Apr 1, 2016

நெருப்பு

எவனெவன் எதை எதைச் செய்ய வேண்டுமோ அதை அதை மட்டுமே செய்ய வேண்டும். நானெல்லாம் கிரிக்கெட் பார்த்தால் எப்படி விளங்கும்? பார்க்காமல் இருந்திருக்கலாம்தான். அலுவலகத்தில் மூன்று பேர் சேர்ந்தால் ‘அவனை ஃபர்ஸ்ட் டவுனா இறக்கினது செம ஸ்டராடஜி’ ‘அவன் ஸ்கொயர் கட்ல அடிச்சாம் பாரு...அதுதான் மொத்த ஆட்டத்துக்கும் திருப்புமுனை’ என்றெல்லாம் அளக்கும் போது நான் அவர்களின் பற்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதாகிவிடுகிறது. அதனால்தான் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், கோஹ்லியின் அனுஷ்கா ஷாட்டையெல்லாம் தெரிந்து கொண்டு வந்து கெத்து காட்டிவிடலாம் என்று நினைத்தேன். போதாக்குறைக்கு நேற்று நடந்து கொண்டிருந்த மீட்டிங்கில் ஒரு ஆள் உள்ளே புகுந்து எதையோ காமெடியாகப் பேசினார். அங்கே சுற்றி இங்கே சுற்றி வந்து கடைசியில் ‘எம்பையன் கிரிக்கெட் கமெண்ட்டேட்டர் ஆகப் போறானாம்’ என்றார். பையனுக்கு பதினைந்து வயது இருக்கும் என்று நினைத்திருந்தேன். நான்கரை வயது என்றார். ‘முதலில் ஆய் கழுவப் பழகச் சொல்லுங்கள்’ என்று தொண்டைக்குழி வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. அவர் என்னை விட பெருந்தலை. தொண்டைக்குள் இருந்த சனிபகவானுக்கு போர்வையைப் போர்த்தி தூங்க வைத்துவிட்டேன்.

நாம் என்ன ஆக வேண்டும் ஆசைப்படோமோ அதையெல்லாம் அப்படியே குழந்தைகள் ஆசைப்படுவதாகச் சொல்லிவிட வேண்டியது. மகியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது லியாண்டர் பயஸ் பற்றி ஏதோ சொன்னேன். அதன் பிறகு தான்  டென்னிஸ் விளையாட்டு வீரனாக வேண்டும் என்றான். எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். மற்றொரு சமயத்தில் நான் வந்த பேருந்து ஓட்டுநர் படு வேகமாக வண்டியை ஓட்டினார் என்றேன். அன்றிலிருந்து போக்குவரத்து ஓட்டுநராகப் போகிறேன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான். அதிலிருந்து அவன் என்ன வேலைக்குப் போவதாகச் சொன்னாலும் கண்டு கொள்வதில்லை. அந்தந்த வயதில் நடக்க வேண்டியது நடக்கும். குழந்தைகளுக்குத் தேவையான exposure ஐ மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். 

ஒரு காலத்தில் இந்திய இராணுவத்தில் சேர விரும்பினேன். இப்படி நூறு வேலைகளையாவது விரும்பியிருப்பேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது short service commission க்கான தேர்வு நடந்தது. முதல் சுற்றில் தேர்வு பெறுவதில் பெரிய சிரமமில்லை. அடுத்த சுற்றுக்கு பெங்களூர் வரச் சொல்லியிருந்தார்கள். சிறு சிறு குழுக்களாகப் பிரித்து போர் வரும் போது எப்படியெல்லாம் செயல்படப் போகிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்?  அடித்துவிட்டேன். ம்ஹூம். தேறவில்லை. அனுப்பி வைத்துவிட்டார்கள். 

அந்தச் சமயத்தில் ஒரு தமிழ் இராணுவ அதிகாரி எங்களிடம் பேசும் போது ‘போர் குறித்தான கதைகளைக் கேட்டிருக்கீங்களா?’ என்றார். ஒரு உடான்ஸ் கதையைக் கேட்டிருக்கிறேன். எங்கள் உறவுக்காரர் ஒருவர் ராணுவத்தில் இருந்த போது எதிரியொருவன் சுட்டதில் அவர் கால் மூட்டு தனியாக வீழ்ந்ததாகவும் அப்பொழுதும் தயங்காமல் அவர் எதிராளியைச் சுட்டுக் கொன்றதாக யாரோ கிளப்பிவிட்டிருந்தார்கள். இதைச் சொன்னால் படு காமெடியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு ‘இல்லை சார்’ என்றேன். அந்த இடத்தில் இருந்த வேறு யாருமே கேட்டிருக்கவில்லை. இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பெட்டியைக் கட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பினோம். பட்டாளத்திலிருந்து துரத்திவிட்டுவிட்டார்கள் என்று எங்கள் அம்மாவுக்கு வெகு சந்தோஷம்.

