Apr 11, 2016

சினிமா

ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சமீபகாலமாக இரண்டு திரை இயக்குநர்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இயக்குநர் யார், என்ன படம் என்பதையெல்லாம் இப்பொழுதே வெளியில் சொல்லலாமா என்று தெரியவில்லை. இரண்டு இயக்குநர்களையும் சந்திக்கப் போகிறேன் என்பது முந்தின நாள் வரைக்கும் தெரியாது. 

விகடனில் வாட்ஸப் வக்கிரங்கள் என்ற ஒரு கட்டுரை வந்திருந்த சமயத்தில் உதவி இயக்குநர் வேல்முருகன் அழைத்து ‘நான் இன்னாருடைய உதவியாளர் பேசுகிறேன். நிசப்தம் வாசிப்பதுண்டு. எங்கள் இயக்குநரிடம் உங்களைப் பற்றி பேசியிருக்கிறேன். சந்திக்க விரும்புகிறார்’ என்றார்.  அந்த வார இறுதியில் சென்னையில்தான் இருந்தேன். ‘நாளைக்கு பார்க்கலாமா?’ என்று கேட்டுவிட்டு வடபழனியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். முதல் சந்திப்பில் பொதுவான விஷயங்களைத்தான் பேசினோம். பிறகு அவ்வப்பொழுது பேசிக் கொண்டோம். இயக்குநர் நிசப்தம் வாசிக்கத் தொடங்கினார். அவருடைய முந்தைய படத்தைத்தான் தெலுங்கில் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நேரடி தெலுங்குப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இரும்பு அடிக்கிற இடத்தில் எலிப்புழுக்கைக்கு என்ன வேலை என்று உங்களுக்கு வரக் கூடிய அதே சந்தேகம்தான் எனக்கும். தெலுங்கு அரைகுறையாகத்தான் தெரியும். ‘நீங்க உங்க நக்கல் தொனியை வைத்துக் கொண்டு தமிழிலேயே எழுதிக் கொடுங்க..அந்த inputsஐ தெலுங்கில் பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்.  எல்லாவற்றிலும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். தெலுங்காக இருந்தால் என்ன? மலையாளமாக இருந்தால் என்ன? வருகிற வாய்ப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும். எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதிலேயே இன்னமும் நிறைய வேலை இருக்கிறது. திரும்பத் திரும்ப சரி செய்து கொடுத்தபடியே இருக்கிறேன்.

மற்றொரு இயக்குநர் தமிழின் முக்கியமான இயக்குநர். அவர் இயக்கியவற்றில் பெரும்பாலானவை கவனிக்கப்பட்ட அல்லது வெற்றியடைந்த படங்கள். சில வாரங்களுக்கு முன்பாக வேறொரு வேலையாக சென்னையிலிருந்த போது மகுடபதியை அழைத்து ‘சென்னை வந்திருக்கேன்...நீங்க எங்க இருக்கீங்க?’ என்றேன். மகுடபதி நல்ல நண்பர். இயக்குநருக்கும் நண்பர். மகுடபதி என்னிடம்‘டிஸ்கவரி புக் பேலஸூக்கு வர முடியுமா?’ என்றார். அந்தச் சந்திப்பின் போது இயக்குநரும் இருந்தார். வெகு எளிமையாகப் பேசிய இயக்குநர் ஒற்றை வரியைச் சொல்லி அது குறித்து யோசிக்கச் சொல்லியிருந்தார். ஊருக்கு வந்த பிறகு அலைபேசி வழியாக அவரிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். பெரும்பாலானவை மண்டைக்குள் புதைத்து வைத்திருந்த உண்மைச் சம்பவங்கள் அல்லது நிசப்தத்தில் எழுதியவற்றின் நீட்சி. அவருக்கு பிடித்திருந்தது. வளசரவாக்கத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு ‘நீங்க இந்தப் படத்துல வேலை செய்யுங்க’ என்று சொல்லி பணம் கொடுத்தார். ஒற்றைத் தாளை மட்டும் வாங்கிக் கொண்டேன். அதே கணக்குத்தான். பணம் பிரதானமில்லை. ‘உங்ககிட்ட வேலை செய்வதுதான் முக்கியம். நீங்க படம் ஆரம்பிக்கும் போது சம்பளம் கொடுங்க’ என்று சொல்லிவிட்டு வெகு தீவிரமாக தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். கதை விவாதத்தில் கலந்து கொள்கிறேன். ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு மொத்தக் கதையையும் அடித்துத் திருத்துகிற இது வித்தியாசமான அனுபவம்.

