Mar 31, 2016

அருட்பெருஞ்சோதி

ஒரு வருடத்திற்கு முன்பாக கோவை ஞானியைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவர் தன்னுடைய சேகரிப்பில் இருந்த புத்தகங்களையெல்லாம் வருகிறவர்களுக்குத் தந்து கொண்டிருந்தார்.  நமக்கு எந்தப் புத்தகங்கள் தேவையோ அவற்றை எடுத்து வந்து அவருக்கு உதவியாளராக இருந்த ஒரு பெண்மணியிடம் கொடுக்க வேண்டும். ஞானிக்கு கடந்த பல வருடங்களாகவே பார்வையில்லை. ஆனால் அவர் வாசிப்பை நிறுத்தியதில்லை. யாராவது உரக்க வாசித்துக் காட்டுவார்கள். அந்தப் பெண்மணி நாம் எடுத்து வந்திருக்கும் புத்தகத்தின் பெயரைச் சொல்வார். அதற்கு ஞானி அவராகவே ஒரு விலையைச் சொல்வார்.  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகமாக இருக்கும். ‘முந்நூறு போட்டுக்குங்க’ என்பார். அவருக்கு விலை தெரியவில்லை என்று அர்த்தமில்லை. அரை விலைக்கும் கால் விலைக்குமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். சில பள்ளி நூலகங்களுக்கு விலையே இல்லாமல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை. இலவசம், குறைவான விலை என்கிற சூழல்களில் என்னுடைய கஞ்சத்தனம் எட்டிப்பார்த்துவிடும். பெங்களூரில் ஒரு கடை இருக்கிறது. பிரிகேட் சாலையில். கிலோ கணக்கில்தான் பழைய புத்தகங்களை விற்பார்கள். கிட்டத்தட்ட அத்தனையும் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள். வெளியிலிருந்து பார்த்தால் சாதாரண துணிக்கடை மாதிரிதான் தெரியும். ஆனால் உள்ளே புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். புத்தப் பிரியர்கள் இந்தப் பக்கம் வரும் போது சொல்லுங்கள். இரண்டு மூன்று கிலோ வாங்கிச் செல்லலாம். ஆரம்பத்தில் இந்தக் கடைக்குச் சென்ற போதெல்லாம் ‘பெரிய புத்தகம் ஒன்றை மட்டும் வாங்குவதை விட சிறிய புத்தகங்கள் நான்கைந்து வாங்கிக் கொள்ளலாம்’ என்கிற சில்லரைத்தனத்துடன் இரண்டு மூன்று முறை பாடாவதியான புத்தகங்களை வாங்கி வந்து லோல்பட்டிருக்கிறேன். ஞானி வீட்டிலும் அப்படித்தான் ஆகிப் போனது. அவரிடம் அரிய புத்தகங்கள் எவ்வளவோ இருந்தன. பெயரைச் சொன்னால் எழுத்தாளர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும்- அவர்களின் புத்தகங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன். இடத்துக்கும் கேடு; காசுக்கும் கேடு.

இப்பொழுது கொஞ்சம் ஞானோதயம் வந்திருக்கிறது. ஒளி வட்டம் தெரிகிறது என்று யாராவது சொன்னால் ‘அது சொட்டை எதிரொளிக்குதுங்க’ என்று சொல்லிவிடுகிறேன். இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது எதிரில் நிற்கவே முடியாது. சில திரைப்படங்களில் எதிராளி வரும் போது திடீரென்று வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு கண்களைக் கூசச் செய்வார்கள் அல்லவா? அப்படி. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி!

திருவருட்பா புத்தகம் கிடைத்திருக்கிறது. பழைய பதிப்பு. காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை 1924 ஆம் ஆண்டு அச்சிட்ட புத்தகம். அதே எழுத்து. அதே உரைநடையுடன் தொண்ணூறு வருடங்கள் கழித்து இப்பொழுது அச்சிட்டிருக்கிறார்கள். எங்கள் ஊரில் ஒரு சித்த மருத்துவர் இருக்கிறார். சரவணன் என்று பெயர். முப்பது வருடங்களுக்கு முன்பாகவே பொறியியல் படித்தவர்.  அதுவும் நல்ல கல்லூரியில். ஆனால் பள்ளிக் காலத்திலிருந்தே சித்த மருத்துவத்தில் நாட்டம் என்பதால் படித்த படிப்புக்குச் சம்பந்தமேயில்லாமல் மருந்து தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுதே வேலைக்குச் சென்றிருந்தால் பெரிய நிறுவனத்தில் பெரிய இடத்தில் இருந்திருக்கலாம். ‘இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன்’ என்கிறார். செய்கிற வேலையை மனத் திருப்தியுடன் செய்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அமையும். சரவணன் வள்ளலாரைப் பின் தொடர்கிறவர். அவரைப் பார்க்கச் சென்றிருந்த போதுதான் புத்தகக் கட்டு வந்து இறங்கியிருந்தது. 

‘இந்தாங்க உங்களுக்கு ஒரு காப்பி’ என்றார். ஆயிரம் ரூபாயாவது இருக்கும் என்றுதான் நினைத்தேன். திருவருட்பாவின் ஆறு திருமுறைகள், வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, திருவருட்பா வரலாறு அது போக நிறைய உரைநடைகள் என எப்படியும் ஆயிரம் பக்கங்களைத் தாண்டும். கெட்டி அட்டைப் பதிப்பு வேறு. நவீன பதிப்பாளர்கள் இரண்டு மூன்றாயிரத்துக்கு குறைவில்லாமல் விற்பார்கள். இந்தப் புத்தகம் இருநூற்றைம்பது ரூபாய்தான். மூச்சடைத்துப் போனது. எப்படிக் கட்டுபடியாகிறது? கைக்காசைச் செலவழித்து அச்சடிக்கிறார்கள். இந்த நூலின் வழியாக வரக் கூடிய பணத்தையும் மீண்டும் திருவருட்பா அச்சடிக்கவே செலவு செய்கிறார்களாம்.

