May 20, 2016

வேண்டுதல்

எஸ்.வி.சரவணன் அவர்களை முன்பு ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் பெரிய அறிமுகமில்லை. கடந்த ஆண்டில் ஆனந்த விகடனில் நூறு இளைஞர்களில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்த போது அந்தப் பணத்தில் நம் ஊரில் என்ன செய்யலாம் என்று யோசித்த சமயத்தில்தான் உள்ளூர்காரர்கள் சரவணனை அணுகச் சொன்னார்கள். அப்பொழுது அவர் பதவி எதிலும் இல்லை. தமிழகத்தின் கடும் வறட்சியான பிரதேசங்கள் என்றால் எங்கள் தொகுதியில் இருக்கும் நம்பியூரையும் சொல்லலாம். அந்தப் பகுதியின் வறட்சி நிலங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்காக இந்தியாவின் நீர் காந்தி என்று அழைக்கப்படுகிற ராஜேந்திர சிங் உள்ளிட்ட வல்லுநர்களை வைத்து அலை மோதிக் கொண்டிருந்தவர்களில் சரவணனும் ஒருவர். அலைபேசியில் அழைத்த போது துளி பந்தா இல்லாமல் பேசினார். விவரங்களைச் சொன்னேன். நிறைய இடங்களில் திரிந்து தகவல்களைச் சேகரித்துப் பேசினார். ஆனால் ஆனந்தவிகடனின் அந்தத் திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. அதனால் சரவணனுடனான தொடர்பு அப்பொழுது துண்டித்துவிட்டது. ஆனால் அவரைப் பற்றிய நல்ல பிம்பம் உருவாகியிருந்தது.


2016 சட்டமன்றத் தேர்தலில் சரவணன் கோபித் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முந்தின நாள் அவரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். பேருந்து நிலையத்துக்கு அருகில் பத்துக்கு பத்து அறையில் அமர்ந்திருந்தார். அவருடைய சில நண்பர்களும் உடனிருந்தார்கள். ‘நீங்க வேட்பாளாராக அறிவிக்கப்பட்டால் சந்தோஷம்’ என்று சொல்லிக் கை கொடுத்தேன். நம்ப முடியாமல்தான் இருக்கும்- அன்றைய தினம் கிழிந்த கதர் சட்டையைத்தான் அணிந்திருந்தார். சரவணன் ஈரோடு மாவட்டச் சேர்மேனாக இருந்த போது மட்டும் கிட்டத்தட்ட ஐநூறு கோடி ரூபாய்க்கான வேலைகளைச் செய்திருக்கிறார். ஒரு சதவீதம் கமிஷன் அடித்திருந்தாலும் கூட கிழிந்த சட்டையை அணிந்திருக்க வேண்டியிருந்திருக்காது என்றுதான் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர்பார்த்தது போலவே சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் வெளிப்படையாக ஆதரித்துவிடக் கூடாது என்று எங்கெல்லாம் விசாரிக்க முடியுமோ அங்கெல்லாம் விசாரித்தேன். சரவணன் பற்றி ஒரு நண்பர் சொன்ன விஷயம்தான் வாயடைத்துப் போகச் செய்தது. பக்கத்து ஊரில் ஒரு மரணம் சம்பவித்திருக்கிறது. நண்பர் உட்பட சிலர் சரவணனை அழைத்திருக்கிறார்கள். ‘நாம பஸ்ஸுல போய்டலாம்’ என்று சரவணன் சொன்னாராம். சரவணனிடம் ஒரு கார் இருக்கிறது. இருந்தும் பேருந்தில் செல்வதற்கான காரணம் கொடுமையானது - பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தியிருக்கிறார். ஒரு காலத்தில் வசதியான குடும்பதான். கோழிப்பண்ணையெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். மாட்டுத் தீவன நிறுவனம் நடத்தியிருக்கிறார்கள். இப்பொழுது பெரிய வருமானம் இல்லை. அதனால் இந்தச் சிக்கனம். கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பிருந்தவர் அவர். பதினைந்து வருடங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருந்திருக்கிறார். இருந்தும் ஒரு வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. அவ்வப்போது வருகிற வருமானத்தை வைத்து ஒரு முறை கதவு வைப்பது இன்னொரு முறை ஜன்னல் வைப்பது என்று பணம் தீரும் வரைக்கும் வேலை செய்வார்களாம். பணம் தீர்ந்தவுடன் அடுத்த வருமானம் வரும் வரைக்கும் வீடு பல்லிளித்துக் கொண்டு நிற்கும். பல வருடங்களாகக் கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டிவிட்டார். இன்னமும் முழுமையாக முடிக்கவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்டு நெகிழாமல் இருக்க முடியுமா?

