May 31, 2016

போலீஸ்

நேற்று அலுவலகத்துக்கு வரும் போது கண்டபடி கற்பனை ஓடிக் கொண்டிருந்தது. இலியானவோ, காத்ரீனா கைஃப்போ -இப்படி யாராவது ஒருவரின் பெரிய பேனரைப் பார்த்துவிட்டால் அதே நினைப்பிலேயே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிடலாம். இல்லையென்றால் இப்படித்தான் மனம் தறிகெட்டு ஓடும். இரண்டு மூன்று ரவுடிகளை அடிப்பது போன்றெல்லாம் கூட கற்பனை செய்திருக்கிறேன். சாத்தியமே இல்லாத விஷயங்கள்.

மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. உடல் ரீதியாக கெத்து காட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆண்டவன் சதிகாரன். இத்தினியூண்டு உயரம். ஒற்றை நாடி உடலமைப்பு. மென்மையான குரல் என்று சதி செய்துவிட்டான். அதனால் வெறும் கற்பனையிலேயே ராணுவ அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரியாகவும், ஆகப்பெரிய ரவுடியாகவும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இடையில் தனுஷ் மாதிரி சுள்ளான்களும் மாரிகளும் வந்து ஆளுக்கும் கெத்துக்கும் சம்பந்தமில்லை என்று உசுப்பேற்றிவிட்டார்கள். கற்பனையில் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் என்ன? ஒன்பது டன் எடை கூட விழும். எத்தனை பேரை அடித்து துவம்சம் செய்திருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.

சிம்பு தனுஷையெல்லாம் நம்பி அவ்வப்போது முயன்று பார்த்து பதறியதுதான் மிச்சம். கடந்த வாரத்தில் கூட முயன்று பார்த்தேன். பெங்களூரில் ஃபோரம் மாலுக்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அதன் எதிரில் ஒரு சாலை இருக்கிறது. அதில் முதல் சிக்னல். பெங்களூரில் பைக் ஓட்டுகிற என்னை மாதிரி சில்வண்டுகள் சாலையின் இடது பக்கமாகச் சென்றால் பிரச்சினையில்லை. சாலையின் நடுவில் அல்லது வலது பக்கத்தில் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் பின்னால் வேகமாக வருகிறவர்கள் கண்டபடி திட்டுவார்கள். அதனால் எனக்கு எப்பவுமே இடது பக்கம்தான். 

அப்படி இடது பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு ஸ்விஃப்ட் வண்டியை சிக்னலுக்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்தான். TN 54. தமிழ்நட்டு பதிவு எண் கொண்ட வண்டி. எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த முரடன் விழித்துக் கொண்டான். தமிழ்நாட்டுக்காரனாக இருந்தால் அவனுக்குக் கன்னடம் தெரியாது என்ற முடிவுக்கு வந்திருந்தேன். எப்படியும் சண்டைக்கு வரமாட்டான் என்ற நம்பிக்கை கரை புரண்டது. ஒரு வசவை உதிர்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்து ஜன்னலைத் தட்டினேன். அவன் கீழே இறக்குவதற்குள்ளாகவே ‘சிக்னலைத் தாண்டிப் போய் நிறுத்துங்க’ என்றேன். இதில் என்ன மரியாதைக் குறைவு வந்துவிட்டது? நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கண்டபடி கத்தினான். காதுக்குள் கொண்டு வந்து கொம்பை வைத்து ஊதுவதைப் போல இருந்தது. ‘அடி ஆத்தி இவன் தமிழ்க்காரன் இல்லை’ என்று முடிவு செய்து கை தன்னைத்தானே வண்டியை முறுக்கிவிட்டது. அதுவரை நாற்பதில் சென்று கொண்டிருந்த என் வண்டி அறுபதைத் தாண்டிவிட்டது. வெகு தூரத்துக்கு கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தேன். நல்லவேளையாக அவன் பின்னால் துரத்திக் கொண்டு வரவில்லை. வந்திருந்தால் பிடித்துக் கும்மியிருப்பான்.

கற்பனைக்கு யதார்த்தத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்? 

மனித மனம் இப்படித்தான். நம்மால் செய்ய முடியாத காரியத்தையெல்லாம் கற்பனை செய்து பார்த்து திருப்தியடைந்து கொள்கிறது. நீலப்படங்களின் உளவியலில் ஆரம்பித்து வன்முறையைக் கொண்டாடுவது வரை இதுதான் காரணமாக இருக்கக் கூடும். நம்முடைய போதாமையை மறைத்துக் கொள்வதற்காக ஆளுக்கொரு முகமூடி அணிந்து கொள்கிறோம். குரலை மாற்றிக் கொள்கிறோம். ஒரு முறை ஒரு நண்பர் பேச்சுவாக்கில் சொன்னது நினைவில் இருக்கிறது. மீசை பெரியதாக வைத்திருக்கும் ஆளைத் துணிந்து மிரட்டலாம் என்றார். அவன் தனது அவ நம்பிக்கையை மறைத்துக் கொள்வதற்காகத்தான் மீசையே வைத்திருக்கிறான் என்பது அவர் வாதம். அவர் பேசிக் கொண்டிருந்த போது ‘மவனே உன்னைப் புடிச்சு வீரப்பன்கிட்ட விட்டிருக்கணும்ய்யா’ என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். நகைச்சுவைக்காக அப்படி நினைத்துக் கொண்டாலும் அவர் சொன்னதில் உண்மை இருக்கவும் கூடும். எல்லாமே முகமூடிதானே?

போலீஸ், ரவுடி, மிரட்டல் அதட்டல் பற்றியெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இன்று பெங்களூரின் கிழக்கு பிராந்திய துணை கமிஷனர் சதீஷ்குமாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஊரில் காவல்துறை அதிகாரிகளைச் சந்திப்பதில் சிரமமேயில்லை. அலுவலகத்துக்குச் சென்றால் ஒரு துண்டுச்சீட்டைக் கொடுக்கிறார்கள். நமது பெயரையும் அலைபேசி எண்ணையும் எழுதிக் கொடுத்து அனுப்பினால் உள்ளே அழைக்கிறார்கள். காத்திருப்பு எதுவுமில்லை. இரண்டே நிமிடங்களில் உள்ளே அழைத்தார்கள். 

நுழைந்தவுடன் ‘சார் பிரச்சினையை உங்களுக்கு தமிழில் சொல்லட்டுமா?’ என்றேன்.

‘சொல்லுங்க’ என்றார். 

உடன் வந்திருந்தவரின் பிரச்சினைகளை விலாவாரியாகச் சொன்னவுடன் ‘நான் பார்த்துக்கிறேன்’ என்றார். வெகு சிநேகமாகப் பேசினார். இடையிடையே  தொலைபேசியிலும் உள்ளே வருகிறவர்களிடமும் கன்னடத்தில் சரளமாகப் பேசினார். இவர் கன்னடமா தமிழா என்று சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. 

திடீரென்று என்னிடம் ‘நீங்க யாரு?’ என்றார். 

எனக்கு பெங்களூரில் இன்னொரு பேர் இருக்கு என்று சொல்லி கெத்து காட்டினால் பிடித்து மூலையில் அமர வைத்துவிடுவார்களோ என்று ‘மை நேம் ஈஸ் மணிகண்டன் சார்..ஐ அம் லிவிங் இன் சிங்கசந்தரா சார்’ என்று பவ்யமாகச் சொன்னேன். 

‘இவரோடு எதற்கு வந்தீங்க?’ என்ற அவருடைய கேள்விக்குப் பதிலாக நிசப்தம் அறக்கட்டளை பற்றிச் சொன்னேன். அவருக்கும் சந்தேகம் வந்திருக்கக் கூடும். ‘உன்னையெல்லாம் நம்பி பணம் தர்றாங்களா?’ என்ற ரீதியில் பார்த்த மாதிரிதான் தெரிந்தது. இன்னும் சற்று விரிவாகச் சொன்ன போது சிரித்தார். அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. 

‘என்ன சார் கன்னடமெல்லாம் பயங்கரமா பேசறீங்க?’ என்றேன். 

DCP அரூர் காரராம். கிருஷ்ணகிரி, கோயமுத்தூரில்தான் படித்து வளர்ந்திருக்கிறார். ஐபிஎஸ்ஸில் தேர்வான பிறகு கர்நாடகாவில் வேலை. உத்தரகன்னடாவில் மாவட்டக் கண்காணிப்பாளராக இருந்தவர் இப்பொழுது பெங்களூரில் டெபுடி கமிஷனர். 

முதலில் அவருடைய அலுவலக எண்ணைக் எழுதிக் கொடுத்திருந்த காகிதத்தை வாங்கி ‘அது இந்த போஸ்ட்டில் இருக்கிற வரைக்கும்தான் அந்த நெம்பர் இருக்கும். இது என்னோட பெர்சனல் நெம்பர்..அப்பப்போ பேசுங்க’என்றார்.

இப்படியே மற்ற போலீஸ்காரர்களும் இருந்துவிட்டால் காக்க காக்க, சேதுபதி மாதிரி நல்ல போலீஸ்காரர்களின் கதைகளாக மட்டும்தான் சினிமாவில் எடுக்க முடியும். ‘ஏதாவது பிரச்சினைன்னா கூப்பிடுறேன் சார்’ என்றேன். சிரித்தார். இவன் எல்லாம் என்ன பிரச்சினை செய்துவிடப் போகிறான் என்ற நினைப்பிலான சிரிப்பு அது. 

வெளியில் வந்ததிலிருந்து TN 54 காரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை கண்ணிலேயே சிக்கவில்லை. 

இலக்கியச் சான்றிதழ்

சமீபத்தில் ஓர் இளைஞரைச் சந்திக்க நேர்ந்தது. என்னைவிடவும் பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயது இளையவர். கொஞ்ச காலமாக எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு தொகுப்பும் வெளி வந்துவிட்டது. சென்னையில் ஒரு கூட்டத்தில் சந்தித்த போது ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் ஒரு வகையிலான புலம்பலை வெளிப்படுத்தினார். தன்னை யாருமே மதிப்பதில்லை என்கிற குரலில் பேசினார். இது சகஜமான எண்ணம்தான். ஆரம்பத்தில் எல்லோருக்குமே இருக்கக் கூடியது. அதுவும் இரைச்சல் மிகுந்த நம்முடைய காலத்தில் எழுத வருகிற யாருக்குமே சட்டென்று தோன்றிவிடும். 

ஆரம்பகட்டத்தில் என்றில்லை- எந்தக் காலத்திலுமே நமக்கு இரண்டு விஷயங்களில் தெளிவு கிடைத்துவிட்டால் போதுமானது. 

முதலாவது விஷயம் - எழுத்துக்கான அங்கீகாரம் என்பது எந்தக் காலத்திலும் முழுமையான நிறைவைத் தராது. இன்றைக்கு நான்கு பேர் எழுத்தைப் பற்றி பேசினால் அடுத்த நாள் பத்து பேர் பேச வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். அதனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவே வேண்டியதில்லை. 

இரண்டாவதுதான் மிக முக்கியமானது- நம்முடைய எழுத்துக்கு எந்த எழுத்தாளனிடமும் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை. எப்படி ஒரு அரசியல்வாதி சக அரசியல்வாதியை வளர விடமாட்டானோ, எப்படி ஒரு சினிமாக்காரன் சக சினிமாக்காரனை மேலே வர விடமாட்டானோ, அதே போல்தான் எழுதுகிறவனும். அதே போல் என்பது சற்று வலிமை குறைந்த சொல். குழி பறிக்கும் விவகாரத்தில் அரசியல்வாதி, சினிமாக்காரனைவிடவும் மோசமானவன் எழுத்தாளன். அரசியல்வாதியால் சம்பாதிக்க முடிகிறது. சினிமாக்காரனுக்கு புகழ் கிடைக்கிறது. இந்த எழுத்தாளனுக்கு இரண்டுமே கிடைப்பதில்லை. அந்த மனக்குறை எவன் வந்தாலும் தட்டி வீசச் சொல்லும். அப்படித்தான் இருக்கிறார்கள்.

இலக்கியவாதிகள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டு ‘அவனுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமேயில்லை’ ‘இவன்தான் இலக்கியத்தைத் தூக்கிப் பிடிக்க வந்தவன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர்களில் தொண்ணூற்று எட்டு சதவீதம் பேர்கள் ஒரு கோப்பை சாராயத்துக்காகவும், அதிகாரத்தின் எச்சிலுக்காகவும், இரண்டாயிரம் ரூபாய் செலவு பணத்துக்காகவும் சான்றிதழ் எழுதித் தரக் கூடிய போலி மனிதர்கள். இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டியதில்லை.  

தட்டிவிடுதலில் இருந்து தப்பிக்கவும், பாராட்டுகளை எதிர்பார்த்தும் இளம் எழுத்தாளர்கள் தங்களையும் அறியாமல் ஏதாவதொரு குழுவோடு ஒன்றிவிடுகிறார்கள். இலக்கியத்தில் நிறையக் குழுக்கள் உண்டு. ஊர் சார்ந்த குழுக்கள், சாதி சார்ந்த குழுக்கள், பத்திரிக்கை சார்ந்த குழுக்கள் என்று திட்டுத் திட்டாகத் திரிகிறார்கள். அந்தந்த ஊர்க்காரனை மட்டுமே அந்தக் குழுவினர் தூக்கிப் பிடிப்பார்கள். அந்தந்த சாதிக்காரனை மட்டுமே அந்தச் சாதிக் குழுவினர் பாராட்டுவார்கள். தாம் சார்ந்திருக்கும் பத்திரிக்கையில் எழுதுகிறவனை மட்டுமே அந்தப் பத்திரிக்கைக் குழுவினர் கொண்டாடுவார்கள். இதெல்லாம் கச்சடாவான அரசியல். எழுத்துச் சூழலை நாசமாக்குகிற மனநிலை. இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நிற்பதுதான் எழுதுகிற, புதிதாக வருகிற எந்தவொரு இளைஞனுக்கும் ஆரோக்கியமானது. 

புதிதாக எழுத வருகிறவர்கள் எந்தக் குழுவிலும் தம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி இணைத்துக் கொண்டால் அரசியல் செய்ய வேண்டியிருக்கும். நம் குழுவைச் சார்ந்தவனை பாராட்டுவது பற்றியும் அடுத்தவனை விமர்சிப்பது பற்றியும் மனம் குதப்பிக் கொண்டேயிருக்கும். பிறகு வாசிப்பதும் எழுதுவதும் தானாகக் குறையத் தொடங்கும். எழுத்தும் வாசிப்பும் குறையும் போது வெறும் வஞ்சகமும் பொறாமையும்தான் தலை தூக்கும். அடுத்தவர்கள் நம்மைத் தாண்டிச் செல்லும் போது தள்ளி நின்று தூற்றுவதை மட்டும்தான் செய்ய முடியும். அதுதான் பெரும்பாலான இலக்கியச் சண்டைகளின் அடிநாதம். 

இப்படி சில குழுக்கள் என்றால் சமூக ஊடகங்களில் ‘உனக்கு கவிதை சொல்லித் தருகிறேன்’ என்று கிளம்புகிற கூட்டமும் உண்டு. தங்களை ஏதோ உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடித்த அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு கவிதையின் மூன்றாவது வரியில் இரண்டாவது சொல் துருத்திக் கொண்டிருக்கிறது என்று பேச ஆரம்பித்து எங்கெங்கோ பேச்சை இழுத்துச் செல்கிற பேரிளம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் நிறைந்து கிடக்கிறார்கள். 

