Apr 30, 2016

தேர்தல் களம் - கோபிச்செட்டிபாளையம்

நேற்று காலை ஊருக்கு வந்த போது மதியம் பனிரெண்டு மணி. இருபத்தெட்டாம் தேதியன்று செங்கோட்டையன் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். பெருங்கூட்டத்தைத் திரட்டியிருந்தார் என்றார்கள். கூட்டத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்ட வேண்டிய அவசியம் கே.ஏ.எஸ்ஸூக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரம்தான் எஸ்.வி.சரவணனின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டாயிரம் பேர் திரண்ட கூட்டம் அது. ‘சரவணனுக்கு நல்ல கூட்டமப்பா’ என்ற பேச்சை உடைத்தாக வேண்டும். அதனால் போட்டிக்குப் போட்டியாக வேட்புமனுத்தாக்கல் ஊர்வலத்துக்கு ஆட்களுக்கு சரக்கை ஏற்றி அவர்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி சட்டைப்பையில் முந்நூறு ரூபாயை நிரப்பி திரட்டியிருந்தார்கள் அதிமுகவினர். பணமே பிரதானம்.

கோபித் தொகுதியில் ம.ந.கூ, பா.ம.க, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் என்று இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு செய்திருக்கிறார்கள். ஆனால் சரவணன், செங்கோட்டையனோடு ஒப்பிடும் போது மற்றவர்கள் மிக மிக வலு குறைந்தவர்கள். தொகுதியைப் பொறுத்தவரையில் சரவணன் Vs செங்கோட்டையன்தான். இரண்டு பேருமே தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர்கள். செங்கோட்டையனின் பலமாக பணம் இருக்கிறது. சரவணனின் பலமாக நேர்மையான மனிதர் என்ற நல்ல பெயர் இருக்கிறது. தமிழகத்தில் கடும் போட்டி நிலவக் கூடிய தொகுதி என்றால் அதில் கோபியைச் சேர்த்துக் கொள்ளலாம். 

தேர்தல் என்ற விஷயத்தில் செங்கோட்டையன்  பழம் தின்று கொட்டை போட்டவர். அனுபவஸ்தர். மருத்துவர்கள் சங்கத்திலிருந்து மார்கெட் வியாபாரிகள் சங்கம் வரைக்கும் எந்தவொரு சங்கத்தினரையும் விடுவதில்லை. வண்டி நிறைய சால்வையை வைத்துக் கொண்டு எதிரில் யார் வந்தாலும் போர்த்திக் கொண்டிருக்கிறார். நம்பியூர் பகுதியில் நாடார்கள் அதிகம். நம்பியூர் பகுதிதான் எதிராளியான சரவணனுக்கு செல்வாக்கான பகுதி. அந்தப் பகுதியின் நாடார் வாக்கை கவர்வதற்காக நாடார் ஒருவரை அழைத்து அருகில் நிறுத்திக் கொள்கிறார் செங்கோட்டையன். கவுண்டர்களிடம் பேசும் போது தனது சாதியைச் சொல்லி வாக்குக் கேட்கிறார். அருந்ததியர்களிடம் வாக்கு கேட்கும் போது கட்சியையும் சின்னத்தையும் சொல்லி வாக்குக் கேட்கிறார். பக்காவான Strategist.

சரவணனும் மூன்று முறை தேர்தல்களில் வென்றவர். அதுவும் பஞ்சாயத்துத் தேர்தல்களில். அவருக்கும் நெளிவு சுளிவு அத்துப்படியாக தெரிகிறது அதனால் இருவரும் சளைக்காமல் விளையாடுகிறார்கள். நுணுக்கமாக கவனிக்கிறவர்களுக்கு சுவாரஸியங்கள் நிறைந்த தேர்தலாக இருக்கிறது. 

செங்கோட்டையன் பயப்படுவதாகவும் தொகுதியில் பேச்சு நிலவுகிறது. சில உள்ளடி வேலைகள் செங்கோட்டையனுக்கான ஒரு மைனஸ். செங்கோட்டையன் மீண்டுமொருமுறை வென்றால் அடுத்தவர்களை வளர விட மாட்டார் என்று அதிமுகவினர் சிலர் பேசினார்கள். 

தன்னுடைய பலவீனங்கள் எது என்பதையும் செங்கோட்டையன் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். கோபி ரோட்டரி சங்கத்தில் பேசும் போது ‘இதுவரைக்கும் நான் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்’ என்று செங்கோட்டையன் பேசினாராம். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. முப்பதாண்டு காலமாக தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தாலும் பெயர் சொல்லும்படியான ஒரு வளர்ச்சித் திட்டமும் செய்யவில்லை என்று மக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுகவினருக்கும் இது தெரிந்திருக்கிறது. செங்கோட்டையன் வீழ்த்தப்பட்டால் அதற்கான காரணமாக இரண்டைச் சொல்ல முடியும். முதற்காரணம் சரவணனின் நல்ல பெயர். இரண்டாவது காரணம் ‘கே.ஏ.எஸ் எதுவுமே செய்யவில்லை’ என்கிற அவருக்கான கெட்ட பெயர்.

இந்த இரண்டு காரணங்களையும் கடைசி நேரப் பட்டுவாடா அடித்து நொறுக்கிவிடும் என்று அதிமுகவினர் நம்புகிறார்கள் என்று நினைக்கிறேன். அதிமுகவினர் பணம் கொடுக்கக் கூடும் என்று சரவணன் தரப்பு ஆட்களுக்குத் தெரிகிறது. ஆனால் ‘தடுத்தால் நமக்கு எதிரா திரும்பிடும்’ என்று பயப்படுகிறார்கள். உள்ளூர் மக்கள் சிலரிடம் பேசும் போது ‘காசு கொடுத்தா வாங்கிட்டு சரவணனுக்கு போட்டுடுவாங்க பாருங்க’ என்று பேசுகிறார்கள். இந்த நம்பிக்கைதான் சரவணன் தரப்பு ஆட்களுக்கு மிகப்பெரிய தெம்பை அளித்திருக்கிறது

இந்த மைனஸ்களை சமாளிக்க செங்கோட்டையன் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையிலான அவரது அரசியல் வாழ்வில் இப்படியொரு போட்டியை அவர் சந்தித்திருக்கவே மாட்டார் போலிருக்கிறது. கும்பாபிஷேகம், மாரியம்மன் திருவிழா என்று ஓரிடம் விடாமல் ஓடிச் செல்கிறார். இப்படி செங்கோட்டையன் வாயில் துணியைக் கவ்வியபடி களமாடிக் கொண்டிருக்கிறார். ‘இவ்வளவு வருஷம் ஏன் இப்படி பயப்படலை?’ என்று பொதுமக்கள் எழுந்திருக்கும் கேள்வியே அவருக்கு எதிரான அலையை வலுப்படுத்திவிடக் கூடும். 

இன்று அதிகாலையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது வயல் வேலைக்குச் செல்லும் பெரியவரைச் சந்தித்தேன். ‘நிலைமை எப்படி இருக்குங்க?’ என்றேன். தப்பிக்க நினைத்தவராக ‘அதெல்லாம் சொல்ல முடியாது..ஆண்டவனுக்குத்தான் தெரியும்’ என்றார். சிரித்தபடியே வேறு ஏதேதோ பேசி சரிக்கட்டி ‘நீங்க யாருக்கு ஓட்டுப் போடறதா உத்தேசம்’ என்ற போது ‘சரவணனுக்கு போடச் சொல்லி என் பையன் சொல்லியிருக்கான்’ என்றார். மகன் சொன்னதை அவர் செய்யக் கூடும். இப்படியானதொரு அலைதான் செங்கோட்டையனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

நேற்று மதியம் பனிரெண்டு மணிக்கு சரவணன் வேட்புமனுத்தாக்கல் செய்வதாகச் சொன்னார்கள். ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குச் சென்ற போது அவர் உள்ளே நுழைந்திருந்தார். முந்தின நாள் கட்சிக்காரர்களை அழைத்து ‘மனுத்தாக்கல் செய்வதற்கு உள்ள நாலு பேர்தான் போக முடியும்...காசு செலவு செஞ்சு வந்து வெயில்ல காய வேண்டாம்’ என்று சரவணன் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். அப்படியும் ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். ஒரு மணிக்கு மேலாக வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தார். பக்கத்திலிருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ‘இங்க எனக்காக கூடியிருக்கிறதுக்கு நன்றி. வெயில் ரொம்ப அதிகமா இருக்கு. உடம்பைப் பார்த்துக்குங்க..வீட்டுக்கு போங்க..பொழுது சாஞ்ச பிறகு தேர்தல் வேலையை ஆரம்பிங்க...வெயில்ல வேண்டாம்’ என்றார். இன்னமும் காந்தி தாத்தா மாதிரியே பேசிட்டு இருக்காரே என்று நினைத்துக் கொண்டேன். 

தேர்தல் பணிமனை அலுவலகத்தில் ஓரமாக அமர்ந்திருந்தேன். கட்சிக்காரரர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அப்படியொரு ஆர்வம். அதிமுக அலுவலகத்திலும் இப்படி அமர வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அடையாளம் தெரிந்தால் கும்மிவிடுவார்கள் என்று பயமாகவும் இருக்கிறது. 

இன்றைய சூழலில் சரவணனின் நல்ல பெயர் வெற்றிக்கான படிக்கட்டுகளை வேகமாகக் கட்டிக் கொண்டிருந்தாலும் சரவணனிடம் சில மைனஸ்கள் இருக்கின்றன. தேர்தல் பணிமனையை இப்பொழுதுதான் அமைத்திருக்கிறார்கள். இதைக் குறையாகச் சொல்ல முடியாது. பணிமனை ஆரம்பித்தால் எப்படியும் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயாவது செலவு பிடிக்கும். சரவணன் கடன் வாங்கித்தான் செலவு செய்து கொண்டிருக்கிறார். பத்து நாட்களுக்கு முன்பே பணிமனையை ஆரம்பித்திருந்தால் இன்னுமொரு பத்து லட்சத்துக்கு கூடுதல் கடனாளியாகி இருப்பார். இந்தவொரு தாமதம் சற்றே மைனஸ்தான். ஆனால் நேற்றிலிருந்து திண்ணைப் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. வார்டுச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஒவ்வொரு கதவாகத் தட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் எப்படி வேலை வாங்கப் போகிறார் என்பதைப் பொறுத்து களம் இன்னமும் சூடு பிடிக்கக் கூடும்.

கோபியின் கிழக்குப் பகுதியில் விசாரித்தால் செங்கோட்டையன் முன்ணணியில் இருக்கிறார். கோபி நகரத்தில் ஆரம்பித்து மேற்கே செல்லச் செல்ல சரவணன் முன்ணனியில் இருக்கிறார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்றைய சூழலில் சரவணன்தான் முன்னணியில் இருக்கிறார். அடுத்த பதினான்கு நாட்களுக்கு தம் கட்டினால் சரவணன் செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்றுதான் தெரிகிறது. 

நேற்று மாலை நேரத்தில் நம்பியூர் பகுதியில் பேசச் சொன்னார்கள். பேசுவதில் எனக்கு சங்கடம் எதுவுமில்லை. கட்சிச் சாயம் பூசிக் கொள்ள வேண்டியதில்லை. நல்ல வேட்பாளர்- அவ்வளவுதான் நோக்கம். அதையேதான் பேசினேன். ‘எனக்கு கட்சி, சின்னம், சாதி என்கிற எந்தப் பிடிப்புமில்லை. ஒரேயொரு காரணம்- சரவணன் நல்லவர். அவருக்காக பேசுகிறேன்’ என்று தொடங்கினேன். முப்பதாண்டு காலமாக கே.ஏ.எஸ் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். திரும்பத் திரும்ப வாய்ப்பளித்துவிட்டோம். இந்த முறை அவரை எதிர்த்து சரியான ஆள் நிற்கிறார். வாய்ப்பளிப்போம் என்றேன். 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் இன்னொரு முக்கியமான விஷயம் பணத்துக்கு வாக்களிப்பது. இதை எதிர்த்து விழிப்புணர்வை உண்டாக்கினாலே ஜனநாயகத்தின் பாதி வெற்றிதான். அதையும் பேசினேன். ‘நோட்டை வாங்கிக் கொண்டு வோட்டைப் போடால் எதிர்கால சந்ததியினருக்கு பெரிய வேட்டு வைக்கப் போகிறோம் என்று அர்த்தம். எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் அதை இரண்டு நாள் வேலையில் சம்பாதித்துவிடலாம். ஆனால் ஐந்தாண்டு காலம் நம் எதிர்காலத்தை அடமானம் வைத்த மாதிரி ஆகிவிடும். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது நமது பிள்ளைகளுக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய துரோகம். படித்தவர்கள் தயக்கமேயில்லாமல் படிக்காதவர்களிடம் இதைப் பேசுங்கள். அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். ஆனால் தயவு செய்து சிந்தித்து வாக்களிக்கட்டும். படிப்பறிவற்ற மக்கள், வயதில் மூத்தவர்கள் என யாராக இருந்தாலும் சரி- படித்த ஒவ்வொருவரும் படிக்காத சாமானிய மக்கள் பத்து பேரிடமாவது பேச வேண்டும்’ என்றேன். 

பொதுவெளியில் நானொரு சுண்டைக்காய். பேசுவதையெல்லாம் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் மனத்தூய்மையுடன், நல்லதொரு நோக்கத்துக்காக எந்தவிதமான காழ்ப்புணர்வுமில்லாமல் வெளிப்படையாக பேசும் போது மக்களின் மனதை அசைத்துப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எழுத்து வழியாகவும் பேச்சு வழியாகவும் அதைச் செய்து கொண்டேயிருப்பதுதான் இந்தச் சமூகத்துக்கு செய்யக் கூடிய முக்கியமான வேலையாகக் கருதுகிறேன். நாளை சரவணன் வென்றால் அவரிடம் காரியம் ஏதாவது ஆக வேண்டுமென்று கேட்கப் போவதில்லை. கைகட்டி நிற்கப் போவதில்லை.‘தகுதியான வேட்பாளர் வெல்லட்டும்’. அதற்காகத்தான் பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். மக்களுக்கு புரிந்திருக்கக் கூடும்.

