Apr 14, 2016

பெருங்குட்டை

ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் அழைத்திருந்தார். கல்லூரி கோயமுத்தூரில் இருக்கிறது. அந்தக் கல்லூரியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் இந்த ஆண்டு ஐந்து மாணவர்களைச் சேர்த்துவிட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். தோராயமாக நாற்பது ஆசிரியர்கள் இருந்தால் கூட இருநூறு மாணவர்களை வளைத்துப் பிடித்துவிடலாம். மீதமிருக்கும் இடங்களை கவுன்சிலிங், அது இதுவென்று நடத்தில் இழுத்துவிடலாம் என்று கணித்திருக்கிறார்கள். எம்.ஈ, எம்.டெக் முடித்துவிட்டு பத்தாயிரத்துக்கும் பதினைந்தாயிரத்துக்கும் பேராசியர்கள் ஆகியிருப்பவர்களுக்கு இது ஒரு கொடுங்கனவு. ஆண்கள் கூட பரவாயில்லை. பெண்கள் என்ன செய்வார்கள்? திணறிக் கொண்டிருக்கிறார்கள். பல தனியார் கல்லூரிகளில் இப்பொழுது பிள்ளை பிடிக்கும் படலம் ஆரம்பமாகியிருக்கிறது. 

பிள்ளை பிடிக்கும் படலத்தின் ஓர் அங்கம்தான் பெரும்பாலான கல்லூரிகள் நடத்துகிற கல்விக் கண்காட்சிகள். வெற்றி நிச்சயம், வேத சத்தியம் மாதிரி கவர்ச்சிகரமான பெயர்கள். என்னிடம் பேசிய அந்த ஆசிரியர் அப்படித்தான் கோடு காட்டினார். ‘சார் நீங்க வந்து இஞ்சினியரிங் படிப்பு எப்படி இருக்கு? வேலை வாய்ப்புகள் என்னன்னு பொதுவா பேசுங்க...முடிக்கும் போது எங்க காலேஜ் பத்தி கொஞ்சம் நல்லபடியா சொல்லிடுங்க’ என்றார். இப்படி பேசுவதற்கு பணமும் தருகிறார்கள். போக்குவரத்துச் செலவையும் பார்த்துக் கொள்கிறார்கள். இரண்டு கல்லூரிகளில் பேசிவிட்டு வந்து ‘கல்வி ஆலோசகர்’ என்று நாமும் பெயருக்குப் பின்னால் எழுதிக் கொள்ளலாம்.

அவரவர்கள் பிரச்சினை அவரவருக்கு. கோடிக்கணக்கில் செலவு செய்து கல்லூரி கட்டியிருக்கிறார்கள். நாற்பது ஐம்பது ஆசிரியர்களை வைத்துச் சம்பளம் கொடுக்கிறார்கள். வரும்படி இல்லையென்றால் என்ன செய்வார்கள்? யோக்கியர்கள்.

பொறியியல் கல்வி எப்படி இருக்கிறது என்று பேசச் சொன்னால் நாறிக் கிடக்கிறது என்றுதான் பேசத் தோன்றுகிறது. முன்பொருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த பல கல்லூரிகள் கூட காலி பெருங்காய டப்பாக்களாகியிருக்கின்றன. பொறியியல் கல்வியை முடித்துவிட்டு வரும் முக்கால்வாசி மாணவர்களுக்கு அடிப்படையே தெரிவதில்லை என்று துண்டைப் போட்டு சத்தியம் செய்யலாம். முருகராஜ் என்ற நண்பர் மென்பொருள் நிறுவனமொன்றில் மேலாளராக இருக்கிறார். அவருக்கு கீழாக வேலை செய்கிறவர்கள் அத்தனை பேரும் கன்னடர்கள். ஒரு தமிழ் ஆளையாவது பிடித்துவிடலாம் என்று திணறிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். சமீபத்தில் ஒரு பெண்ணை நேர்காணல் செய்திருக்கிறார். ‘நீ ஏதாச்சும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லு..நான் உள்ள எடுத்துக்கிறேன்’ என்றாராம். அந்தப் பெண்ணுக்கு எதுவுமே தெரியவில்லை என்றார். எந்தக் கல்லூரி மாணவி என்றேன். சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. ஒரு காலத்தில் பிரமாதமான கல்லூரி அது. இது வெறும் சாம்பிள்தான். வேலைக்கு ஆட்களை எடுக்கும் பத்து மேலாளர்களிடம் பேசினால் ஒன்பது மேலாளர்கள் இதே கருத்தைத்தான் சொல்வார்கள்.