இத்தகைய குழுக்களையும், டுமாங்கோலி வாத்தியார்களையும் நம்பினால் எந்தக் காலத்திலும் எழுத்தில் நமக்கான இடத்தை அடையவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.  தங்களை அத்தாட்சியாக நினைத்துக் கொண்டு கதை விட்டுக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடுவார்கள். நம்மையும் காணாமல் போகச் செய்துவிடுவார்கள். குடிப்பதும், காமம் கொப்புளிக்கப் பேசுவதும், புகைப்பதும், அதிகார மையங்களாக உருவாவதும், பணம் சம்பாதிக்கும் வழிகளைத் தேடுவதும்தான் இன்றைய இலக்கிய பிதாமகன்களின் லட்சியம், வேட்கை எல்லாமும். இவர்களிடம் போய் சான்றிதழ் கேட்டால் இதில் ஏதாவதொன்றை நம்மிடமிருந்து எதிர்பார்க்கத்தான் செய்வார்கள்.

இங்கே வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்தப் பத்திரிக்கையும் நம் எழுத்துக்களை பிரசுரம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நம்மால் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் நம் எழுத்தைக் கொண்டு சேர்க்க முடியும். எந்த இலக்கியவாதியும் நம்மை பாராட்ட வேண்டியதில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான வாசகர்களை அடைய முடியும். உலகம் மிக விரிந்து கிடக்கிறது. நமக்குப் பிடித்ததை எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அது நமக்கான சந்தோஷத்தைத் தரும். அவர்கள் பாராட்டுகிறார்களா, இவர்கள் அலட்சியம் செய்கிறார்களா என்பது பற்றியெல்லாம் யோசிக்கவே வேண்டியதில்லை. இங்கே யாருக்கும் கொம்பு இல்லை. நமக்கும் கொம்பு இல்லை என்கிற மனநிலை இருந்தால் போதுமானது. எழுதிக் கொண்டேயிருக்கும் போது அது யாருக்காவது பிடித்து நம்மைப் பின் தொடர்வார்கள். அவர்கள் நம்மிடம் பேசுவார்கள். அது நம்மைத் தொடர்ந்து எழுதச் செய்யும். அதுதான் நமக்கான எழுத்தை வடிவமைக்கும். அப்படியொரு மனநிலைக்கு வந்த பிறகு ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

நாம் எழுதுவது இலக்கியமா? குப்பையா என்பதையெல்லாம் காலம் தீர்மானிக்கட்டும். வாசகன் தீர்மானிக்கட்டும். எழுத ஆரம்பித்தவுடனே பாலாபிஷேகம் செய்யமாட்டார்கள். பேனர் அடிக்க மாட்டார்கள். ரத்தினக் கம்பளம் விரிக்க மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து எழுதும் போது அதற்கான இடம் நிச்சயமாக உருவாகும். அதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டால் போதுமானது. இதையெல்லாம் அறிவுரையாகச் சொல்லுகிற தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் கொஞசம் அனுபவமிருக்கிறது. அவர் பாராட்டமாட்டாரா? இவர் பாராட்டமாட்டாரா என்று எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இந்தச் சான்றிதழ்களும் பாராட்டுகளும் அவசியமற்றவை என்று உணர்ந்திருக்கிறேன். அவற்றை எந்தவிதத்திலும் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என புரிந்திருக்கிறேன். அதை எனக்குப் பின்னால் எழுத வருகிற இளைஞர்களுக்காக பதிவு செய்து வைக்கிறேன்.

May 30, 2016

ரவுடி...

‘எழுத்தாளன் அவனது புத்தகத்தைப் பற்றி அவனே பேசலாமா?’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். யாரும் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லைதான். பொதுவாக எழுதியிருக்கிறார்கள். வருடாவருடம் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அதுவொரு சாங்கியம். ‘பேசினால் என்ன தப்பு?’ என்று பதில் எழுத வேண்டிய சாங்கியம் நம்முடையது. 

தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன தவறு? எழுத்தாளன் தன் புத்தகத்தைப் பற்றி பேசுவதே அவல நிலை என்றால் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கிற சூழலில் வெறும் முந்நூறு பிரதிகளை விற்பதே பெரும்பாடு என்ற நிலையை என்ன சொல்வது? அற்புத நிலையா? 

எவ்வளவுதான் ஸ்டார் எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய சிறுகதை, நாவல் போன்ற புனைவுகளை ஆயிரம் பிரதிகளுக்கு மேலாக அச்சடிக்க எந்தப் பதிப்பாளரும் தயாராக இல்லை. இது அவல நிலை இல்லையா?

புத்தகத்தைப் பற்றி எழுத்தாளன் பேச வேண்டாம் என்றால் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எதற்கு? விமர்சனக் கூட்டங்கள் எதற்கு? கலந்துரையாடல்கள் எதற்கு? ‘அதில் எல்லாம் அடுத்தவர்கள்தானே புத்தகத்தை பற்றி பேசுகிறார்கள்’ என்பார்கள். வெங்காயம். அதுவுமொரு விளம்பர முயற்சிதான். ஆனால் தோல்வியைடந்த முயற்சி அது. இருந்தாலும் விடாப்பிடியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இன்றைய காலகட்டத்தில் முக்கால்வாசி இலக்கியக் கூட்டங்கள் சொறிதல் கூட்டங்கள்தான். ஆள் மாற்றி ஆள் சொறிந்துவிடுவார்கள். கூட்டம் ஆரம்பித்த பாதி நேரத்தில் கூட்டம் கலைந்துவிடுகிறது. கடைசியாகப் பேச வருகிறவர் வெறும் இருக்கைகளைப் பார்த்துத்தான் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் சமூக ஊடகங்கள் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்துவதில் தவறு எதுவுமில்லை.

ரஜினிகாந்த் படம் முடித்தவுடன் வெளிநாட்டுக்கும் இமயமலைக்கும் சென்றுவிடுவதை எழுத்தாளர்களும் பின் தொடர வேண்டுமாம். அதன் பொருள் என்னவென்றால்- எதையாவது எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் அதைக் கண்டு கொள்ளவே கூடாதாம். எவ்வளவு பெரிய காமெடி? ரஜினியின் படம் தொடங்குவதிலிருந்தே விளம்பரம்தான். ட்விட்டரிக் கணக்கு ஆரம்பிப்பதிலிருந்து படம் வெளியாகும் சமயத்தில் ஆனந்தவிகடனிலும் குமுதத்திலும் கவர் ஸ்டோரி வருது ஊடாக ‘அரசியலுக்குள் வரலாமான்னு பார்கிறேன்’ என்று டகால்ட்டி காட்டுவது வரை அத்தனையுமே படத்தின் வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டது. நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து படமெடுக்கும் ஷங்கரும், ராஜமெளலியும் கூட மெல்ல மெல்ல படம் பற்றிய செய்திகளைக் கசியச் செய்வார்கள். படம் பற்றிய எதிர்பார்ப்பு நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆடியோ ரிலீஸ், பத்திரிக்கையாளர் சந்திப்பு, தொலைக்காட்சி விவாதங்கள் என்று அவர்களுக்குரிய அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளும் சந்தை. அவர்களோடு தயவு செய்து தமிழக எழுத்தாளர்களின் சூழல்களை ஒப்பிட வேண்டியதில்லை. அவன் எழுத்தை அவனாவது பேசித்தான் தீர வேண்டியிருக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி பேசாத ஆமையோட்டு எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி அச்சிட்டு கதறுகிற பதிப்பாளர்கள்தான் உண்மையிலேயே பாவம். பதிப்பாளர்களின் பெயரைச் சொல்லி அவர்களை தர்மசங்கடத்தில் சிக்கிவிட விரும்பவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையிலேயே அவர்களின் புலம்பல்களைக் கேட்டிருக்கிறேன். இருபதாயிரம், முப்பதாயிரம், ஐம்பதாயிரம் எனச் செலவு செய்து புத்தகங்களை அச்சிடும் வரைக்கும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை அழைத்து ‘எப்பங்க புக் வரும்?’ என்று நூறு தடவையாவது ஃபோனில் தாளிப்பார்கள். வந்தவுடன் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தனது புத்தகத்தைப் பற்றித் தானே பேசினால் புனிதத்தன்மை போய்விடும் என்பார்கள். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் விற்காத பிரதிகளை மூட்டையைக் கட்டி பதிப்பாளர்கள் தூக்கித் திரிய வேண்டும். அப்படித்தானே? 

எழுத்தாளன் தன் எழுத்தைப் பற்றிப் பேசுவதில் எந்தத் தவறுமில்லை. நிறைய வாசகர்களுக்கு தனது புத்தகத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. புதிய வாசகர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இதையெல்லாம் செய்வதற்காக அரதப்பழசான மூடநம்பிக்கைகளை விட்டுத் தொலைக்கலாம். தூங்கி வழியும் சூழலை தூசி தட்டலாம். வாசகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு மாற்ற வேண்டிய பெரும் கடமை எழுதுகிறவனுக்குத்தான் இருக்கிறது. அதைத் துணிந்து செய்யலாம். புத்தகம் பற்றி பேசுவோம். அது குறித்தான உரையாடலை உருவாக்குவோம். இளைஞர்களும் புதியவர்களும் எழுத்துக்கள் பற்றிப் பேசட்டும். அதற்கான முன்னெடுப்புகளை எழுதுகிறவன் தொடங்கி வைக்கட்டுமே. அதிலென்ன தவறு இருக்கிறது?

வாசகன் கேள்வி கேட்பதற்கும், விமர்சனம் செய்வதற்கும், வெளிப்படையாக அலசுவதற்குமான வாய்ப்புகள் எந்த இலக்கியக் கூட்டத்திலும் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் அத்தகைய வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன. அவனைப் பேசச் செய்வதற்கு கையைப் பிடித்து இழுக்கிற வேலை எழுத்தாளனுடையது இல்லையா? வருடத்திற்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. அவற்றுக்குள் சிக்கி மூச்சு முட்டிக் கிடக்கும் எனது எழுத்தைக் கை தூக்கிவிடுவதில் எனக்கு கடமை இல்லையா? ‘நல்ல எழுத்து பிழைத்துக் கொள்ளும்...நல்ல எழுத்தை நான்கு பேர் வாசித்தாலும் கூட போதும்’ போன்ற மக்கிப் போன எண்ணங்களை களைய வேண்டியிருக்கிறது. வெளியில் வந்து பாருங்கள். உலகம் மிகப்பெரியதாக இருக்கிறது.

சரி யாராவது எங்கேயாவது எதையாவது பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். நல்ல விவாதமாக உருவானால் சரி. 

நம் கதைக்கு வருவோம்.

புத்தகம், ஏலம் என்றெல்லாம் நினைத்த போது இருபத்தைந்தாயிரம் ரூபாய் தேறக் கூடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒன்றே முக்கால் லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. முதல் ஏழு பிரதிகள் ரூ.1,79,356.00 (ஒரு லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு ரூபாய்). இது தவிர ராயல்டியாக எனக்கு வரக் கூடிய தொகையும் இதில் சேரும்.  


‘இனிமேல் பணம் அனுப்ப வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். பணத்தை வாங்குவதைவிடவும் நாம் உதவப் போகும் சரியான ஆட்களைத் தேர்வு செய்வது சிரமமான காரியம். அதனால்தான் இந்தத் தொகை போதும் என்று நிறுத்தப்பட்டது. இரண்டு மூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது போதாது. இன்னமும் மாணவிகளைத் தேட வேண்டியிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் ப்ளஸ் டூ முடித்த மாணவிகள்- சிரமத்தில் இருப்பின்- அவர்கள் எந்த ஊராக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். பேப்பர் கட்டிங், வாட்ஸப்பில் வந்த செய்திகளை அனுப்ப வேண்டாம். உங்களுக்கு அவர்களை நேரடியாகத் தெரியும் என்றால் மட்டுமே பரிந்துரை செய்யவும். மாணவிகளுக்கு முன்னுரிமை. மகன்கள் என்றால் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தால் கடன் வாங்கியாவது படிக்க வைத்துவிடுகிறார்கள். மகள்களுக்கு அப்படியில்லை. படித்தது போதும் என்று நிறுத்திவிடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால்தான் மாணவிகளுக்கு முன்னுரிமை. ஆனால் மாணவிகள் மட்டும்தான் என்றில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஒரு மாணவனுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை என்று அழைத்துச் சொன்னார்கள். இத்தகைய விதிவிலக்குகளை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எப்பொழுது ‘மூன்றாம் நதி’ வெளியீடு என்று சிலர் கேட்கிறார்கள். ஏற்கனவே சொன்னதுதான். புத்தக வெளியீடு என்றெல்லாம் கூட்டம் நடத்த வேண்டியதில்லை. இந்தத் தொகையை விநியோகம் செய்வதற்கான கூட்டமாக நடத்தலாம். அந்தக் கூட்டத்திலேயே புத்தகம் பற்றியும் பேசச் சொல்லிவிடலாம். தேதியை முடிவு செய்துவிட்டால் அவசர அவசரமாக கண்ணில் கிடைத்தவர்களுக்கு எல்லாம் பணத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் உருவாகிவிடும். அதனால் அவசரமில்லை. சரியான பயனாளிகள் கிடைக்கும் வரைக்கும் தேடிக் கண்டுபிடித்த பிறகு நாளில் கூட்டத்தை நடத்திவிடலாம்.  ஆனால் ஜூன் மாதத்திற்குள் இந்த வேலை முடிந்துவிடும்.

மூன்றாம் நதி விற்பனை ஏற்கனவே சூடு பிடித்துவிட்டது. பத்தாயிரம் ரூபாயை பதிப்பாளருக்கு நேரடியாக பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள். சரவணபாபு ஆயிரம், வெங்கட் இரண்டாயிரம், பாண்டியராஜன் இரண்டாயிரம், முத்து கெளசிக் ஐந்தாயிரம் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். இதுவே நூறு பிரதிகளுக்கான தொகை. ‘யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.அவ்வளவு பாசக்காரர்கள். 

மூன்றாம் நதி ஆன்லைன் வியாபாரம் தொடங்கிய பிறகான நிலவரத்தை டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அனுப்பியிருக்கிறார். அவ்வளவுதான்.  

அறுநூறு பிரதிகள் அச்சடித்தால் போதும் என்று முடிவெடுத்திருந்தார்கள்.  எதிர்காலத்தில் சேர்த்து அச்சடிப்பார்கள்.

பெயரை வைத்து கழுத்தில் மணியும் தலையில் சொட்டையுமாக சொம்பையாக இருப்பேன்னு நினைச்சீங்களா? ரவுடிடா..என்று பன்ச் வசனத்தை பதிப்பாளருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். இனியாவது பயந்து நடுங்கட்டும். 

