Apr 12, 2016

கட்சியா? வேட்பாளரா?

திமுகவா? அதிமுகவா? இந்தக் கேள்வியை வைத்துக் கொண்டு இணையத்தில் அலைந்தால் மண்டை காய்ந்துவிடும். அதிமுகவுக்கு எதிர்ப்பே இல்லாதது போல அம்மா கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். திமுகவின் ராஜதந்திரம் பலித்துக் கொண்டிருப்பதாக ஐயா கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள். மாற்று சக்திதான் வெல்லும் என்றும் ம.ந.கூவினர் பேசுகிறார்கள். குழப்பிவிட்டு கும்மியடிக்கிறார்கள். உண்மையில் சூழல் அப்படியில்லை. சாமானிய மனிதர்கள் என்று நாம் கருதுகிற கட்சி சார்பற்ற மனிதர்கள் பெரும்பாலான மனிதர்கள் ஒரேவிதமான பதிலைத்தான் சொல்கிறார்கள். ஜெயலலிதா அரசின் மீது கடும் அதிருப்தியை வைத்திருக்கிறார்கள். ஆனால் ‘மக்கள்கிட்ட அந்தம்மாவுக்கு அதிருப்தியில்லை’ என்று ஆரம்பிக்கிறார்கள். 

‘உங்களுக்கு அதிருப்தி இல்லையா?’ என்று குறுக்குக் கேள்வியைக் கேட்கும் போது ‘எனக்கு அதிருப்தி இருக்கு’ என்கிறார்கள். பிறகு எப்படி மக்கள் மத்தியில் ஜெயாவுக்கு அதிருப்தியில்லை என்கிறார்கள்? ஊடகங்கள்தான் மிக முக்கியமான காரணம். அதிமுக ஆட்சியின் மீதான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக எழுதக் கூடிய கட்சி சார்பற்ற ஊடகங்கள் கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். அதனால் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை போன்றதொரு மாயை உருவாகியிருக்கிறது. அரசு செயல்படவில்லை, பால், பேருந்து, மின்கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன, ஊழல் மலிந்திருந்தது, டாஸ்மாக் கட்டுப்படுத்தப்படவேயில்லை, தொழில்துறையில் நிலவிய மந்தத் தன்மை என பல காரணங்களினால் இந்த அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புணர்வு இருந்தாலும் அதை யாரும் வெளிப்படையாக எழுதுவதும் பேசுவதுமில்லை. ‘அந்தம்மாவை பகைச்சுக்க முடியாது’ என்கிற மனநிலைதான் புரையோடிக் கிடக்கிறது. அதனால்தான் அதிமுகதான் திரும்பவும் ஆட்சியமைக்கும் என்ற நினைப்பு உருவாகியிருக்கிறது. 

உண்மையில் இந்த நினைப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘அவங்க மேல அதிருப்தி இல்ல’ ‘அவங்க பணம் செலவு பண்ணுவாங்க’ ‘அவங்களுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறிடும்’ இப்படி ஆளாளுக்கு பேசுகிறார்கள். இந்த பிம்பங்களை திமுகவும் உடைக்கப்போவதில்லை ம.ந.கூவும் உடைக்கப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. அதிமுகவின் மீதான எதிர்ப்புணர்வு ஒரு பக்கம் என்றால் திமுகவின் மீது நம்பிக்கை உருவாகியிருக்கவில்லை என்பதும் நிஜம். கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் மத்தியில் தனது நம்பிக்கையை நிலைநாட்டும் வேலையை திமுக செய்திருக்கவில்லை. கடந்த நான்கைந்து சட்டமன்றத் தேர்தல்களாக நிலவிய ‘இது இல்லைன்னா அது’ என்கிற மனநிலை இன்றைக்கு இல்லை. குழப்பமான மனநிலைதான். ‘இது சரியில்லை...ஆனா வேற வழியில்லை’ என்கிற மனநிலை என்று வேண்டுமானால் சொல்ல முடியும். 

தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கக் கூடும். ஏதாவது அலையடித்தால் இந்த குழப்பமான மனநிலையில் மாறுதல் உண்டாகும் வாய்ப்பிருக்கிறது. அந்த அலைக்குத்தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்சியும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட அலை எதுவும் உருவாகி விடக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். 1989 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் அல்லது அவர்கள் என்று பெருமொத்தமாக தமிழக மக்கள் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். வேட்பாளரைப் பார்ப்பதைவிடவும் ‘இந்த முறை திமுக ஜெயித்துவிடும் அதனால் திமுக வேட்பாளருக்கு வாக்களிப்போம்’ என்றுதான் குத்தினார்கள். வெல்லக் கூடிய கட்சியில் வேட்பாளராக நின்றவர்கள் எம்.எல்.ஏக்கள் ஆனார்கள். அந்த நிலை இனிமேலாவது மாறட்டும். ‘இந்த அஞ்சு வருஷம் அவங்களா...அடுத்த அஞ்சு வருஷம் நாம்தான்’ என்கிற திமிரின் மீது சம்மட்டி அடி விழ வேண்டும். இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் குழப்பமான சூழலே நிலவட்டும். தவறு எதுவுமில்லை. கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல் வேட்பாளரைப் பார்த்து வாக்களிப்பதற்கான மனநிலை மக்களிடையே உருவாவதற்கு ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையட்டும்.