விதைப்பதை விதைப்போம். விளைய வைக்க மக்களுக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.

Apr 28, 2016

என்ன செய்யப் போகிறோம்?

கோழி முட்டையிட்டிருக்கிறது. கோழிக்காரர் ஒவ்வொரு நாளும் முட்டையை எடுத்து அலமாரியில் வைத்திருந்தாராம். திடீரென்று அலமாரிக்குள்ளிருந்து கோழிக்குஞ்சு சத்தம் கேட்டிருக்கிறது. பதறிப் போய் அலமாரியைத் திறந்தால் அடை வைக்காமலே முட்டை குஞ்சாக மாறியிருக்கிறது. இது கதையில்லை. இந்தக் கோடையில் உண்மையிலேயே நடந்திருக்கிறது. அவ்வளவு சூடு. கோழிப்பண்ணை இன்குபேட்டர்களில் முட்டையிலிருந்து குஞ்சு பொறிக்க வைக்க 99 முதல் 102 பாரன்ஹீட் வெப்பத்தை பராமரிப்பார்கள். இப்பொழுதுதான் சராசரி வெப்பநிலையே சாதாரணமாக நூறைத் தாண்டுகிறது. அப்புறமென்ன? முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளியே வந்து விட்டது. இப்படியெல்லாம் முட்டை குஞ்சானது. குஞ்சு ரோஸ்ட் ஆனது போன்ற செய்திகளையெல்லாம் படிக்கும் போது நமக்கு என்ன ஆகுமோ என்று திக்கென்றிருக்கிறது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு!


சிரிப்பதற்கு எதுவுமில்லை. ஊரெல்லாம் மிகக் குரூரமாக காயத் தொடங்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையில் சற்றே தம் கட்டிய விவசாயிகள் இப்பொழுது பதறுகிறார்கள். ‘இனியும் இந்த வெயில் அடித்தால் தாங்காது’ என்கிறார்கள். வெயில் நமக்கு வெறும் சூடு மட்டும்தான். ஏஸியும் மின்விசிறியும் காத்துவிடக் கூடும். ஆனால் விவசாயிகளுக்கு அது நெருப்பு. எங்கள் ஊர்ப் பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பிப் பிழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சொட்டு நீர் பாசனம் அமைத்திருக்கிறார்கள். வெயில் காலம் ஆனால் நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து விடுகிறது. ஆனால் வெயிலின் கடுமை காரணமாக பயிர்களுக்கு பாய்ச்ச வேண்டிய நீரின் அளவு அதிகமாகிறது. இல்லையென்றால் பயிர்கள் காயத் தொடங்குகின்றன. அதனால்தான் இப்பொழுதெல்லாம் பங்குனி, சித்திரை வந்தாலே பதற்றமாக இருக்கிறது. 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை இந்த மாதம் பெங்களூரில் பதிவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட அத்தனை ஊர்களிலும் இதுதான் நிலைமை. தமிழகத்தின் வேலூர், கர்நாடகத்தின் கலபுரகி ஆகிய ஊர்களில் வெப்பநிலை சாதாரணமாக 115 டிகிரியைத் தொடுகிறது. ஒவ்வோராண்டும் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடப் போகிறது என்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் தெற்காசியா மக்கள் வாழும் தகுதியை இழந்த நிலப்பரப்பாக மாறிவிடும் என்றொரு குறிப்பை வாசித்தேன். எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அளவு கடந்த கார்பன் உமிழ்வு, வாகனப் பெருக்கம், வனப்பரப்பின் சுருக்கம் என ஏகப்பட்ட காரணிகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் வாழ்ந்த இந்த பூமியை கடந்த நூறாண்டில் மட்டும் மிக மிக மோசமாக குதறியிருக்கிறோம். வளர்ச்சி என்ற பெயரில் இருக்கிற அத்தனை வளங்களும் கருணையே இல்லாமல் சுரண்டப்படுகின்றன. வாழ்வதற்கான உழைப்பு என்ற நிலை மாறி சம்பாதிப்பதற்கான உழைப்பு என்ற நிலையை அடைந்ததன் விளைவு இது. 

நீங்களும் நானும் பேசிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் யுகம் இது. ஒரு நாளைக்கு சராசரியாக இருபத்தைந்து லட்சம் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவை தொழிற்சாலைகளுக்குச் செல்கின்றன. வீடு கட்ட, சாலையை அகலப்படுத்த என்ற பிற காரணங்களினாலும் மரம் வெட்டுதல் நிகழ்கிறது. ஒரு நாளைக்கு இருபத்தைந்து லட்சம் மரங்களை வெட்டுகிறோம் என்றால் ஒவ்வொரு வருடமும் எவ்வளவு மரங்களை வெட்டுவோம்? கணக்குப் போட்டுக் கொள்ளலாம். ‘மரத்தை வெட்டுவதை நிறுத்து’ என்று நாம் சொன்னால் யாரும் கேட்கப் போவதில்லை.  ‘நீ வண்டி ஓட்டுறதை நிறுத்திட்டு பேசு’ என்பார்கள். வாகனங்கள் வெளியிடும் புகை சூழலின் வெப்பநிலையை அதிகமாக்குகிறது. தொழிற்சாலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதீதமான விளக்குகள், மின்விசிறிகள், குளிரூட்டிகள் போன்ற தனிமனித மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் போது மின் உற்பத்தியின் அளவை அதிகரித்து சூழலை மாசாக்குகிறோம். விழாக்களில் கட்டப்படும் சீரியல் விளக்குகள், அலங்கார விளக்குகள் என எல்லாவற்றிலும் ஏதாவதொரு வகையில் சூழலை மாசாக்குகிறோம். குடிநீரை பாட்டிலில் வாங்கிக் குடித்து நிலத்தை மாசடையச் செய்கிறோம். துணி துவைப்பதிலிருந்து, நீச்சல் குளம் வரைக்கும் நம்முடைய சொகுக்குக்காவும் வசதிக்காகவும் நீர் உபயோகத்தை அதிகரிக்கிறோம். இப்படி நம்முடைய ஒவ்வொரு செயலிலும் தவறுகளைச் செய்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி கை நீட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை.

நாம் துரும்பையாவது கிள்ளிப் போடுகிறோமா என்று முதலில் யோசிப்போம். ‘அய்யோ வெயில் பயங்கரமப்பா’ என்று சொல்லிவிட்டு இருபத்து நான்கு மணி நேரமும் ஏஸி வேண்டும் என்கிற மனநிலையிலிருந்து வெளியில் வர வேண்டும். ‘உலகமே இப்படித்தான் இருக்கு..நான் ஒருத்தன் மட்டும் ஒழுக்கமா இருந்தா சரியாகிடுமா’ என்று நாமாகவே நினைத்துக் கொள்வதில்தான் முக்கால்வாசி பிரச்சினைகள் தொடங்குகின்றன. நம்மிலிருந்து மாற்றம் ஆரம்பிக்க முடியும்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி சித்திரையில் பதறிவிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வேறொரு பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுகிறோம். இத்தகைய பணிகளில் நீண்டகால திட்டமிடலும் செயல்பாடும் அவசியம். பிறந்தநாளின் போதும் திருமண நாளின் போதும் ஒரு செடியை நடுவோம் என்று முடிவு செய்தாலும் கூட போதும். திருமண நாளைக் கொண்டாடுவதில் உடன்பாடில்லை என்றால் பிறந்தநாளையாவது கொண்டாடலாம். வருடம் ஒரு மரம் என்றாலும் கூட இறப்பதற்குள் முப்பது அல்லது நாற்பது மரங்களை உருவாக்கிவிட முடியும். ஒரு மனிதர் சராசரியாக இருபத்தைந்து மரங்களை உருவாக்கினால் நிலைமை முற்றாக மாறிவிடும். அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லை என்றாலும் நம்மால் ஆளுக்கு ஐந்து மரங்களை உருவாக்க முடியும். அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த எண்ணத்தை உருவாக்கலாம். கோடிக்கணக்கான மரங்கள் வெட்டிக் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான மரங்களையாவது வளர்த்து பூமியின் ஆயுளை ஒன்றிரண்டு நாள் அதிகமாக்கலாம்.

எல்லாவற்றையும் யாரோ வந்து ஆரம்பித்து வைப்பதில்லை. நாமே ஆரம்பிக்கலாம். பேசிவிட்டு விட்டுவிட முடியாது. நல்ல விதைகளைச் சேகரித்து வைக்கலாம். வீட்டுக்கு எதிரிலோ அருகாமையிலோ இடம் ஒன்றைப் பார்த்து வைக்கலாம். வெயில் முடிந்து மழைக்காலம் தொடங்கும் போது ஒரு விதையை நடுவோம். ஒரு செடியை வளர்ப்போம். அது போதும். வீட்டுக்கு முன்பாக ஒரு மரம் இருந்தால் பாதி வெப்பம் குறைந்தது போல இருக்கும். பொதுநலத்திலும் ஒரு சுயநலம்தான். நம்மால் இயன்றதைச் செய்துவிட்டு அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டுவோம். இல்லையென்றால் கோடையில் நூறு டிகிரியைத் தொடும் வெப்பநிலைமானிகள் மற்ற பருவங்களிலும் நூறைத் தாண்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒவ்வொரு நாளும் வெயிலில் நடக்கும் போது இதைத் தெளிவாகவே உணர முடிகிறது. 

Apr 27, 2016

பொம்பளை வாசம்

கோணப்பண்ணனுக்கு இன்றைய கணக்குக்கு அறுபது வயது இருக்கக் கூடும். இதுவொரு மனக்கணக்குத்தான். யாரும் தேதி குறித்தெல்லாம் வைத்திருக்கவில்லை. அது என்ன கோணப்பண்ணன்? இந்தக் கேள்வியை இதுவரைக்கும் யாருமே கேட்டதில்லை. நேரில் பார்த்தாலே தெரிந்துவிடும். பிறந்ததிலிருந்தே கால்கள் இரண்டும் வளைந்திருந்தன. அப்பனும் ஆத்தாவும் வேறு ஏதோவொரு பெயரைத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் ஊர் தனக்குப் பிடித்த பெயரை வைத்துக் கொண்டது. தொடக்கத்தில் கோணைக்காலன் என்றுதான் அழைத்தார்கள். அது மருவித்தான் கோணப்பன் என்றானது. அதன்பிறகு அவரை விட இளையவர்கள் பெயருக்குப் பின்னால் அண்ணன் விகுதி சேர்த்து கோணப்பண்ணன் ஆக்கிவிட்டார்கள். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என எல்லாவற்றிலும் கோணப்பண்ணன்தான். அவரும் அலட்டிக் கொள்வதில்லை.

கோணப்பனை படிக்க வைத்தார்கள். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பிலேயே வாத்தியாரின் மண்டையை உடைத்துவிட்டதாக சொல்லிவிட்டு கெக்கேபிக்கே என்று சிரிப்பார். அதன் பிறகு கோணப்பனுக்கு பிழைப்பே ஆடுகள்தான். மண்டை உடைத்த வைபவத்திற்கு பிறகு ஆரம்பத்தில் தோட்டங்காட்டு வேலைக்குத்தான் அனுப்பினார்கள். ஆனால் வேலை செய்வது அவ்வளவு சுளுவாக இல்லை. வளைந்த கால்களை வைத்துக் கொண்டு மண்வெட்டி பிடிப்பது சரிப்பட்டு வராது என்றுதான் இரண்டு வெள்ளாட்டுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் மேய்ப்பதும் கூட லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. அவை அங்கேயும் இங்கேயும் இழுத்துக் கொண்டு ஓட அவற்றின் பின்னால் ஓடுவதும் கோணப்பண்ணனால் இயலவில்லை. பார்க்கும் வரை பார்த்துவிட்டு வீட்டிலேயே பட்டி போட்டு கோணப்பண்ணனே தீவனம் அறுத்து வந்து போடத் தொடங்கினார். வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. வெயிலாக இருந்தாலும் சரி மழையாக இருந்தாலும் சரி. கருக்கு அரிவாளை இடுப்பில் செருகிக் கொண்டு காலையிலேயே கிளம்பிவிடுவார். புல்லும் செடியும் அறுத்து ஊனாங்கொடியைப் பிடுங்கி கட்டாக்கி தலையில் சுமந்து கொண்டு வீடு திரும்பும் போது பொழுது சாய்ந்துவிடும். வெற்றுடம்பில் வியர்வை மின்னிக் கொண்டிருந்த கோணப்பண்ணனிடம் முப்பது வெள்ளாடுகள் சேர்ந்திருந்தன. அப்பனும் ஆத்தாளும் மேலோகம் சேர்ந்திருந்தார்கள்.

கோணப்பண்ணனுக்கு நெஞ்சில் கட்டுக்கட்டாக சதை திரண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. மீசையும் கட்டையாக மாறியிருந்தது. பாவாடையை மாராப்பாக ஏற்றிக் கட்டிக் குளிக்கும் பெண்களை வாய்க்காலில் பார்க்கும் போதெல்லாம் குறுகுறுத்தது. ஆனால் ஆனால் நொண்டியைக் கட்டத்தான் ஒருத்தியும் வாய்க்கவில்லை. இவருக்காக பெண் வீட்டில் பேசுவதற்கும் ஒருவருமில்லை. சலித்துப் போய் நாவல் மரத்தடியில் தனித்துக் கிடந்த போதெல்லாம் தனிமை நெட்டித் தள்ளியது. எவளிடமாவது கண்ணசைவு காட்டுகிற தெம்பு மனதுக்கு இல்லை. பொறுத்துக் கொள்கிற இறுக்கம் உடலுக்கும் இல்லை. தெனவெடுத்துக் கிடந்தது. அதனாலேயே வாய்க்கால் பக்கமாக புல் அறுக்கப் போவதைக் குறைத்துக் கொண்டார். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உடல் குலுங்கி அடங்கியது. துவைத்து, குளித்து பெண்கள் கிளம்பிச்சென்றுவிட்ட அந்தியில் மட்டுமே வாய்க்காலில் கால் நனைக்கத் தொடங்கினார்.

