Apr 30, 2016

தேர்தல் களம் - கோபிச்செட்டிபாளையம்

நேற்று காலை ஊருக்கு வந்த போது மதியம் பனிரெண்டு மணி. இருபத்தெட்டாம் தேதியன்று செங்கோட்டையன் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். பெருங்கூட்டத்தைத் திரட்டியிருந்தார் என்றார்கள். கூட்டத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்ட வேண்டிய அவசியம் கே.ஏ.எஸ்ஸூக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரம்தான் எஸ்.வி.சரவணனின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டாயிரம் பேர் திரண்ட கூட்டம் அது. ‘சரவணனுக்கு நல்ல கூட்டமப்பா’ என்ற பேச்சை உடைத்தாக வேண்டும். அதனால் போட்டிக்குப் போட்டியாக வேட்புமனுத்தாக்கல் ஊர்வலத்துக்கு ஆட்களுக்கு சரக்கை ஏற்றி அவர்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி சட்டைப்பையில் முந்நூறு ரூபாயை நிரப்பி திரட்டியிருந்தார்கள் அதிமுகவினர். பணமே பிரதானம்.

கோபித் தொகுதியில் ம.ந.கூ, பா.ம.க, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் என்று இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு செய்திருக்கிறார்கள். ஆனால் சரவணன், செங்கோட்டையனோடு ஒப்பிடும் போது மற்றவர்கள் மிக மிக வலு குறைந்தவர்கள். தொகுதியைப் பொறுத்தவரையில் சரவணன் Vs செங்கோட்டையன்தான். இரண்டு பேருமே தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர்கள். செங்கோட்டையனின் பலமாக பணம் இருக்கிறது. சரவணனின் பலமாக நேர்மையான மனிதர் என்ற நல்ல பெயர் இருக்கிறது. தமிழகத்தில் கடும் போட்டி நிலவக் கூடிய தொகுதி என்றால் அதில் கோபியைச் சேர்த்துக் கொள்ளலாம். 

தேர்தல் என்ற விஷயத்தில் செங்கோட்டையன்  பழம் தின்று கொட்டை போட்டவர். அனுபவஸ்தர். மருத்துவர்கள் சங்கத்திலிருந்து மார்கெட் வியாபாரிகள் சங்கம் வரைக்கும் எந்தவொரு சங்கத்தினரையும் விடுவதில்லை. வண்டி நிறைய சால்வையை வைத்துக் கொண்டு எதிரில் யார் வந்தாலும் போர்த்திக் கொண்டிருக்கிறார். நம்பியூர் பகுதியில் நாடார்கள் அதிகம். நம்பியூர் பகுதிதான் எதிராளியான சரவணனுக்கு செல்வாக்கான பகுதி. அந்தப் பகுதியின் நாடார் வாக்கை கவர்வதற்காக நாடார் ஒருவரை அழைத்து அருகில் நிறுத்திக் கொள்கிறார் செங்கோட்டையன். கவுண்டர்களிடம் பேசும் போது தனது சாதியைச் சொல்லி வாக்குக் கேட்கிறார். அருந்ததியர்களிடம் வாக்கு கேட்கும் போது கட்சியையும் சின்னத்தையும் சொல்லி வாக்குக் கேட்கிறார். பக்காவான Strategist.

சரவணனும் மூன்று முறை தேர்தல்களில் வென்றவர். அதுவும் பஞ்சாயத்துத் தேர்தல்களில். அவருக்கும் நெளிவு சுளிவு அத்துப்படியாக தெரிகிறது அதனால் இருவரும் சளைக்காமல் விளையாடுகிறார்கள். நுணுக்கமாக கவனிக்கிறவர்களுக்கு சுவாரஸியங்கள் நிறைந்த தேர்தலாக இருக்கிறது. 

செங்கோட்டையன் பயப்படுவதாகவும் தொகுதியில் பேச்சு நிலவுகிறது. சில உள்ளடி வேலைகள் செங்கோட்டையனுக்கான ஒரு மைனஸ். செங்கோட்டையன் மீண்டுமொருமுறை வென்றால் அடுத்தவர்களை வளர விட மாட்டார் என்று அதிமுகவினர் சிலர் பேசினார்கள். 

தன்னுடைய பலவீனங்கள் எது என்பதையும் செங்கோட்டையன் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். கோபி ரோட்டரி சங்கத்தில் பேசும் போது ‘இதுவரைக்கும் நான் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்’ என்று செங்கோட்டையன் பேசினாராம். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. முப்பதாண்டு காலமாக தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தாலும் பெயர் சொல்லும்படியான ஒரு வளர்ச்சித் திட்டமும் செய்யவில்லை என்று மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுகவினருக்கும் இது தெரிந்திருக்கிறது. செங்கோட்டையன் வீழ்த்தப்பட்டால் அதற்கான காரணமாக இரண்டைச் சொல்ல முடியும். முதற்காரணம் சரவணனின் நல்ல பெயர். இரண்டாவது காரணம் ‘கே.ஏ.எஸ் எதுவுமே செய்யவில்லை’ என்கிற அவருக்கான கெட்ட பெயர்.