May 29, 2016

சென்னையில் ஒரு நாள்

நேற்று சென்னை கே.கே.நகர் பகுதியில் சுற்றுகிற வேலை. சாலிக்கிராமம், வடபழனி எனப் பரவலாக. நாய்க்கு வேலையும் இல்லை ஆனால் நிற்க நேரமுமில்லை என்பார்கள். அப்படித்தான். மாலை நான்கு மணிக்கெல்லாம் வந்த வேலை முடிந்துவிட்டது. பக்கத்திலயேதான் டிஸ்கவரி புக் பேலஸ். ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்ற போது ஜீவகரிகாலனும் வேடியப்பனும் ஏதோ திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். கரிகாலன் சிக்கினால் ஒரு நல்ல ஓட்டுநர் சிக்கிய மாதிரி. பைக்கின் பின்பக்கமாக அமர்ந்து எங்கே செல்லச் சொன்னாலும் சொல்வார். அவர் கணையாழியின் துணை ஆசிரியராக இருக்கிறார். கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் சென்னைப் பிரிவையும் சமாளித்துக் கொள்கிறார். ‘கணையாழியில் தொகுப்பு புத்தகங்கள் கொண்டு வர்றோம். நானூறு பக்கத்துல ஒரு புஸ்தகம். ப்ரூப் பார்க்கணுங்க’ என்றார். ‘வந்து பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏறிக் கொண்டேன்.

உமாபதி அரங்கம்தான் முதல் இலக்கு. காலச்சுவடு புத்தக வெளியீடு. சல்மா, தேவிபாரதி, யுவன் சந்திரசேகர் என்று நான்கைந்து எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. எல்லோரையும் விட அசோகமித்திரன் வருகிறார். அவர் பேசுவதைக் கேட்க வேண்டும். பக்கத்தில் அமர்ந்திருந்த கார்ட்டூனிஸ்ட் பாலா அ.மி பேசுவதையும் அவரது உடல்மொழியையும் பார்த்துவிட்டு ‘ஒரு குழந்தை மாதிரியே தெரியுதுல்ல’ என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வயது ஏற ஏற குழந்தைகளாக மாறிக் கொண்டேயிருக்கிறோம். பக்குவமிக்க குழந்தைகளைக் கொஞ்சத் தோன்றுகிறது. மற்ற குழந்தைகள் குறும்பு செய்கிறார்கள். அசோகமித்திரன் கொஞ்சத் தோன்றுகிற குழந்தை. தொடக்கத்திலிருந்து இன்று வரை அவர் எழுதிய இருநூற்று சொச்சம் சிறுகதைகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். 1450 ரூபாய். வெளியீட்டு அரங்கில் தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாய்தான். ஆனால் ஐநூறு ரூபாய்தான் கையில் இருந்தது. கரிகாலனிடம் கேட்டேன். ‘நூறு ரூபாய்தாங்க இருக்கு’ என்றார். இந்த ஆளை எல்லாம் பதிப்பாளராக வைத்துக் கொண்டு என்ன செய்வது?

மீண்டும் திரும்பி வந்த போது டிஸ்கவரியில் உமா மோகனின் கவிதைத் தொகுப்பு வெளியீடு. இரண்டு அரங்கிலும் சுமாரான கூட்டம்தான். வாசகசாலை என்ற அமைப்பினர் ஒரு நாள் கருத்தரங்கை நேற்று ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே நல்ல கூட்டம் என்றார்கள். இத்தகைய புத்தகம், வாசிப்பு சம்பந்தமான கூட்டங்களுக்குச் செல்கிறவர்களை சென்னை முழுக்கவும் கணக்கெடுத்தால் இருநூற்று முப்பது நான்கு பேர்கள் இருக்கக் கூடும். ஒரே நாளில் இத்தனை கூட்டங்களை நடத்தினால் அவர்கள் எங்கேதான் போவார்கள்? இன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட நூற்று பதினேழு கூட்டங்கள் நடைபெறும் போலிருக்கிறது. யார் மெஜாரிட்டி வாங்குவார்கள் என்று தெரியவில்லை. மாலையில் நேரமிருந்தால் குருநாதரின் புத்தக வெளியீட்டுக்குச் செல்லலாம் என்றிருக்கிறேன். மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் 5.30 மணிக்கு கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்கள். ‘இன்னைக்கு என்ன ப்ளான்’ என்று கரிகாலனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறேன். பதிலையே காணோம். எப்படி அனுப்புவார்?

நேற்று மதியத்திலிருந்து சாப்பிடவே இல்லையாம். மாலையில் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அயோக்கியப்பயல்கள் ஒரு கொத்து புரோட்டாவை நூற்று இருபது ரூபாய்க்கு விற்கிறார்கள். வயிற்றில் ஒட்டுமா? சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ‘ஏங்க நான் கிளம்பட்டுமா?’ என்றார். அதுக்கு மேலாக பிடித்து வைத்திருந்தால் கணையாழி பாவம் பிடித்துக் கொள்ளும். தனிமரம் ஆகியாகிவிட்டது. நள்ளிரவு வரை காலத்தை ஓட்டியாக வேண்டும். ஏதாவது திரையரங்கு பக்கத்தில் இருக்குமா என்று துழாவியதில்தான் மேற்சொன்ன நகர்வலம். கமலா தியேட்டரில் டிக்கெட் இல்லை. பங்கஜம் தியேட்டரில் காட்சி இல்லை. ஏவிஎம்மில் ‘கத சொல்லப் போறோம்’ என்ற படம் ஓடிக் கொண்டிருந்தது. அதுக்கு ஒரு அக்கப்போர். வெளியில் ஆட்டோவில் அமர்ந்திருந்தவனிடம் ‘அண்ணா இங்க எத்தன ஸ்கீரின் இருக்கு?’ என்றதற்கு- அவன் என்ன கடுப்பில் இருந்தானோ- முறைத்துப் பார்த்துவிட்டு - தெரியாது என்றான்.

உள்ளே கேண்டீனில் இருந்தவரிடம் ‘சார் என்ன படம் ஓடுது?’ என்றேன். ‘உங்களுக்கு என்ன படம் வேணும்?’ என்றார். லோலாயம் பிடித்த மனுஷன். 

‘இறைவி’

‘அது ஜூன் 3 தான் ரிலீஸ்’

‘இது நம்ம ஆளு’

‘இங்க ஓடல’

‘இங்க என்ன படம் ஓடுது சார்?’

‘உங்களுக்கு என்ன படம் வேணும்?’ மறுபடியும் அதே கேள்வி அதே பதில்.

‘அடேய்ய்ய்ய்’ என்று நினைத்துக் கொண்டேன். அமைதியாகிவிட்டேன்.

‘அதான் வெளியே அம்மாம்பெரிய பேனர் இருக்குல்ல?’ என்றார். ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகள் இருக்கக் கூடும் என்று நினைத்தது அவ்வளவு பெரிய தவறா? ‘நான் படமே பார்க்கலை விடுங்க’ என்று திரும்பினேன். என்னவோ சத்தம் போட்டார். நான் கிளம்பி வந்துவிட்டேன்.  சென்னையில் நூறு ரூபாய் இருந்தால் படம் பார்த்துவிட முடிகிறது. பெங்களூரில் அநியாயக் கொள்ளை. ஏவிஎம்மில் கூட ஐம்பது ரூபாய்தான் விலை. ஆனால் கேண்டீன்காரர் சங்காத்தத்தில் தவறிவிட்டது.

வேறு என்னதான் செய்வது?

ஏ.வி.எம்மில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான்கைந்து கேரவேன்கள் நின்று கொண்டிருந்தன. ஒரு காலத்தில் ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கள் ஊரில் கேரவேனை எல்லாம் பார்த்ததில்லை. கவுண்டமணி, சத்யராஜ் எல்லாம் சீட்டு ஆடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். முரளி, பார்த்திபன் மாதிரியானவர்கள் கடலை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். காற்றாட அமர்ந்திருப்பார்கள். இங்கேதான் கேரவேன். ஒருவேளை அங்கேயும் இந்தக் காலத்தில் ஷூட்டிங் நடந்தால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ? ஒரு ஷாட் முடிந்ததும் உள்ளே வந்து புகுந்து கொள்கிறார்கள். நான்கைந்து வண்டிகள் நின்று கொண்டிருந்தன. நடிகனுக்கு ஒன்று, நடிகைக்கு ஒன்று- அப்புறம் இரண்டு பேருக்கும் சேர்ந்து ஒன்றிரண்டு போலிருக்கிறது. உள்ளே ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ- எந்திரம் முறைந்து கொண்டேயிருக்கிறது. அத்தனைக்கும் சேர்த்து ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது. டீசல், புகை, சத்தம். மார்கெட் இல்லாத நடிகன் என்கிறார்கள். அவரே கூட வெளியில் அமர மாட்டாராம். அவ்வளவு அதுப்பு.

என்ன இருந்தாலும் சினிமாக்காரன் சினிமாக்காரன்தான். பத்து மணி வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வேணி அழைத்தாள். சொன்னேன். ‘வெட்கமா இல்லையாங்க? அவங்களை வாயைத் திறந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?’ என்றாள். ‘இன்னும் ஒரு நடிகையும் வெளியில் வரலை’ என்றேன். ‘த்தூ’ என்றாள்.

‘உனக்கு தெரியுமா? அண்ணாவுக்கும் பத்மினிக்கும் தொடர்பு இருக்கான்னு யாரோ விசாரிச்ச போது நான் முற்றும் துணிந்த முனிவனும் இல்லை அவர் படிதாண்டா பத்தினியும் இல்லைன்னு சொன்னாராம்’ என்றேன். அந்த நேரத்தில் அந்த டயலாக் தேவையில்லைதான். உண்மையாகவே அண்ணா சொன்னதா என்றும் தெரியாது. அந்தச் சமயத்தில் மனதில் தோன்றியது. சொல்லிவிட்டேன்.  

‘அண்ணாதுரை சம்சாரத்து பேரு என்ன?’ என்றாள்.

‘ராணி’

‘ராணி பத்தி எனக்குத் தெரியாது; ஆனா வேணி பத்தி உங்களுக்குத் தெரியும்ல’ என்றாள். இவள் எல்லாம் பஞ்ச் வசனம் பேசுகிறாள். அதற்கு மேல் என்ன பேசுவது? அமைதியாகிக் கொண்டேன். திங்கட்கிழமை காலையில் ஊருக்கு போகும் போது சுனாமி வராமல் இருக்கக் கடவது என்று காளியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.

May 27, 2016

ஒருத்தி

ஒருத்தி. ஒருத்திதான். அவளுக்கு பெயர்தான் குறைச்சலா? வெங்காயம். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு அழைத்திருந்தாள். வீடு வாங்கியிருப்பதாகவும் அலுவலகத்தில் தன்னை வேலையைவிட்டு அனுப்பிவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அழுதாள். பொண்ணு அழுதால்தான் நெஞ்சு உருகிவிடுமே. நெஞ்சுதான். ‘இதுக்கெல்லாம் அழுவாத..நான் ஆச்சு..ரெஸ்யூம் அனுப்பு’ என்று கேட்டிருந்தேன். உண்மையிலேயே பரிதாபமாகத்தான் இருந்தது. யாராவது உதவி என்று கேட்டால் பணம் கூட கொடுத்துவிடலாம். சிரமமில்லை. ஆனால் வேலை வாங்கிக் கொடுக்கிற வேலை இருக்கிறது பாருங்கள்- படு  மொக்கை. ‘எங்க கம்பெனியில ஃப்ரெஷர்ஸ் எடுக்கறதே இல்லை’ என்பார்கள். ‘அந்த டொமைன்ல ஓப்பனிங் இல்லை..வந்தா சொல்லுறேன்’ என்பார்கள். 'Hiring freeze' என்பார்கள். இப்படி ஏதாவதொரு காரணம் இருக்கும்.

அவளுடைய விவரங்களை நான்கைந்து பேர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். ஒவ்வொருத்தராகக் கழித்துக் கட்டிக் கொண்டே வர இவள் அவ்வப்போது அழைத்து ‘ஏதாச்சும் கிடைச்சுதா?’ என்பாள். வீட்டில் இருக்கும் போது பெண்களிடமிருந்து அழைப்பு வந்தால் எனக்கு கை கால் உதறல் எடுத்துவிடும். ஒன்றும் தப்புத் தண்டா இல்லைதான் என்றாலும் உள்துறை அமைச்சரிடமிருந்து நூறு கேள்விகள் வரும். நூற்றியெட்டு துணைக்கேள்விகள் வரும். ஒரு பதிலோடு இன்னொரு பதில் சிக்கிக் கொள்ளாமல் பிசிறடிக்காமல் அதிகபட்ச கவனத்தோடு பதில் சொல்ல வேண்டும். எவனால் ஆகும்? அதனால் பெண்களின் பெயர் அலைபேசியில் மின்னும் போதே ‘அது ஏதோ வெட்டி நெம்பர்’ என்று சொல்லிவிட்டு கவனத்தைச் சிதறடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அப்பேர்ப்பட்ட நெருப்புக் குழிக்குள் நின்றுதான் அவளுக்கு ஒன்றிரண்டு முறை பதில் சொன்னேன். பதில் சொல்லாமல் விட்டு தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில் செத்துத் தொலைந்துவிடுவாளோ என்றுதான் அவளிடம் பேசினேன் என்று சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்? ‘கடலை போட்டேன்னு உண்மையை ஒத்துக்கோ’ என்று யாராவது கேட்பீர்கள். அப்படியே இருக்கட்டும்.

‘நாலஞ்சு பேர்கிட்ட சொல்லிட்டேன்..ஒருத்தனும் மதிக்க மாட்டேங்குறான்’ என்று சொல்லிவிட்டு அதுவரை பதில் சொல்லாத ஒன்றிரண்டு பேரை அழைத்து ‘ஏம்ப்பா அந்தப் பொண்ணுக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா’ என்று கேட்டால் ‘இவன் ஏன் இவ்வளவு பறக்கிறான்? ஒருவேளை சின்ன வீடா இருக்குமோ’ என்கிற கோணத்திலேயே பார்த்துக் கடுப்பேற்றுவார்கள். கடைசியில் பசவராஜ் மிஞ்சினார். நல்ல மனுஷன். மேலாளரிடம் பேசி, இயக்குநரிடம் பேசி ஒரு வழியாக சமாளித்து வைத்திருந்தார். 

கடைசியாகத்தான் ‘அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சினை?’ என்றார். 

‘வீட்டில் கடன் ஆகிடுச்சாம்...வேலையை விட்டு அனுப்பிடுவாங்க போலிருக்கு..அதான் வேற வேலையை வாங்கிட்டா தப்பிச்சுடலாம்ன்னு நினைக்கிறாள்’ என்றேன். 

‘புருஷன் வேலைக்கு போறதில்லையா?’ என்றார். பெண்கள் என்றால் மட்டும் அவனவனுக்கு ஆயிரம் குறுக்குக் கேள்விகள். 

‘இல்ல சார்...அவன் சரியில்ல போலிருக்கு..ரொம்ப அழுதா’ என்றேன். ‘பாவமா இருந்துச்சு சார்’ என்று ஒரு வரியைக் கூடுதலாகச் சேர்த்துச் சொன்னேன். என்னைப் போலவேதான் அவரும் நம்பிக் கொண்டார்.

‘சரி எல்லாம் பேசியாச்சு. திங்கட்கிழமை நேர்காணலுக்கு கூப்பிடுவாங்க..சும்மா ஃபார்மாலிட்டிதான்...தைரியமா இருக்கச் சொல்லுங்க’ என்றார். இதை அவளிடம் நேரடியாகச் சொல்லவில்லை. ஒழுங்காகத் தயாரித்துக் கொண்டு நேர்காணலுக்குச் செல்ல அறிவுறுத்தியிருந்தேன். தனது நிறுவனத்தில் வருடாந்திர சம்பளமாக மூன்றரை லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறாள்.  ‘வேலை கிடைச்சுடும்ல’ என்று இரண்டு மூன்று முறை கேட்டாள். அவ்வளவு பதற்றம்.