என்னதான் மனதையும் உடலையும் கட்டுப்படுத்த முயன்றாலும் அவை கேட்பதாக இல்லை. கோணப்பண்ணனின் இடுப்பில் மழைக்காகிதத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட ஏதாவதொரு நடிகையின் படம் இருந்து கொண்டேயிருந்தது. காமம் தீயாகச் சுடுகிற தருணங்களில் யாருமில்லாத புதர் ஓரம் ஒதுங்குவது வாடிக்கையாகியிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அடுத்தவர்களிடம் கோணப்பண்ணனின் பேச்சுவார்த்தையே குறையத் தொடங்கியது. ‘உனக்குன்னு ஒருத்தி பிறக்காமலா போயிருப்பா?’ என்று கேட்டுக் கேட்டு வெறுப்பேற்றினார்கள். அவர்களிடம் பதில் சொல்வதைக் குறைப்பதற்காக பேச்சைக் குறைத்தார். வருடங்கள் கரையக் கரைய அதுவே பழக்கமாகிப் போனது. இப்பொழுதெல்லாம் அதிகம் பேசுவதில்லை. வெறுங்காலில் இடுப்பில் அரை முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு நடப்பதும் புல்லுக்கட்டு சுமப்பதுமாகவுமே இருந்தார். மாதம் ஒரு கிடாயை பக்கத்து கசாப்புக்கடையில் விற்றால் போதும். அந்த மாதத்திற்கான தேவையைச் சமாளித்துக் கொள்ளலாம். அப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. 

தண்ணிவாக்கியிடம் மட்டும் அவ்வப்போது பேசுவார். அதுவும் இவராகப் பேசுவதில்லை. அவன்தான் இவரைப் பார்க்கும் போதெல்லாம் வாரிக் கொண்டிருந்தான். ‘புதர்ப்பக்கம் போனீங்களா கோணப்பண்ணா?’ என்று கேட்டுவிட்டு வேகமாக மிதிவண்டியை மிதித்துவிடுவான். தண்ணிவாக்கிக்கு வேலையே வயலில்தான். அவனது கண்களிலிருந்து தப்பிப்பது சாத்தியமேயில்லை. எப்பொழுதாவது பார்த்திருக்கக் கூடும். அவன் இப்படிச் சீண்டும் போதெல்லாம் வக்கனையாகக் கேட்டுவிடுவார். ஆனால் இவர் யோசித்து அந்த வார்த்தையைச் சொல்வதற்குள் அவன் வெகு தூரம் போயிருப்பான். வார்த்தைகள் காற்றில் கரைந்து கொண்டிருக்கும். 

காமமும் தனிமையும் மட்டுமே கோணப்பண்ணனின் பெரும் பிரச்சினைகளாக உருமாறியிருந்தன. வெளிப்படையாக பேச முடியாத பிரச்சினை. ஆனால் இவரைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் ஊர் உருமாறிக் கொண்டேயிருந்தது. தொண்டுப்பட்டிகளாகவும் காலியிடங்களாகவும் கிடந்தவையெல்லாம் வீடுகளாகவும் கடைகளாகவும் மாறிய போதும் கோணப்பண்ணனின் குடிசையும் ஆடு அடைக்கும் பட்டியும் அப்படியே கிடந்தன. ஆட்டு புலுக்கைகளின் கவிச்சை அக்கம்பக்கத்தவர்களை முகம் சுளிக்கச் செய்தாலும் எதுவும் பெரிதாகக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியே காட்டினாலும் கோணப்பண்ணன் செவி மடுப்பாரா என்கிற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது. அமைதியாக விட்டுவிட்டார்கள். ஆடுகள் இணை சேரும் போதெல்லாம் கோணப்பண்ணன் உள்ளுக்குள் புழுங்குவார். விலங்குகளுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் கூட தனக்கில்லை என்பது பெரும் வேதனையாக இருந்தது. மார்கழி மாதத்து நாய்களைப் பார்க்கும் போது தானாக கைகள் கற்களைத் துழாவின. அவற்றை பிரித்து அனுப்பிவிட்டுத்தான் இடத்தை விட்டு நகர்வார். பஞ்சாயத்துக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் பெண்கள் கமுக்கமாக சிரித்துக் கொள்வார்கள்.

இந்த இடத்தில் லலிதாவின் கதையைச் சொல்லிவிட வேண்டும். லலிதா ஊருக்குள் வந்ததிலிருந்தே அவளைப் பற்றிய பேச்சுக்கள் றெக்கை கட்டியிருந்தன. வெளியூர்க்காரி. அவள் பணத்துக்கும் அரிசிக்கும் பருப்புக்கும் கூட முந்தி விரிப்பதாக பேச்சு உலவியது. கோணப்பண்ணன் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது சைக்கிளை நிறுத்திய தண்ணிவாக்கி எதையெல்லாமோ பேசிவிட்டு யதேச்சையாகத்தான் சொன்னான். ‘உன்ரகிட்டத்தான் பணம் இருக்குதுல்ல..ஒருக்கா கதவைத் தட்டிட்டு வா போ’ என்றான். அது காயத்தில் குளிர்நீரை ஊற்றியது போல சுளீரென்றிருந்தது. அதுவரைக்கும் கோணப்பண்ணனுக்கு லலிதா விவகாரம் தெரியாது. வெகு யோசனைக்குப் பிறகுதான் முடிவுக்கு கதவைத் தட்டினார். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. நள்ளிரவை நெருங்கும் சமயத்திலும் அவள் மல்லிகையோடுதான் அமர்ந்திருந்தாள். கதவைத் திறந்தவள் ஏதோவொரு அசூசையை முகத்தில் காட்டியவளாக ‘ஒரு பெரிய மனுஷன் வர்றதா சொல்லியிருக்காப்ல..இன்னொரு நாளைக்கு வா’ என்றாள். அது பிச்சை எடுப்பவனை துரத்துவது போல இருந்தது. ஆனால் தானும் ஒருவகையில் பிச்சைக்காரன்தான் என்ற நினைப்பில் திரும்பினார். அவளது முகமும் வார்த்தைத் தொனியும் அவரை வெறுப்பேற்றியிருந்தது. ‘வேசி முண்டை’ என்று திட்டியபடியே வந்து படுத்துக் கொண்டார். அதன் பிறகு அவளது வனப்பும் மல்லிகை வாசனையும் திரும்பத் திரும்ப வெறியேற்றினாலும் அவளிடம் செல்லக் கூடாது என்ற வீராப்பு தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆறு மாதத்தில் லலிதா ஊரைக் காலி செய்திருந்தாள். உள்ளூர் பெண்களே அவளைத் துரத்தியடித்ததாகச் சொன்னார்கள்.

அடங்காத காமமும் தீராத பெண் மோகமும் கோணப்பண்ணனை அழுத்திக் கொண்டேயிருந்தது. உலகத்தில் பொம்பளை வாசமே இல்லாமல் ஒரு ஆண் வாழ்ந்திருக்க முடியுமா என்பது கோணப்பண்ணனுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது. எதையுமே நினைக்காத வரைக்கும் மனம் கொந்தளிப்பதில்லை. ஒன்றை நினைக்கத் தொடங்கினால் அந்த நினைப்பே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துவிடுகிறது. எல்லை மீறுவதில் தவறொன்றுமில்லை என்கிற முடிவுக்கு வந்த போது அறுபதைத் தொட்டிருந்தார். ஆனால் அதுவொன்றும் சாமானியக் காரியமாக இல்லை. உடலில் முறுக்கமிருந்தாலும் நரை தட்டியிருந்தது. மீசை வெளுத்திருந்தது. பற்கள் வெற்றிலைக் காவியேறியிருந்தன. தனக்கு காமத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையுமில்லை என்றும் இதற்கான வழியொன்றைக் காட்ட வேண்டும் என்றும் கடவுளை வேண்டிக் கொண்டார். இயற்கையின் எல்லாவிதமான விளையாட்டுக்களிலும் இதுவும் ஒன்று என்று கலங்கிக் கொண்டேயிருந்தார்.

சமீபமாக கோணப்பண்ணன் பற்றி ஒன்றிரண்டு பேர் பேசத் தொடங்கினார்கள். வாய்க்காலில் அவர் அத்து மீறுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கோணப்பண்ணன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பேச்சு எழும்பி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. வெள்ளிக்கிழமை வாய்க்கால் ஓரத்தில் கோணப்பண்ணனை அடித்துக் கொன்றிருந்தார்கள். குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியொருத்தியின் பாவாடையை உருவியதாகப் பேசிக் கொண்டார்கள். கரையில் அவரது உடல் கிடந்தது. கொல்லப்பட்டு வெகு நேரமாகியிருக்கக் கூடும். வாய் பிளந்திருந்தது. பற்கள் உடைந்திருந்தன. கண்கள் வீங்கிக் கருத்துக் கிடந்தது. அடையாளமே தெரியவில்லை. ‘இந்த வயசுலயுமா?’ என்று யாரோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் வந்து கூட்டத்தை விலக்கினார்கள். உள்ளூர் மணியகாரர் தண்டல்காரர்கள் சொல்லச் சொல்ல பிணத்தின் அடையாளங்களைக் குறித்துக் கொண்டிருந்தார். தண்ணிவாக்கி மட்டும் நம்பாமல் அழுது கொண்டிருந்தான். ‘திருப்பூர் பனியன் கம்பெனிக்காரன் எடத்தை வெலைக்குக் கேட்டு கொடுக்க மாட்டீனு சொல்லிட்டாராம்...அதுக்குன்னு அடிச்சே கொன்னுட்டீங்களேடா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனது பேச்சை அந்த இடத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. 

எதற்காக கோணப்பண்ணன் செத்துப் போனார் என்பது அநேகமாக அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடும் அல்லது அவரை அடித்துக் கொன்ற அடையாளம் தெரியாத சிலருக்கும் தெரிந்திருக்கலாம். சவ ஊர்தி வந்து சேர்ந்தது. கோணப்பண்ணின் உடல் மீது துணியைப் போர்த்தி ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள். கோணப்பண்ணனின் திறந்த வாயில் ஒரு ஈ ஆடிக் கொண்டிருந்தது. அவரது ஆடை விலகிய போது அங்கேயிருந்த பெண்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் அல்லது திருப்புவது போல நடித்தார்கள்.

Apr 25, 2016

குலுக்கல்

மூன்றாம் நதி நாவலுக்கான அட்டை வடிவமைப்பைச் செய்தது யாரென்று யூகிக்கச் சொல்லி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன் - நிறையப் பேர் சரியான பதிலைச் சொல்லியிருந்தார்கள். சந்தோஷ் நாராயணன். எனது முந்தய சில புத்தகங்களுக்கும் அவர் வடிவமைத்திருக்கிறார். இந்த முறையும் கேட்கலாமா என்று தயக்கமாக இருந்தது. பன்மடங்கு மேலே போய்விட்டார். எழுத்து, கலை என திரும்பிய திசைகளில் எல்லாம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். பதிப்பாளரிடம் ‘சந்தோஷ் ரொம்ப பிஸி..ஆனா எதுக்கும் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றேன். சந்தோஷ் நாவலை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார். பத்து நாட்களில் வடிவமைப்பை முடித்து அனுப்பி வைத்தார். இரண்டு விதமான வடிவமைப்புகள். கருப்பும் நீலமும் பார்த்தவுடனேயே பிடித்துப் போனது. முடிவு செய்தாகிவிட்டது.ஏற்கனவே சொல்லியிருந்தபடி வடிவமைப்பாளரின் பெயரைச் சரியாக யூகித்திருந்தவர்களின் பெயரைத் துண்டுச்சீட்டில் எழுதி குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்துவிட்டேன். காஜல் அகர்வால் தெலுங்குப்படத்தில் பிஸி. இலியானா இந்திப்படத்தில் பிஸி. அதனால் அவர்களை வைத்துக் குலுக்கலை நடத்த முடியவில்லை என்று சொன்னால் நம்பிக் கொள்ளத்தான் வேண்டும். நானே தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆனால் குலுக்கல் எதுவுமில்லாமல் தேர்ந்தெடுத்தாக நினைத்துக் கொள்ள வேண்டாம். துண்டுச்சீட்டுகளில் பெயரை எழுதி குலுக்கிப் போட்டு கருப்பராயனை வேண்டிக் கொண்டுதான் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்தேன். என்ன வேண்டினேன் என்பதெல்லாம் பரம ரகசியம்.

உண்மையில் இயக்குநர் சசியைத்தான் தேர்ந்தெடுக்கச் சொல்ல நினைத்திருந்தேன். பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக தனது அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப் படத்துக்கான கதை விவாதத்தில்தான் கலந்து கொள்கிறேன். வாரத்தில் இரண்டு நாட்கள்- சனி, ஞாயிறு அதற்காகப் போய்க் கொண்டிருக்கிறது. எழுதுகிற சம்பவங்கள், கேட்ட கதைகள் என எல்லாமே கதைக்கான கச்சாப் பொருட்கள்தான். அதுதான் இயக்குநருக்கும் பிடித்திருக்க வேண்டும். மற்ற விவரங்களை இன்னொரு நாள் சொல்கிறேன். 

ஐந்து பேரும் முகவரியை அனுப்பி வைத்தால் புத்தகம் தயாரானவுடன் ஒரு பிரதியை அனுப்பி வைத்துவிடலாம்.

