May 19, 2016

வரிசை

சங்கர் தயாளின் அக்கா சரண்யா பேசினார். மதுரை அரவிந்த் மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீட்டுக்குச் செல்கிறார்கள். இனி பெரிய சிகிச்சை எதுவுமில்லை. கண்ணும் பார்வையும் பறிபோனது போனதுதான். மாற்றுக் கண் பொருத்துவது கூட சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் வாய்ப்புகள் இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வீக்கம் சற்று குறைந்த பிறகு சோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் சங்கரின் இடது கண்ணின் வார்ப்பு (Anatomy) முற்றாகச் சிதைந்து போயிருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். கண்ணில் கத்தியைச் செருகியவன் அதை உள்ளுக்குள்ளேயே வைத்து அசைத்திருக்கிறான். நரம்புகள் கத்தரிக்கப்பட்டு கண்ணுக்குள் இருக்கும் திரவம் முழுக்கவும் வெளியேறிவிட்டது. இனி காயம் ஆற ஆற கண் சுருங்கிவிடுமாம். அதன் பிறகு ஒற்றைக் கண்ணுடன்தான் வாழ்நாள் முழுக்கவும் இருக்க வேண்டியிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்போதைக்கு கிருமித் தொற்று மற்றொரு கண்ணுக்குப் பரவாமல் தடுத்துவிட்டார்கள். சங்கரால் பேச முடிகிறது. உணவு உண்ண முடிகிறது. நடக்க முடிகிறது. அதனால் இனி மருத்துவமனையிலிருப்பது அவசியமில்லை என்று அனுப்பி வைக்கிறார்கள். மதுரை மருத்துவமனையின் செலவுகளை ராஜேஷ் பார்த்துக் கொண்டார். அவர் சரண்யாவுக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த ஆசிரியர். அநேகமாக பத்தாயிரம் ரூபாய்க்குள் ஆகியிருக்கும் போலிருக்கிறது. இந்த விவரங்களை எழுதுவதற்கு காரணமிருக்கிறது- சரண்யாவுக்கும் சங்கருக்கும் உதவத் தயாராக இருப்பதாக இன்னமும் மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் பணம் அனுப்பியிருக்கிறார்கள். இன்னமும் அனுப்ப விரும்புவதாக சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

ஒருவரின் துன்பத்தையும் பிரச்சினைகளையும் எழுதும் போது நெகிழ்ச்சியடையக் கூடியவர்கள் தங்களின் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகையைக் அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அனுப்பி வைப்பது வழமையான ஒன்றுதான். சங்கரின் மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட எழுபத்தேழாயிரம் ரூபாய் அறக்கட்டளை நிதியிலிருந்துதான் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் நிச்சயமாக கொடுக்கலாம். ஆனால் தற்போதைக்கு அவர்களால் சமாளித்துக் கொள்ள முடியும் என்கிற பட்சத்தில் சேர்ந்த பணத்தை தேவைக்கென காத்திருக்கும் அடுத்தவர்களுக்கு வழங்குவதுதான் சரியான அணுகுமுறை ஆகும். ‘நான் அனுப்பி வைத்த பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டீர்களா?’ என்று யாராவது கேட்கும் போது என்ன பதில் சொல்வது என்று குழப்பமாகிவிடுகிறது.

‘நான் அனுப்பிய பணத்தை கடலூரின் வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று இப்பொழுது யாராவது சொன்னால் குப்பென்று வியர்த்துவிடுகிறது. அது சாத்தியமே இல்லாத விஷயம். கடலூருக்கான செயல்களைச் செய்து முடித்தாகிவிட்டது. இனி மீண்டும் அதே பகுதியில் பயனாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது அவசியமில்லாத காரியம் என நினைக்கிறேன். மழையின் சீரழிவிலிருந்து மக்கள் மேலெழுந்து வந்த பிறகும் அதே பகுதியிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது. அதே போலத்தான் ஒரு பயனாளியைக் கை தூக்கிவிட்ட பிறகு அடுத்தடுத்த பயனாளிகளை நோக்கி நகரலாம். ஒருவருக்கே திரும்பத் திரும்ப நிதியுதவி அளிக்க வேண்டியதில்லை. வேறு உதவிகள் ஏதேனும் தேவைப்படுமானால் செய்யலாம்.

அறக்கட்டளையின் செயல்பாடு என்பது குறிப்பிட்ட பயனாளிக்கு என்று சொல்லி பணத்தை வசூலித்துக் கொடுப்பதாக இருக்க வேண்டியதில்லை. வங்கிக் கணக்கில் நிதி இருக்கிறது. கணக்கு வழக்கு விவரங்கள் பொதுவில் இருக்கிறது. நன்கொடையாளர்கள் பணத்தை அனுப்பும் போது அது வரவில் சேர்ந்து கொண்டேயிருக்கிறது. யாருக்கு எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்பொழுது அவர்கள் குறித்து விசாரித்துவிட்டு உதவுகிறோம். அவ்வளவுதான். Crowd funding.

குறிப்பிட்ட நபருக்கு என்று சொல்லி நிதி அனுப்புவதில் தவறு எதுவுமில்லை. ஆனால் நடை முறைச் சாத்தியங்களை மனதில் நிறுத்திக் கொண்டால் போதுமானது. சங்கருக்கு என்று அனுப்பப்பட்ட நிதி சங்கருக்கே போகுமென்று சொல்ல முடியாது. அவரைப் போன்ற இன்னொரு நபருக்கும் கூடச் செல்லலாம். அப்படிச் செயல்படும் போதுதான் பரவலானவர்களுக்கு நம்மால் உதவ முடியும். நிதி அனுப்புவதாக இருப்பின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துவிட்டு PAN எண்ணையும் முகவரியையும் மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். உதவி தேவைப்படுகிறவர்கள் வரிசையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவுவோம்.

இது குறித்து மாற்றுக் கருத்து ஏதேனுமிருந்தாலும் தெரியப்படுத்துங்கள். என்னுடைய புரிதலில் தவறு இருப்பின் மாற்றிக் கொள்ளலாம்.