Apr 25, 2016

தேர்தலும் பங்களிப்பும்

நேற்று வாட்ஸப்பில் ஒரு படத்தை அனுப்பியிருந்தார்கள். கடந்த வாரத்தில் நிசப்தம் தளத்தில் எழுதியிருந்த ‘ஏன் ஆதரிக்கிறேன்?’ என்ற கட்டுரையை கோபித் தொகுதிக்குள் சரவணனை விரும்புகிறவர்கள் பிரதி எடுத்து விநியோகித்துக் கொண்டிருப்பதாக அந்தச் செய்தி இருந்தது. ஐந்து பக்கக் கட்டுரை அது. சாதாரண மனிதர்களுக்கு முழுமையாகப் படிக்க பொறுமை இருக்காது. சிலர் அலைபேசியில் அழைத்து கட்டுரையை இரண்டு பக்கத்திற்கு வரும்படியாக சுருக்கித் தந்தால் துண்டுப்பிரசுரமாகவே அச்சடித்துத் தருவதாகச் சொன்னார்கள். தாங்களே சுருக்கினால் கட்டுரையின் சாராம்சம் குறைந்துவிடக் கூடும் என்ற யோசனை அவர்களுக்கு. சனிக்கிழமை இரவு கட்டுரையைச் சுருக்கி முடிக்கும் போது நள்ளிரவு தாண்டியிருந்தது. ஒரு பக்கம் உள்ளூர்க்காரர்கள் இப்படி வேலை செய்து கொண்டிருக்க கைலாஷ் மாதிரியானவர்கள் வேறு மாதிரி ஆதரிக்கிறார்கள்.

கைலாஷூக்கும் கோபித் தொகுதிக்கும் சம்பந்தமேயில்லை. ‘சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஜெயிக்கணும்...ஒரு சிறு தொகையை அனுப்ப விரும்புகிறேன்’ என்றார். அவர் ஏற்கனவே தமிழகத்தின் சில நல்ல வேட்பாளர்களுக்கு தன்னால் முடிந்த தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது லண்டனில் இருக்கும் கைலாஷின் அந்த மின்னஞ்சல் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. அந்த நேரத்திலும் சரவணனுடன் இருக்கும் அவரது நண்பர் பாபுவை அழைத்துப் பேசினேன். ‘எல்லாத்தையும் காசோலையாகவே அனுப்ப சொல்லுங்க...சரவணன் எல்லாத்துக்கும் கணக்கு சரியா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பாரு’ என்றார். எங்கேயிருந்தெல்லாம் நன்கொடை வந்தால் சரி எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் சரவணன் இப்படித்தான்.

அப்பொழுதுதான் அந்த யோசனை தோன்றியது. பணமாகக் கொடுப்பதற்கு பதில் நாமே துண்டுப்பிரசுரமாக அச்சடித்துக் கொடுத்துவிடலாம். ஆயிரம் பிரதி அச்சடித்தால் ஐநூறு ரூபாய் ஆகும். துண்டுப் பிரசுரத்தில் கட்சி, சின்னம், தலைவர்கள், கொடி என்ற எதுவும் இருக்காது. சரவணனின் நிழற்படம், அவரை ஏன் ஆதரிக்கிறோம் என்கிற இரண்டு பக்க கட்டுரை. அவ்வளவுதான். இதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் அரசியலும் இல்லை. நல்லதொரு மனிதரை ஆதரிக்கிறோம். அது மட்டும்தான் நோக்கம். பணத்தையும் நாம் வாங்க வேண்டியதில்லை. சரவணனுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு நம்பியூர் சிவா பிரஸ் அச்சகத்தின் வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொடுத்துவிடலாம். நன்கொடையாளர்களே நேரடியாக பணத்தை அனுப்பி வைத்துவிடலாம். கணக்கு வழக்கை பராமரித்து சரியான எண்ணிக்கைக்கு ரசீது எழுதி வைத்துக் கொள்வது உள்ளிட்ட வேலைகளை அச்சகத்தினரே பார்த்துக் கொள்வார்கள்.  நோட்டீஸ் களப்பணியாளர்களுக்குச் சென்றுவிடும்.