நிசப்தம் பக்கத்தில் சரியான பதிலை எழுதிய இருவர்-

1. Thilagarajan Selvaraj 
2. Nanthakumar Kannan 

ஃபேஸ்புக்கில் சரியான பதிலை எழுதிஅ மூவர்-

3. Raja Manickam
4. Praveen Selvaraj
5. kabilan Mani

அட்டையை வடிவமைத்துக் கொடுத்த சந்தோஷூக்கு நன்றி. அவரைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். பன்னாட்டு விளம்பர நிறுவனமொன்றில் கொழுத்த சம்பளத்தில் வேலைக்கு இருந்தார். ஆனால் அவருக்கும் சரி அவரது மனைவிக்கும் சரி- நெருக்கடியான நகர வாழ்வில் விருப்பமில்லை. ஆங்கில மருத்துவம், பணம் சார்ந்த வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்தெல்லாம் விலகி இயற்கை வழி மருத்துவம், இயற்கை உணவு, எளிமையான வாழ்க்கை முறை என்று வாழ்கிறவர்கள். அவரைப் பார்த்தால் ‘இப்படித்தான் வாழ வேண்டும்’என்று ஆசையாக இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் என்னால் வாழவே முடியாது என்று அமைதியாகிக் கொள்வேன்.

எப்பொழுதாவது பேசும் போதெல்லாம் ‘இந்த ஃபாஸ்ட் உலகம் வேண்டாம்..வேற ஏதாச்சும் பண்ணுவோம்’ என்பார். நாகர்கோவில் மாதிரியான ஊரில் பிறந்து வளர்ந்தவருக்கு அப்படித்தான் இருக்கும். ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள். ஆனால் சம்பளம், அலுவலகம் என்று இதிலேயேதான் உழல்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் சொன்னது போலவே வேலையை விட்டுவிட்டார். ‘ஒண்ணாம் தேதியானா சம்பளம் வந்துடுச்சான்னு பார்த்துட்டு மீது முப்பது நாளும் அழுத்தத்தில் வாழ வேண்டியதில்லை’ என்று சொல்கிற வித்தியாசமான மனிதர். அவரது கைவசம் தொழில் இருக்கிறது. ஓவியம், கலை, எழுத்து என்று பல்துறை வித்தகர். எப்படியும் வாழ்ந்துவிடுவார். அந்த நம்பிக்கையில் இப்பொழுது அதே துறையில் ‘செயல்’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். விகடனில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் கலைடாஸ்கோப் தொடர் வழியாக பெரும்பாலானவர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கக் கூடும். ஒருவேளை தெரியாதவர்கள் சந்தோஷின் நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

அட்டை வடிவமைப்பைச் செய்து அனுப்பி வைத்த போது கூடவே ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார். ‘அட்டையை விசுவலைஸ் பண்ணுவதற்கு உங்கள் முன்னுரையே எனக்கு போதுமானதாக இருந்தது. முதல் அத்தியாயத்தின் துவக்கமும் கடைசி அத்தியாயத்தின் முடிவும் ஒரே இடத்தில் வந்து முடிச்சிடுவது சூப்பராக இருந்தது’. இப்பொழுதெல்லாம் ட்ரைலரை வைத்தே கதையை முடிவு செய்துவிடுகிறார்கள். சந்தோஷ் நாராயணனும் அப்படித்தான் போலிருக்கிறது. இவரைப் போலவே வாசிக்கிறவர்களும் முன்னுரையை மட்டும் வாசித்துவிட்டு மூடி வைத்துவிட்டால் என்ன செய்வது என்று முன்னுரையை பட்டி பார்த்து டிங்கரிங் செய்துவிடலாமா என்று ஒரே யோசனையாக இருக்கிறது!

உரையாடல்

படிக்காதவர்கள் என்றில்லை படித்தவர்களிடமே கூட மிகப்பெரிய மூடநம்பிக்கை ஒன்றிருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அந்தக் கட்சியை சார்ந்தவர்தான் நமது ஊருக்கு எம்.எல்.ஏவாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியே இருக்கட்டும் கடந்த ஆட்சியில் அதிமுக உறுப்பினர்களில் எத்தனை பேர் அள்ளிக் கொட்டி அவரவர் தொகுதியை சீராட்டிக் குளிப்பாட்டினார்கள்? அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் எத்தனை திமுக உறுப்பினர்கள் தத்தம் தொகுதியை சிங்கப்பூராக மாற்றினார்கள்? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தொகுதிக்காக பாடுபட வேண்டும் என்று விரும்புகிற எம்.எல்.ஏ எந்தக் கட்சியாக இருந்தாலும் பாடுபட முடியும். திருட வேண்டும் என நினைக்கிற எம்.எல்.ஏ எந்த ஆட்சியிலும் திருட முடியும். 

பிரச்சினை கட்சியில் மட்டுமில்லை. நாம் தேர்ந்தெடுக்கிற உறுப்பினர்களிடமும் இருக்கிறது. சட்டமன்றத்தில் குருட்டுவாக்கில் ஆதரித்து லாவணி பாடுவதும், தலையைக் குனிந்தபடி அமர்ந்திருப்பதும், வெளிநடப்பு செய்வதும், வளர்ச்சிப்பணிகளில் கமிஷன் வாங்குவதும், ஸ்கார்ப்பியோ காரில் உள்ளூரில் சுற்றுவதும் மட்டுமே சட்டமன்ற உறுப்பினரின் வேலை இல்லை. எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் துணிந்து குரல் எழுப்ப வேண்டும். அதற்கான தகுதி இருக்கிற வேட்பாளரைக் கண்டுபிடிக்கலாம். கேள்வி கேட்காவிட்டாலும் தொலைகிறது அதிகாரிகளிடம் பேசுகிற திறனிருக்கிற வேட்பாளரை ஆதரிக்கலாம். ஒருவேளை நாம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லையென்றால் துணிந்து கேள்வி கேட்கலாம். அத்தனை எம்.எல்.ஏக்களும் சினிமாவில் வருகிற எம்.எல்.ஏக்களைப் போல வெட்டுகிறவர்களாகவும் குத்துகிறவர்களாகவுமே இருப்பதில்லை என்பதுதான் உண்மை. எண்பது சதவீத எம்.எல்.ஏக்களிடம் நம்மால் கேட்க முடியும். ஆனால் நாம்தான் கேட்பதில்லை.‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று அமைதியாக இருந்து கொள்கிறோம். 

நம்மில் எத்தனை பேர் எம்.எல்.ஏக்களுக்கு ஆலோசனைக் கடிதங்களாவது எழுதியிருக்கிறோம்? பத்துக் கடிதங்கள் சென்றால் பதினோராவது கடிதத்துக்காவது அசைவார்கள். ஒன்று- நாம் கண்டு கொள்ளவே மாட்டோம். இல்லயென்றால் சாலை மறியல் செய்வோம். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி யோசிப்பதே இல்லை என்பதுதானே நிஜம்? ஆனால் அரசியல் மாற்றங்கள் பற்றி உள்ளுக்குள் ஆதங்கப்படுகிறோம்.

மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும். களத்தில் இறங்கி, போராடி , தேர்தலில் நின்றெல்லாம் காமெடி செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அவரவர் பலம் அவரவருக்குத் தெரியாதா? சிறு கல்லை எடுத்துப் போடலாம். சலனம் உண்டாகட்டும். கட்சி, சாதி, அரசியல் சார்பில்லாமல் வேட்பாளரை மட்டும் பார்க்கலாம். நாம் ஆதரிக்கிற வேட்பாளர் வெல்கிறாரா தோற்கிறாரா என்பது இரண்டாம்பட்சம். பொதுமக்கள் வேட்பாளரின் தகுதிகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிற பேச்சு கட்சிகளிடையே எழட்டும். பணமும் அதிகாரம் மட்டுமிருந்தால் வென்றுவிட முடியும் என்கிற நினைப்பில் மண்ணை அள்ளிப் போட வேண்டும்.

இதெல்லாம் ஓரிரவில் நடந்துவிடுகிற காரியமில்லை. வெகு காலம் பிடிக்கும். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து இருக்க வேண்டும். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் அப்புறம் நாடாளுமன்றத் தேர்தல் என்று தேர்தல்கள் வந்து கொண்டேதான் இருக்கும். 

நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால் துணிந்து பேச வேண்டும். தொடர்ந்து உரையாட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை அடையாளப்படுத்தும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். முத்திரை குத்துவார்கள். எதிரிகள் உருவாவார்கள். எல்லாம் நடக்கட்டுமே. என்ன ஆகிவிடப் போகிறது? நம் மனசாட்சிக்குத் தெரிந்ததைப் பேசுவோம். சர்ச்சைகள் இல்லாமல் விவாதங்கள் சாத்தியமேயில்லை. விவாதங்கள் இல்லாமல் மாற்றங்களுக்கு வாய்ப்பேயில்லை. 

நாம் நன்றாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதுவும் பேசக் கூட கூடாது. ஆனால் சமூகத்தில் மாறுதல் உண்டாக வேண்டும் என்றால் எப்படி உருவாகும்? ஒவ்வொரு பிரச்சினைக்கும் தொண்டை நரம்பு புடைக்கக் கருத்துச் சொல்லிவிட்டு தேர்தல் சமயத்தில் ‘எனக்கு அரசியல் பிடிக்காது’ என்பதைப் போன்ற அபத்தம் வேறு என்ன இருக்க முடியும்? நம் ஒவ்வொருவரிடமிருந்து குரல் எழும்பினால் மட்டுமே சாத்தியமாகும். மாற்றம் நம்மிலிருந்துதான் தொடங்கட்டும்.

தகுதியான வேட்பாளர் எந்தக் கட்சியாக இருந்தாலும் வெல்லட்டும். வெல்லப் போகிற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை. வேட்பாளர் தேர்வுதான் மிக அவசியம். அத்தகைய சரியான வேட்பாளர் தேர்வுக்கான துளி பங்களிப்பாவது நம்மிடமிருந்து இருக்க வேண்டும். ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்ற மனநிலையில் ‘எவனோ ஜெயிக்கட்டும்’ என்றால் நிச்சயமாக எவனோதான் ஜெயிப்பான். பணம் இருக்கிறவன்; அதிகாரமிக்கவன்; அராஜகவாதிதான் வெல்வான். 

காமராஜரைக் கூட தோற்கடித்தவர்கள்தானே நாம்? 

‘இவனும் வேண்டாம்; அவனும் வேண்டாம்’ என்று பேசிக் கொண்டேயிருந்தால் என்னதான் நடக்கப் போகிறது? ‘சரி சரியான ஆளை அடையாளம் காட்டு’ என்று கேட்கத்தான் செய்வார்கள். கழுவின மீனில் நழுவுகிற வேலை அரசியலில் ஆகாது. யாராவது ஒருவரை ஆதரிக்கத்தான் போகிறோம். அதை வெளிப்படையாகச் செய்வோம்.

எந்தவிதமான பங்களிப்புமில்லாமல் யாரையாவது வெல்ல அனுமதித்துவிட்டு தேர்தலுக்குத் தேர்தல் ‘ஐந்து வருடங்கள் பதவியில் இருந்தான் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை’ என்று புலம்புவதில் அர்த்தம் எதுவுமில்லை. 

அரசியலால் எனக்கும் உங்களுக்கும் துளி ஆதாயம் இல்லாமல் இருக்கலாம். நட்டமும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிப்படையாக பங்கெடுப்போம். மக்களின் பங்களிப்போடுதான் மாறுதல் நிகழ முடியும். எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளையும் விட்டுவிட்டு திறந்த மனதுடன் விவாதிக்கத் தொடங்குவோம். இங்கே நடந்து கொண்டிருப்பது அத்தனையும் கட்சி சார்ந்த, தலைவர்கள் சார்ந்த விவாதங்கள்தான். அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வேட்பாளர் சார்ந்த விவாதங்களை ஆரம்பிப்போம். அதுதான் சாமானியனின் சரியான அரசியல் செயல்பாடு. மாநில அளவிலான அரசியல் விவாதங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் ஆனால் உள்ளூர் பிரச்சினைகள் சார்ந்த வேட்பாளர்கள் சார்ந்த விவாதங்களையும் உரையாடல்களையும் அந்தந்த ஊர்க்காரர்கள்தான் செய்ய முடியும். அதை ஆரம்பிப்போம். மேலும் மேலும் விவாதிப்போம்!

தேர்தலும் பங்களிப்பும்

நேற்று வாட்ஸப்பில் ஒரு படத்தை அனுப்பியிருந்தார்கள். கடந்த வாரத்தில் நிசப்தம் தளத்தில் எழுதியிருந்த ‘ஏன் ஆதரிக்கிறேன்?’ என்ற கட்டுரையை கோபித் தொகுதிக்குள் சரவணனை விரும்புகிறவர்கள் பிரதி எடுத்து விநியோகித்துக் கொண்டிருப்பதாக அந்தச் செய்தி இருந்தது. ஐந்து பக்கக் கட்டுரை அது. சாதாரண மனிதர்களுக்கு முழுமையாகப் படிக்க பொறுமை இருக்காது. சிலர் அலைபேசியில் அழைத்து கட்டுரையை இரண்டு பக்கத்திற்கு வரும்படியாக சுருக்கித் தந்தால் துண்டுப்பிரசுரமாகவே அச்சடித்துத் தருவதாகச் சொன்னார்கள். தாங்களே சுருக்கினால் கட்டுரையின் சாராம்சம் குறைந்துவிடக் கூடும் என்ற யோசனை அவர்களுக்கு. சனிக்கிழமை இரவு கட்டுரையைச் சுருக்கி முடிக்கும் போது நள்ளிரவு தாண்டியிருந்தது. ஒரு பக்கம் உள்ளூர்க்காரர்கள் இப்படி வேலை செய்து கொண்டிருக்க கைலாஷ் மாதிரியானவர்கள் வேறு மாதிரி ஆதரிக்கிறார்கள்.

