சில தகவல்கள் மிகச் சாதாரணமானதாக இருக்கக் கூடும். ஆனால் அவை தரக் கூடிய உற்சாகம் ஆயுள் முழுவதற்குமானது. சமீபத்தில் ஒரு தகவல். இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பாக எழுத்தாளர் சுஜாதா பெங்களூரில் பணியாற்றிய அதே கட்டிடத்தில்தான் எங்கள் அலுவலகம் செயல்படுகிறது. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து தினமும் தலைக்குக் குளித்து வெகு பக்தியாகத்தான் அலுவலகத்துக்கே வருகிறேன். அந்த நெட்டைக்கால் மனிதரின் காற்று எப்படியும் தூக்கிவிட்டுவிடும் என்கிற நம்பிக்கைதான். ஆரம்பத்தில் இந்த விஷயம் தெரியாது. ஜலஹள்ளி பக்கத்தில் எங்கேயோ இருந்தார் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாவண்ணன்தான் சொன்னார். எழுத்தாளர் பாவண்ணன் வீடு எங்கள் அலுவலகத்திலிருந்து வெகு பக்கம். தொலைத் தொடர்புத் துறையில் நல்ல பதவியில் இருக்கிறார். ஆனால் அநியாயத்துக்கு நல்ல மனிதர். பேருந்து பிடித்துத்தான் அலுவலகத்துக்குச் செல்வார். அலுவலகம் ஒரு கோடியில் இருக்கிறது. வீடு மறுகோடியில் இருக்கிறது. ‘சார் இங்க இருந்து பஸ்ல போறீங்களா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்வார். பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமயத்தில் இரண்டு மூன்று பேருந்து மாறி சென்று வருவதை நினைத்தாலே தலை கிறுகிறுக்கிறது. எப்படியிருந்தாலும் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்தையேனும் மாநகரப் பேருந்திலேயே கழிக்கக் கூடிய புண்ணியாத்மா அவர்.
சில நாட்களுக்கு முன்பாக ஃபோனில் பேசிய போது ‘சார் இப்போ உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே வந்துட்டேன்’ என்றேன்.
‘அப்படியா? எந்த பில்டிங்?’ என்றார்.
‘சங்கர்நாராயணன் பில்டிங் சார்’.
‘அங்கதான் நம்ம சுஜாதா வேலை செஞ்சாரு..தெரியுமா?’ என்றார். வெகு சந்தோஷம். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவு சங்கர்நாராயணன் கட்டிடத்தில் செயல்பட்டிருக்கிறது. அப்பொழுது ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் தினமும் வந்து சென்றிருக்கிறார். பாவண்ணன் உள்ளிட்டவர்கள் சுஜாதாவை மாலை வேளைகளில் சந்தித்து உரையாடுவார்களாம். அவ்வளவுதான். இத்தகையவொரு செய்தி போதாதா? வாழ்நாள் முழுமைக்கும் சொல்லிக் கொண்டே திரியலாம். திரிவேன்.