நேர்காணல் முடிந்துவிட்டது. வேலைக்கான கடிதம் வரும் வரைக்கும் அதே அக்கப்போர். ‘எப்போ லெட்டர் அனுப்புவாங்க’ என்று தாளித்துத் தள்ளினாள். அவள் பிரச்சினை அவளுக்கு. கடிதம் வந்துவிட்டால் ஒருவேளை நிம்மதியாக இருக்கக் கூடும். பசவராஜை ஒரு முறை அழைத்துக் கேட்டேன். எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னார். ஆண்டு வருமானம் ஏழு லட்சம் என்று கடிதம் அனுப்பி வைத்துவிட்டு பசவராஜ் அழைத்தார். அவர்தான் அழைத்திருந்தாரே தவிர அவள் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. தொலைந்து போகிறாள் என்று கண்டுகொள்ளாமல் விட்டிருந்தேன்.

ஒரு வாரம் கழித்து பசவராஜ் மீண்டும் அழைத்தார். ‘அந்தப் பொண்ணு எதுவுமே பதில் சொல்லலைன்னு ஹெச்.ஆர்ல சொல்லுறாங்க..கேட்டு பார்க்குறீங்களா?’ என்றார். வழக்கமாக இதையெல்லாம் மனித வளத்துறை ஆட்களே நேரடியாகப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் பசவராஜ் அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதனால் அவரைக் கேட்கிறார்கள். அவர் என்னிடம் கேட்கிறார். அழைத்தேன்.

‘ஆஃபர் வந்துடுச்சாமே?’ 

‘ஹே..ஸாரி ஸாரி...சொல்லணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்...ஸாரி’

‘அது பரவாயில்லை..நீ எதுவுமே சொல்லலைன்னு பசவராஜ் கூப்பிட்டாரு’

‘எங்க டீம்ல அசோக், ரவின்னு ரெண்டு பசங்க இருக்காங்க...அவங்களுக்கும் ஏதாச்சும் பார்க்க முடியுமா?’ என்றாள். குழப்பமாக இருந்தது.

‘முதல்ல நீ சேர்ந்துடு..அதுக்கு அப்புறம் நீ அவங்களை சேர்த்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு ‘எப்போ பதில் சொல்லுற?’ என்றேன்.

தனது மேலாளரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒரு வாரத்தில் சொல்வதாகச் சொன்னாள். அதன் பிறகு நான் மறந்துவிட்டேன். பசவராஜூம் மறந்திருக்கக் கூடும். இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. கடந்த வாரத்தில் அழைத்த பசவராஜ் அதே பல்லவியைப் பாடினார். வெட்டி வம்பை இழுத்துக் கொண்டேன் என்று நினைத்து அவளை அழைத்தேன்.

‘எங்க ஆபிஸ்லேயே ப்ரோமோஷன் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்றாள். எனக்கு பற்கள் நற நறத்தன. எதுவுமே கேட்கவில்லை. துண்டித்துவிட்டேன். அதன் பிறகு பசவராஜ் அழைக்கும் போதெல்லாம் தவிர்த்தேன். பசவராஜ் நிறுவனத்திலாவது விட்டுத் தொலையலாம். அவளையே தொங்கிக் கொண்டிருந்தார்கள். நேற்றும் பசவராஜ் ‘கடைசியா ஒரு தடவை கேட்டுடுங்க..எனக்காக’ என்றார். அந்த மனுஷனைக் கெஞ்சுகிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டுவிட்டேன்.

கூப்பிட்டவுடன் ‘ஹே..குட் நியூஸ்...ப்ரோமோஷன் கிடைச்சுடுச்சு..அவங்க கொடுத்ததைவிட நல்ல சம்பளம்’ என்றாள். கோபம் உச்சத்துக்கு ஏறிவிட்டது. வேறொரு நிறுவனத்தில் வேலைக்கான கடிதத்தை வாங்கிக் கொண்டு சொந்த நிறுவனத்தில் அதைக் காட்டி ‘அவன் இவ்வளவு கொடுக்கிறான்..நீ அதைவிட அதிகமா கொடுத்தா இருக்கிறேன். இல்லைன்னா போறேன்’ என்று மிரட்டுவது மென்பொருள் துறையில் வாடிக்கைதான். ஆனால் அதை சுயமாகச் செய்ய வேண்டும். வீடு கட்டினேன், கடன் ஆகிவிட்டது, புருஷன் சரியில்லை என்றெல்லாம் அளந்து நம்ப வைத்து கழுத்தறுத்தால் கோபம் வராமல் என்ன செய்யும்? அவள் சொன்னதை நான் நம்பி, நான் சொன்னதை பசவராஜ் நம்பி, அவர் சொன்னதை மேலாளர் இயக்குநரெல்லாம் நம்பி....

மனதுக்குள் கண்ட கண்ட கெட்டவார்த்தைகள் புரண்டன. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ‘என்னையெல்லாம் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?’ என்றேன். அவள் எதுவும் பேசவில்லை. இவள் கேட்டதற்காக அந்தப் பரதேசிகள் அசோக், ரவிக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருந்தால் அவர்களும் பெரிய பன்னாக எடுத்து வாயில் வைத்துவிட்டுப் போயிருப்பார்கள். பசவராஜை அழைத்து எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னேன். கடுப்பாகிவிட்டார்.  ‘சரி தொலையட்டும்’ என்றார். வேறு என்ன சொல்ல முடியும்? அவரிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று கூடத் தெரியவில்லை. நேரில் பார்த்து ஒரு பிரியாணி வாங்கிக் கொடுத்துதான் சமாளிக்க வேண்டும்.

பள்ளி- இணையம்

நேற்று ஒரு ப்ளஸ் டூ முடித்த மாணவியிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. தஞ்சைக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தை சார்ந்தவர். கட்-ஆஃப் நூற்று அறுபது சொச்சம். தாழ்த்தப்பட்ட பிரிவு. எம்.பி.பி.எஸ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பேசினார். இந்த மதிப்பெண்ணுக்கு மருத்துவப்படிப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நேரடியாகச் சொன்னால் வருத்தப்பட வைத்துவிட்ட மாதிரி ஆகிவிடும். ‘போன வருஷம் கட்-ஆஃப் எல்லாம் பார்த்தியாம்மா?’ என்ற போது ‘150க்கே கிடைச்சதுன்னு சொன்னாங்க சார்’ என்றார். அவசர அவசரமாக இணையத்தில் தேடினால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. எஸ்.சி பிரிவு மாணவர்கள் என்றாலும் கூட மருத்துவப்படிப்பில் சேர 190க்கு மேலாக தேவைப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணிடம் தவறான தகவலை யாரோ சொல்லி தவறான நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்தவுடன் சிறிய அளவிலான ஒரு ஆய்வைச் செய்து பார்ப்பது வழக்கம். நமக்கு எந்தப் பலனுமில்லையென்றாலும் இப்படியான மாணவர்கள் யாராவது பேசினால் அவர்களிடம் பேசுவதற்கு பயன்படும். இப்படியெல்லாம் அளப்பதனால் வருடாவருடம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்னிடம் பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. சராசரியாக ஆறே முக்கால் மாணவர்கள். முக்கால் என்பது மாணவர் அல்லது மாணவியின் சார்பாக அம்மாவோ அப்பாவோ பேசுவது. 

தமிழகம் முழுவதுமே, குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடம் கல்லூரிகள் மற்றும் படிப்புகள் குறித்தான புரிதல்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுக்கும் உதவாத கல்லூரிகளில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்களுடன் ஒப்பிடும் போது நகர்ப்புற மாணவர்கள் சில படிகள் மேலே நிற்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு இணையத்தில் புழக்கமிருக்கிறது. தகவல்களைச் சேகரித்துவிடுகிறார்கள். கிராமப்புற மாணவர்களின் நிலைமைதான் சிரமம். ‘நான் சில படிப்பெல்லாம் சொல்லுறேன். நெட் வசதி இருந்தா அது பத்தி கொஞ்சம் தேடிப் பார்க்கிறியா?’ என்ற கேள்வியை அந்தப் பெண்ணிடம் கேட்ட போது பக்கத்திலிருக்கும் ப்ரவுசிங் செண்டருக்குச் சென்று அங்கே இருப்பவர்களின் உதவியுடன் விசாரிப்பதாகச் சொன்னாள். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நாமாகவே அமர்ந்து தேட வேண்டும்.

பெண்ணுக்கு கணிதத்தில் ஆர்வமில்லை. கணிதம் இல்லாத பாடங்களாக யோசித்துக் கொண்டிருக்கிறாள். கணிதத்தை உள்ளடக்கிய பொறியியல், இளங்கலை கணிதம், வேதியியல் போன்ற படிப்புகள் மீது விருப்பமில்லை என்றால் உயிரியல் சம்பந்தப்பட்ட படிப்புகள் என்னென்ன இருக்கின்றன என்று மாணவராகவே அலச வேண்டும். முடிவெடுக்க வேண்டுமானால் மற்றவர்கள் உதவலாமே தவிர அலசுகிற வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். 

மருத்துவம், விவசாயம் தவிர மற்ற படிப்புகளைப் பற்றிய விவரங்கள் அவளிடமில்லை. அத்தகைய படிப்புகள் நிறைய இருக்கின்றன. மீன்வளத்துறை சம்பந்தமான படிப்புகள், வனத்துறை சம்பந்தமான படிப்புகள் என்று கணிதத்தைச் சேர்க்காத பாடப்பிரிவுகள் நிறைய உண்டு. விவசாயக் கல்லூரியில் சேர்வதாக இருந்தாலும் கூட பி.எஸ்.சி அக்ரி மட்டும்தான் படிப்பு என்றில்லை- உணவு பதப்படுத்துதலில் ஆரம்பித்து பட்டு வளர்ப்பு, தேனி வளர்ப்பு என்று சகட்டு மேனிக்கு இருக்கின்றன. அரசாங்க வேலை வாய்ப்புகள் நிறைந்த துறையாக தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அலசுவதற்கென நிறைய படிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் விண்ணப்ப விநியோகம் பல கல்லூரிகளில் கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன. அலசி ஆராய்ந்து கொண்டிருக்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.

மருத்துவம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கடுத்து கால்நடை மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? இல்லையென்றால் அடுத்தது என்ன படிப்பு என்கிற தெளிவை பள்ளிகளும் ஆசிரியர்களும்தான் உருவாக்க வேண்டும். முடியாத காரியமாகவெல்லாம் தெரியவில்லை. மேல்நிலைப்பள்ளிகளில் இணைய வசதியை உருவாக்கிக் கொடுப்பது முதல் படியாக இருக்கும். ப்ளஸ் ஒன்  மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் சமயத்தில் வாரத்தில் ஒரு மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்துகிற வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்து எப்படி இணையத்தில் மேய்வது என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டால் மாணவர்கள் தேடத் தொடங்குவார்கள். அவர்களுக்காக விவாதிப்பார்கள். குறைந்தபட்சமான புரிதல் இருந்தாலும் கூட போதும். தமிழகத்தின் உட்புறங்கள் அந்தளவிற்கான புரிதல் கூட இல்லை என்பதுதான் அவலநிலை. 

ஆறு மாதத்திற்கு முன்பாகவே எத்தனை மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என்கிற புரிதலில் இருக்கும் மாணவர்களுக்கு முடிவு வந்த பிறகும் கூட தமக்கு எம்.பி.பி.எஸ் கிடைத்துவிடும் என்கிற தவறான நம்பிக்கையில் இருக்க வாய்ப்பில்லை. தயாராகிக் கொள்வார்கள். கிராமப்புற மாணவர்களை நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனி மருத்துவத்திற்கு தேசிய அளவிலான தேர்வு வரப்போகிறது. பொறியியல் படிப்புக்கும் வராது என்று சொல்ல முடியாது. அப்படி தேசிய அளவிலான தேர்வுகள் என்கிற சூழல் வந்துவிட்டால் வெறும் படிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது. மாணவர்களுக்குத் தகவல்கள் தேவை. விவரங்கள் அவசியம். இணையம் மட்டுமே ஒரே வாய்ப்பு. அதைச் சரியாக அமைத்துக் கொடுக்கிற பணியை புதிய அரசு மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம். ஏமாந்தால் தமிழகம் கல்வியில் படுகுழியில் விழுந்துவிடும்.

சில பெற்றோர்கள் கூட பேசுகிற போது தங்களுக்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவு கிடைக்கும் என்கிற குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு பெரியதாக குழம்பத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஒவ்வொரு பாடத்திலும் நூறு மதிப்பெண்கள் எத்தனை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் தோராயமான முடிவுக்கு வந்துவிடலாம். 

2015 ஆம் ஆண்டு இயற்பியலில் இருநூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 124 பேர். இப்பொழுது அந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்திருக்கிறது. கணிதத்தில் கடந்த ஆண்டு 9710 பேர் இருநூறுக்கு இருநூறு. இந்த ஆண்டு 3,361 பேர். ஆக, இந்த இரண்டு பாடங்களும் இந்த ஆண்டு கடினமானதாக இருந்திருக்கிறது. வேதியியலிலும் உயிரியலிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இருநூறு மதிப்பெண்கள் வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவை மிகப்பெரிய வித்தியாசமில்லை. அதனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஆண்டு கட் ஆஃப் குறைவதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு 165 மதிப்பெண்ணுக்குக் கிடைத்த கல்லூரியும் பாடப்பிரிவும் இந்த ஆண்டு 162 மதிப்பெண்ணுக்கே கிடைக்கலாம். கடந்த ஆண்டு 162 மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்று தேடலாம். இப்படியானதொரு சிறு அலசலைச் செய்தால் நம்முடைய மதிப்பெண்ணுக்கு என்ன கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்கும் என்கிற உத்தேசமான முடிவுக்கு வந்துவிடலாம். அதன் பிறகு பாதிக் குழப்பம் தெளிந்துவிடும். 

மூன்றாம் நதி - முதல் விமர்சனம்

வணக்கம்.

நான் அப்செரன் ஃபெர்ணாண்டோ. சென்னையிலிருந்து எழுதுகிறேன். அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்க மையத்தில் வேலையில் இருக்கிறேன்.

எனக்கு பார்வை இல்லை. 

சில மாதங்களுக்கு முன்பாக திருப்பதி மகேஷ் மூலமாக நிசப்தம் அறிமுகமானது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரைக்கும் நிசப்தம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன் வழியாக உங்களின் முதல் நாவலும் அதே சமயத்தில் மிகச் சிறந்த நாவலுமான மூன்றாம் நதியின் ஒலி வடிவத்தை அழகான வெகுமதியாகக் கிடைக்கப்பெற்றிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாவலை எங்களுக்கு ஏற்ற வடிவில் வழங்கியதற்காக மனப்பூர்வமான நன்றி. ஒலிவடிவமானது துல்லியமாகப் புரிந்து கொள்ளுகிற வகையில் இருக்கிறது.

இத்தகையதொரு முன் முயற்சிக்காக நன்றி. இதை நீங்கள் தொடர வேண்டும். ஏனென்றால் உங்களுக்கும் உங்களுடைய எழுத்துக்களுக்காகவும் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று உறுதியாகச் சொல்வேன்.