கைலாஷூக்கும் கோபித் தொகுதிக்கும் சம்பந்தமேயில்லை. ‘சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஜெயிக்கணும்...ஒரு சிறு தொகையை அனுப்ப விரும்புகிறேன்’ என்றார். அவர் ஏற்கனவே தமிழகத்தின் சில நல்ல வேட்பாளர்களுக்கு தன்னால் முடிந்த தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது லண்டனில் இருக்கும் கைலாஷின் அந்த மின்னஞ்சல் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. அந்த நேரத்திலும் சரவணனுடன் இருக்கும் அவரது நண்பர் பாபுவை அழைத்துப் பேசினேன். ‘எல்லாத்தையும் காசோலையாகவே அனுப்ப சொல்லுங்க...சரவணன் எல்லாத்துக்கும் கணக்கு சரியா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பாரு’ என்றார். எங்கேயிருந்தெல்லாம் நன்கொடை வந்தால் சரி எதிர்பார்ப்பவர்கள் மத்தியில் சரவணன் இப்படித்தான்.

அப்பொழுதுதான் அந்த யோசனை தோன்றியது. பணமாகக் கொடுப்பதற்கு பதில் நாமே துண்டுப்பிரசுரமாக அச்சடித்துக் கொடுத்துவிடலாம். ஆயிரம் பிரதி அச்சடித்தால் ஐநூறு ரூபாய் ஆகும். துண்டுப் பிரசுரத்தில் கட்சி, சின்னம், தலைவர்கள், கொடி என்ற எதுவும் இருக்காது. சரவணனின் நிழற்படம், அவரை ஏன் ஆதரிக்கிறோம் என்கிற இரண்டு பக்க கட்டுரை. அவ்வளவுதான். இதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் அரசியலும் இல்லை. நல்லதொரு மனிதரை ஆதரிக்கிறோம். அது மட்டும்தான் நோக்கம். பணத்தையும் நாம் வாங்க வேண்டியதில்லை. சரவணனுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு நம்பியூர் சிவா பிரஸ் அச்சகத்தின் வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொடுத்துவிடலாம். நன்கொடையாளர்களே நேரடியாக பணத்தை அனுப்பி வைத்துவிடலாம். கணக்கு வழக்கை பராமரித்து சரியான எண்ணிக்கைக்கு ரசீது எழுதி வைத்துக் கொள்வது உள்ளிட்ட வேலைகளை அச்சகத்தினரே பார்த்துக் கொள்வார்கள்.  நோட்டீஸ் களப்பணியாளர்களுக்குச் சென்றுவிடும்.

பிரசுரத்தில் எனது பெயர் வேண்டுமா எனத் தோன்றியது. ஆனால் ஒருவரை முன்னிறுத்தும் போது யாராவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மொட்டையான ஆதரவுக் கடிதமாக இருப்பதில் அர்த்தம் எதுவுமில்லை. என்னுடைய பெயர்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. யாருடைய பெயர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே சொன்னது போல யார் வென்றாலும் தோற்றாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இலாபமுமில்லை. ஆனால் சரவணன் மாதிரியான சிறந்த வேட்பாளர்கள் வெல்ல வேண்டும் என விரும்பித்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன். இப்பொழுது அந்தக் கட்டுரை சரவணனின் வெற்றிக்கு ஒரு படிக்கல்லாக இருக்கிறது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு நல்ல வேட்பாளரை அடையாளம் காண்பதே கூட தேர்தலில் நம்முடைய பங்களிப்புதான் என நினைக்கிறேன்.

சரவணனுக்கு ஆதரவான அலை உற்சாகத்தைத் தருகிறது. தொகுதியில் விசாரித்தால் பணம் மட்டும்தான் சரவணனுக்கு பிரச்சினையாக இருக்கிறது. மற்றபடி மக்களிடையே அவருடைய செல்வாக்கு கூடிக் கொண்டிருக்கிறது. நோட்டீஸ் அச்சடிக்கக் கூட சரவணன் கடன் வாங்கித்தான் செலவு செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அவருக்கு நன்கொடை வந்திருக்கக் கூடும். ஆனால் எதிரில் நிற்கும் செங்கோட்டையனோடு ஒப்பிடும் போது நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரையில் மலைக்கும் மடுவுக்குக்குமான வித்தியாசம் இருக்கும்.

வெளியூர்க்காரர்கள், தொகுதிவாசிகள் என யாராக இருந்தாலும் சரவணனுக்கு உதவ விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம். இதனைக் கோரிக்கை என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் விருப்பம்தான்!

vaamanikandan@gmail.com

                                                             *** 
துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கம்.

ஏன் சரவணனை ஆதரிக்கிறேன்?அரசியல்வாதிகளில் நல்லவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா? எஸ்.வி. சரவணனைப் பற்றி யாராவது பேசும் போதெல்லாம் ‘நல்ல மனுஷன்’ என்பார்கள்.  ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒண்ணு’ என்று நினைத்துக் கொள்வேன். எப்பொழுதோ அவரது சொந்த ஊரான சொக்குமாரிபாளையத்து வழியாகச் செல்லும் போது கட்டியும் கட்டாமல் நிற்கும் அரைக்கட்டிடத்தைக் காட்டி ‘மேற்கொண்டு கட்ட காசு இல்லாம நிறுத்தி வெச்சிருக்காரு’ என்றார்கள். அப்பொழுதுதான் உறைத்தது அவர்கள் சொன்ன ‘நல்ல மனுஷன்’ என்ற அடைமொழிக்கான அர்த்தம். 

உள்ளாட்சி அமைப்புகளில் காசு பணத்துக்கா பஞ்சம்? 

தொட்டதெல்லாம் பொன் என்பது போல உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த வரையிலும் கை வைக்குமிடமெல்லாம் கமிஷன். அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து வருடங்கள் ஒன்றியப் பெருந்தலைவராகவும் (Panchayat Union Chairman), இன்னொரு ஐந்து வருடங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் (Panchayat Union Councillor), அடுத்த ஐந்து வருடங்கள் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் (District Panchayat Chairman) பணியாற்றியவர் சரவணன். மூன்றுமே ஒன்றை விட ஒன்று விஞ்சக் கூடிய கொழுத்த வருமானம் கொட்டக் கூடிய பதவிகள். அப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்துவிட்டு வீடு கட்டக் காசு இல்லை; அப்பன் சம்பாதித்து வைத்த வறண்ட நிலத்தைத் தவிர சொத்து ஒன்றுமில்லை; சுமாரான கதர்ச்சட்டையைத் தவிர ஆடம்பர ஆடைகள் இல்லை என்று இருக்கிற மனிதனைப் பார்த்து ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து சிறந்த வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் ஐந்து இடங்களில் சரவணன் நிச்சயமாக இடம்பிடிப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். அவ்வளவு நேர்மையான மனிதர் இந்தச் சரவணன். கிடைத்ததையெல்லாம் வாரிச் சுருட்டுகிறவர்களுக்கு மத்தியில் சரவணன் மாதிரியான அரசியல்வாதிகள் விதிவிலக்குகள். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திருடி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கண்களுக்கு சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஆசுவாசமாகத் தெரிகிறார்கள். 

ஒன்றரை வருடங்கள் கவுன்சிலராக இருந்தவனெல்லாம் மாட மாளிகையில் வாழும் போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருந்தபடி சுமாரான கதர் சட்டையுடன் வாக்குக் கேட்டுக் களத்தில் இறங்கும் சரவணனின் பெரும்பலமே அவருடைய நேர்மைதான். திரும்பிய பக்கமெல்லாம் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் நேர்மை என்ற ஒற்றைக் குணத்திற்காகவே சரவணனை ஆதரிக்கத் தோன்றுகிறது.

பதவியில் இருந்த போது நம்பியூர் பகுதியில் அவர் மேற்கொண்ட வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர்த் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் என பெரும் பட்டியலைத் தயாரிக்கலாம். அதே சமயத்தில் அவரால் முயற்சி செய்யப்பட்டு, ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகளால் காழ்ப்புணர்வால் முடக்கி வைக்கப்பட்ட கோபி கீரிப்பள்ளம் மேம்பாட்டுத் திட்டம், நகராட்சிக்கான பாதாளச் சாக்கடைத் திட்டம், வறட்சி நிவாரண நிதி முடக்கம் என்ற தனிப்பட்டியலையும் தயாரிக்க முடியும். 

சரவணனுக்கான பிரச்சாரத்தை இளைஞர்கள்  ஆரம்பித்துவிட்டார்கள். சாரி சாரியாக குவிகிறார்கள். எந்தப் பிரதிபலனும் பாராமல் சேர்ந்திருக்கிற கூட்டம் இது. தினமும் அவரைப் பற்றிய இரண்டு செய்திகளையாவது செல்போன்களின் வழியாக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். மருந்துக்கடைகளிலும், டீக்கடைகளிலும் மக்கள் சரவணனைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சரவணனுக்கு ஆதரவான இந்த அலைதான் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கப் போகிறது.

தொகுதியில் யாரிடம் பேசினாலும் ‘சரவணன் நல்ல மனுஷனப்பா’ என்கிறார்கள். இந்தக் காலத்தில் இப்படியொரு பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பதே பாதி வெற்றிதான். சரவணனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை அவசியமில்லை. இத்தகைய நேர்மையான மனிதர் ஒருவர் நிற்கும் தொகுதியில் வாக்களிப்பதே சந்தோஷமாக இருக்கிறது.  இவ்வளவு நேர்மையாளரை எப்படியும் மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பதினைந்து வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய பதவிகளில் இருந்த ஒரு மனிதர் இப்பொழுதும் வாடகைக்கு குடியிருப்பதுதான் அதிசயம். கோடிகளில் புரண்டிருக்க வாய்ப்பிருந்தும் கடன்களைச் சுமந்து கொண்டிருக்கிறார். வசதிகளில் திளைத்திருக்க வேண்டியவர் பழைய வேஷ்டி சட்டையில் வலம் வருகிறார். நினைத்துப் பார்த்தால் கண்ணீர் வருகிறது. இவரைப் போன்றவர்கள்தான் ஜெயிக்க வேண்டும். முப்பதாண்டு காலமாக எந்த வளர்ச்சிப்பணியும் நடைபெறாத கோபித் தொகுதியில் சரவணன் போன்றவர்கள் வெல்ல வேண்டும். தலையைக் குனிந்தபடியே இருப்பவர்களுக்கு மத்தியில் எழுந்து கேள்வி கேட்கிறவரை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்போம். தொகுதிக்கு வருகிற நல்ல திட்டங்களையெல்லாம் முடக்கி வைக்கிறவர்களுக்கு மத்தியில் மக்களுக்காக சாலையில் இறங்கி போராடுகிறவர்களைத் தேர்ந்தெடுப்போம். 

நம் தொகுதியின் நல்ல வேட்பாளரை நமக்குத் தெரிந்தவரிடமெல்லாம் அடையாளம் காட்டுவோம். தீர்ப்பை மக்கள் எழுதட்டும்.

அன்புடன்,
வா.மணிகண்டன்
நிசப்தம்.காம்

Apr 22, 2016

தெண்டி மோனே

நேற்று எங்கள் அலுவலகத்தில் ஒரு விழா. டீ-ஷர்ட் அணிந்து வரச் சொன்னார்கள். அலுவலகத்திலேயே கொடுத்ததுதான். கல்லூரி காலத்திற்குப் பிறகு டீஷர்ட், ஜீன்ஸ் அணிவதேயில்லை. டீ-ஷர்ட் அணிந்தால் ஜீன்ஸ்தான் அணிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்பதால் என்ன செய்வதென்று குழப்பம். என்னிடமில்லை. வேணியிடம் ஒழுங்காகக் கேட்டிருக்கலாம். வாயில்தான் வெடிகுண்டை வைத்துக் கொண்டு சுற்றுகிறேனே? ‘இன்னைக்கு பொண்ணுங்க எல்லாம் ஜீன்ஸூம் டீஷர்ட்டும் சூப்பர் சூப்பரா வருவாங்க..இதுக்கு பொருத்தமா எனக்கு நல்ல பேண்ட்டா எடுத்துக் கொடுத்துட்டு போ’ என்றேன். முறைத்தாள். அவள் கிடக்கிறாள். கடந்த வாரத்தில்தான் தாடியில் ஒற்றை வெள்ளை முடியைக் கண்டுபிடித்தேன். இருக்கிற பிரச்சினையில் இதுவொரு புதுப்பிரச்சினை. இப்பொழுதெல்லாம் ஹெல்மெட் அணிந்திருந்தாலாவது இரண்டொரு பெண்கள் பார்க்கிறார்கள். வண்டியை நிறுத்தி தலைக்கவசத்தைக் கழற்றினால் அவ்வளவுதான். அசிரத்தையாக முகத்தைத் திருப்புவார்கள் பாருங்கள். பவர்ஸ்டார் மாதிரியாகவோ பாரிவேந்தர் மாதிரியாகவோ ஒரு அட்டகாசமான விக் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு இவர்களை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

பெண்கள் நன்றாக வருவார்கள் அதனால் நானும் நன்றாக அணிய வேண்டும் என்றவுடன் வேணிக்கு உலக மகா கடுப்பு. ஏதோ ஒரு கால்சட்டையை எடுத்துக் கொடுத்து ‘இது போதும் போங்க’ என்றாள். உள்ளுக்குள் எப்படியெல்லாம் கறுவி என்னவெல்லாம் சாபம் விட்டாளோ அந்த மலையாள பகவதிக்குத்தான் வெளிச்சம். இந்த இடத்தில் மலையாள பகவதி யார் என்ற கேள்வி வர வேண்டுமே. கொசுவர்த்தியை ஒரு சுற்று சுற்றினால் இரண்டொரு வாரங்களுக்கு முன்பாக ஒரு பெண்மணியைப் பற்றி எழுதியது ஞாபகத்துக்கு வரலாம். பெங்களூரின் மகாத்மா காந்தி சாலையில் தனித்துச் சுற்றுகிற பெண்மணி. மனநிலை சரியில்லாதவர். அவர் நேற்று கண்ணில்பட்டுவிட்டார். ‘சாய் பாய்ண்ட்’ தேநீரகத்தில் அவருக்கு யாரோ ஒரு காகிதக் குடுவையில் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். இன்னொரு கையில் நீண்ட குச்சியொன்றையும் தோளில் துணிப்பை ஒன்றையும் வைத்திருந்தார். 

