Mar 31, 2016

முகாம்

அண்ணாவுக்கு அன்பு வணக்கம்,

தங்களை சேர் என்று அழைக்க மனம் ஒப்பவில்லை. காரணம் மிகவும் எளிது. தங்களின் எழுத்துக்கள் எம்மைப் போன்ற எளியவர்களின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது.

அண்ணா, எனது பெயர் தினேஷ். உங்கள் சொந்த மாவட்டமான ஈரோடு சத்தியமங்கலம் அருகில் உள்ள பவானிசாகர்  அகதிகள் முகாமில்  வசிக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும்  மேற்பட்ட  சிலோன்காரர்களில் நானும் ஒருவன் (நீங்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை இருந்தாலும் எம்மைச்சுற்றி இருக்கும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற மக்கள்  எம்மை அப்படித்தான் அழைக்கிறார்கள் அண்ணா). 

நீங்கள்   அறக்கட்டளை  தொடங்குவதற்கு  முன்பிருந்து நான் உங்கள்  தீவிர வாசகன். அறக்கட்டளை தொடங்கிய பின் அந்த அறிவித்தலை கண்ணுற்ற போது நிச்சயமாக என்னால் முடிந்த ஒரு சிறு தொகையையாவது அறக்கட்டளைக்கு அனுப்ப வேண்டும் என்று  நினைக்காத நாளில்லை. ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு மட்டும்  கிட்டவேயில்லை. அன்றன்றைக்கு வேலை செய்து எனது குடும்பப் பிரச்சினைகளையே சரி பண்ண எனது வருமானம் போதவில்லை. இதில் எங்கிருந்து அறக்கட்டளைக்கு அனுப்புவது?

நான் உங்களிடம் கேட்க போகும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகள்தான் எமக்கு ஓட்டுரிமை இல்லை என்ற காரணத்தினால் எம்மைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் நீங்களாவது   கல்வியறிவு இல்லாத மாணவர்களுக்கு உதவுவதைப் போலவோ அல்லது பாட சாலைகளுக்கு உதவுவதைப் போலவோ எமது பிள்ளைகளுக்கும் உதவலாமே? அவர்க்கும் பள்ளிக் கல்வியை முடித்து விட்டு கல்லூரி செல்ல வசதி இல்லாமல்தானே வறுமையில் வாடுகிறார்கள்?

சற்று சிந்தியுங்கள் அண்ணா.

இந்த வேண்டுகோளில் ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிக்கவும்.

அன்புள்ள, 
தினேஷ்.

அன்புள்ள தினேஷ்,

வணக்கம்.

வேண்டுகோளில் என்ன தவறு இருக்க முடியும்? இப்படியெல்லாம் தயங்க வேண்டியதில்லை. தகவலைக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு மிக்க நன்றி. 

முகாம்களில் இருக்கும் மாணவர்களுக்கு நிச்சயமாக உதவலாம். உதவி செய்வதில் இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. எல்லோரும் மனிதர்கள்தானே? கஷ்டப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் கை தூக்கிவிடலாம். கல்வி உதவிகளைப் பெறுகிற பயனாளிகளைப் பொறுத்தவரையிலும் ஒரே விதிதான். அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்கும்பட்சத்தில் தகவல்களை அனுப்பி வைக்கவும். பெற்றோரின் வருமானம், குடும்பச் சூழல், மாணவர்களின் படிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்து தரலாம்.

சமீபத்தில் சில நண்பர்கள் வெளிமாநில பயனாளிகளின் விவரங்களை அனுப்பி வைத்திருந்தார்கள்- அவர்களுக்காக இந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் பிரசுரம் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. தமிழகத்தைத் தாண்டி வெளிமாநில பயனாளிகளுக்கு உதவக் கூடாது என்றெல்லாம் எதுவுமில்லை. ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற விவரத்தை வைத்துக் கொண்டு எங்கே சென்று விவரங்களைச் சரி பார்ப்பது என்கிற குழப்பம்தான். ஒன்று மும்பைக்குச் செல்ல வேண்டும் அல்லது ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும். இரண்டுமே எளிதான காரியமில்லை. விவரங்களை அனுப்புகிற நண்பரை நம்பலாம்தான். இருப்பினும் ஒரு முறையேனும் நேரடியாக விசாரித்துவிடுவது என்கிற விதியைத் தளர்த்திக் கொள்ள முடிவதில்லை.

தமிழ்நாட்டுக்குள் எந்த ஊராக இருந்தாலும் யாரையாவது பிடித்து விவரங்களைச் சரிபார்த்துவிட முடியும். வாய்ப்பே இல்லாதபட்சத்தில் நானே சென்று விடுவேன். ஆனால் பிற மாநிலங்கள் என்னும் பட்சத்தில் சிரமமாக இருக்கிறது. நம்மிடம் அவ்வளவு பெரிய வலையமைவு(நெட்வொர்க்) இல்லை. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் வெளிமாநில பயனாளிகளை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சில காலம் போகட்டும். ஒருவேளை நம்முடைய நண்பர்களின் வட்டம் பிற மாநிலங்களில் விரிவடைந்தால் எல்லைகளை விஸ்தரிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

தினேஷ், தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. தமக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும். தங்கள் குடும்பத்திற்குத் தேவையான அடிப்படையான வசதிகளை அடைந்த பிறகு நீங்கள் ஐந்து ரூபாய் அளித்தாலும் சந்தோஷமாகப் பெற்றுக் கொள்கிறேன். தற்போதைக்கு தங்களின் ஆதரவும் வாழ்த்துமே பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களின் முகாமில் வசிக்கிற தகுதியான மாணவர்களை அடையாளம் காட்டுவதே நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறந்த உதவியாக இருக்கும்.

மாணவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும். அடுத்த முறை ஊருக்கு வரும் போது முகாமுக்கு நேரில் வந்து தங்களையும் மாணவர்களையும் சந்திக்கிறேன்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்