எனக்கு சுஜாதா மீது அபரிமிதமான மரியாதை உண்டு. மரியாதை என்பதைவிடவும் craze என்று சொல்லலாம். ஆரம்பத்தில் வேணியிடம் அவரைப் பற்றி நிறையப் பேசுவதுண்டு. அவளுக்கும் அது பிடித்திருந்தது. ஆனால் தினகரன் வசந்தத்தில் அவருடைய மனைவியின் நேர்காணல் வந்த பிறகு அப்படியே நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. அதில் திருமதி சுஜாதா தனது கணவர் குறித்து விரிவாகப் பேசியிருந்தார். ‘படிப்பது, எழுதுவது என எப்போதும் தனது வட்டத்திற்குள்ளேயே அவர் இருந்ததாகவும் குடும்பத்துக்கான அன்பை அவர் வெளிப்படுத்தியதே இல்லை’ என்று சொல்லியதுதான் பெரும் பிரச்சினையாகிவிட்டது. தெரியாத்தனமாக அந்த இதழை வேணியிடம் கொடுத்து மிகப்பெரிய தவறைச் செய்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு முகத்தில் ஈயாடாமலேயே திரிந்தாள். தனக்காகவும் மகிக்காகவும் ஒவ்வொரு நாளும் கால அட்டவணையிட்டு நேரம் ஒதுக்க வேண்டும் என்கிற நிபந்தனையை விதித்தாள். வார இறுதி நாட்களில் ஒரு நாளாவது கணினியைத் தொடவே கூடாது என்றாள். ஆரம்பத்தில் புரியவில்லை. தன்னையும் தன் மகனையும் விட்டுவிட்டு இவனும் எழுத்தின் பக்கம் சாய்ந்துவிடுவான் என்கிற பயம் அவளுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது தெளிய சில நாட்கள் பிடித்தது. ‘பெரிய எழுத்தாளன் ஆகிறதைவிடவும் குடும்பம் முக்கியம்’ என்று சொல்லத் தொடங்கினாள்.
எவ்வளவோ முயற்சி செய்த பிறகும் அந்த எண்ணத்தை மாற்ற முடிந்ததில்லை. நான் செய்கிற அத்தனை காரியங்களுக்கும் அனுமதியுண்டு. சிரித்துக் கொண்டேதான் சரி என்பாள். ஆனால் திடீரென்று எப்பொழுதாவது ‘எங்களுக்குன்னு நேரம் ஒதுக்குங்க’ என்பாள். ஒரு முறை தவறான எண்ணத்தை பெண்களுக்கு உருவாக்கிவிட்டால் அதை எந்தக் காலத்திலும் மாற்ற முடிவதேயில்லை. எல்லாம் சுஜாதாவால் வந்தது என நினைத்துக் கொள்வதுண்டு. அதன் பிறகு சுஜாதா பற்றி எதுவுமே பேசியதில்லை. எதுக்கு வம்பு?
இதையெல்லாம் சொல்வதால் சுஜாதாவுடன் ஒப்பிட்டுக் கொள்வதாக அர்த்தமில்லை. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அது. ஆனாலும் உள்ளூர ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்? அந்த சந்தோஷம்தான். இந்தக் கட்டிடத்தில் முப்பது ஆண்டுகளாக வேலை செய்யும் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடிச் சலித்துவிட்டது. அப்படி யாருமே இல்லை. செக்யூரிட்டி வேலை செய்பவர்களிலிருந்து மேலாளர் வரைக்கும் அத்தனை பேரும் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பக்கத்தில் கடலை விற்கிறவர் பதினாறு ஆண்டுகளாக இதே இடத்தில் விற்கிறாராம். ‘சுஜாதா தெரியுமாங்க?’ என்றேன். மேலும் கீழும் பார்த்தார். ‘பி.ஈ.எல் கம்பெனி இந்தக் கட்டிடத்தில் இருந்துச்சா?’ என்றேன். ஞாபகமில்லை என்றார். விட்டுவிட்டேன். சுஜாதாவைத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதரைக் கண்டுபிடித்து என்னவாகப் போகிறது? ஒன்றும் ஆகப் போவதில்லை.
க்யூரியாசிட்டிதான்.
இனிமேல் சுஜாதாவின் ஆர்வலர்கள் யாராவது இந்தப் பக்கமாக வரும்போது ‘அட’ என்று தலையை வெளியில் நீட்டி எட்டிப் பார்க்கக் கூடும். சுஜாதாவின் பெங்களூர் குறிப்புகளை வாசிக்கிறவர்களுக்கு இந்தக் கட்டிடத்தின் பெயர் நினைவில் வந்து போகக் கூடும். சொல்லி வைத்துவிடலாம்.
