Apr 13, 2016

மனம்

தென்றல் நேர்காணல் வாசித்தேன். எளிமையாகவும் அதே சமயம் நேர்மையாகவும் இருந்தது. ஒரு கேள்வி கேட்க வேண்டும் எனத் தோன்றியது. செய்து கொண்டிருக்கும் பணி மனத்திருப்தி அளிப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அதே நேர்காணலில் அறக்கட்டளை வழியாக உதவி செய்யப்பட்ட ராகவர்ஷினி என்ற குழந்தை இறந்த செய்தியைப் பதிந்திருந்தார்கள். இத்தகைய செய்திகளைக் கேள்விப்படும் போது வருத்தம் இருக்காதா? இத்தகைய தோல்விகள் எப்படி மனத் திருப்தியைக் கொடுக்க முடியும்?

                                                                                                                                  -ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்.

ராகவர்ஷினி என்கிற குழந்தையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அப்பொழுது எழுபதாயிரம் ரூபாய்க்கான காசோலையை அந்தக் குழந்தையின் தந்தையிடம் வழங்கியிருந்தேன். இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சில சட்டச் சிக்கல்கள் இருக்கிறது. அனுமதி வாங்குதலில் ஏற்பட்ட தாமதம், உடல்நிலை நசிவு போன்ற காரணங்களால் அந்தக் குழந்தை இறந்து போனது. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

இது ஒரு சம்பவம் மட்டுமில்லை. நிறைய இருக்கின்றன. 

கடந்த ஒன்பதாம் தேதி சென்னையிலிருந்து கிளம்பியிருந்தேன். சென்னை வரும் சமயங்களில் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸில் புத்தகம் ஏதாவது வாங்கிக் கொண்டு அசோக் பில்லர் வரைக்கும் நடந்து வருவது வழக்கம். அன்றைய தினம் தேவர் மெஸ்ஸில் அமர்ந்திருந்தேன். சொல்லியிருந்த கொத்து புரோட்டா வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருந்தது. அழகேசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். சிவரஞ்சனி மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதுதான் செய்தி. சிவரஞ்சனியின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் அனுப்பி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. அழகேசன்தான் சிவரஞ்சனியின் விவரங்களை எல்லாம் அனுப்பி ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்து கொடுத்தார். சிவரஞ்சனிக்குப் புற்றுநோய். கீமோதெரபி முடிந்து உடலைத் தேற்றுவதற்குள் மூளைச்சாவு. அடுத்த நாள் எனக்குப் பிறந்தநாள். இந்தச் செய்தி வரும் வரைக்கும் அந்தச் சந்தோஷத்தில் இருந்தேன். ‘அடுத்த படத்தில் வேலை செய்யுங்க’ என்று இயக்குநர் சொல்லியிருந்தது மனதினை வேறொரு தளத்தில் நிறுத்தியிருந்தது. சிவரஞ்சனி குறித்தான செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு எப்படி சாப்பிட முடியும்? சிவரஞ்சனி விட்டுச் சென்ற பச்சிளம் குழந்தையின் முகம்தான் நினைவிலேயே மிதந்து கொண்டிருந்தது. அழகேசனிடம் ‘நான் ரொம்ப சென்சிடிவ்...இது பத்தி இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல வேண்டாம்..தனியா இருக்கேன்...உடைஞ்சுடுவேன்’ என்று பதில் அனுப்பிவிட்டு பையைத் தூக்கி தோளில் போட்டுக் கிளம்பிவிட்டேன். பயணம் முழுவதும் சிவரஞ்சனிக்காகத்தான் நிறைய பிரார்த்தித்தேன். ஆனால் அடுத்த நாள் காலையில் உயிர் பிரிந்துவிட்டதாகச் செய்தி வந்தது.

இன்னொரு சம்பவம். 

அவருடைய பெயர் வேண்டாம். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணி புரிகிறார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றார். விவரங்களை அனுப்பி வைக்கச் சொன்னேன். மருத்துவமனையில் விவரங்களைத் தர முடியாது என்கிறார்கள் என்றார். விவரம் இல்லாவிட்டால் எப்படி உதவ முடியும் என்று கேட்ட பிறகு ஹக்கீம் சையத் ரப்பானி வைத்தியசாலா என்ற இடத்திலிருந்து மூன்றாயிரத்து அறுநூறு ரூபாய் செலவு ஆகும் என்று கடிதம் வாங்கி அனுப்பியிருந்தார். ‘இந்த சிறு தொகையை உங்களால் சமாளிக்க முடியாதா சார்?’ என்று கேட்டேன். தினசரி தொந்தரவு. அழைப்பை எடுக்கவில்லை என்றால் இன்னொரு எண்ணிலிருந்து அழைப்பார். எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. ‘அப்படின்னா இது வேண்டாம். பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுங்க’ என்கிறார். ஏதாவதொருவிதத்தில் உதவி வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாகத் தெரிந்தது. பையன் தனியார் நிறுவனத்தில் விஸ்காம் படித்துக் கொண்டிருக்கிறான். தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவ முடியாது என்று சொன்னாலும் கேட்பதில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று வீட்டில் அலைபேசியை வைத்துவிட்டு வெளியில் சென்றிருந்தேன். இவர் அழைத்திருக்கிறார். வேணி எடுத்திருக்கிறாள். தாறுமாறாகத் திட்டினாராம். அவரை அழைத்துக் கேட்கிறேன் என்று சொன்னால் வீட்டில் இருப்பவர்கள் ‘அவருக்கு என்ன பிரச்சினையோ...விடு’ என்றார்கள். விட்டுவிட்டேன்.

சமீபத்தில் ஒரு மாணவர் பணத்தைக் கடனாக வாங்கிவிட்டு பதில் கூட சொல்லாதது குறித்து எழுதியிருந்தேன். இப்படிக் கலவையான அனுபவங்கள். எல்லாவற்றையும் எழுதுவதில்லை.

தோல்விகளும் வசைகளும் பாராட்டுகளும் சாபங்களும் துக்கங்களும் கலந்துதான் கிடைக்கிறது. அத்தனையும் சந்தோஷமான செய்தியாக இருந்தால் மட்டுமே மனத்திருப்தி கிடைக்குமென்றால் எந்தக் காலத்திலும் அதை அடைய முடியாது- அதை எந்த வேலையிலும் அடைய முடியாது. கலவையில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். பத்து பேருக்கு உதவினால் இரண்டு பேர் நன்றாக இருந்தாலும் கூட திருப்திதானே? அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன். அந்த திருப்தி இருந்தால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்க்க முடியும். இல்லையென்றால் சுணங்கி அமர்ந்துவிடுவோம். இது எல்லோருக்குமே பொருந்தும்.

அன்புடன்,
மணிகண்டன்