ஒன்றின் மீது ஆசைப்பட்டு அது கிடைக்காவிட்டால் அதன் மீதான ஈர்ப்பு எந்தக் காலத்திலும் குறைவதில்லை. ஃபேஸ்புக்கில் இருக்கும் பழைய காதலிக்கு நட்பு அழைப்பை அனுப்புவதைப் போலத்தான். இப்பொழுதும் கூட இராணுவ சம்பந்தமான படங்களைப் பார்த்துவிட்டு இரண்டு மூன்று பாகிஸ்தான் போர்வீரர்களைக் சுட்டுத் தள்ளுவதைப் போலக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். பயணங்களில் இருக்கும் போது இந்த மாதிரியான கற்பனைகள் சுகமானதாக இருக்கின்றன என்பதால் பல சமயங்களில் வண்டியில் ஏறி பையைத் தோளிலிருந்து கழற்றியவுடன் இராணுவ உடையை அணிந்து கொள்வேன். 


சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன் - 71: in to the fire. கொரியத் திரைப்படம். இரண்டு மணி நேரப் படம். 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மற்றும் தென் கொரியப் போரை அடிப்படையாகக் கொண்ட படம். வடகொரிய ராணுவம் தென்கொரியாவைக் கைப்பற்ற முன்னேறி வருகிறது. கிட்டத்தட்ட தென்கொரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றிவிட்டார்கள். தென்கொரிய ராணுவம் தங்கள் வசமிருக்கும் இடங்களை விட்டுவிட்டு பின்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஐநா கூட்டுப்படை வந்து தங்களைக் காப்பாற்றிவிடும் என்ற ஒரே நம்பிக்கையில் முடிந்தவரை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 


நக்டங் என்னும் நதியைத் தாண்டி வடகொரியர்கள் வந்துவிட்டால் கதை முடிந்துவிடும் என்பதால் தென்கொரியாவின் பெரும்படை அந்த நதிக்கரையோரம் குவிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில்  இராணுவத்தில் சேர வந்திருக்கும் 71 மாணவர்களிடம் ஒரு பள்ளிக் கூடத்தை ஒப்படைக்கும் தென்கொரிய இராணுவ அதிகாரி கூட்டுப்படையோடு தாங்கள் வரும் வரைக்கும் வடகொரியர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டுச் செல்கிறார். அந்த மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு துப்பாக்கியில் சுடக் கூடத் தெரியாது. உள்ளுக்குள் யார் பெரியவன் என்கிற குழப்பம் வேறு. தங்களிடம் சிக்கிக் கொள்ளும் மாணவன் ஒருவனை விடுதலை செய்வதற்காக பள்ளிக்கூடத்திற்குள் துணிந்து நுழையும் வடகொரியத் தளபதி மாணவர்கள் சரணடைந்தால் விட்டுவிடுவதாகவும் மீறினால் வடகொரிய இராணுவம் இரண்டு மணி நேரத்தில் தாக்கப் போவதாகவும் சொல்லிவிட்டுச் செல்கிறான். ஆரம்பத்தில் தங்களுக்கிடையே இருக்கும் சச்சரவை மீறி மாணவர்கள் போருக்குத் தயாராகிறார்கள். வெறித்தனமாகப் போராடி வடகொரிய இராணுவம் முன்னேறுவதை பதினோரு மணி நேரம் தாமதப்படுத்துகிறார்கள். அதற்குள் தென்கொரியக் கூட்டுப்படை வந்து சேர்கிறது. போரின் போக்கு மாறுகிறது. முடிவு மாற்றி எழுதப்படுகிறது. 71 மாணவர்களின் அந்தப் போராட்டம்தான் போரின் மிக முக்கியமான திருப்புமுனை என்று வரலாற்றில் எழுதுகிறார்கள். 

