Apr 20, 2016

ஏன் ஆதரிக்கிறேன்?

கடந்த காலத்தில் சரவணனைப் பற்றி யாராவது பேசும் போதெல்லாம் ‘நல்ல மனுஷன்’ என்பார்கள். அவ்வளவுதான் எனக்கும் தெரியும். எப்பொழுதோ அவரது சொந்த ஊரான சொக்குமாரிபாளையத்து வழியாகச் செல்லும் போது கட்டியும் கட்டாமல் நிற்கும் அரைக்கட்டிடத்தைக் காட்டி ‘மேற்கொண்டு கட்ட காசு இல்லாம நிறுத்தி வெச்சிருக்காரு’ என்றார்கள். அப்பொழுதுதான் உறைத்தது அவர்கள் சொன்ன ‘நல்ல மனுஷன்’ என்ற அடைமொழிக்கான அர்த்தம். கட்டப்படாமல் நிற்கும் அந்த வீட்டை விட்டுவிட்டு சரவணன் இப்பொழுது கோபியில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வாடகை வீட்டில் குடியிருப்பது பெரிய விஷயமில்லை- ஆனால் பதினைந்து வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய பதவிகளில் இருந்த ஒரு மனிதர் அதற்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருப்பதுதான் அதிசயம். 


உள்ளாட்சி அமைப்புகளில் காசுக்கா பஞ்சம்? 

பெரிய பேரூராட்சி ஒன்றின் தலைவரிடம் ‘பிரசிடண்ட் போஸ்ட் வேணுமா? எம்.எல்.ஏ ஆகுறீங்களா?’ என்றால் ‘எனக்கு பிரெசிடெண்ட் பதவியே போதும்’ என்று பவ்யம் காட்டுவார். அது பவ்யமில்லை. எம்.எல்.ஏ பதவியை விடவும் உள்ளாட்சி அமைப்புகளில்தான் காசு கொட்டுகிறது என்று அர்த்தம். தொட்டதெல்லாம் பொன் என்பது போல உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த வரையிலும் கை வைக்குமிடமெல்லாம் கமிஷன். அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து வருடங்கள் ஒன்றியப் பெருந்தலைவராகவும் (Panchayat Union Chairma-Nambiyur), இன்னொரு ஐந்து வருடங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் (Panchayat Union Councillor-Gobi Assembly), அடுத்த ஐந்து வருடங்கள் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் (District Panchayat Chairman- Erode Dist) பணியாற்றியவர் சரவணன். மூன்றுமே ஒன்றை விட ஒன்று விஞ்சக் கூடிய கொழுத்த வருமானம் கொட்டக் கூடிய பதவிகள். அப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்துவிட்டு வீடு கட்டக் காசு இல்லை; அப்பன் சம்பாதித்து வைத்த வறண்ட நிலத்தைத் தவிர சொத்து ஒன்றுமில்லை; சுமாரான கதர்ச்சட்டையைத் தவிர ஆடம்பர ஆடைகள் இல்லை என்று இருக்கிற மனிதனைப் பார்த்து ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?

அப்படித்தான் ஆச்சரியமாக இருக்கிறது. Brutually Honest என்பார்கள் அல்லவா? அதற்கு வாழும் உதாரணம் சரவணன். சரவணனைத்தான் கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் வேட்பாளராக இறக்கியிருக்கிறார்கள். சரவணன் மாதிரியான வேட்பாளரை நிறுத்தும் போதும் தயக்கமேயில்லாமல் ஆதரிக்கத்தான் தோன்றுகிறது. நேர்மையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட எளிய மனிதர்கள் வென்று சட்டமன்றம் செல்வதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. 

காங்கிரஸூக்கு வாக்களிக்கலாமா என்கிறார்கள்? கட்சியைப் பார்த்து வாக்களித்துத்தான் இருளுக்குள்ளேயே கிடக்கிறோம். எந்தக் கட்சியில் நூறு சதவீதம் நல்லவர்கள் இருக்கிறார்கள்? அல்லது எந்தக் கட்சியில் நூறு சதவீதம் கெட்டவர்கள் இருக்கிறார்கள்? 

