Mar 8, 2016

விஜயகாந்த்

2004 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த போது பள்ளிக்கரணையில் விஜயகாந்த் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி கசிந்து கொண்டிருந்தது. அவரருகில் சென்று ‘உங்க அரசியல் பணி பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ‘பேப்பர்ல எழுதிக் கொண்டு வாங்க’ என்றார். அன்றைய இரவிலேயே பல பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி உறையிலிட்டு அடுத்த நாள் அதே இடத்தில் அவரிடம் கொடுத்தேன். தனது ஜீப்பில் அமர்ந்தபடியே வாசித்து முடித்துவிட்டு ‘சரி நான் பார்த்துக்கிறேன்’ என்றார். அப்பொழுதிலிருந்தே விஜயகாந்த் அரசியலில் மாற்று சக்தியாக மாற வேண்டும் என விரும்பிக் கொண்டிருந்தேன். ‘இவர்கள் மாற்றி அவர்கள்’ என்றில்லாமல் புதிய ஆள் வரட்டுமே என்கிற சாமானிய எதிர்பார்ப்புதான். அவர் குடிக்கிறார் என்று செய்தி பரவிய போதும் கூட ‘இது உளவுத்துறை செய்கிற சதி’ என்று நம்பினேன். வேட்பாளர்களை அடிக்கிறார் என்ற செய்தி பூதாகரமாக்கப்பட்ட போது பொதுவெளியில் நடிக்கத் தெரியாத வெள்ளந்தியான மனிதர் என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தினேஷ்குமார் என்கிற தேமுதிக வேட்பாளருக்குத்தான் வாக்களித்தேன். 

எத்தனை நாட்களுக்குக் காலி டப்பாவை நம்பிக் கொண்டேயிருப்பது?

ஒவ்வொரு தேர்தலிலும் பேரங்களும் பேச்சுவார்த்தைகளும் சாதாரணமான விஷயம்தான் என்றாலும் இந்த முறை தேமுதிக நடத்திக் கொண்டிருக்கும் பேரங்கள் அருவெறுப்பூட்டக்கூடியவையாக இருக்கின்றன. நான்கு முதல் ஐந்து சதவீத வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு- அதுவும் தேர்தலுக்குத் தேர்தல் கீழே இறங்கிக் கொண்டேயிருக்கும் வாக்குவங்கி- ஒவ்வொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘பா.ஜ.க கூட நாங்க பேசவேயில்லையே’ ‘திமுகவுடனான பேச்சுவார்த்தை நடக்கவில்லை’ என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியாகக் கசிந்து கொண்டேயிருக்கின்றன. இந்தச் செய்திகளை எல்லாம் வெளியிடுவது தேமுதிகவின் ஆட்கள். சரி- எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லையென்றால் தேர்தலுக்கு இன்னமும் எழுபது நாட்கள் கூட இல்லாத போது தனது தேர்தல் நிலைப்பாடு என்பதை வெளிப்படையாக ஏன் அறிவிக்க முடியவில்லை என்கிற கேள்வியை எப்படித் தவிர்க்க முடியும்? பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ‘அவர்களோடு கூட்டணி இல்லை; இவர்களோடு கூட்டணி இல்லை’ என்று அறிவிப்பது கட்சிகளைச் சலனமுறச் செய்து தேமுதிகவின் நிபந்தனைகளுக்கு பணிந்து போகச் செய்யக் கூடும் என்று கசியச் செய்கிறார்கள் என்பதும் அரசியலில் ஆனா, ஆவன்னா தெரிந்தவர்கள் கூட புரிந்து கொள்வார்கள்.

‘கூட்டணி என்பது அவருடைய விருப்பமும் உரிமையும்’ என்று யாராவது சொல்லக் கூடும். ‘தனக்கு முன்னால் இருக்கக் கூடிய அனைத்து விதமான வாய்ப்புகளையும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியது முக்கியமில்லையா?’ என்று கேட்கக் கூடும். இருக்கலாம். கட்சிகளிடையே தனக்கென இருக்கும் முக்கியத்துவத்தை பொதுமக்களின் முன்னால் காட்டுவதற்கும் ‘ஜவ்வு இழுப்பு’ என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தேமுதிகவுக்காக அதிமுகவைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் காத்திருக்கின்றன என்று மக்களுக்குப் புரிந்த பிறகும் தேமுதிக இழுத்துக் கொண்டிருப்பதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும்? 

