May 18, 2016

கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல்

வணக்கம்,

ஈரோட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாசூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 

எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் கோவை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். நேற்று 17.05.2016 எனது இரண்டாவது மகளின் பிளஸ் 2 ரிசல்ட் வந்தது. எதிர்பார்த்ததுக்கு குறைவாக 1111 மதிப்பெண்களே பெற்றுள்ளார். கட் ஆஃப் 189.5. BC பிரிவைச் சார்ந்த எனக்கு அண்ணா பல்கலை, சி.ஐ.டி, சி.ஜி.டி போன்றவற்றில் இடம் கிடைக்கும் என்ற  கனவு தகர்ந்து விட்டது. எனக்கு தனியார் கல்லூரிகளில் சேர்த்துப் படிக்க வைக்க தயக்கமாக உள்ளது.

GCE- Salem, GCE- Tirunelveli, GCE- Srirangam என்று ஒரு வரிசைக்கிரமமே போட்டு வைத்திருக்கிறேன். இப்பொழுது GCE- Srirangam தான் வாய்ப்பாகத் தெரிகிறது.

தனியார் கல்லூரிகளில் கட்டணம் பற்றிய தயக்கமில்லை.அதே சமயம் ஆரம்ப நிலை விவசாய நடுத்தரக்குடும்பம். இதற்குப்பின்னால் இரண்டு மகள்களின் திருமணங்கள், அவை சார்ந்த செலவினங்கள் என மலைப்பாக உள்ளது. எனவே  B.E க்கு , பெண் மகளுக்கு இவ்வளவு அதிகமாக செலவு செய்ய வேண்டுமா என ஒரு தயக்கம்.

இப்பொழுது எனது கேள்விகள்.

1) GCE ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் தேனி போன்ற கல்லூரிகளில் சேரலாமா...அது பற்றிய உங்கள் கருத்து என்ன ?

2) எனது தயக்கங்களை உதறிவிட்டு  கவுன்சிலிங்கில் கிடைக்க வாய்ப்புள்ள தனியார் கல்லூரியில் சேர்க்கலாமா...?

3) இவ்வருடம் நடக்க உள்ள NEET தேர்வு, TNEA கவுன்சிலிங்கில் நமது நிலை கல்லுரிகள் பற்றிய வாய்ப்பை  மாற்றியமைத்து விடுமா ?

4)  Campus placement பற்றிய கவலை இல்லையெனில் ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், தர்மபுரி, தேனி, போடிநாயக்கனூர், பர்கூர் போன்ற  அரசு பொறியியற் கல்லூரிகளில் சேரலாமா ?

5) ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் கொடுக்க உள்ளோம். இளநிலைப் பட்டப்படிப்புக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன ?


ஆயாசமாகவும் பதட்டமாகவும் தன்னிரக்கமாகவும் குழப்பிக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தலைவனின் மனதை, உங்கள் பதில்கள் அமைதிப்படுத்தி, ஒரு நல்வழியைக் காட்டும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்


M.செல்லக்குமாரசாமி
ராக்கியாக்கவுண்டன்புதூர்
பாசூர்


வணக்கம்,

1111 மதிப்பெண்கள் வாங்கிய பிறகும் ஆயாசமாகவும், பதற்றமாகவும், தன்னிரக்கத்துடனும் இருக்க வேண்டிய அவசியமிருக்கிறதா என்ன? ஆச்சரியமாக இருக்கிறது.

மதிப்பெண்கள் அவசியமானவைதான் ஆனால் அதற்காக அதிகப்படியாக அலட்டிக் கொள்கிறோம் என நினைக்கிறேன். வெறும் மதிப்பெண்களும் கல்லூரியும் மட்டுமே வெற்றியாளர்களை உருவாக்கிவிடுவதில்லை. க்ளிஷேவான அறிவுரை என்றாலும் அதுதான் உண்மை. ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த பனிரெண்டு வருடங்களாக கடின உழைப்பைச் செலுத்தியிருக்கும் தங்களின் மகளுக்கு வாழ்த்துக்களைத் தெரியப்படுத்துங்கள். அவளுக்கு முன்பாக ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உற்சாகமூட்டுங்கள். பிறகு பதற்றமில்லாமல் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 

நேற்று மதியத்திலிருந்து சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. பெரும்பாலானவை குறிப்பிட்ட கல்லூரிகள் குறித்தான கேள்விகள். ‘இந்தக் கல்லூரி நல்லா இருக்குமா? அந்தக் கல்லூரி நல்லா இருக்குமா?’ என்ற வகையறா. இத்தகைய கேள்விகளுக்குத் துல்லியமான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நானூறுக்கும் அதிகமானவை இருக்கின்றன. நான்கு வருடங்களுக்கு முன்பு அட்டகாசமான கல்லூரியாக பெயர் வாங்கியிருந்தவற்றில் பெரும்பாலானவை காலி பெருங்காய டப்பாவாக மணக்கின்றன. அப்பொழுது வெறும் கட்டிடங்களாக இருந்தவை இப்பொழுது நல்ல கல்லூரி என்று பெயரெடுத்திருக்கின்றன. கேட்டுவிட்டார்களே என்று கோர்த்துவிட்டு என்னை பிரஸ்தாபித்துக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

பொதுவான அறிவுரை- கல்லூரி எப்படிப்பட்டது என்பதை அடுத்தவர்களிடம் கேட்பதைக் காட்டிலும் நாமாக விசாரித்துத் தெரிந்து கொள்வது நல்லது. அது சுலபமும் கூட.