நாவல் பற்றியதொரு சிறு குறிப்பு :

மூன்றாம் நதி உண்மையிலேயே மனதைத் தொடுகிற நாவலாக இருக்கிறது. நாவல் எங்கு எப்படித் தொடங்குகிறதோ அங்கு அப்படியே முடிவதை இந்த நாவலில் நான் விரும்பும் அற்புதமான அம்சமென்று சொல்வேன். உங்களின் கதை சொல்லும் உத்தியானது நேரடியாகவும் இலக்கியப் பூர்வமாகவும் ஏகப்பட்ட விவரங்களை நாவல் நெடுகவும் அவிழ்க்கிறது. நாவலின் வழியாக பெங்களூரின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடிந்தது. தங்களின் அட்டகாசமான வர்ணனையானது தொண்ணூறுகளின் பெங்களூரை முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நவீனத்துக்கும் பழமைக்கும் இடையில் தள்ளாடுகிற தலைமுறையின் கச்சிதமான உதாரணமாக பவானி இருக்கிறாள். பணத்துக்கும் நிலத்துக்குமான அடிமைத்தனத்தை பால்காரர் காட்டுகிறார். தனது பழைய காதலைப் பற்றி கணவனிடம் சொல்லுமிடத்தில் ‘சும்மா வெளியே கூட்டிட்டு போயிருக்கான். முத்தம் கொடுத்திருக்கான். அவ்வளவுதான்’ என்று பவானி சொல்லுமிடத்தை ரசித்தேன். எதையெல்லாம் கலாச்சாரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோமோ அதை நாகரிகமும் வளர்ச்சியும் வெகு இயல்பாக மென்று துப்பிவிடுகிறது.

Totally மூன்றாம் நதி stream of tears!

நன்றி.

அன்புடன்,
அப்செரன் ஃபெர்ணாண்டோ.


அன்புள்ள அப்சரென்,

வணக்கம்.

நாவலுக்கான ஒலி வடிவம் தேவை என்பது திருப்பதி மகேஷின் எண்ணம். அதை ஒலிக்கோப்பாக மாற்றிக் கொடுத்ததும் அவர்தான். அவருக்குத்தான் நன்றி உரித்தாகும்.

என்னுடைய முதல் நாவல் இது. வெளியான பிறகு நாவலுக்கான முதல் விமர்சனம் உங்களுடையது. இதை மிகச் சிறப்பான பரிசாக உணர்கிறேன். எந்தப் பரிசுகளையும் விடவும் முகம் தெரியாதவர்கள் வாசித்துவிட்டு எழுதுகிற கடிதங்கள்தான் வெகுமதி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை. வெயில் காய்ந்த பகலொன்றின் மாலையில் விசிறியடிக்கும் சாரலுடன் கூடிய மழையைப் போல இந்தச் சிறுகுறிப்பை உணர்கிறேன். மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

நிச்சயமாக முந்தைய புத்தகங்களை ஒலி வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள். தொடர்பிலும் இருங்கள். ஒரு நாள் நேரில் சந்தித்து பேசுவோம்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன். 

May 26, 2016

விளம்பரம்

கடந்த வருடம் அலுவலகத்தில் ஆண்டு விழா நடந்த போது நிறையப் பேர் ஆடினார்கள். பாடினார்கள். எனக்கும்தான் ஆசை. ஆனால் ஆடவும் தெரியாது. பாடவும் வராது. அடுத்த ஆண்டுக்குள் நடனமாடி பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தலைகீழாக, கைகளை மட்டும் நிலத்தில் ஊன்றி, கால்கள் அந்தரத்தில் நடக்கும்படியாக விதவிதமான நடன அசைவுகள். ஆசைப்பட்டு ஆறு மாதம் ஆகிவிட்டது. ஒரு அசைவைக் கூட முயற்சி செய்து பார்க்கவில்லை. முயன்றால் இடுப்பு சுளுக்கிக் கொள்ளும் என்று தெரியாதா என்ன? ஆண்டு விழாவுக்குப் பிறகு ஏன் அவ்வளவு ஆசை என்று யோசித்துப் பார்த்தால் ஒரே காரணம்தான் - நாலு பேர் பாராட்டுவார்கள் அல்லவா?

காலங்காலமாக உள்ளுக்குள் உருவேறிக் கிடக்கும் ஆசை இது. கதை, கட்டுரையெல்லாம் பள்ளிக் கூடத்தில் எழுத ஆரம்பித்தது. ஆட்டம், பாட்டம் என்று எந்தத் திறமையுமில்லை. படிப்பும் பிரமாதமில்லை. அடுத்தவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென்றால் நமக்கும் ஏதாவது ஒன்று தெரிய வேண்டும். அப்படியெல்லாம் முயற்சித்ததுதான். ஒரு கட்டத்தில் கட்டுரைக்கும், கதைக்கும் கவிதைக்கும் பரிசு கொடுத்தார்கள். கை தட்டினார்கள். அப்படியே பிடித்துக் கொண்டேன். திருமணம் வரைக்கும் ஒரு காதலியைக் கூட தேற்ற முடியவில்லையென்றாலும் கல்லூரி காலம் வரைக்கும் அடுத்தவர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்கு ஓர் உபகாரியாக இருந்த போது சந்தோஷமாக இருந்தது. கடிதம் எழுதி வாங்கிக் கொண்டவர்கள் பாராட்டினார்கள். 

இப்படி நான்கு பேர் பாராட்டுகிறார்கள் என்ற உத்வேகம் இருக்கிறது பாருங்கள்- கனவேலை செய்யும். அடுத்தடுத்த கட்டம் என்று நம்மை நகரச் செய்துவிடும். சுதந்திர தின பொன்விழாவில் கவிதை வாசித்ததிலிருந்து இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிற இந்தப் பதிவு வரைக்கும் ‘நேற்று எழுதியதைவிட இன்றைக்கு நன்றாக எழுத வேண்டும்’ என்று நினைப்பதுதான் தொடர்ந்து எழுதுவதற்கான காரணியாகவே இருக்கிறது. அதை எப்படி அளவிட முடியும்? அடுத்தவர்களின் பாராட்டு வழியாகத்தான். ஆனால் நம் மனம் மெதுவாகப் பக்குவப்பட்டுக் கொண்டே வருவதை உணர முடியும். முழுமையான பக்குவம் என்று சொல்லவில்லை- அன்று இருந்ததைவிட இன்று பக்குவமடைந்திருக்கும். எது நிலையான புகழ், இந்தப் புகழுக்கு நாம் தகுதியானவன்தானா? அடுத்தவர்களின் பாராட்டுக்கு நாம் பாத்திரமானவனா என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். அடுத்தடுத்து மேம்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தோன்றும். அப்படித்தான் வலைப்பதிவு, அறக்கட்டளை இத்யாதி இத்யாதி எல்லாம்.

திடீரென்று எதற்கு இந்த தன்னிலை விளக்கம்? வருடத்திற்கு ஒரு முறையாவது சொல்லிவிட வேண்டிய தேவை உருவாகிவிடுகிறது.

இன்றைக்கும் நான் சராசரியானவன்தான். மனது நிறையக் கசடுகள் நிரம்பித்தான் கிடக்கின்றன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை வெளியேற்ற முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அறுபது அல்லது எழுபது வயதில் முழுமையான முதிர்ச்சியை அடையலாம். ஒருவேளை அதெல்லாம் முடியாமல் சமூகம், குடும்பம் என்கிற அங்கங்களின் காரணமாகத் திரும்பத் திரும்ப இப்படியே உழலவும் கூடும். உழல்கிறோமோ அல்லது அடைகிறோமோ என்பது இரண்டாம்பட்சம்- முயற்சிப்போம்.

அவ்வளவுதான். 

எல்லாவற்றையும் விளம்பரமாக மட்டுமே பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விளம்பரம்தான். இல்லையென்றெல்லாம் மறுக்க முடியாது. விளம்பரம் இருந்ததால்தான் கடலூருக்கும் சென்னைக்கும் லட்சக்கணக்கில் கொடுத்தார்கள். விளம்பரம் இருந்ததால்தான் நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தை லட்சக்கணக்கில் விலை கோருகிறார்கள். செய்கிற காரியங்களை வெளியில் சொல்கிறேன். விளம்பரமேதான். வலது கை கொடுப்பதை இடது கைக்குத் தெரியாமல் செய்கிற அளவுக்கு எனக்கு யோக்கியதை இல்லை. அடுத்தவர்களிடம் வாங்கித்தான் செய்ய முடிகிறது. அடுத்தவர்களின் பணத்துக்கு சரியான கணக்கு காட்ட வேண்டாமா? நம்மைச் சுற்றிய சமூகத்தில் இருக்கும் துன்பங்களையும் துக்கங்களையும் விலாவாரியாக எழுத வேண்டாமா? எழுதுகிறேன். விளம்பரம்தான்.

ஆனால் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. வியாபாரம் என்பதில் எனக்கு ஆதாயம் இருக்க வேண்டும். பணம் கொழிக்க வேண்டும். அதைச் செய்வதில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். பணம் எனக்கு பொருட்டே இல்லை. இதைச் சொல்வது கூட விளம்பரம்தான் - ஆனால் சொல்லிவிடுகிறேன். எனது வாழ்க்கை முறை மிக எளிமையானது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மொத்தச் சம்பளத்தையும் என் தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். மாதம் முழுமைக்கும் அந்த ஐந்தாயிரம் ரூபாய்தான் என் செலவுகளுக்கு. பெரும்பாலும் மாதக் கடைசியில் தம்பியிடம் பணம் கேட்க வேண்டியிருக்கும். அதனால்தான் கஞ்சத்தனமாக இருப்பேன். தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக் கொள்வேன். என்னுடைய அதிகபட்ச பொழுது போக்குச் செலவு வாரம் ஒரு சிக்கன் பிரியாணி. பேருந்துகளில் வாசிக்க சில சஞ்சிகைகள். மற்றபடி, அரசுப் பேருந்துதான். கால் நடைதான். 

‘எழுதறியே காசு ஏதாச்சும் வருதா?’ என்று அம்மாவும் அப்பாவும் அடிக்கடி கேட்பதுண்டு. வரும். அவ்வப்போது. குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடருக்கு பத்தாயிரம், சுஜாதா விருதுக்கு பத்தாயிரம், கல்கி தொடருக்கு சில ஆயிரங்கள் இப்படி ஏதாவது வரும். எழுத்து வழியாக வரக் கூடிய எந்தப் பணமும் அடுத்தவர்களுக்குத்தான் என்றுதான் அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.‘அடுத்தவங்களுக்குக் கொடுத்தா பரவால்ல...கொஞ்சத்தையாவது பசங்க பேர்ல ஏதாச்சும் ஃபிக்சிட் டெபாஸிட் செய்யலாம்ல’ என்று எத்தனை முறை கேட்டிருப்பார்கள் என்று அவர்களுக்கும் எனக்கும்தான் தெரியும். தேவையில்லை. சம்பளம் வருகிறது. அதில் பார்த்துக் கொள்ளலாம். எழுத்து என்பது நான் வாழ்கிற சமூகத்திற்கானதாக இருக்கட்டும். கலை இலக்கியம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். எனக்கு வாய்த்திருக்கிற எழுத்து வழியாக அதிகபட்சமாக எவ்வளவு நற்காரியங்களைச் செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அதற்கு விளம்பரம் செய்துதான் ஆக வேண்டும். ப்ராண்டாக மாறித்தான் தீர வேண்டும். இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

இதெல்லாம் விளம்பரம் என்று யாராவது சொன்னால் எனக்கு பெரிதாக உறுத்தாது. ஆனால் வியாபாரம் என்றால் சங்கடமாக இருக்கிறது. வியாபாரம், பணம், சொகுசான வாழ்க்கை என்றெல்லாம் நினைப்பதாக இருந்தால் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வாழ முடியும். புகழும் பணமும் மட்டுமே விருப்பமாக இருந்தால் அதை எப்படி வேண்டுமானாலும் அடைய முடியும். நூறு பக்கப் புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியதில்லை. கடவுளின் கருணையினாலும், அடித்தும் உதைத்தும் போராடியும் பெற்றவர்கள் படிக்க வைத்ததனாலும் கை நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். 

எழுத்தை வைத்துக் கொண்டு சம்பாதிக்கப் போவதில்லை. ஆனால் அதை வைத்துக் கொண்டு சமூகத்தில் செய்யக் கூடிய உச்சபட்ச சாத்தியங்களை எல்லாம் முயன்று கொண்டேதான் இருப்பேன். அதற்காகத்தான் அத்தனை சிரமங்களும். பொய்யையும் புரட்டையும் எழுதி அத்தனை பேரையும் வெகு காலத்திற்கு ஏமாற்ற முடியாது. இறங்கி வேலை செய்ய வேண்டும். செய்து கொண்டிருக்கிறேன். 

எப்பொழுதாவது அதிகாலையில் ஏதாவதொரு ஊரின் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் போது எனக்கே தோன்றும். இப்படியெல்லாம் சிரமப்பட வேண்டுமா என்று யோசித்திருக்கிறேன். அலைய வேண்டியதில்லைதான். ஆனால் மனிதர்களை நெருங்கிப் பார்க்க விரும்புகிறேன். அந்த நெருக்கம் என்னைச் சிறுகச் சிறுக செதுக்கும் என்று நம்புகிறேன். உள்ளுக்குள் புதைந்திருக்கும் கசடுகளை வெளியேற்றும் என நினைக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கோயம்பேட்டிலும் மதுரையிலும் சேலத்திலும் இறங்கி பத்து ரூபாய் கொடுத்து அரசாங்கத்தின் தண்ணீர் பாட்டிலை வாங்கி முகத்தைக் கழுவிக் கொண்டு பேருந்து நிலையத் திண்டுகளில் நிறைய நாட்கள் படுத்திருக்கிறேன். விடியும் வரை படுத்திருந்துவிட்டு விடிந்ததும்தான் நண்பர்களை அழைப்பேன். கோயம்பேடு திண்டுகளில் பயணிகள் படுத்துவிடக் கூடாது என்று நடுநடுவே சிறு தடுப்பு வைத்திருப்பார்கள். படுத்தால் இடுப்பு அழுந்தும். எல்லோருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரியும். யாரிடமும் சொன்னதில்லை. வேணிக்கும் அம்மாவுக்கும் தெரிந்தால் அவர்கள் அழுது விடக் கூடும். அந்தந்த ஊர் நண்பர்கள் வருந்தக் கூடும். 

‘எங்க வீட்டுக்கு வந்துடுங்க’ என்று சொல்வதற்கு ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான்கு மணிக்கும் மூன்று மணிக்கும் அடுத்தவர்களின் கதவைத் தட்ட மனமே வராது. அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன். வாழ்க்கை எளிமையானதாகவே இருக்கட்டும். எவ்வளவுதான் நண்பர்கள் என்றாலும் அவர்களது நம்பிக்கையும் அன்பும் அப்படியே இருக்கட்டும். யாரையும் சிரமப்படுத்தாமல் என்னால் முடிந்த வேலைகளை என்னைச் சுற்றியிருக்கிறவர்களுக்காக செய்து கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை- ஆனால் வியாபாரம் என்று சொன்னால் சிரிப்பாக வருகிறது. ஒரு புத்தகம் விற்று வரக் கூடிய ராயல்டி என்பது எனது மாதச் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பதைக் கூட நான் புரிந்து வைத்திருக்க மாட்டேனா என்ன?