தேமுதிக செய்து கொண்டிருப்பது இழுவை. கொள்கை, இலட்சியம் என்ற எந்த அடிப்படையுமில்லாமல், குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மை கூட இல்லாமல் தேர்தல் பேரங்கள் என்பவை மாட்டு வியாபாரத்தைவிடவும் மோசமானதாக பெட்டிக் கணக்கு, வாரியக் கணக்கு என்கிற ரீதியில் போய்க் கொண்டிருப்பது நம்முடைய துரதிர்ஷ்டம். சாதிக்கட்சிகளும் சிறுகட்சிகளும் செய்து கொண்டிருந்த வேலையை தேமுதிக திறம்படச் செய்து கொண்டிருக்கிறது. தேமுதிகவை மட்டும் குறை சொல்ல முடியாது. ஐந்து சதவீத வாக்கு வங்கியை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியை எந்த லஜ்ஜையுமில்லாமல் பிற அத்தனை கட்சிகளும் தொங்கிக் கொண்டிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வது? எல்லோருக்கும் பதவிகளும் வெற்றியும் மட்டும்தான் முக்கியம். இல்லையா? பாஜகவைப் பொறுத்த வரைக்கும் இந்த முறையாவது சட்டமன்றத்தில் கால் பதித்தாக வேண்டும். திமுகவுக்கு ஆட்சியைப் பிடித்தாக வேண்டும். மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த்தின் வாக்கு வங்கி தேவையானதாக இருக்கிறது. ‘ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த் தேவை’ என்ற ஒற்றைவரியை வைத்துக் கொண்டு தங்களது அத்தனை குழைவுகளையும் பாத பூஜைகளையும் பிற கட்சிகள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக இருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகளை வரிசைப்படுத்த முடியுமா? சட்டமன்றத்தில் செயல்படுவதற்கு ஆளுங்கட்சி விடவில்லை என்பார்கள். தொலையட்டும். மக்கள் மன்றத்தில் எந்தவிதமான போராட்டகளையும் ஆர்பாட்டங்களையும் முன்னெடுத்திருக்கிறார்கள்? எத்தனை முறை களத்தில் இறங்கியிருக்கிறார்? எந்த அடிப்படையில் திமுகவும், பாஜகவும், மநகூவும் அலைகிறார்கள்? ஒற்றை இலக்க வாக்கு வங்கி என்பதைவிட உறுதியான காரணத்தைச் சொல்ல முடியுமா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தான் எந்தவொரு முடிவை அறிவித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டிருப்பதற்கு தன்னம்பிக்கை என்ற பெயரைச் சூட்ட முடியாது. குருட்டுத்தனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். தேமுதிகவின் இப்படியான இழுத்தடிப்புகளும் குழப்பங்களும் இன்னமும் இரண்டு தேர்தலுக்கு நடைபெறும் என்பதே கூட அதிகபட்சமான நம்பிக்கைதான். 

குழப்பவாதி, முடிவெடுக்க முடியாதவர் என்கிற எல்லாவிதமான அவப்பெயர்களையும் விஜயகாந்த் தேர்தலுக்குத் தேர்தல் சேர்த்துக் கொண்டே போகிறார். அவரது தெளிவின்மையும் அரசியல் காமெடிகளும் அவரை எந்தக் காலத்திலும் மாற்று சக்தியாகத் தூக்கி நிறுத்தப் போவதில்லை என்ற முடிவுக்கு வருவதற்கு மக்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது. அதிமுக மற்றும் திமுகவுக்கான மாற்று என்ற நம்பிக்கையில்தான் தேமுதிக களம் கண்ட முதல் தேர்தலில் பத்து சதவீதம் மக்கள் தேமுதிகவை ஆதரித்தார்கள். ஆனால் தேர்தலுக்குத் தேர்தல் பேரம் நடத்துவதற்கும் மட்டுமே ஒரு கட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் அந்தக் கட்சியின் வாக்கு வங்கி சிறுகச் சிறுக சிதறிக் கொண்டே போகிறது.

அரசியலில் ஒரு முறை தவறு செய்தாலே எழுவது கடினம். தொடர்ந்த தவறுகளுக்குப் பிறகும் தேமுதிகவுக்கான இடத்தை மக்கள் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை விஜயகாந்த்தும் பிரேமலதாவும் வேறுவிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தவறான புரிதலில்தான் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் காலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது எப்பொழுதும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அடித்து நொறுக்கிவிடும்.