உண்மையைச் சொன்னால் இந்தப் படங்களில் என்னுடைய வேலை என்னவாக இருக்கும் என்பதெல்லாம் இப்பொழுது தெரியவில்லை. அது குறித்தான யோசனையும் பெரிதாக இல்லை. கற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதான். பணம், புகழ் உள்ளிட்டற்றவற்றைக் கணக்குப் போட வேண்டியதில்லை. சினிமாவைப் பொறுத்தவரையில் எதுவுமே நிகழ்ந்தால் மட்டுமே உண்மை. திரையில் பெயர் மின்னுகிற வரைக்கும் எதுவுமே கற்பனை மாத்திரம்தான் என்பதால் இப்பொழுதே இது குறித்துப் பேச வேண்டியதில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் இதை நிசப்தம் தளத்தில் சொல்லிவிட வேண்டும் எனத் தோன்றியது. இங்கு எழுதுகிற பயிற்சியும் அதன் வழியாகக் கிடைக்கக் கூடிய நண்பர்களும் வாசகர்களும்தான் எனது பாதையையும் திசையையும் உருவாக்கிறார்கள் என்று சொன்னால் அதில் ஒரு சதவீதம் கூட மிகைப்படுத்துதல் இருக்க முடியாது. எழுத்து, அறக்கட்டளை, சினிமா என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நிசப்தம் வழியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் இதன் வழியாகத்தான் அறிவிக்க வேண்டும்.

நேற்று எனக்குப் பிறந்தநாள். 

முப்பத்து நான்கு வயது முடிகிறது. இதுவரையிலும் கிடைத்திருப்பனவற்றில் பெரும்பாலானவை நான் எதிர்பார்க்காதவை, தகுதிக்கு மிஞ்சியவைதான். சாதனையைச் செய்துவிட்டதான அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவு என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் சில காரியங்கள் நம்மையும் மீறி நடந்து கொண்டேயிருக்கும். கிடைக்கிற வாய்ப்புகளும் கூட அப்படித்தான். யாராவது ‘உன் எதிர்காலத் திட்டம் என்ன?’ என்று கேட்டால் என்னால் பதில் சொல்லவே முடியாது. செய்கிற வேலையை அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருப்போம். எது நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடந்தே தீரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. 

இந்த வாரம் சென்னை புத்தகக்கடையில் சந்தித்த நண்பரொருவர் ‘எப்படி குடும்பம், வேலை, எழுத்து, அறக்கட்டளைன்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்குறீங்க?’ என்றார். உண்மையைச் சொன்னால் நிற்க நேரமில்லாமல் சுழல்வதைப் போன்ற சந்தோஷம் வேறில்லை. அதை அனுபவித்துப் பார்த்த பிறகு ஒரு நாள் வேலையில்லாமல் இருப்பது கூட குற்றவுணர்ச்சியை உருவாக்குகிறது. அதனால் இன்னமும் இருமடங்கு வேலை இருந்தாலும் கூட சந்தோஷமாகத்தான் செய்வேன் என நினைக்கிறேன். இந்த வயதில் சுழலாமல் எந்த வயதில் சுழல்வது?

இந்தப் பிறந்தநாள் எனக்கான இன்னொரு திசையையும் காட்டுவதாகத்தான் தெரிகிறது. பயணித்துப் பார்த்துவிடலாம். முழுமையான விவரங்களை தக்க தருணத்தில் சொல்கிறேன்.

எதிர்மறையான குணங்கள் சூழ்ந்த இந்த உலகில் ‘இவன் நல்லா இருக்கட்டும்’ என்று நான்கு பேராவது நினைப்பதுதான் நம்மைத் தாங்கிக் கொள்கிறது. அப்படியானவர்களைச் சம்பாதித்து வைத்தால் போதும். மற்றவை தானாக நடக்கும்.

வாழ்த்திய நண்பர்களுக்கும், ஆசிர்வதித்த பெரியவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. உடனிருக்கும் அத்தனை பேருக்கும் என் அன்பும் பிரியங்களும்.