Apr 14, 2016

சாபம்

சித்திரை முதல் தேதி, தை ஒன்று, பிறந்தநாள் மாதிரியான நல்ல நாட்களில் எழுந்தவுடன் மனதுக்குப் பிடித்தவர்களின் முகத்தில் விழித்து நாள் முழுவதும் அடுத்தவர்களிடம் திட்டு வாங்காமல் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவேன். ஆனால் இன்று அப்படி அமையவில்லை. தினந்தோறும் அழைத்து பிரச்சினை செய்து கொண்டிருந்த செக்யூரிட்டி கணேசன் அழைத்தார். அறக்கட்டளையின் நோக்கத்திலிருந்து எல்லாவற்றையும் சந்தேகித்தவர் கடைசியில் ‘எனக்கு வந்த நிலை உனக்கும் வரும்’ என்று சாபத்தோடு முடித்தார். 


அலுவலக நேரம், எங்கேயாவது பயணத்தில் இருக்கும் தருணம், இரவு பத்து மணிக்குப் பிறகு என எப்பொழுது அழைத்தாலும் அவருடன் பேச வேண்டும் என எதிர்பார்ப்பது அவரது தவறில்லை. ஆனால் எனக்கு சாத்தியமில்லையே! பதின்மூன்றாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார், தனியார் கல்லூரியில் சேர்த்து பையனைப் படிக்க வைக்கிறார் வெறும் மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு எதற்காக இவ்வளவு பிரச்சினைகளைச் செய்கிறார் என்று புரியவேயில்லை. கூலித் தொழிலாளியும், இல்லாதவர்களும் கூட ஐந்தாயிரம் ரூபாய் வரைக்கும் புரட்டிவிடுகிறார்கள். ஆனால் இத்தகைய மனிதர்களின் நோக்கம் சந்தேகிக்கச் செய்கிறது.

‘நான் விசாரிக்க வேண்டும்’ என்று சொன்னால் ‘எப்படி விசாரிப்பீங்க?’ என்கிறார். மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் பெரிய தொகையில்லை. ஆனால் எதைப் பற்றியும் யோசனை செய்யாமல் கொடுக்க முடியாதல்லவா? விசாரிக்காமல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனிதர்களுக்கு எப்படி உதவ முடியும்? 

தவறு என் மீதும் இருக்கக் கூடும். நிறையப் பேருக்கு சரியான பதில் சொல்ல முடிவதில்லைதான். ஆனால் முடிந்தவரை எல்லாருக்கும் தகவல் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். இந்தப் பிரச்சினையை இங்கே எழுதுவதும் கூட கணேசனைத் தவறானவராகச் சித்தரிப்பதற்காகவோ, ‘எவ்வளவு பிரச்சினைகளைத் தாங்கிக் கொண்டு இந்தச் சமூகத்தை ரட்சிக்கிறேன் பாருங்கள்’ என்று என்னைப் புனித ஆத்மாவாக்கிக் கொள்வதற்காகவோ இல்லை. எழுத வேண்டுமா என்று கூடத் தோன்றியது.

ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கியே தீர வேண்டும். பயனாளிகளை அறிமுகப்படுத்தி வைக்கும் போது தயவு செய்து ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியுமென்றால் மட்டுமே அறிமுகப்படுத்தி வையுங்கள். தொடர்ந்து வாசித்து பின் தொடர்கிறவர்களுக்கு அறக்கட்டளை எப்படிச் செயல்படுகிறது என்று தெரியும். அதன் செயல்பாடுகள் பற்றித் புரிந்திருக்கும். அதனால்தான் யாராவது பேச ஆரம்பிக்கும் போதே ‘பயனாளிக்கும் எனக்குமிடையில் கடைசி வரைக்கும் நீங்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்தால் அடுத்து யோசிக்கலாம்’ என்று சொல்லிவிடுகிறேன். ஆனால் யாராவது சில மனிதர்கள் பயனாளிகளிடம் நேரடியாக எனது எண்ணைக் கொடுத்து ‘நீயே பேசிக்க’ என்று கழண்டு கொள்ளும் போதுதான் இத்தகைய பிரச்சினைகள் வந்து சேர்கின்றன. இத்தகைய கழண்டு கொள்ளும் மனிதர்கள்தான் பிரச்சினைகளின் மூலகாரணம். பயனாளிகளுக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும், நல்லது செய்துவிட்ட திருப்தியும் இருக்க வேண்டும், ஆனால் எந்த ரிஸ்க்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றால் எப்படி? 

கணேசன் ஒருவர் மட்டுமில்லை- நிறையப் பேரிடம் வசை வாங்கியிருக்கிறேன். சிலர் ஒன்றிரண்டு முறை கேட்டுப் பார்ப்பார்கள். உடனடியாக பதில் சொல்லாமல் விட்டிருப்பேன். அதன் பிறகு கேட்கவே மாட்டார்கள். அடுத்தவர்களிடம் தவறாகச் சொல்லியிருப்பார்கள். கணேசனைப் போன்ற சிலர் இப்படி நேரடியாகத் திட்டுகிறார்கள்.

இத்தகைய எளிய சாமானிய மனிதர்களுக்கு அறக்கட்டளைக்கான வருமானம் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது என்று எதுவுமே தெரிவதில்லை. ஏதோ தகிடுதத்தத்துக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். இத்தகைய மனிதர்களை நேரடியாக எதிர்கொள்வதற்குத்தான் பயமாக இருக்கிறது. இன்னமும் நாட்கள் செல்லச் செல்ல எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று புரியவில்லை. அம்மா சொல்லுவார். ‘பொதுக்காரியங்களைத் தொடங்கும் போது சாபம் வாங்காமல் செய்ய வேண்டும். ஆனால் அது சாத்தியமேயில்லை. பெரும் குடும்பங்கள் கூட சிதைந்து போனது இத்தகைய சாபங்களால்தான்’ என்று. அப்பொழுது சாபம் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது சற்று விரல்கள் நடுங்குகின்றன. கடவுளிடம் திரும்பத் திரும்ப பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் பிரச்சினைகள். வாழ்க்கையே இப்பொழுதுதான் தொடங்குகிறது. இத்தகைய குருட்டுவாக்கான சாபத்தை எதிர்கொள்ளும் போது குடும்பம், குழந்தை என்று எல்லாவற்றையும் பற்றி மனம் குதப்பிக் கொள்கிறது. இத்தகைய வேலைகளைச் செய்யும் போது இதெல்லாம் சகஜம்தான் என்றாலும் வருடத்தின் நல்ல நாளில் இத்தகைய சொற்களை ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. இதுவரையிலும் யாரிடமும் இப்படியெல்லாம் வெளிப்படையாக சாபத்தை வாங்கியதில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  அவர் சொன்ன அதே கடவுள் மீது எனக்கும் நம்பிக்கையிருக்கிறது. அவர் பார்த்துக் கொள்ளட்டும். வேறு என்ன சொல்வது?