எங்கள் தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஐந்து வருடங்களாக டம்மியாக்கி வைக்கப்பட்டிருந்த அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டவுடன் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். வண்டி நிறைய சால்வைகளை நிரப்பிக் கொண்டு எதிர்ப்படுகிறவர்களுக்கெல்லம் போர்த்திவிட்டு ‘மாப்பிள்ளை நல்லா இருக்கியா?’ ‘பங்காளிங்ககிட்டயெல்லாம் சொல்லிடு’ என்கிறார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களில் இப்படி வாய் நிறையப் பேசுவதைத் தவிர வேறு எதையும் செய்யாதவர் அவர். பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வாசலில் அம்மையாருக்காக காத்திருந்த போது வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தனிப்பட்ட முறையில் என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த முறை நேரில் பார்த்த போது அம்மாவிடம் (இது எங்கள் அம்மா) ‘ஜெயில்ல என் கூடவேதான் இருந்தான்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அப்பாவுக்கு செங்கோட்டையன் என்றால் பாசம். ‘அவருக்கு எதிரா எதையும் எழுதிடாத’ என்றார். அது சரி என்று நினைத்துக் கொண்டேன்.

கோபி தொகுதி அவரைத் திரும்பத் திரும்பச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. தொழிற்சாலை, அரசுக் கல்லூரி, பாலிடெக்னிக், வேளாண்மை தொழில் வளர்ச்சிக்கான கட்டிடங்கள் என்று எதையுமே செய்யாத அரசியல்வாதியாகவே காலத்தை ஓட்டிவிட்டார். ஆனால் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார். அது மட்டும் போதுமா? நீண்டகாலத் தொலை நோக்குப் பார்வை இல்லாத எந்தவொரு மனிதரையும் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். சரவணன் நம்பியூருக்குப் பக்கத்தில் சொக்குமாரிபாளையத்துக்காரர். ஐந்து வருடங்கள் ஈரோடு மாவட்ட சேர்மேனாக இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பாக அந்த ஊர் வழியாகச் செல்லும் போது ‘இதான் சேர்மேனோட வீடு’ என்றார்கள். எட்டிப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. கால்வாசி கட்டப்பட்டு அப்படியே கைவிடப்பட்ட வீடு அது. பணம் இல்லாமல் கட்டி முடிக்காமல் விட்டுவிட்டதாகச் சொன்னார்கள். இத்தனைக்கும் அப்பொழுது அவர் பதவியில் இருந்தார். சாதாரண கவுன்சிலர் கூட பங்களாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சரவணன் அவ்வளவு ‘பிழைக்கத் தெரியாத மனுஷன்’. அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் சரவணன் மாதிரியான நேர்மையாளர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.  

‘சரவணனுக்கு வாய்ப்பிருக்குங்களா?’ என்று உள்ளூரில் கேட்டால் பெரும்மொத்தமாக எதைச் சொல்கிறார்களோ அதையேதான் சொல்கிறார்கள். ‘சரவணன் நல்ல மனுஷன்....ஓட்டு வாங்குவாரு...ஆனா ஜெயிக்கற அளவுக்கு செலவு பண்ண சரவணன்கிட்ட பணம் இல்லைங்க...’ - பணம் இருந்தால்தான் வெல்ல முடியும் என்கிற மனநிலைக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம். எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சரி. அவனிடம் பணம் வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு அவமானம்? இந்த அவமானத்தை துடைத்தாலே நம்முடைய ஜனநாயகம் ஓரளவு வெற்றியடைந்தது மாதிரிதான். 

இப்பொழுதெல்லாம் நேர்மையும் ஒழுக்கமும் இருக்கிற மனிதர்கள் யாருமே இல்லை என்கிறோம். அப்படி ஒரு ஆளைக் கண்டுபிடித்துவிட்டால் ‘அந்த ஆளுகிட்ட பணம் இல்லை’ என்கிறோம். முரட்டுத்தனமாக கட்சி அரசியல் பேசாமல் வேட்பாளர்களின் அடிப்படையில் நம் வாக்கு இருக்கட்டும். எந்தத் தொகுதியாக இருந்தாலும் சரி- எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே! கட்சியைத் தாண்டி வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கும் மனநிலை உருவாவதற்கான வாய்ப்பு அமையட்டும்.

சரவணன் மாதிரியான ஆட்கள் நின்றால் அவருக்கு வாக்களிப்பதில் தயக்கம் எதுவுமில்லை. ஒருவேளை காங்கிரஸில் வேறு யாரையாவது நிறுத்தினால்? கஷ்டம்தான். வேறு வேட்பாளர்களைத் தேடிப் பார்க்கலாம். கிடைக்கவில்லையென்றால் வாக்களிப்பதற்காக பெங்களூரிலிருந்து ஊருக்குச் சென்று வருகிற செலவை மிச்சப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.