ஒரு புத்தகம் வெளியிட்டு அதை விற்பனை செய்துதான் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகம்தான் யாவரும் பதிப்பகத்தின் முதல் புத்தகம். நான்கைந்து இளைஞர்கள் சேர்ந்து பதிப்பகம் ஆரம்பித்தார்கள். நல்ல வியாபாரம். இன்றைக்கு ரமேஷ் ரக்சன், கணேசகுமாரன், இன்பா சுப்பிரமணியன் என்று ஏகப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள். நல்ல விஷயம்தானே? தவறு எதுவுமில்லை. விளம்பரம்தான் காரணம். இன்றைக்கு மூன்றாம் நதி ஆயிரம் பிரதிகள் விற்றால் அவர்களுக்குத் தெம்பு. இன்னமும் இரண்டு புத்தகங்களை அடுத்த ஆண்டில் வெளியிடுவார்கள். விற்றுவிட்டு காசு கொடுப்பார்கள். பணத்தை வாங்கி வேறு சிலருக்குக் கொடுப்பேன். புத்தகம் விற்றால் என்ன விற்கவில்லை என்றால் என்ன என்னால் விட முடியாது. கரிகாலன் கேட்கிறாரோ இல்லையோ வேடியப்பனிடம் நான் தினமும் கேட்கிறேன். நன்றாக விற்கட்டுமே!

மேற்சொன்ன அடுத்தவர்களின் பாராட்டு, விளம்பரம், சமூகம், அறக்கட்டளை, எழுத்து என எல்லாமே பின்னிப் பிணைந்துதான். ஒன்றிலிருந்தான் இன்னொன்று வடிவம் பெறுகிறது. உருமாறுகிறது. அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இவற்றையெல்லாம் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்தால் ஒன்றுமேயில்லை. செய்கிற செயலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நமக்கான திருப்தியை அடையும் வகையில் அடுத்தவர்களுக்கு அர்த்தமாகும் வரையில் செய்ய முடியுமா என்றுதான் பார்க்கிறேன். 

பாதை தெளிவாகத்தான் இருக்கிறது. 

May 25, 2016

ஐம்பதாயிரம்

மூன்றாம் நதி நாவலின் முதல் சில பிரதிகளை ஏலத்தில் வெளியிட்டு வரக் கூடிய தொகையை சில பெண்களின் கல்வி உதவித் தொகையாகக் கொடுத்துவிடலாம் என்று யோசனை தோன்றிய போது அதிகபட்சமாக ஐந்து அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு யாரேனும் கேட்கக் கூடும் என்றுதான் நினைத்தேன். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்- நேற்றிரவே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சந்தானராமன் கேட்டுவிட்டார். அவர் மட்டுமில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கு இரண்டு பேர்கள், ஏழாயிரத்துக்கு ஒருவர், ஐந்தாயிரத்துக்கு இருவர், மூன்றாயிரம் என்கிற அளவில் இரண்டு மூன்று பேர் என்று நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள்.

அத்தனை பேரும் ஒத்துக் கொள்ளும்பட்சத்தில் எப்படியும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் தேறிவிடும். பதிப்பாளர் கரிகாலனிடம் சொன்னேன். அவர் நம்பவேயில்லை. தமிழ்ச் சூழலில் இது சாத்தியமே இல்லை என்றார். அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம் கண் முன்னால்தானே அத்தனையும் நடக்கிறது? எதிர்பாராததெல்லாம் சாத்தியமாகிறது? ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் கணக்குக்கே வந்து சேர்ந்துவிட்டது. சேர்ந்த தொகையை வைத்துக் கொண்டு நான்கு மாணவிகளை அழைத்து ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுப்பதில் அர்த்தமில்லை. சரியான முறையில் பரிசீலித்து யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தொகையைப் பிரித்துக் கொடுக்கலாம். அது ஒரு மாணவியாக இருந்தாலும் சரி. ஐந்து மாணவிகளாக இருந்தாலும் சரி. ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி; நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி.

அநேகமாக ஜூன் 4 அல்லது 5 ஆம் தேதிவாக்கில் சென்னையில் ஒரு சிறு நிகழ்வை ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இடம், தேதி மற்றும் நேரம் முடிவான பிறகு எழுதுகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். நிகழ்வில் புத்தகத்தையும் அதில் எழுதியிருப்பதையும் பேசுவதைவிடவும் அந்த எழுத்தின் வழியாக நான்கு பேருக்கு சிறு விளக்கினைக் கையில் கொடுக்கிறோம் என்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. அதைப் பேசினாலே போதும். புத்தகத்தைப் பற்றி பேச விரும்புகிறவர்கள் எப்படியும் பேசிவிடுவார்கள். அதற்குத்தான் நம்மிடம் ஏகப்பட்ட ஊடகங்கள் இருக்கின்றனவே.

நேற்று மதியம் இரண்டு மணிவாக்கில் ஏலம் குறித்தான அறிவிப்பை எழுதியிருந்தேன். இரவு பத்து மணிக்கெல்லாம் இந்தக் குறிப்பை தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டேன். லட்ச ரூபாய் கூட அரை நாளில் சேர்ந்துவிடுகிறது. ஆச்சரியம் என்பதைவிடவும் நெகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இனி பணம் பெரிய விஷயமாகவே இருக்காது என்று தோன்றுகிறது. கேட்டால் கொடுத்துவிடுகிறார்கள். இத்தனை பேர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் ஆகப்பெரிய பலம். இந்த பலம் போதாதா? எத்தனை பெரிய சுமையையும் தூக்கி தலை மீது வைத்துக் கொண்டு களத்தில் இறங்கலாம். எழுத்து எதைக் கொடுக்கிறது என்றால் இதைத்தான் கொடுக்கிறது. எழுத்துக்கு நாம் நேர்மையாக இருந்தால் அது நமக்கு அதைவிடவும் நேர்மையாக இருக்கிறது.

ஏலம் கோரியவர்கள்:
திரு. சந்தானராமன்
ரூ. 50000
திரு. அருண்
ரூ 10001
திரு. சத்யா
ரூ 10000
திரு. அம்ஜத்
ரூ 7000
திரு. ஹரி
ரூ 6800
திரு. துரை முருகன்
ரூ 5555
அகிலா
ரூ 5001
திருமதி. ஸ்வேதா
ரூ 3500
திரு. வெங்கடேசன் சக்ரவர்த்தி
ரூ 3000

இவை தவிர சிலர் ஆயிரம் ரூபாய்க்கு கோரியிருக்கிறார்கள். ரஜினி ஸ்டைலில் சொன்னால் - மகிழ்ச்சி.

இனி இப்படியே இருந்துவிடலாம். 

வாழ்க்கை மிக எளிமையாக இருக்கிறது. அதை அப்பட்டமாக எழுதிக் கொண்டிருந்தால் போதும். எழுத்துக்கும் பேச்சுக்கும் பகட்டும் அரிதாரமும் அவசியமென்று தோன்றவில்லை. அப்படி எழுதுவது இலக்கியமாக இல்லாமல் போகலாம். அது பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லை. இலக்கியம், காவியம் என்பதையெல்லாம் தாண்டி மனிதத்தைப் பேசுவதை முக்கியமானதாக கருதுகிறேன். அதற்கு இருக்கக் கூடிய வலிமையையும் ஆற்றலையும் ஒவ்வொரு நாளும் அணுக்கத்திலிருந்து ரசிக்கின்ற வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அது பெரும் பாக்கியம். வேறு என்ன சொல்வது?

எப்பொழுதும் எழுத ஆரம்பிக்கும் போது மடமடவென்று எழுதிவிட முடியும். இன்றைக்கு இதற்கு மேல் என்ன எழுதுவதன்று தெரியவில்லை. சற்றே கனமாக உணர முடிகிறது. 

பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. பெருமையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பாதை தெளிவாக இருக்கிறது. சலனப்படாமல் நடந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். செல்ல வேண்டியது வெகு தூரம். பாதையெங்கும் அரவணைக்கவும் ஆதரிக்கவும் ஆர்ப்பரிக்கவும் உற்சாகமூட்டவும் ஆயிரமாயிரம் கைகள் வந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. அத்தனை கைகளுக்கும் அன்பான ஸ்பரிசங்கள். 

இதுதான் எழுத்துக்கான அர்த்தம். வாழ்கிற வாழ்க்கைக்கான அர்த்தம். இப்பொழுது இதை உரக்கச் சொல்ல முடியும். அர்த்தம் கொடுக்கும் அத்தனை பேருக்கும் நன்றி! இந்த மூன்றெழுத்துச் சொல் மிகச் சிறியதுதான். ஆனால் அதைத் தவிர வேறு எந்தச் சொல்லும் என்னிடமில்லை.

May 24, 2016

ஏலம்

நாவல் அச்சுக்குச் சென்றுவிட்டது. அநேகமாக சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை கைகளில் கிடைத்துவிடும். புத்தகத்தை வெறுமனே வெளியிடாமல் ஒரு நல்ல காரியத்துக்கு துணையாகச் செய்யலாம் என்று தோன்றியது. அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்கான உதவி கோரி நிறையப் பெண்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இந்த நாவலின் வழியாக அத்தகைய ஒரு பெண்ணுக்கு உதவலாம். அதை நிசப்தம் அறக்கட்டளை என்ற பெயரிலேயே செய்ய வேண்டியதில்லை. யாவரும் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் மாதிரியான ஆட்களையும் உள்ளே இழுத்துவிட்டுவிடலாம் என்ற யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. இனிமேல் இதனை அவர்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்யக் கூடும் அல்லவா?

இது ஒரு ஏல விளையாட்டு. 

முதல் ஐந்து பிரதிகளை அதிக விலை கொடுத்து யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அது எவ்வளவு தொகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தபட்சத் தொகை என்றெல்லாம் எதுவுமில்லை. முதல் ஐந்து தொகையைக் கூறியவர்களுக்கு ஐந்து பிரதிகள். அந்தத் தொகையை யாவரும் பதிப்பகத்தின் கணக்குக்கு அனுப்பி வைத்துவிட்டால் மொத்தத் தொகையையும் சேர்த்து ஜூன் முதல் வாரத்தில் டிஸ்கவரி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தகுதியான பெண்ணுக்குக் கொடுத்துவிடலாம். 

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் மற்றும் மசால்தோசை 38 ரூபாய் புத்தக விற்பனை வருவாயிலிருந்து எனக்கு ராயல்டியாக பத்தாயிரம் ரூபாயைத் தரவிருப்பதாக யாவரும் பதிப்பகத்தினர் சொல்லியிருக்கிறார்கள். ஏலத் தொகையுடன் இந்தத் தொகையையும் சேர்த்து அந்தப் பெண்ணுக்கே கொடுத்துவிடலாம். ஒருவேளை இந்த ஏலத்தின் மூலமாக அதிகமான தொகை கிடைத்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கொடுக்கலாம் இல்லையென்றால் இந்தத் தொகையை மட்டுமாவது கொடுத்துவிடலாம். எழுத்து வழியாக வரக் கூடிய எந்த நிதியும் இப்படியான பொதுக்காரியங்களுக்கே பயன்படட்டும். ஆண்டவன் ஓரளவுக்கு நல்ல நிலையில் வைத்திருக்கிறான். இப்படியே கடைசி வரைக்கும் வைத்திருக்கட்டும் என்றுதான் வேண்டிக் கொள்கிறேன்.

இதை ஏலம் என்றும் போட்டி என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். தகுதியான மாணவிகள் படிப்பதற்கு ஏதாவதொரு வகையில் உதவுகிறோம். அப்படி எடுத்துக் கொள்ளலாம்.

ஏலத் தொகை கூறுகிறவர்கள் மின்னஞ்சல் (vaamanikandan@gmail.com) வழியாகவோ அல்லது நிசப்தம் தளத்தில் பின்னூட்டமாகவோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்னூட்டமாகவோ கூறலாம். மே 26 (வியாழன்) மாலை வரைக்கும் வரக்கூடிய விவரங்களைத் தொகுத்து வெள்ளிக்கிழமையன்று விரிவாக எழுதுகிறேன்.

ஏலத்தில் கலந்து கொள்ளாமல் நாவலை அதற்குரிய விலையை மட்டும் கொடுத்து வாங்க விரும்புகிறவர்கள் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம். டிஸ்கவரி புக் பேலஸின் தளத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

வழக்கமாக ஆயிரம் பிரதிகள் அச்சடிப்பார்கள். இந்த முறை அறுநூறு பிரதிகள்தான். வருடாவருடம் டிசம்பர், ஜனவரி மாத சென்னைப் புத்தகக் கண்காட்சி தூள் கிளப்பும். விற்பனையும் அமோகமாக இருக்கும். இந்த முறை ஜூன் மாதம் என்பதால் கூட்டம் வருமா என்பது குறித்து சந்தேகப்படுகிறார்கள். அது சரியான சந்தேகம்தான். விற்காவிட்டால் அடைகாத்துக் கொண்டிருக்க வேண்டும். விற்பனை ஆக ஆக தேவைக்கு ஏற்ப அச்சடித்துக் கொள்ளலாம் என்றார்கள். இத்தகைய விவகாரங்களில் பதிப்பாளரும் விற்பனையாளரும் முடிவெடுப்பதுதான் சரி. 

உள்ளுக்குள் கொஞ்சம் அங்கலாய்ப்புதான். லிண்ட்சே லோஹன் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே தொள்ளாயிரம் பிரதிகளைத் தாண்டியது. இப்பொழுது மெனக்கெட்டு நாவலாக எழுதிக் கொடுத்தால் அறுநூறு பிரதிகள் மட்டும் அடித்திருக்கிறார்கள். நாவலின் விலையும் குறைவுதான். நூறு ரூபாய். அப்படியிருந்தும் அறுநூறுதான்.

உள்ளுக்குள் வஞ்சம் வைத்திருக்கிறேன். கவனித்துக் கொள்ளலாம். பதிப்பாளர் விற்பனையாளர் எல்லாம் ஒரு பக்கமாகக் கிடக்கட்டும். நானும் ரவுடிதான் என்று அவர்களை நம்ப வைக்கவே முடிவதில்லை. தினமும் பச்சை முட்டையெல்லாம் குடிக்கிறேன். பறவைக் காய்ச்சல் வந்தாலும் வரும் போலிருக்கிறது வாட்டசாட்டமான உடம்பு வராமல் நோகடிக்கிறது. அப்புறம் எப்படி என்னைப் பார்த்து பயப்படுவார்கள்?

புத்தக விற்பனையிலாவது தம் கட்டி கெத்து காட்டிவிடலாம். வீராப்பாக பேசி என்ன பலன்? அவர்களிடம் இதுவரையிலும் எதுவும் பேசவில்லை. நீங்கள்தான் துணையிருக்க வேண்டும். இந்திய வாழ் மக்கள் ஆளுக்கு ஐந்து பிரதிகள் வாங்கினால் அமெரிக்க ஆசிய ஐரோப்பிய அண்டார்ட்டிக்கா வாழ் பெருமக்கள் ஆளுக்கு ஐம்பது நூறு பிரதிகளாவது வாங்கவும். என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என்று சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் சொன்னால் நம்புகிறவர்கள் நான் சொன்னால் நம்பமாடடார்களா?