தேர்தலில் சரவணன் வென்றால் என்ன? செங்கோட்டையன் வென்றால் என்ன? எனக்கும் என்னைப் போன்ற கட்சி சார்பற்ற மற்ற இளைஞர்களுக்கும் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது? இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவரை ஆதரிக்க வேண்டிய அவசியமும் எதுவுமில்லை. அவர் பஞ்சாயத்து கவுன்சிலராகவும், சேர்மேனாகவும் இருந்த நம்பியூர் பகுதியிலிருந்துதான் பெருமளவு இளைஞர்கள் கூடினார்கள். அவரைப் பற்றி அவர்களுக்கு நிறையத் தெரிந்திருந்தது. சரவணனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு கட்சியும் சின்னமும் பொருட்டாகவே இல்லை. அவரைப் பற்றித் தெரியாதவர்கள்தான் கட்சியைக் காட்டி முகத்தைச் சுளித்தார்கள். சரவணன் பின்னால் திரண்டு நின்ற அத்தனை பேரும் இவர் வென்றால் மாற்றம் நடக்கும் என்று நம்பினார்கள். 

தேர்தல் தினத்தன்று உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னை விட சற்றே வயது குறைந்த நண்பர் அவர். ‘இனியெல்லாம் யாருங்கண்ணா ஸீட் கேட்பாங்க? எல்லோராலும் இவ்வளவு செலவு பண்ண முடியுமா?’ என்றார். தேர்தல் என்றாலே பணம்தான் என்கிற மனநிலை உருவாகியிருக்கிறது. கோடிக்கணக்கில் இறைத்திருக்கிறார்கள். ஒருவேளை சரவணன் வென்றிருந்தால் இந்த அவநம்பிக்கை உடைந்திருக்கும். தேர்தலில் வெல்வதற்கு பணம் அவசியமில்லை என்று உணர்த்தியிருக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலேயே வெல்ல முடியும் என்று காட்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்கள்தான் ஜனநாயகத்தின் ஆணி வேர். இல்லையா? 

சில நாட்களுக்கு முன்பாக சரவணனிடம் பேசிய போது ‘நாமாகவே இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று மேம்போக்காக முடிவு செய்ய வேண்டாம். எல்லாத் தரப்பிலிருந்தும் மொத்தமா நூறு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவங்ககிட்ட பேசலாம்’ என்றார். ஆசிரியர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவுகளிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி தொகுதிக்கு எவையெல்லாம் அவசியமான தேவைகள் என்றும் அதில் எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெளிவான பட்டியலைத் தயாரிப்பது அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்தது. இது தவிர தொகுதிக்கான அத்தியாவசியத் திட்டங்கள் என்று தனியாக வைத்திருந்தார். இப்படியான குறுகியகால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என அவர் யோசித்தது யாவையும் மாற்றத்திற்கான அறிகுறிகளாக இருந்தன. 