உண்மைச் சம்பவம் என்பதால் என்னவோ திரைக்கதை நேராகப் பயணிக்கிறது. தென்கொரியர்கள் பாடுவது போலவே பேசுவார்கள் என்பதால் பல கொரியப் படங்களில் நடுநடுவே தூக்கம் வருவது இயல்பானது. இந்தப் படம் அப்படியில்லை. சுவாரஸியமாகவே இரண்டு மணி நேரமும் ஓடுகிறது. படம் நெடுகவுமான உணர்வுப்பூர்வமான வசனங்களும், காட்சிகளும் மிகப்பெரிய பலம். வடகொரிய இராணுவத்தின் ஒரு பிரிவு இரவு நேரத்தில் அந்தப் பள்ளிக் கூடத்தை நெருங்கும். அந்த இடத்தில் தென்கொரியர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. 71 மாணவர்களும் சுற்றி வளைத்துச் சுட்டுத் தள்ளிவிடுகிறார்கள். ஒருவன் மட்டும் சாகாமல் கிடப்பான். மாணவர்களின் குழுத்தலைவன் அவனருகில் செல்வான். ரத்தம் கொப்புளிக்கக் கிடக்கும் எதிரி ‘அம்மா அம்மா’ என்று அழைத்துக் கொண்டிருப்பான். மற்ற மாணவர்கள் எதிரியைச் சுடச் சொல்லி வற்புறுத்துவார்கள். சுட்டு விட்டு வந்து ‘வடகொரியர்கள் கொம்பு முளைத்த பூதங்களாக இருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அவன் அம்மா என்று அழைத்தான்’ என்று எழுதுவான். பார்வையாளனை நெகிழச் செய்கிறார்கள்.

தென்கொரியப் படங்களைப் பார்த்துவிட்டு தமிழில் இப்படி ஏதாவது படம் வந்திருக்கிறதா என்று யோசிப்பது வாடிக்கையாகியிருக்கிறது. ஒரு இயக்குநரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘அவதாரோட தமிழ் வெர்ஷன்தான் விஜய் நடிச்ச கத்தின்னு சொன்னா ஏத்துக்குவீங்களா?’ என்றார். அட ஆமாவா? நீங்களே சொல்லுங்கள்.

71: Into the fire யூடியூப்பிலேயே கிடைக்கிறது. 

9 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

அவதார் படமே பிரபு நடித்த வியட்நாம் காலனி படத்தின் ரீமேக் என்று கேள்வி பட்டேன். :)

JVV Suresh Kumar said...

/*‘முதலில் ஆய் கழுவப் பழகச் சொல்லுங்கள்’ என்று தொண்டைக்குழி வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. அவர் என்னை விட பெருந்தலை. தொண்டைக்குள் இருந்த சனிபகவானுக்கு போர்வையைப் போர்த்தி தூங்க வைத்துவிட்டேன்*/
-- பயங்கரமான வரிகள் சார்.. ரோபல் ...ரோபல் ..:-)

Vaa.Manikandan said...

அவதாரின் local version தான் கத்தி என்று நான் சொல்லவில்லை. ஒரு இயக்குநர் சொன்னார். யார் சொன்னது என இன்னொரு நாள் சொல்கிறேன். ஏன் இல்லை என்று நீங்கள் சொல்லுங்கள் :)

Ponchandar said...

"ஆமாவா ???” - என்பதன் மூலம் நீங்கள் முற்றீலும் பெங்களூர்வாசியாகிவிட்டதை உணர்கிறேன்.

Vinoth Subramanian said...

ஒன்றின் மீது ஆசைப்பட்டு அது கிடைக்காவிட்டால் அதன் மீதான ஈர்ப்பு எந்தக் காலத்திலும் குறைவதில்லை. True. I will take this as my facebook status today. With your name.

சேக்காளி said...

//படம் நெடுகவுமான உணர்வுப்பூர்வமான வசனங்களும்,//
ராசா கொரிய மொழியெல்லாம் படிச்சிருக்கும் போல.

Vaa.Manikandan said...

சப்டைட்டில்தான் இருக்கே! அப்புறம் என்ன சேக்காளி? :)

சேக்காளி said...

//கோஹ்லியின் அனுஷ்கா ஷாட்டையெல்லாம் தெரிந்து கொண்டு//
யோவ் மணி! வீடியோ லின்க் அனுப்புய்யா.

சேக்காளி said...

//சப்டைட்டில்தான் இருக்கே! அப்புறம் என்ன சேக்காளி? ://

படிச்சாச்சுங்கறத இப்பிடி ஏதாவது கமெண்டை போட்டுத்தானே பதிவு செய்யணும்.