இந்த இரண்டு காரணங்களையும் கடைசி நேரப் பட்டுவாடா அடித்து நொறுக்கிவிடும் என்று அதிமுகவினர் நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். அதிமுகவினர் பணம் கொடுக்கக் கூடும் என்று சரவணன் தரப்பு ஆட்களுக்குத் தெரிகிறது. ஆனால் ‘தடுத்தால் நமக்கு எதிரா திரும்பிடும்’ என்று பயப்படுகிறார்கள். உள்ளூர் மக்கள் சிலரிடம் பேசும் போது ‘காசு கொடுத்தா வாங்கிட்டு சரவணனுக்கு போட்டுடுவாங்க பாருங்க’ என்று பேசுகிறார்கள். இந்த நம்பிக்கைதான் சரவணன் தரப்பு ஆட்களுக்கு மிகப்பெரிய தெம்பை அளித்திருக்கிறது

இந்த மைனஸ்களை சமாளிக்க செங்கோட்டையன் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையிலான அவரது அரசியல் வாழ்வில் இப்படியொரு போட்டியை அவர் சந்தித்திருக்கவே மாட்டார் போலிருக்கிறது. கும்பாபிஷேகம், மாரியம்மன் திருவிழா என்று ஓரிடம் விடாமல் ஓடிச் செல்கிறார். இப்படி செங்கோட்டையன் வாயில் துணியைக் கவ்வியபடி களமாடிக் கொண்டிருக்கிறார். ‘இவ்வளவு வருஷம் ஏன் இப்படி பயப்படலை?’ என்று பொதுமக்கள் எழுந்திருக்கும் கேள்வியே அவருக்கு எதிரான அலையை வலுப்படுத்திவிடக் கூடும். 

இன்று அதிகாலையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது வயல் வேலைக்குச் செல்லும் பெரியவரைச் சந்தித்தேன். ‘நிலைமை எப்படி இருக்குங்க?’ என்றேன். தப்பிக்க நினைத்தவராக ‘அதெல்லாம் சொல்ல முடியாது..ஆண்டவனுக்குத்தான் தெரியும்’ என்றார். சிரித்தபடியே வேறு ஏதேதோ பேசி சரிக்கட்டி ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போடறதா உத்தேசம்’ என்ற போது ‘சரவணனுக்கு போடச் சொல்லி என் பையன் சொல்லியிருக்கான்’ என்றார். மகன் சொன்னதை அவர் செய்யக் கூடும். இப்படியானதொரு அலைதான் செங்கோட்டையனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

நேற்று மதியம் பனிரெண்டு மணிக்கு சரவணன் வேட்புமனுத்தாக்கல் செய்வதாகச் சொன்னார்கள். ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச் சென்ற போது அவர் உள்ளே நுழைந்திருந்தார். முந்தின நாள் கட்சிக்காரர்களை அழைத்து ‘மனுத்தாக்கல் செய்வதற்கு உள்ள நாலு பேர்தான் போக முடியும்...காசு செலவு செஞ்சு வந்து வெயில்ல காய வேண்டாம்’ என்று சரவணன் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். அப்படியும் ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். ஒரு மணிக்கு மேலாக வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தார். பக்கத்திலிருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ‘இங்க எனக்காக கூடியிருக்கிறதுக்கு நன்றி. வெயில் ரொம்ப அதிகமா இருக்கு. உடம்பைப் பார்த்துக்குங்க..வீட்டுக்கு போங்க..பொழுது சாஞ்ச பிறகு தேர்தல் வேலையை ஆரம்பிங்க...வெயில்ல வேண்டாம்’ என்றார். இன்னமும் காந்தி தாத்தா மாதிரியே பேசிட்டு இருக்காரே என்று நினைத்துக் கொண்டேன். 

தேர்தல் பணிமனை அலுவலகத்தில் ஓரமாக அமர்ந்திருந்தேன். கட்சிக்காரரர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அப்படியொரு ஆர்வம். அதிமுக அலுவலகத்திலும் இப்படி அமர வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அடையாளம் தெரிந்தால் கும்மிவிடுவார்கள் என்று பயமாகவும் இருக்கிறது. 