பிரசுரத்தில் எனது பெயர் வேண்டுமா எனத் தோன்றியது. ஆனால் ஒருவரை முன்னிறுத்தும் போது யாராவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மொட்டையான ஆதரவுக் கடிதமாக இருப்பதில் அர்த்தம் எதுவுமில்லை. என்னுடைய பெயர்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. யாருடைய பெயர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே சொன்னது போல யார் வென்றாலும் தோற்றாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இலாபமுமில்லை. ஆனால் சரவணன் மாதிரியான சிறந்த வேட்பாளர்கள் வெல்ல வேண்டும் என விரும்பித்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன். இப்பொழுது அந்தக் கட்டுரை சரவணனின் வெற்றிக்கு ஒரு படிக்கல்லாக இருக்கிறது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு நல்ல வேட்பாளரை அடையாளம் காண்பதே கூட தேர்தலில் நம்முடைய பங்களிப்புதான் என நினைக்கிறேன்.

சரவணனுக்கு ஆதரவான அலை உற்சாகத்தைத் தருகிறது. தொகுதியில் விசாரித்தால் பணம் மட்டும்தான் சரவணனுக்கு பிரச்சினையாக இருக்கிறது. மற்றபடி மக்களிடையே அவருடைய செல்வாக்கு கூடிக் கொண்டிருக்கிறது. நோட்டீஸ் அச்சடிக்கக் கூட சரவணன் கடன் வாங்கித்தான் செலவு செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அவருக்கு நன்கொடை வந்திருக்கக் கூடும். ஆனால் எதிரில் நிற்கும் செங்கோட்டையனோடு ஒப்பிடும் போது நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரையில் மலைக்கும் மடுவுக்குக்குமான வித்தியாசம் இருக்கும்.

வெளியூர்க்காரர்கள், தொகுதிவாசிகள் என யாராக இருந்தாலும் சரவணனுக்கு உதவ விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம். இதனைக் கோரிக்கை என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் விருப்பம்தான்!

vaamanikandan@gmail.com

                                                             *** 
துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கம்.

ஏன் சரவணனை ஆதரிக்கிறேன்?அரசியல்வாதிகளில் நல்லவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? எஸ்.வி. சரவணனைப் பற்றி யாராவது பேசும் போதெல்லாம் ‘நல்ல மனுஷன்’ என்பார்கள்.  ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒண்ணு’ என்று நினைத்துக் கொள்வேன். எப்பொழுதோ அவரது சொந்த ஊரான சொக்குமாரிபாளையத்து வழியாகச் செல்லும் போது கட்டியும் கட்டாமல் நிற்கும் அரைக்கட்டிடத்தைக் காட்டி ‘மேற்கொண்டு கட்ட காசு இல்லாம நிறுத்தி வெச்சிருக்காரு’ என்றார்கள். அப்பொழுதுதான் உறைத்தது அவர்கள் சொன்ன ‘நல்ல மனுஷன்’ என்ற அடைமொழிக்கான அர்த்தம். 

உள்ளாட்சி அமைப்புகளில் காசு பணத்துக்கா பஞ்சம்? 

தொட்டதெல்லாம் பொன் என்பது போல உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த வரையிலும் கை வைக்குமிடமெல்லாம் கமிஷன். அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து வருடங்கள் ஒன்றியப் பெருந்தலைவராகவும் (Panchayat Union Chairman), இன்னொரு ஐந்து வருடங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் (Panchayat Union Councillor), அடுத்த ஐந்து வருடங்கள் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் (District Panchayat Chairman) பணியாற்றியவர் சரவணன். மூன்றுமே ஒன்றை விட ஒன்று விஞ்சக் கூடிய கொழுத்த வருமானம் கொட்டக் கூடிய பதவிகள். அப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்துவிட்டு வீடு கட்டக் காசு இல்லை; அப்பன் சம்பாதித்து வைத்த வறண்ட நிலத்தைத் தவிர சொத்து ஒன்றுமில்லை; சுமாரான கதர்ச்சட்டையைத் தவிர ஆடம்பர ஆடைகள் இல்லை என்று இருக்கிற மனிதனைப் பார்த்து ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து சிறந்த வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் ஐந்து இடங்களில் சரவணன் நிச்சயமாக இடம்பிடிப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். அவ்வளவு நேர்மையான மனிதர் இந்தச் சரவணன். கிடைத்ததையெல்லாம் வாரிச் சுருட்டுகிறவர்களுக்கு மத்தியில் சரவணன் மாதிரியான அரசியல்வாதிகள் விதிவிலக்குகள். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திருடி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கண்களுக்கு சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஆசுவாசமாகத் தெரிகிறார்கள். 