எழுத்தாளன் தான் வாழ்கிற போது எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக் கூடும். தனது எழுத்துக்காக சராசரி மனிதனின் சந்தோஷங்களையெல்லாம் இழந்திருக்கலாம். ஆனால் அவனுடைய எழுத்து நின்றுவிடும் போது அவனைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் பொக்கிஷமாகிவிடுகிறது. சுஜாதா அத்தகைய எழுத்தாளர். அவர் நடந்து சென்றிருப்பதற்கான வாய்ப்புள்ள பாதைகளில் நடக்கும் போது நைலான் கயிறும், நகரமும், ஃபிலிமோத்ஸவ்வும் நினைவில் வந்து போகின்றன. அதே பாதையில் கோடிக்கணக்கான பாதங்கள் பதிந்திருக்கக் கூடும்தான். ஆனால் சுஜாதா என்கிற அந்த ஒற்றை நாடி மனிதனின் பாதச்சுவடுகளை மட்டும் கால் நூற்றாண்டுக்குப் பிறகும் ஒருவனைத் தேடச் செய்வதுதான் எழுத்தாளனின் வெற்றி என நினைக்கிறேன்.
நேற்று கூட அந்தப் பாதச் சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்தேன். அது வேணிக்குத் தெரியாது.
12 எதிர் சப்தங்கள்:
ஹை தேதியெல்லாம் வருது இப்போ? சூப்பர்.
//எப்படியும் தூக்கிவிட்டுவிடும்//பார்த்து மெதுவா..
"அதே பாதையில் கோடிக்கணக்கான பாதங்கள் பதிந்திருக்கக் கூடும்தான். ஆனால் சுஜாதா என்கிற அந்த ஒற்றை நாடி மனிதனின் பாதச்சுவடுகளை மட்டும் கால் நூற்றாண்டுக்குப் பிறகும் ஒருவனைத் தேடச் செய்வதுதான் எழுத்தாளனின் வெற்றி என நினைக்கிறேன்" Well said and amazed by your clarity of thoughts.
"தினமும் தலைக்குக் குளித்து " semma comedy sense Mani ungalukku...
கோவிலில் வாழும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது .மணி சாரிடம் இன்னும் பல நல்ல படைப்புகளை எதிர்பார்க்கலாம் .ஒருவேளை உள்ளிருந்து அந்த ஒற்றை நாடி மனிதன் தான் விட்டுப்போன விசயங்களை உங்கள் மூலம் செய்யலாம்.ஆனால் எது நடந்தாலும் நன்மைக்கே !.
உங்களுக்கும், வாசிக்கும் எனக்கும் இடையே ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உங்கள் எழுத்துகள் ஏற்படுத்திவிடுகின்றன. பாராட்டுகள் ங்க மணிகண்டன் சார்...
மிகவும் கொடுத்துவைத்தவர் நீங்கள். ஒரே ஒரு முறை பெல் காலனி வழியாக ஒரு தேர்விற்கு சென்றேன். எனக்கு அந்த புல்வெளியிலும், சாலைகளிலும், மரங்களிலும் சுஜாதாவே தெரிந்தார். மீண்டும் ஒரு முறை, உறவினர்கள் வீட்டிற்கு ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சாத்தார வீதியிலும், வடக்கு சித்தரை வீதியிலும், கோட்டையிலும் சுஜாதாவே தெரிந்தார். அங்கு ரங்கு கடை எங்கு இருக்கிறது என்று வினவினேன். யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தில் கூட, தேவதைகள் தெரியாதவர்கள் இருக்க்கிறார்கள். என் சொந்த அனுபவத்தை (பெல்லில் சுஜாதாவை தேடியதும், ஸ்ரீரங்கத்தில் ரங்குவை தேடியதும்) 2005ல் சுஜாதா அவர்களுக்கு அனுப்பினேன். இந்த மாதிரியான நூற்றுகணக்கான பைத்தியக்கார கடிதங்கள் அவருக்கு வந்திருக்கக் கூடும். இருப்பினும், என்னை மதித்து, தேங்க்ஸ் ரங்கராஜன்...என்று ஒரு வரி பதில் அனுப்பினார். நான் உடனே இன்ஸ்டன்ட் ஆக புளகாங்கிதம் அடைந்து, தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தில் மிதந்தேன். என் தம்பியிடம் மெயிலைப் பற்றி சொன்னதும், அது ஆட்டோ ரிப்ளையா இருக்கும் என்று சொன்னதை, நான் இன்னமும் நம்பவில்லை. நன்றி சுஜாதா. மறுபடியும், வாழ்த்துக்கள் உங்களுக்கு.
