அதிமுகவை எவ்வளவு பிடிக்காமல் இருக்கிறதோ அதே அளவுக்குத்தான் திமுகவையும் பிடிக்காது. இதைச் சொல்வதற்காக நடுநிலை என்ற வேஷம் போடுவதாக அர்த்தமில்லை. என்னுடைய கொஞ்ச நஞ்ச அரசியல் புரிதலிலிருந்து பார்த்தால் இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான். ஆகாவழிகள். இதைச் சொன்னால் திமுகக்காரர்கள் வந்து பக்கத்திலிருக்கும் கேரளாவைப் பாருங்கள்; வங்காளத்தைப் பாருங்கள்; அவர்களையெல்லாம் விட நாம் நன்றாக இருக்கிறோம் என்றெல்லாம் புள்ளிவிவரங்களை அடுக்குவார்கள். திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் கைங்கரியம்தான் தமிழகத்தை செழிக்கச் செய்திருக்கிறது என்று அளப்பார்கள். இல்லையென்று மறுத்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று மல்லுக்கு நிற்பார்கள். ‘இந்தத் தரங்கெட்ட கட்சிகளின் ஆட்சியிலேயே இவ்வளவு செழிப்பாக இருக்கிறோம் என்றால் ஒருவேளை உருப்படியான கட்சிகள் ஆண்டிருந்தால் நம்முடைய தரம் எவ்வளவு உயர்ந்திருக்கும்?’ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இவர்களிடம் கேட்கவா முடியும்? வதவதவென்று மொய்த்துவிடுவார்கள். திமுகவினர் மொய்ப்பார்கள் என்றால் அதிமுகவினரிடம் அந்தப் பிரச்சினையே இல்லை. ‘அம்மா சரணம்’ அதற்குமேல் எதுவும் பேச மாட்டார்கள். இதுதான் திமுகவினருக்கும் அதிமுகவினருக்குமிடையில் இருக்கும் வித்தியாசம். மற்றபடி திருடுவதிலும் சுரண்டுவதிலும் ஆட்டம் போடுவதிலும் அரசியல் நாகரிகத்தை குழி தோண்டி புதைத்ததிலும் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.
எதற்கு இந்த விளக்கம்?
ஊரில் ஒரு மருத்துவரைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவர் கார்த்திகேயன். எங்கள் ஊரிலேயே பெரிய மருத்துவமனை அது. அந்த மருத்துவமனையின் முக்கிய நிர்வாகப் பொறுப்பு அவரிடமிருக்கிறது. கார்த்திகேயனின் தம்பி நிசப்தம் வாசகர். ‘அண்ணனைப் பாருங்க’ என்று சொல்லியிருந்தார். மருத்துவர் சிவசங்கரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக சிவசங்கர் அவரிடம் ‘நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர்’ என்றெல்லாம் படம் ஓட்டியிருக்கிறார். கார்த்திகேயன் நம்பினாரா என்று தெரியவில்லை. ஆனால்‘டி.எம்.கே ஆள் மாதிரி தெரியுது’ என்று சொன்னாராம். இதை சிவசங்கர் என்னிடம் சொன்ன போது தூக்கிவாரிப் போட்டது. இப்படித்தான் இரண்டொரு நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் விஜய் ஆனந்த் ‘நீங்க ஏன் திமுகவுக்கு ஆதரவா எழுதறீங்க?’ என்று கேட்டார். குழப்பமாகத்தான் இருக்கிறது. ஏதாவது பேய் பிடித்திருக்கக் கூடும் என்று சந்தேகமாகவும் இருக்கிறது.
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் அதிமுகவுக்குத் திமுகவே பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஐந்தாண்டுகள் கழித்து இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றும் என்று உறுதியாக நம்புகிறேன். நினைவு தெரிந்ததிலிருந்தே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் அடுத்த ஐந்தாவது வருடத்திலும் அப்படித்தான் தோன்றும். இந்த மனநிலைதான் ஓரிரு இடங்களில் திமுகவுக்கு ஆதரவான கருத்துக்கள் வெளிப்படக் காரணமாக இருந்திருக்குமே தவிர திமுக அபிமானி என்றெல்லாம் அர்த்தமில்லை.