அதிமுகவில் செங்கோட்டையன் வேட்பாளர். கடந்த முப்பதாண்டுகளாக எங்கள் தொகுதிக்கு அவர்தான் எம்.எல்.ஏ. கடந்த ஐந்தாண்டுகளில் சட்டமன்றத்தில் கேள்வியே கேட்காத உறுப்பினர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இன்றைய சூழலில் ஜெயலலிதாவுக்கு எண்ணிக்கை மட்டும்தான் முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் இதுவரை பற்கள் பிடுங்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கத்துக்கெல்லாம் வாய்ப்பளித்திருக்கிறார். ஒருவேளை வென்றாலும் கூட இவர்கள் எல்லாம் வெறும் நெம்பர்களாக மட்டும்தான் இருக்கப் போகிறார்கள். அப்படியிருக்கும் போது எந்த விதத்தில் ஆதரிக்க முடியும்? மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முனுசாமி என்பவர் நிற்கிறார். ஆனவரைக்கும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். முழுமையான விவரங்களை ஒருவரும் சொல்லவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பார்த்தாலும் சுயேட்சைகளிலும் குறிப்பிடத்தக்கவர் என்று யாரைப் பற்றியும் தகவல் இல்லை. இப்படி தகுதியானவர்கள் யாருமே இல்லை என்பதற்காக சரவணனை ஆதரிக்கவில்லை. தமிழகத்தின் சிறந்த வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் ஐந்து இடங்களில் நிச்சயமாக இடம்பிடிப்பார் என்கிற உறுதியுடன் தான் ஆதரிக்கிறேன். சிறந்த மனிதரொருவர் களத்தில் நிற்கும் போது தயங்காமல் தோளை நீட்டுவதுதான் ஒரு சாமானியனுக்கு அழகு. நானொரு சாமானியன்.

நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம். அவர் எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தவறேதுமில்லை. சட்டமன்றத்தில் நமக்காக பேசுகிறவராக இருக்கட்டும். தனக்காக பத்து பைசாவை ஒதுக்காதவராக இருக்கட்டும். மக்களுக்கு வர வேண்டிய நிதியை திருடத் தெரியாதவராக இருக்கட்டுமே! நேர்மை ஒரு பண்பு மட்டும் போதுமா என்று கேட்கிறவர்களிடம் திருப்பிக் கேட்க ஒரு கேள்வி மட்டும்தான் இருக்கிறது. அதிகாரத்திற்கு வருபவர்களிடம் அந்த ஒரு பண்பு மட்டுமில்லையென்றால் வேறு என்னதான் இருந்தும் என்ன பயன்? 

கிடைத்ததையெல்லாம் வாரிச்சுருட்டுகிற அதிகார வர்க்கத்தில் சரவணன் மாதிரியான அரசியல்வாதிகள் விதிவிலக்குகள். இந்தக் காலத்தில் கூட இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார். அவரை வேட்பாளராக அறிவித்தவுடன் உணர்ச்சிவசப்பட்டெல்லாம் இதை எழுதவில்லை. ‘அநேகமாக இவர்தான் வேட்பாளர்’ என்று யூகங்கள் சுற்றத் துவங்கிய தருணத்திலிருந்தே விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொகுதி முழுக்கவுமே அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம்தான் இருக்கிறது. நம்பியூர் பகுதியில் அவர் மேற்கொண்ட வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர்த் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையெல்லாம் உள்ளூரிலேயே விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம் அதே சமயத்தில் அவரால் முயற்சி செய்யப்பட்டு, ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகளால் காழ்ப்புணர்வால் முடக்கி வைக்கப்பட்ட கீரிப்பள்ளம் மேம்பாட்டுத் திட்டம், வறட்சி நிவாரண நிதி முடக்கம் போன்ற பெரும் பட்டியலையும் தயாரிக்க முடிகிறது.