வீட்டில் பற்ற வைத்திருந்த குண்டு என் வாயில் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து கொண்டிருந்தது. எப்படியாவது விசாரித்து அந்தப் பெண்மணியின் குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்கிற நினைப்பில் மெலிதாகப் புன்னகைத்தேன். என்னைப் பார்த்தவுடன் அந்தப் பெண்மணி முறைத்தார். கையில் வைத்திருக்கும் குச்சியில் விளாசிவிடுவாரோ என்று சற்று பயந்து நான்கைந்தடி முன்னால் நகர்ந்து வேடிக்கை பார்ப்பது போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் திரும்பி ஓரக் கண்ணில் அவரைப் பார்த்தேன். அவருடைய முறைப்பு அப்பொழுதும் என்னை நோக்கியே இருந்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடலாமா என்று ஒரு வினாடி ஞான திருஷ்டி உதயமானது. ‘ஆனானப்பட்ட ஒபாமாவையே சட்டையைப் பிடித்துக் கேட்கிற ஆளு நீ..இதுக்கு பயப்படலாமா?’ என்று உள்ளுக்குள் அசிரீரி கேட்டுத் தொலைத்தது. பேஸ்மெண்ட்டை கொஞ்சம் வலுவாக்கிக் கொண்டு இன்னொரு முறை சிரித்தேன். வெறும் இரண்டேகால் மில்லி மீட்டர் சிரிப்புதான் அது. மற்றவர்களுக்கு அது சிரிப்பாகவே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.

‘தெண்டி மோனே’ என்று கத்தியபடி கையிலிருந்த தேநீரை விசிறியடித்தார். எந்தச் சாமி கையைப் பிடித்து இழுத்ததோ தெரியவில்லை- இரண்டடி பின்னால் நகர்ந்தேன். தலையிலிருந்து ஊற்றியிருக்க வேண்டியது என்னுடைய சாமர்த்தியத்தால் தொடையிலிருந்து ஊற்றியிருந்தது. சுட்டெரிக்கும் நாற்பது டிகிரி வெயிலிலில் எண்பது டிகிரி தேநீர் தொடையில் குளுகுளுவென்றிருந்தது. அந்த இடத்தில் கழற்றவா முடியும்? துணி தொடையில் படாமல் மேலாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். உள்ளுக்குள் உஸ்ஸூ உஸ்ஸூ என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் காணாததைக் கண்டது போல பார்த்தார்கள். ‘போயும் போயும் பைத்தியகாரக் கிழவியிடம் வேலையைக் காட்டியிருக்கிறான்’ என்று நினைத்திருக்கக் கூடும். அதுவும் அந்தப் பக்கமாக நின்றிருந்த பெண்களின் பார்வை கூசச் செய்தது. ஒரேயொரு ஆள் வந்து ‘வேற எங்கேயும் படல இல்ல?’ என்றான். ‘தொடை வரைக்கும் சுடுது சார்...அதுக்கு மேல இல்ல’ என்றேன். அவனுக்கு இருந்த மொத்த ஆர்வமும் வடிந்துவிட்டது. இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான். தொடைக்கு மேலாகவும் சுட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு என்ன அவ்வளவு ஆசையோ தெரியவில்லை.

இனியும் அந்த இடத்தில் நின்றால் ஒபாமாவே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று தோன்றியது. அந்தப் பெண்மணி கத்திக் கொண்டேயிருந்தார். அநேகமாக மலையாளக் கெட்ட வார்த்தைகள். அவசர அவசரமாக இடத்தை விட்டு நகர்ந்தேன். எல்லோரும் என்னை பார்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. தேநீர் நனைத்திருந்த கால்சட்டையோடு அலுவலகத்துக்குச் செல்ல முடியும் என்று தோன்றவில்லை. கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். சாலையில் இருக்கிறவர்கள் பொம்பளைப் பொறுக்கி என்று நினைத்தால் தொலைகிறது. அலுவலகத்திலும் தெரிந்தால் அசிங்கமாகிவிடும். பைக்கைக் கிளப்பிக் கொண்டு வீட்டுக்குச் சென்றேன். நல்லவேளையாக வீட்டிய்ல் யாருமில்லை.

துணியெல்லாம் மாற்றிக் கொண்டு 1091க்கு அழைத்தேன். அது பெண்களுக்கான உதவி மையம். இணைப்பு கிடைக்கவேயில்லை. கடைசியாக இணைப்புக் கிடைத்த போது பேசிய பெண்மணி நிச்சயமாக உதவுவதாகச் சொன்னார். ஆனால் எப்படி உதவப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ‘ஹாய் ஹவ் ஆர் யூ’ என்று செய்தி அனுப்பி சாதாரணமாக இருக்கிற பெண்ணிடமே வாங்கிக் கட்டிக் கொள்கிற வகையறாவைச் சார்ந்தவன் நான். இந்த மாதிரியான பெண்ணிடம் பேசுவதற்கு முன்பாக சற்றேனும் முன் தயாரிப்பைச் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி நடுச்சாலையில் தெண்டி மோனே ஆக வேண்டியதுதான். அடுத்த முறை தயாரித்துக் கொண்டு போய் பேசிப் பார்க்கிறேன்.

நிசப்தம் அறக்கட்டளையின் மூலமாக பணம் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது மட்டும்தானா என்று யாராவது கேட்டால் உடனடியாக பதில் சொல்லத் தெரியாது. அடுத்த கட்டம் என்பது பற்றி யோசித்ததேயில்லை. ஆனால் சமீபகாலமாக ஆதரவற்ற பெண்களுக்கு உதவுகிற வகையிலான செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் பெண்மணிதான் அதற்கான உந்துதலாக இருக்கப் போகிறாள் என்று நினைக்கிறேன்.

Apr 21, 2016

பஞ்சு மிட்டாய்

பிரபு ராஜேந்திரன் நல்ல வாசகர். வாசகர் என்றால் நான் எழுதுவதை வாசிக்கிறவர் இல்லை. நல்ல எழுத்தாளர்கள் எழுதுவதையெல்லாம் வாசித்துவிடுவார். வாசித்தவை குறித்து நிறையப் பேசவும் செய்வார். ஒரு முறை பெங்களூரில் சந்தித்துக் கொண்டோம். அமர்ந்து பேசுவதற்கு தோதான இடம் வாய்க்கவில்லை. பெலந்தூர் ஏரிப்பக்கம் சென்று நின்று கொண்டே பேசினோம். ஓராள் சிக்கிக் கொண்டார் என்கிற நினைப்பில்‘அதை வாசிச்சிருக்கீங்களா? அதை வாசிச்சிருக்கீங்களா?’ என்று சில புத்தகங்களின் பெயரை எல்லாம் கேட்டேன். வாசித்திருந்தார். திருப்பி அதே கேள்வியைக் கேட்டார். ‘இங்க வெயிலா இருக்கு...இன்னொரு நாளைக்கு பேசலாமா?’ என்று கிளம்பி வந்துவிட்டேன். அதன் பிறகு அவரைப் பார்த்ததாகவே ஞாபகமில்லை.

நல்லவேளையாக இப்பொழுது குழந்தைகள் பக்கம் திரும்பிவிட்டார். பெங்களூரில் குழந்தைகளை அழைத்து வைத்து கதை சொல்கிறார்கள். பெற்றவர்கள் குழந்தைகள் எல்லோரும் கூடுகிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் பெயரே ‘கதை சொல்லப் போறோம்’. கிட்டத்தட்ட இருபதாவது நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்ததுண்டு. ஆனால் வாரக் கடைசியில் பெங்களூர் வீட்டில் இருந்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் எங்கேயாவது ஓடிவிடுகிறேன். பிரபு அழைக்கும் போதெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டேயிருக்கிறேன். கூட்டம் மட்டும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது அடுத்த கட்டத்துக்கும் நகர்ந்துவிட்டார்கள். ஐந்து பேர் கொண்ட ஆசிரியர் குழுவொன்றை வைத்து குழந்தைகளுக்கான இதழ் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். பஞ்சுமிட்டாய் என்று பெயர். இதழை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார்கள்.

குழந்தைகள் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கதை, குழந்தைகளுக்கான பாடல், சிறுமியின் சிறுகதை, புதிர் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள். இருபத்து இரண்டு பக்க இதழ் இது. தமிழ் வாசிக்கத் தெரிந்த குழந்தை இருந்தால் அச்செடுத்துக் கொடுத்துவிடலாம். மெதுவாக வாசிப்பார்கள். அர்த்தம் கேட்கும் போது சொல்லிக் கொடுக்கலாம்.

இதழில் சில குறைகள் இருக்கின்றன. ஒருவேளை அடுத்தடுத்த இதழ்களில் அவற்றையெல்லாம் களையவில்லையெனில் விரிவாகப் பேசலாம். இப்போதைக்கு இந்த முயற்சி வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியது.

பஞ்சுமிட்டாயின் முதல் இதழ் எங்கேயிருக்கிறது என்று தெரியவில்லை. இரண்டாவது இதழை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அடுத்த தடவையிலிருந்து இதழ் வேண்டுகிறவர்கள் பிரபுவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தால் தனது பட்டியலில் சேர்த்துக் கொள்வார் என நினைக்கிறேன். இத்தகைய சிற்றிதழ்கள் முயற்சிகள் அவ்வப்போது நடைபெறும். பிறகு திடீரென்று நின்றுவிடும். பிரபு ராஜேந்திரனுடன் இந்த இதழுக்காக வேலை செய்கிற மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை- பிரபுவுக்கு இப்பொழுதுதான் குட்டிக் குழந்தை. அந்தக் குழந்தை கல்லூரி செல்லும் வரைக்குமாவது இந்த வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென விரும்புகிறேன். ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

மின்னஞ்சல்: prabhu.thi@gmail.com 

எதிர்காலம்

உங்களின் கல்வி குறித்த கட்டுரை பார்த்தேன், 

எனது மகன் +2 (சென்ட்ரல் போர்ட் ) எழுதி உள்ளார், தேர்ட் குருப் எடுத்து பி.பி.எ படிக்க விருப்பத்தில் உள்ளார்.

பத்தாம் வகுப்பில் 8.8 எடுத்தார். நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன், அவருக்கு பெங்களுருவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னதினால், கிரைஸ்ட் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பித்துள்ளோம். கிடைத்தால் சந்தோஷம். இல்லையெனில் வேறு நல்ல கல்லூரிகளில் வேண்டும்.

வேறு எந்தக் கல்லூரிகள் சரியானவையாக இருக்கும்?

அப்துல் நாசர்.

அன்புள்ள திரு.அப்துல் நாசர்,

வணக்கம்.

மாணவருக்கு விருப்பமும் சரியான புரிதலும் இருப்பின் கலை, அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த படிப்புகளை எடுப்பது சரியான தேர்வு. ஆனால் இத்தகைய படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் தான் எதற்காக இந்தப் படிப்பை படிக்கிறோம், படித்து முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் உள்ளிட்டவை குறித்தான ஒரு புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படியான புரிதல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. இரண்டு கேள்விகளைக் கேளுங்கள்.

ஏன் பிபிஏ படிக்க விரும்புகிறார் என்பது முதல் கேள்வி. அதற்கு அவரிடம் சரியான பதில் இருந்தால் விட்டுவிட்டு அடுத்த கேள்விக்குச் சென்றுவிடலாம். இல்லையென்றால் அது குறித்தான தெளிவான புரிதல் உருவாவதற்கான வழிவகைகளை நாம் செய்து தர வேண்டும். துறை சார்ந்த நல்ல கல்லூரிப் பேராசிரியரிடம் அரை மணி நேரம் பேசினால் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடித்துவிடலாம். படிப்பு குறித்து தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகும் அவர் பிபிஏதான் படிக்க வேண்டும் என விரும்பினால் படித்து முடித்துவிட்டு என்ன செய்யவிருப்பதாக உத்தேசம் என்கிற கேள்விக்கும் அவருக்கு பதில் தெரிய வேண்டும். ஒருவேளை தெளிவான பதில் இல்லையென்றால் பிபிஏ படித்தால் என்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? என்னவிதமான உயர்படிப்புகளைப் படிக்கலாம் உள்ளிட்டவை குறித்தான புரிதலை உருவாக்க வேண்டியது நமது கடமை.

இது பிபிஏ படிப்புக்கு மட்டுமில்லை- கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக அது எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த அடிப்படையான புரிதல் அவசியம்.

படிப்பை முடிவு செய்துவிட்டு கல்லூரியை யோசிக்கலாம்.

பெங்களூரின் கிறைஸ்ட் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த தேர்வு. ஆனால் கடும் போட்டி நிலவும். நுழைவுத் தேர்வு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். கலை அறிவியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் கல்லூரியில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். இத்தகைய படிப்பைப் படிக்கிற மாணவர்களுக்கு வெளியுலகம் தெரிய வேண்டியது மிக முக்கியம். மாணவர்களுக்கு உச்சபட்ச exposure அளிக்கக் கூடிய கல்லூரிகளாகத் தேர்ந்தெடுங்கள். அதுவே பாதி வெற்றி அடைந்த மாதிரிதான். லயோலா, திருச்சி செயிண்ட் ஜோசப், கோவை பிஎஸ்ஜி போன்ற பல கல்லூரிகளைப் பட்டியலிடலாம்.

