May 10, 2016

நாங்க எல்லாம்...

தேர்தல் களம் ஒவ்வொரு நாளும் சூடேறிக் கொண்டேயிருக்கிறது. எங்கள் ஊரில் அதிமுகவின் சார்பில் செங்கோட்டையன் வேட்பாளராக அறிவிக்கபட்ட போது ‘எதிர்த்து யார் நின்னாலும் ஜெயிச்சுடுவாரு’ என்றுதான் பேசினார்கள். எதிரணியில் காங்கிரஸ் என்றவுடன் பேசியவர்களுக்கு இன்னமும் தொக்காகப் போய்விட்டது. ஏழெட்டு நாட்கள் கழித்துத்தான் சரவணன் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானது. சரவணன் நல்ல மனுஷன் என்றாலும் வேலை செய்ய ஆள் இருக்காது என்றார்கள். 

அப்படியெல்லாம் ஆகவில்லை. சரவணனுக்காக முதலில் தேர்தல் வேலை ஆரம்பிக்கப்பட்டதே இணையம் மற்றும் வாட்ஸப் வழியாகத்தான். வேலையை ஆரம்பித்தவர்கள் இளைஞர்கள். சரவணன் தகுதியான வேட்பாளர் என்ற பேச்சை சமூக ஊடகங்களின் வழியாகத் தொடங்கி வைத்தோம். 

சரவணனிடம் பதின்மூன்று ஏக்கர் விவசாயம் நிலமிருந்தாலும் அது செழிப்பான நிலமில்லை. வறண்ட காடு. அந்த வருமானம் எதுவும் தேர்தல் செலவுக்கு போதாது. அதனால் வேட்பாளர் தரப்பில் களத்தில் பரப்புரையை ஆரம்பிக்க சற்று தயங்கினார்கள். எவ்வளவு நாட்கள் அதிகமாகப் பரப்புரையைச் செய்கிறார்களோ அவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் அல்லவா? ஆனால் வேட்பாளர் பரப்புரையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் மக்களிடையே உருவாகியிருந்தது.

சரவணன் நம்பியூர் ஒன்றியத்தில்தான் கவுன்சிலராகவும், சேர்மேனாகவும் இருந்தார் என்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்தான் முதலில் களமிறங்கினார்கள். அவர்களுக்கு அவரைப் பற்றித் நிறையத் தெரிந்திருந்தது. எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் சரவணனை முழுமையாக நம்பினார்கள். அடுத்தவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள். ‘அவர்கிட்ட ஒரு வீடு இருக்குல்ல’ என்று கேட்ட போது நம்பியூரைச் சேர்ந்த ஒரு இசுலாமிய இளைஞன் குறுஞ்செய்தி அனுப்பினார். ‘அந்த வீட்டை நீங்க பார்த்தீங்களாண்ணா? பல வருஷமா கட்டிட்டு இருக்காரு...காசு வர்றப்போ அஸ்திவாரம் போடுவாரு..அப்படியே நின்னுடும்..அப்புறம் காசு வர்றப்போ கதவு சுவர் கட்டி நிறுத்துவாங்க..இன்னொருக்கா காசு வர்றப்போ ஜன்னல் வைப்பாரு...பனியன் கம்பெனியில வேலைக்கு இருக்கிறவன் கூட வீடு கட்டிடுறான்...பாவம்ண்ணா அவரு’ என்று அந்தக் குறுஞ்செய்தி இருந்தது. அந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எவரிடம் விசாரித்தாலும் அதை உறுதிப்படுத்தினார்கள். 

கெட்டிச்செவியூரைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது ‘மாவட்ட சேர்மேனா இருந்தப்போ ஐநூறு கோடி ரூபாய் வேலையச் செஞ்சிருக்காரு..ஒரு சதவீத கமிஷன் அடிச்சிருந்தாலும் கோபி, சத்தி, ஈரோட்டில் ஒவ்வொரு வீடு வாங்கியிருக்கலாம்...பொண்ணுங்க கோபியில் படிக்கிறாங்கன்னு இங்க வந்து வாடகை வீட்டில் இருக்காருங்க’ என்றார். இப்படியான செய்திகளைத்தான் திரும்பிய பக்கமெல்லாம் பேசினார்கள். அவருடன் வேலை செய்த ஒப்பந்ததாரர்களிடமும் கூட பேசினேன். எல்லோரும் ஒரே செய்தியைத்தான் பதிவு செய்தார்கள்.

நேர்மை என்கிற ஒற்றை பலத்தை வைத்துக் கொண்டுதான் பெரும் யானையை எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார்.