எனக்கு அத்தனை கட்சிகளும் ஒன்றுதான். சரவணனை ஆதரிப்பதாலும் மற்றொரு வேட்பாளரை எதிர்ப்பதாலும் எனக்கு எந்த லாபமுமில்லை. அதே சமயம் எந்த நட்டமுமில்லை. ஒன்றாம் தேதியானால் அமெரிக்காக்க்காரன் சம்பளத்தை வங்கிக்கணக்கில் என் சம்பளத்தைப் போட்டுவிடுகிறான். ‘யார் ஜெயித்தால் நமக்கென்ன’ என்று கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் ஒரு நல்ல வேட்பாளர் தேர்தலில் களமிறங்கும் போது நம்மால் முடிந்தளவு அவரைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். இல்லாததும் பொல்லாததையும் சொல்லி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் இருப்பதை மட்டும் சொன்னாலே போதும். அதைத்தான் செய்கிறேன்.

ஆனால் ஒன்று- அரசியலும் தேர்தலும் நல்ல மனிதர்களை அவ்வளவு எளிதில் வென்றுவிட அனுமதிப்பதில்லை. சூழ்ச்சிகளும் பித்தலாட்டமும் பணமும் விளையாடும் அந்தக் களத்தில் நல்லவர்களின் தலைகள் சர்வ சாதாரணமாகக் கொய்துவிடப் படலாம். அது சரவணனுக்கும் தெரிந்திருக்கும். அதே சமயம் இன்றைய நவீன யுகம் வேறு மாதிரியானது. இருந்த இடத்திலிருந்தே வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பிரச்சாரங்கள் தூள் கிளப்புகின்றன. சரவணனுக்கான பிரச்சாரத்தை இளைஞர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். தினமும் அவரைப் பற்றிய இரண்டு செய்திகளையாவது யாராவது உள்ளூர் நண்பர்கள் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். மருந்துக்கடைகளிலும், டீக்கடைகளிலும் மக்கள் சரவணனைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்குமெனில் தேர்தல் முடிவு ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்.

வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திருடி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கண்களுக்கு சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஆசுவாசமாகத் தெரிகிறார்கள். ஒன்றரை வருடங்கள் கவுன்சிலராக இருந்தவனெல்லாம் மாட மாளிகையில் வாழும் போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருந்தபடி சுமாரான கதர் சட்டையுடன் வாக்குக் கேட்டுக் களத்தில் இறங்கும் சரவணனின் பெரும்பலமே அவருடைய நேர்மைதான். திரும்பிய பக்கமெல்லாம் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் நேர்மை என்ற ஒற்றைக் குணத்திற்காகவே அவரை ஆதரிக்கத் தோன்றுகிறது. தொகுதியில் யாரிடம் பேசினாலும் அதைத்தான் சொல்கிறார்கள். ‘சரவணன் நல்ல மனுஷனப்பா’ என்று. இந்தக் காலத்தில் இப்படியொரு பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பதே பாதி வெற்றிதான். இளைஞர்களும் நடுநிலையாளர்களும் சரவணனை ஆதரிக்கிறார்கள். மக்களிடம் பேசும் போது இதைத் தெளிவாக உணர முடிகிறது.

சரவணனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். வசதி இல்லாமல் இருக்கலாம். அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அவை அவசியமுமில்லை. இத்தகைய நேர்மையான மனிதர் ஒருவர் நிற்கும் தொகுதியில் வாக்களிப்பதே சந்தோஷமாக இருக்கிறது. 

சரவணன் பற்றிய தகவலை எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புவேன். ஏனெனில் இவரைப் போன்றவர்கள் ஜெயிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் மீதான சாமானிய மனிதனின் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யும்.

என் தொகுதியின் நல்ல வேட்பாளரை நான் அடையாளம் காட்டுகிறேன். உங்கள் தொகுதியின் நல்ல வேட்பாளரை நீங்கள் அடையாளம் காட்டுங்கள். மற்றவற்றை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வா.மணிகண்டன்