடும் இரண்டு லட்சம் போய்விடும் என்று கொடுத்த அட்வான்ஸ் தொகையைக் கணக்குப் போட்டால் அடுத்த ஐந்து வருடங்களில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி தலை மீது வைத்துவிடுவார்கள். 

பணமும் கல்லூரியின் அங்கீகாரமும் மட்டுமே பிரச்சினைகள் இல்லை. ஐந்தாண்டுகளுக்கான மன உளைச்சல்தான் வாழ்நாள் வலி. முடிந்த வரைக்கும் விசாரித்து சரியான கல்லூரியா? செலவை நம்மால் புரட்டிவிட முடியுமா? போன்றவற்றை ஆலோசித்து முடிவு செய்து கொண்டு சேர்வதுதான் சரி. 

நேற்று ஒருவர் அழைத்திருந்தார். வாரன் பஃபெட்டின் வீட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆள் தேவை என்றும் மாதம் ஆறாயிரம் டாலர் சம்பளமாகத் தருவதாகவும் அவரே மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறாராம். Quikr தளம் வழியாக இவனைக் கண்டுபிடித்து வந்திருக்கிறார் வாரன் பஃபெட். இவனுக்கு விசா பெற்றுத் தருவதற்கான முன்பணமாக இருபத்தோராயிரம் கேட்டிருக்கிறார். கட்டிவிட்டான். வாரன் பஃபெட்டின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய். இவனுக்கு மின்னஞ்சல் எழுதுகிற நேரத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிடுவார். அடுத்ததாக ‘மொழிச் சான்றிதழ் வாங்கித் தர எழுபதாயிரம் கட்டுங்கள். சம்பளத்தோடு சேர்த்து அந்தத் தொகையைக் கொடுத்துவிடுகிறேன்’ என்று இன்னொரு மின்னஞ்சல் வேறு அனுப்பியிருக்கிறாராம். ‘என்ன சார் பண்ணலாம்?’ என்று கேட்டான். அந்தப் பையன் சொல்லச் சொல்ல எனக்கு மயக்கமே வந்துவிட்டது. ‘இதோட போச்சுன்னு நினைச்சுட்டு நல்ல வேலையா தேடுற வழியைப் பாரு’ என்று சொல்லியிருக்கிறேன்.

திரும்பிய பக்கமெல்லாம் திருடர்கள். ஏழை, பிழைக்க வழியில்லாதவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் என்கிற எந்தக் கருணையுமற்றவர்கள் இவர்கள். சிக்கினால் கழுத்தோடு சேர்த்து வெட்டுவார்கள். நாம்தான் சூதானமாக இருந்து கொள்ள வேண்டும். அயோக்கியர்களுக்கு இங்கு பணமே பிரதானம். மற்றதெல்லாம் ஒன்றுமேயில்லை.

4 எதிர் சப்தங்கள்:

‘தளிர்’ சுரேஷ் said...

எங்க ஊர் பெண் பிள்ளைகள் இருவர் ஜாம்பியா சென்றுள்ளனர் மருத்துவ படிப்புக்கு! வசதியானவர்கள் என்பதால் சமாளிக்கின்றனர் போலும். கட்டுரையின் நிஜம் சுடுகின்றது.

TV VIDEOS said...

ஏமாந்திருந்தால் எல்லாமே செய்வார்கள். இவர்களுக்கு மனசாட்சி எதுவும் கிடையாது. பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள்.

arun mahalingam said...

ரொம்ப வருத்தமான விஷயம்...சதுரங்க வேட்டை படத்துல வர மாதிரி இந்த மாதிரி அப்பாவிகளை ரொம்ப ஈசியா வளைச்சு புடிச்சிடுறானுங்க...

இதுல கொடுமை என்னன்னா ரஷ்யால படிக்கிற இந்த மாதிரி படிப்புகள் பெரும்பாலும் இந்திய மருத்துவ சங்கத்தால் அங்கீகரிக்கப்படாத நிலையே இருக்கு...

விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டிய அரசாங்கமும் மத்த அரசு இயந்திரங்களும் எப்புடி கொள்ளையடிக்கலாம்னுதான் யோசிச்சுகிட்டு இருக்காங்க...

நம்மதான் முடிஞ்ச வரை ஒரு விழிப்புணர்ச்சி கொண்டுவர முயற்சி பண்ணனும்...

Sandilyan S said...

Hello Manikandan,

Thanks for contentiously writing on this subject. Until, some 20 to 30 years before teachers themselves use to guide the student, I agree that today's world situation is more complex.

Lack of knowledge from today's teachers affects the society as much