சரி. இவர்களும் வேண்டாம் அவர்களும் வேண்டாம். அப்படியென்றால் என்ன அர்த்தம்? யாரையாவது தேர்ந்தெடுத்துத்தானே ஆக வேண்டும்? ஆமாம். அதுதான் விதி. ஒன்று இந்தக் குட்டை. இல்லையென்றால் அந்தக் குட்டை. இப்போதைக்கு மூன்றாவதாக ஒரு சக்திக்கு இங்கு வாய்ப்பேயில்லை. பேசாமல் ‘எவனோ வந்துட்டு போகட்டும்’ என்று விட்டுவிடுவதுதான் உசிதமாகப்படுகிறது.
யாரையும் சாராமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அப்படிச் சாராமல் இருக்கும் போது வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அது முடியாதபட்சத்தில்தான் சிக்கல். கண்டபடி திட்டு வாங்க வேண்டியிருக்கிறது. சொற்களுக்கு மட்டும் சாட்டை இருந்திருந்தால் முதுகுச் சட்டை கிழிந்திருக்கும். அவ்வளவு அடி. இனிமேல் அத்தகைய வசவுக் கடிதங்களையும் பிரசுரம் செய்துவிடலாம் எனத் தோன்றுகிறது. நான் மட்டும் ரகசியமாகப் படித்துவிட்டு அழித்துக் கொண்டிருப்பதற்கு சலிப்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கும் சுவாரஸியமாக இருக்கும்.
அதனால்தான் பொதுவெளியில் ‘நான் இந்தக் கட்சிக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் சில உபாயங்கள் இருக்கின்றன. அப்படிச் சொல்லிக் கொள்வது சாதியைப் பிடித்துக் கொண்டிருப்பது போலத்தான். கிராமங்களில் கவனித்திருக்கக் கூடும்- தனது சாதிக்காரன் எவ்வளவு பெரிய தவறைச் செய்தாலும் அவன் மீது கீறல் விழாமல் தடுப்பதற்கு சக சாதிக்காரன் கைகோர்த்து நிற்பான். அதேதான் இங்கும். ஒரு கட்சியின் அபிமானி என்று சொல்லிக் கொண்டால் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் துணை கிடைத்துவிடும். துணிந்து அடுத்தவர்களை விமர்சிக்கலாம். அப்படியில்லாமல் ‘நான் உதிரி..எவனையும் சார்ந்து இல்லை’ என்று சொல்லிக் கொண்டு இவனைத் திட்டினாலும் அடி விழும். அவனைத் திட்டினாலும் அடி விழும். இவன் அடிக்கும் போது அவன் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பான். அவன் அடிக்கும் போது இவன் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பான். கடைசியில் சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு எனக்கு நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் உதிரியாக இருப்பதன் சுதந்திரம் அப்படி இருந்து பார்த்த பிறகுதான் புரியும். எது குறித்தும் சலனப்பட வேண்டியதில்லை. பிடித்திருக்கிறதா? பிடித்திருக்கிறது. பிடிக்கவில்லையா? பிடிக்கவில்லை. அவ்வளவுதான். இதைச் சொன்னால் அவன் என்ன நினைப்பான் அதைச் சொன்னால் இவன் என்ன நினைப்பான் என்றெல்லாம் குழம்ப வேண்டியதில்லை. அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் என்று எல்லாவற்றையும் ஒளித்து வைத்துக் கொள்வதா வாழ்க்கை? நாம் என்ன நினைக்கிறோமோ அதை உரக்கச் சொல்ல வேண்டும். பலன்கள் ஒன்றுமிருக்காது. காரியம் எதுவும் சாதிக்க முடியாது. ஆனாலும் இதிலொரு ஆசுவாசமிருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறேன்.
