Apr 25, 2016

குலுக்கல்

மூன்றாம் நதி நாவலுக்கான அட்டை வடிவமைப்பைச் செய்தது யாரென்று யூகிக்கச் சொல்லி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன் - நிறையப் பேர் சரியான பதிலைச் சொல்லியிருந்தார்கள். சந்தோஷ் நாராயணன். எனது முந்தய சில புத்தகங்களுக்கும் அவர் வடிவமைத்திருக்கிறார். இந்த முறையும் கேட்கலாமா என்று தயக்கமாக இருந்தது. பன்மடங்கு மேலே போய்விட்டார். எழுத்து, கலை என திரும்பிய திசைகளில் எல்லாம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். பதிப்பாளரிடம் ‘சந்தோஷ் ரொம்ப பிஸி..ஆனா எதுக்கும் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றேன். சந்தோஷ் நாவலை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார். பத்து நாட்களில் வடிவமைப்பை முடித்து அனுப்பி வைத்தார். இரண்டு விதமான வடிவமைப்புகள். கருப்பும் நீலமும் பார்த்தவுடனேயே பிடித்துப் போனது. முடிவு செய்தாகிவிட்டது.



ஏற்கனவே சொல்லியிருந்தபடி வடிவமைப்பாளரின் பெயரைச் சரியாக யூகித்திருந்தவர்களின் பெயரைத் துண்டுச்சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்துவிட்டேன். காஜல் அகர்வால் தெலுங்குப்படத்தில் பிஸி. இலியானா இந்திப்படத்தில் பிஸி. அதனால் அவர்களை வைத்துக் குலுக்கலை நடத்த முடியவில்லை என்று சொன்னால் நம்பிக் கொள்ளத்தான் வேண்டும். நானே தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆனால் குலுக்கல் எதுவுமில்லாமல் தேர்ந்தெடுத்தாக நினைத்துக் கொள்ள வேண்டாம். துண்டுச்சீட்டுகளில் பெயரை எழுதி குலுக்கிப் போட்டு கருப்பராயனை வேண்டிக் கொண்டுதான் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்தேன். என்ன வேண்டினேன் என்பதெல்லாம் பரம ரகசியம்.

உண்மையில் இயக்குநர் சசியைத்தான் தேர்ந்தெடுக்கச் சொல்ல நினைத்திருந்தேன். பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக தனது அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப் படத்துக்கான கதை விவாதத்தில்தான் கலந்து கொள்கிறேன். வாரத்தில் இரண்டு நாட்கள்- சனி, ஞாயிறு அதற்காகப் போய்க் கொண்டிருக்கிறது. எழுதுகிற சம்பவங்கள், கேட்ட கதைகள் என எல்லாமே கதைக்கான கச்சாப் பொருட்கள்தான். அதுதான் இயக்குநருக்கும் பிடித்திருக்க வேண்டும். மற்ற விவரங்களை இன்னொரு நாள் சொல்கிறேன். 

ஐந்து பேரும் முகவரியை அனுப்பி வைத்தால் புத்தகம் தயாரானவுடன் ஒரு பிரதியை அனுப்பி வைத்துவிடலாம்.

நிசப்தம் பக்கத்தில் சரியான பதிலை எழுதிய இருவர்-

1. Thilagarajan Selvaraj 
2. Nanthakumar Kannan 

ஃபேஸ்புக்கில் சரியான பதிலை எழுதிஅ மூவர்-

3. Raja Manickam
4. Praveen Selvaraj
5. kabilan Mani

அட்டையை வடிவமைத்துக் கொடுத்த சந்தோஷூக்கு நன்றி. அவரைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். பன்னாட்டு விளம்பர நிறுவனமொன்றில் கொழுத்த சம்பளத்தில் வேலைக்கு இருந்தார். ஆனால் அவருக்கும் சரி அவரது மனைவிக்கும் சரி- நெருக்கடியான நகர வாழ்வில் விருப்பமில்லை. ஆங்கில மருத்துவம், பணம் சார்ந்த வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்தெல்லாம் விலகி இயற்கை வழி மருத்துவம், இயற்கை உணவு, எளிமையான வாழ்க்கை முறை என்று வாழ்கிறவர்கள். அவரைப் பார்த்தால் ‘இப்படித்தான் வாழ வேண்டும்’என்று ஆசையாக இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் என்னால் வாழவே முடியாது என்று அமைதியாகிக் கொள்வேன்.

எப்பொழுதாவது பேசும் போதெல்லாம் ‘இந்த ஃபாஸ்ட் உலகம் வேண்டாம்..வேற ஏதாச்சும் பண்ணுவோம்’ என்பார். நாகர்கோவில் மாதிரியான ஊரில் பிறந்து வளர்ந்தவருக்கு அப்படித்தான் இருக்கும். ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் சம்பளம், அலுவலகம் என்று இதிலேயேதான் உழல்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் சொன்னது போலவே வேலையை விட்டுவிட்டார். ‘ஒண்ணாம் தேதியானா சம்பளம் வந்துடுச்சான்னு பார்த்துட்டு மீது முப்பது நாளும் அழுத்தத்தில் வாழ வேண்டியதில்லை’ என்று சொல்கிற வித்தியாசமான மனிதர். அவரது கைவசம் தொழில் இருக்கிறது. ஓவியம், கலை, எழுத்து என்று பல்துறை வித்தகர். எப்படியும் வாழ்ந்துவிடுவார். அந்த நம்பிக்கையில் இப்பொழுது அதே துறையில் ‘செயல்’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். விகடனில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் கலைடாஸ்கோப் தொடர் வழியாக பெரும்பாலானவர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கக் கூடும். ஒருவேளை தெரியாதவர்கள் சந்தோஷின் நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

அட்டை வடிவமைப்பைச் செய்து அனுப்பி வைத்த போது கூடவே ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார். ‘அட்டையை விசுவலைஸ் பண்ணுவதற்கு உங்கள் முன்னுரையே எனக்கு போதுமானதாக இருந்தது. முதல் அத்தியாயத்தின் துவக்கமும் கடைசி அத்தியாயத்தின் முடிவும் ஒரே இடத்தில் வந்து முடிச்சிடுவது சூப்பராக இருந்தது’. இப்பொழுதெல்லாம் ட்ரைலரை வைத்தே கதையை முடிவு செய்துவிடுகிறார்கள். சந்தோஷ் நாராயணனும் அப்படித்தான் போலிருக்கிறது. இவரைப் போலவே வாசிக்கிறவர்களும் முன்னுரையை மட்டும் வாசித்துவிட்டு மூடி வைத்துவிட்டால் என்ன செய்வது என்று முன்னுரையை பட்டி பார்த்து டிங்கரிங் செய்துவிடலாமா என்று ஒரே யோசனையாக இருக்கிறது!

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இவரைப் போலவே வாசிக்கிறவர்களும் முன்னுரையை மட்டும் வாசித்துவிட்டு மூடி வைத்துவிட்டால்//
அதுக்குனாலும் புஸ்தத்த வாங்கித் தானே ஆவணும்.

ABELIA said...

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்

Vinoth Subramanian said...

Waiting...