ஒன்றரை வருடங்கள் கவுன்சிலராக இருந்தவனெல்லாம் மாட மாளிகையில் வாழும் போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருந்தபடி சுமாரான கதர் சட்டையுடன் வாக்குக் கேட்டுக் களத்தில் இறங்கும் சரவணனின் பெரும்பலமே அவருடைய நேர்மைதான். திரும்பிய பக்கமெல்லாம் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் நேர்மை என்ற ஒற்றைக் குணத்திற்காகவே சரவணனை ஆதரிக்கத் தோன்றுகிறது.

பதவியில் இருந்த போது நம்பியூர் பகுதியில் அவர் மேற்கொண்ட வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர்த் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் என பெரும் பட்டியலைத் தயாரிக்கலாம். அதே சமயத்தில் அவரால் முயற்சி செய்யப்பட்டு, ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகளால் காழ்ப்புணர்வால் முடக்கி வைக்கப்பட்ட கோபி கீரிப்பள்ளம் மேம்பாட்டுத் திட்டம், நகராட்சிக்கான பாதாளச் சாக்கடைத் திட்டம், வறட்சி நிவாரண நிதி முடக்கம் என்ற தனிப்பட்டியலையும் தயாரிக்க முடியும். 

சரவணனுக்கான பிரச்சாரத்தை இளைஞர்கள்  ஆரம்பித்துவிட்டார்கள். சாரி சாரியாக குவிகிறார்கள். எந்தப் பிரதிபலனும் பாராமல் சேர்ந்திருக்கிற கூட்டம் இது. தினமும் அவரைப் பற்றிய இரண்டு செய்திகளையாவது செல்போன்களின் வழியாக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். மருந்துக்கடைகளிலும், டீக்கடைகளிலும் மக்கள் சரவணனைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சரவணனுக்கு ஆதரவான இந்த அலைதான் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கப் போகிறது.

தொகுதியில் யாரிடம் பேசினாலும் ‘சரவணன் நல்ல மனுஷனப்பா’ என்கிறார்கள். இந்தக் காலத்தில் இப்படியொரு பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பதே பாதி வெற்றிதான். சரவணனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை அவசியமில்லை. இத்தகைய நேர்மையான மனிதர் ஒருவர் நிற்கும் தொகுதியில் வாக்களிப்பதே சந்தோஷமாக இருக்கிறது.  இவ்வளவு நேர்மையாளரை எப்படியும் மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பதினைந்து வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய பதவிகளில் இருந்த ஒரு மனிதர் இப்பொழுதும் வாடகைக்கு குடியிருப்பதுதான் அதிசயம். கோடிகளில் புரண்டிருக்க வாய்ப்பிருந்தும் கடன்களைச் சுமந்து கொண்டிருக்கிறார். வசதிகளில் திளைத்திருக்க வேண்டியவர் பழைய வேஷ்டி சட்டையில் வலம் வருகிறார். நினைத்துப் பார்த்தால் கண்ணீர் வருகிறது. இவரைப் போன்றவர்கள்தான் ஜெயிக்க வேண்டும். முப்பதாண்டு காலமாக எந்த வளர்ச்சிப்பணியும் நடைபெறாத கோபித் தொகுதியில் சரவணன் போன்றவர்கள் வெல்ல வேண்டும். தலையைக் குனிந்தபடியே இருப்பவர்களுக்கு மத்தியில் எழுந்து கேள்வி கேட்கிறவரை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்போம். தொகுதிக்கு வருகிற நல்ல திட்டங்களையெல்லாம் முடக்கி வைக்கிறவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக சாலையில் இறங்கி போராடுகிறவர்களைத் தேர்ந்தெடுப்போம். 

நம் தொகுதியின் நல்ல வேட்பாளரை நமக்குத் தெரிந்தவரிடமெல்லாம் அடையாளம் காட்டுவோம். தீர்ப்பை மக்கள் எழுதட்டும்.

அன்புடன்,
வா.மணிகண்டன்
நிசப்தம்.காம்