வேறு ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அன்புடன்,
மணிகண்டன்

                                                             ***

வணக்கம் திரு,மணிகண்டன்

கல்லூரி படிப்பு சம்பந்தமான சந்தேகம்

என் சொந்த ஊர் சிவகாசி. என் தங்கை மகன் +12  கம்ப்யூட்டர் சயின்ஸ் எழுதியிருக்கிறான், 10ம் வகுப்பில் 483 மார்க், வீட்டில் அவன் தம்பியுடன் சண்டையிட்டபடியும், டிவி போனை பார்த்துக்கொண்டும், ரொம்பவும் மெனக்கெடாமல் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான், +2வில் கணிதத்துக்கு மட்டும் தனிப்பயிற்சிக்குச் சென்றான். மற்றபடி பாடங்கள் எல்லாம் அவனாகப் படிப்பதுதான்.  பொறியியல் படிப்பு வேண்டாம் என்றான். ‘வேறு என்ன ஐடியா’ என்று கேட்டாலும் ஒன்றும் இல்லை என்கிறான்.

பொறியியல் படிப்பு என்றால் பயமா? அல்லது படிக்க சோம்பேறிதனமா? அல்லது குடும்ப நிலைமையை நினைத்து யோசிக்கிறானா என்று சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

பலவாறு முயற்சித்தும், எந்த சப்ஜெக்ட்டில் ஆர்வம் என்று கேட்டால் எல்லா பிள்ளைகளையும் போல கம்ப்யூட்டர் என்றுதான் சொல்கிறான். கணிதம் அவனுக்கு எளிமையாக இருக்கிறது என்று நம்புகிறான். மிக இலகுவாக குறைந்த முயற்சியிலேயே நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய திறமை பெற்றவனை கலைக்கல்லூரியில் சேர்ப்பதா என்று ஒரு தயக்கம் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.

அவனின் திறமையை எப்படி கண்டறிவது? கற்பூரம்போல பட்டென்று  பற்றிக் கொள்ளகூடிய அளவிற்கு அவனுக்கு எந்தப் பாடப்பிரிவு இருக்கும்? அவனுக்குள் இருக்கும் வேறு திறமைகள் என்ன அந்தப்பாடப்பிரிவுக்கு என்ன எதிர்காலம்? எந்ததெந்த துறைகளில் மற்றும் எந்தெந்த ஊர்களில் இருக்கிறது என்பதை பற்றி கொஞ்சம் ஆலோசனை வழங்கவும். அவனை நேரிடையாக கவுன்சிலிங் செய்யவும் தயாராக இருக்கிறேன்,

உங்கள் பதிலுக்காக-

இப்படிக்கு 1993லேயே டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு உள்ளூரில் ஏதோ ஒரு வேலைபார்த்துக்கொண்டு இப்போது கம்ப்யூட்டர் டிடிபி வைத்து திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் ஒரு சுமாரான அறிவாளி, 1988 10ம் வகுப்பில் நான் 403, இப்போது புரிந்திருக்கும் நான் எதற்காக என் தங்கை மகனுக்கா இப்படி பரபரப்பாக ஆலோசனை கேட்கிறேன் என்று.

ஆர்.டி.முருகன்


அன்புள்ள திரு.முருகன்,

இந்தக் கேள்வி மிகப் பரந்துபட்டது. நூற்றுக்கணக்கான பதில்களை உள்ளடக்கிய கேள்வி இது.

ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்- இந்தக் காலத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பொருட்படுத்த வேண்டாம். அதிசயிக்கத்தக்க மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் கூட பனிரெண்டாம் வகுப்பில் கவாத்து அடிப்பது நடக்கிறது. அதனால் மதிப்பெண் வரும் வரைக்கும் காத்திருங்கள். மதிப்பெண்கள் குறைந்துவிடக் கூடும் என்கிற பயத்தில் கூட பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. நான் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்ற அடிப்படையில்தான் இதைச் சொல்கிறேன்.

பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொன்னால் நிச்சயமாக மகிழ்ச்சியடையலாம். ஆனால் பொறியியல் வேண்டாம் என்கிற பட்சத்தில் வேறு என்ன படிக்க விரும்புகிறார்? கம்யூட்டரில் ஆர்வம் என்றால் பிசிஏவா அல்லது பி.எஸ்ஸி கம்யூட்டர் சயின்ஸா? எந்தக் கல்லூரியில் படிக்க விரும்புகிறார் உள்ளிட்ட கேள்விகளுக்கு அவரிடம் பதிலைக் கண்டுபிடியுங்கள். ஓரளவுக்குத் தெளிவான பதிலைச் சொன்னால் அவர் குறிப்பிடும் கல்லூரியின் வசதிகள் குறித்து விசாரித்து வையுங்கள். எந்தவிதமான புரிதலுமில்லாமல் ‘நான் கம்யூட்டர் படிக்கிறேன்..ஆனா காலேஜெல்லாம் தெரியாது’ என்று சொன்னால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அந்தக் குழப்பத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பொறுமையாக விவாதியுங்கள். வெவ்வேறு படிப்புகளைப் பற்றியும் அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் திறந்த மனதுடன் பேசுங்கள். ‘இதைத்தான் இவன் படிக்க வேண்டும்’ என்ற முன்முடிவு எதுவுமில்லாமல் விவாதம் இருக்கட்டும். ஒருவேளை சரியான முடிவுக்கு வர முடியவில்லை என்றால் நான் அவரிடம் பேசுகிறேன். 

மற்றபடி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சிறு அறிவுரை- பொறியியல் படித்தவனெல்லாம் உருப்பட்டுவிடுவதுமில்லை. கலைக்கல்லூரியில் படித்தவனெல்லாம் காணாமல் போய்விடுவதுமில்லை. கல்லூரி, படிப்பு, குறிப்பாக மாணவரின் திறமை என எல்லாமும் சேர்ந்ததுதான் ஒரு மாணவரின் எதிர்காலம். படிப்பு மட்டுமே வெற்றியாளர்களை உருவாக்கிவிடுவதாக இருந்தால் சில கல்லூரிகள் மட்டும்தான் நிரம்பும். அப்படியெல்லாம் எதுவுமில்லை. சரியான படிப்பு, நல்ல கல்லூரி, சேர்க்கைக்குப் பிறகு மாணவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்களில் கவனம் செலுத்துவது- இவையெல்லாம்தான் முக்கியம். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர் பொறியியல் படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டால் பினாத்த வேண்டியதில்லை.

சனி, ஞாயிறு தவிர மற்ற தினங்களில் மாலை நேரத்தில் அழையுங்கள். விரிவாகப் பேசலாம்.

அன்புடன்,
மணிகண்டன்.

Apr 20, 2016

ஏன் ஆதரிக்கிறேன்?

கடந்த காலத்தில் சரவணனைப் பற்றி யாராவது பேசும் போதெல்லாம் ‘நல்ல மனுஷன்’ என்பார்கள். அவ்வளவுதான் எனக்கும் தெரியும். எப்பொழுதோ அவரது சொந்த ஊரான சொக்குமாரிபாளையத்து வழியாகச் செல்லும் போது கட்டியும் கட்டாமல் நிற்கும் அரைக்கட்டிடத்தைக் காட்டி ‘மேற்கொண்டு கட்ட காசு இல்லாம நிறுத்தி வெச்சிருக்காரு’ என்றார்கள். அப்பொழுதுதான் உறைத்தது அவர்கள் சொன்ன ‘நல்ல மனுஷன்’ என்ற அடைமொழிக்கான அர்த்தம். கட்டப்படாமல் நிற்கும் அந்த வீட்டை விட்டுவிட்டு சரவணன் இப்பொழுது கோபியில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வாடகை வீட்டில் குடியிருப்பது பெரிய விஷயமில்லை- ஆனால் பதினைந்து வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகளில் மிகப்பெரிய பதவிகளில் இருந்த ஒரு மனிதர் அதற்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருப்பதுதான் அதிசயம். 


உள்ளாட்சி அமைப்புகளில் காசுக்கா பஞ்சம்? 

பெரிய பேரூராட்சி ஒன்றின் தலைவரிடம் ‘பிரசிடண்ட் போஸ்ட் வேணுமா? எம்.எல்.ஏ ஆகுறீங்களா?’ என்றால் ‘எனக்கு பிரெசிடெண்ட் பதவியே போதும்’ என்று பவ்யம் காட்டுவார். அது பவ்யமில்லை. எம்.எல்.ஏ பதவியை விடவும் உள்ளாட்சி அமைப்புகளில்தான் காசு கொட்டுகிறது என்று அர்த்தம். தொட்டதெல்லாம் பொன் என்பது போல உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த வரையிலும் கை வைக்குமிடமெல்லாம் கமிஷன். அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து வருடங்கள் ஒன்றியப் பெருந்தலைவராகவும் (Panchayat Union Chairma-Nambiyur), இன்னொரு ஐந்து வருடங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் (Panchayat Union Councillor-Gobi Assembly), அடுத்த ஐந்து வருடங்கள் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் (District Panchayat Chairman- Erode Dist) பணியாற்றியவர் சரவணன். மூன்றுமே ஒன்றை விட ஒன்று விஞ்சக் கூடிய கொழுத்த வருமானம் கொட்டக் கூடிய பதவிகள். அப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்துவிட்டு வீடு கட்டக் காசு இல்லை; அப்பன் சம்பாதித்து வைத்த வறண்ட நிலத்தைத் தவிர சொத்து ஒன்றுமில்லை; சுமாரான கதர்ச்சட்டையைத் தவிர ஆடம்பர ஆடைகள் இல்லை என்று இருக்கிற மனிதனைப் பார்த்து ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?

அப்படித்தான் ஆச்சரியமாக இருக்கிறது. Brutually Honest என்பார்கள் அல்லவா? அதற்கு வாழும் உதாரணம் சரவணன். சரவணனைத்தான் கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் வேட்பாளராக இறக்கியிருக்கிறார்கள். சரவணன் மாதிரியான வேட்பாளரை நிறுத்தும் போதும் தயக்கமேயில்லாமல் ஆதரிக்கத்தான் தோன்றுகிறது. நேர்மையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட எளிய மனிதர்கள் வென்று சட்டமன்றம் செல்வதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. 

காங்கிரஸூக்கு வாக்களிக்கலாமா என்கிறார்கள்? கட்சியைப் பார்த்து வாக்களித்துத்தான் இருளுக்குள்ளேயே கிடக்கிறோம். எந்தக் கட்சியில் நூறு சதவீதம் நல்லவர்கள் இருக்கிறார்கள்? அல்லது எந்தக் கட்சியில் நூறு சதவீதம் கெட்டவர்கள் இருக்கிறார்கள்? 

அதிமுகவில் செங்கோட்டையன் வேட்பாளர். கடந்த முப்பதாண்டுகளாக எங்கள் தொகுதிக்கு அவர்தான் எம்.எல்.ஏ. கடந்த ஐந்தாண்டுகளில் சட்டமன்றத்தில் கேள்வியே கேட்காத உறுப்பினர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இன்றைய சூழலில் ஜெயலலிதாவுக்கு எண்ணிக்கை மட்டும்தான் முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் இதுவரை பற்கள் பிடுங்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கத்துக்கெல்லாம் வாய்ப்பளித்திருக்கிறார். ஒருவேளை வென்றாலும் கூட இவர்கள் எல்லாம் வெறும் நெம்பர்களாக மட்டும்தான் இருக்கப் போகிறார்கள். அப்படியிருக்கும் போது எந்த விதத்தில் ஆதரிக்க முடியும்? மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முனுசாமி என்பவர் நிற்கிறார். ஆனவரைக்கும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். முழுமையான விவரங்களை ஒருவரும் சொல்லவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பார்த்தாலும் சுயேட்சைகளிலும் குறிப்பிடத்தக்கவர் என்று யாரைப் பற்றியும் தகவல் இல்லை. இப்படி தகுதியானவர்கள் யாருமே இல்லை என்பதற்காக சரவணனை ஆதரிக்கவில்லை. தமிழகத்தின் சிறந்த வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் முதல் ஐந்து இடங்களில் நிச்சயமாக இடம்பிடிப்பார் என்கிற உறுதியுடன் தான் ஆதரிக்கிறேன். சிறந்த மனிதரொருவர் களத்தில் நிற்கும் போது தயங்காமல் தோளை நீட்டுவதுதான் ஒரு சாமானியனுக்கு அழகு. நானொரு சாமானியன்.

நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம். அவர் எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தவறேதுமில்லை. சட்டமன்றத்தில் நமக்காக பேசுகிறவராக இருக்கட்டும். தனக்காக பத்து பைசாவை ஒதுக்காதவராக இருக்கட்டும். மக்களுக்கு வர வேண்டிய நிதியை திருடத் தெரியாதவராக இருக்கட்டுமே! நேர்மை ஒரு பண்பு மட்டும் போதுமா என்று கேட்கிறவர்களிடம் திருப்பிக் கேட்க ஒரு கேள்வி மட்டும்தான் இருக்கிறது. அதிகாரத்திற்கு வருபவர்களிடம் அந்த ஒரு பண்பு மட்டுமில்லையென்றால் வேறு என்னதான் இருந்தும் என்ன பயன்? 

கிடைத்ததையெல்லாம் வாரிச்சுருட்டுகிற அதிகார வர்க்கத்தில் சரவணன் மாதிரியான அரசியல்வாதிகள் விதிவிலக்குகள். இந்தக் காலத்தில் கூட இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார். அவரை வேட்பாளராக அறிவித்தவுடன் உணர்ச்சிவசப்பட்டெல்லாம் இதை எழுதவில்லை. ‘அநேகமாக இவர்தான் வேட்பாளர்’ என்று யூகங்கள் சுற்றத் துவங்கிய தருணத்திலிருந்தே விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொகுதி முழுக்கவுமே அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம்தான் இருக்கிறது. நம்பியூர் பகுதியில் அவர் மேற்கொண்ட வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர்த் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களையெல்லாம் உள்ளூரிலேயே விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம் அதே சமயத்தில் அவரால் முயற்சி செய்யப்பட்டு, ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகளால் காழ்ப்புணர்வால் முடக்கி வைக்கப்பட்ட கீரிப்பள்ளம் மேம்பாட்டுத் திட்டம், வறட்சி நிவாரண நிதி முடக்கம் போன்ற பெரும் பட்டியலையும் தயாரிக்க முடிகிறது.