சரவணன் தொகுதிக்குள் பரப்புரையைத் தொடங்கிய போது பிற பகுதி இளைஞர்களும் சரவணனுக்காக வேலை செய்யத் தொடங்கினார்கள். சரவணனுடன் பரப்புரைக்காக செல்லும் போது கவனிக்க முடியும்- வெளிநாடுகளில் வேலை செய்கிற இளைஞர்கள் கூட ஆளுக்கு பத்து நாள் விடுப்பு எடுத்து வந்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டிலிருந்தே வேலை செய்யும் work from home வாய்ப்பிருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே இருந்து வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருக்குமே சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ஆவதனால் தனிப்பட்ட ஆதாயம் என்று எதுவுமே இருக்க முடியாது. சாதி, மதம், கட்சி, சின்னம் என்கிற ஒட்டுதல் அடிப்படையிலும் இவர்கள் ஆதரிக்கவில்லை. சரவணன் நல்ல ஆள்; அவர் வெல்லட்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சரவணன் பரப்புரை செய்யும் இடங்களிலிருந்து படங்களை எடுத்து அவ்வப்போது வாட்ஸப்பில் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று ஒதுங்கிப் போகிற சராசரி மனநிலை கொண்ட கோபி மாதிரியான ஊர்களில் துணிந்து இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதைத்தான் விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு நினைவு தெரிந்து கோபித் தொகுதியில் கட்சி சாராத இளைஞர்கள் பெருமளவில் பங்கெடுக்கும் முதல் தேர்தல் இது. கட்சி சாராத என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். வேட்பாளர் சரியானவர் என்பதால் மட்டுமே இத்தனை பேர் கூடியிருக்கிறார்கள். நேற்று கோடீஸ்வரன் என்கிற இளைஞர் அழைத்தார். சென்னையில் பணியாற்றுகிறவர் அவர். அவர் ஒரு குழுவைத் தயார் செய்திருந்தார். ஊர் முழுக்கவும் சுற்றி சரவணனைப் பற்றி மற்றவர்களைப் பேசுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கான பதிவுகள் அவை. இரவோடு இரவாக அமர்ந்து எடிட்டிங் முடித்து இன்று காலையில் வாட்ஸப்பில் அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். சுறுசுறுப்பைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  


இப்போதைய கள நிலவரம் என்றால் சரவணனுக்கான வாய்ப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். கோபித் தொகுதியைச் சார்ந்த மனிதர்கள் யாராவது தெரியுமெனில் விசாரித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஆனால் கடைசி நேரத் தில்லாலங்கடி வேலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அடையாளம் தெரியாத பி.எம்.டபிள்யூ கார் ஒன்று இரவுகளில் அலைவதாகச் சொல்கிறார்கள். ஆயிரம் ரூபாய்த்தாள்கள் நூறு ரூபாய்த் தாள்களாக மாற்றப்படுவதால் சில்லரைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னமும் என்ன வேண்டுமானாலும் நிகழக் கூடும். அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அடுத்தடுத்த தேர்தல்களில் இத்தகைய கட்சி சாராத இளைஞர்களின் தன்னெழுச்சி தமிழகம் முழுவதும் நிகழுமாயின் - தமிழகம் முழுக்கவும் கூட வேண்டாம்- பத்து அல்லது பதினைந்து தொகுதிகளில் நிகழ்ந்தால் கூட போதும் அது அரசியல் மாற்றத்திற்கான மிகப்பெரிய படிக்கல்லாக அமையும். தேர்தலில் பணம் பிரதானமில்லை என்றும் வேட்பாளர்களின் தகுதிதான் பிரதானம் என்கிற நிலையை உருவாக்கிவிட முடியும். கட்சிகளை யோசிக்கச் செய்துவிடலாம். பணம், அதிகாரம் உள்ளிட்ட தடைக்கற்களை மீறி சரவணன் வென்றுவிட்டால் அது வரலாறாக அமையும். இதை ஆன்மசுத்தியோடுதான் சொல்கிறேன். யார் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று எதுவுமேயில்லை. கட்சி அரசியலைத் தாண்டி நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து மாற்றத்திற்கான கல்லை எங்கள் ஊரும் எறியட்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான். பார்க்கலாம்!

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நமக்கு எதுக்கு வம்பு?’ என்று ஒதுங்கிப் போகிற சராசரி மனநிலை கொண்ட கோபி மாதிரியான ஊர்களில் துணிந்து இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதைத்தான் விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்//
வாழ்த்துக்கள் கோபி காரரே

ABELIA said...

அவரே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ இல்லையோ, நிசப்தம் வாசகர்கள் கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.

மகேஸ் said...

Pimbliki pilapi