இத்தகைய தகுதிகளால்தான் சரவணனை இளைஞர்கள் நேசித்தார்கள். உணர்வுப்பூர்வமாக அவருடன் பின்னியிருந்தார்கள். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தேர்தல் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அழைத்தேன். வேறு யாரோ ஒருவர்தான் அலைபேசியை எடுத்தார். எடுத்தவர் ‘அழுதுட்டு இருந்தாரு...இப்போத்தான் கிளம்பிப் போறாரு’ என்றார். தோல்விக்காக அழுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் அழுததற்கான காரணம் அதுவன்று. நாகரணை என்ற ஊரில் சரவணனுக்காகத் தேர்தல் பணியாற்றிய இளைஞன் ஒருவன் தேர்தல் முடிவுகளில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். அதைக் கேள்விப்பட்டுத்தான் அழுதிருக்கிறார். மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. தலைவராக உருவெடுக்காத ஒரு வேட்பாளரின் தோல்விக்காக உயிரைக் கொடுக்குமளவுக்கு இளைஞன் ஒருவனின் அன்பைச் சேகரித்து வைத்திருக்கிறார். வெறும் பணத்துக்காக மட்டுமே தேர்தல் வேலை நடைபெறுகிற இந்தக் காலத்தில் உள்ளூர் இளைஞர்கள் சரவணனுடன் எப்படி மனம் ஒன்றியிருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக இதைச் சொல்கிறேன். தேர்தல் பணியாற்றிய யாரை அலைபேசியில் அழைத்தாலும் அழுகிறார்கள். தாங்களே தோற்றுப் போனது போல அரற்றுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு இவர்களிடம் பேசவே வேண்டியதில்லை என்று அமைதியாகிவிட்டேன்.

கட்சி, இனம் என்கிற சார்புகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் சரவணன் மிகச் சிறந்த வேட்பாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரது நேர்மை, எளிமை குறித்து யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. தேர்தல் சமயத்தில் வதந்திகளைக் கிளப்பியவர்கள் கூட தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். ஒருவேளை சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அவர் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுப்பார் என்ற உறுதியான நம்பிக்கையில்தான் இளைஞர்கள் பாடுபட்டார்கள். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. அவருக்கு கோபி மக்கள் வாய்ப்பை வழங்கவில்லை. இனி இத்தகையதொரு நல்ல மனிதருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படியொரு வாய்ப்புக் கிடைத்து இத்தனை இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடுவார்களா என்றும் தெரியவில்லை. கை தவறிய வாய்ப்பு கை தவறியதுதான்.

தோல்விக்கான காரணங்கள் என்று நிறையச் சொல்ல முடியும். ஆனால் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

அரசியலைப் பொறுத்தவரை சரி தவறு என்று எதுவுமேயில்லை. கருணையற்ற வேட்டைக்காடு இது. வெற்றியா தோல்வியா என்பது மட்டும்தான் கேள்வி. வென்றுவிட வேண்டும். தோற்றுவிட்ட பிறகு அப்படி வென்றிருக்கலாம் இப்படி வென்றிருக்கலாம் என்று பேசுவதில் அர்த்தமேயில்லை. தனிப்பட்ட முறையில் இந்தத் தோல்வி பற்றி எனக்கு பெரிய வருத்தமில்லை. செங்கோட்டையனும் அணுகக் கூடிய மனிதர்தான். கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் என்பதையெல்லாம் கையில் தொடாத அரசியல்வாதி அவர். உள்ளூரில் செல்வாக்கு மிக்க மனிதர். கடந்த தேர்தலில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் வென்றார். அத்தகைய மனிதருடன் போராடிய சரவணனுக்கு இது கெளரவமான தோல்வி. இந்த முறை வித்தியாசம் பதினோராயிரம் வாக்குகள்தான்.

தோற்றால் தொலைகிறது. இரண்டொரு நாட்களில் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் தேர்தல் செலவுகளுக்கு என்று கடன் வாங்கி செலவு செய்த சரவணன் இப்பொழுது கடனாளியாகி இருக்கக் கூடாது என்றுதான் கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். வெற்றியும் தோல்வியும் தேர்தலில் சகஜம். ஆனால் சரவணன் மாதிரியான நல்ல மனிதர்கள் கடன்காரர்களாகி குடும்பத்தைத் தவிக்க விட்டு விடக் கூடாது என்று உள்ளூர விரும்புகிறேன்.