உலகம் காசுக்காக வெறியெடுத்துத் திரிகிறது. எங்கே வாய்ப்புக் கிடைத்தாலும் சுரண்டுகிற மனிதர்கள் இருக்கிறார்கள். அப்பாவுக்கு ஒரு மருந்து வாங்கித் தருகிறோம். ஒரு டப்பாவில் இருபத்தெட்டு மாத்திரைகள் இருக்கும். இருபதாயிரம் ரூபாய். தினமும் ஒரு மாத்திரை. மருத்துவமனையில் வாங்கிக் கொண்டிருந்தோம். அதில் போட்டிருக்கிற விலையில் ஒற்றை ரூபாய் குறைக்கமாட்டார்கள். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான மருந்துக் கடைகளில் பத்துச் சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள். ஆனால் இந்த மருந்து விலை அதிகமாக இருக்கிறது என்பதால் வெளிக் கடைகளிலும் கிடைப்பதில்லை. மருத்துவமனையில் மட்டும்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த மருந்தை வெறும் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு விற்கக் கூடிய விநியோகஸ்தரைக் கண்டுபிடித்திருக்கிறோம். அவரிடம் ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி கூடுதலாகப் பத்தாயிரம் ரூபாய் லாபம் வைத்து மருத்துவமனைகளில் வைத்து விற்கிறார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது? மாதம் பத்து மருந்து டப்பா விற்றால் அதில் மட்டுமே ஒரு லட்ச ரூபாய் இலாபம். பத்துதான் விற்பார்களா? ஒரு மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளச் சொல்லி எழுதிக் கொடுக்கிறார்கள். தம்மிடம்தான் மருந்து வாங்குகிறார்கள் என்பதும் தெரியும். அடக்கவிலைக்குக் கொடுக்க வேண்டியதில்லை. சற்றேனும் விலையைக் குறைத்துக் கொடுக்கலாம் அல்லவா? கொடுப்பதில்லை. இதில் விதிமீறல் என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாமே சட்டப்படிதான் செய்கிறார்கள். ஆனால் மனிதாபிமானம் என்பது துளியுமில்லை. மனித உயிரிலிருந்து எந்திரங்கள் வரைக்கும் எல்லாவற்றிலிருந்தும் பணத்தை எப்படி உருவுவது என்றுதான் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு ஆயிரம் பேரல் பெட்ரோலியத்தை உறிஞ்சினால் இவ்வளவு டாலர் கிடைக்கிறது என்றால் நாளை அதைவிடக் கூடுதலாக உறிஞ்சி அதைவிடக் கூடுதல் லாபம் பார்க்கலாம் என்கிற கார்போரேட் மனநிலைதான் எல்லா இடங்களிலும். தன்னுடைய சந்ததிக்குச் சொத்துச் சேர்ப்பதில்தான் ஒவ்வொருவரும் குறியாக இருக்கிறார்களே தவிர அடுத்தவனின் சந்ததி பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றிய உலகம் குரூரம்மிக்கதாக மாறிக் கொண்டிருக்கிறது. நீயும் குரூரமானவனாக மாறிக் கொள்; இல்லையென்றால் உன்னை முடித்துவிடுவார்கள் என்று பயமூட்டுகிறவர்கள்தான் சுற்றிச் சுற்றி இருக்கிறார்களே தவிர அடுத்தவன் எவ்வளவு அயோக்கியனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் நீ அன்பைக் காட்டு என்று போதிக்கிறவர்கள் கண்களுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வாழ்ந்த பூமி கந்தக பூமியாகிக் கிடக்கிறது.

வள்ளலார் வரலாற்றிலும் நிறைய ட்விஸ்ட்கள் இருந்திருக்கின்றன. ஆறுமுக நாவலர் என்று தேடிப் பார்த்தால் கிடைக்கும். ‘நீ அருட்பா எழுதினால் அதை மறுத்து நான் போலியருட்பா மறுப்பு எழுதுவேன்’ என்று இரண்டு பேரும் அந்தக் காலத்திலேயே கோர்ட், கேஸ் என்று அழைந்திருக்கிறார்கள். அதே விருமாண்டிxபசுபதி ஸ்டைல்தான். 

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தப் புத்தகத்தை 'Limited edition' என்கிறார்கள். இருநூற்றைம்பது ரூபாய்க்கு அச்சடித்துக் கொடுத்தால் அப்படித்தான் விற்க முடியும். கடலை பொரி கொடுப்பது போலக் கொடுத்தால் தலையில் துண்டு விழாது; பெரிய போர்வையே விழும். வாசிக்கிறோமோ இல்லையோ இந்தப் பழங்காலப் பதிப்பின் மறு அச்சிலிருந்து ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளலாம். எப்பொழுதாவது பயன்படும். பழைய பதிப்பு என்பதால் வாசிக்கக் கஷ்டமாக இருக்கக் கூடும் என்றுதான் நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. வாசித்துவிட முடிகிறது.

அருட்பா பதிப்பகம்,
arutpa@arutpaonline.com
044- 45528080
9444073960