இளையராஜா விற்கு அடுத்து எங்கே தெரிந்தாலும் முடிந்த வரை முழுச் செய்தியையும் வாசிக்க வைத்து விடும் இன்னொரு பெயர் சுஜாதா.
Well said "Sekkali".
I concur you.
ரசித்தேன் பதிவை. ஏனென்றால் சுஜாதா பற்றியது என்பதால்...சுஜாதாவின் ஆவி அங்கு நடமாடுகிறதா என்று சோதித்துப் பாருங்கள் ஹஹஹ ..
கீதா
மணி
முன்பு உங்களின்ர ஒரு கட்டுரை படித்த போது உங்களுக்கும் சுஜாதாக்கும் ஏதோ பிணக்கு என்ற ஞாபகம்!! சுஜாதா விருது எல்லாம் ஏன் இந்த லூஸ் பெடியனுக்கு குடுத்தாங்கள் எண்டு கோவம். எங்களின் generationக்கு அவர் ஒரு பெரிய icon அல்லவா. அதுவும் போக இங்க, என் போன்ற பெண்கள் எல்லாம் ரமணிசந்திரன் வாசிக்கும் போது நான் சுஜாதாவை தேடித் தேடி வாசிப்பன். (தமிழ் libraryல்ல 10 புத்தகங்கள்) மிச்சம் எல்லாம் இணையம். அவர் மனைவி பேட்டியில் எனக்கு உடன்பாடு இல்லை. முதல் நாள், ஒரு பெண்ணாக அவர் மனைவிக்காக வருத்தப்பட்டது உண்மை ஆனா, யோசித்த போது எல்லாக் காலங்களிலும் அவர்களின் community எவ்வளவு forward என்று எல்லாருக்கும் தெரியும்.திரு. ரங்கராஜன் இருக்கும் போதே இதைச் சொல்லியிருக்கலாம். போகட்டும்
ஆனா, இக் கட்டுரை, நீங்களும் அவர் ஆளுமையையும் நேசிச்சிங்கள் எண்டு நிருபிக்குது.
எதும் பிழை எண்டால் தயங்காமல் Edit செய்யுங்கோ.
நன்றி
மனைவி எங்களுக்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள் என்று கேட்பது வருத்தப்பட வேண்டிய விஷயமல்ல மகிழ்ச்சியான விஷயம், எப்படி என்று கேட்கிறீர்களா, என் நண்பன் ஒருவன் என்னிடம் சலித்துக்கொண்ட விஷயம், அவன் ஆபீஸ் விஷயமாக வெளியே சென்றாலும் அவன் மனைவி பொறுமையா வொர்க் பண்ணிட்டு மெதுவா திரும்ப வாங்க போதும் என்கிறாராம், வெளியே சென்ற பின்பும் இவராக தொலைபேசியில் அழைத்து பேசினால்தான் உண்டாம், அவர் மனைவியாக பண்ண மாட்டாராம் கேட்டால் நீங்க பிசியா இருப்பீங்கன்னு தொந்தரவு பண்ண வேணாம்னு விட்டுட்டேன் என்பாராம். அட்லீஸ்ட் பத்திரமா போய் சேந்துட்டனான்னு கூட கேட்க மாட்டியா என்று கேட்டால் நீங்க என்ன சின்ன குழந்தையா என்பாராம் :)
Post a Comment