சில காரணிகளை முன் வைத்து கல்லூரிகளை முடிவு செய்துவிடலாம். கல்லூரியில் வசதிகள் எப்படி இருக்கின்றன? என்பது முதல் கேள்வி. வசதிகள் என்பவை ஆய்வகம், நூலகம், விடுதி, போக்குவரத்து என சகலத்தையும் உள்ளடக்கும். ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா? என்பது மற்றொரு அதிமுக்கியமான கேள்வி. சுருக்கமாகச் சொன்னால் Facilities மற்றும் Faculties. இவை இரண்டும் சரியாக இருப்பின், மாணவர்களுக்கு கல்லூரி உருவாக்கித் தரக் கூடிய பிற வாய்ப்புகள் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். சில கல்லூரிகளில் வேலை வாய்ப்பு பயிற்சிகள், விளையாட்டுப் பயிற்சிகள், அயல்மொழி பயிற்சிகள், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் போன்றவற்றைத் தருகிறார்கள். இவை கல்லூரியிலேயே இல்லாவிட்டாலும் கல்லூரியின் அக்கம்பக்கத்தில் ஏதேனும் சிறந்த பயிற்சி மையங்கள் இருக்கின்றனவா என்பதைக் கணக்கிடலாம். இவையெல்லாம்தான் மாணவர்களுக்கான exposure. பனிரெண்டாம் வகுப்பில் எப்படி இருந்தார்களோ அப்படியே நான்கு வருடங்களுக்குப் பிறகும் இருப்பதற்கு கல்லூரிகள் எதற்கு? வெளியுலகில் இத்தனை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை உணரச் செய்யும் வளாகமாக கல்லூரிகள் இருக்க வேண்டும்.

அதே போலத்தான் அந்தக் கல்லூரியின் வளாக நேர்முகத் தேர்வுகள் நடக்கின்றனவா? எந்தெந்த நிறுவனங்கள் வருகின்றன என்றும் விசாரிக்கலாம். நல்ல நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வுக்கு வருகின்றன என்றால் அந்தக் கல்லூரியிலிருந்து வெளிவரக் கூடிய மாணவர்கள் சரியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படியென்றால் அந்தக் கல்லூரி உருப்படியான கல்லூரி என்று முடிவு செய்து கொள்ளலாம்.

கல்லூரிக்கு ஒரு முறையேனும் நேரடியாகச் செல்லாமல் மேற்சொன்னவற்றைக் கண்டறிவது கடினம்.  ‘இந்தக் கல்லூரியில் இந்தப் பாடப்பிரிவு’ என்று ஒரு பட்டியலைத் தயாரித்து அந்தந்தக் கல்லூரியின் துறைத் தலைவரை நேரடியாகச் சந்தித்து விவரங்களை வாங்கிக் கொள்வதுதான் சரியான அணுகுமுறை. சற்றே அலைச்சல் மிகுந்த வேலைதான். ஆனால் இது மிகச் சிறந்த பலனைத் தரும். நம்மால் நேரடியாகச் செல்ல முடியாவிட்டாலும் அந்தக் கல்லூரியோடு நேரடியாகத் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்களிடமாவது விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பொறியியல் படிப்பைத் தவிர்த்துவிட்டு இளங்கலை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருப்பின் படித்து முடித்துவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற குறைந்தபட்ச நோக்கமாவது இருக்க வேண்டும். ஆராய்ச்சி மேற்படிப்பா? ஆசிரியர் வேலைக்கான படிப்பா? போட்டித் தேர்வுகளா என படிப்புகளும் அவற்றுக்குண்டான வாய்ப்புகளையும் முன் வைத்து ஒருமுறை அலசுவது நம் பாதையைத் தெளிவாக்கிக் கொள்ளும். 

மேற்சொன்ன பதில் பொதுவானது. Generic.

தங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால்- அரசுக் கல்லூரி என்பதற்காக மட்டுமே முடிவு செய்ய வேண்டியதில்லை. மேற்சொன்ன அனைத்து காரணிகளிலும் பொருந்தி வந்தால் மட்டுமே அரசுக் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். ஒருவேளை கல்லூரிக்கட்டணத்தை சமாளிக்க முடியுமெனில் தனியார் கல்லூரிகளையும் பரிசீலிக்கலாம். 

இந்த பதிலிலிருந்து கிளைக் கேள்விகள் எழுந்தால் அல்லது இன்னமும் விரிவான பதில் தேவையென்றால் கேள்விகளை அனுப்புங்கள். எழுதுகிறேன். இதனை அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆலோசனையாக இருக்கட்டும். திறப்புகளை உண்டாக்குமெனில் அது போதும். 

குறிப்பு: என்னால் அலைபேசியில் விரிவாகத் தட்டச்சு செய்ய முடிவதில்லை. அதனால் வாட்ஸப்பில் வரக் கூடிய கேள்விகளுக்கு பதில் அனுப்புவதில்லை. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.