இன்றைய சூழலில் சரவணனின் நல்ல பெயர் வெற்றிக்கான படிக்கட்டுகளை வேகமாகக் கட்டிக் கொண்டிருந்தாலும் சரவணனிடம் சில மைனஸ்கள் இருக்கின்றன. தேர்தல் பணிமனையை இப்பொழுதுதான் அமைத்திருக்கிறார்கள். இதைக் குறையாகச் சொல்ல முடியாது. பணிமனை ஆரம்பித்தால் எப்படியும் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயாவது செலவு பிடிக்கும். சரவணன் கடன் வாங்கித்தான் செலவு செய்து கொண்டிருக்கிறார். பத்து நாட்களுக்கு முன்பே பணிமனையை ஆரம்பித்திருந்தால் இன்னுமொரு பத்து லட்சத்துக்கு கூடுதல் கடனாளியாகி இருப்பார். இந்தவொரு தாமதம் சற்றே மைனஸ்தான். ஆனால் நேற்றிலிருந்து திண்ணைப் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. வார்டுச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஒவ்வொரு கதவாகத் தட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் எப்படி வேலை வாங்கப் போகிறார் என்பதைப் பொறுத்து களம் இன்னமும் சூடு பிடிக்கக் கூடும்.

கோபியின் கிழக்குப் பகுதியில் விசாரித்தால் செங்கோட்டையன் முன்ணணியில் இருக்கிறார். கோபி நகரத்தில் ஆரம்பித்து மேற்கே செல்லச் செல்ல சரவணன் முன்ணனியில் இருக்கிறார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்றைய சூழலில் சரவணன்தான் முன்னணியில் இருக்கிறார். அடுத்த பதினான்கு நாட்களுக்கு தம் கட்டினால் சரவணன் செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்றுதான் தெரிகிறது. 

நேற்று மாலை நேரத்தில் நம்பியூர் பகுதியில் பேசச் சொன்னார்கள். பேசுவதில் எனக்கு சங்கடம் எதுவுமில்லை. கட்சிச் சாயம் பூசிக் கொள்ள வேண்டியதில்லை. நல்ல வேட்பாளர்- அவ்வளவுதான் நோக்கம். அதையேதான் பேசினேன். ‘எனக்கு கட்சி, சின்னம், சாதி என்கிற எந்தப் பிடிப்புமில்லை. ஒரேயொரு காரணம்- சரவணன் நல்லவர். அவருக்காக பேசுகிறேன்’ என்று தொடங்கினேன். முப்பதாண்டு காலமாக கே.ஏ.எஸ் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். திரும்பத் திரும்ப வாய்ப்பளித்துவிட்டோம். இந்த முறை அவரை எதிர்த்து சரியான ஆள் நிற்கிறார். வாய்ப்பளிப்போம் என்றேன். 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் இன்னொரு முக்கியமான விஷயம் பணத்துக்கு வாக்களிப்பது. இதை எதிர்த்து விழிப்புணர்வை உண்டாக்கினாலே ஜனநாயகத்தின் பாதி வெற்றிதான். அதையும் பேசினேன். ‘நோட்டை வாங்கிக் கொண்டு வோட்டைப் போடால் எதிர்கால சந்ததியினருக்கு பெரிய வேட்டு வைக்கப் போகிறோம் என்று அர்த்தம். எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் அதை இரண்டு நாள் வேலையில் சம்பாதித்துவிடலாம். ஆனால் ஐந்தாண்டு காலம் நம் எதிர்காலத்தை அடமானம் வைத்த மாதிரி ஆகிவிடும். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது நமது பிள்ளைகளுக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய துரோகம். படித்தவர்கள் தயக்கமேயில்லாமல் படிக்காதவர்களிடம் இதைப் பேசுங்கள். அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். ஆனால் தயவு செய்து சிந்தித்து வாக்களிக்கட்டும். படிப்பறிவற்ற மக்கள், வயதில் மூத்தவர்கள் என யாராக இருந்தாலும் சரி- படித்த ஒவ்வொருவரும் படிக்காத சாமானிய மக்கள் பத்து பேரிடமாவது பேச வேண்டும்’ என்றேன். 

பொதுவெளியில் நானொரு சுண்டைக்காய். பேசுவதையெல்லாம் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் மனத்தூய்மையுடன், நல்லதொரு நோக்கத்துக்காக எந்தவிதமான காழ்ப்புணர்வுமில்லாமல் வெளிப்படையாக பேசும் போது மக்களின் மனதை அசைத்துப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுத்து வழியாகவும் பேச்சு வழியாகவும் அதைச் செய்து கொண்டேயிருப்பதுதான் இந்தச் சமூகத்துக்கு செய்யக் கூடிய முக்கியமான வேலையாகக் கருதுகிறேன். நாளை சரவணன் வென்றால் அவரிடம் காரியம் ஏதாவது ஆக வேண்டுமென்று கேட்கப் போவதில்லை. கைகட்டி நிற்கப் போவதில்லை.‘தகுதியான வேட்பாளர் வெல்லட்டும்’. அதற்காகத்தான் பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். மக்களுக்கு புரிந்திருக்கக் கூடும்.

விதைப்பதை விதைப்போம். விளைய வைக்க மக்களுக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.