வலப்புறமும் செல்ல மாட்டேன்; இடப்புறமும் செல்ல மாட்டேன் என்றால் ஏதாவதொரு திசையில் நகர்ந்துதானே ஆக வேண்டும்? நேராகவே சென்று கொண்டிருக்கலாம். எவரையும் சாராமல், எந்தச் சித்தாந்தத்தையும் மொத்தமாக ஏற்றுக் கொண்டு உயர்த்திப் பிடிக்காமல் நமக்குப் பிடித்ததை மட்டும் பாராட்டிக் கொண்டு பிடிக்காததை விமர்சித்துக் கொண்டேயிருக்கலாம். இதுதான் திசை; இதுதான் வாகனம்; இதுதான் வேகம் என்று எல்லாவற்றையும் முன்முடிவு செய்து கொண்டு வாழ்க்கையில் நகர வேண்டியதில்லை. நமக்கு எது விருப்பமோ அதைச் செய்து கொண்டிருக்கலாம். அந்தச் சுதந்திரம் நம்மை இயங்கச் செய்துவிடும். காட்டாற்று வெள்ளம் மாதிரிதான். திசை அதுவாகவே அமையட்டும். தனது போக்கில் எதையெல்லாம் அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதையும் எதையெல்லாம் தள்ள வேண்டும் என்று நீரோட்டம் முடிவு செய்வதில்லை. நீரின் வேகத்துக்கும் திசைக்கும் ஒத்தவை அதனோடு பயணிக்கின்றன. பிடிக்காதவை விலகுகின்றன. நீர் எது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை!
6 எதிர் சப்தங்கள்:
Mani, hope you safeguarded your house, land everything in your native by some strength full person. That is the reason you are sopprting DMK.
Ha..ha I expected this post. But not so soon.
சத்தமே இல்லாம் பிஜேபி க்கு ஓட்டு போடுங்க பாஸ். நாம் நரேந்திர மோடியை மொதலமைச்சராக்கி அழகு பா(ர்)ப்போம்.
//இனிமேல் அத்தகைய வசவுக் கடிதங்களையும் பிரசுரம் செய்துவிடலாம்//
ஐ அம் வெயிட்டிங்.
உங்களுக்கு திமுக-விடம் ஒரு ஃசாப்ட் கார்ணர் உண்டுதானே? அதற்கு இவ்வளவு பதட்டம் ஏன்? ஞாநி, அதிமுகவா - திமுகவா என்றால் திமுக-தான் என் சாய்ஸ், ஆனால் திமுகவா- மக்கள் நலக் கூட்டணியா என்றால் ம.ந.கூ.தான் என்று சொல்வதுபோல எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி திமுக-தான், அந்த அளவில் நானெ திமுக அனுதாபிதான் என்று சொல்வதற்கு ஏன் கூச்சப்பட வேண்டும்? ஐ நோ, இது போன திமுக ஆட்சியில் 2ஜி, அழகிரி அக்கிரமங்கள், ஈழத்தமிழர்களைக் கைவிட்டது, நிலப்பறிப்பு, மின்தட்டுப்பாடு என்று ஏகத்துக்கும் அவர்கள் ஆடி விட்டதால் வந்த விளைவு ஒரளவு திமுக-வை ஆதரிக்கக்கூடியவர்களிடம் ஏற்பட்ட இந்த கூச்ச சுபாவம். என்ன செய்யறது, அங்கிட்டும் பேச முடியாம பண்ணிட்டானுக. அதிமுக-வை ஆதரிப்பவர்கள் எந்தக் கூச்சமும் இல்லாம கரகம், காவடி, பச்சை குத்துவது, நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டுறதுன்னு இறங்கிடறானுங்க. நமக்கு சுயசிந்தனை வேணும்னு சொன்னதே இதே திமுகதான் (ஆரம்ப காலத்தில்). இது காலத்தின் கோலம். அவ்வளவுதான்.
Same thinking sir. But, this time, I am interested in naam thamizhar.
seeman's answer part 1 2 3
http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-s-question-answer-series-part-1-248107.html
http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-s-kelvigalal-oru-velvi-seivom-series-2-248276.html
http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-s-kelvigalal-oru-velvi-seivom-3-248691.html
Better to be neutral. But no one will forget 2G, AirCelMaxis, 700 phone lines etc. So soon. Anyway, Tamil Nadu people are wise. Let us wait for their verdict.
Post a Comment