வளாக நேர்முகத் தேர்வுகளை (Campus Interview) நடத்துவதற்கு வராமல் பெரும்பாலான நிறுவனங்கள் தமிழ்நாட்டுக் கல்லூரிகளைத் தவிர்ப்பதற்கு காரணமே இதுதான். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் என்றாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறார்கள் என்பதை மறுக்கவே முடியாது. மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. ப்ளஸ் டூ முடித்தால் போதும் என்று கல்லூரிகளில் அள்ளியெடுத்துக் கொள்கிறார்கள். பெற்றவர்களும் ‘எம்புள்ளையும் எஞ்சினியர்’ என்று சொல்லி வங்கியில் கடனை வாங்கி சேர்த்துவிடுகிறார்கள். நான்கு வருட ஃபீஸை வசூலித்துக் கொண்டு வெறும் சக்கைகளாக மாணவர்களை வெளியில் துப்பும் கல்லூரிகளைத்தான் கை நீட்ட வேண்டும். ‘நம் பிள்ளை அறிவாளி’ என்று நினைத்துக் கொள்வதுதான் பெற்றோரின் மிகப் பெரிய மூடநம்பிக்கை. பல லட்சம் முட்டாள்களோடு சேர்த்து நம் பிள்ளையையும் முட்டாளாக அனுப்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதல் வந்துவிட்டாலே பாதி தப்பித்துவிடலாம்.

கல்விக் கண்காட்சிக்கு சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும். தங்களுடைய கல்லூரியில் கிட்டத்தட்ட அத்தனை இடங்களும் காலியாகிவிட்டதாகவும் ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே மிச்சமிருப்பதான பாவனையை உருவாக்குவார்கள். பதறுகிற பெற்றோர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பணத்தைக் கட்டிவிட வேண்டும் என்பதுதான் நோக்கம். ‘பத்தாயிரம் மட்டும் கட்டுங்க சார்..சீட் கன்பார்ம் பண்ணிடுவோம்’ என்பார்கள். கட்டிவிட்டால் அவ்வளவுதான். பக்காவான சதுரங்க வேட்டை.

பெற்றோர்களுக்கு ஒரேயொரு வேண்டுகோள்தான் - கல்விக் கண்காட்சிகள் என்ற போர்வையில் நடக்கும் தகிடுதத்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டால் போதும். இங்கே கல்வி ஆலோசகர்கள் என்ற பெயரில் சுற்றுகிறவர்களில் ஏகப்பட்ட பேர்கள் தில்லுமுல்லுகள்தான். ஐந்தாயிரம் பத்தாயிரம் கமிஷனை வாங்கிக் கொண்டு தங்களுக்கு சாதகமான கல்லூரியில் தயக்கமேயில்லாமல் தள்ளிவிட்டுவிடுவார்கள். போக்குவரத்து பஞ்சப்படியை வாங்கிக் கொண்டு ‘ஆஹா ஓஹோ’வென்று பேசுவார்கள்’. இவர்களைப் பற்றியே தனிக்கட்டுரை எழுத முடியும். அதனால் டுபாக்கூர் கல்வி ஆலோசகர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் அதிலும் கூட கவனமாகத்தான் இருக்க வேண்டியிருக்கும்.

இன்னமும் தேர்வு முடிவுகள் வருவதற்கான அவகாசம் இருக்கிறது. மிகத் தெளிவான அலசலைச் செய்ய முடியும். பொறியியல் மட்டுமே படிப்பில்லை. ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. தொழில் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், மருத்துவத்துறைக்கு உதவும்படியான படிப்புகள் என்று மிகப்பெரிய பட்டியல் ஒன்றைத் தயாரித்துவிட முடியும். கண்களை சற்றே அகலத் திறக்க வேண்டியிருக்கும். விதவிதமான படிப்புகள் குறித்தான அலசல்களைத் தொடங்குவதற்கு இது சரியான தருணம். ப்ளஸ் டூ முடிக்கிற மாணவர்களையே இதைச் செய்யச் சொல்லலாம். ஒவ்வொரு படிப்பிலும் என்ன சொல்லித் தருகிறார்கள், வேலை வாய்ப்புகள் என்ன, எவ்வளவு செலவாகும் என்பது குறித்து முழுமையான பட்டியலைத் தயார் செய்து கொள்ளலாம். ஒருவேளை மாணவர்களால் தகவல்களைத் திரட்ட முடியவில்லை என்றால் கல்வி வழிகாட்டிக்கு என்றே நிறைய இதழ்கள் வருகின்றன அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆசிரியர்களிடம் பேசிப் பார்க்கலாம். டுபாக்கூர்களைத் தவிர்த்துவிட்டு தகுதியான கல்வி ஆலோசகர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம்.

சரியான படிப்பைக் கண்டறிதல், பொருத்தமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல் போன்றவையெல்லாம் முடியவே முடியாத காரியமில்லை. தேர்வு முடிவுகள் வரும் வரைக்கும் காத்திருந்தால்தான் பிரச்சினை. முடிவுகள் வந்தவுடன் தேவையில்லாத பதற்றம். இப்பொழுதிருந்தே சற்றே மெனக்கெட்டால் போதும். மிகத் தெளிவான முடிவுக்கு வந்துவிடலாம். எல்லோரும் குட்டையில் குதிக்கிறார்கள் என்பதால் நாமும் கல்லைக் கட்டிக் கொண்டு அதே குட்டையில் விழ வேண்டியதில்லை.

கல்வி, கல்லூரி சேர்க்கை சம்பந்தமாக சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருப்பின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். எனக்குத் தெரியவில்லையென்றாலும் கூட விசாரித்து தகவல்களைச் சேகரித்துக் கொடுத்துவிடுகிறேன். பொதுவெளியில் பேச ஆரம்பித்தால் யாருக்காவது நிச்சயமாகப் பயன்படும்.