என்னை வாழ வைக்கும் தெய்வங்ளே! ஐந்து, பத்து, ஐம்பது, நூறு பிரதிகளை வாங்கி என்ன செய்வது என்றெல்லாம் கேட்கக் கூடாது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நண்பர்களுக்குக் கொடுக்கலாம். நூலகத்துக்குக் கொடுக்கலாம். கிழித்தும் வீசலாம். அது பிரச்சினையில்லை. ஆனால் வாங்கி விட வேண்டும். ஆன்லைன் விற்பனையைப் பார்த்து வேடியப்பன் கண்களில் வெடி வெடிக்கட்டும். கரிகாலன் காதுகளில் புகை வரட்டும்.  அந்தவொரு உற்சாகத்திலேயே அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்குவேன்.

ஐநூறு லட்சியம்! முந்நூறு நிச்சயம்!!
நல்லவர் லட்சியம்! வெல்வது நிச்சயம்!! யார் நல்லவர் என்று கேட்டு மானத்தை வாங்கிவிடாதீர்கள்.

ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!! டிஸ்கவரி புக் பேலஸின் ஆன்லைன் விற்பனையே முடங்கிப் போகட்டும்!!

நகைச்சுவை இருக்கட்டும். இந்தப் புத்தகத்தின் விற்பனை வழியாக வரக் கூடிய வருவாயும் அடுத்த ஆண்டு ஏதாவதொரு நல்ல காரியத்துக்கு பயன்படும்படியே செய்யப்படும்.

எதைச் செய்தாலும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. இத்தனை மனிதர்களின் ஆதரவின்றி எதுவுமே சாத்தியமில்லை என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

ஆன்லைன் விற்பனை: டிஸ்கவரி புக் பேலஸ்

நட்சத்திரம்

கேபிள் டிவி வந்து பிறகு சன் டிவி வந்து வதவதவென ராஜ், விஜய் டிவியெல்லாம் வந்த போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பொடியன் கூட்டத்துக்கு தொலைக்காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டும் என்ற ஆசை துளிர்த்த சமயத்தில் ஊரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். நடத்தினார்கள் இல்லை நடத்தினார். ஒற்றை மனிதர். முகம் நிறைய பவுடர் பூசி உதடு நிறைய சிவப்புச் சாயம் அப்பி போதாக்குறைக்கு வாய் முழுக்க ஜரிதா பீடாவைக் குதப்பிக் கொண்டு மேடையேறி எச்சிலை விழுங்கிவிட்டு ‘அன்பான மக்களே’ என்று கர கரக் குரலில் ஆரம்பித்தார். மேடைக்கு கீழாக அமர்ந்திருந்த எனக்கு அப்பொழுதே இளமை புதுமை சொர்ணமால்யாவை பீட் செய்துவிட்ட பூரிப்பு. எப்படியும் தொலைக்காட்சியில் தோன்றிவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி அது. மேடையில் சன் டிவி புகழ், ராஜ் டிவி புகழ், விஜய் டிவி புகழ், எக்செட்ரா, எக்செட்ரா டிவி புகழ் என்று வரிசையாக எழுதி கீழே அந்த மனிதரின் பெயரையும் எழுதி வைத்திருந்தார்கள். அந்த மனிதருக்கு உள்ளூரில் நன்கொடையாளர்களும் கிடைத்திருந்தார்கள். நகைக்கடை, துணிக்கடை என்று திரும்பிய பக்கமெல்லாம் பதாகை வைத்திருந்தார்கள். கலந்து கொண்டவர்கள் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. அப்பொழுது நூறு ரூபாய் பெருந்தொகை. அப்பாவை நம்ப வைத்து சமாளித்து வாங்கிச் செல்வதற்கு பெரும்பாடாக ஆகியிருந்தது. 

அதுவொரு திருமண மண்டபம்.  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பையன்களும் பெண்களும் சில மூத்தவர்களுமாக களை கட்டியிருந்தது. அத்தனை கூட்டத்திலும் எனக்கு அவளைப் பார்க்கும் போது மண்டைக்குப் பின்னால் பல்பு எரிந்தது. ஏதாவதொரு டம்மி பெயராக அவளுக்கு வைத்துக் கொள்வோம். ஜெயந்தி. அந்தக் கூட்டத்திலேயே வெகு அழகு. பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டது. அநேகமாக பள்ளிப் பருவத்தில் பற்றிய பதினோராவது காதலாக இருக்க வேண்டும். அவள் தனது குழுவோடு வந்திருந்தாள். தைய்ய தைய்ய தைய்யா தைய்யா பாடலுக்கு மேடையில் ஆடினார்கள். அத்தனை பேரையும் விட்டுவிட்டு அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்றிருந்த வெள்ளியங்கிரி ‘டேய் அவ உன்னைத்தாண்டா பார்க்கிறா’ என்று ஏற்றிவிட்டான். பற்றியெரிந்த காதல் ஆளை மொத்தமாக எரித்துக் கொண்டிருந்தது. நூறு ரூபாய் போனால் தொலைகிறது இப்பேர்ப்பட்ட தேவைதையை கண்ணில் காட்டின வெற்றிலைபாக்கு பார்ட்டியை மனதார வாழ்த்தினேன்.

மதியம் எல்லோரும் சாப்பிடுவதற்காகச் சென்றார்கள். நான் வெள்ளியங்கிரியை அழைத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றேன். வெள்ளியங்கிரி எப்பொழுதுமே நெடுஞ்செழியன் மாதிரி அல்லது அன்பழகன் மாதிரி. உதயநிதி காலமென்றால் மகேஷ் பொய்யாமொழி மாதிரி. நாம் நினைப்பதை அவன் செய்து கொடுப்பான். ‘நீ இரு நான் வாரேன்’ என்று சென்றவன் அரை மணி நேரத்தில் வந்து ‘அவங்கப்பன் குருமந்தூர் மேட்டுல டீக்கடை வெச்சிருக்கான்..அவ தம்பி நம்ம பள்ளிக்கோடம்தான்...உனக்கு புடிச்சிருச்சுல...கவலையை உடு..அவ உனக்குத்தான்..நான் கல்யாணத்தை செஞ்சு வெக்கிறேன்’ என்கிற ரகத்தில் பேசத் தொடங்கியிருந்தான். அதன் பிறகு என்ன பேசினேன் என்ன நடந்தது என்பதெல்லாம் ஞாபகமேயில்லை. அபிராமி அபிராமி மாதிரி ஜெயந்தி ஜெயந்திதான்.

சமீபத்தில் ‘த ஸ்டார் மேக்கர்’ என்ற படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. புதுச்சேரி ஃபோட்டோகிராபர் மதுதான் இந்தப் படம் பற்றிச் சொன்னார். அவர் மாடலிங் ஃபோட்டோகிராபர். திரைத்துறை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது த ஸ்டார் மேக்கர் பற்றிய பேச்சும் வந்தது. சினிமா பாரடைசோ படத்தை இயக்கிய குய்செப்பே ட்ரோனாட்டோரே இயக்கிய படம். 1995 ஆம் ஆண்டிலேயே வெளி வந்துவிட்டது.


இரண்டாம் உலகப்போர் முடிந்த காலகட்டம் அது. படத்தின் நாயகன் மொரேலியிடம் ஒரு வண்டி இருக்கிறது. இன்றைய கேரவேனின் அன்றைய வடிவம். உள்ளுக்குள் கேமிராவிலிருந்து படுக்கை வரை அத்தனையும் வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஊராகச் சென்று திரைத்துறையில் நடிகராகிறவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்று பேசுகிறார். தான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வந்திருப்பதாகவும் ஸ்கீரீன் டெஸ்ட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அழைக்கிறார். மக்கள் குவிகிறார்கள். ‘இந்தப்பக்கம் திரும்பு...அந்தப்பக்கம் திரும்பு..நேரா பாரு...வசனம் பேசு’ என்று அவர்களை தனது கேமிராவில் பதிவு செய்து கொள்கிறார். இதில் கலந்து கொண்டவர்கள் மொரேலிக்கு பணம் தருகிறார்கள். மெரோலி திருட்டுப்பயல் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் மக்கள் நம்புகிறார்கள்.

கேமிராவின் முன்பாக அமர்ந்து உண்மையைக் கொட்டுகிறார்கள். தங்களது ஆழ்மன ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். இது மொரேலிக்கும் தெரிகிறது. தனது மகளை நடிகையாக்கிவிட வேண்டும் என்பதற்காக மொரேலியிடம் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள் ஒரு அம்மாக்காரி. கொள்ளையடிக்க வருகிறவர்களிடம் தன்னைப் பற்றி விளக்கி அவர்களைப் படமெடுத்து அவர்களிடமிருந்தே காசு வாங்குகிற கில்லாடியாக மொரேலி இருக்கிறார். தொடக்கத்தில் படம் சற்றே இழுவை என்றுதான் சொல்ல வேண்டும். பாதி நகர்ந்த பிறகு பியேட்டா அறிமுகமாகிறாள். நாயகி. அப்பாவிப் பெண். கிறித்துவ கன்னியாஸ்திரிகளுடன் தங்கியிருக்கிறாள். மொரேலி கேட்கும் பணம் அவளிடமில்லை. உள்ளூர் பணக்காரனிடம் கேட்கிறாள். அவளது நிர்வாணத்தைக் காட்டினால் தருவதாகச் சொல்கிறான். ஆடைகளைக் களைந்து அவன் முன்பாக நின்று பணத்தை வாங்கிக் கொண்டு மொரேலியிடம் செல்கிறாள்.

மொரேலி அடுத்த ஊருக்குக் கிளம்பும் போது அவனது வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அவன் அவளைத் துரத்திவிடுகிறான். கன்னியாஸ்திரிகள் அவளை ஏற்றுக் கொள்ளாமல் துரத்தியடிக்கிறார்கள். அவள் மீண்டும் மொரேலியைத் தேடி வந்து சேரும் போது அவனைத் திருட்டுப்பயல் என்று கண்டுபிடித்து அவனிடம் ஏமாந்த காவல்துறை அதிகாரி சிறையில் தள்ளுகிறான். காதல் பிரிகிறது. அதன் பிறகு க்ளைமேக்ஸ்.

படம் யூடியூப்பிலேயே கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பார்த்துவிடுங்கள். நல்ல படம். மொரேலிக்கும், பியேட்டாவுக்காகவுமே பார்க்கலாம். இந்தப் படத்தை வைத்து இணையத்தில் நிறைய தியரிகள் இருக்கின்றன. விமர்சனங்களும் இருக்கின்றன. இந்தப் படத்துக்கும் இதே இயக்குநரின் முந்தைய படமான சினிமா பாரடைசோவுக்குமான தொடர்புகள், காட்சியமைப்புகள், இசை, ஐம்பதுகளில் வெளிவந்த வேறொரு இயக்குநரின் படத்துடனான தொடர்புகள் என்று நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. அப்படிப் பிரித்து மேய்ந்து திரைப்படம் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதில்லை என்கிற கட்சிக்காரன் நான். அதற்கு திறமையும் போதாது. 

வெளிநாட்டு படம் பார்ப்பது என்பது அந்நாட்டின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒரு மிடறு பருகிக் கொள்வது போல. The starmaker படம் பார்க்கவில்லையென்றால் இத்தாலியின் சிசிலி என்ற தீவைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதேயில்லை. 1950களில் அந்தத் தீவின் வீடுகளும் மனிதர்களும் வாழ்முறையும் இப்பொழுது இல்லாமலிருக்கக் கூடும். அதை திரைப்படம்தான் நமக்குக் காட்டுகிறது. ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தை அப்படித்தான் பார்க்கிறேன். பிடித்த படத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் அதைப் பற்றி அவர்கள் பேசவோ எழுதவோ கூடும். நிறையப் பேர் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்கள் ஒரு சிலரேனும் இருக்கக் கூடும் அல்லவா?

படத்தைப் பற்றி பேசிவிட்டு ஜெயந்தியை விட்டுவிட்டேன் பாருங்கள்- அந்த ஜரிதா பீடா பார்ட்டி எல்லோரையும் படம் எடுத்து முடித்துவிட்டு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்கள் தான் அடுத்த முறை வரும் போது மீண்டும் முயற்சி செய்யவும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். சென்னையிலிருந்து இன்றோ நாளையோ அழைப்பு வந்தவுடன் சொர்ணமால்யாவை பார்த்துவிடலாம் என்று கற்பனை சிறகு விரிந்து கொண்டேயிருந்தது. அவன் அநேகமாக The Starmaker படம் பார்த்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். பன்னாடைப் பயல். 

அவன் போனால் தொலைகிறது என்று ஜெயந்தியின் தம்பியின் மூலமாக நூல் விட்டுப் பார்த்தோம். வெள்ளியங்கிரி வெகு பக்கபலமாக இருந்தான். ஆரம்பத்தில் அவளுடைய தம்பி நன்றாகத்தான் பேசினான். திடீரென்று ஒரு நாள் வந்து ‘அண்ணா நீங்க குருமந்தூர் பக்கம் வந்தீங்கன்னா டீக்கடை பாய்லர்ல இருக்கிற சுடுதண்ணியைப் புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன்னு எங்க அக்கா சொல்லுறா’ என்றான். ‘எல்லாப் பொண்ணுங்களும் அப்படித்தாண்டா சொல்லுவாங்க...ட்ரை பண்ணு’ என்றுதான் வெள்ளியங்கிரி சொன்னான். எனக்குத்தான் தீவிரவாதிகள் மீது ஆர்வமில்லாமல் போய்விட்டது. ‘எனக்கு அவ வேண்டாம்..நீ வேணும்ன்னா ட்ரை பண்ணு’ என்று சொல்லிவிட்டு ஷீபாவை சைட் அடிக்கத் தொடங்கியிருந்தேன்.

May 23, 2016

மூன்றாம் நதி- ஒலி வடிவம்

மூன்றாம் நதி நாவல் இன்று அச்சுக்குச் செல்கிறது. புத்தகம் ஒரு வாரத்தில் வெளி வந்துவிடும். மிகச் சிறிய நாவல்தான். நூறு பக்கம். சிறுகதை, கட்டுரை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. புதினம் எழுதுவதற்கான மனநிலையும் எழுத்தும் வாய்க்கிறதா என்பதை இருநூறு முந்நூறு பக்க நாவலில் பரிசோதித்துப் பார்ப்பதை விடவும் நூறு பக்கங்களில் முயன்று பார்ப்பது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதிய பிறகு வேணி படித்துப் பார்த்தவுடன் கரிகாலனுக்கு அனுப்பி வைப்பேன். இவர்கள் இரண்டு பேர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இருபது அத்தியாயங்களையும் முடித்த பிறகு இன்னும் சில நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதுவொரு மன திருப்தி.


சந்தோஷ் நாராயணன் அட்டை வடிவமைப்பை முடித்து நேற்று அனுப்பி வைத்திருந்தார். வழக்கம் போலவே யாவரும் பதிப்பகம்தான் வெளியிடுகிறது.

‘எப்போ புத்தக வெளியீடு வைத்துக் கொள்ளலாம்?’ என்று கரிகாலன் கேட்டிருந்தார். தேர்தல் களேபரம் முடிந்து புத்தகக் கண்காட்சிக்கான களேபரேம் தொடங்குகிறது. நிறைய வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் இந்த நாவலுக்கு அப்படியொரு நிகழ்ச்சி தேவையில்லை என நினைக்கிறேன். பதிப்பாளர்களுக்கு கூடுதல் செலவுதான். இப்பொழுதெல்லாம் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பெரும்பாலும் பாராட்டித்தான் பேசுவார்கள். நம்மைப் பாராட்டும் போது அரங்குக்குள் குளுகுளுவென்றுதான் இருக்கிறது. வெளியில் வந்து யோசித்துப் பார்த்தால் பதிப்பாளரின் காசில் நாம் கிளுகிளுப்படைந்துவிட்டோம் என்றிருக்கிறது.