எனக்கு அத்தனை கட்சிகளும் ஒன்றுதான். சரவணனை ஆதரிப்பதாலும் மற்றொரு வேட்பாளரை எதிர்ப்பதாலும் எனக்கு எந்த லாபமுமில்லை. அதே சமயம் எந்த நட்டமுமில்லை. ஒன்றாம் தேதியானால் அமெரிக்காக்க்காரன் சம்பளத்தை வங்கிக்கணக்கில் என் சம்பளத்தைப் போட்டுவிடுகிறான். ‘யார் ஜெயித்தால் நமக்கென்ன’ என்று கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் ஒரு நல்ல வேட்பாளர் தேர்தலில் களமிறங்கும் போது நம்மால் முடிந்தளவு அவரைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். இல்லாததும் பொல்லாததையும் சொல்லி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் இருப்பதை மட்டும் சொன்னாலே போதும். அதைத்தான் செய்கிறேன்.

ஆனால் ஒன்று- அரசியலும் தேர்தலும் நல்ல மனிதர்களை அவ்வளவு எளிதில் வென்றுவிட அனுமதிப்பதில்லை. சூழ்ச்சிகளும் பித்தலாட்டமும் பணமும் விளையாடும் அந்தக் களத்தில் நல்லவர்களின் தலைகள் சர்வ சாதாரணமாகக் கொய்துவிடப் படலாம். அது சரவணனுக்கும் தெரிந்திருக்கும். அதே சமயம் இன்றைய நவீன யுகம் வேறு மாதிரியானது. இருந்த இடத்திலிருந்தே வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பிரச்சாரங்கள் தூள் கிளப்புகின்றன. சரவணனுக்கான பிரச்சாரத்தை இளைஞர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். தினமும் அவரைப் பற்றிய இரண்டு செய்திகளையாவது யாராவது உள்ளூர் நண்பர்கள் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். மருந்துக்கடைகளிலும், டீக்கடைகளிலும் மக்கள் சரவணனைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேர்தலில் தாக்கத்தை உண்டாக்குமெனில் தேர்தல் முடிவு ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்.

வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திருடி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கண்களுக்கு சரவணன் மாதிரியான வேட்பாளர்கள் ஆசுவாசமாகத் தெரிகிறார்கள். ஒன்றரை வருடங்கள் கவுன்சிலராக இருந்தவனெல்லாம் மாட மாளிகையில் வாழும் போது பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் வாடகை வீட்டில் குடியிருந்தபடி சுமாரான கதர் சட்டையுடன் வாக்குக் கேட்டுக் களத்தில் இறங்கும் சரவணனின் பெரும்பலமே அவருடைய நேர்மைதான். திரும்பிய பக்கமெல்லாம் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் நேர்மை என்ற ஒற்றைக் குணத்திற்காகவே அவரை ஆதரிக்கத் தோன்றுகிறது. தொகுதியில் யாரிடம் பேசினாலும் அதைத்தான் சொல்கிறார்கள். ‘சரவணன் நல்ல மனுஷனப்பா’ என்று. இந்தக் காலத்தில் இப்படியொரு பெயரைச் சம்பாதித்து வைத்திருப்பதே பாதி வெற்றிதான். இளைஞர்களும் நடுநிலையாளர்களும் சரவணனை ஆதரிக்கிறார்கள். மக்களிடம் பேசும் போது இதைத் தெளிவாக உணர முடிகிறது.

சரவணனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். வசதி இல்லாமல் இருக்கலாம். அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அவை அவசியமுமில்லை. இத்தகைய நேர்மையான மனிதர் ஒருவர் நிற்கும் தொகுதியில் வாக்களிப்பதே சந்தோஷமாக இருக்கிறது. 

சரவணன் பற்றிய தகவலை எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புவேன். ஏனெனில் இவரைப் போன்றவர்கள் ஜெயிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் மீதான சாமானிய மனிதனின் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யும்.

என் தொகுதியின் நல்ல வேட்பாளரை நான் அடையாளம் காட்டுகிறேன். உங்கள் தொகுதியின் நல்ல வேட்பாளரை நீங்கள் அடையாளம் காட்டுங்கள். மற்றவற்றை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வா.மணிகண்டன்

Apr 19, 2016

ஒசாமா கொடுத்த நிதி?

நிசப்தம் அறக்கட்டளையின் 2014-2015 ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறையின் வரவு செலவுக் கணக்கைச் சமர்பிக்க பட்டயக்கணக்கரைச் சந்தித்த போது ‘ஐந்து ரூபாய் கொடுத்திருந்தாலும் அவருடைய PAN எண், முகவரியை வாங்கிக் கொடுங்க’ என்று சொல்லிவிட்டார். 

‘சார் நிறையப் பேர் அனானிமஸா இருப்பாங்களே’ என்று சொன்னால் ‘ஒசாமாவோ அல்லது ஐஎஸ் தீவிரவாதிகளோ கூட அப்படி அனானிமஸா கொடுத்திருக்கலாம்..கொடுத்தா வாங்கிக்குவீங்களா?’ என்றார். என் முகத்தைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது?  

இது என்ன புது வம்பு என்று நினைத்தபடியே ‘நல்ல காரியத்துக்குத்தான் வாங்கியிருக்கேன்’ என்றேன். 

‘நான் நம்புறேன். ஆனால் நீங்க சொல்லுறதை சட்டம் ஏன் நம்பணும்?’ என்கிறார். 

அவர் கேட்பதும் சரிதான். ஒரு வேலையைச் செய்யும் போது அத்தனை தகவல்களும் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அதுவும் நிதி சம்பந்தமான விவகாரம் என்றால் இன்னமும் உஷாராக இருந்திருக்க வேண்டும்.

‘எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் இருபது வருடங்களுக்குப் பிறகும் கூட யாராவது நோண்டிக் கேள்வி கேட்க முடியும்’ என்றார். அப்பொழுது நான் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ இருந்தாலும் கூட திஹாரில் தூக்கிப் போட முடியுமாம். நடு ராத்திரியில் நான் எதற்கு சுடுகாட்டுக்குப் போகப் போகிறேன்?

அவர் சொல்லச் சொல்ல ஏஸியிலும் கூட வியர்த்தது. பெரிய வம்பாக இழுத்துக் கொண்டிருக்கிறேன்.

‘நீங்க நேர்மையா இருக்கிறது என முடிவு செய்துவிட்டால் எந்தச் சமயத்திலும் ஆவணங்கள் உங்களுக்குத் துணையிருக்க வேண்டும்’ என்றார். இப்போதைய சூழலில் விவரங்களைச் சேகரிப்பது என்பது முடியவே முடியாத காரியமில்லை ஆனால் நிறைய மண்டை காய வேண்டியிருக்கிறது. 2014-15 களில் நூற்றைம்பதுக்கும் குறைவான நன்கொடையாளர்கள்தான். ஆனால் அதற்கே இவ்வளவு வேலை. மின்னஞ்சல்களைத் தேடி, அலைபேசி எண்களைக் கண்டுபிடித்து என முக்கால்வாசிக் கிணறு தாண்டியிருக்கிறேன். இன்னமும் நிறையப் பேர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வருடத்திற்கே இப்படியென்றால் இன்னமும் இரண்டு மூன்று மாதங்களில் 2015-2016க்கான கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தாலும் வந்தது ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்கள் புதிதாகச் சேர்ந்திருக்கிறார்கள். அத்தனை பேரின் விவரங்களையும் எப்படிச் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கண்ணாமுழி திருகிறது.

உடனடியாக இணையதள வடிவமைப்பாளரை அழைத்து ‘இனிமேல் முகவரி PAN எண் கொடுத்தால்தான் பணப் பரிமாற்றமே செய்யும்படி வடிவமைப்பை மாற்ற வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறேன். இப்படியொரு ஐடியா இருப்பதை யாராவது முன்பே சொல்லியிருந்தால் இத்தனை தலைவலி வந்து சேர்ந்திருக்காது. என் அரை மண்டைக்கு முன்பு இது உறைக்கவில்லை. இப்பொழுது உறைத்து என்ன பயன்? பெரிய வேலை வந்து சேர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் இதற்காக கிடந்து உழல வேண்டுமென விதி இருந்தால் உழன்றுதான் தீர வேண்டும்.

எல்லாமும் அனுபவம்தான். 

2015-16க்கு இரண்டு மாத கால அவகாசமிருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். ஆனால் 2014-15 ஐ உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும்.

பின்வரும் நன்கொடையாளர்கள் அன்பு கூர்ந்து PAN எண் மற்றும் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். அத்தனை பேரும் இந்தப் பதிவைப் பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கிறவர்களின் நண்பர்கள் யாரேனும் பட்டியலிலிருந்தால் தயவு செய்து தகவல் கொடுத்து உதவவும். திஹாருக்குச் செல்வதிலிருந்து நான் தப்பிக்க இதுவொரு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

17-11-14
BANEAS-MUMBAI/D5BYIMPS/15-11-14/432017146
5,000.00
29-11-14
NEFT-683513994- -MAHENDRAN  M
5,000.00
29-11-14
NEFT-683518743D5
3,000.00
1-12-14
NEFT-SBIN51433D55610029-Mr  PRABHAKARAN
1,000.00
1-12-14
NEFT-684857379 - -MOHANKUMAR  N
3,000.00
2-12-14
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/433611141943/9445997661
3,000.00
2-12-14
NEFT-CITIN1449D53145268-BASKAR VISWANATHA
5,000.00
2-12-14
NEFT-N33614004D54575880-MANI KRISHNAMURTH
2,000.00
9-12-14
NEFT-SBIN21434D53616189-Mr  SUNDARARAJAN
500
11-12-14
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/434504708635/646
25,000.00
15-12-14
NEFT-CITIN1449D56763332-RAJA N
1,000.00
16-12-14
NEFT-SBIN61435D50379357-Mr  RAMASUBRAMANI
200
17-12-14
NEFT-N35014004D56796983-VIJAYAMURUGAN P
1,000.00
27-12-14
NEFT-AXIR14361D53280726-SEETHALAKSHMI KAN
2,001.00
02-01-15
NEFT-IOBAN1500D52094333-MOHANA MURALI
10,000.00
03-01-15
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/500301107144/408
4,000.00
03-01-15
NEFT-701248989--K ARUN KUMAR
5,000.00
05-01-15
NEFT-000003607D5615-MOHAMED SHAFEER
5,000.00
05-01-15
NEFT-P15010342D5021871-SATHISHKUMAR D
500
05-01-15
NEFT-N00515004D59485744-PREM N
20,000.00
07-01-15
NEFT-CITIN1550D52297857-NAGARAJAN MANOKAR
1,000.00
07-01-15
NEFT-AXIR15007D55090347-KARUPPIAH KARTHIK
20,000.00
08-01-15
NEFT-704249027D5-P RAJA .
1,000.00
09-01-15
NEFT-704851608- VARSHINI  S
5,000.00
09-01-15
NEFT-SBIMBTH00D59765674-Mr  LAKSHMI KANTH
1,000.00
09-01-15
NEFT-AXIR15009D55533141-GANESAN K
2,100.00
10-01-15
NEFT-G2N123245D533-1001-Hariprasad Govind
11,654.40
12-01-15
NEFT-SBIN61501D51897062-Mrs  P E  SANGEET
2,000.00
13-01-15
NEFT-SBIN71501D53658171-Mr  SUNDARARAJAN
500
15-01-15
NEFT-N01515005D51192552-GOPINATH K
500
21-01-15
NEFT-P15012170D5579631-THIRUMALAIRAJAN T
500
21-01-15
NEFT-710250170D5-SOMU RAVICHANDRAN 
25,000.00
27-01-15
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/502616414723/770
5,000.00
2-2-15
NEFT-SBIN31503D5
1,000.00
3-2-15
NEFT-716217313-MAHALINGAM ESAKKI MU
10,000.00
3-2-15
NEFT-N03415005D53390676-MANI KRISHNAMURTH
500
3-2-15
NEFT-SBIN51503D54057865-Mrs  KARUPPAMMAL
5,000.00
4-2-15
NEFT-SAA122816D5993-SASI KUMAR
1,000.00
5-2-15
BANEAS-MUMBAI/D5IMPS/P2A/503620481084/961
5,000.00
11-2-15
NEFT-AXIR15042D59422887-SEETHALAKSHMI KAN
2,001.00
12-2-15
NEFT-0P1502129D59383752-SARAVANAKUMAR S K
500
19-02-15
SERMAS-CHENNAID5/BY INST 979 : MICR CLG (
5,000.00
20-02-15
NEFT-725066589 --MURALI RANGARAJAN KR
10,000.00
2-3-15
NEFT-N06015005D57353060-MANI KRISHNAMURTH
500
5-3-15
NEFT-P15030500D5437154-THIRUMALAIRAJAN T
500
5-3-15
NEFT-SD1191603D5816-ARUN KUMAR CHANDRASE
20,000.00
6-3-15
NEFT-CITIN1552D51053295-BALAMURUGAN SUNDA
2,500.00
6-3-15
NEFT-732942209- -EDWIN FRANCIS J
1,000.00
7-3-15
NEFT-N06515005D58785902-R DHANUSKODI
3,000.00
9-3-15
NEFT-SBIN21506D58008986-Mr  SRINIVASAN  G
200
27-03-15
NEFT-AXIR15086D54824935-SEETHALAKSHMI KAN
2,001.00
27-03-15
NEFT-742532622D5
1,000.00
30-03-15
NEFT-SAA131186670-SASI KUMAR
1,000.00

vaamanikandan@gmail.com