வெளியீடு இருந்தே தீர வேண்டுமென்றால் புத்தகக் கண்காட்சியில் சாதாரணமாக வெளியிட்டுவிடலாம். ஆனால் இந்த முறை புத்தகத்தை கூடுதலாக இன்னொரு வடிவத்திலும் வெளியிட பதிப்பாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். ஆடியோ வடிவம். இந்த வடிவத்தை இலவசமாகவே வெளியிடலாம். ஆனால் எல்லோருக்கும் இந்த ஒலி வடிவம் புரியாது. பார்வையற்றவர்களுக்கான ஒலி வடிவம் இது.

நிசப்தம் தளத்தில் தொடர்ந்து எழுதுவதற்குக் காரணம் என்னவென்று கேட்டால் சில பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். அவற்றில் மிக முக்கியமானவர்கள் திருப்பதி மகேஷ், வினோத் சுப்பிரமணியன் மற்றும் அவர்களது நண்பர்கள் குழாம். இவர்கள் அத்தனை பேரும் விழியிழந்தோர். மகேஷ் ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு திருப்பதியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார். வினோத் வங்கி ஒன்றில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். மற்ற நண்பர்களில் சிலர் வேலை தேடிக் கொண்டும் சிலர் வெவ்வேறு வேலையிலும் இருக்கிறார்கள். இவர்கள் நிறைய வாசிக்கிறவர்கள். இணையத்தில் கிடைப்பனவற்றை எல்லாம் வாசித்துவிடுகிறார்கள். அதற்கென பிரத்யோகமான மென்பொருள் வைத்திருக்கிறார்கள். அது வாசித்துக் காட்டுவதை காது கொடுத்து கேட்கிறார்கள். ஆனால் PDF வடிவில் இருக்கும் புத்தகங்களை அந்த மென்பொருள் வாசிப்பதில்லை. வேர்ட் அல்லது நோட்பேட் வடிவில்தான் இருக்க வேண்டும்.

மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் வாசித்துவிட்டு ‘அபிலாஷ், விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை..ஆனா அது சாத்தியமேயில்லை’ என்றார். விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம். மகேஷ் வருத்தப்பட்டார்.

‘மூன்றாம் நதியை உங்களுக்கு புரியற மாதிரியான ஒலி வடிவத்தில் மாத்திக் கொடுங்க’ என்று அவரிடமே கேட்டிருந்தேன். மகேஷ் மாற்றி அனுப்பி வைத்திருந்தார். அதை இப்பொழுது பதிவேற்றிவிடலாம்.

‘இது எல்லாருக்கும் புரியாதே சார்’ என்றார்.

‘எல்லோருக்கும் புரியற மாதிரி இருந்தா பதிப்பாளர் என்னை நடு வீதியில் விட்டு கல்லெடுத்து அடிப்பார்’ என்றேன். அத்தனை பேருக்கும் ஒலி வடிவிலேயே புத்தகத்தைக் கொடுத்துவிட்டால் பிறகு யார் வாங்குவார்கள்? ஆயிரம் பிரதிகளாவது விற்றால்தான் ராயல்டி தருவதாகச் சொல்லியிருக்கிறார். இப்படியேதான் மற்ற இரண்டு புத்தகங்களுக்கும் சொன்னார். ஆனால் இன்னமும் ஒரு பைசாவைக் கண்ணில் காட்டவில்லை. வேறு பதிப்பாளர்களாக இருந்தால் ஒரு பதிவு எழுதியாவது திட்டலாம். இவர்களே கடன் வாங்கி புத்தகம் வெளியிட்டு இலக்கியத்தை இன்ச் இன்ச்சாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சூடும் சுரணையும் வேறு நிறைய வைத்திருக்கிறார்கள். திட்டி எழுதி அவர்கள் ஏதாவது எசகுபிசகாக முடிவெடுத்துவிட்டா அந்தப் பாவமும் நம்மைத்தான் வந்து சேரும். அதனால் விட்டுவிடலாம்.

யாவரும் பதிப்பகத்தினர் உண்மையிலேயே கடன் வாங்கித்தான் புத்தகம் வெளியிடுகிறார்கள். ‘ஏதாச்சும் பணம் வேணும்ன்னா சொல்லுங்க’ என்று கேட்டால் ‘எழுத்தாளர்கள்கிட்ட காசு வாங்கினா அசிங்கம்ங்க’ என்கிறார்கள். இந்த ஒரு நல்ல குணத்துக்காகவே இவர்களிடம் எத்தனை புத்தகம் வேண்டுமானாலும் எழுதிக் கொடுத்துவிடலாம் என்று தோன்றும்.

தமிழில் விழியிழந்தோருக்கான ஒலி வடிவில் ஏதேனும் புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படி இல்லாதபட்சத்தில் மூன்றாம் நதிக்கு அந்தப் பெருமை கிடைக்கட்டும். தொடங்கி வைத்ததாக இருக்கட்டுமே. பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் இதை அன்பான கோரிக்கையாக பரிசீலிக்கவும்.

ஒலிவடிவத்தைக் கேட்கும் விழியிழந்தோர் நாவல் எப்படி இருக்கிறது என்பதை ஒற்றை வரியில் சொன்னால் கூட போதும். மிகுந்த சந்தோஷமடைவேன். அவர்கள் வாசிக்கிறார்கள் இவர்கள் வாசிக்கிறார்கள் என்பதைவிடவும் நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். நெகிழ்ச்சியும் கூட. 

எழுதுவதன் ஆன்ம திருப்தியே இத்தகைய சின்னச் சின்ன சந்தோஷங்களில்தான் இருக்கிறது. இந்த திருப்திதான் தூங்கும் போது கூட எழுதுவதைப் போல கனவு காணச் செய்கிறது. அந்தக் கனவுதான் எல்லாவற்றுக்குமே அடிநாதமாக இருக்கிறது.


ஒலிவடிவில் வெளியிட அனுமதித்த பதிப்பாளர், திருப்பதி மகேஷ் , சந்தோஷ் நாராயணன், வடிவமைப்பாளர் ராசு கோபுவேல் மற்றும் நாவல் குறித்து அவ்வப்பொழுது கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்த அத்தனை பேருக்கும் நன்றி!

May 22, 2016

காசு

திருமாவளவன் பற்றி பேசும் போது ஊரில் பதறுகிறார்கள். ‘அந்த ஆளு கட்டப்பஞ்சாயத்து’ என்று சொல்கிறவர்கள் நிறைய உண்டு. ரவுடியிசம் செய்கிறார் என்பார்கள். அரசியலிலும் சினிமாவிலும் ஒரு செய்தி வெளிவரும் போது அது காட்டுத்தீ மாதிரி பரவிக் கொண்டேயிருக்கும். தானே நேரடியாக பாதிக்கப்பட்டது போல கண் காது மூக்கு வைத்து அளப்பார்கள். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது? ஏன் பேசுகிறார்கள் என்று யோசிக்காமல் ஒரு வாயிலிருந்து இன்னொரு காதுக்குச் சென்று கொண்டேயிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பாக சாதிய உணர்வைத் தூண்டும்படி திருமா பேசிய ஆடியோக்களும் வீடியோக்களும் இன்றைக்கும் எங்கள் ஊர் பகுதியில் வாட்ஸப்பில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ‘இப்போ அவர் மாறிட்ட மாதிரி தெரியுதே’ என்று கூட எந்த இடத்திலும் பேச்சைத் தொடங்க முடிவதில்லை. நான்கு பேராவது எதிர்வினை புரிகிறார்கள். உள்ளூருக்குள் எதற்கு வம்பு என்று அடங்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. 

திருமாவின் மீதான வெறுப்பை தனிமனித வெறுப்பாக மட்டும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதுவொரு சமூகத்தின் மீதான வெறுப்பு. ‘இன்னைக்கு அவனுக ஆளாளுக்கு வண்டியும் காரும் வாங்கிட்டாங்க’ ‘நம்மை எல்லாம் ரோட்டுல ஒரு பய மதிக்கிறதில்ல’ மாதிரியான புலம்பல்களின் வேறு வடிவம். தேர்தல் சமயத்தில் இதைத் தெளிவாக உணர முடிந்தது. கொங்கு நாட்டுக் கட்சியை தேர்தல் கூட்டணியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிற அதிமுக திமுக அபிமானிகள் விசிகவையும் புதிய தமிழகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதில்லை. விசிக கூட்டணிக்குள் வரும்பட்சத்தில் ஆதிக்க சாதியினரின் வாக்குகள் எதிரணிக்குச் சென்றுவிடும் என்று பயப்படுகிறார்கள். அப்படியென்றால் கொங்குநாட்டுக் கட்சியைச் சேர்த்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் எதிரணிக்குச் சென்றுவிடாதா என்று கேட்டால் வேறொரு கணக்கைச் சொல்கிறார்கள்.

தொகுதியில் மொத்தம் நூற்று நாற்பது தலித் காலனிகள். முப்பதிலிருந்து முப்பத்தைந்தாயிரம் வாக்குகள் வரை சேரும். பணம் கொடுப்பதற்கு கணக்கு போடும் போதே காலனிகளைத்தான் குறி வைக்கிறார்கள். காலனிகளில் வாழும் மக்களை பணம் கொடுத்து வாங்கிவிட முடியும் என்று கணிக்கிறார்கள். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்கிறார்கள். அவர்களின் கணிப்பும் அச்சுபிசகாமல் சரியாக முடிகிறது. தமிழகம் முழுக்கவுமே இதுதான் நிலைமையாக இருக்கும் என்று அனுமானித்துக் கொள்ளலாம். இந்தவொரு எண்ணத்தில்தான் ஆதிக்க சாதியக் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரத் துடிக்கும் அரசியல்வாதிகள் தலித் கட்சிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் என்கிறார்கள். 

அதிமுக, திமுக என்று எந்தக் குறிப்பிட்ட கட்சியை நோக்கியும் கை நீட்ட வேண்டியதில்லை. கிட்டத்தட்ட அத்தனை பெரிய கட்சிகளும் இத்தகைய மனநிலையில்தான் இருக்கின்றன.

தலித் மக்கள் மட்டுமே காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதாகவும் மற்றவர்கள் அப்படிச் செய்வதில்லை என்பதான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. பிற சாதியினரும் இதைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் சிதறல் இருக்கின்றன. ஆனால் தலித் வாக்குகளை பெருமொத்தமாக வாங்கிவிட முடிகிறது என்கிற சூழல் நிலவுகிறது என்பதுதான் நிதர்சனம். இந்தச் சூழல் நிலவுகிற வரைக்கும் தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்தக் காலத்திலும் உயரப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். தேர்தலுக்குத் தேர்தல் இருநூறோ முந்நூறோ கொடுத்தால் போதும் என்கிற நிலைமையில் அந்த மக்களுக்கு வேறு அறிவு வளர்ந்துவிட வேண்டும் என்று எந்த ஆதிக்க சாதிக்காரன் நினைப்பான்?

திருமாவையும் கிருஷ்ணசாமியையும் எதிர்க்கிற கட்சிக்கு அப்பாற்பட்ட ஆட்களின் மனநிலையை இத்தகைய நூலோடுதான் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வெறும் பண்டங்களாகவே அவர்கள் இருக்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. உள்ளே புகுந்து புழங்க முயற்சிக்கும் போது யார் காரணம் என்று யோசிக்கிறார்கள். திருமாவின் கட்டப்பஞ்சாயத்தில் தாங்களே அடி வாங்கியது போலப் புலம்புகிறார்கள். ‘நாங்க காலனி ஆட்களை வீட்டு வரவேற்பறை வரைக்கும் அனுமதிக்கிறோம்’ என்று தங்களை முற்போக்காளராக நினைத்துக் கொண்டு பேசுகிற மனிதர்களுக்கு தலித் தலைவர்கள் மீது இருக்கக் கூடிய வெறுப்பை வேறு எப்படிப் புரிந்து கொள்வது? ‘இவனுகதான் அமைதியா இருக்கிற சேரி ஆட்களைத் தூண்டி விடுறாங்க’ என்று பதறுகிறார்கள். 

ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்களிடம் இதையெல்லாம் பேச முடிவதில்லை. பேசினாலும் சரி; எழுதினாலும் சரி; கோபப்படுவார்கள். கோபப்படட்டும். ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இதுதான் பிரதானமான காரணமாகத் தெரிகிறது. ஒருவேளை திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் இந்த அளவுக்குக் கூட தலையெடுக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் தலித் மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகத்தான் இருந்திருக்கும் என்று நம்ப வேண்டியிருக்கிறது. இன்றைக்கு தலித் மக்கள் மேலே வந்துவிட்டார்கள் என்று பேசுவதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதான பாவனை. சேரிகளிலும் காலனிகளிலும் புகுந்து பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்- இன்னமும் தொண்ணூறு சதவீத மக்கள் அப்படியேதான் கிடக்கிறார்கள். வீட்டில் இலவச டிவி ஓடுவதும், பைக் வைத்திருப்பதும், ஜீன்ஸ் அணிவதும் மட்டுமே முன்னேற்றம் என்று நம்பினால் அவர்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் சமூக அறிவு, அரசியல் விழிப்புணர்வு, கல்விக்கான சூழல் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுவாக பின் தங்கித்தான் இருக்கிறார்கள். திருமாவும் கிருஷ்ணசாமியும் இன்னபிறரும் சலனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே முன்னேற்றங்களுக்கான வாய்ப்புகளும் தேவைகளும் இன்னமும் நிறைய இருக்கின்றன.

தலித் அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்க விரும்பினால் அவர்கள் பேச வேண்டியது சமூக மாற்றம் பற்றிய கருத்துக்களை மட்டுமில்லை. தேர்தல் அரசியல் குறித்தான மாற்றங்களையும்தான். தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாக்குரிமையின் வீரியத்தை அந்த மக்கள் புரிந்து கொள்ளும் வரைக்கும் அரசியல்வாதிகள் அவர்களது வாக்குகளை வெறும் பண்டங்களாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ‘கடைசியில காசு கொடுத்தா குத்திடுவாங்கடா’ என்று நம்புகிற ஆதிக்க சாதி அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும் சேரிகளில் எந்த மாறுதலைக் கொண்டு வந்துவிட முடியும்? தனது வாக்கின் வலிமையை ஒவ்வொரு சாமானிய மனிதனும் உணராத வரையிலும் ஜனநாயகத்தில் அவர்களின் விடிவுகாலம் வெகு தூரத்தில்தான் கிடக்கும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளின் பலத்தை அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் அவலம்.

இந்தவொரு புரிதலை அந்த மக்களுக்கு உருவாக்க வேண்டிய மிகப்பெரிய ஜனநாயகக் கடமை தலித் மக்களின் மேம்பாட்டுக்காக யோசிக்கக் கூடிய, பாடுபடக் கூடியவர்களின் முன்னால் இருக்கிறது. காசுக்கு வாக்குகளை விற்கும் மனநிலை இருக்கும் வரை இங்கே எந்தவொரு அரசியல் மாற்றமும் சாத்தியமேயில்லை. இதை சத்தியம் செய்து சொல்ல முடியும்!